Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய அரசாங்கத்துக்கு இப்போதே ஆதரவு கொடுங்கள்!

கடவுளுடைய அரசாங்கத்துக்கு இப்போதே ஆதரவு கொடுங்கள்!

பயங்கரமான ஒரு சூறாவளி உங்கள் பகுதியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. “சீக்கிரமாக வெளியேறுங்கள்! பாதுகாப்பான இடத்துக்குப் போங்கள்!” என்று அரசாங்கம் எச்சரிக்கிறது. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடிப்போவீர்கள், இல்லையா?

சீக்கிரத்தில் சூறாவளி போன்ற பயங்கரமான பிரச்சினைகள் நம் எல்லாரையுமே தாக்கப்போகிறது. அதைத்தான் “மிகுந்த உபத்திரவம்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:21) அந்த உபத்திரவத்திலிருந்து நாம் தப்பித்து ஓட முடியாது. ஆனால், அந்தச் சமயத்தில் நம்மால் பாதுகாப்பாக இருக்க முடியும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

அதைப் பற்றி மலைப் பிரசங்கத்தில் இயேசு இப்படிச் சொன்னார்: “எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும் முதலிடம் கொடுங்கள்.” (மத்தேயு 6:33) இதை எப்படிச் செய்யலாம்?

கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுங்கள். அதாவது, மற்ற எல்லாவற்றையும்விட கடவுளுடைய அரசாங்கம்தான் நமக்கு ரொம்ப முக்கியமானதாக இருக்க வேண்டும். (மத்தேயு 6:25, 32, 33) ஏன்? ஏனென்றால், மனிதர்களுடைய பிரச்சினைகளை மனிதர்களால் தீர்க்க முடிவதில்லை. கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டும்தான் அவற்றைத் தீர்க்க முடியும்.

அவருடைய நீதிநெறிகளுக்கு முதலிடம் கொடுங்கள். கடவுளுடைய நீதியான சட்டங்களின்படி வாழ நாம் முடிந்தளவு முயற்சி செய்ய வேண்டும். ஏன்? ஏனென்றால், எது சரி எது தவறு என்பதை நாமே முடிவு செய்யும்போது விளைவு மோசமாகத்தான் இருக்கும். (நீதிமொழிகள் 16:25) ஆனால், கடவுளுடைய சட்டங்களின்படி வாழும்போது, நாம் அவருடைய மனதை சந்தோஷப்படுத்துவோம், நம்முடைய வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கும்.​—ஏசாயா 48:17, 18.

எப்போதுமே முதலிடம் கொடுங்கள். கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும் முதலிடம் கொடுக்காமல், பணம்தான் பாதுகாப்பு என்று நினைத்து சிலர் அதன் பின்னால் ஓடுகிறார்கள். இன்னும் சிலர், கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுக்க நேரம் இல்லாதளவுக்கு வாழ்க்கையின் கவலைகளில் ரொம்பவே மூழ்கிவிடுகிறார்கள். இந்த ஆபத்துகளைப் பற்றித்தான் இயேசுவும் எச்சரித்தார்.​—மத்தேயு 6:19-21, 25-32.

ஆனால், கடவுளுடைய அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்கிறவர்களின் தேவைகளை கடவுள் கவனித்துக்கொள்வார் என்றும், எதிர்காலத்தில் முடிவில்லாத ஆசீர்வாதங்களை அவர்கள்மேல் பொழிவார் என்றும் இயேசு வாக்குக் கொடுத்தார்.​—மத்தேயு 6:33.

முதல் நூற்றாண்டில் வாழ்ந்த இயேசுவின் சீஷர்கள், கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும் வாழ்க்கையில் முதலிடம் கொடுத்தார்கள். ஆனாலும், அவர்களுடைய வாழ்நாளில் எல்லா கஷ்டங்களுக்கும் வேதனைகளுக்கும் முடிவு வரவில்லை. இருந்தாலும், அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். எப்படி?

அவர்கள் கடவுளுடைய நீதியான சட்டங்களின்படி வாழ்ந்தார்கள். அதனால், கடவுள் பேச்சை அலட்சியம் செய்தவர்களுக்கு வந்த கஷ்டங்களிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். கடவுளுடைய அரசாங்கம் வரும் என்று உறுதியாக நம்பியதால், படு பயங்கரமான பிரச்சினைகளைக்கூட அவர்களால் சகித்துக்கொள்ள முடிந்தது. அதுமட்டுமல்ல அவற்றைச் சமாளிப்பதற்கு ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ கடவுள் அவர்களுக்குக் கொடுத்தார்.​—2 கொரிந்தியர் 4:7-9.

கடவுளுடைய அரசாங்கத்துக்கு நீங்கள் முதலிடம் கொடுப்பீர்களா?

கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென்று இயேசு கொடுத்த கட்டளைக்கு, முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிந்தார்கள். அவர்கள் வாழ்ந்த பகுதியிலிருந்த எல்லா மக்களுக்கும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சொன்னார்கள். (கொலோசெயர் 1:23) இன்று இந்த வேலையை யாராவது செய்கிறார்களா?

யெகோவாவின் சாட்சிகள் இந்த வேலையைச் செய்கிறார்கள். ஏனென்றால், கடவுளுடைய அரசாங்கம் இந்த உலகத்துக்கு சீக்கிரத்தில் முடிவுகட்டப் போகிறது என்பதை அவர்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:14) அதனால், இந்த வேலையைச் செய்வதற்கு தங்களால் முடிந்த எல்லாவற்றையும் அவர்கள் செய்கிறார்கள்.

இந்த நல்ல செய்தியைப் பற்றி நீங்களும் தெரிந்துகொண்டீர்கள். இப்போது, நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள்? முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பெரோயா மக்கள் செய்ததைப் போல நீங்களும் செய்ய வேண்டுமென்று நாங்கள் ஆசைப்படுகிறோம். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அப்போஸ்தலன் பவுல் சொன்னபோது அவர்கள் “மிகுந்த ஆர்வத்தோடு கேட்டு” அதை ஏற்றுக்கொண்டார்கள். பிறகு, அவையெல்லாம் சரிதானா என்று “வேதவசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தார்கள்.”​—அப்போஸ்தலர் 17:11, 12.

நீங்களும் அப்படிச் செய்யலாம். கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும் முதலிடம் கொடுத்தால், இப்போதே பாதுகாப்பாக இருப்பீர்கள். எதிர்காலத்தில் முடிவில்லாத சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவிப்பீர்கள்.