Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 5

நாங்களும் உங்களோடு வருகிறோம்

நாங்களும் உங்களோடு வருகிறோம்

“கடவுள் உங்களோடு இருப்பதாகக் கேள்விப்பட்டோம். அதனால், நாங்களும் உங்களோடு வருகிறோம்.”—சக. 8:23.

பாட்டு 146 எனக்கே செய்தீர்கள்

இந்தக் கட்டுரையில்... *

பரலோக நம்பிக்கையுள்ளவர்களோடு (‘யூதனோடு’) சேர்ந்து யெகோவாவை வணங்குவதை வேறே ஆடுகள் (“பத்துப் பேர்”) பாக்கியமாக நினைக்கிறார்கள் (பாராக்கள் 1-2)

1. நம்முடைய நாட்களில் என்ன நடக்கும் என்று யெகோவா சொன்னார்?

“மற்ற தேசங்களைச் சேர்ந்த எல்லா பாஷைக்காரர்களிலும் பத்துப் பேர் ஒரு யூதனுடைய உடையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, ‘கடவுள் உங்களோடு இருப்பதாகக் கேள்விப்பட்டோம். அதனால், நாங்களும் உங்களோடு வருகிறோம்’ என்று சொல்வார்கள்.” (சக. 8:23) நம்முடைய நாட்களைப் பற்றி யெகோவா சொன்ன தீர்க்கதரிசனம்தான் இது! கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள்தான் இங்கே சொல்லப்பட்டிருக்கிற ‘யூதன்.’ “கடவுளுடைய இஸ்ரவேலர்கள்” என்றும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். (கலா. 6:16) பூமியில் என்றென்றும் வாழப்போகிற நம்பிக்கையோடு இருப்பவர்கள்தான் அந்த “பத்துப் பேர்.” அபிஷேகம் செய்யப்பட்டவர்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்குவதை இவர்கள் பாக்கியமாக நினைக்கிறார்கள். ஏனென்றால், அவர்களை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார் என்பது இவர்களுக்கு நன்றாகத் தெரியும்!

2. “பத்துப் பேர்” பரலோக நம்பிக்கையுள்ளவர்களோடு சேர்ந்து போவது எதைக் குறிக்கிறது?

2 பரலோக நம்பிக்கையுள்ள ஒவ்வொருவருடைய பெயரும் நமக்குத் தெரியாது. * அப்படியிருக்கும்போது, நாம் எப்படி அவர்களோடு போக முடியும்? பைபிள் இப்படிச் சொல்கிறது: “பத்துப் பேர் ஒரு யூதனுடைய உடையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, ‘கடவுள் உங்களோடு இருப்பதாகக் கேள்விப்பட்டோம். அதனால், நாங்களும் உங்களோடு வருகிறோம்’ என்று சொல்வார்கள்.” இந்த வசனத்தில் இருக்கிற ‘யூதன்’ என்ற வார்த்தை ஒருமையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இரண்டு தடவை வருகிற “உங்களோடு” என்ற வார்த்தை பன்மையில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், ‘யூதன்’ என்ற வார்த்தை ஒரேவொரு நபரை அல்ல, பரலோக நம்பிக்கையுள்ளவர்களின் முழு தொகுதியையும் குறிக்கிறது. பரலோக நம்பிக்கையில்லாதவர்கள், பரலோக நம்பிக்கையுள்ளவர்களோடு சேர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்தாலும், அவர்களைத் தலைவர்களாகப் பார்ப்பதில்லை. இயேசுதான் தலைவர் என்பது இவர்களுக்குத் தெரியும்!—மத். 23:10.

3. என்ன கேள்விகளுக்கான பதில்களை பார்க்கப்போகிறோம்?

3 அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் இன்றும் நம் மத்தியில் இருக்கிறார்கள். அதனால், இந்தக் கேள்விகள் நமக்கு வரலாம்: (1) அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் தங்களைப் பற்றி எப்படி நினைக்க வேண்டும்? (2) நினைவுநாள் சின்னங்களில் பங்கெடுப்பவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும்? (3) இவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போவதை நினைத்து நாம் கவலைப்பட வேண்டுமா? பதில்களை இப்போது பார்க்கலாம்.

அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் தங்களைப் பற்றி எப்படி நினைக்க வேண்டும்?

4. ஒன்று கொரிந்தியர் 11:27-29-ல் இருக்கிற எந்த எச்சரிக்கையை அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் மறக்கக் கூடாது, ஏன்?

4 ஒன்று கொரிந்தியர் 11:27-29-ல் இருக்கிற எச்சரிக்கையை பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் மறக்கக் கூடாது. (வாசியுங்கள்.) இவர்களில் யாராவது யெகோவாவின் சட்டங்களின்படி வாழாமல் நினைவுநாள் சின்னங்களில் பங்கெடுத்தால், “தகுதியில்லாமல்” அதைச் செய்கிறார் என்று அர்த்தம். (எபி. 6:4-6; 10:26-29) “கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் கொடுக்கிற பரலோக அழைப்பு என்ற பரிசை” பெற்றுக்கொள்வதற்கு, கடைசிவரை உண்மையோடு இருக்க வேண்டும் என்பது பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும்.—பிலி. 3:13-16.

5. பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் தங்களைப் பற்றி எப்படி நினைக்கிறார்கள்?

5 தலைக்கனத்தோடு அல்ல, மனத்தாழ்மையோடு இருக்கத்தான் கடவுளுடைய சக்தி உதவுகிறது. (எபே. 4:1-3; கொலோ. 3:10, 12) அதனால், மற்றவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் நினைப்பதில்லை. மற்றவர்களைவிட தாங்கள் யெகோவாவின் சக்தியை அதிக அளவில் பெற்றுக்கொள்வதாகவும் அவர்கள் நினைப்பதில்லை. பைபிள் சத்தியங்களைப் பற்றி மற்றவர்களைவிட தங்களுக்கு அதிகமாகத் தெரியும் என்றும் அவர்கள் நினைப்பதில்லை. ‘நீங்களும் அபிஷேகம் செய்யப்பட்டவங்கதான், நினைவுநாள் சின்னங்கள்ல பங்கெடுங்க’ என்று அவர்கள் மற்றவர்களிடம் சொல்வதில்லை. பரலோகத்துக்குப் போகிறவர்களை யெகோவாதான் தேர்ந்தெடுக்கிறார் என்பதை அவர்கள் மனத்தாழ்மையோடு ஒத்துக்கொள்கிறார்கள்.

6. அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று 1 கொரிந்தியர் 4:7, 8 சொல்கிறது?

6 தாங்கள் பரலோகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் பாக்கியமாக நினைக்கிறார்கள். அதற்காக, மற்றவர்கள் தங்களை விசேஷமாக நடத்த வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. (பிலி. 2:2, 3) எல்லாருக்கும் தெரியும் விதத்தில் யெகோவா தங்களைத் தேர்ந்தெடுப்பதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால், தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை யாராவது முதலில் நம்பவில்லை என்றால், அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. யெகோவா தனக்கு விசேஷ பொறுப்பு கொடுத்திருப்பதாக ஒருவர் சொன்னால், அதை உடனே மற்றவர்கள் நம்பிவிடக் கூடாது என்று பைபிளில் சொல்லப்பட்டிருப்பதும் அவர்களுக்குத் தெரியும். (வெளி. 2:2) யாரையாவது முதல் தடவையாகச் சந்திக்கும்போது, ‘நான் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கேன்’ என்று சொல்லி மற்றவர்களின் கவனத்தை அவர்கள் கவர மாட்டார்கள். அதைச் சொல்லி பெருமையடிக்கவும் மாட்டார்கள்.—1 கொரிந்தியர் 4:7, 8-ஐ வாசியுங்கள்.

7. பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் என்ன செய்ய மாட்டார்கள், ஏன்?

7 தாங்கள் எல்லாரும் ஏதோ ஒரு விசேஷமான ‘சங்கத்தில்’ இருப்பதுபோல் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் நடந்துகொள்வதில்லை; தங்களுக்குள் மட்டும்தான் நேரம் செலவழிக்க வேண்டும் என்றும் நினைப்பதில்லை. பரலோக நம்பிக்கையுள்ள மற்றவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, தங்களுடைய பரலோக அழைப்பைப் பற்றிப் பேசும் முயற்சியிலும் இறங்குவதில்லை. பைபிளைப் படிப்பதற்காகத் தங்களுக்குள்ளே தனித் தொகுதிகளையும் ஏற்படுத்துவதில்லை. (கலா. 1:15-17) இப்படியெல்லாம் செய்தால் சபையில் ஒற்றுமை இருக்காது. அதோடு, சபையில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் காத்துக்கொள்ள உதவுகிற கடவுளுடைய சக்திக்கு எதிராகச் செயல்படுகிறவர்களாக ஆகிவிடுவார்கள்.—ரோ. 16:17, 18.

பரலோக நம்பிக்கையுள்ளவர்களை எப்படி நடத்த வேண்டும்?

பரலோக நம்பிக்கையுள்ளவர்களையோ நம்மை வழிநடத்துகிற மற்றவர்களையோ பிரபலங்களைப் போல் நடத்தக் கூடாது (பாரா 8) *

8. நினைவுநாள் சின்னங்களில் பங்கெடுப்பவர்களை நடத்தும் விஷயத்தில் நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும்? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)

8 ஒரு நபரை அளவுக்கு அதிகமாக உயர்த்துவது தவறு. கிறிஸ்துவின் சகோதரர்களை அப்படி உயர்த்துவதும் தவறுதான்! (மத். 23:8-12) உதாரணத்துக்கு, மூப்பர்களுடைய “விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. அதற்காக, அவர்களைத் தலைவர்கள்போல் நடத்தும்படி அது சொல்வதில்லை. (எபி. 13:7) சிலர் ‘இரட்டிப்பான மதிப்பைப் பெறத் தகுதியுள்ளவர்கள்’ என்று பைபிள் சொல்கிறது. அவர்கள் நம்மை ‘நல்ல விதத்தில் நடத்துவதால்தான்’ அப்படிச் சொல்கிறது. அதோடு, கடவுளுடைய வார்த்தையைப் பற்றிப் ‘பேசுவதிலும் கற்றுக்கொடுப்பதிலும் [அவர்கள்] கடுமையாக உழைப்பதால்தான்’ அப்படிச் சொல்கிறது. பரலோக வாழ்க்கைக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக அல்ல! (1 தீ. 5:17) அப்படிப்பட்டவர்களை அதிகமாகப் புகழ்ந்துகொண்டிருந்தால், அது அவர்களைத் தர்மசங்கடப்படுத்தும். * எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்கள் பெருமையடிப்பதற்கு நாம் காரணமாகிவிடுவோம். (ரோ. 12:3) அவர்கள் இவ்வளவு பெரிய பாவம் செய்வதற்கு நாம் காரணமாக இருக்க விரும்பமாட்டோம், இல்லையா?—லூக். 17:2.

9. பரலோக நம்பிக்கையுள்ளவர்களை நாம் மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

9 ‘கடவுள் உங்கள தேர்ந்தெடுத்தப்போ உங்களுக்கு எப்படி இருந்துச்சு?’ என்று கேட்காமல் இருப்பதன் மூலம் பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு நாம் மரியாதை கொடுக்கலாம். இது அவர்களுடைய தனிப்பட்ட விஷயமாக இருப்பதால், இதைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கான உரிமை நமக்குக் கிடையாது. (1 தெ. 4:11; 2 தெ. 3:11) ஒருவர் பரலோகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதற்காக, அவருடைய கணவரோ மனைவியோ பெற்றோரோ மற்ற குடும்ப அங்கத்தினர்களோ பரலோக நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பார்கள் என்று நாம் நினைத்துக்கொள்ளக் கூடாது. பரலோக நம்பிக்கை என்பது பரம்பரைச் சொத்து அல்ல, கடவுள் கொடுக்கும் பரிசு! (1 தெ. 2:12) அதோடு, மற்றவர்களுடைய மனதைப் புண்படுத்தும் கேள்விகளையும் கேட்கக் கூடாது. உதாரணத்துக்கு, பரலோக நம்பிக்கையுள்ள ஒரு சகோதரரின் மனைவியைப் பார்த்து, ‘பூஞ்சோலையில உங்க கணவர் இல்லாம வாழ்றது உங்களுக்கு எப்படி இருக்கும்?’ என்று கேட்கக் கூடாது. புதிய உலகத்தில், ‘எல்லா உயிர்களின் ஆசைகளையும் [யெகோவா] திருப்திப்படுத்துவார்’ என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.—சங். 145:16.

10. மனிதர்களை அளவுக்கு அதிகமாக உயர்த்தாமல் இருப்பது நமக்குத்தான் பாதுகாப்பு என்று எப்படிச் சொல்லலாம்?

10 பரலோக நம்பிக்கையுள்ளவர்களை மற்றவர்களைவிட உயர்வாகப் பார்க்காதது ஒருவிதத்தில் நமக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. எப்படி? அவர்களில் சிலர் உண்மையில்லாமல் போய்விடலாம் என்று பைபிள் சொல்கிறது. (மத். 25:10-12; 2 பே. 2:20, 21) நாம் யாரையுமே அளவுக்கு அதிகமாக உயர்த்தக் கூடாது. பரலோக நம்பிக்கையுள்ளவர்கள், அமைப்பில் பிரபலமாக இருக்கிறவர்கள், ரொம்ப வருஷங்களாக யெகோவாவுக்குச் சேவை செய்தவர்கள் என யாரையும் அளவுக்கு அதிகமாக உயர்த்தக் கூடாது. அப்போதுதான், நாம் அவர்களுடைய வழியில் போகாமல் இருப்போம். ஒருவேளை, அவர்கள் யெகோவாவுக்கு உண்மையில்லாமல் போய்விட்டால் அல்லது சபையைவிட்டுப் போய்விட்டால், நாம் நம்முடைய விசுவாசத்தை இழந்துவிட மாட்டோம் அல்லது யெகோவாவுக்குச் சேவை செய்வதை நிறுத்திவிட மாட்டோம்.

நினைவுநாள் சின்னங்களில் பங்கெடுப்பவர்கள் அதிகமாகிக்கொண்டே போவதை நினைத்து கவலைப்பட வேண்டுமா?

11. நினைவுநாள் சின்னங்களில் பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கையைப் பற்றி என்ன சொல்லலாம்?

11 பல வருஷங்களாக, நினைவுநாள் சின்னங்களில் பங்கெடுத்தவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. ஆனால் சமீப வருஷங்களில், அதிகமாகிக்கொண்டே போகிறது. இதை நினைத்து நாம் கவலைப்பட வேண்டுமா? இல்லை. சில முக்கியமான குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

12. நினைவுநாள் சின்னங்களில் பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கையைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டியதில்லை?

12 “தனக்குச் சொந்தமானவர்களை யெகோவா அறிந்திருக்கிறார்.” (2 தீ. 2:19) நினைவுநாள் சின்னங்களில் எத்தனை பேர் பங்கெடுக்கிறார்கள் என்று கணக்கெடுக்கும் சகோதரர்களுக்கு, அப்படிப் பங்கெடுப்பவர்கள் உண்மையிலேயே பரலோகத்துக்குப் போவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா இல்லையா என்பது தெரியாது. கடவுளுக்குத்தான் அது தெரியும்! கடவுள் தங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று தாங்களாகவே நினைத்துக்கொண்டு அதில் பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதில் இருக்கலாம். ஆரம்பத்தில் பங்கெடுத்த சிலர் போகப்போக நிறுத்தியிருக்கிறார்கள். வேறுசிலர், மன ரீதியான பிரச்சினைகளால், தாங்கள் கிறிஸ்துவோடு சேர்ந்து ஆட்சி செய்யப்போவதாக நினைத்துக்கொண்டு சின்னங்களில் பங்கெடுத்திருக்கிறார்கள். அதனால், பரலோகத்துக்குப் போவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்னும் எத்தனை பேர் பூமியில் இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது.

13. மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும்போது பூமியில் இருக்கப்போகிற பரலோக நம்பிக்கையுள்ளவர்களின் எண்ணிக்கையைப் பற்றி பைபிள் சொல்கிறதா?

13 பரலோக நம்பிக்கையுள்ளவர்களைச் கூட்டிச்சேர்ப்பதற்காக இயேசு வரும்போது பூமியில் பல இடங்களில் அவர்கள் இருப்பார்கள். (மத். 24:31) கடைசி நாட்களில், பரலோக நம்பிக்கையுள்ள கொஞ்சம் பேர் இந்தப் பூமியில் இருப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. (வெளி. 12:17) ஆனால், மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும்போது எத்தனை பேர் இருப்பார்கள் என்று அது சொல்வதில்லை.

நினைவுநாள் சின்னங்களில் ஒருவர் பங்கெடுக்கும்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? (பாரா 14)

14. பரலோகத்துக்குப் போகிறவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதைப் பற்றி ரோமர் 9:13, 16-லிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்?

14 பரலோகத்தில் வாழ்வதற்காகக் கிறிஸ்தவர்களை எப்போது தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது யெகோவாவுக்குத் தெரியும். (ரோ. 8:28-30) இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, பரலோகத்தில் வாழப்போகிறவர்களை யெகோவா தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். முதல் நூற்றாண்டில் வாழ்ந்த உண்மை கிறிஸ்தவர்கள் எல்லாருமே பரலோக வாழ்க்கைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. அதற்குப் பிறகு வந்த வருஷங்களில், கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்ட பெரும்பாலானவர்கள் உண்மையிலேயே இயேசுவைப் பின்பற்றவில்லை. ஆனால் தனக்கு உண்மையாக இருந்த சிலரை, பரலோகத்தில் வாழ்வதற்காக யெகோவா தேர்ந்தெடுத்தார். களைகள் மத்தியில் வளருகிற கோதுமையைப் போல் அவர்கள் இருந்தார்கள். (மத். 13:24-30) நாம் வாழும் இந்தக் கடைசி நாட்களிலும் 1,44,000 பேரில் ஒருவராக இருக்கப்போகிறவர்களை யெகோவா தேர்ந்தெடுத்து வருகிறார். * முடிவு வருவதற்கு கொஞ்சம் முன்பு யாரையாவது தேர்ந்தெடுக்க வேண்டும் என்று யெகோவா நினைத்தால்கூட நாம் அவரைக் கேள்வி கேட்க முடியாது. அவர் எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும்! (ரோமர் 9:13, 16-ஐ வாசியுங்கள்.) * இயேசு சொன்ன உவமையில் வரும் கூலியாட்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள். கடைசி நேரத்தில் வந்து வேலை செய்தவர்களைத் திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரர் நடத்திய விதத்தைப் பற்றி அவர்கள் குறை சொன்னார்கள். நாம் அவர்களைப் போல் இருக்கக் கூடாது.—மத். 20:8-15.

15. பரலோக நம்பிக்கையுள்ள எல்லாருமே மத்தேயு 24:45-47-ல் சொல்லப்பட்டிருக்கிற ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையா’? விளக்குங்கள்.

15 பரலோக நம்பிக்கையுள்ள எல்லாருமே ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையில்’ ஒருவராக இல்லை. (மத்தேயு 24:45-47-ஐ வாசியுங்கள்.) முதல் நூற்றாண்டைப் போலவே இன்றும் கொஞ்சம் பேரை வைத்துதான் நிறைய பேருக்கு யெகோவாவும் இயேசுவும் ஆன்மீக உணவு கொடுக்கிறார்கள். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை எழுதுவதற்கு முதல் நூற்றாண்டிலிருந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களில் கொஞ்சம் பேர்தான் பயன்படுத்தப்பட்டார்கள். இன்றும், கடவுளுடைய மக்களுக்கு “ஏற்ற வேளையில்” “உணவு” கொடுப்பதற்கு பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களில் கொஞ்சம் பேர்தான் பயன்படுத்தப்படுகிறார்கள்.

16. இந்தக் கட்டுரையிலிருந்து என்ன தெரிந்துகொண்டீர்கள்?

16 இந்தக் கட்டுரையிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள்: தன்னுடைய மக்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்தப் பூமியில் முடிவில்லாமல் வாழ்கிற வாய்ப்பைத் தர யெகோவா முடிவு செய்திருக்கிறார். கொஞ்சம் பேருக்கு பரலோகத்தில் இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்கிற வாய்ப்பைத் தர முடிவு செய்திருக்கிறார். ‘யூதனோ’ ‘பத்துப் பேரோ,’ தன்னுடைய மக்கள் எல்லாருக்கும் யெகோவா பலன் தருகிறார். இந்த இரண்டு தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் யெகோவா ஒரே சட்டத்தைத்தான் கொடுத்திருக்கிறார். இரண்டு தொகுதியினரும் உண்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நாம் எல்லாருமே மனத்தாழ்மையோடு இருக்க வேண்டும். எல்லாருமே ஒற்றுமையோடு யெகோவாவை வணங்க வேண்டும். சபையின் சமாதானத்திற்காக எல்லாருமே ஒத்துழைக்க வேண்டும். முடிவு நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், நாம் எல்லாரும் யெகோவாவைத் தொடர்ந்து வணங்கலாம்! ‘ஒரே மந்தையாக’ இருந்து கிறிஸ்துவைப் பின்பற்றலாம்!!—யோவா. 10:16.

^ பாரா. 5 இந்த வருஷத்தின் நினைவுநாள் நிகழ்ச்சி ஏப்ரல் 7, செவ்வாய்க்கிழமை அன்று நடக்கும். நினைவுநாள் சின்னங்களில் யாராவது பங்கெடுத்தால், அவர்களைப் பற்றி நாம் என்ன நினைக்க வேண்டும்? அவர்களுடைய எண்ணிக்கை வருஷா வருஷம் அதிகமாகிக்கொண்டே போவதை நினைத்து கவலைப்பட வேண்டுமா? இதற்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஜனவரி 2016, காவற்கோபுரத்தில் வந்த கட்டுரையை அடிப்படையாக வைத்து இது எழுதப்பட்டிருக்கிறது.

^ பாரா. 2 சங்கீதம் 87:5, 6 சொல்வதை வைத்துப் பார்க்கும்போது, பரலோகத்தில் இயேசுவோடு ஆட்சி செய்யப்போகிறவர்களின் பெயர்களை யெகோவா எதிர்காலத்தில் தெரியப்படுத்தலாம்.—ரோ. 8:19.

^ பாரா. 8 ஜனவரி 2016 காவற்கோபுரத்தில் வெளிவந்த “அன்பு ‘கேவலமாக நடந்துகொள்ளாது’” என்ற பெட்டியைப் பாருங்கள்.

^ பாரா. 14 இயேசுவின் வழியாக கடவுளுடைய சக்தி பொழியப்படுகிறது என்று அப்போஸ்தலர் 2:33 சொன்னாலும், ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுப்பது யெகோவாதான்!

^ பாரா. 14 இதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள மே 1, 2007 காவற்கோபுரத்தில் வந்த “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பகுதியைப் பாருங்கள்.

பாட்டு 29 உத்தமம் காத்தல்

^ பாரா. 56 பட விளக்கம்: ஒரு மாநாட்டுக்கு வந்திருக்கும் உலகத் தலைமை அலுவலகப் பிரதிநிதியையும் அவருடைய மனைவியையும் ஃபோட்டோ எடுப்பதற்காக எல்லாரும் கூட்டமாக சூழ்ந்து நிற்கிறார்கள். இது எவ்வளவு அவமரியாதையான ஒரு செயல்!