Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 7

யெகோவா அப்பாமேல் நாம் உயிரையே வைத்திருக்கிறோம்!

யெகோவா அப்பாமேல் நாம் உயிரையே வைத்திருக்கிறோம்!

“கடவுள் முதலில் நம்மேல் அன்பு காட்டியதால் நாமும் அன்பு காட்டுகிறோம்.”—1 யோ. 4:19.

பாட்டு 152 எம் பலமும் நம்பிக்கையும் நீரே!

இந்தக் கட்டுரையில்... *

1-2. தன்னுடைய குடும்பத்தில் யெகோவா நமக்கு ஏன் இடம் கொடுத்திருக்கிறார், அதற்காக அவர் என்ன செய்திருக்கிறார்?

யெகோவாவுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. அந்தக் குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லாருமே தங்கள் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறார்கள், அவருடைய மகனான இயேசுவின் மீட்புப் பலியின் மீது விசுவாசம் வைத்திருக்கிறார்கள். அவரை வணங்குகிற இந்தக் குடும்பம் சந்தோஷமான ஒரு குடும்பம்! இப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் சேர்ந்துகொள்ளும்படி யெகோவா நம்மையும் அழைத்திருக்கிறார். இது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! இந்தக் குடும்பத்தில் இருப்பதால், இப்போதே நாம் பிரயோஜனமான வாழ்க்கை வாழ்கிறோம். அதுமட்டுமா! எதிர்காலத்தில், பரலோகத்திலோ பூமியிலோ நமக்குக் கிடைக்கப்போகும் முடிவில்லாத வாழ்வை நினைக்கும்போது நம் உள்ளம் சந்தோஷத்தில் பூரிக்கிறது!

2 யெகோவா நம்மேல் உயிரையே வைத்திருப்பதால்தான் தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக இருக்கிற வாய்ப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார். அதற்காக, அவருடைய பங்கில் மிகப் பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறார். (யோவா. 3:16) நாம் ‘விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறோம்’ என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 6:20) மீட்புவிலையின் மூலம் தன்னோடு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ள யெகோவா வழி செய்திருக்கிறார். இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகப் பெரிய ஸ்தானத்தில் இருக்கிற அவரை ‘அப்பா’ என்று கூப்பிடுகிற பாக்கியத்தைத் தந்திருக்கிறார். அதோடு, முந்தின கட்டுரையில் பார்த்தபடி, யெகோவாவைப் போல் ஓர் அப்பா இருக்கவே முடியாது!

3. என்ன கேள்விகள் நம் மனதில் வரலாம்? (“ யெகோவா என்னை கவனிக்கிறாரா?” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

3 “யெகோவா எனக்குச் செய்திருக்கிற எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைமாறு செய்வேன்?” என்று ஒரு பைபிள் எழுத்தாளர் கேட்டார். (சங். 116:12) ஒருவேளை, நாமும் அதே மாதிரி கேட்கலாம். ஆனால், யெகோவாவுக்கு நாம் எந்தக் கைமாறும் செய்ய முடியாது. இருந்தாலும், அவர்மேல் அன்பு காட்ட நாம் ஆசைப்படுகிறோம். அதைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் இப்படிச் சொன்னார்: “கடவுள் முதலில் நம்மேல் அன்பு காட்டியதால் நாமும் அன்பு காட்டுகிறோம்.” (1 யோ. 4:19) கடவுள்மேல் அன்பு வைத்திருக்கிறோம் என்பதை எப்படியெல்லாம் காட்டலாம்?

யெகோவாவிடம் நெருக்கமாக இருங்கள்

யெகோவா அப்பாவிடம் ஜெபம் செய்வது, அவருக்குக் கீழ்ப்படிவது, அவரை நேசிக்க மற்றவர்களுக்கு உதவுவது ஆகியவற்றின் மூலம் அவர்மேல் நாம் உயிரையே வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம் (பாராக்கள் 4-14)

4. யாக்கோபு 4:8-ன்படி, யெகோவாவிடம் நெருங்கிப் போக நாம் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?

4 தன்னுடைய பிள்ளைகள் தன்னிடம் நெருங்கி வர வேண்டும் என்றும், தன்னோடு பேச வேண்டும் என்றும் யெகோவா ஆசைப்படுகிறார். (யாக்கோபு 4:8-ஐ வாசியுங்கள்.) “விடாமல் ஜெபம் செய்யுங்கள்” என்று அவர் சொல்கிறார். (ரோ. 12:12) நம் ஜெபத்தைக் கேட்க முடியாதளவுக்கு அவர் ரொம்ப பிஸியாகவோ களைப்பாகவோ இருப்பதில்லை. நாம் எப்போது ஜெபம் செய்தாலும் அவர் கேட்கிறார். அவர் பேசுவதை நாம் எப்படிக் கேட்கலாம்? அவருடைய வார்த்தையான பைபிளையும், அதைப் புரிந்துகொள்ள உதவுகிற பிரசுரங்களையும் படிப்பதன் மூலம் அவர் பேசுவதை நாம் கேட்கிறோம். கூட்டங்களில் சொல்லப்படுவதை நன்றாகக் கவனிப்பதன் மூலமும் அவர் பேசுவதை நாம் கேட்கிறோம். அப்பா அம்மாவிடம் நெருக்கமாக இருப்பதற்கு ஒரு பிள்ளை தவறாமல் அவர்களிடம் பேச வேண்டும். அதேபோல், யெகோவாவிடம் நெருக்கமாக இருப்பதற்கு நாம் தவறாமல் அவரிடம் ஜெபம் செய்ய வேண்டும்.

பாரா 5

5. யெகோவாவுக்குப் பிடித்த விதத்தில் எப்படி ஜெபம் செய்யலாம்?

5 யெகோவாவுக்குப் பிடித்த விதத்தில் ஜெபம் செய்கிறீர்களா என்று யோசித்துப்பாருங்கள். நாம் என்ன நினைக்கிறோம், எப்படி உணருகிறோம் என்பதையெல்லாம் ஜெபத்தில் சொல்லும்படி அவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார். (சங். 62:8) அதனால், ‘மனப்பாடம் செஞ்சு ஒப்பிக்கிற மாதிரி ஜெபம் பண்றனா இல்ல மனசிலிருந்து ஜெபம் பண்றனா?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். யெகோவாமீது நீங்கள் ரொம்ப அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதிலும், அவரோடு பலமான பந்தத்தை வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள் என்பதிலும் சந்தேகமே இல்லை. ஆனால், அதற்கு நீங்கள் தவறாமல் ஜெபம் செய்ய வேண்டும். உங்கள் தனிப்பட்ட விஷயங்களை அவரிடம் சொல்லுங்கள். உங்கள் சந்தோஷத்தையும் துக்கத்தையும் அவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். உதவி கேட்டு அவரிடம் ஓடோடிப் போகலாம் என்பதில் உறுதியாக இருங்கள்.

6. நம் பரலோகத் தந்தையிடம் நெருங்கியிருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

6 நாம் யெகோவாவிடம் நெருங்கியிருக்க வேண்டும் என்றால், அவருக்கு நன்றியோடு இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் சங்கீதக்காரரைப் போல்தான் நாமும் உணருகிறோம். “என் கடவுளாகிய யெகோவாவே, எங்களுக்காக நீங்கள் செய்திருக்கிற அதிசயங்கள் எத்தனை எத்தனை! எங்களுக்காக நீங்கள் யோசித்திருக்கிற விஷயங்கள் எத்தனை எத்தனை! அவை கணக்கில் அடங்காதவை! அவற்றையெல்லாம் நான் விவரித்துச் சொல்ல ஆரம்பித்தால் முடிக்கவே முடியாது. கடவுளே, உங்களைப் போன்றவர் வேறு யாருமே இல்லை!” என்று அவர் சொன்னார். (சங். 40:5) ஆனால், நன்றியோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது. நம்முடைய சொல்லிலும் செயலிலும் அதைக் காட்ட வேண்டும். இதுதான் இந்த உலக மக்களிலிருந்து நம்மை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. தங்களுக்குக் கடவுள் செய்கிற எல்லாவற்றுக்கும் அவர்கள் நன்றியோடு இருப்பதில்லை. “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என்பதற்கு இதுவும் ஓர் அத்தாட்சி. (2 தீ. 3:1, 2) ஆனால், நாம் ஒருபோதும் அவர்களைப் போல் இருக்கக் கூடாது.

7. நாம் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார், ஏன்?

7 பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பாசமாக இருக்க வேண்டும் என்றுதான் அப்பா அம்மா ஆசைப்படுவார்களே தவிர, அவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டைபோட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட மாட்டார்கள். அதேபோல்தான் யெகோவா அப்பாவும்! தன்னுடைய பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பாசமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். சொல்லப்போனால், உண்மைக் கிறிஸ்தவர்களின் அடையாளமே அன்புதான்! (யோவா. 13:35) “சகோதரர்கள் ஒன்றாகக் கூடி வாழ்வது எவ்வளவு அருமையாக இருக்கிறது! எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!” என்று சங்கீதக்காரர் சொன்னதை நாம் மனதார ஏற்றுக்கொள்கிறோம். (சங். 133:1) சகோதர சகோதரிகளை நேசிப்பதன் மூலம் யெகோவாவை நேசிக்கிறோம் என்பதை அவருக்குக் காட்டுகிறோம். (1 யோ. 4:20) ‘ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுகிற’ இந்தப் பெரிய குடும்பத்தில் இருப்பது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!—எபே. 4:32.

கீழ்ப்படிவதன் மூலம் உங்கள் அன்பைக் காட்டுங்கள்

பாரா 8

8. யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதற்கான முக்கியக் காரணத்தைப் பற்றி 1 யோவான் 5:3 என்ன சொல்கிறது?

8 பிள்ளைகள் அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். அதேபோல் நாமும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். (எபே. 6:1) அவர் நம்மைப் படைத்தவர், நம்மைக் காப்பாற்றுபவர், எல்லா அப்பாக்களையும்விட ஞானமுள்ளவர்! அதனால், அவருக்குக் கீழ்ப்படிய நாம் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனாலும், நாம் அவருக்குக் கீழ்ப்படிவதற்கு முக்கியக் காரணம், அவர்மேல் இருக்கிற பாசம்தான்! (1 யோவான் 5:3-ஐ வாசியுங்கள்.) நாம் அவருக்குக் கீழ்ப்படிவதற்கு இப்படி எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், கீழ்ப்படியும்படி அவர் நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை. ஏனென்றால், அவர் நமக்குச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்! அவர்மேல் இருக்கிற பாசத்தால் அவருக்குக் கீழ்ப்படியும்போது, அவர் சந்தோஷப்படுகிறார்!!

9-10. யெகோவாவின் சட்டங்களைத் தெரிந்துகொண்டு, அவற்றுக்குக் கீழ்ப்படிவது ஏன் முக்கியம்?

9 பிள்ளைகள் பத்திரமாக இருக்க வேண்டும் என்று அப்பா அம்மா ஆசைப்படுகிறார்கள். அதனால்தான், சில சட்டங்களைப் போடுகிறார்கள். அந்தச் சட்டங்களுக்குப் பிள்ளைகள் கீழ்ப்படியும்போது, அப்பா அம்மாமேல் தங்களுக்கு நம்பிக்கையும் மரியாதையும் இருப்பதைக் காட்டுகிறார்கள். அப்படியென்றால், யெகோவா அப்பா போட்டிருக்கிற சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது எவ்வளவு முக்கியம்! அப்படிக் கீழ்ப்படிவதன் மூலம் அவரை நாம் நேசிக்கிறோம் என்பதையும் மதிக்கிறோம் என்பதையும் அவருக்குக் காட்டுகிறோம். அதோடு, நாமும் பிரயோஜனமடைகிறோம். (ஏசா. 48:17, 18) ஆனால், யெகோவாவையும் அவருடைய சட்டங்களையும் ஒதுக்கித்தள்ளுபவர்களுக்கு வேதனைதான் மிஞ்சுகிறது.—கலா. 6:7, 8.

10 யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழும்போது, உடலையும் உணர்ச்சிகளையும் பாதிக்கிற விஷயங்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். அதுமட்டுமல்ல, யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைப் பாதிக்கிற விஷயங்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். நமக்கு எது நல்லது என்று யெகோவாவுக்குத் தெரியும். “யெகோவாவுக்கு கீழ்ப்படிஞ்சு நடந்தா, எப்பவுமே வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும்” என்று அமெரிக்காவில் இருக்கிற அரோரா என்ற சகோதரி சொல்கிறார். யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்ததால் நீங்கள் எப்படி நன்மை அடைந்திருக்கிறீர்கள்?

11. ஜெபம் எப்படி நமக்குக் கைகொடுக்கும்?

11 நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், கீழ்ப்படிவது சிலசமயங்களில் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், அதற்கு நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் ஜெபம் நமக்குக் கைகொடுக்கும்! “உங்களுக்குக் கீழ்ப்படியும் ஆசையை எனக்குள் தூண்டுங்கள்” என்று கெஞ்சிய சங்கீதக்காரரைப் போலவே நாமும் யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்கலாம். (சங். 51:12) ஒழுங்கான பயனியராக இருக்கிற டெனிஸ் என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “யெகோவாவோட கட்டளைகள்ல ஏதாவது ஒண்ணுக்கு கீழ்ப்படியறது கஷ்டமா இருந்தா, ‘சரியானத செய்றதுக்கு பலம் கொடுங்கனு’ கேட்டு ஜெபம் செய்வேன்.” இந்த மாதிரியான ஜெபங்களுக்கு யெகோவா கண்டிப்பாக பதில் கொடுப்பார்!—லூக். 11:9-13.

யெகோவா அப்பாவை நேசிக்க மற்றவர்களுக்கு உதவுங்கள்

12. நாம் என்ன செய்ய வேண்டும் என்று எபேசியர் 5:1 சொல்கிறது?

12 எபேசியர் 5:1-ஐ வாசியுங்கள். யெகோவாவின் ‘அன்பான பிள்ளைகளான’ நாம், அவரைப் பின்பற்ற கடினமாக முயற்சி செய்கிறோம். மற்றவர்களிடம் அன்பாகவும் கரிசனையாகவும் நடந்துகொள்ளும்போது... அவர்களை மன்னிக்கும்போது... நாம் யெகோவா அப்பாவைப் பின்பற்றுகிறோம். அவரைப் பற்றித் தெரியாத ஜனங்கள் நம் நல்ல நடத்தையைப் பார்க்கும்போது, அவரைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை அவர்களுக்குள் வரலாம். (1 பே. 2:12) இப்போது, பெற்றோர்களின் விஷயத்துக்கு வரலாம். யெகோவா நம்மை நடத்துவதுபோல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நடத்த வேண்டும். அப்போது, யெகோவாவின் நண்பராக ஆக வேண்டும் என்ற ஆசை பிள்ளைகளுக்கு வரலாம்.

பாரா 13

13. தைரியத்தை வளர்த்துக்கொள்ள என்ன செய்யலாம்?

13 பிள்ளைகள் எப்போதுமே தங்கள் அப்பாவைப் பற்றிப் பெருமையாக நினைப்பார்கள். மற்றவர்களிடம் அப்பாவைப் பற்றிப் பேசுவார்கள். அதேபோல், நாமும் யெகோவா அப்பாவை நினைத்துப் பெருமைப்படுகிறோம். அவரைப் பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். “நான் யெகோவாவைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்” என்று சொன்ன சங்கீதக்காரரைப் போலத்தான் நாமும் நினைக்கிறோம். (சங். 34:2) ஆனால், கூச்ச சுபாவம் நமக்கு இருந்தால் என்ன செய்வது? தைரியத்தை வளர்த்துக்கொள்ள என்ன செய்யலாம்? (1) யெகோவாவைப் பற்றிப் பேசும்போது அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார் என்று யோசித்துப்பாருங்கள். (2) அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது மற்றவர்களுடைய வாழ்க்கை எப்படி மாறும் என்று யோசித்துப்பாருங்கள். நமக்குத் தேவையான தைரியத்தை யெகோவா நிச்சயம் தருவார். தைரியமாக இருப்பதற்கு முதல் நூற்றாண்டிலிருந்த சகோதர சகோதரிகளுக்கு அவர் உதவினார்; இன்று நமக்கும் உதவுவார்.—1 தெ. 2:2.

14. நல்ல செய்தியைப் பிரசங்கிப்பது ஏன் முக்கியம்?

14 யெகோவா பாரபட்சம் காட்டாதவர். அதனால், எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லா மக்களிடமும் நாம் அன்பு காட்டும்போது அவர் சந்தோஷப்படுகிறார். (அப். 10:34, 35) அப்படியென்றால், மற்றவர்களிடம் அன்பு காட்ட எது அருமையான வழி? நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதுதான்! (மத். 28:19, 20) இப்படிச் செய்வதால் என்ன நன்மை? அந்தச் செய்தியைக் கேட்பவர்களின் வாழ்க்கை வளம் பெறுகிறது, பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கிறது.—1 தீ. 4:16.

யெகோவா அப்பாவை நேசியுங்கள், சந்தோஷமாக இருங்கள்

15-16. நாம் ஏன் சந்தோஷமாக இருக்கலாம்?

15 யெகோவா அன்பான ஓர் அப்பா! அதனால், தன்னுடைய குடும்பத்தார் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். (ஏசா. 65:14) நிறைய பிரச்சினைகளோடு நாம் மல்லுக்கட்ட வேண்டியிருந்தாலும், நாம் சந்தோஷமாக இருக்கலாம். எப்படி? அதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். உதாரணத்துக்கு, நம்மேல் உயிரையே வைத்திருக்கும் அன்பு அப்பா யெகோவா நமக்கு இருக்கிறார். பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவு நமக்கு இருக்கிறது. (எரே. 15:16) யெகோவாவையும், அவருடைய சட்டங்களையும் நேசிக்கிற... ஒருவரை ஒருவர் நேசிக்கிற... அருமையான ஒரு குடும்பத்தில் நாம் இருக்கிறோம்.—சங். 106:4, 5.

16 அதோடு, இப்போது இருப்பதைவிட அற்புதமான ஒரு வாழ்க்கை எதிர்காலத்தில் கிடைக்கப்போகிறது. அக்கிரமங்களைச் சீக்கிரத்தில் யெகோவா அடியோடு ஒழித்துக்கட்டப்போகிறார். தன்னுடைய அரசாங்கத்தின் மூலம் சீக்கிரத்தில் பூஞ்சோலை பூமியைக் கொண்டுவரப்போகிறார். நம் பாசத்துக்குரியவர்கள் மறுபடியும் உயிரோடு வரப்போகிறார்கள், நம்மோடு சேர்ந்து வாழப்போகிறார்கள். (யோவா. 5:28, 29) அது எவ்வளவு அற்புதமான காலமாக இருக்கும்! மிக முக்கியமாக, பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற எல்லாரும் நம் அன்பு அப்பா யெகோவாவுக்கு மகிமை சேர்ப்பார்கள், அவரைப் போற்றிப் புகழ்வார்கள், அவரை மட்டுமே வணங்குவார்கள். அதனால், நாம் தொடர்ந்து சந்தோஷமாக இருக்கலாம்.

பாட்டு 112 யெகோவாவே தேவாதி தேவன்

^ பாரா. 5 யெகோவா அப்பா நம்மேல் உயிரையே வைத்திருக்கிறார், அவரை வணங்குகிற குடும்பத்தில் நமக்கும் ஓர் இடம் கொடுத்திருக்கிறார். இதை நினைக்கும்போது, அவர்மேல் அன்பு காட்ட வேண்டும் என்ற ஆசை நமக்கு வருகிறது. அப்படியென்றால், அவர்மேல் நாம் எப்படி அன்பு காட்டலாம்? சில வழிகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.