Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 9

யெகோவா உங்கள் இதயத்துக்கு இதமளிப்பார்!

யெகோவா உங்கள் இதயத்துக்கு இதமளிப்பார்!

“கவலைகள் என்னைத் திணறடித்தபோது, நீங்கள் எனக்கு ஆறுதல் தந்து, என் இதயத்துக்கு இதமளித்தீர்கள்.”—சங். 94:19.

பாட்டு 68 வேதனையில் தவிக்கிறவரின் ஜெபம்

இந்தக் கட்டுரையில்... *

1. எதையெல்லாம் நினைத்து உங்களுக்குக் கவலை வரலாம், அது உங்களை எப்படிப் பாதிக்கலாம்?

கவலைகள் எப்போதாவது உங்களை வாட்டிவதைத்திருக்கிறதா? மற்றவர்களுடைய சொல்லோ செயலோ உங்கள் மனதைக் காயப்படுத்தியிருக்கலாம். அதை நினைத்து நீங்கள் கவலைப்படலாம். * அல்லது, நீங்கள் சொன்னதையோ செய்ததையோ நினைத்து நீங்கள் வேதனைப்படலாம். உதாரணத்துக்கு, நீங்கள் ஏதோவொரு தவறு செய்துவிட்டதால் யெகோவா உங்களை மன்னிக்கவே மாட்டார் என்று நினைத்து புழுங்கிக்கொண்டிருக்கலாம். கவலைகள் உங்களை ரொம்பவே வாட்டிவதைப்பதால், உங்களுக்கு அந்தளவு விசுவாசம் இல்லை என்றும், நீங்கள் மோசமானவர் என்றும் நினைக்க ஆரம்பித்துவிடலாம். ஆனால் அது உண்மையா?

2. கவலைப்படுவதால் நமக்கு விசுவாசம் குறைந்துவிட்டது என்று அர்த்தமா, சிலருடைய உதாரணங்களிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்?

2 சிலருடைய உதாரணங்களை இப்போது பார்க்கலாம். தீர்க்கதரிசியான சாமுவேலின் அம்மா அன்னாளுக்கு பலமான விசுவாசம் இருந்தது. ஆனாலும், அவளுடைய குடும்பத்திலிருந்த ஒருவர் அவளை மோசமாக நடத்தியபோது, அவள் கவலையில் மூழ்கிவிட்டாள். (1 சா. 1:7) அப்போஸ்தலன் பவுலுக்கும் பலமான விசுவாசம் இருந்தது. ஆனாலும், “எல்லா சபைகளையும் பற்றிய கவலை” அவரை வாட்டிவதைத்தது. (2 கொ. 11:28) ‘என் இதயத்துக்குப் பிடித்தமானவன்’ என்று யெகோவா சொல்லுமளவுக்கு தாவீதுக்குப் பலமான விசுவாசம் இருந்தது. (அப். 13:22) ஆனாலும், அவர் செய்த மோசமான தவறுகள் அவரைக் கவலையில் ஆழ்த்தியது. (சங். 38:4) இவர்கள் ஒவ்வொருவரையும் யெகோவா ஆறுதல்படுத்தினார், இதயத்துக்கு இதமளித்தார். இவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இப்போது பார்க்கலாம்.

அன்னாளிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

3. மற்றவர்களுடைய வார்த்தைகள் நம்மை எப்படி வேதனைப்படுத்திவிடலாம்?

3 மற்றவர்கள் நம்மிடம் கடுகடுப்பாகப் பேசும்போதும் அன்பில்லாமல் நடந்துகொள்ளும்போதும் நாம் கவலைப்படலாம். அதுவும், நம்முடைய நண்பரோ குடும்பத்தாரோ சொந்தக்காரரோ அப்படிச் செய்யும்போது நம்முடைய கவலை இன்னும் அதிகமாகலாம். அவர்களுக்கும் நமக்கும் இருக்கிற உறவு முறிந்துவிட்டதோ என்று நினைத்து நாம் கவலைப்படலாம். சிலர், யோசிக்காமல் வார்த்தைகளைக் கொட்டிவிடலாம்; அது நம் மனதை ரொம்பவே காயப்படுத்திவிடலாம். (நீதி. 12:18) வேறுசிலர், நம்மைக் காயப்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு வார்த்தைகளை அள்ளி வீசிவிடலாம். ஓர் இளம் சகோதரிக்கு இதுதான் நடந்தது. “என்னோட நெருங்கிய நண்பர்னு நான் நினைச்சிட்டிருந்த ஒருத்தர், சில வருஷங்களுக்கு முன்னாடி, என்னை பத்தி இல்லாததையும் பொல்லாததையும் இன்டர்நெட்டுல பரப்புனாங்க. அது என் மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. நான் கவலையில மூழ்கிட்டேன். அவங்க ஏன் இப்படி என் முதுகுல குத்துனாங்கனு என்னால புரிஞ்சுக்கவே முடியல” என்று அவர் சொல்கிறார். உங்கள் நெருங்கிய நண்பரோ குடும்பத்தாரோ சொந்தக்காரரோ உங்களைக் காயப்படுத்தியிருக்கிறார்களா? அப்படியென்றால், அன்னாளிடமிருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

4. அன்னாளுக்கு என்னென்ன பிரச்சினைகள் இருந்தன?

4 அன்னாளுக்குச் சில பிரச்சினைகள் இருந்தன. பல வருஷங்களாக அவளுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. (1 சா. 1:2) ஒரு பெண்ணுக்குக் குழந்தை பாக்கியம் இல்லையென்றால், அவள் சபிக்கப்பட்டவள் என்ற எண்ணம் அன்றிருந்த இஸ்ரவேலர்கள் மத்தியில் இருந்தது. அதனால், அன்னாள் கூனிக்குறுகிப்போனாள். (ஆதி. 30:1, 2) அவளுடைய கணவரின் இன்னொரு மனைவி பெனின்னாளிடமிருந்து வந்த பிரச்சினை அவளுடைய நிலைமையை இன்னும் மோசமாக்கியது. பெனின்னாளுக்குக் குழந்தைகள் இருந்ததால், அன்னாளை அவள் குத்திக்காட்டினாள், “அவளை நோகடித்தாள், அவளைப் பழித்துப் பேசிக்கொண்டே இருந்தாள்.” (1 சா. 1:6) ஆரம்பத்தில், இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது என்று அன்னாளுக்குத் தெரியவில்லை. அதனால், வேதனை தாங்காமல் “[அவள்] அழுதுகொண்டே இருந்தாள், சாப்பிடவே இல்லை.” “அன்னாள் ரொம்பவே மனமுடைந்துபோயிருந்தாள்.” (1 சா. 1:7, 10) அவளுக்கு எப்படி ஆறுதல் கிடைத்தது?

5. ஜெபம் செய்தது அன்னாளுக்கு எப்படி உதவியது?

5 தன்னுடைய வேதனைகளை அன்னாள் ஜெபத்தில் கொட்டினாள். பிறகு, தலைமைக் குருவான ஏலியிடம் தன்னுடைய சூழ்நிலையை விளக்கினாள். அப்போது அவர், “நிம்மதியாகப் போ. நீ வேண்டிக்கொண்டதை இஸ்ரவேலின் கடவுள் உனக்குத் தருவார்” என்று சொன்னார். பிறகு என்ன நடந்தது? அவள் “அங்கிருந்து போய், சாப்பிட ஆரம்பித்தாள். அதன் பிறகு அவள் முகம் வாடியிருக்கவில்லை.” (1 சா. 1:17, 18) மனசமாதானத்தோடு இருப்பதற்கு அன்னாளுக்கு ஜெபம் உதவியது.

இழந்துபோன மனசமாதானத்தை திரும்பவும் பெற்றுக்கொள்ள, அன்னாளைப் போலவே நாமும் என்ன செய்யலாம்? (பாராக்கள் 6-10)

6. ஜெபம் செய்வதைப் பற்றி அன்னாளிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம், பிலிப்பியர் 4:6, 7-லிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

6 விடாமல் ஜெபம் செய்வதன் மூலம், இழந்துபோன மனசமாதானத்தை மறுபடியும் பெற்றுக்கொள்ளலாம். தன்னுடைய பிரச்சினையைப் பற்றி அன்னாள் ரொம்ப நேரம் ஜெபம் செய்தாள். (1 சா. 1:12) நம்முடைய கவலைகள், பயங்கள், குறைபாடுகள் ஆகியவற்றைப் பற்றி நாமும் ரொம்ப நேரம் யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம். நயமான, அழகான வார்த்தைகளைப் பயன்படுத்திதான் ஜெபம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலசமயங்களில் வார்த்தைகள் கிடைக்காமல் நாம் தவிக்கலாம், வெறுமனே அழுகை மட்டுமே வரலாம். இருந்தாலும், யெகோவா ஒருபோதும் சலித்துக்கொள்ள மாட்டார். நம்முடைய பிரச்சினைகளைப் பற்றி ஜெபம் செய்வதோடு, பிலிப்பியர் 4:6, 7-ல் சொல்லியிருப்பதையும் செய்ய வேண்டும். (வாசியுங்கள்.) ஜெபத்தில் நாம் நன்றி சொல்ல வேண்டும் என்று பவுல் இந்த வசனங்களில் சொல்லியிருக்கிறார். நிறைய விஷயங்களுக்காக நாம் நன்றி சொல்லலாம்! உதாரணத்துக்கு, உயிர் என்ற பரிசை யெகோவா நமக்குத் தந்திருக்கிறார், எழில் கொஞ்சும் படைப்புகளைப் படைத்திருக்கிறார், நம்மீது மாறாத அன்பு வைத்திருக்கிறார், அற்புதமான எதிர்கால நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார். இவை எல்லாவற்றுக்கும் நாம் நன்றி சொல்லலாம். அன்னாளிடமிருந்து வேறு என்ன கற்றுக்கொள்ளலாம்?

7. அன்னாளும் அவளுடைய கணவரும் தொடர்ந்து என்ன செய்தார்கள்?

7 பிரச்சினைகளுக்கு மத்தியிலும் சீலோவிலிருந்த யெகோவாவின் சன்னிதிக்கு அன்னாள் தன் கணவரோடு தொடர்ந்து போனாள். (1 சா. 1:1-5) அங்கிருந்த வழிபாட்டுக் கூடாரத்தில் அவள் இருந்தபோதுதான், அவளுடைய ஜெபத்துக்கு யெகோவா நிச்சயம் பதில் கொடுப்பார் என்று சொல்லி தலைமைக் குருவான ஏலி அவளைப் பலப்படுத்தினார்.—1 சா. 1:9, 17.

8. கூட்டங்கள் எப்படி நமக்கு உதவியாக இருக்கும்? விளக்குங்கள்.

8 தொடர்ந்து கூட்டங்களுக்குப் போவதன் மூலம், இழந்துபோன மனசமாதானத்தை மறுபடியும் பெற்றுக்கொள்ளலாம். ஆரம்ப ஜெபம் செய்கிற சகோதரர்கள் பெரும்பாலும் கடவுளுடைய சக்தியைக் கேட்டு ஜெபம் செய்கிறார்கள். அந்தச் சக்தியால் உண்டாகிற குணங்களில் சமாதானமும் ஒன்று. (கலா. 5:22) கவலைகளுக்கு மத்தியிலும் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது, யெகோவாவிடமிருந்தும் சகோதர சகோதரிகளிடமிருந்தும் நாம் பலத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இழந்துபோன மனசமாதானத்தையும் பெற்றுக்கொள்ளலாம். நம்முடைய இதயத்துக்கு இதமளிக்க யெகோவா பயன்படுத்துகிற இரண்டு முக்கியமான வழிகள், ஜெபமும் கூட்டங்களும்! (எபி. 10:24, 25) அன்னாளிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிற இன்னொரு பாடத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

9. அன்னாளுடைய விஷயத்தில் எது மாறவில்லை, எது மாறியது?

9 அன்னாளுடைய கவலைக்குக் காரணமாக இருந்த விஷயங்கள், உடனடியாக மாறிவிடவில்லை. வழிபாட்டுக் கூடாரத்திலிருந்து திரும்பிய பிறகு, மறுபடியும் பெனின்னாளோடு சேர்ந்து ஒரே வீட்டில்தான் அவள் வாழ வேண்டியிருந்தது. பெனின்னாள் திருந்தியதாக பைபிள் சொல்லவில்லை. அவளுடைய குத்தலான பேச்சை அன்னாள் தொடர்ந்து சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், இழந்துபோன மனசமாதானத்தை அன்னாள் பெற்றுக்கொண்டாள், திரும்பவும் அதை இழந்துவிடவில்லை. தன்னுடைய பிரச்சினையை யெகோவாவின் கையில் விட்டுவிட்ட பிறகு, அதை நினைத்து அவள் கவலைப்படவில்லை. அவள் யெகோவாவை முழுமையாக நம்பியிருந்தாள். கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, அவளுக்குக் குழந்தைகள் பிறந்தன.—1 சா. 1:19, 20; 2:21.

10. அன்னாளின் அனுபவத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?

10 கவலைக்குக் காரணமாக இருக்கிற விஷயங்கள் நம்மை விட்டுப்போகவில்லை என்றாலும், இழந்துபோன மனசமாதானத்தை மறுபடியும் பெற்றுக்கொள்ளலாம். நாம் உருக்கமாக ஜெபம் செய்தாலும், தொடர்ந்து கூட்டங்களுக்குப் போனாலும், சில பிரச்சினைகள் நம்மை விட்டுப்போகாமல் இருக்கலாம். ஆனால், உடைந்துபோன நம் உள்ளத்திற்கு யெகோவா இதமளிப்பதை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை அன்னாளின் அனுபவம் காட்டுகிறது. யெகோவா ஒருபோதும் நம்மை மறக்க மாட்டார். நம்முடைய உண்மைத்தன்மைக்கு அவர் நிச்சயம் பலன் தருவார்.—எபி. 11:6.

அப்போஸ்தலன் பவுலிடமிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?

11. என்னென்ன விஷயங்களை நினைத்து பவுல் கவலைப்பட்டிருக்கலாம்?

11 நிறைய விஷயங்களை நினைத்து பவுல் கவலைப்பட்டிருக்கலாம். உதாரணத்துக்கு, அவருடைய அன்பான சகோதர சகோதரிகள் பிரச்சினைகளில் சிக்கித் தவித்தபோது, அவருக்கு ரொம்பக் கவலையாக இருந்தது. (2 கொ. 2:4; 11:28) பவுல் ஊழியம் செய்தபோது, அவருடைய எதிரிகள் அவரை அடித்து சிறையில் தள்ளினார்கள். சிலசமயங்களில் “குறைவான பொருள்களை” வைத்து அவர் வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருந்தது. (பிலி. 4:12) அதோடு, குறைந்தது மூன்று தடவையாவது அவர் கப்பல் விபத்தில் மாட்டிக்கொண்டார். அப்படியென்றால், கப்பல் பயணம் செய்வது அவருக்கு எவ்வளவு கவலையாக இருந்திருக்கும்! (2 கொ. 11:23-27) இந்தக் கவலைகளையெல்லாம் பவுல் எப்படிச் சமாளித்தார்?

12. பவுலின் கவலைகளை எது குறைத்தது?

12 சகோதர சகோதரிகள் பட்ட கஷ்டத்தைப் பார்த்து பவுல் ரொம்பக் கவலைப்பட்டார். ஆனால், தானே அவற்றைச் சரிசெய்துவிடலாம் என்று அவர் நினைக்கவில்லை. தன்னுடைய வரம்புகளை அவர் புரிந்துவைத்திருந்தார். அதனால், சகோதர சகோதரிகளை கவனித்துக்கொள்வதற்கு மற்றவர்களிடம் உதவி கேட்டார். உதாரணத்துக்கு, தீமோத்தேயு மற்றும் தீத்து போன்ற நம்பகமான ஆட்களுக்கு அவர் அதிகாரம் கொடுத்தார். அவர்கள் செய்த உதவி பவுலின் கவலைகளைக் குறைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.—பிலி. 2:19, 20; தீத். 1:1, 4, 5.

கவலையில் மூழ்கிவிடாமல் இருப்பதற்கு, அப்போஸ்தலன் பவுலைப் போலவே நாமும் என்ன செய்யலாம்? (பாராக்கள் 13-15)

13. மூப்பர்கள் எப்படி பவுலைப் போலவே நடந்துகொள்ளலாம்?

13 மற்றவர்களிடம் உதவி கேளுங்கள். அப்போஸ்தலன் பவுலைப் போலவே, சகோதர சகோதரிகள் படுகிற கஷ்டத்தைப் பார்த்து இன்றுள்ள அன்பான மூப்பர்கள் நிறைய பேர் கவலைப்படுகிறார்கள். ஆனால், சபையில் இருக்கிற எல்லாருக்கும் ஒரே மூப்பரால் உதவி செய்துவிட முடியாது. இதை ஒரு மூப்பர் புரிந்துகொண்டால், மற்றவர்களுக்கு உதவும்படி தகுதியுள்ள மற்ற சகோதரர்களைக் கேட்டுக்கொள்வார். கடவுளுடைய மந்தையைக் கவனித்துக்கொள்வதற்கு தனக்கு உதவுவதற்காக இளம் சகோதரர்களுக்குப் பயிற்சி தருவார்.—2 தீ. 2:2.

14. எதை நினைத்து பவுல் கவலைப்படவில்லை, அவரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

14 உங்களுக்கும் ஆறுதல் தேவை என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். பவுல் மனத்தாழ்மையுள்ளவராக இருந்ததால், தனக்கும் ஆறுதல் தேவை என்பதை ஒத்துக்கொண்டார். அதனால், தன்னுடைய நண்பர்களிடம் கேட்டு அதைப் பெற்றுக்கொண்டார். இது மற்றவர்களுக்குத் தெரியவந்தால், தன்னை பலவீனமானவன் என்று அவர்கள் நினைத்துக்கொள்வார்களோ என்றெல்லாம் அவர் கவலைப்படவில்லை. “நீங்கள் காட்டுகிற அன்பைப் பற்றிக் கேள்விப்பட்டு நான் மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்தேன்” என்று பிலேமோனுக்கு எழுதிய கடிதத்தில் அவர் சொன்னார். (பிலே. 7) கஷ்டகாலத்தில் தனக்கு ரொம்பவே உதவிய மற்ற சகோதரர்களைப் பற்றியும் பவுல் சொன்னார். (கொலோ. 4:7-11) சகோதர சகோதரிகளுடைய ஆறுதல் நமக்குத் தேவை என்பதை நாம் மனத்தாழ்மையோடு ஒத்துக்கொண்டால், அதைச் சந்தோஷமாகக் கொடுப்பதற்கு அவர்கள் தயாராக இருப்பார்கள்.

15. இக்கட்டான சமயங்களில் ஆறுதலைப் பெற்றுக்கொள்ள பவுல் என்ன செய்தார்?

15 பைபிளைச் சார்ந்திருங்கள். வேதவசனங்கள் தனக்கு ஆறுதலைத் தரும் என்பது பவுலுக்குத் தெரிந்திருந்தது. (ரோ. 15:4) எப்பேர்ப்பட்ட சோதனையையும் சமாளிப்பதற்குத் தேவையான ஞானத்தை அவை தரும் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. (2 தீ. 3:15, 16) ரோமில் இரண்டாவது தடவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயத்தில், மரணம் தன்னை நெருங்கிக்கொண்டிருப்பது அவருக்குப் புரிந்தது. அந்த இக்கட்டான சமயத்தில் பவுல் என்ன செய்தார்? ‘சுருள்களை’ எடுத்துக்கொண்டு சீக்கிரமாக வரும்படி தீமோத்தேயுவைக் கேட்டுக்கொண்டார். (2 தீ. 4:6, 7, 9, 13) ஏனென்றால், எபிரெய வேதாகமத்தின் சில பகுதிகள் அந்தச் சுருள்களில் இருந்தன. அதனால், அவற்றைப் படிப்பதற்காகக் கொண்டுவரச் சொன்னார். நாமும் பவுலைப் போலவே தொடர்ந்து பைபிளைப் படித்தால், வசனங்கள் மூலம் யெகோவா நம் இதயத்துக்கு இதமளிப்பார். எப்பேர்ப்பட்ட பிரச்சினையையும் சந்திப்பதற்குத் தேவையான பலத்தைத் தருவார்.

தாவீது ராஜாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?

மோசமான பாவத்தைச் செய்துவிட்டால், தாவீது ராஜாவைப் போலவே நாமும் எப்படி உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்? (பாராக்கள் 16-19)

16. மோசமான பாவம் செய்ததால் தாவீது எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்?

16 தாவீது ராஜா பத்சேபாளோடு விபச்சாரம் செய்தார், அவளுடைய கணவரைக் கொலை செய்ய சதித்திட்டம் போட்டார், இந்தக் குற்றங்களை மூடிமறைக்கவும் முயற்சி செய்தார். (2 சா. 12:9) ஆரம்பத்தில், தன்னுடைய மனசாட்சி சொன்னதை அவர் கண்டுகொள்ளவில்லை. அதனால், யெகோவாவோடு அவருக்கு இருந்த பந்தம் பாதிக்கப்பட்டது. மனதளவிலும் உடலளவிலும் அவருக்கு பாதிப்பு வந்தது. (சங். 32:3, 4) குற்ற உணர்வு அவரை வாட்டியெடுத்தது. மோசமான பாவத்தால் ஏற்பட்ட கவலைகளைச் சமாளிக்க தாவீதுக்கு எது உதவியது? இன்று நாமும் ஏதாவது மோசமான பாவம் செய்துவிட்டால், எது நமக்கு உதவும்?

17. தாவீது உண்மையிலேயே மனம் திருந்தினார் என்பதை சங்கீதம் 51:1-4 எப்படிக் காட்டுகிறது?

17 மன்னிப்பு கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். தாவீது, கடைசியில் யெகோவாவிடம் ஜெபம் செய்தார். அவர் உண்மையிலேயே மனம் திருந்தினார், தன்னுடைய பாவங்களை ஒத்துக்கொண்டார். (சங்கீதம் 51:1-4-ஐ வாசியுங்கள்.) அப்படிச் செய்தது அவருக்கு நிம்மதியைத் தந்தது! (சங். 32:1, 2, 4, 5) ஒருவேளை நீங்கள் மோசமான பாவம் செய்துவிட்டால், அதை மூடிமறைக்காதீர்கள். உங்கள் பாவங்களை வெளிப்படையாக யெகோவாவிடம் சொல்லுங்கள். அப்போது, குற்றமுள்ள மனசாட்சியிலிருந்து உங்களுக்கு ஓரளவு விடுதலை கிடைக்கும். ஆனால், யெகோவாவோடு இருக்கிற பந்தத்தில் ஏற்பட்ட விரிசலைச் சரி செய்ய வேண்டும் என்றால், ஜெபம் செய்வது மட்டும் போதாது. வேறொன்றையும் நீங்கள் செய்ய வேண்டும்.

18. கண்டித்துத் திருத்தப்பட்டபோது தாவீது எப்படி நடந்துகொண்டார்?

18 கண்டித்துத் திருத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளுங்கள். தாவீது செய்த தவறை வெளிச்சத்துக்குக் கொண்டுவர, நாத்தான் தீர்க்கதரிசியை யெகோவா அனுப்பினார். அப்போது தாவீது எப்படி நடந்துகொண்டார்? தன் தவறை அவர் நியாயப்படுத்தவில்லை, தான் செய்தது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறில்லை என்று வாதாடவில்லை. உடனடியாகத் தவறை ஒத்துக்கொண்டார். பத்சேபாளுடைய கணவருக்கு எதிராக மட்டுமல்ல, யெகோவாவுக்கு எதிராகவும் தான் தவறு செய்துவிட்டதாகச் சொன்னார். யெகோவா கொடுத்த கண்டிப்பை அவர் ஏற்றுக்கொண்டார், அதனால் யெகோவா அவரை மன்னித்தார். (2 சா. 12:10-14) நாம் ஏதாவது மோசமான பாவம் செய்துவிட்டால், யெகோவாவால் நியமிக்கப்பட்ட மேய்ப்பர்களிடம் பேச வேண்டும். (யாக். 5:14, 15) நாம் செய்ததை நியாயப்படுத்தக் கூடாது. நமக்குக் கிடைக்கிற கண்டிப்பை எவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் சமாதானமும் சந்தோஷமும் திரும்பக் கிடைக்கும்.

19. என்ன செய்ய நாம் உறுதியாக இருக்க வேண்டும்?

19 செய்த தவறுகளை மறுபடியும் செய்யாமல் இருக்க உறுதியோடு இருங்கள். செய்த தவறுகளை மறுபடியும் செய்யாமல் இருப்பதற்கு யெகோவாவின் உதவி தனக்குத் தேவை என்பது தாவீதுக்குத் தெரிந்திருந்தது. (சங். 51:7, 10, 12) யெகோவாவின் மன்னிப்பைப் பெற்றுக்கொண்ட பிறகு, மறுபடியும் தவறான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளக் கூடாது என்பதில் தாவீது உறுதியாக இருந்தார். அதனால், இழந்துபோன மனசமாதானம் திரும்பவும் அவருக்குக் கிடைத்தது.

20. யெகோவா தருகிற மன்னிப்புக்காக நன்றியோடு இருக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

20 மன்னிப்பு கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்யும்போதும், அவர் கொடுக்கிற கண்டிப்பை ஏற்றுக்கொள்ளும்போதும், செய்த தவறை மறுபடியும் செய்யாமல் இருக்க கடினமாக முயற்சி செய்யும்போதும் அவர் தருகிற மன்னிப்புக்காக நாம் நன்றியோடு இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். இவற்றையெல்லாம் செய்தால், இழந்துபோன மனசமாதானம் திரும்பவும் கிடைக்கும். மோசமான பாவம் செய்த ஜேம்ஸ் என்ற சகோதரரின் விஷயத்தில் இதுதான் நடந்தது. “நான் செஞ்ச பாவத்த பத்தி மூப்பர்கள்கிட்ட சொன்னப்போ, என் தோள்மேல இருந்த பெரிய பாரத்த இறக்கி வைச்ச மாதிரி இருந்துச்சு. எனக்கு மறுபடியும் மனசமாதானம் கிடைச்சது” என்று அவர் சொல்கிறார். “உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார். மனம் நொந்துபோனவர்களை அவர் காப்பாற்றுகிறார்.” (சங். 34:18) இதைத் தெரிந்துகொள்வது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!

21. யெகோவா நம் இதயத்துக்கு இதமளிக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

21 உலகத்தின் முடிவு நெருங்க நெருங்க, கவலையை உண்டாக்குகிற விஷயங்கள் அதிகமாகிக்கொண்டே போகலாம். கவலைகள் உங்களைத் திணறடிக்கும்போது, உடனடியாக ஜெபம் செய்யுங்கள். ஊக்கமாக பைபிள் படியுங்கள். அன்னாள், பவுல், தாவீது ஆகியவர்களின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். எதனால் உங்களுக்குக் கவலைகள் வருகின்றன என்பதைக் கண்டுபிடிக்க உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள். (சங். 139:23) உங்கள் பாரத்தையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள். முக்கியமாக, உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை அவர்மேல் போட்டுவிடுங்கள். இப்படியெல்லாம் செய்தால், சங்கீதக்காரர் சொன்னதைப் போலவே உங்களாலும் சொல்ல முடியும். “கவலைகள் என்னைத் திணறடித்தபோது, நீங்கள் எனக்கு ஆறுதல் தந்து, என் இதயத்துக்கு இதமளித்தீர்கள்” என்று அவர் சொன்னார்.—சங். 94:19.

பாட்டு 22 ‘யெகோவா என் மேய்ப்பர்’

^ பாரா. 5 நமக்கு வரும் பிரச்சினைகளை நினைத்து சிலசமயங்களில் நாம் கவலையில் மூழ்கிவிடுகிறோம். அப்படிக் கவலையில் மூழ்கித் தவித்த மூன்று பேரைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் யெகோவா எப்படி ஆறுதல் கொடுத்தார் என்றும், அவர்களுடைய இதயத்துக்கு எப்படி இதமளித்தார் என்றும் பார்ப்போம்.

^ பாரா. 1 வார்த்தைகளின் விளக்கம்: பணக் கஷ்டத்தாலோ உடல்நிலை மோசமாவதாலோ குடும்பப் பிரச்சினையாலோ அல்லது வேறு ஏதாவது கஷ்டத்தாலோ நமக்குக் கவலை வரலாம். அதோடு, ஏற்கெனவே செய்த தவறுகளை நினைத்தோ எதிர்காலத்தில் வரும் பிரச்சினைகளை நினைத்தோ நமக்குக் கவலை வரலாம்.