Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 11

ஞானஸ்நானம் எடுப்பதற்கு நீங்கள் தயாரா?

ஞானஸ்நானம் எடுப்பதற்கு நீங்கள் தயாரா?

“ஞானஸ்நானம், . . . இப்போது உங்களைக் காப்பாற்றுகிறது.”​—1 பே. 3:21.

பாட்டு 106 யெகோவாவின் நண்பராய் ஆகுங்கள்

இந்தக் கட்டுரையில்... *

1. வீடு கட்டுவதற்கு முன்பு ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

இதைக் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்: வீடு கட்ட வேண்டும் என்று ஒருவர் முடிவு செய்கிறார். அந்த வீட்டை எப்படிக் கட்ட வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். அதற்காக, உடனே போய் எல்லா சாமான்களையும் வாங்கிவந்து கட்டிட வேலையை ஆரம்பித்துவிடுவாரா? இல்லை! இதெல்லாம் செய்வதற்கு முன்பாக முக்கியமான ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும். அதாவது, வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைக் கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான், அந்த வீட்டைக் கட்டி முடிக்கும் அளவுக்குத் தன்னிடம் போதுமான பணம் இருக்கிறதா என்று அவரால் தெரிந்துகொள்ள முடியும். செலவைக் கவனமாகக் கணக்குப் போட்டுப் பார்த்தால்தான் அந்த வீட்டை அவரால் நல்லபடியாகக் கட்டி முடிக்க முடியும்.

2. லூக்கா 14:27-30 சொல்வதுபோல், ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு எதைப் பற்றிக் கவனமாக யோசித்துப்பார்க்க வேண்டும்?

2 யெகோவாவின் மேல் அன்பும் நன்றியுணர்வும் இருப்பதால் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறீர்களா? அப்படியென்றால், வீடு கட்ட வேண்டும் என்று முடிவெடுத்த அந்த நபரைப் போல் நீங்கள் இருக்கிறீர்கள். எப்படி? லூக்கா 14:27-30-ல் இயேசு என்ன சொன்னார் என்று கவனியுங்கள். (வாசியுங்கள்.) யாராவது தன்னுடைய சீஷராக ஆக விரும்பினால், அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தான் இயேசு அந்த வசனங்களில் சொல்லியிருக்கிறார். ஒருவர் இயேசுவுடைய சீஷராக ஆக விரும்பினால், அதோடு சம்பந்தப்பட்ட ‘செலவுகளை’ ஏற்றுக்கொள்ள மனமுள்ளவராக இருக்க வேண்டும். அதாவது, சீஷராக ஆவதில் இருக்கும் சவால்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்; தியாகங்கள் செய்யவும் தயாராக இருக்க வேண்டும். (லூக். 9:23-26; 12:51-53) அதனால், ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு, சீஷராக ஆவதில் என்னென்ன விஷயங்கள் அடங்கியிருக்கின்றன என்பதைக் கவனமாக யோசித்துப்பாருங்கள். அப்படிச் செய்தால், ஞானஸ்நானம் எடுத்த பிறகும் உங்களால் தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியும்.

3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

3 ஞானஸ்நானம் எடுப்பதற்காக நீங்கள் செய்கிற தியாகங்களுக்குப் பலன் கிடைக்குமா? நிச்சயமாக! ஞானஸ்நானம் எடுப்பது, இப்போதும் சரி எதிர்காலத்திலும் சரி ஆசீர்வாதங்களை அள்ளித்தரும்! இப்போது, ஞானஸ்நானம் சம்பந்தப்பட்ட சில முக்கியமான கேள்விகளைக் கலந்து பேசலாம். அப்படிச் செய்யும்போது, ‘ஞானஸ்நானம் எடுக்க நான் தயாரா’ என்ற கேள்விக்கு உங்களுக்குப் பதில் கிடைக்கும்.

அர்ப்பணிப்பும் ஞானஸ்நானமும்—நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

4. (அ) அர்ப்பணிப்பது என்றால் என்ன? (ஆ) மத்தேயு 16:24-ல் சொல்லப்பட்டிருப்பதுபோல், தன்னைத்தானே ‘துறப்பது’ என்றால் என்ன?

4 அர்ப்பணிப்பது என்றால் என்ன? ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு நீங்கள் யெகோவாவுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அதற்கு, யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்ய வேண்டும். அந்த ஜெபத்தில், என்றென்றைக்கும் அவருக்குச் சேவை செய்வதற்காக உங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும். இப்படி நீங்கள் அர்ப்பணிக்கும்போது, உங்களையே ‘துறக்கிறீர்கள்!’ (மத்தேயு 16:24-ஐ வாசியுங்கள்.) இப்போது நீங்கள் யெகோவாவுக்குச் சொந்தம்! இது எவ்வளவு பெரிய பாக்கியம்!! (ரோ. 14:8) உங்களை அர்ப்பணிக்கும்போது, ‘இனி என்னோட சந்தோஷத்துக்காக பாடுபடாம உங்களுக்கு சேவை செய்றதுக்காகத்தான் பாடுபடப்போறேன்’ என்று யெகோவாவிடம் சொல்கிறீர்கள். அர்ப்பணிப்பு என்பது, நீங்கள் யெகோவாவுக்குக் கொடுக்கும் உறுதிமொழி. இந்த உறுதிமொழியை நீங்கள் கொடுக்க வேண்டும் என்று யெகோவா கட்டாயப்படுத்துவதில்லை; ஆனால், கொடுத்த பிறகு அதைக் காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.​—சங். 116:12, 14.

5. அர்ப்பணிப்பதற்கும் ஞானஸ்நானம் எடுப்பதற்கும் என்ன வித்தியாசம்?

5 அர்ப்பணிப்பும் ஞானஸ்நானமும் எப்படி ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டிருக்கிறது? அர்ப்பணிப்பு என்பது, நீங்கள் தனிப்பட்ட விதத்தில் செய்வது; யெகோவாவுக்கும் உங்களுக்கும் மட்டுமே அது தெரியும். ஆனால் ஞானஸ்நானம் என்பது, எல்லாருக்கும் முன்பாகச் செய்வது; பொதுவாக மாநாடுகளில் ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறது. ஞானஸ்நானம் எடுக்கும்போது, நீங்கள் ஏற்கெனவே யெகோவாவுக்கு அர்ப்பணித்துவிட்டீர்கள் என்பதை மற்றவர்களுக்குக் காட்டுகிறீர்கள். * அதோடு, நீங்கள் யெகோவாமேல் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்பு காட்டுகிறீர்கள் என்பதையும், அவருக்கு என்றென்றும் சேவை செய்ய முடிவெடுத்திருக்கிறீர்கள் என்பதையும் காட்டுகிறீர்கள்.​—மாற். 12:30.

6-7. ஒன்று பேதுரு 3:18-22 காட்டுகிறபடி, ஞானஸ்நானம் எடுப்பதற்கு இரண்டு காரணங்கள் என்ன?

6 கண்டிப்பாக ஒருவர் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா? 1 பேதுரு 3:18-22-ல் என்ன சொல்லியிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். (வாசியுங்கள்.) நோவா கட்டிய பேழை, அவருடைய விசுவாசத்துக்கான அத்தாட்சியாக இருந்தது. நீங்கள் எடுக்கிற ஞானஸ்நானம், யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்திருப்பதற்கான அத்தாட்சியாக இருக்கிறது. ஆனால், ஞானஸ்நானம் எடுப்பது அவ்வளவு முக்கியமா? ஆமாம், முக்கியம்தான்! இதைப் பற்றி பேதுரு என்ன சொன்னார் என்று பாருங்கள். முதலாவதாக, ஞானஸ்நானம் ‘உங்களைக் காப்பாற்றுகிறது.’ எப்படி? இயேசுவின் மீது இருக்கும் விசுவாசத்தைச் செயல்கள் மூலம் காட்டும்போது ஞானஸ்நானம் நம்மைக் காப்பாற்றுகிறது. இயேசுவின் மீது விசுவாசம் வைப்பதில் எவையெல்லாம் அடங்கியிருக்கின்றன? அவர் நமக்காக இறந்தார்... பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்பட்டார்... இப்போது “கடவுளுடைய வலது பக்கத்தில் இருக்கிறார்”... என்பதையெல்லாம் நம்புவதும் அடங்கியிருக்கின்றன.

7 இரண்டாவதாக, ‘நல்ல மனசாட்சியோடு’ இருப்பதற்கு ஞானஸ்நானம் உதவுகிறது. யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கும்போது, அவரோடு நமக்கு விசேஷமான ஒரு பந்தம் ஏற்படுகிறது. நாம் உண்மையிலேயே மனம் திருந்தியதாலும், மீட்புவிலையின் மேல் விசுவாசம் வைத்ததாலும் யெகோவா நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார். அதனால், நல்ல மனசாட்சியோடு நம்மால் இருக்க முடிகிறது.

8. நீங்கள் ஞானஸ்நானம் எடுப்பதற்கு எது முக்கியக் காரணமாக இருக்க வேண்டும்? விளக்குங்கள்.

8 ஞானஸ்நானம் எடுப்பதென்று நீங்கள் முடிவெடுப்பதற்கு எது முக்கியக் காரணமாக இருக்க வேண்டும்? பைபிளைக் கவனமாகப் படித்ததால், யெகோவாவைப் பற்றியும், அவருடைய வழிகளைப் பற்றியும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது உங்கள் மனதைத் தொட்டிருக்கும், அவர்மேல் அன்பு காட்ட உங்களைத் தூண்டியிருக்கும். அதனால், யெகோவாமேல் இருக்கிற அன்புதான் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முக்கியக் காரணமாக இருக்க வேண்டும்.

9. மத்தேயு 28:19, 20-ல் சொல்லியிருப்பதுபோல், தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் எடுப்பது என்றால் என்ன?

9 இன்னொரு காரணம், பைபிளில் இருக்கிற உண்மைகளை நீங்கள் கற்றுக்கொண்டு அதை நம்ப ஆரம்பித்ததுதான்! மற்றவர்களைச் சீஷர்களாக்கும்படி கட்டளை கொடுத்தபோது, இயேசு என்ன சொன்னார் என்று கவனியுங்கள். (மத்தேயு 28:19, 20-ஐ வாசியுங்கள்.) “பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும்” ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று சொன்னார். இதன் அர்த்தம் என்ன? யெகோவாவைப் பற்றியும், அவருடைய மகனான இயேசுவைப் பற்றியும், அவருடைய சக்தியைப் பற்றியும் பைபிள் என்ன சொல்கிறதோ அதை நீங்கள் முழு மனதோடு நம்ப வேண்டும். இந்த உண்மைகள், உங்கள் மனதை ஆழமாகத் தொடுமளவுக்கு வலிமையானவை! (எபி. 4:12) இவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

10-11. பரலோகத் தந்தையைப் பற்றிய என்னென்ன உண்மைகளை நீங்கள் தெரிந்துகொண்டீர்கள்?

10 பரலோகத் தந்தையைப் பற்றிய இந்த உண்மைகளையெல்லாம் நீங்கள் தெரிந்துகொண்டீர்கள்: அவருடைய ‘பெயர் யெகோவா,’ அவர்தான் “இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள்,” அவர் மட்டும்தான் “உண்மைக் கடவுள்.” (சங். 83:18; ஏசா. 37:16) அதுமட்டுமல்ல, யெகோவாதான் நம்மைப் படைத்தவர்; ‘யெகோவாதான் மீட்பு தருகிறார்’. (சங். 3:8; 36:9) பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றுவதற்கும், முடிவில்லாத வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கும் அவர் வழி செய்திருக்கிறார். (யோவா. 17:3) இந்த உண்மைகளையெல்லாம் தெரிந்துகொண்டபோது நீங்கள் நிச்சயம் பூரித்துப்போயிருப்பீர்கள்! உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கும்போது, நீங்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆகிறீர்கள். (ஏசா. 43:10-12) கடவுளுடைய பெயரைத் தாங்கியிருப்பதையும், அதைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதையும் பாக்கியமாக நினைக்கும் உலகளாவிய குடும்பத்தில் ஒருவராகவும் ஆகிறீர்கள்.​—சங். 86:12.

11 பரலோகத் தந்தையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்வது உண்மையிலேயே நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பெரிய பாக்கியம். இந்த அருமையான உண்மைகளைத் தெரிந்துகொள்ளும்போது, யெகோவாவுக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்ற ஆசை உங்கள் இதயத்தில் பிறக்கும்.

12-13. மகனைப் பற்றிய என்னென்ன உண்மைகளை நீங்கள் தெரிந்துகொண்டீர்கள்?

12 மகனைப் பற்றிய இந்த உண்மைகளையெல்லாம் நீங்கள் தெரிந்துகொண்டீர்கள்: இந்தப் பிரபஞ்சத்திலேயே அவர்தான் இரண்டாவது முக்கியமான நபர். அவர்தான் நம் மீட்பர். அவர்தான் தன் உயிரை நமக்காக மனதாரக் கொடுத்தவர். அவர் கொடுத்த மீட்புவிலையின் மீது நமக்கு விசுவாசம் இருக்கிறது என்பதைச் செயலில் காட்டும்போது, நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும்; கடவுளோடு நட்பை வளர்த்துக்கொள்ள முடியும்; முடிவில்லாத வாழ்வையும் பெற்றுக்கொள்ள முடியும். (யோவா. 3:16) இயேசுதான் நம்முடைய தலைமைக் குரு. மீட்புவிலையிலிருந்து நன்மையடைவதற்கும், கடவுளோடு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்வதற்கும் அவர் நமக்கு உதவுகிறார். (எபி. 4:15; 7:24, 25) அவர்தான் கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜா! அவர் மூலம் யெகோவா தன்னுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவார், அக்கிரமத்தை அடியோடு ஒழித்துக்கட்டுவார், பூஞ்சோலையில் முடிவில்லாத ஆசீர்வாதங்களை அள்ளித் தருவார். (மத். 6:9, 10; வெளி. 11:15) இயேசு நமக்கு ஓர் அருமையான முன்மாதிரி! (1பே. 2:21) எப்படி? கடவுளுடைய விருப்பத்தைச் செய்வதற்காகவே அவர் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தாரே! (யோவா. 4:34) இந்த உண்மைகளை எல்லாம் தெரிந்துகொண்டபோது உங்களுக்கு எப்படி இருந்தது? நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பீர்கள்.

13 கடவுளுடைய செல்ல மகனான இயேசுவைப் பற்றி பைபிள் என்ன சொல்லித்தருகிறது என்பதைப் புரிந்துகொண்டபோது, அவர்மீது உங்களுக்கு அன்பு வளர ஆரம்பித்திருக்கும். அந்த அன்பு, அவரைப் போலவே கடவுளுடைய விருப்பத்தைச் செய்ய வேண்டும் என்ற ஆசையை உங்களுக்குள் விதைக்கும். அப்போது, யெகோவாவுக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்ற தூண்டுதல் உங்களுக்கு வரும்.

14-15. கடவுளுடைய சக்தியைப் பற்றிய என்னென்ன உண்மைகளை நீங்கள் தெரிந்துகொண்டீர்கள்?

14 கடவுளுடைய சக்தியைப் பற்றிய இந்த உண்மைகளையெல்லாம் நீங்கள் தெரிந்துகொண்டீர்கள்: அந்தச் சக்தி ஒரு நபர் அல்ல, அது கடவுளுடைய செயல் நடப்பிக்கும் ஆற்றல். அந்தச் சக்தியைப் பயன்படுத்தி, பைபிளை எழுதும்படி மனிதர்களை யெகோவா தூண்டினார். பைபிளில் இருப்பதைப் புரிந்துகொள்வதற்கும், அதன்படி செய்வதற்கும் அந்தச் சக்தி உதவுகிறது. (யோவா. 14:26; 2பே. 1:21) அந்தச் சக்தியின் மூலம், “இயல்புக்கு மிஞ்சிய” வல்லமையை யெகோவா நமக்குத் தருகிறார். (2கொ. 4:7) நல்ல செய்தியைப் பிரசங்கிக்கவும், சோதனைகளை எதிர்த்துப் போராடவும், மனச்சோர்வைச் சமாளிக்கவும், பிரச்சினைகளைச் சகித்துக்கொள்ளவும் அந்தச் சக்தி நமக்குப் பலத்தைத் தருகிறது. கலாத்தியர் 5:22, 23-ல் சொல்லப்பட்டிருக்கும் அழகான குணங்களைக் காட்டவும் அது உதவுகிறது. அந்தச் சக்தியைத் தரும்படி உருக்கமாகக் கேட்கிறவர்களுக்கும், தன்னை நம்புகிறவர்களுக்கும் யெகோவா அதைத் தாராளமாகக் கொடுப்பார்.​—லூக். 11:13.

15 யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கு அவருடைய சக்தி தங்களுக்கு உதவும் என்று அவருடைய ஊழியர்கள் உறுதியாக நம்பலாம். இது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! கடவுளுடைய சக்தியைப் பற்றிய உண்மைகளை ஏற்றுக்கொள்ளும்போது, அவருக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வரும்.

16. நாம் இதுவரை என்ன கற்றுக்கொண்டோம்?

16 யெகோவாவுக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று நீங்கள் செய்யும் முடிவுதான், உங்கள் வாழ்க்கையிலேயே ரொம்ப முக்கியமான ஒரு முடிவு! ஏற்கெனவே பார்த்ததுபோல், ஞானஸ்நானம் எடுப்பதோடு சம்பந்தப்பட்ட ‘செலவுகளை’ ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அதாவது, சீஷராக ஆவதில் இருக்கும் சவால்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்; தியாகங்கள் செய்யவும் தயாராக இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் செய்யும் தியாகங்களைவிட உங்களுக்குக் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்கள் பலமடங்கு அதிகமாக இருக்கும். ஞானஸ்நானம் உங்களைக் காப்பாற்றும்; நல்ல மனசாட்சியோடு இருக்கவும் உதவும். நீங்கள் ஞானஸ்நானம் எடுப்பதற்கான முக்கியக் காரணமே, கடவுள்மீது இருக்கும் அன்பாகத்தான் இருக்க வேண்டும். அதோடு, பரலோகத் தந்தையைப் பற்றியும், அவருடைய மகனைப் பற்றியும், அவருடைய சக்தியைப் பற்றியும் நீங்கள் தெரிந்துகொண்ட விஷயங்களை மனதார நம்ப வேண்டும். இதையெல்லாம் மனதில் வைத்து, இந்தக் கேள்விக்கு இப்போது நீங்களே பதில் சொல்லுங்கள்: ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் தயாரா?

ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

17. ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய சில விஷயங்கள் என்ன?

17 ‘ஞானஸ்நானம் எடுக்க நான் தயார்தான்’ என்று நீங்கள் சொன்னால், யெகோவாவோடு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்ள நீங்கள் ஏற்கெனவே நிறைய படிகளை எடுத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். * பைபிளை நீங்கள் தவறாமல் படித்ததால், யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டிருப்பீர்கள். விசுவாசத்தையும் வளர்த்திருப்பீர்கள். (எபி. 11:6) யெகோவாவுடைய வாக்குறுதிகள் நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையையும் வளர்த்திருக்கிறீர்கள். இயேசுவின் பலியில் விசுவாசம் வைக்கும்போது, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும் என்பதை நம்புகிறீர்கள். அதுமட்டுமல்ல, நீங்கள் மனம் திருந்தியிருக்கிறீர்கள். அதாவது, செய்த தவறுகளை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறீர்கள்; யெகோவாவிடம் மன்னிப்பையும் கேட்டிருக்கிறீர்கள். அதோடு, உங்கள் வாழ்க்கையை மாற்றியிருக்கிறீர்கள். அதாவது, உங்கள் பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு கடவுளுக்குப் பிடித்த மாதிரி வாழ ஆரம்பித்திருக்கிறீர்கள். (அப். 3:19) உங்களுடைய புதிய நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்ற ஆசையை வளர்த்திருக்கிறீர்கள். ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக ஆகி, சபையோடு சேர்ந்து ஊழியம் செய்யவும் ஆரம்பித்திருக்கிறீர்கள். (மத். 24:14) இந்த மாற்றங்களை எல்லாம் செய்ததால், யெகோவா உங்களைப் பார்த்து பெருமைப்படுகிறார். அவருடைய இதயத்தை நீங்கள் சந்தோஷப்படுத்தியிருக்கிறீர்கள்.​—நீதி. 27:11.

18. ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு வேறு எதையும் நீங்கள் செய்ய வேண்டும்?

18 ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு இன்னும் சில விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும். ஏற்கெனவே பார்த்ததுபோல், உங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணிக்க வேண்டும். இதை எப்படிச் செய்வது? யெகோவாவிடம் மனம் திறந்து ஜெபம் செய்யுங்கள். அவருடைய விருப்பத்தைச் செய்யத்தான் உங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்துவீர்கள் என்று அந்த ஜெபத்தில் வாக்குக் கொடுங்கள். (1 பே. 4:2) பிறகு, மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளரிடம் உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள். மூப்பர்கள் உங்களைச் சந்தித்துப் பேசுவதற்கு அவர் ஏற்பாடு செய்வார். அவர்களைச் சந்திப்பதை நினைத்து பயப்படாதீர்கள். அந்த அன்பான சகோதரர்களுக்கு உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும், அவர்கள் உங்களை நேசிக்கிறார்கள். இதுவரை நீங்கள் கற்றுக்கொண்ட அடிப்படை போதனைகளைப் பற்றி உங்களிடம் அவர்கள் கலந்துபேசுவார்கள். அவற்றையும், அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பதன் முக்கியத்துவத்தையும் நீங்கள் நன்றாகப் புரிந்திருக்கிறீர்களா என்பதையும் நிச்சயப்படுத்திக்கொள்வார்கள். ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் தயார் என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு, அடுத்து வரும் மாநாட்டில் நீங்கள் ஞானஸ்நானம் எடுக்கலாம் என்று சொல்வார்கள்.

ஞானஸ்நானம் எடுத்த பிறகு என்ன செய்ய வேண்டும்?

19-20. ஞானஸ்நானத்துக்குப் பிறகு நீங்கள் என்ன செய்ய வேண்டும், அதை எப்படிச் செய்யலாம்?

19 ஞானஸ்நானத்துக்குப் பிறகு நீங்கள் சில விஷயங்களைச் செய்ய வேண்டும். * அர்ப்பணிப்பு என்பது, நீங்கள் யெகோவாவுக்குக் கொடுக்கும் உறுதிமொழி என்பதை மறந்துவிடாதீர்கள். அதை நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அதனால், ஞானஸ்நானம் எடுத்த பிறகு அந்த உறுதிமொழிக்கு ஏற்றபடி நீங்கள் வாழ வேண்டும். அதை எப்படிச் செய்வது?

20 சபையோடு நெருங்கி இருங்கள். ஞானஸ்நானம் எடுக்கும்போது, உலகம் முழுவதும் இருக்கிற ‘சகோதரர்களில்’ ஒருவராக நீங்களும் ஆகிறீர்கள். (1 பே. 2:17) சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளும் உங்களுக்கு குடும்பம்போல் இருக்கிறார்கள். தவறாமல் கூட்டங்களுக்கு வரும்போது அவர்களோடு இருக்கும் நட்பு இன்னும் உறுதியாக ஆகும். அதோடு, பைபிளைத் தினமும் படித்து அதை ஆழமாக யோசித்துப்பாருங்கள். (சங். 1:1, 2) ஒரு பகுதியைப் படித்துவிட்டு, அதை நன்றாக யோசித்துப்பார்க்க நேரம் ஒதுக்குங்கள். அப்போது, அந்த விஷயங்கள் உங்கள் மனதில் ஆழமாகப் பதியும். அடுத்து, “தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.” (மத். 26:41) மனம்விட்டு யெகோவாவிடம் பேசும்போது, நீங்கள் அவரிடம் நெருங்கி வருவீர்கள். அதோடு, ‘எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கு . . . முதலிடம் கொடுங்கள்.’ (மத். 6:33) பிரசங்க வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் நீங்கள் அதைச் செய்யலாம். தவறாமல் ஊழியம் செய்யும்போது, உங்கள் விசுவாசம் பலமாகும். முடிவில்லாத வாழ்வுக்கான பாதையில் மற்றவர்கள் வருவதற்கும் உங்களால் உதவ முடியும்.​—1 தீ. 4:16.

21. ஞானஸ்நானம் எடுப்பதால் என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?

21 யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்ற முடிவுதான் வாழ்க்கையிலேயே ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு முடிவு! ஞானஸ்நானம் எடுக்கும்போது, அதோடு சம்பந்தப்பட்ட ‘செலவுகளை’ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், உங்களுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் அந்த ‘செலவுகளை’ எல்லாம் மிஞ்சிவிடும். ஞானஸ்நானம் எடுப்பதால் உங்களுக்கு இப்போதே திருப்தியான வாழ்க்கை கிடைக்கும்; எதிர்காலத்தில் ‘உண்மையான வாழ்வும்’ கிடைக்கும். (1 தீ. 6:19) அவற்றோடு ஒப்பிடும்போது, இப்போது இருக்கிற கஷ்டங்கள் எல்லாமே “லேசானவை, அது நொடிப்பொழுதுதான் இருக்கும்.” (2 கொ. 4:17) அதனால், நன்றாக யோசித்து, ஜெபம் செய்து, இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்: “ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் தயாரா?”

பாட்டு 58 என் அர்ப்பண ஜெபம்

^ பாரா. 5 ஞானஸ்நானம் எடுப்பதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், உங்களை மனதில் வைத்துதான் இந்தக் கட்டுரை தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஞானஸ்நானம் சம்பந்தமாக நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய சில முக்கியமான கேள்விகளை இதில் பார்க்கலாம். அந்தக் கேள்விகளுக்கு நீங்கள் எப்படிப் பதில் சொல்கிறீர்கள் என்பதை வைத்து, ஞானஸ்நானம் எடுப்பதற்குத் தயாரா என்று நீங்கள் முடிவு செய்துகொள்ளலாம்.

^ பாரா. 19 பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது? என்ற புத்தகத்தையும், கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள் என்ற புத்தகத்தையும் நீங்கள் படித்து முடிக்கவில்லை என்றால், உங்களுக்குப் படிப்பு நடத்தியவரோடு சேர்ந்து அந்த இரண்டு புத்தகங்களையும் படித்து முடியுங்கள்.