Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

“இதோ நாங்கள் இருக்கிறோம்! எங்களை அனுப்புங்கள்!”

“இதோ நாங்கள் இருக்கிறோம்! எங்களை அனுப்புங்கள்!”

தேவை அதிகமுள்ள இடத்துக்கு, அதுவும் வெளிநாட்டுக்குப் போய் சேவை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், சகோதரர் மற்றும் சகோதரி பேர்கமின் அனுபவம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

ஜாக் மற்றும் மேரிலின் 1988-லிருந்து ஒன்றாக முழுநேர சேவை செய்துவருகிறார்கள். எல்லா சூழ்நிலைக்கும் அனுசரித்துப்போகிற ஒரு தம்பதி என்று இவர்கள் பெயர் எடுத்திருக்கிறார்கள். குவாடலூப் மற்றும் பிரெஞ்சு கயானாவில் நிறைய நியமிப்புகளைச் சந்தோஷமாகச் செய்திருக்கிறார்கள். (இந்த இரண்டு இடங்களில் நடக்கும் வேலைகளையும் இப்போது பிரான்சு கிளை அலுவலகம் மேற்பார்வை செய்கிறது.) இந்தத் தம்பதியின் அனுபவத்தை இப்போது கேட்கலாம்.

முழுநேர சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு எப்படி வந்தது?

மேரிலின்: நான் குவாடலூப்பில்தான் வளர்ந்தேன். சின்ன வயதிலிருந்தே என் அம்மாவோடு சேர்ந்து நாள் முழுவதும் ஊழியம் செய்வேன். என் அம்மா ஆர்வத் துடிப்போடு ஊழியம் செய்துவந்தார். மக்களோடு பழகுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால், பள்ளிப் படிப்பு முடிந்த உடனேயே, அதாவது 1985-ல், பயனியர் சேவையை ஆரம்பித்தேன்.

ஜாக்: நான் இளைஞனாக இருந்தபோது, ஊழியத்தை ஆர்வமாகச் செய்துகொண்டிருந்த முழுநேர ஊழியர்கள் நிறைய பேரோடு பழகினேன். விடுமுறை நாட்களில் துணை பயனியர் ஊழியம் செய்வேன். சனி ஞாயிறுகளில், பயனியர்களோடு ஊழியம் செய்வதற்காகச் சிலசமயங்களில் பஸ்ஸில் ஏறிப் போவோம். ஒருநாள் முழுவதும் ஊழியம் செய்துவிட்டு கடைசியில் கடற்கரைக்குப் போவோம். ரொம்ப சந்தோஷமான நாட்கள் அது!

1988-ல் மேரிலினை கல்யாணம் செய்தேன். சீக்கிரத்திலேயே, “நமக்குத்தான் பெருசா எந்த பொறுப்பும் இல்லையே, நாம ஏன் அதிகமா ஊழியம் செய்ய கூடாது?” என்று மனதுக்குள் நினைத்தேன். மேரிலின்னோடு சேர்ந்து நானும் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தேன். ஒரு வருஷத்துக்குப் பிறகு, பயனியர் ஊழியப் பள்ளியில் நாங்கள் கலந்துகொண்டோம். உடனடியாக விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டோம். குவாடலூப்பில் நிறைய நியமிப்புகளைச் செய்தோம்; அவை எல்லாமே அருமையான நியமிப்புகள்! பிறகு, பிரெஞ்சு கயானாவுக்கு நியமிக்கப்பட்டோம்.

இத்தனை வருஷங்களாக உங்களுக்கு நிறைய நியமிப்புகள் கிடைத்திருக்கின்றன. புதுப்புது சூழ்நிலைகளை உங்களால் எப்படிச் சமாளிக்க முடிந்தது?

மேரிலின்: ஏசாயா 6:8 தான் எங்களுக்கு ரொம்பப் பிடித்த வசனம் என்பது பிரெஞ்சு கயானா பெத்தேலில் இருந்த சகோதரர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் எங்களோடு ஃபோனில் பேசும்போதெல்லாம், “உங்களுக்கு பிடிச்ச வசனம் ஞாபகம் இருக்கா?” என்று சிரித்துக்கொண்டே கேட்பார்கள். எங்களுடைய நியமிப்பு மாறப்போகிறது என்பது எங்களுக்கு உடனே புரிந்துவிடும். “இதோ நாங்கள் இருக்கிறோம்! எங்களை அனுப்புங்கள்!” என்று சொல்வோம்.

எங்களுக்குக் கிடைக்கும் புதிய நியமிப்புகளை பழைய நியமிப்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்க மாட்டோம். அதனால், புதிய நியமிப்புகளைச் சந்தோஷமாகச் செய்ய முடிந்தது. புதிய இடத்தில் இருக்கிற சகோதர சகோதரிகளோடு நன்றாகப் பழகவும் முயற்சி செய்தோம்.

ஜாக்: குடிமாறிப் போக வேண்டாம் என்று சில நண்பர்கள் எங்களிடம் சொன்னார்கள். அவர்களுக்குப் பக்கத்திலேயே நாங்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால்தான் அப்படிச் சொன்னார்கள். ஆனால், நாங்கள் குவாடலூப்பை விட்டு வந்தபோது, மத்தேயு 13:38-ல் இருக்கிற இயேசுவின் வார்த்தைகளை ஒரு சகோதரர் ஞாபகப்படுத்தினார். “வயல், இந்த உலகம்” என்று அந்த வசனம் சொல்கிறது. அதனால், புதுப்புது நியமிப்புகள் கிடைத்தபோதெல்லாம், அதே வயலில்தான் நாம் இன்னமும் சேவை செய்கிறோம் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்வோம். ஏனென்றால், ஊழியப் பகுதியும் அங்கே இருக்கிற மக்களும்தான் ரொம்ப முக்கியம்!

புதிய இடங்களுக்குப் போகும்போது, அங்கே இருக்கிற மக்களும் சந்தோஷமாக வாழ்வதை எங்களால் பார்க்க முடிந்தது. அதனால், நாங்களும் அவர்களைப் போலவே வாழ முயற்சி செய்தோம். அங்கே இருந்த உணவு வித்தியாசமாக இருந்தாலும், அவர்கள் சாப்பிட்டதை நாங்களும் சாப்பிட்டோம்; அவர்கள் குடித்ததை நாங்களும் குடித்தோம். அதேசமயத்தில், ஆரோக்கியமாக இருப்பதற்கு எல்லா முயற்சிகளையும் எடுத்தோம். எங்களுடைய புதிய நியமிப்புகளைப் பற்றி நாங்கள் எப்போதுமே நல்ல விதமாகத்தான் பேசுவோம்.

மேரிலின்: உள்ளூர் சகோதர சகோதரிகளிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். பிரெஞ்சு கயானாவுக்கு வந்த புதிதில் என்ன நடந்ததென்று நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஒருநாள், பயங்கரமாக மழை பெய்துகொண்டிருந்தது. மழை நின்ற பிறகு ஊழியத்துக்குப் போகலாம் என்று காத்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு சகோதரி என்னிடம், “போகலாமா?” என்று கேட்டார். “எப்படி போறது?” என்று ஆச்சரியத்தோடு கேட்டேன். “குடைய பிடிச்சிட்டே வண்டியில போகலாம்” என்று அவர் சொன்னார். குடையைப் பிடித்துக்கொண்டே வண்டியை எப்படி ஓட்டுவது என்று அப்போது கற்றுக்கொண்டேன். நல்லவேளை, அப்படி வண்டி ஓட்ட கற்றுக்கொண்டேன்! இல்லையென்றால், மழைக் காலத்தில் என்னால் ஊழியம் செய்திருக்கவே முடியாது!

கிட்டத்தட்ட 15 தடவை நீங்கள் குடிமாறிப் போயிருக்கிறீர்கள். குடிமாறிப் போகிற சகோதர சகோதரிகளுக்கு உதவும் சில குறிப்புகளைச் சொல்ல முடியுமா?

மேரிலின்: குடிமாறிப் போவதில் சில கஷ்டங்கள் இருப்பது உண்மைதான். ஆனால், ஊழியத்தை முடித்துவிட்டு வந்து நிம்மதியாகத் தலைசாய்க்க ஒரு இடம் நமக்குத் தேவை.

ஜாக்: பொதுவாக ஒரு வீட்டுக்குக் குடிமாறிப்போன உடனேயே எங்களுக்குப் பிடித்த மாதிரி அந்த வீட்டுக்கு பெயிண்ட் அடிப்பேன். சீக்கிரமாகவே எங்கள் நியமிப்பு மாறிவிடும் என்று தெரியும் சமயங்களில், “ஜாக், இப்போ நீங்க வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வேண்டாம்” என்று பெத்தேலில் இருக்கும் சகோதரர்கள் சொல்வார்கள்.

சாமான்களை எல்லாம் பெட்டிகளில் அடுக்கி வைப்பது மேரிலினுக்கு கைவந்த கலை. அப்படி அடுக்கிய பிறகு, “குளியலறை,” “படுக்கையறை,” “சமையலறை” என்றெல்லாம் எழுதி அந்தந்த பெட்டிகளில் ஒட்டுவாள். அதனால், புதிய வீட்டுக்கு வந்ததும் பெட்டிகளை அந்தந்த அறைகளில் வைப்பது சுலபமாக இருக்கும். அதோடு, எந்தெந்த பெட்டியில் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன என்றும் பட்டியல் போடுவாள். அதனால், தேவையான பொருள்களை நாங்கள் சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவோம்.

மேரிலின்: எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்ய கற்றுக்கொண்டதால், உடனடியாக எங்களால் ஊழியத்துக்குப் போக முடிந்தது.

‘ஊழியத்தை முழுமையாகச் செய்து முடிப்பதற்கு’ உங்கள் நேரத்தை எப்படித் திட்டமிடுகிறீர்கள்?—2 தீ. 4:5.

மேரிலின்: திங்கள்கிழமைகளில் நாங்கள் ஓய்வு எடுப்போம்; கூட்டங்களுக்குத் தயாரிப்போம். செவ்வாய்க்கிழமையிலிருந்து ஊழியத்தில் இறங்கிவிடுவோம்.

ஜாக்: ஒவ்வொரு மாதமும் இவ்வளவு மணிநேரம் எடுக்க வேண்டும் என்ற தேவை இருந்தாலும், அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்க மாட்டோம். ஊழியம்தான் எங்கள் உயிர்நாடி! வீட்டைவிட்டு கிளம்பி திரும்பிவரும்வரை, பார்க்கிற எல்லாரிடமும் பேச முயற்சி செய்வோம்.

மேரிலின்: ஊரை சுற்றிப் பார்க்கப் போகும்போதுகூட நான் துண்டுப்பிரதிகளை எடுத்துக்கொள்வேன். நாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்று மற்றவர்களிடம் சொல்லாவிட்டாலும், அவர்களாகவே வந்து பிரசுரங்களைக் கேட்பார்கள். அதனால், நாங்கள் உடை உடுத்தும் விதமும் நடந்துகொள்ளும் விதமும் கண்ணியமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வோம். ஏனென்றால், இவையெல்லாம் மற்றவர்களின் கண்களில் படுகின்றன.

ஜாக்: அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் அன்பாக நடந்துகொள்வதன் மூலமும் நாங்கள் சாட்சி கொடுக்கிறோம். என் வீட்டைச் சுற்றியும் நான் சுத்தம் செய்வேன். கீழே கொட்டிக்கிடக்கும் பேப்பர்களையும் இலைகளையும் எடுத்துப் போடுவேன். குப்பைத் தொட்டிகளில் இருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவேன். இதையெல்லாம் கவனிக்கிற அக்கம்பக்கத்தார், “எங்களுக்கு ஒரு பைபிள் கிடைக்குமா?” என்று சிலசமயங்களில் கேட்பார்கள்.

ஒதுக்குப்புறமான இடங்களில் நீங்கள் அடிக்கடி ஊழியம் செய்திருக்கிறீர்கள். மறக்க முடியாத ஓர் அனுபவத்தைச் சொல்ல முடியுமா?

ஜாக்: கயானாவில் இருந்த சில பகுதிகளுக்குப் போவது ரொம்பக் கஷ்டம். பெரும்பாலும் ஒரு வாரத்துக்கு 600 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதுவும், படுமோசமான சாலைகளில்! அமேசான் காட்டில் இருந்த செயின்ட் ஈலி என்ற கிராமத்துக்குப் போனதை மறக்கவே முடியாது. கரடுமுரடான பாதைகள் வழியாகப் பயணம் செய்வதற்காகவே தயாரிக்கப்பட்ட வண்டிகளிலும் (off-road vehicle), மோட்டார் படகிலும் பல மணிநேரம் பயணம் செய்து அங்கே போய்ச் சேர்ந்தோம். அங்கே வாழ்ந்தவர்களில் நிறைய பேர் தங்கச் சுரங்கத்தில் வேலை செய்தார்கள். நம்முடைய பிரசுரங்களை அவர்கள் ரொம்பவே மதித்ததால், சின்னச் சின்ன தங்கக் கட்டிகளைச் சிலர் நன்கொடையாகக் கொடுத்தார்கள். சாயங்காலத்தில், நம்முடைய வீடியோக்களில் ஒன்றைக் காட்டினோம். அதைப் பார்க்க நிறைய பேர் வந்தார்கள்.

மேரிலின்: சமீபத்தில், காமோப்பி என்ற கிராமத்தில் நினைவுநாள் பேச்சைக் கொடுப்பதற்காக ஜாக்கை கூப்பிட்டார்கள். அங்கே போய்ச் சேருவதற்கு ஓயாபோக் ஆற்றின் வழியாக நான்கு மணிநேரம் மோட்டார் படகில் பயணம் செய்தோம். அது சுவாரஸ்யமான ஓர் அனுபவம்!

ஜாக்: ஆற்றில் தண்ணீர் மட்டம் குறைவாக இருந்த இடங்களில் பயணம் செய்வது ஆபத்தானதாக இருந்தது! ஏனென்றால், அதுபோன்ற இடங்களில் இருக்கும் பாறைகள்மீது ஆற்றுத் தண்ணீர் ரொம்ப வேகமாகப் பாயும். அந்த மாதிரியான காட்சிகளைப் பார்ப்பது பிரமிப்பாக இருந்தது. அப்படிப்பட்ட இடங்களில் படகை ஓட்டுமளவுக்கு படகோட்டி திறமைசாலியாக இருக்க வேண்டும். அது ஒரு பயங்கரமான அனுபவம்! காமோப்பி கிராமத்தில் ஆறே ஆறு சாட்சிகள்தான் இருந்தார்கள். ஆனால், கிட்டத்தட்ட 50 பேர் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். அதில் சிலர், பூர்வகுடி அமெரிக்கர்கள்!

மேரிலின்: யெகோவாவுக்கு அதிகமாகச் சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படும் இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்கள் காத்திருக்கின்றன. அதுபோன்ற சமயங்களில் யெகோவாவை நம்பியிருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் விசுவாசம் பலமாகும். யெகோவா பக்கபலமாக இருப்பதை உங்களால் பார்க்க முடியும்.

நிறைய மொழிகளைக் கற்றுக்கொண்டீர்களே! அது உங்களுக்குச் சுலபமாக இருந்ததா?

ஜாக்: இல்லவே இல்லை! தேவை இருந்ததால் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஸ்ரானன்டோங்கோ * மொழியில் பைபிள் வாசிப்பு நியமிப்பைச் செய்வதற்கு முன்பே அந்த மொழியில் காவற்கோபுர படிப்பை நடத்த வேண்டியிருந்தது. நான் எப்படி நடத்தினேன் என்று ஒரு சகோதரரிடம் கேட்டேன். “நீங்க சொன்ன சில வார்த்தைகள் புரியல. ஆனாலும் ரொம்ப நல்லா இருந்துச்சு” என்று சொன்னார். அங்கே இருந்த பிள்ளைகள் எனக்கு உதவியாக இருந்தார்கள். நான் என்னென்ன தவறுகளைச் செய்தேன் என்று பெரியவர்கள் சொல்லவில்லை, பிள்ளைகள்தான் சொன்னார்கள். பிள்ளைகளிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

மேரிலின்: ஒரு பகுதியில், ஃபிரெஞ்சு, போர்ச்சுகீஸ், மற்றும் ஸ்ரானன்டோங்கோ மொழிகளில் பைபிள் படிப்பு நடத்திக்கொண்டிருந்தேன். முதலில், எனக்குக் கஷ்டமாக இருந்த மொழியில், அதாவது போர்ச்சுகீஸ் மொழியில், படிப்பை நடத்திவிட்டு பிறகு நன்றாகத் தெரிந்த மொழியில் படிப்பை நடத்துவது நல்லதென்று ஒரு சகோதரி ஆலோசனை கொடுத்தார். அவர் சொன்னது எவ்வளவு சரி என்பது பிறகுதான் எனக்குப் புரிந்தது!

ஒருநாள், ஸ்ரானன்டோங்கோ மொழி படிப்பை முதலாவதாகவும் போர்ச்சுகீஸ் மொழி படிப்பை இரண்டாவதாகவும் எடுத்தேன். ஆனால், எனக்கு போர்ச்சுகீஸ் மொழி அவ்வளவாக தெரியாததால், முதலில் அந்த மொழி படிப்பை நடத்தியிருக்க வேண்டும். இப்படிச் செய்யாததால், இரண்டாவது படிப்பை ஆரம்பித்த பிறகு, “மேரிலின், ஏதோ தப்பா தெரியுதே” என்று என்கூட இருந்த சகோதரி சொன்னார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண்ணிடம் போர்ச்சுகீஸ் மொழியில் பேசுவதற்குப் பதிலாக ஸ்ரானன்டோங்கோ மொழியில் பேசிக்கொண்டிருந்தது அப்போதுதான் எனக்குப் புரிந்தது.

நீங்கள் சேவை செய்த இடங்களில் இருந்த சகோதர சகோதரிகளுடைய மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறீர்களே, அதன் ரகசியம் என்ன?

ஜாக்: “தாராள குணமுள்ளவன் செழிப்பான்” என்று நீதிமொழிகள் 11:25 சொல்கிறது. மற்றவர்களுக்கு உதவுவதற்கு நாங்கள் தயங்கியதே இல்லை. ராஜ்ய மன்ற பராமரிப்பு வேலை செய்யும்போது, “இதையெல்லாம் பிரஸ்தாபிகள் செய்யட்டும் பிரதர்” என்று சிலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு, “நானும் பிரஸ்தாபிதான். வேலை செய்ய வேண்டியிருந்துச்சுனா, கண்டிப்பா நான் செய்வேன்” என்று சொல்லியிருக்கிறேன். நமக்கென்று நேரம் செலவிடுவது அவசியம் என்றாலும், மற்றவர்களுக்கு உதவுவதற்கு அது தடையாக இல்லாதபடி பார்த்துக்கொள்வது முக்கியம் என்பதை நாங்கள் அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்வோம்.

மேரிலின்: சகோதர சகோதரிகள் ஒவ்வொருவரின் மேலும் அக்கறை காட்ட முயற்சி செய்தோம். அவர்களுடைய பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வதற்கும் பள்ளியிலிருந்து கூட்டிக்கொண்டு வருவதற்கும் எப்போதெல்லாம் எங்களுடைய உதவி தேவைப்படும் என்பதைத் தெரிந்துகொள்வோம். அதற்கு ஏற்றபடி எங்கள் வேலைகளை மாற்றி அமைத்தோம். இப்படி உதவி தேவைப்படும்போதெல்லாம் அவர்கள் கூடவே இருந்ததால், அவர்களோடு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ள முடிந்தது.

தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்ததால் என்னென்ன ஆசீர்வாதங்களை அனுபவித்திருக்கிறீர்கள்?

ஜாக்: முழுநேர சேவை எங்கள் வாழ்க்கையை வளமாக்கியிருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தோம். யெகோவாவின் அற்புதமான படைப்புகளை ரசித்தோம். நியமிப்புகளில் சில சவால்கள் இருந்தது உண்மைதான். ஆனாலும், நாங்கள் எங்கே போனாலும் யெகோவாவின் மக்களுடைய ஆதரவு எங்களுக்கு இருக்கிறது என்பது தெரியும். அதனால், எங்களால் மனநிம்மதியோடு இருக்க முடிகிறது.

இளைஞனாக இருந்தபோது, நடுநிலையைக் காத்துக்கொண்டதால் பிரெஞ்சு கயானாவில் இருந்த சிறையில் அடைக்கப்பட்டேன். ஆனால், பிரெஞ்சு கயானாவுக்கு திரும்பவும் மிஷனரியாக வருவேன் என்றும், அங்கே இருக்கிற சிறைகளில் பிரசங்கிப்பேன் என்றும் நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. யெகோவா ஆசீர்வாதங்களை அள்ளித் தந்திருக்கிறார்!

மேரிலின்: மற்றவர்களுக்கு உதவுவதுதான் எனக்குச் சந்தோஷம்! யெகோவாவுக்குச் சேவை செய்வதை நினைத்து நாங்கள் ரொம்ப சந்தோஷப்படுகிறோம். கணவன் மனைவியாக நாங்கள் இன்னும் நெருங்கி வருவதற்கு இது உதவியாக இருந்திருக்கிறது. சோர்வாக இருக்கிற ஒரு தம்பதியை சாப்பாட்டுக்குக் கூப்பிடலாமா என்று ஜாக் சிலசமயங்களில் கேட்பார். “நானும் அததான் நினைச்சேன்!” என்று நான் சொல்வேன். இப்படித்தான் நாங்கள் அடிக்கடி ஒரே மாதிரி யோசிப்போம்.

ஜாக்: சமீபத்தில் எனக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. நான் மேரிலினிடம், ‘எனக்கு ரொம்ப வயசாயிடல. ஆனா, நான் நாளைக்கே இறந்துட்டாலும், என்னோட வாழ்க்கை முழுசும் யெகோவாவுக்கு சேவை செஞ்சிருக்கேங்குற திருப்தியோட கண்ணை மூடுவேன்’ என்று சொன்னேன். நான் சாவைப் பற்றிச் சொன்னது அவளுக்குக் கஷ்டமாக இருந்தது.​—ஆதி. 25:8.

மேரிலின்: நாங்கள் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத நியமிப்புகளை யெகோவா எங்களுக்குக் கொடுத்திருக்கிறார். நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்காத விஷயங்களைச் செய்வதற்கு அவர் உதவியிருக்கிறார். நல்ல நல்ல விஷயங்களால் எங்கள் வாழ்க்கையை நிரப்பியிருக்கிறார். யெகோவாமேல் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அதனால், அமைப்பு சொல்லும் எல்லா இடத்துக்கும் போக நாங்கள் தயாராக இருக்கிறோம்!

^ பாரா. 32 ஆங்கிலம், டச்சு, போர்ச்சுகீஸ், ஆப்பிரிக்க மொழிகளின் கலவைதான் ஸ்ரானன்டோங்கோ மொழி. அடிமைகள் உருவாக்கிய மொழிதான் இது!