Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 13

ஒருவருக்கொருவர் ஊக்கமாக அன்பு காட்டுங்கள்

ஒருவருக்கொருவர் ஊக்கமாக அன்பு காட்டுங்கள்

“இதயப்பூர்வமான அன்பை ஒருவருக்கொருவர் ஊக்கமாகக் காட்டுங்கள்.”—1 பே. 1:22.

பாட்டு 73 ஊக்கமாக அன்பு காட்டுங்கள்

இந்தக் கட்டுரையில்... *

அப்போஸ்தலர்களோடு இருந்த கடைசி இரவன்று, அன்பை முக்கியப்படுத்தி இயேசு பேசினார் (பாராக்கள் 1-2)

1. தன்னுடைய சீஷர்களுக்கு இயேசு கொடுத்த முக்கியமான கட்டளை என்ன? (அட்டைப் படம்)

இயேசு இறப்பதற்கு முந்தின இரவு, சீஷர்களுக்கு ஒரு முக்கியமான கட்டளையைக் கொடுத்தார். ‘நான் உங்கள்மேல் அன்பு காட்டியது போலவே நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டும்’ என்பதுதான் அந்தக் கட்டளை. அதோடு, “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்” என்றும் சொன்னார். —யோவா. 13:34, 35.

2. ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவது ஏன் முக்கியம்?

2 தன்னுடைய சீஷர்கள்மேல் இயேசு எப்படி அன்பு காட்டினாரோ அதேபோல் அவர்களும் மற்றவர்கள்மேல் அன்பு காட்டினால், அவர்கள் இயேசுவின் சீஷர்கள் என்பதை எல்லாரும் புரிந்துகொள்வார்கள் என்று இயேசு சொன்னார். அன்றும் சரி, இன்றும் சரி இதுதான் உண்மை! அதனால், சவால்களுக்கு மத்தியிலும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவது ரொம்ப முக்கியம்.

3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், ஒருவருக்கொருவர் ஊக்கமாக அன்பு காட்டுவது கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும், நாம் கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும். சமாதானம் பண்ணுகிறவர்களாகவும், பாரபட்சம் காட்டாதவர்களாகவும், உபசரிப்பவர்களாகவும் இருப்பதற்கு அன்பு எப்படி உதவுகிறது என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து அன்பு காட்டிய சகோதர சகோதரிகளின் அனுபவங்கள் இந்தக் கட்டுரையில் இருக்கின்றன. அவற்றைப் படிக்கும்போது, “இந்த சகோதர சகோதரிகள்கிட்ட இருந்து நான் என்ன கத்துக்கலாம்?” என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

சமாதானம் பண்ணுகிறவர்களாக இருங்கள்

4. மத்தேயு 5:23, 24 சொல்கிறபடி, ஒரு சகோதரனுக்கோ சகோதரிக்கோ நம்மீது மனவருத்தம் இருந்தால் நாம் ஏன் அதைச் சரி செய்ய வேண்டும்?

4 ஒரு சகோதரனுக்கோ சகோதரிக்கோ நம்மேல் மனவருத்தம் இருந்தால், அதைச் சரி செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை இயேசு சொல்லிக்கொடுத்திருக்கிறார். (மத்தேயு 5:23, 24-ஐ வாசியுங்கள்.) கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமென்றால், மற்றவர்களிடம் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வது முக்கியம் என்று அவர் சொன்னார். சகோதரர்களோடு சமாதானம் பண்ணுவதற்கு நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்யும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார். மற்றவர்கள்மேல் கோபமாக இருந்துகொண்டு, சமாதானம் பண்ணுவதற்கு முயற்சி எடுக்காமல் இருந்தால் யெகோவா நம் வழிபாட்டை ஏற்றுக்கொள்ள மாட்டார்.—1 யோ. 4:20.

5. இன்னொரு சகோதரரோடு சமாதானம் பண்ணுவது ஜெரோமுக்கு ஏன் கஷ்டமாக இருந்தது?

5 சமாதானம் பண்ணுவது சிலசமயங்களில் கஷ்டமாக இருக்கலாம். ஜெரோம் * என்ற சகோதரரின் அனுபவத்தைப் பாருங்கள். ஒரு சகோதரர் இவரைப் பற்றிக் குறை சொன்னார். அதோடு, சபையில் இருக்கும் மற்றவர்களிடமும் இவரைப் பற்றித் தவறாகப் பேசினார். அப்போது, ஜெரோம் என்ன செய்தார்? “எனக்கு பயங்கரமா கோபம் வந்துடுச்சு. அவரை கன்னாபின்னானு திட்டிட்டேன்” என்று ஜெரோம் சொல்கிறார். பிறகு, அப்படி நடந்துகொண்டதை நினைத்து வருத்தப்பட்டார். அந்தச் சகோதரரிடம் மன்னிப்பு கேட்கவும், அவரோடு சமாதானம் ஆகவும் முயற்சி செய்தார். ஆனால், ஜெரோமோடு சமாதானமாவதற்கு அந்தச் சகோதரர் விரும்பவில்லை. அதனால், ஜெரோம் ஆரம்பத்தில் இப்படி நினைத்தார்: “அவருக்குதான் சமாதானம் ஆகுறதுக்கு இஷ்டம் இல்லையே! அப்புறம் எதுக்கு சமாதானம் பண்ணுறதுக்கு நான் முயற்சி செய்யணும்?” ஆனால், முயற்சியை கைவிட வேண்டாம் என்று வட்டாரக் கண்காணி சொன்னார். அப்போது ஜெரோம் என்ன செய்தார்?

6. (அ) சமாதானம் பண்ணுவதற்கு ஜெரோம் என்னென்ன முயற்சிகளை எடுத்தார்? (ஆ) கொலோசெயர் 3:13, 14-ல் சொல்லியிருப்பதை ஜெரோம் எப்படிப் பின்பற்றினார்?

6 ஜெரோம் தன்னைப் பற்றி யோசித்துப்பார்த்தார். அப்போது, தன்னிடம் மனத்தாழ்மை குறைவுபடுவதையும், தான் செய்வதுதான் சரி என்கிற எண்ணம் சிலசமயங்களில் தனக்குள் எட்டிப்பார்ப்பதையும் புரிந்துகொண்டார். தான் மாற வேண்டும் என்பது அவருக்குப் புரிந்தது. (கொலோ. 3:8, 9, 12) அந்தச் சகோதரரிடம் போய் மறுபடியும் மன்னிப்பு கேட்டார். அவருக்குக் கடிதங்களையும் எழுதினார். தான் பேசியதை நினைத்து வருத்தப்படுவதாகவும், மறுபடியும் நண்பர்களாக இருக்க விரும்புவதாகவும் அந்தக் கடிதங்களில் குறிப்பிட்டார். அதோடு, அவருக்குச் சின்னச் சின்ன பரிசுகளையும் கொடுத்தார். இதையெல்லாம் செய்தும், அந்தச் சகோதரரின் கோபம் குறையவே இல்லை. இருந்தாலும், சகோதரர்களை நேசிக்க வேண்டும் என்றும் அவர்களை மன்னிக்க வேண்டும் என்றும் இயேசு கொடுத்த கட்டளைக்கு ஜெரோம் தொடர்ந்து கீழ்ப்படிந்தார். (கொலோசெயர் 3:13, 14-ஐ வாசியுங்கள்.) நாம் யாரிடம் சமாதானம் பண்ண முயற்சி செய்கிறோமோ, அவர் ஒருவேளை அதை மதிக்காமல் போய்விடலாம். ஆனால் நமக்கு உண்மையான அன்பு இருந்தால், நாம் அவரை தொடர்ந்து மன்னிப்போம்; நம்முடைய முயற்சிகளுக்கு பலன் தரும்படி கேட்டு ஜெபம் செய்வோம்.—மத். 18:21, 22; கலா. 6:9.

கெட்ட எண்ணத்தைக் குழிதோண்டிப் புதைக்க வெறும் ஒரு முயற்சி மட்டும் போதாது (பாராக்கள் 7-8) *

7. (அ) நாம் என்ன செய்ய வேண்டும் என்று இயேசு சொன்னார்? (ஆ) லாராவுக்கு என்ன கஷ்டமான சூழ்நிலை வந்தது?

7 மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறோமோ, அதேபோல் நாமும் மற்றவர்களை நடத்த வேண்டும் என்று இயேசு சொன்னார். நம்மீது யார் அன்பு காட்டுகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே அன்பு காட்டினால் போதாது என்றும் அவர் சொன்னார். (லூக். 6:31-33) சபையில் இருக்கும் ஒருவர் மற்ற சகோதர சகோதரிகளை கண்டும்காணாமல் இருப்பதும் வணக்கம் சொல்லாமல் இருப்பதும் அபூர்வம்தான். ஆனால், உங்களிடம் ஒருவர் அப்படி நடந்துகொண்டால் என்ன செய்வீர்கள்? லாரா என்ற சகோதரிக்கு அதுதான் நடந்தது. “ஒரு சகோதரி என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி போயிட்டாங்க. ஏன்னு தெரியல! எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. கூட்டங்களுக்கு போறதுக்கே எனக்கு பிடிக்கல” என்கிறார் லாரா. பிறகு, ‘நான் எந்த தப்பும் செய்யல. அந்த சகோதரி வித்தியாசமா நடந்துக்குறாங்கனு சபையில இருக்கிற மத்தவங்களும் நினைக்கிறாங்க’ என்று அவர் சொல்லிக்கொண்டார்.

8. சமாதானம் பண்ணுவதற்கு லாரா என்ன செய்தார், அவரிடமிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?

8 சமாதானம் பண்ணுவதற்கு லாரா முயற்சி எடுத்தார். யெகோவாவிடம் ஜெபம் செய்த பிறகு, அந்தச் சகோதரியிடம் போய்ப் பேசலாம் என்று முடிவு செய்தார். அந்தப் பிரச்சினையைப் பற்றி அவர்கள் மனம்விட்டு பேசினார்கள், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக்கொண்டார்கள், சமாதானம் பண்ணிக்கொண்டார்கள். எல்லாப் பிரச்சினைகளும் சரியாகிவிட்டதுபோல் இருந்தது. பிறகு என்ன நடந்தது? “கொஞ்ச நாளைக்கு அப்புறம் அந்தச் சகோதரி பழைய மாதிரியே நடந்துக்கிட்டாங்க. என் மனசு அப்படியே உடைஞ்சுபோயிடுச்சு” என்கிறார் லாரா. அந்தச் சகோதரி தன்னை மாற்றிக்கொண்டால்தான் தன்னால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று லாரா ஆரம்பத்தில் நினைத்தார். ஆனால் போகப் போக ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டார். அதாவது, அந்தச் சகோதரிமேல் தொடர்ந்து அன்பு காட்டுவதும் அவரை ‘தாராளமாக மன்னிப்பதும்’ முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டார். (எபே. 4:32–5:2) உண்மையான அன்பு, “தீங்கை கணக்கு வைக்காது, எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும், எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்” என்பது லாராவுக்கு ஞாபகம் வந்தது. (1 கொ. 13:5, 7) இழந்துபோன சமாதானம் அவருக்குத் திரும்பவும் கிடைத்தது. காலப்போக்கில், அந்தச் சகோதரி லாராவிடம் நட்பாகப் பழக ஆரம்பித்தார். சகோதர சகோதரிகளோடு சமாதானம் பண்ணுவதற்கு முயற்சி செய்யும்போதும், தொடர்ந்து அன்பு காட்டும்போதும், “அன்புக்கும் சமாதானத்துக்கும் ஊற்றாக இருக்கிற கடவுள் உங்களோடு இருப்பார்.”—2 கொ. 13:11.

பாரபட்சம் காட்டாதவர்களாக இருங்கள்

9. அப்போஸ்தலர் 10:34, 35-ன்படி, நாம் ஏன் பாரபட்சம் காட்டக் கூடாது?

9 யெகோவா பாரபட்சம் காட்டுவதில்லை. (அப்போஸ்தலர் 10:34, 35-ஐ வாசியுங்கள்.) நாமும் அப்படி நடந்துகொண்டால், அவருடைய பிள்ளைகள் என்பதை நிரூபிப்போம். அதோடு, நம்மை நேசிப்பதுபோல் மற்றவர்களையும் நேசிக்க வேண்டும் என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிவோம், சகோதர சகோதரிகளோடு சமாதானமாக இருப்போம்.—ரோ. 12:9, 10; யாக். 2:8, 9.

10-11. தன்னுடைய தவறான எண்ணங்களை ஆஷா எப்படி மாற்றிக்கொண்டார்?

10 பாரபட்சம் காட்டாமல் இருப்பது சிலருக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆஷா என்ற சகோதரியின் அனுபவத்தை இப்போது பார்க்கலாம். அவருடைய சின்ன வயதில், வேறு நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணோடு அவருக்குக் கசப்பான ஓர் அனுபவம் ஏற்பட்டது. அதனால் என்ன ஆனது? “அந்த நாட்டோட சம்பந்தப்பட்ட எல்லாத்தையுமே நான் வெறுத்தேன். அந்த நாட்டுல இருக்கிற எல்லாரும், நம்மோட சகோதர சகோதரிகள்கூட அப்படித்தான் நடந்துக்குவாங்கனு நினைச்சேன்” என்கிறார் ஆஷா. இந்த எண்ணத்தை அவர் எப்படிச் சரி செய்தார்?

11 இப்படிப்பட்ட எண்ணங்களை மாற்றிக்கொள்வதற்குக் கடினமாகப் போராட வேண்டும் என்பதை அவர் புரிந்துகொண்டார். அந்த நாட்டைப் பற்றிய அனுபவங்களையும் அறிக்கைகளையும் இயர்புக்கில் படித்தார். “அந்த நாட்டு மக்கள பத்தி நல்ல எண்ணத்த வளர்த்துக்கிறதுக்கு முயற்சி எடுத்தேன். அங்கிருக்கிற சகோதர சகோதரிகள் யெகோவாவுக்கு எவ்வளவு ஆர்வமா சேவை செய்றாங்கனு கவனிச்சேன். உலகம் முழுசும் இருக்கிற நம்ம குடும்பத்துல அவங்களும் ஒருத்தருங்குறத புரிஞ்சுக்கிட்டேன்” என்று அவர் சொல்கிறார். நாட்கள் போகப் போக, இன்னும் சில விஷயங்களைச் செய்ய வேண்டும் என்பதும் ஆஷாவுக்குப் புரிந்தது. “அந்த நாட்டுல இருக்கிற சகோதர சகோதரிகள பார்க்கும்போதெல்லாம், அவங்ககிட்ட நட்பா பழக கடினமா முயற்சி செஞ்சேன். அவங்ககிட்ட போய் பேசுனேன், அவங்கள பத்தி நல்லா தெரிஞ்சிக்க முயற்சி செஞ்சேன்” என்கிறார் ஆஷா. இதனால், என்ன பலன் கிடைத்தது? “கொஞ்ச நாள்ல, தப்பான எண்ணங்கள் என்னை விட்டு போயிடுச்சு” என்று சொல்கிறார் அவர்.

‘சகோதரர்கள் எல்லாரிடமும் [ஊக்கமாக] அன்பு காட்டும்போது’ பாரபட்சம் என்ற குணம் நம்மை அண்டாது (பாராக்கள் 12-13) *

12. ஜாஸ்மினுக்கு என்ன பிரச்சினை இருந்தது?

12 தங்களுக்குத் தெரியாமலேயே சிலர் பாரபட்சம் காட்டிவிட வாய்ப்பிருக்கிறது. ஜாஸ்மின் என்ற சகோதரியைப் பற்றி இப்போது பார்க்கலாம். ஆரம்பத்தில், தான் பாரபட்சம் காட்டுவதில்லை என்றுதான் அவர் நினைத்தார். ஏனென்றால், ஒருவருடைய இனத்தை வைத்தோ, பணம் பொருளை வைத்தோ, அமைப்பில் இருக்கும் பொறுப்புகளை வைத்தோ அவர் யாரையும் மதிப்பிடவில்லை. ஆனால், “நான் உண்மையிலேயே பாரபட்சம் காட்டிட்டுதான் இருந்தேன்னு அப்புறம்தான் தெரிஞ்சிது” என்று அவர் ஒத்துக்கொள்கிறார். எப்படி? நன்றாகப் படித்த ஒரு குடும்பத்திலிருந்து அவர் வந்திருப்பதால், அவரைப் போலவே நன்றாகப் படித்தவர்களோடு பழகுவதைத்தான் விரும்பியிருக்கிறார். சொல்லப்போனால், “நல்லா படிச்ச சகோதர சகோதரிகள்கிட்டதான் நான் பழகுவேன். மத்தவங்ககிட்ட ஒதுங்கியே இருப்பேன்” என்று தன்னுடைய நண்பர் ஒருவரிடம் அவர் சொல்லியிருக்கிறார். ஜாஸ்மின் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது, இல்லையா?

13. ஜாஸ்மினிடமிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?

13 தன்னுடைய பிரச்சினையைப் புரிந்துகொள்ள ஜாஸ்மினுக்கு ஒரு வட்டாரக் கண்காணி உதவினார். “நான் யெகோவாவுக்கு உண்மையா சேவை செய்றேனும், நல்லா பதில் சொல்றேனும், பைபிள் விஷயங்கள நிறைய தெரிஞ்சி வெச்சிருக்கேனும் சொல்லி அவர் என்னை பாராட்டுனாரு. அப்புறம், பைபிள்ல இருக்கிற விஷயங்கள தெரிஞ்சிக்க தெரிஞ்சிக்க, மனத்தாழ்மை, அடக்கம், இரக்கம் மாதிரியான குணங்கள அதிகமா வளர்த்துக்கணும்னு சொன்னார்” என்கிறார் ஜாஸ்மின். வட்டாரக் கண்காணியின் வார்த்தைகள் அவருடைய மனதைத் தொட்டன. “இரக்கம் காட்டுறதும் அன்பா நடந்துக்குறதும்தான் ரொம்ப முக்கியம்னு நான் புரிஞ்சிக்கிட்டேன்” என்று அவர் சொல்கிறார். அதனால், சகோதர சகோதரிகளை அவர் பார்க்கும் விதம் மாறியது. “‘அந்த சகோதர சகோதரிகள யெகோவா ஏன் தங்கமானவங்களா நினைக்கிறாரு? அவங்ககிட்ட என்னென்ன அருமையான குணங்கள் இருக்கு?’ அப்படினு யோசிச்சேன்” என்கிறார் ஜாஸ்மின். இப்போது நம்முடைய விஷயத்துக்கு வருவோம். நாம் நிறைய படித்திருக்கிறோம் என்பதற்காக மற்றவர்களைவிட நாம் உயர்ந்தவர்கள் என்று நினைக்கக் கூடாது. ‘சகோதரர்கள் எல்லாரிடமும் [ஊக்கமாக] அன்பு காட்டினால்’ பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்வோம்.—1 பே. 2:17.

உபசரிக்கும் குணத்தைக் காட்டுங்கள்

14. எபிரெயர் 13:16-ன்படி, நாம் மற்றவர்களை உபசரிக்கும்போது யெகோவா எப்படி உணருகிறார்?

14 உபசரிக்கும் குணத்தை நாம் காட்டும்போது யெகோவா ரொம்பச் சந்தோஷப்படுகிறார். (எபிரெயர் 13:16-ஐ வாசியுங்கள்.) உபசரிப்பதை, அதுவும் உதவி தேவைப்படுபவர்களை உபசரிப்பதை, நம் வணக்கத்தின் பாகமாக அவர் நினைக்கிறார். (யாக். 1:27; 2:14-17) அதனால்தான், “உபசரிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 12:13) ஒருவரை உபசரிக்கும்போது, அவர்மேல் அன்பையும் அக்கறையையும் காட்டுகிறோம் என்று அர்த்தம். அவரோடு நட்பு வைத்துக்கொள்ள விரும்புகிறோம் என்றும் அர்த்தம். நாம் மற்றவர்களோடு சேர்ந்து சிற்றுண்டி சாப்பிடும்போதோ, ஏதாவது குடிக்கும்போதோ, உணவு சாப்பிடும்போதோ, அவர்களோடு நேரம் செலவு செய்யும்போதோ, யெகோவா ரொம்பச் சந்தோஷப்படுகிறார். (1 பே. 4:8-10) இருந்தாலும், மற்றவர்களை உபசரிப்பதற்கு நமக்குச் சில தடைகள் இருக்கலாம்.

“இதுக்கு முன்னாடியெல்லாம் நான் யாரையும் உபசரிக்க மாட்டேன். ஆனா, என்னை நான் மாத்திக்கிட்டதால ரொம்ப சந்தோஷமாக இருக்குறேன்” (பாரா 16) *

15-16. (அ) உபசரிப்பதற்கு சிலர் ஏன் தயங்கலாம்? (ஆ) உபசரிக்கும் குணத்தைக் காட்ட சகோதரி ஸ்டெல்லாவுக்கு எது உதவியது?

15 நம்முடைய சூழ்நிலையின் காரணமாக உபசரிப்பதற்கு நாம் தயங்கலாம். கணவரை இழந்த ஸ்டெல்லா என்ற சகோதரியின் அனுபவத்தைப் பாருங்கள். அவர் யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு முன்பு, மற்றவர்களோடு அவ்வளவாகப் பழகவில்லை. தன்னைவிட மற்றவர்களால்தான் நன்றாக உபசரிக்க முடியும் என்று நினைத்தார்.

16 யெகோவாவின் சாட்சியாக ஆனதற்குப் பிறகு தன்னுடைய எண்ணத்தை ஸ்டெல்லா மாற்றிக்கொண்டார். மற்றவர்களை உபசரிப்பதற்கு முயற்சி எடுத்தார். “எங்களோட ராஜ்ய மன்றத்த கட்டிட்டு இருந்தப்போ, ஒரு மூப்பர் என்கிட்ட வந்து, ‘கட்டுமான வேலைக்காக வர்ற ஒரு தம்பதிய உங்க வீட்டுல ரெண்டு வாரத்துக்கு தங்க வைக்க முடியுமா’னு கேட்டாரு. அப்போ, சாறிபாத் நகரத்த சேர்ந்த விதவைய யெகோவா எப்படி ஆசீர்வதிச்சாருனு யோசிச்சுப்பார்த்தேன்” என்று அவர் சொல்கிறார். (1 ரா. 17:12-16) பிறகு, அந்தத் தம்பதியை தன்னுடைய வீட்டில் தங்க வைப்பதற்கு ஒத்துக்கொண்டார். யெகோவா அவரை ஆசீர்வதித்தாரா? “ரெண்டு வாரங்குறது ரெண்டு மாசமாயிடுச்சு. அந்த சமயத்துல, நாங்க நல்ல நண்பர்களா ஆயிட்டோம்” என்கிறார் ஸ்டெல்லா. சபையிலும் அவருக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். அவர் இப்போது பயனியராக சேவை செய்கிறார். தன்னோடு ஊழியம் செய்கிறவர்களை வீட்டுக்குக் கூப்பிட்டு சிற்றுண்டி கொடுத்து உபசரிக்கிறார். “கொடுக்குறது எனக்கு சந்தோஷமா இருக்கு. உண்மைய சொல்லணும்னா, கொடுக்குறதவிட எனக்கு கிடைக்கிற ஆசீர்வாதங்கள்தான் அதிகம்” என்று அவர் சொல்கிறார்.—எபி. 13:1, 2.

17. எரிக்கும் அவருடைய மனைவியும் எதைப் புரிந்துகொண்டார்கள்?

17 ஒருவேளை, நாம் ஏற்கெனவே உபசரிக்கும் குணத்தைக் காட்டிவரலாம். ஆனால், அதில் இன்னும் முன்னேற முடியுமா? எரிக்கையும் அவருடைய மனைவியையும் பற்றிப் பார்க்கலாம். அவர்களுக்கு உபசரிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால், அவர்களுடைய அப்பா-அம்மா, சொந்தக்காரர்கள், நெருங்கிய நண்பர்கள், வட்டாரக் கண்காணிகள் மற்றும் அவர்களுடைய மனைவிகள் ஆகியவர்களை மட்டும்தான் அவர்கள் உபசரித்துவந்தார்கள். “எங்களுக்கு நெருக்கமானவங்கள மட்டும்தான் நாங்க உபசரிக்குறோங்குற விஷயத்த நாங்க புரிஞ்சுக்கிட்டோம்” என்று அவர் சொல்கிறார். எரிக்கும் அவருடைய மனைவியும் எப்படித் தங்களை மாற்றிக்கொண்டார்கள்?

18. உபசரிக்கிற விஷயத்தில் எரிக்கும் அவருடைய மனைவியும் எப்படி முன்னேறினார்கள்?

18 “உங்கள்மேல் அன்பு காட்டுகிறவர்களிடம் மட்டுமே நீங்கள் அன்பு காட்டினால், என்ன பிரயோஜனம்?” என்ற இயேசுவின் வார்த்தைகளை எரிக்கும் அவருடைய மனைவியும் நினைத்துப்பார்த்தார்கள். (மத். 5:45-47) பிறகு, தங்களை மாற்றிக்கொண்டார்கள். எல்லாருக்கும் தாராளமாகக் கொடுக்கிற யெகோவாவைப் போல் இருக்க வேண்டும் என்பது அவர்களுக்குப் புரியவந்தது. அதனால், இதுவரை யாரையெல்லாம் உபசரிக்கவில்லையோ அவர்களையெல்லாம் கூப்பிடுவதென்று முடிவு செய்தார்கள். “ஒண்ணு சேர்ந்து நேரம் செலவு செய்றது எங்க எல்லாருக்கும் சந்தோஷமா இருக்கு. எங்களுக்குள்ள இருக்கிற பந்தமும் யெகோவாகிட்ட இருக்கிற பந்தமும் பலப்படுது” என்று எரிக் சொல்கிறார்.

19. நாம் இயேசுவின் சீஷர்கள் என்பதை எப்படி நிரூபிக்கலாம், நீங்கள் என்ன செய்ய முடிவெடுத்திருக்கிறீர்கள்?

19 சமாதானம் பண்ணுகிறவர்களாகவும், பாரபட்சம் காட்டாதவர்களாகவும், உபசரிப்பவர்களாகவும் இருப்பதற்கு ஊக்கமாக அன்பு காட்டுவது எப்படி உதவும் என்று இதுவரை பார்த்தோம். அன்பு காட்டுவதற்குத் தடையாக இருக்கிற எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து, நம் சகோதர சகோதரிகள்மேல் நாம் ஊக்கமாக அன்பு காட்ட வேண்டும். அப்படிச் செய்தால், சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது. நாம் உண்மையிலேயே இயேசுவின் சீஷர்கள் என்பதையும் நிரூபிப்போம்.—யோவா. 13:17, 35.

பாட்டு 69 உம் வழிகளை எனக்குப் போதிப்பீரே!

^ பாரா. 5 அன்புதான் உண்மை கிறிஸ்தவர்களின் அடையாளம் என்று இயேசு சொன்னார். சகோதர சகோதரிகள்மேல் அன்பு இருந்தால், நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருப்போம், பாரபட்சம் பார்க்க மாட்டோம், உபசரிக்கும் குணத்தைக் காட்டுவோம். இதையெல்லாம் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை என்பது உண்மைதான். இருந்தாலும், ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஊக்கமாக அன்பைக் காட்டுவது எப்படி என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 5 சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

^ பாரா. 57 படங்களின் விளக்கம்: சமாதானம் பண்ணுவதற்கு ஒரு சகோதரி முயற்சி எடுக்கிறார். ஆரம்பத்தில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், சோர்ந்துபோகாமல் தொடர்ந்து அன்பு காட்டுகிறார். கடைசியில் இரண்டு பேரும் சமாதானம் ஆகிறார்கள்.

^ பாரா. 59 படங்களின் விளக்கம்: வயதான ஒரு சகோதரர், தான் ஒதுக்கப்பட்டதுபோல் உணருகிறார்.

^ பாரா. 61 படங்களின் விளக்கம்: உபசரிப்பதற்கு ஆரம்பத்தில் தயங்கிய ஒரு சகோதரி, தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்கிறார். அதனால், அவருடைய சந்தோஷம் அதிகமாகிறது.