Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 20

இன்று ‘வடதிசை ராஜா’ யார்?

இன்று ‘வடதிசை ராஜா’ யார்?

“உதவிக்கு யாருமே இல்லாமல் தன் முடிவைச் சந்திப்பான்.” தானி. 11:45.

பாட்டு 116 ஒளி மேன்மேலும் பிரகாசிக்கிறது

இந்தக் கட்டுரையில்... *

1-2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

கடைசி நாட்களின் கடைசிக் கட்டத்தில்தான் நாம் இருக்கிறோம் என்பதற்கு இதுவரை இல்லாதளவு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. கடவுளுடைய அரசாங்கத்தை எதிர்க்கிற உலக அரசாங்கங்கள் எல்லாவற்றையும் யெகோவாவும் இயேசுவும் சீக்கிரத்தில் அழிக்கப்போகிறார்கள். அதற்கு முன்பு, வடதிசை ராஜாவும் தென்திசை ராஜாவும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பதோடு, கடவுளுடைய மக்களையும் எதிர்ப்பார்கள்.

2 தானியேல் 11:40–12:1 வரை இருக்கிற தீர்க்கதரிசனத்தைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இன்று வடதிசை ராஜா யார் என்பதைப் பற்றியும், எதிர்காலத்தில் வரப்போகிற சவால்களைச் சமாளிக்க முடியும் என்பதில் நாம் ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.

புதிய வடதிசை ராஜா தோன்றுகிறான்

3-4. புதிய வடதிசை ராஜாவாக உருவெடுத்திருப்பது யார்? விளக்குங்கள்.

3 சோவியத் யூனியன் 1991-ல் சிதைந்த பிறகு, அந்தப் பகுதிகளில் இருந்த யெகோவாவின் மக்களுக்கு “ஓரளவு உதவி” கிடைத்தது. அதாவது, கொஞ்சக் காலத்துக்கு சுதந்திரம் கிடைத்தது. (தானி. 11:34) அதனால், அவர்களால் எந்தத் தடையும் இல்லாமல் பிரசங்கிக்க முடிந்தது. முன்பு சோவியத் யூனியனின் பாகமாக இருந்த இடங்களில், யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்தது. காலப்போக்கில், ரஷ்யாவும் அதன் கூட்டணி நாடுகளும் வடதிசை ராஜாவாக உருவெடுத்தன. ஒரு அரசாங்கம் வடதிசை ராஜாவாக அல்லது தென்திசை ராஜாவாக இருக்க வேண்டுமென்றால், மூன்று விஷயங்கள் அதற்குப் பொருந்த வேண்டுமென்று முந்தின கட்டுரையில் பார்த்தோம். (1) கடவுளுடைய மக்கள்மேல் அவை ஆதிக்கம் செலுத்த வேண்டும். (2) யெகோவாவுக்கும், அவருடைய மக்களுக்கும் தாங்கள் எதிரிகள் என்பதை தங்களுடைய செயல்கள் மூலம் காட்ட வேண்டும். (3) அதிகாரத்துக்காக தங்களுக்குள் போட்டி போட்டுக்கொள்ள வேண்டும்.

4 ரஷ்யாவும், அதன் கூட்டணி நாடுகளும்தான் வடதிசை ராஜா என்று எப்படிச் சொல்கிறோம்? (1) பிரசங்க வேலையைத் தடை செய்வதன் மூலமும், ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகளைத் துன்புறுத்துவதன் மூலமும் கடவுளுடைய மக்கள்மேல் அவன் ஆதிக்கம் செலுத்திவருகிறான். (2) யெகோவாவையும் அவருடைய மக்களையும் வெறுப்பதைத் தன்னுடைய செயல்கள் மூலம் காட்டுகிறான். (3) தென்திசை ராஜாவான ஆங்கிலோ-அமெரிக்க வல்லரசோடு அவன் போட்டி போடுகிறான். இப்போது, ரஷ்யாவும் அதன் கூட்டணி நாடுகளும் இதுவரை என்ன செய்திருக்கின்றன என்பதையும், அவை வடதிசை ராஜாவாக எப்படிச் செயல்படுகின்றன என்பதையும் பார்க்கலாம்.

வடதிசை ராஜாவும் தென்திசை ராஜாவும் தொடர்ந்து போட்டி போடுகிறார்கள்

5. எந்தக் காலப்பகுதியில் நடக்கிற விஷயங்களைப் பற்றி தானியேல் 11:40-43 சொல்கிறது, அப்போது என்ன நடக்கும்?

5 தானியேல் 11:40-43-ஐ வாசியுங்கள். முடிவு காலத்தில் நடக்கப்போகிறவற்றைப் பற்றி இந்தத் தீர்க்கதரிசனம் சொல்கிறது. வடதிசை ராஜாவும் தென்திசை ராஜாவும் எப்படி எதிரும் புதிருமாக இருப்பார்கள் என்பதை இந்த வசனங்கள் முக்கியப்படுத்திக் காட்டுகின்றன. முடிவு காலத்தில், தென்திசை ராஜா வடதிசை ராஜாவோடு “சண்டைக்கு நிற்பான்” என்று தானியேல் சொன்னார்.—தானி. 11:40.

6. இரண்டு ராஜாக்களும் எதிரும் புதிருமாக இருக்கிறார்கள் என்பதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன?

6 உலகத்திலேயே அதிக பலம்படைத்த அரசாங்கமாக தாங்கள் உருவெடுக்க வேண்டும் என்பதற்காக வடதிசை ராஜாவும் தென்திசை ராஜாவும் தொடர்ந்து போட்டி போடுகிறார்கள். உதாரணத்துக்கு, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சோவியத் யூனியனும் அதன் கூட்டணி நாடுகளும் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளை அவற்றின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. இதைப் பார்த்த தென்திசை ராஜா, மற்ற நாடுகளோடு சேர்ந்து ஒரு ராணுவக் கூட்டணியை ஏற்படுத்தினான். வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (NATO) என்று அது அழைக்கப்படுகிறது. பயங்கரமான ஆயுதங்களைக் குவித்து வைப்பதில் வடதிசை ராஜா தென்திசை ராஜாவோடு தொடர்ந்து போட்டிபோட்டுக்கொண்டே இருக்கிறான். தென்திசை ராஜாவின் எதிரிகளை ஆதரிப்பதன் மூலமும், ஆப்பிரிக்கா... ஆசியா... லத்தீன் அமெரிக்கா பகுதிகளில் போராட்டங்களைத் தூண்டிவிடுவதன் மூலமும் வடதிசை ராஜா தென்திசை ராஜாவோடு மறைமுகமாகப் போர் செய்தான். சமீப வருஷங்களில், ரஷ்யா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் பலம் கூடிக்கொண்டே வருகிறது. அதோடு, தென்திசை ராஜாவோடு அவர்கள் சைபர் தாக்குதலிலும் (cyber warfare) ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். கம்ப்யூட்டர் புரோகிராம்களைப் பயன்படுத்தி தங்களுடைய பொருளாதாரத்தையும் அரசாங்கத்தையும் நாசப்படுத்தி வருவதாக இந்த இரண்டு ராஜாக்களும் ஒருவர்மேல் ஒருவர் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். அதோடு, தானியேல் முன்கூட்டியே சொன்னதுபோல், கடவுளுடைய மக்களை வடதிசை ராஜா தொடர்ந்து தாக்கிவருகிறான்.—தானி. 11:41.

வடதிசை ராஜா ‘சிங்கார தேசத்துக்குள்’ நுழைகிறான்

7. ‘சிங்கார தேசம் எது’?

7 வடதிசை ராஜா, ‘சிங்கார தேசத்துக்குள்’ நுழைவான் என்று தானியேல் 11:41 சொல்கிறது. பைபிள் காலங்களில், இஸ்ரவேல் தேசம்தான் சிங்கார தேசமாக, அதாவது ‘தேசங்களிலேயே மிக அழகான தேசமாக,’ கருதப்பட்டது. (எசே. 20:6) அது அப்படி விசேஷமாகக் கருதப்பட்டதற்குக் காரணம், உண்மை வழிபாட்டின் மையமாக இருந்ததால்தான்! ஆனால், கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளிலிருந்து ஒரு குறிப்பிட்ட ‘தேசமோ’ இடமோ சிங்கார தேசமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. அதற்குக் காரணம், யெகோவாவின் மக்கள் உலகம் முழுவதும் பரவியிருப்பதுதான்! அப்படியென்றால், ‘சிங்கார தேசம்’ என்பது இன்று எதைக் குறிக்கிறது? கூட்டங்களில் கலந்துகொள்வது, ஊழியம் செய்வது, யெகோவாவை வழிபடுவது உட்பட, யெகோவாவின் சாட்சிகளுடைய வழிபாடு சம்பந்தப்பட்ட எல்லா செயல்களையும் குறிக்கிறது.

8. வடதிசை ராஜா “சிங்கார தேசத்துக்குள்” எப்படி நுழைந்தான்?

8 கடைசி நாட்களில், வடதிசை ராஜா நிறைய தடவை “சிங்கார தேசத்துக்குள்” நுழைந்திருக்கிறான். உதாரணத்துக்கு, நாசி ஜெர்மனி வடதிசை ராஜாவாக இருந்த சமயத்தில், முக்கியமாக இரண்டாம் உலகப் போரின்போது, கடவுளுடைய மக்களைத் துன்புறுத்தியதன் மூலமும் அவர்களைக் கொன்று குவித்ததன் மூலமும் “சிங்கார தேசத்துக்குள்” நுழைந்தான். அந்தப் போருக்குப் பிறகு, சோவியத் யூனியன் வடதிசை ராஜாவாக உருவெடுத்தது. கடவுளுடைய மக்களைத் துன்புறுத்தி அவர்களை நாடு கடத்தியதன் மூலம், இந்த வடதிசை ராஜாவும் “சிங்கார தேசத்துக்குள்” நுழைந்தான்.

9. சமீப வருஷங்களில், ரஷ்யாவும் அதன் கூட்டணிகளும் “சிங்கார தேசத்துக்குள்” எப்படி நுழைந்திருக்கின்றன?

9 சமீப வருஷங்களில், ரஷ்யாவும் அதன் கூட்டணி நாடுகளும் “சிங்கார தேசத்துக்குள்” நுழைந்திருக்கின்றன. எப்படி? 2017-ல், இந்த வடதிசை ராஜா, நம்முடைய வேலைகளைத் தடை செய்தான். நம்முடைய சகோதர சகோதரிகளில் சிலரை சிறையில் தள்ளினான். புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் உட்பட, நம்முடைய பிரசுரங்கள் எல்லாவற்றையும் தடை செய்தான். அதோடு, ரஷ்யாவில் இருக்கிற நம்முடைய கிளை அலுவலகத்தையும், ராஜ்ய மன்றங்களையும், மாநாட்டு மன்றங்களையும் பறிமுதல் செய்தான். இந்த நடவடிக்கைகளைப் பார்த்த பிறகு, ரஷ்யாவும் அதன் கூட்டணி நாடுகளும்தான் வடதிசை ராஜா என்பதை, 2018-ல் ஆளும் குழு உறுதி செய்தது. யெகோவாவின் சாட்சிகளை எவ்வளவுதான் துன்புறுத்தினாலும், அரசாங்கங்களை எதிர்த்து அவர்கள் போராட்டம் செய்யவும் மாட்டார்கள், அவற்றைக் கவிழ்த்துவிட்டு புதிய அரசாங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்யவும் மாட்டார்கள். “உயர் அதிகாரிகளுக்காக” மன்றாடுங்கள் என்று பைபிள் சொல்கிற அறிவுரைக்கு அவர்கள் கீழ்ப்படிகிறார்கள். முக்கியமாக, அரசாங்கங்கள் எடுக்கிற தீர்மானங்கள் அவர்களுடைய வழிபாட்டை பாதிக்கிற சமயங்களில் அப்படிச் செய்கிறார்கள்.—1 தீ. 2:1, 2.

தென்திசை ராஜாவை வடதிசை ராஜா அழித்துவிடுவானா?

10. வடதிசை ராஜா தென்திசை ராஜாவை அழித்துவிடுவானா? விளக்குங்கள்.

10 தானியேல் 11:40-45-லிருக்கிற தீர்க்கதரிசனம், முக்கியமாக வடதிசை ராஜா என்ன செய்வான் என்பதைப் பற்றிதான் சொல்கிறது. அப்படியென்றால், தென்திசை ராஜாவை அவன் அழித்துவிடுவானா? இல்லை! யெகோவாவும் இயேசுவும் இந்த உலக அரசாங்கங்களை அழிக்கும்போது, தென்திசை ராஜா “உயிரோடு” இருப்பான். (வெளி. 19:20) அதை எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்லலாம்? தானியேல் மற்றும் வெளிப்படுத்துதல் புத்தகங்களில் இருக்கும் தீர்க்கதரிசனங்களை இப்போது பார்க்கலாம்.

கல்லுக்கு ஒப்பிடப்பட்டிருக்கும் கடவுளுடைய அரசாங்கம், பெரிய சிலைக்கு ஒப்பிடப்பட்டிருக்கும் மனித அரசாங்கங்களை அர்மகெதோன் போரில் அழிக்கும் (பாரா 11)

11. தானியேல் 2:43-45-லிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? (அட்டைப் படம்)

11 தானியேல் 2:43-45-ஐ வாசியுங்கள். கடவுளுடைய மக்கள்மேல் ஆதிக்கம் செலுத்திவருகிற உலக அரசாங்கங்களைப் பற்றி தானியேல் தீர்க்கதரிசனம் சொல்கிறது. அந்த உலக அரசாங்கங்கள், ஒரு பெரிய உலோக சிலையின் பாகங்களாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சிலையின் பாதங்கள்தான், மனிதர்களால் ஆளப்படும் கடைசி அரசாங்கம். அந்தப் பாதங்கள், இரும்பும் களிமண்ணும் கலந்து செய்யப்பட்டிருந்தது. ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசைத்தான் அந்தப் பாதங்கள் குறித்தன. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, கடவுளுடைய அரசாங்கம் எல்லா மனித அரசாங்கங்களையும் அழிக்கும்போது ஆங்கிலோ-அமெரிக்க வல்லரசு செயல்பட்டுக்கொண்டிருக்கும் என்பது தெரிகிறது.

12. மூர்க்க மிருகத்தின் ஏழாவது தலை எதைக் குறிக்கிறது?

12 கடவுளுடைய மக்கள்மேல் அடுத்தடுத்து ஆதிக்கம் செலுத்திய அரசாங்கங்களைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் சொன்னார். இந்த உலக அரசாங்கங்களை, ஏழு தலைகளைக் கொண்ட மூர்க்க மிருகம் என்று அவர் விவரித்தார். அந்த மிருகத்தின் ஏழாவது தலை ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசைக் குறிக்கிறது. இதைத் தெரிந்துகொள்வது முக்கியம்! ஏனென்றால், அந்த மிருகத்துக்கு எட்டாவதாக ஒரு தலை முளைப்பதாக பைபிள் சொல்லவில்லை. கிறிஸ்துவும் அவருடைய பரலோகப் படையும் இந்த ஏழாவது தலையையும் மிருகத்தையும் அழிக்கும்போது, ஏழாவது தலை இன்னும் ஆட்சி செய்துகொண்டிருக்கும் என்று தீர்க்கதரிசனம் சொல்கிறது. *வெளி. 13:1, 2; 17:13, 14.

வடதிசை ராஜா சீக்கிரத்தில் என்ன செய்வான்?

13-14. “மாகோகு தேசத்தின் கோகு” யார், எது அதன் கோபத்தைக் கிளறலாம்?

13 வடதிசை ராஜாவும் தென்திசை ராஜாவும் அழிக்கப்படுவதற்கு முன்பு என்ன நடக்கலாம் என்று தெரிந்துகொள்வதற்கு எசேக்கியேல் தீர்க்கதரிசனம் உதவுகிறது. எசேக்கியேல் 38:10-23; தானியேல் 2:43-45; 11:44–12:1 மற்றும் வெளிப்படுத்துதல் 16:13-16, 21-ல் இருக்கிற தீர்க்கதரிசனங்கள், ஒரே காலகட்டத்தில் நடக்கிற சம்பவங்களைப் பற்றிச் சொல்வதாகத் தெரிகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அடுத்து வரும் பாராக்களில் விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

14 மிகுந்த உபத்திரவம் ஆரம்பித்த பிறகு, ஏதோவொரு கட்டத்தில், ‘பூமி முழுவதுமுள்ள ராஜாக்கள்’ ஒன்றுசேர்ந்து ஒரு கூட்டணியை அமைப்பார்கள். (வெளி. 16:13, 14; 19:19) இந்தக் கூட்டணியைத்தான் “மாகோகு தேசத்தின் கோகு” என்று பைபிள் சொல்கிறது. (எசே. 38:2) கடவுளுடைய மக்களைப் பூண்டோடு அழிப்பதற்கு இந்தக் கூட்டணி நாடுகள் முயற்சி செய்யும். அந்தச் சமயத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் பார்த்தார். பெரிய ஆலங்கட்டிகள் கடவுளுடைய எதிரிகள்மேல் விழுவதாக அதில் சொல்லப்பட்டிருக்கிறது. கடவுளுடைய மக்கள் சொல்லும் கடுமையான நியாயத்தீர்ப்பு செய்திகளை அந்த ஆலங்கட்டிகள் குறிக்கலாம். இந்தச் செய்தி மாகோகு தேசத்தின் கோகுவின் கோபத்தைக் கிளறலாம். கடவுளுடைய மக்களைப் பூண்டோடு அழிக்க வேண்டும் என்ற எண்ணமும் அதற்கு வரலாம்.—வெளி. 16:21.

15-16. (அ) தானியேல் 11:44, 45-ல் சொல்லியிருக்கும் சம்பவங்கள் எதைக் குறிக்கலாம்? (ஆ) வடதிசை ராஜாவுக்கும் மாகோகு தேசத்தின் கோகுவைச் சேர்ந்த மற்ற தேசங்களுக்கும் என்ன நடக்கும்?

15 இந்தக் கடுமையான செய்தியையும், கடவுளுடைய மக்களின் மீது வரப்போகிற கடைசி தாக்குதலையும் பற்றி தானியேல் 11:44, 45 விவரிப்பதாகத் தெரிகிறது. (வாசியுங்கள்.) “கிழக்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் வருகிற அறிக்கைகளைக் கேட்டு” வடதிசை ராஜா “மிகுந்த ஆவேசத்தோடு” புறப்பட்டுப் போவான் என்று அந்த வசனங்கள் சொல்கின்றன. “பலரை அழிக்க” வேண்டும் என்பதுதான் அவனுடைய குறிக்கோள். ‘பலர்’ என்கிற வார்த்தை கடவுளுடைய மக்களைக் குறிப்பதாகத் தெரிகிறது. * கடவுளுடைய மக்களின் மீது வரப்போகிற கடைசி தாக்குதலைப் பற்றி தானியேல் இந்த வசனங்களில் சொல்லியிருக்கலாம்.

16 வடதிசை ராஜாவும் உலகத்தின் மற்ற அரசாங்கங்களும் கடவுளுடைய மக்களைத் தாக்கும்போது சர்வ வல்லமையுள்ள கடவுளுக்குப் பயங்கர கோபம் வரும். அப்போது, அவர் அர்மகெதோன் போரைக் கொண்டுவருவார். (வெளி. 16:14, 16) அந்தச் சமயத்தில், வடதிசை ராஜாவோடு சேர்த்து மாகோகு தேசத்தின் கோகுவைச் சேர்ந்த மற்ற தேசங்களும் அழிக்கப்படும். அவர்களுடைய ‘உதவிக்கு யாருமே இருக்க’ மாட்டார்கள்.—தானி. 11:45.

இயேசு கிறிஸ்துவும் அவருடைய பரலோகப் படைவீரர்களும் சாத்தானுடைய பொல்லாத உலகத்தை அர்மகெதோன் போரில் அழிப்பார்கள், கடவுளுடைய மக்களைக் காப்பாற்றுவார்கள் (பாரா 17)

17. தானியேல் 12:1-ல் சொல்லப்பட்டிருக்கும் “மகா அதிபதியாகிய மிகாவேல்” யார், அவர் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார், எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார்?

17 வடதிசை ராஜாவும் அவனுடைய கூட்டணி நாடுகளும் எப்படி அழிக்கப்படுவார்கள் என்பதைப் பற்றியும், நாம் எப்படிக் காப்பாற்றப்படுவோம் என்பதைப் பற்றியும் தானியேல் 12:1 சொல்கிறது. (வாசியுங்கள்.) இப்போது ஆட்சி செய்துகொண்டிருக்கும் கிறிஸ்து இயேசுவின் இன்னொரு பெயர்தான், இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் மிகாவேல் என்ற பெயர். 1914-ல் பரலோகத்தில் கடவுளுடைய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து மிகாவேல் கடவுளுடைய மக்களுக்கு ‘துணையாக நிற்கிறார்.’ அர்மகெதோன் போரின்போது அவர் “செயலில் இறங்குவார்,” அதாவது எதிரிகளை அழிப்பார். தானியேல் சொல்லியிருக்கும் ‘மிக வேதனையான காலத்தில்’ நடக்கும் கடைசி சம்பவம்தான் இந்தப் போர்! அந்தக் காலத்தை, ‘மிகுந்த உபத்திரவம்’ என்று யோவான் சொல்கிறார்.—வெளி. 6:2; 7:14.

உங்களுடைய பெயர் ‘கடவுளுடைய புத்தகத்தில் எழுதப்படுமா’?

18. எதிர்காலத்தை நினைத்து நாம் ஏன் பயப்பட வேண்டியதில்லை?

18 யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் சேவை செய்கிறவர்கள் மிகுந்த உபத்திரவத்தில் தப்பிப்பிழைப்பார்கள் என்ற உறுதியை தானியேலும் யோவானும் கொடுக்கிறார்கள். அதனால், எதிர்காலத்தை நினைத்து நாம் பயப்பட வேண்டியதில்லை. யாருடைய பெயரெல்லாம் “கடவுளுடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதோ” அவர்கள்தான் தப்பிப்பார்கள் என்று தானியேல் சொல்கிறார். (தானி. 12:1) அப்படியென்றால், அந்தப் புத்தகத்தில் நம்முடைய பெயர் எழுதப்பட வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டியான இயேசுவின் மேல் விசுவாசம் வைத்திருக்கிறோம் என்பதைச் செயலில் காட்ட வேண்டும். (யோவா. 1:29) கடவுளுக்கு நம்மை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். (1 பே. 3:21) யெகோவாவைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லித்தருவதன் மூலம் கடவுளுடைய அரசாங்கத்தை ஆதரிக்கிறோம் என்பதைக் காட்ட வேண்டும்.

19. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும், ஏன்?

19 யெகோவாவின் மேலும் அவருடைய அமைப்பின் மேலும் நம்பிக்கை வைப்பதற்கு இதுதான் சரியான சமயம்! கடவுளுடைய அரசாங்கத்தை ஆதரிப்பதற்கும் இதுதான் சரியான சமயம்!! இப்படிச் செய்தால், வடதிசை ராஜாவையும் தென்திசை ராஜாவையும் கடவுளுடைய அரசாங்கம் அழிக்கும்போது நாம் காப்பாற்றப்படுவோம்.

பாட்டு 132 ஒரு வெற்றிப் பாடல்

^ பாரா. 5 இன்று “வடதிசை ராஜா யார்”? அவனுக்கு எப்படி முடிவு வரும்? இதற்கான பதில்களைத் தெரிந்துகொள்ளும்போது, நம்முடைய விசுவாசம் பலமாகும். அதோடு, எதிர்காலத்தில் வரப்போகிற சோதனைத் தீயைத் தாக்குப்பிடிக்கவும் நம்மால் தயாராக இருக்க முடியும்.

^ பாரா. 12 தானியேல் 2:36-45 மற்றும் வெளிப்படுத்துதல் 13:1, 2-ல் இருக்கிற தீர்க்கதரிசனங்களைப் பற்றி இன்னும் விளக்கமாகத் தெரிந்துகொள்ள, ஜூன் 15, 2012 காவற்கோபுரம், பக்கங்கள் 7-19-ஐப் பாருங்கள்.

^ பாரா. 15 கூடுதலான தகவலுக்கு மே 15, 2015 காவற்கோபுரம், பக்கங்கள் 29-30-ஐப் பாருங்கள்.