Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 23

“உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்”

“உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்”

“யெகோவாவே, உங்களுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கிறது.”சங். 135:13.

பாட்டு 9 நம் தேவன் யெகோவாவைப் போற்றுவோம்!

இந்தக் கட்டுரையில்... *

1-2. யெகோவாவின் சாட்சிகளாகிய நமக்கு எந்த விஷயங்கள் ரொம்ப முக்கியமானவை?

யெகோவாவின் உன்னத அரசாட்சிதான் சரியானது என்று நிரூபிப்பதும், அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதும்தான் இன்று நமக்கு முன்னால் இருக்கிற மிக முக்கியமான விஷயங்கள்! இவற்றைப் பற்றிப் பேசுவது யெகோவாவின் சாட்சிகளாகிய நமக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால், இவை இரண்டும் வெவ்வேறு விஷயங்களா? இல்லை!

2 பைபிள் படிப்பு படித்ததன் மூலம் யெகோவாவுடைய பெயருக்கு ஏற்பட்ட களங்கம் நீக்கப்பட வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டோம். அதோடு, அவருடைய உன்னத அரசாட்சிதான் மிகச் சிறந்தது என்பது நிரூபிக்கப்பட வேண்டும் என்பதையும் தெரிந்துகொண்டோம். அதனால், இவை இரண்டுமே நமக்கு முக்கியமான விஷயங்கள்!

3. யெகோவாவுடைய பெயரில் என்ன அடங்கியிருக்கிறது?

3 யெகோவாவுடைய பெயரில், அவர் ஆட்சி செய்கிற விதம் உட்பட அவரைப் பற்றிய எல்லாமே அடங்குகிறது. அதனால், யெகோவாவுடைய பெயருக்கு ஏற்பட்ட எல்லா களங்கமும் நீக்கப்படுவதுதான் மிக முக்கியமான விஷயம் என்று சொல்லும்போது, நாம் இன்னொரு விஷயத்தையும் முக்கியம் என்று சொல்கிறோம்! அதாவது, யெகோவா ஆட்சி செய்யும் விதம்தான் சரியானது என்று நிரூபிக்கப்படுவதும் முக்கியம் என்று சொல்கிறோம்!! அப்படியென்றால், யெகோவாவுடைய பெயருக்கும் உன்னதப் பேரரசரான அவர் ஆட்சி செய்கிற விதத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது.—“ மிக முக்கியமான விஷயத்தோடு சம்பந்தப்பட்டவை” என்ற பெட்டியைப் பாருங்கள்.

4. யெகோவாவுடைய பெயரைப் பற்றி சங்கீதம் 135:13 என்ன சொல்கிறது, எந்தெந்த கேள்விகளுக்கு இந்தக் கட்டுரையில் பதில் இருக்கின்றன?

4 யெகோவா என்ற பெயர் மிகவும் விசேஷமானது. (சங்கீதம் 135:13-ஐ வாசியுங்கள்.) இந்தப் பெயர் ஏன் அந்தளவு முக்கியமானது? இந்தப் பெயருக்கு எப்படிக் களங்கம் ஏற்பட்டது? அதைக் கடவுள் எப்படிப் பரிசுத்தமாக்குகிறார்? அவருடைய பெயரை நாம் எப்படி ஆதரித்துப் பேசலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்.

யெகோவாவுடைய பெயர் ஏன் மிக முக்கியமானது?

5. கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதைப் பற்றிப் பேசும்போது, சிலர் என்ன நினைக்கலாம்?

5 நாம் ஜெபம் செய்ய வேண்டிய விஷயங்களிலேயே மிக முக்கியமான ஒன்றைப் பற்றி இயேசு சொன்னார். அதாவது, “உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்று சொன்னார் (மத். 6:9) இயேசு சொன்னதற்கு என்ன அர்த்தம்? பரிசுத்தப்படுத்துவது என்றால், தூய்மையாக்குவது, புனிதப்படுத்துவது என்று அர்த்தம். ‘யெகோவாவோட பேரு ஏற்கெனவே தூய்மையாவும் புனிதமாவும்தானே இருக்கு?’ என்று சிலர் நினைக்கலாம். இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள, ஒருவருடைய பெயரில் என்னவெல்லாம் அடங்கியிருக்கின்றன என்பதை நாம் யோசித்துப்பார்க்க வேண்டும்.

6. ஒருவருடைய பெயரின் மதிப்பு எதைப் பொறுத்து இருக்கிறது?

6 பெயர் என்பது பல எழுத்துகள் அடங்கிய ஒரு வார்த்தையை எழுதுவதையோ உச்சரிப்பதையோ மட்டும் அர்த்தப்படுத்தாது. பெயரைப் பற்றி பைபிள் சொல்வதைக் கவனியுங்கள். “நிறைய சொத்துகளைச் சம்பாதிப்பதைவிட நல்ல பெயரைச் சம்பாதிப்பது சிறந்தது” என்று அது சொல்கிறது. (நீதி. 22:1; பிர. 7:1) அப்படியென்றால், ஒருவருடைய பெயர் ஏன் அவ்வளவு முக்கியமானது? ஏனென்றால், அதில் அவருடைய மதிப்புமரியாதை அடங்கியிருக்கிறது; மற்றவர்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதும் அடங்கியிருக்கிறது. அதனால், ஒருவருடைய பெயர் எப்படி எழுதப்படுகிறது, எப்படி உச்சரிக்கப்படுகிறது என்பது ரொம்ப முக்கியம் கிடையாது. அந்தப் பெயரை மற்றவர்கள் பார்க்கும்போதோ கேட்கும்போதோ, அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் மிக முக்கியம்!

7. கடவுளுடைய பெயரைக் கெடுக்க மக்கள் எப்படி முயற்சி செய்கிறார்கள்?

7 இப்போது யெகோவாவின் பெயருக்கு வருவோம். அவரைப் பற்றி மக்கள் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லும்போது, அவருடைய பெயரின் மதிப்பு மங்கிவிடுகிறது. இப்படிச் செய்வதன் மூலம் அவருடைய பெயரைக் கெடுக்க முயற்சி செய்கிறார்கள். முதன்முதலில் கடவுளைப் பற்றித் தவறாகப் பேசப்பட்டதும் அவருடைய பெயரைக் கெடுக்க முயற்சி செய்யப்பட்டதும் ஏதேன் தோட்டத்தில்தான்! அங்கே நடந்த சம்பவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இப்போது பார்க்கலாம்.

கடவுளுடைய பெயர்மீது முதன்முதலில் எப்படிக் களங்கம் சுமத்தப்பட்டது?

8. ஆதாம் ஏவாளுக்கு என்ன தெரிந்திருந்தது, அதனால் என்ன கேள்விகள் நம் மனதில் வருகின்றன?

8 கடவுளுடைய பெயர் யெகோவா என்பதும், அவரைப் பற்றிய முக்கியமான விஷயங்களும் ஆதாம் ஏவாளுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அவர்களைப் படைத்தவரும், அவர்களுக்கு உயிர் கொடுத்தவரும், வாழ்வதற்கு ஓர் அருமையான இடத்தைக் கொடுத்தவரும், பரிபூரணமான துணையைக் கொடுத்தவரும் யெகோவாதான் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். (ஆதி. 1:26-28; 2:18) யெகோவா அள்ளிக் கொடுத்த ஆசீர்வாதங்களை எல்லாம் எந்தக் கறையும் இல்லாத தங்கள் மனதில் தினம் தினம் அவர்கள் நினைத்துப் பார்த்தார்களா? யெகோவாமேல் இருக்கிற பாசமும் நன்றியும் நித்தமும் அவர்கள் மனதில் ஊற்றெடுத்ததா? கடவுளுடைய எதிரி அவர்களைச் சோதித்தபோது இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் வெட்டவெளிச்சமாயின.

9. ஆதியாகமம் 2:16, 17 மற்றும் 3:1-5-ன்படி, ஆதாம் ஏவாளிடம் கடவுள் என்ன சொல்லியிருந்தார், சாத்தான் எப்படி வில்லத்தனமான கேள்வியைக் கேட்டான்?

9 ஆதியாகமம் 2:16, 17-ஐயும், 3:1-5-ஐயும் வாசியுங்கள். பாம்பு பேசுவதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, “தோட்டத்தில் உள்ள அத்தனை மரங்களின் பழங்களையும் நீங்கள் சாப்பிடக் கூடாது என்று கடவுள் நிஜமாகவே சொன்னாரா?” என்று ஏவாளிடம் சாத்தான் கேட்டான். அந்தக் கேள்விக்குள் ஒரு பொய் புதைந்திருந்தது. அதனால், அவள் கடவுளைப் பற்றித் தவறாக நினைக்க ஆரம்பித்துவிட்டாள். ஒரே ஒரு மரத்தைத் தவிர மற்ற எல்லா மரத்தின் பழங்களையும் சாப்பிடலாம் என்றுதான் கடவுள் சொல்லியிருந்தார். அப்படியென்றால், அவர்கள் சாப்பிடுவதற்கு விதவிதமான பழங்கள் எத்தனை இருந்திருக்கும்! (ஆதி. 2:9) நம் கடவுளான யெகோவா தாராள குணம் படைத்தவர். ஒரே ஒரு மரத்தின் பழத்தை மட்டும்தான் சாப்பிட வேண்டாமென்று ஆதாம் ஏவாளிடம் அவர் சொல்லியிருந்தார். இந்த விஷயம் தெரிந்திருந்தும் சாத்தான் வில்லத்தனமான ஒரு கேள்வியைக் கேட்டான். கடவுள் கஞ்சத்தனமானவர் என்பதுபோல் சித்தரித்தான். அதனால், ‘ஏதோ ஒரு நல்ல விஷயத்த கடவுள் என்கிட்ட இருந்து மறைக்கிறாரோ?’ என்று ஏவாள் நினைக்க ஆரம்பித்திருக்கலாம்.

10. சாத்தான் எப்படி நேரடியாகவே கடவுளுடைய பெயரைக் களங்கப்படுத்தினான், அதனால் வந்த விளைவு என்ன?

10 சாத்தான் அந்தக் கேள்வியைக் கேட்ட சமயத்தில்கூட, ஏவாள் யெகோவாவுக்குக் கட்டுப்பட்டவளாகத்தான் இருந்தாள். கடவுள் கொடுத்திருந்த தெளிவான கட்டளையை சாத்தானிடம் சொன்னாள். தடை செய்யப்பட்ட மரத்தைத் தொடவும் கூடாது என்பதையும் சொன்னாள். கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனால் சாவுதான் மிஞ்சும் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் சாத்தான், “நீங்கள் கண்டிப்பாகச் செத்துப்போக மாட்டீர்கள்” என்று சொன்னான். (ஆதி. 3:2-4) இவ்வளவு நேரம் கடவுளைப் பற்றி மறைமுகமாகப் பேசிக்கொண்டிருந்தவன், இப்போது நேரடியாகவே கடவுளுடைய பெயரைக் களங்கப்படுத்த ஆரம்பித்துவிட்டான். கடவுள் பொய் சொல்வதாக அபாண்டமாகப் பழிசுமத்தினான். இப்படி, அவன் பிசாசாக, அதாவது இல்லாததையும் பொல்லாததையும் பேசுபவனாக, ஆனான். சாத்தானை நம்பி ஏவாள் முற்றிலும் ஏமாந்துபோனாள். (1 தீ. 2:14) யெகோவாவைவிட சாத்தான்மேல் அவள் அதிக நம்பிக்கை வைத்தாள். அதனால், தனக்குத்தானே குழிபறித்துக் கொண்டாள். யெகோவாவின் பேச்சைக் கேட்கக் கூடாது என்ற முடிவை எடுத்துவிட்டாள். தடை செய்யப்பட்ட பழத்தைச் சாப்பிட்டாள். ஆதாமுக்கும் அதில் கொஞ்சத்தைக் கொடுத்தாள்.—ஆதி. 3:6.

11. ஆதாமும் ஏவாளும் என்ன செய்திருக்கலாம், ஆனால் அவர்கள் என்ன செய்யத் தவறிவிட்டார்கள்?

11 சாத்தானுக்கு ஏவாள் எப்படி பதிலடி கொடுத்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? “நீ யாருனே எனக்கு தெரியாது. ஆனா, என்னோட அப்பா யெகோவாவ பத்தி எனக்கு நல்லா தெரியும். அவர்மேல எனக்கு அன்பு இருக்கு, நம்பிக்கையும் இருக்கு. ஆதாமுக்கும் எனக்கும் அவர் எல்லாமே தந்திருக்காரு. எவ்வளவு தைரியம் இருந்தா, அவர பத்தி தப்பு தப்பா பேசுவே. மரியாதையா ஓடிப் போயிடு” என்று ஏவாள் சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? தன்னுடைய பாச மகள் தனக்கு ஆதரவாகப் பேசியிருந்தால் யெகோவா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்! (நீதி. 27:11) ஆனால், அவளுக்கும் சரி ஆதாமுக்கும் சரி, யெகோவாமேல் உண்மையான அன்பு இருக்கவில்லை. அதனால், தங்களுடைய தந்தையின் பெயர் களங்கப்படுத்தப்பட்டபோது, அவருடைய பெயருக்கு ஆதரவாக அவர்கள் பேசவில்லை.

12. ஏவாளின் மனதில் சாத்தான் எப்படிச் சந்தேக விதைகளை விதைத்தான், ஆதாமும் ஏவாளும் எதைச் செய்யத் தவறினார்கள்?

12 நாம் ஏற்கெனவே பார்த்தபடி, ஏவாளின் மனதில் சாத்தான் சந்தேக விதைகளை விதைத்தான். இப்படி, யெகோவாவின் நற்பெயரைக் கெடுக்க முயற்சி செய்தான். அவரைப் பற்றி சாத்தான் இல்லாததையும் பொல்லாததையும் சொன்னபோது ஆதாமும் ஏவாளும் அவருடைய பெயருக்கு ஆதரவாகப் பேசவில்லை. அதற்குப் பதிலாக, சாத்தான் சொன்னதைக் கேட்டு, அவர்களுடைய தந்தையான யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். இன்றும் அதே மாதிரியான தந்திரங்களைத்தான் சாத்தான் பயன்படுத்துகிறான். யெகோவாவின் பெயரைக் களங்கப்படுத்துவதன் மூலம் அவன் அதைக் கெடுக்கிறான். அவனுடைய பொய்களை நம்புகிற மக்கள், யெகோவாவுடைய நீதியான ஆட்சியை ஒதுக்கித்தள்ளுகிறார்கள்.

தன்னுடைய பெயரை யெகோவா எப்படிப் பரிசுத்தப்படுத்துகிறார்?

13. பைபிளின் மையக் கருத்தை எசேக்கியேல் 36:23 எப்படிக் காட்டுகிறது?

13 தன் பெயர்மீது சுமத்தப்பட்ட களங்கத்தை யெகோவா கண்டும்காணாமல் விட்டுவிட்டாரா? இல்லை! ஏதேன் தோட்டத்தில் தனக்கு எதிராகச் சொல்லப்பட்ட விஷயங்கள் பொய் என்பதை நிரூபிப்பதற்காக யெகோவா என்ன செய்திருக்கிறார் என்பதைப் பற்றி முழு பைபிளிலும் சொல்லப்பட்டிருக்கிறது. (ஆதி. 3:15) அப்படியென்றால், பைபிளின் மையக் கருத்து இதுதான்: தன்னுடைய மகனால் ஆளப்படப்போகிற அரசாங்கத்தின் மூலம் யெகோவா தன்னுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவார்; நீதியையும் சமாதானத்தையும் இந்தப் பூமியில் நிலைநாட்டுவார். அதனால், பைபிளைப் படிக்கும்போது, தன்னுடைய பெயரை யெகோவா எப்படிப் பரிசுத்தப்படுத்துவார் என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.எசேக்கியேல் 36:23-ஐ வாசியுங்கள்.

14. ஏதேனில் நடந்த கலகத்தின்போது யெகோவா நடந்துகொண்ட விதம், அவருடைய பெயரை எப்படிப் பரிசுத்தப்படுத்தியது?

14 யெகோவா தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதைத் தடுக்க சாத்தான் தன்னால் முடிந்ததையெல்லாம் செய்து பார்த்துவிட்டான். ஆனால், அவனுக்கு அடிமேல் அடிதான் விழுந்திருக்கிறது. ஆனால், யெகோவா எப்படி நடந்துகொண்டார் என்பதை பைபிளிலிருந்து படிக்கும்போது, அவரைப் போல யாருமே இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கலகக்காரனான சாத்தானும் அவனுடைய கூட்டாளிகளும் செய்தது யெகோவாவின் மனதை ரொம்பவே நோகடித்திருப்பது உண்மைதான். (சங். 78:40) ஆனாலும், அவர் எல்லாவற்றையும் ஞானமாக... பொறுமையாக... நீதியாக... கையாண்டிருக்கிறார். அதோடு, தன்னுடைய சர்வ வல்லமையை ஏராளமான விதங்களில் காட்டியிருக்கிறார். மிக முக்கியமாக, அவர் செய்கிற எல்லாவற்றிலும் அவருடைய அன்பு பளிச்சிடுகிறது. (1 யோ. 4:8) தன்னுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதற்காக அவர் தொடர்ந்து உழைத்து வருகிறார்.

ஏவாளிடம் யெகோவாவைப் பற்றி சாத்தான் பொய் சொன்னான். இந்தப் பிசாசு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கடவுள்மீது களங்கத்தைச் சுமத்திக்கொண்டேதான் இருக்கிறான் (பாராக்கள் 9-10, 15) *

15. சாத்தான் இன்று எப்படிக் கடவுளுடைய பெயர்மீது களங்கத்தைச் சுமத்துகிறான், அதனால் என்ன ஏற்பட்டிருக்கிறது?

15 இன்றும் சாத்தான் யெகோவாவுடைய பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துகிறான். அவருடைய வல்லமை... நீதி... ஞானம்... அன்பு... ஆகியவற்றைப் பற்றிய சந்தேக விதைகளை மக்களின் மனதில் விதைக்கிறான். உதாரணத்துக்கு, மனிதர்களையும் மற்ற படைப்புகளையும் யெகோவா படைக்கவில்லை என்று மக்களை நம்பவைக்க முயற்சி செய்கிறான். அதையும் மீறி கடவுள் இருக்கிறார் என்று மக்கள் நம்பினால், அவர் கறாரானவர்... அவருடைய சட்டதிட்டங்கள் கெடுபிடியானவை... அநியாயமானவை... என்றெல்லாம் மக்களை நம்பவைக்கிறான். ஒருபடி மேலே போய், மக்களை நரகத்தில் போட்டு வதைக்கிற அளவுக்கு அவர் கொடுமையானவர் என்றும் மக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறான். இதையெல்லாம் நம்புகிற மக்கள் என்ன செய்கிறார்கள்? யெகோவாவின் நீதியான ஆட்சியை ஒதுக்கித்தள்ளுகிறார்கள்! சாத்தானுக்கு சமாதி கட்டும்வரை, அவன் யெகோவாவின் பெயரின் மீது களங்கத்தைச் சுமத்திக்கொண்டேதான் இருப்பான். அதுமட்டுமல்ல, உங்களையும் இரையாக்க முயற்சி செய்வான். ஆனால், அந்த முயற்சியில் அவனுக்கு வெற்றி கிடைக்குமா?

உங்களுடைய பங்கு என்ன?

16. ஆதாம் ஏவாள் செய்யத் தவறிய எந்த விஷயத்தை உங்களால் செய்ய முடியும்?

16 தன்னுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தும் வேலையில் பாவ இயல்புள்ள மனிதர்களுக்கும் யெகோவா ஒரு பங்கு கொடுத்திருக்கிறார். அதனால், ஆதாமும் ஏவாளும் செய்யத் தவறியதைச் செய்கிற வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. யெகோவாவின் பெயர்மீது களங்கத்தைச் சுமத்துகிற, நிந்திக்கிற மக்கள் இந்த உலகத்தில் அதிகமாக இருந்தாலும் யெகோவாவின் பெயருக்கு ஆதரவாகப் பேசவும் அவர் பரிசுத்தமானவர்... நீதியானவர்... நல்லவர்... அன்பானவர்... என்று மக்களுக்குச் சொல்லவும் உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. (ஏசா. 29:23) அவருடைய ஆட்சிக்கு உங்களால் ஆதரவு கொடுக்க முடியும்! அவர் ஆட்சி செய்கிற விதம்தான் சரி என்பதையும், அவரால் மட்டும்தான் எல்லா ஜீவன்களுக்கும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தர முடியும் என்பதையும் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவ முடியும்.—சங். 37:9, 37; 146:5, 6, 10.

17. இயேசு எப்படித் தன்னுடைய அப்பாவின் பெயரைத் தெரியப்படுத்தினார்?

17 யெகோவாவுடைய பெயரை ஆதரித்துப் பேசினால், நாம் இயேசுவைப் போல் நடந்துகொள்கிறோம் என்று சொல்லலாம். (யோவா. 17:26) யெகோவாவின் பெயரைப் பயன்படுத்தியதன் மூலம் மட்டுமல்ல, உண்மையிலேயே அவர் எப்படிப்பட்டவர் என்பதை கற்றுக்கொடுத்ததன் மூலமும் யெகோவாவின் பெயரை இயேசு தெரியப்படுத்தினார். உதாரணத்துக்கு, பரிசேயர்களின் முகத்திரையை அவர் கிழித்தார். அதாவது, யெகோவா கொடூரமானவர், கறாரானவர், நெருங்க முடியாதவர், இரக்கம் இல்லாதவர் என்பதுபோல் அவர்கள் மக்களை நினைக்கவைத்தார்கள். ஆனால், யெகோவா நியாயமானவர், பொறுமையானவர், அன்பானவர், மன்னிப்பவர் என்பதையெல்லாம் புரிந்துகொள்ள மக்களுக்கு இயேசு உதவினார். அதோடு, தன்னுடைய தந்தையின் குணங்களை அப்படியே காட்டியதன் மூலம், தன்னுடைய தந்தை எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவினார்.—யோவா. 14:9.

18. யெகோவாவைப் பற்றிய பொய்களும் அவதூறுகளும் தவறானவை என்பதை நாம் எப்படி நிரூபிக்கலாம்?

18 இயேசுவைப் போலவே நாமும் யெகோவாவைப் பற்றி மக்களிடம் சொல்லலாம். அப்போது, அவருடைய பெயரை அவர்கள் தெரிந்துகொள்வார்கள். பரிசுத்தமான அவருடைய பெயருக்கு மதிப்பு காட்டுவார்கள். அதோடு, யெகோவா அன்பே உருவானவர் என்பதையும் கருணையுள்ளம் படைத்தவர் என்பதையும் மக்களுக்குச் சொல்லிக்கொடுக்கலாம். அதன் மூலம் யெகோவாவின் பெயர்மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைத்தழிக்கலாம். நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தாலும், நம்மாலும் யெகோவாவைப் பின்பற்ற முடியும். (எபே. 5:1, 2) யெகோவா உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதை நம்முடைய சொல்லிலும் செயலிலும் காட்டும்போது, அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துகிறோம். அவரைப் பற்றிய தவறான எண்ணங்களைத் தங்கள் மனதிலிருந்து பிடுங்கியெறிய மக்களுக்கு உதவுவதன் மூலம் நாம் அவருடைய பெயரை ஆதரித்துப் பேசுகிறோம். பாவ இயல்புள்ள மனிதர்களான நாம் கடவுளுக்கு உண்மையோடு இருப்பதன் மூலமும் அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துகிறோம்.—யோபு 27:5.

யெகோவா கருணையுள்ளம் படைத்தவர், அன்பே உருவானவர் என்பதைப் புரிந்துகொள்ள நம்மோடு பைபிள் படிப்பவர்களுக்கு உதவ வேண்டும் (பாராக்கள் 18-19) *

19. ஏசாயா 63:7-ன்படி, பைபிளைப் பற்றி மக்களுக்குச் சொல்லித்தரும்போது எது நம்முடைய முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும்?

19 யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துவதற்கு நாம் இன்னொன்றையும் செய்யலாம். பொதுவாக, மற்றவர்களுக்கு பைபிள் சத்தியங்களைச் சொல்லித்தரும்போது, கடவுளுடைய உன்னத அரசுரிமையை, அதாவது உலகத்தை ஆட்சி செய்ய அவருக்கு இருக்கிற உரிமையை, முக்கியப்படுத்திக் காட்டுகிறோம். அப்படிச் செய்வது சரியானதுதான்! கடவுளுடைய சட்டங்களைப் பற்றிச் சொல்லித்தருகிற அதேசமயத்தில், நம் தந்தையான யெகோவாவை நேசிக்கவும், அவருக்கு உண்மையாக இருக்கவும் மக்களுக்கு உதவ வேண்டும். இதுதான் நம்முடைய முக்கியக் குறிக்கோள்! இப்படி, யெகோவா எப்படிப்பட்டவர் என்பதை முக்கியப்படுத்திக் காட்டுவதன் மூலம் அவருடைய தங்கமான குணங்களை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். (ஏசாயா 63:7-ஐ வாசியுங்கள்.) இதையெல்லாம் சொல்லித்தரும்போது, யெகோவாவை நேசிக்கவும், அவருக்குக் கீழ்ப்படியவும், மக்களுக்கு உதவ முடியும். அப்போது, அவர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க விரும்புவார்கள்.

20. அடுத்த கட்டுரையில் என்ன காத்திருக்கிறது?

20 யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துவதில் என்னவெல்லாம் அடங்கியிருக்கின்றன என்று இதுவரை பார்த்தோம். அப்படியென்றால், இப்போது ஒரு கேள்வி: யெகோவாவைப் பற்றிய நல்ல எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்கும் விதத்தில் நாம் எப்படி நடந்துகொள்ளலாம், எப்படிக் கற்றுக்கொடுக்கலாம்? இதற்கான பதில், அடுத்த கட்டுரையில் காத்திருக்கிறது!

பாட்டு 138 யெகோவா என்பதே உங்கள் பெயர்

^ பாரா. 5 மனிதர்களுக்கும் தேவதூதர்களுக்கும் முன்னால் இருக்கிற முக்கியமான விஷயம் எது? அதை ஏன் மிக முக்கியமான விஷயம் என்று சொல்கிறோம், நமக்கு அதில் என்ன பங்கு இருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கும் இவற்றோடு சம்பந்தப்பட்ட மற்ற கேள்விகளுக்கும் பதில் தெரிந்துகொள்ளும்போது, யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள முடியும்.

^ பாரா. 61 படங்களின் விளக்கம்: கடவுள் பொய் சொல்லியிருக்கிறார் என்று ஏவாளிடம் சொன்னதன் மூலம் கடவுள்மீது பிசாசு களங்கத்தைச் சுமத்தினான். கடவுள் கொடூரமானவர், மனிதர்களை அவர் படைக்கவில்லை போன்ற பொய்களை சாத்தான் நூற்றுக்கணக்கான வருஷங்களாகப் பரப்பிவந்திருக்கிறான்.

^ பாரா. 63 படங்களின் விளக்கம்: ஒரு சகோதரர் பைபிள் படிப்பு நடத்துகிறார். அப்போது, கடவுளின் குணங்களை முக்கியப்படுத்திக் காட்டுகிறார்.