Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 24

“உங்கள் பெயருக்குப் பயந்து நடக்கும்படி என் இதயத்தை ஒருமுகப்படுத்துங்கள்”

“உங்கள் பெயருக்குப் பயந்து நடக்கும்படி என் இதயத்தை ஒருமுகப்படுத்துங்கள்”

“உங்கள் பெயருக்குப் பயந்து நடக்கும்படி என் இதயத்தை ஒருமுகப்படுத்துங்கள். என் கடவுளாகிய யெகோவாவே, முழு இதயத்தோடு உங்களைப் புகழ்கிறேன்.”சங். 86:11, 12.

பாட்டு 23 யெகோவாவே எம் பலம்

இந்தக் கட்டுரையில்... *

1. கடவுளுக்குப் பயந்து நடப்பது என்றால் என்ன, யெகோவாமீது அன்பு வைத்திருப்பவர்கள் அப்படிப் பயந்து நடப்பது ஏன் முக்கியம்?

கடவுள்மீது கிறிஸ்தவர்கள் அன்பு வைத்திருக்கிறார்கள். அதேசமயத்தில் அவருக்குப் பயந்தும் நடக்கிறார்கள். இந்த இரண்டும் முரண்பாடான விஷயங்கள்போல் சிலருக்குப் படலாம். ஆனால், பயம் என்று நாம் சொல்வது, பயந்து நடுங்குவதைப் பற்றி அல்ல. இது வேறு விதமான பயம்! அதாவது, கடவுள்மீது ஆழ்ந்த பயபக்தியையும் மரியாதையையும் காட்டுவதைப் பற்றி நாம் பேசுகிறோம். இப்படிப்பட்ட பயத்தைக் காட்டுபவர்கள், தங்கள் பரலோகத் தந்தையின் மனதை நோகடிக்க விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், தங்களுக்கும் அவருக்கும் இருக்கிற பந்தத்தில் எந்த விரிசலும் வரக் கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள்.—சங். 111:10; நீதி. 8:13.

2. சங்கீதம் 86:11-ன் அடிப்படையில், என்ன இரண்டு விஷயங்களைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

2 சங்கீதம் 86:11-ல் இருக்கிற வார்த்தைகளைப் படிக்கும்போது, யெகோவாமீது ஆழ்ந்த பயபக்தி காட்டுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி தாவீது ராஜா தெரிந்துவைத்திருந்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. (வாசியுங்கள்.) ஜெபத்தில் தாவீது சொன்ன வார்த்தைகளின்படி நாம் எப்படி நடந்துகொள்ளலாம் என்று இப்போது பார்க்கப்போகிறோம். முதலில், கடவுளுடைய பெயருக்கு நாம் ஏன் ஆழ்ந்த பயபக்தி காட்ட வேண்டும் என்று பார்க்கலாம். பிறகு, கடவுளுடைய பெயர்மீது இருக்கும் ஆழ்ந்த பயபக்தியை ஒவ்வொரு நாளும் எப்படிக் காட்டலாம் என்று பார்க்கலாம்.

யெகோவாவின் பெயருக்கு ஏன் ஆழ்ந்த பயபக்தி காட்ட வேண்டும்?

3. கடவுளுடைய பெயருக்கு ஆழ்ந்த பயபக்தியைத் தொடர்ந்து காட்டுவதற்கு எந்த அனுபவம் மோசேக்கு உதவியிருக்கலாம்?

3 இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: யெகோவாவின் மகிமை தன்னைக் கடந்து போவதை பாறை இடுக்கில் பதுங்கியபடி மோசே பார்க்கிறார். அப்போது அவருக்கு எப்படி இருந்திருக்கும்! அதுவரை எந்த மனிதனும் பார்க்காத அற்புதமான ஒரு காட்சியாக அது இருந்திருக்கும்!! இப்போது மோசேயின் காதில் இந்த வார்த்தைகள் விழுகின்றன: “யெகோவா, யெகோவா, இரக்கமும் கரிசனையும் உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர், உண்மையுள்ளவர், ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்கு மாறாத அன்பைக் காட்டுபவர், குற்றத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிப்பவர்.” (யாத். 33:17-23; 34:5-7) இந்த வார்த்தைகள் தேவதூதர் மூலம் சொல்லப்பட்டிருக்கலாம்! மோசேயுடைய வாழ்நாளின் மீதி காலத்தில், யெகோவாவின் பெயரை அவர் பயன்படுத்தியபோது இந்த அற்புதமான அனுபவம் அவர் மனதுக்குள் வந்துபோயிருக்கலாம். அப்படியென்றால், “மகா அற்புதமான பெயருக்குப் பயப்படுங்கள்” என்று பிற்பாடு அவர் கடவுளுடைய மக்களை எச்சரித்ததில் ஏதாவது ஆச்சரியம் இருக்கிறதா?—உபா. 28:58.

4. யெகோவாமீது ஆழ்ந்த பயபக்தி ஏற்படுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

4 யெகோவா என்ற பெயரைப் பற்றி யோசிக்கும்போது, அந்தப் பெயருக்குச் சொந்தக்காரர் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றியும் யோசிக்க வேண்டும். அவருடைய வல்லமை, ஞானம், நீதி, அன்பு போன்ற குணங்களைப் பற்றி யோசித்துப்பார்க்க வேண்டும். இவற்றையும் அவருடைய மற்ற குணங்களையும் பற்றி யோசிக்கும்போது, அவர்மேல் ஆழ்ந்த பயபக்தி ஏற்படும்.—சங். 77:11-15.

5-6. (அ) கடவுளுடைய பெயரின் அர்த்தம் என்ன? (ஆ) யாத்திராகமம் 3:13, 14 மற்றும் ஏசாயா 64:8-ன்படி, தான் நினைத்ததை யெகோவா எப்படிச் செய்துமுடிக்கிறார்?

5 “ஆகும்படி செய்கிறவர்” என்பதுதான் யெகோவா என்ற பெயருக்கான அர்த்தமாக இருக்க வேண்டுமென்று நிறைய அறிஞர்கள் சொல்கிறார்கள். “ஆகும்படி செய்கிறவர்” என்றால், தான் நினைத்ததை முடித்தே தீருவார் என்றும், அதைத் தடுக்கிற சக்தி எதற்கும் யாருக்கும் கிடையாது என்றும் அர்த்தம்.

6 தான் நினைத்ததைச் செய்வதற்கு எப்படியெல்லாம் ஆக வேண்டுமோ அப்படியெல்லாம் யெகோவா ஆகிறார். (யாத்திராகமம் 3:13, 14-ஐ வாசியுங்கள்.) இந்த விஷயத்தைப் பற்றி ஆழமாக யோசித்துப்பார்க்கும்படி அடிக்கடி நம்முடைய பிரசுரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, தனக்குச் சேவை செய்யவும், தான் நினைத்ததைச் செய்யவும் தன்னுடைய ஊழியர்களை எப்படியெல்லாம் ஆக்க வேண்டுமோ அப்படியெல்லாம் ஆக்கவும் யெகோவாவால் முடியும். (ஏசாயா 64:8-ஐ வாசியுங்கள்.) இப்படி, தன்னுடைய விருப்பத்தை யெகோவா நிறைவேற்றுகிறார். அதைத் தடுக்கிற சக்தி யாருக்கும் எதற்கும் கிடையாது.—ஏசா. 46:10, 11.

7. நம்முடைய பரலோகத் தந்தையின் மீது வைத்திருக்கிற மதிப்புமரியாதையை நாம் எப்படி இன்னும் அதிகமாக வளர்த்துக்கொள்ளலாம்?

7 நம்முடைய பரலோகத் தந்தை நமக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதையும், சில விஷயங்களைச் செய்வதற்கு நமக்கு எப்படிப் பலம் கொடுத்திருக்கிறார் என்பதையும் ஆழமாக யோசித்துப்பார்க்கும்போது, நம் இதயம் நன்றியால் பொங்கும். உதாரணத்துக்கு, அழகு கொஞ்சும் படைப்புகளைப் பற்றி ஆழமாக யோசித்துப்பார்க்கும்போது நாம் அப்படியே பிரமித்துப்போகிறோம்! நம் மனம் முழுவதும் நன்றியால் நிரம்புகிறது. (சங். 8:3, 4) அதோடு, அவருடைய விருப்பத்தைச் செய்வதற்கான பலத்தை அவர் நமக்குத் தந்திருப்பதைப் பற்றி ஆழமாக யோசித்துப்பார்க்கும்போது அவர்மீது ஆழ்ந்த பயபக்தி ஏற்படுகிறது. அப்படியென்றால், யெகோவா என்ற பெயர் உண்மையிலேயே பயபக்திக்குரியது! யெகோவாவுடைய சுபாவத்தின் எல்லா அம்சங்களும், இதுவரை அவர் செய்திருக்கிற, இனிமேல் செய்யப்போகிற எல்லா விஷயங்களும் அந்தப் பெயரில் பொதிந்திருக்கின்றன.—சங். 89:7, 8.

“யெகோவாவின் பெயரை நான் புகழ்வேன்”

மோசே கற்றுக்கொடுத்தது ஜனங்களுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. யெகோவாவின் பெயரையும், அவர் எப்படிப்பட்டவர் என்பதையும் அவர் முக்கியப்படுத்திக் காட்டினார் (பாரா 8) *

8. தன்னுடைய பெயரைப் பயன்படுத்துவதைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்பதை உபாகமம் 32:2, 3 எப்படிக் காட்டுகிறது?

8 வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் இஸ்ரவேலர்கள் போவதற்குக் கொஞ்சம் முன்பு, ஒரு பாடலை யெகோவா மோசேக்குச் சொல்லிக்கொடுத்தார். (உபா. 31:19) மோசே அந்தப் பாடலை ஜனங்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டியிருந்தது. உபாகமம் 32:2, 3-ல் இருக்கிற அந்தப் பாடலை ஆழமாக யோசித்துப்பார்க்கும்போது, ஒரு விஷயம் தெளிவாகிறது. (வாசியுங்கள்.) அதாவது, உச்சரிக்கக் கூடாதளவுக்கு தன்னுடைய பெயர் பரிசுத்தமானதென்றும், அது மறைபொருளாக இருக்க வேண்டுமென்றும் யெகோவா நினைக்கவில்லை என்பது தெளிவாகிறது. எல்லாருக்கும் தன்னுடைய பெயர் தெரிய வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார்! யெகோவாவைப் பற்றியும் அவருடைய மகத்துவமான பெயரைப் பற்றியும் மோசேயிடமிருந்து கற்றுக்கொண்டது, இஸ்ரவேலர்களுக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட பாக்கியம்! பயிர்களுக்கு மழைச்சாரல் புத்துயிரளிப்பது போல, மோசே கற்றுக்கொடுத்தது இஸ்ரவேலர்களுக்குப் புத்துயிரளித்தது. அப்படியென்றால், நாமும் அப்படிக் கற்றுக்கொடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

9. யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்த நாம் எப்படி உதவலாம்?

9 வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போதும் பொது ஊழியம் செய்யும்போதும், கடவுளுடைய பெயர் யெகோவா என்பதை பைபிளிலிருந்து நாம் காட்டலாம். யெகோவாவை மகிமைப்படுத்துகிற அருமையான பிரசுரங்களையும், மனதைக் கொள்ளை கொள்கிற வீடியோக்களையும், நம் வெப்சைட்டில் இருக்கிற விஷயங்களையும் காட்டலாம். வேலை செய்யும் இடத்திலும், பள்ளியிலும், பயணம் செய்யும்போதும், நம் அன்பு அப்பா யெகோவாவைப் பற்றியும் அவருடைய அருமை பெருமைகளைப் பற்றியும் நாம் சொல்லலாம். எதிர்காலத்தில் யெகோவா நமக்குச் செய்யப்போகிற அற்புதமான விஷயங்களைப் பற்றியும், இந்தப் பூமியில் அவர் செய்யப்போகிற மாற்றங்களைப் பற்றியும் மற்றவர்களிடம் சொல்லும்போது, யெகோவா தங்களை எந்தளவு நேசிக்கிறார் என்பதை வாழ்க்கையில் முதன்முறையாக அவர்கள் தெரிந்துகொள்வார்கள். இப்படி, நம் அன்பு அப்பாவைப் பற்றிய உண்மைகளை மற்றவர்களிடம் சொல்லும்போது, அவருடைய பெயரை நாம் பரிசுத்தப்படுத்துகிறோம். யெகோவாவைப் பற்றித் தங்களுக்குத் தவறான விஷயங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டிருப்பதைப் புரிந்துகொள்ள மக்களுக்கு நாம் உதவுகிறோம். புத்துயிரளிக்கிற பைபிள் சத்தியத்தை நாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறோம்.—ஏசா. 65:13, 14.

10. பைபிள் படிப்பு நடத்தும்போது, கடவுளுடைய சட்டங்களைக் கற்றுக்கொடுத்தால் மட்டும் போதுமா? விளக்குங்கள்.

10 நாம் மற்றவர்களுக்கு பைபிள் படிப்பு எடுக்கும்போது, யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், அவருடைய பெயரைப் பயன்படுத்தவும் அவர்களுக்கு உதவுகிறோம். யெகோவா என்ற பெயரில் என்ன பொதிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு அவர்களுக்கு உதவுகிறோம். அப்படியென்றால், பைபிளிலிருக்கிற கட்டளைகளையும், நெறிமுறைகளையும், சட்டங்களையும் மட்டுமே சொல்லிக்கொடுத்தால் போதுமா? ஒருவேளை இதை மட்டுமே செய்தால், நன்றாகப் படிக்கிற பைபிள் மாணவர் கடவுளுடைய சட்டங்களைக் கற்றுக்கொள்ளலாம், அதை உயர்வாக மதிக்கலாம். ஆனால், யெகோவாமேல் அவருக்கு அன்பு வளருமா, அவருக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற ஆசை வருமா? ஆதாம் ஏவாளைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவர்களுக்கும் கடவுளுடைய சட்டங்களைப் பற்றித் தெரிந்திருந்தது. ஆனால், அவர்கள் யெகோவாவை உண்மையிலேயே நேசித்தார்களா? இல்லையே! (ஆதி. 3:1-6) அதனால், பைபிள் மாணவர்களுக்கு கடவுளுடைய சட்டங்களைக் கற்றுக்கொடுத்தால் மட்டும் போதாது.

11. கடவுளுடைய சட்டங்களையும் நெறிமுறைகளையும் பைபிள் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும்போது, அவற்றைக் கொடுத்தவர்மேல் அன்பை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு எப்படி உதவலாம்?

11 யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கிற விஷயங்களும், அவருடைய நெறிமுறைகளும் எப்போதுமே நமக்கு நன்மையைத்தான் தரும். (சங். 119:97, 111, 112) ஆனால், இந்த விஷயத்தை பைபிள் மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அந்தச் சட்டங்களுக்குப் பின்னால் இருக்கிற யெகோவாவின் அன்பைப் புரிந்துகொள்ள வேண்டும். அதனால், “ஒரு விஷயத்த செய்யுங்கனும் இன்னொரு விஷயத்த செய்யாதீங்கனும் கடவுள் ஏன் சொல்றாருனு நினைக்கிறீங்க? யெகோவாவ பத்தி இது என்ன காட்டுது?” என்று அவர்களிடம் கேட்கலாம். யெகோவாவைப் பற்றி யோசிக்கவும், அவருடைய மகத்துவமான பெயர்மீது அன்பை வளர்த்துக்கொள்ளவும் பைபிள் மாணவர்களுக்கு உதவும்போது, அவர்களுடைய மனதை நம்மால் தொட முடியும். அப்போது, சட்டங்களை மட்டுமல்ல, சட்டங்களைக் கொடுத்தவரையும் அவர்கள் நேசிக்க ஆரம்பிப்பார்கள். (சங். 119:68) அவர்களுடைய விசுவாசம் பலமாகும், எப்பேர்ப்பட்ட சோதனைத் தீ தாக்கினாலும் அதைத் தாக்குப்பிடிப்பார்கள்.—1 கொ. 3:12-15.

“யெகோவாவின் வழியில் . . . நடப்போம்”

தாவீது ஒருதடவை தன்னுடைய இதயம் இரண்டுபடும்படி விட்டுவிட்டார் (பாரா 12)

12. ஒருதடவை தாவீது எப்படித் தன்னுடைய இதயத்தை ஒருமுகப்படுத்தத் தவறினார், அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் என்ன?

12 சங்கீதம் 86:11-ல் “என் இதயத்தை ஒருமுகப்படுத்துங்கள்” என்று தாவீது எழுதிய வார்த்தைகளும் மிக முக்கியமானவை. எவ்வளவு எளிதில் நம்முடைய இதயம் பிளவுபட்டுவிடும் என்பதைத் தன்னுடைய வாழ்க்கையில் தாவீது உணர்ந்திருக்கிறார். ஒருதடவை, அரண்மனை மேல்மாடியில் நடந்துகொண்டிருந்தபோது இன்னொருவரின் மனைவி குளித்துக்கொண்டிருந்ததை அவர் பார்த்துவிட்டார். அந்தச் சமயத்தில் அவருடைய இதயம் ஒருமுகப்படுத்தப்பட்டிருந்ததா அல்லது பிளவுபட்டிருந்ததா? “நீங்கள் . . . அடுத்தவனுடைய மனைவியை . . .  அடையத் துடிக்கக் கூடாது” என்று கடவுள் கொடுத்த கட்டளையைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். (யாத். 20:17) அப்படியிருந்தும், அந்தப் பெண்ணை அவர் பார்த்துக்கொண்டே இருந்தார். ஒருபக்கம் பத்சேபாளை அடைய வேண்டுமென்ற ஆசையாலும், இன்னொரு பக்கம் யெகோவாவுக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டுமென்ற ஆசையாலும் அவருடைய இதயம் பிளவுபட்டுவிட்டது. நிறைய வருஷங்களாக அவர் யெகோவாமீது அன்பையும் பயபக்தியையும் வளர்த்திருந்தபோதும், தன்னுடைய ஆசைக்கு அடிபணிந்துவிட்டார். அதனால், மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டார். இப்படி, யெகோவாவின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தினார். அதோடு, ஒரு பாவமும் அறியாத தன்னுடைய குடும்பத்தாரும் மற்ற ஜனங்களும் மோசமான விளைவுகளைச் சந்திப்பதற்குக் காரணமாகிவிட்டார்.—2 சா. 11:1-5, 14-17; 12:7-12.

13. தாவீது மறுபடியும் தன்னுடைய இதயத்தை ஒருமுகப்படுத்தினார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?

13 யெகோவா கொடுத்த கண்டிப்பை ஏற்றுக்கொண்டதால், அவரோடு இருக்கிற பந்தத்தில் ஏற்பட்ட விரிசலை தாவீதால் சரிசெய்ய முடிந்தது. (2 சா. 12:13; சங். 51:2-4, 17). தன்னுடைய இதயம் இரண்டுபடுவதற்கு விட்டுவிட்டதால் ஏற்பட்ட வேதனைகள் அவருடைய மனதில் ஆழமாகப் பதிந்திருந்தன. அதனால்தான், சங்கீதம் 86:11-ல் இருக்கிற வார்த்தைகளை அவர் எழுதினார். “இரண்டுபடாத இதயத்தை எனக்குக் கொடுங்கள்” என்றும் அதை மொழிபெயர்க்கலாம். அவருடைய இதயத்தை இரண்டுபடாமல் பார்த்துக்கொள்வதற்கு யெகோவா அவருக்கு உதவினாரா? நிச்சயமாக! இது நமக்கு எப்படித் தெரியும்? பிற்பாடு தாவீதைப் பற்றி யெகோவா இப்படிச் சொன்னார்: ‘தாவீது . . . தன் கடவுளான யெகோவாவை முழு இதயத்தோடு வணங்கினார்.’—1 ரா. 11:4; 15:3.

14. நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி என்ன, ஏன்?

14 உற்சாகம்... எச்சரிக்கை... இவை இரண்டையும் தாவீதின் அனுபவம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. அவர் ஒரு பெரிய பாவக்குழியில் விழுந்தது இன்று நமக்கு எச்சரிக்கை மணியாக இருக்கிறது. நாம் சமீபத்தில் யெகோவாவுக்குச் சேவை செய்ய ஆரம்பித்திருந்தாலும் சரி, நிறைய வருஷங்களாகச் சேவை செய்துவந்திருந்தாலும் சரி, நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இதுதான்: ‘என் இதயத்த ரெண்டாக்குறதுக்கு சாத்தான் எடுக்குற முயற்சிகள நான் தவிடுபொடியாக்குறேனா?’

உங்கள் இதயத்தை இரண்டுபடுத்த சாத்தான் என்ன வேண்டுமானாலும் செய்வான். அவனுக்கு இடம்கொடுத்துவிடாதீர்கள்! (பாராக்கள் 15-16) *

15. சபலத்தைத் தூண்டுகிற படங்கள் நம் கண்ணில்படும்போது, கடவுள் பயம் நம்மை எப்படிப் பாதுகாக்கும்?

15 உதாரணத்துக்கு, நீங்கள் டிவி பார்க்கிறீர்கள் அல்லது இன்டர்நெட்டை அலசுகிறீர்கள். அப்போது, உங்கள் கண்ணில் படுகிற படம் சபலத்தைத் தூண்டலாம். இப்போது என்ன செய்வீர்கள்? ‘அது ஒண்ணும் ஆபாச படம் இல்லையே’ என்று உங்களுக்கு நீங்களே நியாயப்படுத்திக்கொள்வது சுலபம். ஆனால், உங்கள் இதயத்தை இரண்டாக்க சாத்தான் எடுக்கும் முயற்சியாக அது இருக்கலாம், இல்லையா? (2 கொ. 2:11) அந்தப் படத்தை, ஒரு பெரிய மரக்கட்டையைப் பிளப்பதற்கு பயன்படுத்தப்படும் ஆப்புக்கு ஒப்பிடலாம். மரத்தைப் பிளப்பவர், முதலில் அந்த ஆப்பை மரக்கட்டையில் வைத்து மெதுவாக அடிப்பார். பிறகு, அதை இன்னும் வேகமாக, ஆழமாக அடிப்பார். அப்போது, அந்த மரக்கட்டை இரண்டாகப் பிளந்துவிடும். அப்படியென்றால், சபலத்தைத் தூண்டுகிற படங்கள் அந்த ஆப்பைப் போல் இருக்கலாம், இல்லையா? அந்த ஆப்பு எப்படி ஆரம்பத்தில் மரக்கட்டையை அவ்வளவாகப் பிளப்பதில்லையோ, அதேபோல் சபலத்தைத் தூண்டுகிற படங்களும் ஆரம்பத்தில் ஆபத்தில்லாதவை போல் தோன்றலாம். ஆனால், ஆப்பு மரக்கட்டைக்குள் போகப் போக அந்த மரக்கட்டை எப்படி இரண்டாகப் பிளக்கிறதோ, அதேபோல் மோசமான படங்கள் ஒருவருடைய மனதுக்குள் போகப் போக அது அவருடைய இதயத்தைப் பிளந்துவிடும்; அவருடைய உத்தமத்தை முறித்துவிடும். அதனால், மோசமான எதுவும் உள்ளே போகாதபடி உங்கள் இதயத்துக்குத் தாழ்ப்பாள் போடுங்கள். அப்போதுதான், யெகோவாவின் பெயருக்குப் பயந்து நடக்கும் விதத்தில் உங்கள் இதயத்தை ஒருமுகப்படுத்த முடியும்.

16. தவறு செய்வதற்கு மனம் அலைபாயும்போது நீங்கள் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

16 சபலத்தைத் தூண்டுகிற படங்களைத் தவிர மற்ற வலைகளையும் சாத்தான் நம் முன்னால் விரிக்கிறான். அப்போது நாம் என்ன செய்வோம்? அந்த வலைகளில் சிக்கிவிட மாட்டோம் என்று நாம் நினைக்கலாம். ஒருவேளை, ‘சபைநீக்கம் செய்ற அளவுக்கு இது ஒண்ணும் மோசமான பாவம் இல்ல’ என்று நாம் நினைக்கலாம். ஆனால், அந்த நினைப்பு ரொம்பத் தவறானது. அதனால், நம்மை இப்படிக் கேட்டுக்கொள்வது எப்போதுமே நல்லது: ‘இந்த சபலத்த பயன்படுத்தி என்னோட இதயத்த பிளக்க சாத்தான் முயற்சி பண்றானா? இதுக்கு அடிபணிஞ்சிட்டா யெகோவாவோட பேருக்கு நான் களங்கத்த கொண்டுவந்திடுவேனா? இத செஞ்சா யெகோவாகிட்ட நெருங்கிவருவேனா இல்ல ரொம்ப தூரமா தள்ளி போயிடுவேனா?’ இந்தக் கேள்விகளை ஆழமாக யோசியுங்கள். உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாமல் இருக்கவும், இந்தக் கேள்விகளுக்கு நேர்மையாகப் பதில் சொல்லவும் ஞானத்தைக் கேட்டு ஜெபம் செய்யுங்கள். (யாக். 1:5) இப்படிச் செய்தால், உண்மையிலேயே பாதுகாக்கப்படுவீர்கள். இயேசு எப்படி “அப்பாலே போ சாத்தானே!” என்று சொன்னாரோ, அதேபோல் உங்களாலும் சபலங்களை உறுதியாக உதறித்தள்ள முடியும்.—மத். 4:10.

17. பிளவுபட்ட இதயத்தால் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா? விளக்குங்கள்.

17 பிளவுபட்ட இதயத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இதைக் கற்பனை செய்துபாருங்கள்: ஒரு விளையாட்டு அணியில் இருக்கிற வீரர்கள், ஒருவரோடு ஒருவர் நன்றாகப் பழகுவதில்லை. சிலர், தங்களுக்கு மட்டும் புகழ் கிடைக்க வேண்டுமென்று நினைக்கிறார்கள். சிலர், சட்டங்களை மீறுகிறார்கள். இன்னும் சிலர், பயிற்சியாளரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இப்படிப்பட்ட ஒரு அணிக்கு வெற்றிக் கோப்பை கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால், அந்த அணி ஒற்றுமையாக இருந்தால்? வெற்றிக் கோப்பையைத் தட்டிச் செல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது! இப்போது, உங்கள் இதயத்தைப் பற்றிப் பார்க்கலாம். உங்கள் எண்ணங்கள், ஆசைகள், உணர்வுகள் ஆகியவை ஒன்றோடொன்று இசைந்திருக்கும்போதும், யெகோவாவின் நெறிமுறைகளுக்குத் தகுந்தபடி இருக்கும்போதும் உங்கள் இதயம் அந்த ஒற்றுமையான அணியைப் போல் இருக்கும். உங்கள் இதயத்தை எப்படியாவது இரண்டுபடுத்த சாத்தான் காத்துக்கொண்டிருக்கிறான். உங்கள் எண்ணங்கள், ஆசைகள், உணர்வுகள் எல்லாம் ஏறுக்குமாறாக, யெகோவாவின் நெறிமுறைகளுக்கு முரணாக இருக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய ஆசை! ஆனால், யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டுமென்றால், உங்கள் இதயம் முழுமையானதாக இருக்க வேண்டும். (மத். 22:36-38) உங்கள் இதயத்தைக் கூறுபோட ஒருபோதும் சாத்தானுக்கு இடம்கொடுத்துவிடாதீர்கள்!

18. மீகா 4:5 சொல்கிறபடி நீங்கள் என்ன செய்யத் தீர்மானமாக இருக்கிறீர்கள்?

18 “உங்கள் பெயருக்குப் பயந்து நடக்கும்படி என் இதயத்தை ஒருமுகப்படுத்துங்கள்” என்று ஜெபம் செய்த தாவீதைப் போல் நீங்களும் ஜெபம் செய்யுங்கள். ஜெபம் செய்தததற்குத் தகுந்தபடி வாழ உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள், யெகோவாவின் பரிசுத்தப் பெயர்மீது உங்களுக்கு இருக்கும் பயபக்தியைக் காட்டும் விதத்தில் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அவை சிறியவையாக இருந்தாலும் சரி, பெரியவையாக இருந்தாலும் சரி! இப்படியெல்லாம் செய்தால், யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயருக்குத் தகுந்தபடி நீங்கள் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். (நீதி. 27:11) அதோடு, “நாம் நம்முடைய கடவுளாகிய யெகோவாவின் வழியில் என்றென்றும் நடப்போம்” என்று சொன்ன மீகா தீர்க்கதரிசியைப் போலவே நம்மாலும் சொல்ல முடியும்.—மீ. 4:5.

பாட்டு 56 யெகோவாவே, கேளும் என் ஜெபம்

^ பாரா. 5 சங்கீதம் 86:11, 12-ல் தாவீது செய்த ஜெபத்தின் ஒரு பகுதியைப் பற்றி இந்தக் கட்டுரையில் விளக்கப்பட்டிருக்கிறது. யெகோவாவின் பெயருக்குப் பயந்து நடப்பது என்றால் என்ன? நாம் ஏன் யெகோவாவின் பெயருக்குப் பயந்து நடக்க வேண்டும்? யெகோவாவுக்குப் பயந்து நடக்கும்போது, தவறு செய்வதற்கான தூண்டுதலிலிருந்து நாம் எப்படிப் பாதுகாக்கப்படுவோம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இதில் பார்ப்போம்.

^ பாரா. 53 படங்களின் விளக்கம்: யெகோவாவைப் புகழ்கிற பாடலை கடவுளுடைய ஜனங்களுக்கு மோசே சொல்லிக்கொடுக்கிறார்.

^ பாரா. 57 படங்களின் விளக்கம்: தவறான ஆசைகளை ஏவாள் ஒதுக்கித்தள்ளவில்லை. ஆனால் நாம், கெட்ட ஆசைகளைத் தூண்டுகிற, யெகோவாவின் பெயருக்குக் களங்கத்தைக் கொண்டுவருகிற படங்களையும் தகவல்களையும் ஒதுக்கித்தள்ளுகிறோம்.