Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

கலாத்தியர் 5:22, 23-ல் சொல்லியிருக்கிற குணங்கள் மட்டும்தான் ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களா’?

கலாத்தியர் 5:22, 23 கடவுளுடைய சக்தியால் உண்டாகிற ஒன்பது குணங்களைப் பட்டியல் போடுகிறது. அவை: “அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, கருணை, நல்மனம், விசுவாசம், சாந்தம், சுயக்கட்டுப்பாடு.” அப்படியென்றால், கடவுளுடைய சக்தியால் உண்டாகிற இந்த ஒன்பது குணங்களை மட்டும்தான் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு நாம் வர வேண்டியதில்லை.

இந்த வசனங்களுக்கு முந்தின வசனங்களில் அப்போஸ்தலன் பவுல் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். “பாவ இயல்புக்குரிய செயல்கள் . . . பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, வெட்கங்கெட்ட நடத்தை, சிலை வழிபாடு, ஆவியுலகத் தொடர்பு, பகை, சண்டை சச்சரவு, பொறாமை, கோப வெறி, கருத்துவேறுபாடு, பிரிவினை, மதப்பிரிவு, மற்றவர்களைப் பார்த்து வயிறெரிதல், குடிவெறி, குடித்துக் கும்மாளம் போடுதல் போன்றவையாகும்.” (கலா. 5:19-21) “போன்றவையாகும்” என்று பவுல் எழுதியிருப்பதால், ‘பாவ இயல்புக்குரிய செயல்களில்’ அடங்குகிற மற்ற குணங்களை அவர் இந்தப் பட்டியலில் குறிப்பிடவில்லை என்று தெரிகிறது. உதாரணத்துக்கு, கொலோசெயர் 3:5-ல் ‘பாவ இயல்புக்குரிய செயல்களில்’ அடங்குகிற வேறுசில குணங்களையும் சொல்லியிருக்கிறார். அதேபோல், கலாத்தியர் 5:22, 23-ல் ஒன்பது குணங்களைப் பற்றிச் சொல்லிவிட்டு, கடைசியில் “இப்படிப்பட்டவற்றுக்கு * எதிராக எந்தவொரு சட்டமும் இல்லை” என்று சொன்னார். இதிலிருந்து என்ன தெரிகிறது? கடவுளுடைய சக்தியின் உதவியோடு வளர்த்துக்கொள்ள முடிகிற எல்லா குணங்களையும் பவுல் இங்கே பட்டியல் போடவில்லை என்பது தெரிகிறது.

இதை நன்றாகப் புரிந்துகொள்ள, எபேசு சபைக்கு பவுல் என்ன எழுதினார் என்று கவனியுங்கள். “எல்லா விதமான நல்ல குணமும் நீதியும் நேர்மையும் ஒளியின் கனிகளாக இருக்கின்றன” என்று அவர் சொன்னார். (எபே. 5:8, 9, அடிக்குறிப்பு) இதிலிருந்து என்ன தெரிகிறது? நீதியோடும் நேர்மையோடும் சேர்த்து நல்ல குணமும், அதாவது நல்மனமும், ‘ஒளியின் கனிகளில்’ ஒன்றாக இருக்கிறது. இந்த நல்மனம் ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களில்’ ஒன்றாகவும் இருக்கிறது.

தீமோத்தேயுவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் என்ன சொன்னார் என்றும் கவனியுங்கள். “நீதி, கடவுள்பக்தி, விசுவாசம், அன்பு, சகிப்புத்தன்மை, சாந்தம் ஆகியவற்றையே நாடு” என்று அவரைக் கேட்டுக்கொண்டார். (1 தீ. 6:11) மொத்தம் ஆறு குணங்களைப் பற்றி பவுல் சொன்னார். அவற்றில் மூன்று குணங்கள்தான், அதாவது விசுவாசம், அன்பு, சாந்தம் ஆகிய குணங்கள்தான், ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களின்’ பட்டியலில் இருக்கின்றன. அப்படியென்றால், பவுல் சொன்ன மற்ற குணங்களான நீதி, கடவுள்பக்தி, சகிப்புத்தன்மை ஆகியவற்றை வளர்த்துக்கொள்வதற்கும் கடவுளுடைய சக்தியின் உதவி தீமோத்தேயுவுக்குத் தேவைப்பட்டிருக்கும், இல்லையா?—கொலோசெயர் 3:12-ஐ ஒப்பிடுங்கள்; 2 பேதுரு 1:5-7.

இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது, கடவுளுடைய சக்தியால் உண்டாகிற எல்லா குணங்களையும் கலாத்தியர் 5:22, 23 பட்டியல் போடவில்லை என்பது தெரிகிறது. இந்த வசனத்தில் சொல்லப்பட்ட ஒன்பது குணங்களை வளர்த்துக்கொள்ள கடவுளுடைய சக்தி நமக்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக வளருவதற்கும், ‘கடவுளுடைய விருப்பத்தின்படி, உண்மையான நீதிக்கும் உண்மைத்தன்மைக்கும் ஏற்றபடி உருவாக்கப்பட்ட புதிய சுபாவத்தை அணிந்துகொள்வதற்கும்’ நாம் இன்னும் நிறைய குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.—எபே. 4:24.

^ பாரா. 4 கிரேக்க மொழியில், “இப்படிப்பட்டவற்றுக்கு” என்ற வார்த்தைக்கு “இதுபோன்றவற்றுக்கு” என்ற அர்த்தமும் இருக்கிறது.