Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 29

“நான் பலவீனமாக இருக்கும்போது பலமுள்ளவனாக இருக்கிறேன்”

“நான் பலவீனமாக இருக்கும்போது பலமுள்ளவனாக இருக்கிறேன்”

“எனக்கு ஏற்படுகிற பலவீனங்கள், அவமானங்கள், நெருக்கடிகள், துன்புறுத்தல்கள், கஷ்டங்கள் ஆகியவற்றை கிறிஸ்துவுக்காகச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்கிறேன்.”—2 கொ. 12:10.

பாட்டு 60 அவர் உன்னைப் பலப்படுத்துவார்

இந்தக் கட்டுரையில்... *

1. தன்னைப் பற்றி பவுல் வெளிப்படையாக என்ன சொன்னார்?

சிலசமயங்களில், தான் பலவீனமாக உணர்ந்ததை அப்போஸ்தலன் பவுல் வெளிப்படையாக ஒத்துக்கொண்டார். அவருடைய உடல் ‘அழிந்துவருவதாகவும்,’ சரியானதைச் செய்ய போராட வேண்டியிருப்பதாகவும் சொன்னார். எல்லா சமயத்திலும் தன்னுடைய ஜெபங்களுக்கு தான் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை என்பதாகவும் சொன்னார். (2 கொ. 4:16; 12:7-9; ரோ. 7:21-23) அவரைப் பலவீனமானவன் * என்று அவருடைய எதிரிகள் நினைத்ததாகவும் சொன்னார். ஆனால், மற்றவர்களுடைய கருத்துகளையும் தன்னுடைய பலவீனங்களையும் வைத்து, ‘நான் எதுக்குமே லாயக்கில்ல’ என்று முடிவுக்கு பவுல் வந்துவிடவில்லை.—2 கொ. 10:10-12, 17, 18.

2. இரண்டு கொரிந்தியர் 12:9, 10-ல் சொல்லியிருப்பதைப் போல், பவுல் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம் என்ன?

2 பலவீனமாக உணருகிற ஒருவரால் பலமாக இருக்க முடியும்! இந்த முக்கியமான பாடத்தை பவுல் கற்றுக்கொண்டார். (2 கொரிந்தியர் 12:9, 10-ஐ வாசியுங்கள்.) பவுல் “பலவீனமாக இருக்கும்போது,” யெகோவாவுடைய பலம் பவுலுக்கு “முழுமையாகக் கிடைக்கும்” என்று யெகோவா சொன்னார். அதற்கு என்ன அர்த்தம்? பவுலிடம் இல்லாத பலத்தை தான் தருவதாக யெகோவா சொன்னார். நம்முடைய எதிரிகள் நம்மை அவமானப்படுத்தும்போது, நாம் ஏன் கூனிக்குறுக வேண்டிய அவசியம் இல்லை என்பதைப் பற்றி முதலில் பார்க்கலாம்.

‘அவமானங்களை. . .  சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள்’

3. அவமானங்களை சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ள முடியும் என்று எப்படிச் சொல்லலாம்?

3 அவமானங்களை நாம் யாரும் விரும்புவதில்லை. எதிரிகள் நம்மை அவமானப்படுத்தும்போது நாம் அளவுக்கு அதிகமாகக் கவலைப்பட்டால், நாம் சோர்ந்துபோய்விடுவோம். (நீதி. 24:10) அப்படியென்றால், அவமானம் என்ற அம்புகளை எதிரிகள் நம்மேல் எறியும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? அப்போஸ்தலன் பவுலைப் போல், ‘அவமானங்களை . . .  சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள’ வேண்டும். (2 கொ. 12:10) ஏனென்றால், அவமானங்களும் எதிர்ப்புகளும் நாம் இயேசுவின் உண்மையான சீஷர்கள் என்பதற்கான அடையாளங்கள்! (1 பே. 4:14) தன்னுடைய சீஷர்கள் துன்புறுத்தப்படுவார்கள் என்று இயேசு சொன்னார். (யோவா. 15:18-20) அவர் சொன்னபடியே முதல் நூற்றாண்டு சீஷர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். அப்போதிருந்த மக்களில் சிலர்மீது, கிரேக்க கலாச்சாரத்தின் தாக்கம் இருந்தது. அப்படிப்பட்டவர்கள், கிறிஸ்தவர்களை முட்டாள்கள் என்றும் தாழ்வானவர்கள் என்றும் நினைத்தார்கள். பேதுருவையும் யோவானையும் “கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்கள்” என்று யூதர்கள் நினைத்தார்கள். அவர்களை மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள் எல்லாரையும் அப்படித்தான் நினைத்தார்கள். (அப். 4:13) கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபடாததாலும், படையில் சேராததாலும், அவர்கள் எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிர்க்கதியான ஆட்கள் என்பதாக அன்றிருந்த மக்கள் நினைத்தார்கள். அதோடு, சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டவர்களைப் போல் அவர்கள் நடத்தப்பட்டார்கள்.

4. தாங்கள் அவமானப்படுத்தப்பட்டபோது முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் என்ன செய்தார்கள்?

4 எதிரிகள் தங்களை அவமானப்படுத்தியபோது, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் முடங்கிப்போய்விட்டார்களா? இல்லை! உதாரணத்துக்கு, இயேசுவைப் பின்பற்றுவதையும், அவருடைய போதனைகளை மற்றவர்களுக்குச் சொல்லித்தருவதையும், அப்போஸ்தலர்களான பேதுருவும் யோவானும் பாக்கியமாக நினைத்தார்கள். (அப். 4:18-21; 5:27-29, 40-42) அன்றிருந்த சீஷர்கள் ஒருபோதும் வெட்கப்படவில்லை! சமுதாயம் தங்களை மதிக்கவில்லை என்றாலும், மக்களுக்கு அவர்கள் நிறைய நல்லது செய்தார்கள். உதாரணத்துக்கு, அவர்களில் சிலர், யெகோவாவின் சக்தியால் தூண்டப்பட்டு பைபிள் புத்தகங்களை எழுதினார்கள். அவை இன்றுவரை லட்சக்கணக்கான ஜனங்களுக்கு உதவியாக இருக்கின்றன. எதிர்கால நம்பிக்கையையும் அவை தருகின்றன. அதோடு, எந்த அரசாங்கத்தைப் பற்றி அவர்கள் பிரசங்கித்தார்களோ, அது இப்போது பரலோகத்தில் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது; சீக்கிரத்தில் முழு பூமியையும் ஆட்சி செய்யப்போகிறது. (மத். 24:14) அன்றிருந்த கிறிஸ்தவர்களைப் பாடாய்ப்படுத்திய பெரிய பெரிய சாம்ராஜ்யங்களெல்லாம் இன்று மண்ணோடு மண்ணாகிப் போயின. ஆனால், அவற்றால் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் இன்று பரலோக சிம்மாசனங்களில் ராஜாக்களாக உட்கார்ந்திருக்கிறார்கள்! அவர்கள் இந்தப் பூமியில் இருந்தபோது அவர்களை எதிர்த்த யாருமே இப்போது உயிரோடு இல்லை. ஒருவேளை, கடவுள் அந்த எதிரிகளை உயிரோடு எழுப்பினால், ஒருகாலத்தில் அந்த எதிரிகள் யாரை வெறுத்தார்களோ, அவர்களுக்குக் கீழ் குடிமக்களாக இருப்பார்கள்!—வெளி. 5:10.

5. யோவான் 15:19-ன்படி, யெகோவாவின் சாட்சிகளை மற்றவர்கள் ஏன் தாழ்வானவர்களாக நினைக்கிறார்கள்?

5 இன்றும், யெகோவாவின் சாட்சிகளாகிய நம்மை சிலசமயங்களில் இந்த உலக மக்கள் தரக்குறைவாகப் பேசுகிறார்கள். நம்மைக் கேலிகிண்டல் செய்கிறார்கள், முட்டாள்களாகவும் பலவீனமானவர்களாகவும் நினைக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் யோசிப்பதைப் போல் நாம் யோசிப்பதில்லை. அடக்கத்தோடு... தாழ்மையோடு... கீழ்ப்படிதலோடு... வாழ நாம் முயற்சி செய்கிறோம். ஆனால் இந்த உலகமோ, தலைக்கனத்தோடு நடந்துகொள்கிறவர்களை... பெருமையடிப்பவர்களை... எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்கிறவர்களை... பிரமிப்பாகப் பார்க்கிறது. அதோடு, நாம் அரசியலில் ஈடுபடுவதும் இல்லை; எந்த நாட்டின் ராணுவத்திலும் சேருவதும் இல்லை. இந்த உலகம் நம்மை வடிவமைக்கவும் இடம்கொடுப்பதில்லை. அதனால், மக்கள் நம்மைத் தாழ்வானவர்களாக நினைக்கிறார்கள்.யோவான் 15:19-ஐ வாசியுங்கள்; ரோ. 12:2.

6. தன்னுடைய மக்களைப் பயன்படுத்தி யெகோவா எதையெல்லாம் சாதித்துவருகிறார்?

6 இந்த உலகம் நம்மைத் தாழ்வாகப் பார்த்தாலும், யெகோவா நம்மை வைத்து பெரிய பெரிய காரியங்களைச் சாதிக்கிறார். இன்று நடந்து வருகிற பிரசங்க வேலையைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இதுவரை இல்லாதளவு பிரமாண்டமான அளவில் அது நடந்துவருகிறது. இந்த உலகத்திலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, வினியோகிக்கப்படுகிற புத்தகங்களை யெகோவாவின் ஊழியர்கள் தயாரிக்கிறார்கள். பைபிளைப் பயன்படுத்தி, இருண்டுபோயிருந்த லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்திருக்கிறார்கள். இந்த எல்லாப் புகழும் யெகோவாவுக்கே சொந்தம்! இந்த உலகத்தின் பார்வையில் சாதாரண ஆட்களாக இருப்பவர்களை வைத்து அவர் பெரிய பெரிய காரியங்களைச் சாதித்து வருகிறார். ஆனால், நாம் ஒவ்வொருவரும் நம்மைப் பற்றி இப்போது யோசித்துப்பார்க்கலாம். ‘யெகோவா எனக்கு பலம் கொடுப்பாரா?’ ‘அப்படி அவர் பலம் கொடுக்கணும்னா நான் என்ன செய்யணும்?’ இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள, அப்போஸ்தலன் பவுலிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளப்போகிற மூன்று விஷயங்கள் உதவும்.

உங்கள் பலத்தை நம்பி இருக்காதீர்கள்!

7. பவுலிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிற முதல் விஷயம் என்ன?

7 யெகோவாவுக்குச் சேவை செய்யும்போது, உங்கள் பலத்தையோ திறமையையோ நம்பியிருக்கக் கூடாது. இதுதான் பவுலிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிற முதல் விஷயம்! பவுலின் திறமைகளைப் பார்த்து நிறைய பேர் அசந்துபோனார்கள். ரோம மாகாணமாக இருந்த சிலிசியாவின் தலைநகரமான தர்சு நகரத்தில் அவர் வளர்ந்தார். அந்த நகரம் செல்வச் செழிப்பாக இருந்தது. புகழ்பெற்ற ஒரு பல்கலைக்கழகமும் அங்கே இருந்தது. பவுல் ஒரு கல்விமானாக இருந்தார். அந்தக் காலத்தில் பிரபலமான யூத மதத் தலைவர்களில் ஒருவரான கமாலியேலிடம் கல்வி கற்றார். (அப். 5:34; 22:3) ஒருகட்டத்தில், யூத சமுதாயத்தில் பவுலுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. “என் தேசத்தில் என் வயதிலிருந்த நிறைய பேரைவிட யூத மதத்தைப் பின்பற்றுவதில் சிறந்தவனாக இருந்தேன்” என்று அவர் சொன்னார். (கலா. 1:13, 14; அப். 26:4) இருந்தாலும், பெருமை தன் கண்ணை மறைப்பதற்கு பவுல் இடம்கொடுக்கவில்லை. தன்னை மட்டுமே அவர் நம்பியிருக்கவில்லை.

கிறிஸ்துவின் சீஷராக இருக்கும் வாய்ப்போடு ஒப்பிடும்போது, இந்த உலகம் பெரிதாக நினைக்கும் விஷயங்களை பவுல் “வெறும் குப்பையாக” நினைத்தார் (பாரா 8) *

8. பிலிப்பியர் 3:8-ன்படி, தான் விட்டுக்கொடுத்த விஷயங்களை பவுல் எப்படி நினைத்தார், பலவீனங்களை ஏன் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டார்?

8 அன்றிருந்த மக்கள் எதையெல்லாம் முக்கியமாக நினைத்தார்களோ, அதையெல்லாம் பவுல் சந்தோஷமாக விட்டுக்கொடுத்தார். சொல்லப்போனால், அவற்றையெல்லாம் வெறும் “குப்பையாக” நினைத்தார். (பிலிப்பியர் 3:8-ஐ வாசியுங்கள்.) கிறிஸ்துவின் சீஷராக ஆனதற்குப் பிறகு அவர் நிறைய துன்பங்களை அனுபவித்தார். அவருடைய சொந்த ஜனங்களே அவரை வெறுத்தார்கள்! (அப். 23:12-14) அவருக்கு ரோமக் குடியுரிமை இருந்தபோதும், ரோமர்கள் அவரை அடித்து சிறையில் தள்ளினார்கள். (அப். 16:19-24, 37) அதுமட்டுமல்ல, தன்னுடைய பாவ இயல்பால், சரியானதைச் செய்வதற்குப் போராட வேண்டியிருப்பதை நினைத்து அவர் வேதனைப்பட்டார். (ரோ. 7:21-25) ஆனாலும், தன்னுடைய எதிரிகளாலோ பலவீனங்களாலோ அவர் முடங்கிப்போய்விடவில்லை. ‘பலவீனங்களை . . .  சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டார்.’ ஏனென்றால், தான் பலவீனமாக இருக்கும்போது, கடவுள் தன்னைப் பலப்படுத்தியதை அவர் உணர்ந்தார்.—2 கொ. 4:7; 12:10.

9. நம்மிடம் இல்லையென்று நினைக்கிற விஷயங்களை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்?

9 யெகோவாவிடமிருந்து பலத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அப்படியென்றால், உங்கள் உடல் பலம்... படிப்பு... பின்னணி... வசதி வாய்ப்புகள்... ஆகியவற்றைப் பொறுத்து உங்களுடைய மதிப்பு கிடையாது என்பதை ஞாபகம் வையுங்கள். யெகோவாவுக்கு நீங்கள் எந்தளவு பிரயோஜனமாக இருக்க முடியும் என்பதை இவற்றை வைத்து முடிவு செய்ய முடியாது. சொல்லப்போனால், கடவுளுடைய ஊழியர்களில் நிறைய பேர், “மனிதர்களுடைய பார்வையில் . . .  ஞானிகளாகவோ செல்வாக்குள்ளவர்களாகவோ உயர்குடியில் பிறந்தவர்களாகவோ இல்லை.” ‘உலகத்தின் பார்வையில் பலவீனமாக இருப்பவர்களைத்தான்’ யெகோவா தேர்ந்தெடுக்கிறார். (1 கொ. 1:26, 27) அதனால், இந்தப் பாராவின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள் எதுவுமே உங்களிடம் இல்லையென்றாலும், உங்களால் யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியும்! ‘அதெல்லாம் என்கிட்ட இல்லையே’ என்று நினைத்து கவலைப்படாதீர்கள். அதற்குப் பதிலாக, இதுபோன்ற சூழ்நிலைகளில் யெகோவா எப்படி உங்களைப் பலப்படுத்துகிறார் என்பதைப் பாருங்கள். உதாரணத்துக்கு, யாராவது உங்கள் நம்பிக்கைகளைப் பற்றித் தவறாகப் பேசினால், பயந்துவிடாதீர்கள். அவர்களிடம் பேசுவதற்குத் தைரியம் தரும்படி யெகோவாவிடம் கேளுங்கள். (எபே. 6:19, 20) உடல்நல அல்லது மனநல பிரச்சினைகளால் வாழ்க்கை வெறுத்துப்போய்விட்டதா? கவலை வேண்டாம், யெகோவா இருக்கிறார்! அவருடைய சேவையைத் தொடர்ந்து மும்முரமாகச் செய்வதற்குத் தேவையான பலத்தைத் தரும்படி அவரிடம் கேளுங்கள். யெகோவா உங்களுக்கு உதவுவதைப் பார்க்கிற ஒவ்வொரு தடவையும் உங்கள் விசுவாசம் பலமாகும், நீங்களும் பலமானவர்களாக ஆவீர்கள்.

பைபிளில் இருக்கிற உதாரணங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

10. எபிரெயர் 11:32-34-ல் சொல்லப்பட்டிருக்கும் ஊழியர்களைப் பற்றியும், மற்ற உண்மை ஊழியர்களைப் பற்றியும் நாம் ஏன் படிக்க வேண்டும்?

10 வேதவசனங்களை பவுல் ஆழமாகப் படித்தார். அதனால், அவர் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டார். அதுமட்டுமல்ல, யெகோவாவின் உண்மை ஊழியர்களின் வாழ்க்கையிலிருந்தும் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டார். எபிரெய கிறிஸ்தவர்களுக்கு அவர் கடிதம் எழுதியபோது, யெகோவாவின் உண்மை ஊழியர்களின் வாழ்க்கை அனுபவத்தைப் பற்றி யோசித்துப்பார்க்கும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டார். (எபிரெயர் 11:32-34-ஐ வாசியுங்கள்.) அந்த ஊழியர்களில் ஒருவர்தான் தாவீது ராஜா! எதிரிகளிடமிருந்து மட்டுமல்ல, ஒருகாலத்தில் தன்னுடைய நண்பர்களாக இருந்தவர்களிடமிருந்தும் அவருக்கு எதிர்ப்புகள் வந்தன. தாவீதின் வாழ்க்கையை ஆழமாக யோசித்துப்பார்த்தது பவுலை எப்படிப் பலப்படுத்தியது என்றும், நாம் எப்படி பவுலைப் பின்பற்றலாம் என்றும் இப்போது பார்க்கலாம்.

தாவீது சின்னப் பையனாக இருந்தபோதும், மற்றவர்கள் பார்வையில் பலவீனமாகத் தெரிந்தபோதும், கோலியாத்தோடு சண்டைபோட பயப்படவில்லை. ஏனென்றால், அவனை வெட்டி வீழ்த்த யெகோவா தனக்கு உதவுவார் என்று அவர் நம்பினார் (பாரா 11)

11. மற்றவர்களுடைய பார்வையில் தாவீது ஏன் பலவீனமானவராக தெரிந்தார்? (அட்டைப் படம்)

11 பலம்படைத்த படைவீரனான கோலியாத்துக்கு முன்னால் தாவீது பலவீனமானவரைப் போல் தெரிந்தார். அதனால், தாவீதை அவன் “இளக்காரமாகப் பார்த்தான்.” அவன் பார்ப்பதற்கு ராட்சதனைப் போல் இருந்தான். முழு கவசத்தையும் அணிந்திருந்தான். அவனிடம் ஆயுதங்களும் இருந்தன. நல்ல போர் பயிற்சியும் எடுத்திருந்தான். ஆனால் தாவீது, அனுபவம் இல்லாத சின்னப் பையனாக இருந்தார். பார்ப்பதற்கு ஒரு போர்வீரனைப் போல் அவர் தெரியவில்லை. மற்றவர்களின் பார்வையில் அவர் பலவீனமானவராக தெரிந்தாலும், உண்மையிலேயே அவர் பலமுள்ளவராக இருந்தார். ஏனென்றால், அவர் யெகோவாவை நம்பியிருந்தார். அவர் கொடுத்த பலத்தால் கோலியாத்தை வெட்டி வீழ்த்தினார்.—1 சா. 17:41-45, 50.

12. தாவீதுக்கு இருந்த இன்னொரு பிரச்சினை என்ன?

12 தாவீதுக்கு இன்னொரு பிரச்சினையும் இருந்தது. யெகோவாவால் நியமிக்கப்பட்ட இஸ்ரவேலின் ராஜாவான சவுலுக்கு அவர் உண்மையாக சேவை செய்துகொண்டிருந்தார். ஆரம்பத்தில், சவுல் ராஜாவுக்கு தாவீதின் மேல் மதிப்பு மரியாதை இருந்தது. ஆனால், பிற்பாடு சவுலுக்கு பெருமை தலைக்கேறியது; அதனால், தாவீதைப் பார்த்து பொறாமைப்பட்டார். அவரை ரொம்பவே மோசமாக நடத்தினார். அவரைக் கொலை செய்யவும் துடித்தார். இந்தச் சூழ்நிலையும் தாவீதை பலவீனமாக உணரவைத்திருக்கலாம்.—1 சா. 18:6-9, 29; 19:9-11.

13. சவுல் ராஜா அநியாயம் செய்தபோது தாவீது என்ன செய்தார்?

13 தனக்கு எதிராக சவுல் ராஜா அநியாயம் செய்தாலும் அவர் யெகோவாவால் நியமிக்கப்பட்டவராக இருந்ததால் தாவீது அவருக்குத் தொடர்ந்து மதிப்பு மரியாதை கொடுத்தார். (1 சா. 24:6) சவுல் செய்த அக்கிரமத்துக்கெல்லாம் அவர் யெகோவாவை குறை சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, சோதனைகளையும் கஷ்டங்களையும் சமாளிப்பதற்குத் தேவையான பலத்துக்காக அவர் யெகோவாவை நம்பியிருந்தார்.—சங். 18:1, மேல்குறிப்பு.

14. தாவீது அனுபவித்த மாதிரியான என்ன கஷ்டங்களை பவுலும் அனுபவித்தார்?

14 தாவீது மாதிரியே பவுலும் கஷ்டத்தை அனுபவித்தார். பவுலுடைய எதிரிகளும் பலம் படைத்தவர்களாக இருந்தார்கள். அரசியல் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களில் நிறைய பேர் அவர்மீது வெறுப்பைக் காட்டினார்கள். அடிக்கடி அவரை அடித்து சிறையில் தள்ளினார்கள். நண்பர்களின் விஷயத்திலும், தாவீதுக்கு நடந்ததைப் போல்தான் பவுலுக்கும் நடந்தது. நட்புக் கரம் நீட்ட வேண்டியவர்களே பவுலை மோசமாக நடத்தினார்கள். சபையிலிருந்த சிலர் அவரை எதிர்க்கவும் செய்தார்கள். (2 கொ. 12:11; பிலி. 3:18) ஆனால், தன்னை எதிர்த்த எல்லாரையும் பவுல் ஜெயித்தார். எப்படி? எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து பிரசங்கித்தார். சகோதர சகோதரிகள் அவரை நோகடித்தபோதும் அவர்களுக்கு அவர் தொடர்ந்து உண்மையோடு நடந்துகொண்டார். எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னுடைய கடைசி மூச்சுவரை யெகோவாவுக்கு உண்மையோடு இருந்தார். (2 தீ. 4:8) அப்படியென்றால், அவருக்கு அபார பலம் இருந்ததா? இல்லை! பலத்துக்காக அவர் யெகோவாவை நம்பியிருந்தார்.

உங்களுடைய நம்பிக்கையை எதிர்க்கிறவர்களிடம் பேசும்போது, மரியாதையாகவும் அன்பாகவும் நடந்துகொள்ளுங்கள் (பாரா 15) *

15. எது நம்முடைய குறிக்கோள், அதை நாம் எப்படி அடையலாம்?

15 உங்களோடு படிப்பவர்கள், வேலை செய்பவர்கள், சாட்சிகளாக இல்லாத சொந்தக்காரர்கள், குடும்பத்தார் ஆகியவர்கள் உங்களை அவமானப்படுத்துகிறார்களா? உங்களை எதிர்க்கிறார்களா? சபையில் இருக்கும் ஒருவர் உங்களை மோசமாக நடத்தியிருக்கிறாரா? அப்படியென்றால், தாவீதைப் பற்றியும் பவுலைப் பற்றியும் யோசித்துப்பாருங்கள். உங்களாலும் எப்போதும் ‘தீமையை . . . நன்மையால் வெல்ல முடியும்.’ (ரோ. 12:21) தாவீது கோலியாத்தின் நெற்றியில் கல்லைப் பதித்ததைப் போல நீங்கள் யாருடைய நெற்றியிலும் கல்லைப் பதிக்க வேண்டியதில்லை. உங்கள் குறிக்கோளெல்லாம், மற்றவர்களின் மனதில் கடவுளுடைய வார்த்தையை ஆழமாகப் பதிப்பதுதான்! இதை எப்படிச் செய்யலாம்? மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பைபிளிலிருந்து பதில் சொல்லுங்கள். உங்களை மோசமாக நடத்துகிறவர்களையும் நீங்கள் மரியாதையோடும் அன்போடும் நடத்துங்கள். உங்கள் எதிரிகளுக்கும் மற்றவர்களுக்கும் நல்லது செய்யுங்கள்.—மத். 5:44; 1 பே. 3:15-17.

மற்றவர்கள் தரும் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்

16-17. எது பவுலின் மனதைவிட்டு நீங்கவே இல்லை?

16 அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்துவின் சீஷராக ஆவதற்கு முன்பு, இயேசுவைப் பின்பற்றியவர்களிடம் திமிராக நடந்துகொண்டார்; கிறிஸ்தவ சபையைத் துன்புறுத்தினார். (அப். 7:58; 1 தீ. 1:13) அதனால், இயேசு நேரடியாகத் தலையிட்டு அவரைத் தடுத்து நிறுத்தினார். பரலோகத்திலிருந்து பேசினார், பவுலுக்கு கண் பார்வை போகும்படி செய்தார். அப்போது, முன்பு பவுல் யாரையெல்லாம் துன்புறுத்திக்கொண்டிருந்தாரோ அவர்களிடமே உதவி கேட்க வேண்டியிருந்தது. அவருக்குத் திரும்பவும் பார்வை கிடைப்பதற்கு கிறிஸ்துவின் சீஷராக இருந்த அனனியா உதவினார். அந்த உதவியை பவுல் மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார்.—அப். 9:3-9, 17, 18.

17 கொஞ்ச காலத்தில், கிறிஸ்தவ சபையில் பவுல் பிரபலமானார். இருந்தாலும், தமஸ்குவுக்குப் போய்க்கொண்டிருந்த வழியில் இயேசு கற்றுக்கொடுத்த பாடத்தை அவர் மறக்கவில்லை. தொடர்ந்து அவர் மனத்தாழ்மையோடு இருந்தார். சகோதர சகோதரிகள் கொடுத்த உதவியை ஏற்றுக்கொண்டார். அவர்கள் தனக்கு ‘பக்கபலமாக’ இருந்தார்கள் என்று சொன்னார்.—கொலோ. 4:10, 11, அடிக்குறிப்பு.

18. சிலசமயங்களில் மற்றவர்களின் உதவியை ஏற்றுக்கொள்வதற்கு நாம் ஏன் தயங்கலாம்?

18 பவுலிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? யெகோவாவின் சாட்சியாக ஆன புதிதில், மற்றவர்களின் உதவியை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருந்திருப்போம். ஏனென்றால், கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்பது நமக்குப் புரிந்திருக்கும். (1 கொ. 3:1, 2) ஆனால், சத்தியத்துக்கு வந்து நிறைய வருஷங்கள் ஆன பிறகு நாம் எப்படி நினைக்கிறோம்? நமக்கு நிறைய அனுபவம் கிடைத்திருப்பதால், முன்புபோல் மற்றவர்களின் உதவியை ஏற்றுக்கொள்வதற்கு ஒருவேளை நமக்கு மனம் இல்லாமல் போகலாம். முக்கியமாக, புதிதாக சத்தியத்துக்கு வந்திருக்கிறவர்களிடமிருந்து உதவியை ஏற்றுக்கொள்ள நாம் தயங்கலாம். ஆனால், பெரும்பாலும் நம்முடைய சகோதர சகோதரிகளைப் பயன்படுத்திதான் யெகோவா நம்மைப் பலப்படுத்துகிறார். (ரோ. 1:11, 12) இதை ஞாபகம் வைத்துக்கொண்டால்தான் யெகோவாவிடமிருந்து நம்மால் பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

19. பவுலால் எப்படி நிறைய விஷயங்களைச் சாதிக்க முடிந்தது?

19 கிறிஸ்தவராக ஆனதற்குப் பிறகு, பவுல் நிறைய விஷயங்களைச் சாதித்தார். இதையெல்லாம் அவரால் எப்படிச் செய்ய முடிந்தது? வெற்றி என்பது ஒருவருடைய உடல்பலம், கல்வி, வசதிவாய்ப்புகள் அல்லது பின்னணியைப் பொறுத்தது கிடையாது என்பதை அவர் கற்றுக்கொண்டார். ஒருவர் எந்தளவுக்கு மனத்தாழ்மையாக இருக்கிறார்... எந்தளவுக்கு யெகோவாவை நம்பியிருக்கிறார்... என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது என்பதையும் அவர் புரிந்துகொண்டார். நாமும் (1) யெகோவாவை நம்பியிருப்பதன் மூலமும் (2) பைபிளில் இருக்கிற உதாரணங்களிலிருந்து கற்றுக்கொள்வதன் மூலமும் (3) சகோதர சகோதரிகளின் உதவியை ஏற்றுக்கொள்வதன் மூலமும் பவுலைப் போலவே நடந்துகொள்ளலாம். இப்படியெல்லாம் செய்யும்போது, நாம் எவ்வளவு பலவீனமாக உணர்ந்தாலும் யெகோவா நம்மைப் பலப்படுத்துவார்.

பாட்டு 100 நாம் யெகோவாவின் படைவீரர்

^ பாரா. 5 அப்போஸ்தலன் பவுலுடைய முன்மாதிரியைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். நாம் மனத்தாழ்மையோடு இருந்தால், கேலிகிண்டல்களையும் பலவீனங்களையும் சமாளிப்பதற்கு யெகோவா எப்படி உதவுவார் என்பதைப் பற்றியும் பார்க்கப்போகிறோம்.

^ பாரா. 1 வார்த்தையின் விளக்கம்: பாவ இயல்பு, ஏழ்மை, நோய்நொடி ஆகியவற்றையெல்லாம் நினைத்து நாம் பலவீனமாக உணரலாம். அல்லது, நாம் அவ்வளவாகப் படிக்காததாலும் பலவீனமாக உணரலாம். அதோடு, சொல்லாலும் செயலாலும் தாக்குவதன் மூலம், நாம் பலவீனமானவர்கள் என்பதுபோல் நம்முடைய எதிரிகள் நம்மை நினைக்கவைக்கலாம்.

^ பாரா. 57 படங்களின் விளக்கம்: கிறிஸ்துவைப் பற்றிப் பிரசங்கிப்பதற்காக பவுல் கிளம்புகிறார். அப்போது, பரிசேயராக இருந்த சமயத்தில் தன்னுடைய வாழ்க்கையில் முக்கியமாக இருந்த விஷயங்களையெல்லாம் விட்டுவிட்டுப் போகிறார். அவற்றில், வேதாகமத்தோடு சம்பந்தப்படாத மற்ற சுருள்களும் வேதாகமத் தாயத்துகளும் இருந்திருக்கலாம்.

^ பாரா. 61 படங்களின் விளக்கம்: கூட வேலை செய்யும் ஒருவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளச் சொல்லி மற்ற எல்லாரும் ஒரு சகோதரரைக் கட்டாயப்படுத்துகிறார்கள்.