Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 31

“உறுதியான அஸ்திவாரங்களைக் கொண்ட நகரத்துக்காக” காத்துக்கொண்டிருக்கிறீர்களா?

“உறுதியான அஸ்திவாரங்களைக் கொண்ட நகரத்துக்காக” காத்துக்கொண்டிருக்கிறீர்களா?

“கடவுளே வடிவமைத்துக் கட்டிய உறுதியான அஸ்திவாரங்களைக் கொண்ட நகரத்துக்காக அவர் காத்துக்கொண்டிருந்தார்.”எபி. 11:10.

பாட்டு 136 கடவுளுடைய ஆட்சி வருக!

இந்தக் கட்டுரையில்... *

1. நிறைய பேர் என்ன தியாகங்களைச் செய்திருக்கிறார்கள், அவர்கள் அப்படிச் செய்ததற்கு என்ன காரணம்?

கடவுளுடைய மக்களில் லட்சக்கணக்கான பேர், இன்றைக்கு நிறைய தியாகங்களைச் செய்துவருகிறார்கள். நிறைய சகோதர சகோதரிகள், கல்யாணம் செய்ய வேண்டாமென்று முடிவெடுத்திருக்கிறார்கள். சில தம்பதிகள், இப்போதைக்குக் குழந்தைகள் வேண்டாமென்று முடிவெடுத்திருக்கிறார்கள். சில குடும்பங்கள், எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்கள். இவர்கள் எல்லாரும் ஒரு முக்கியமான காரணத்துக்காகத்தான் இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். முடிந்தளவு யெகோவாவுக்கு நிறைய சேவை செய்ய வேண்டும் என்பதுதான் அந்தக் காரணம்! இருப்பதை வைத்து அவர்கள் திருப்தியாக வாழ்கிறார்கள். அவர்களுடைய நியாயமான தேவைகளையெல்லாம் யெகோவா கண்டிப்பாகக் கொடுப்பார் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கை வீண் போகுமா? கண்டிப்பாக இல்லை! அதை எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறோம்? ஏனென்றால், அந்தக் காலத்தில் வாழ்ந்த தன்னுடைய உண்மையுள்ள ஊழியர்கள் எல்லாருடைய தேவைகளையும் யெகோவா பார்த்துக்கொண்டார். அதில் ஒருவர்தான் ஆபிரகாம். ‘கடவுள்மேல் விசுவாசம் வைத்ததால் நீதிமான்களாகக் கருதப்படுகிற எல்லாருக்கும் அவர் தகப்பன் ஆனார்’ என்று பைபிள் சொல்கிறது.—ரோ. 4:11.

2. (அ) எபிரெயர் 11:8-10, 16-ன்படி, ஊர் நகரத்தைவிட்டு ஆபிரகாம் ஏன் போனார்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் படிக்கப்போகிறோம்?

2 ஊர் நகரத்தில் அனுபவித்த சௌகரியமான வாழ்க்கையை ஆபிரகாம் மனதார விட்டுக்கொடுத்தார். ஏனென்றால், “உறுதியான அஸ்திவாரங்களைக் கொண்ட நகரத்துக்காக” அவர் காத்துக்கொண்டிருந்தார். (எபிரெயர் 11:8-10-யும், 16-யும் வாசியுங்கள்.) அந்த ‘நகரம்’ எது? அந்த நகரம் கட்டப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருந்த சமயத்தில், ஆபிரகாம் என்னென்ன கஷ்டங்களைச் சந்தித்தார்? ஆபிரகாமைப் போலவும் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றிய சகோதர சகோதரிகளைப் போலவும் நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?

‘உறுதியான அஸ்திவாரங்களைக் கொண்ட நகரம்’ எது?

3. ஆபிரகாம் காத்துக்கொண்டிருந்த நகரம் எது?

3 கடவுளுடைய அரசாங்கம்தான் ஆபிரகாம் காத்துக்கொண்டிருந்த அந்த நகரம். இயேசுவும் கடவுளுடைய சக்தியால் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,44,000 பேரும் அதன் ராஜாக்களாக இருப்பார்கள். அந்த அரசாங்கத்தைத்தான் ‘உயிருள்ள கடவுளுடைய நகரமாகிய பரலோக எருசலேம்’ என்று பவுல் சொன்னார். (எபி. 12:22; வெளி. 5:8-10; 14:1) அந்த அரசாங்கத்துக்காக ஜெபம் செய்யச் சொல்லித்தான் இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார். ஏனென்றால், அந்த அரசாங்கம் வந்தால்தான் கடவுளுடைய விருப்பம் பரலோகத்தில் நடப்பதுபோல் பூமியிலும் நடக்கும்.—மத். 6:10.

4. ஆதியாகமம் 17:1, 2, 6-ன்படி, கடவுள் வாக்குக் கொடுத்திருந்த அந்த நகரத்தைப் பற்றி ஆபிரகாமுக்கு எந்தளவு தெரிந்திருந்தது?

4 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய எல்லா விவரங்களும் ஆபிரகாமுக்கு அந்தச் சமயத்தில் தெரியவில்லை. அந்த விவரங்களெல்லாம் பல நூற்றாண்டுகளாக ‘பரிசுத்த ரகசியமாக’ இருந்தன. (எபே. 1:8-10; கொலோ. 1:26, 27) ஆனால், அவருடைய வம்சத்தில் வருகிற சிலர் ராஜாக்களாக இருப்பார்கள் என்ற விஷயம் ஆபிரகாமுக்குத் தெரிந்திருந்தது. ஏனென்றால், அதைப் பற்றி யெகோவா அவருக்கு வாக்குக் கொடுத்திருந்தார். (ஆதியாகமம் 17:1, 2-யும், 6-யும் வாசியுங்கள்.) கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக ஆகப்போகிற மேசியாவை நேரில் பார்ப்பதுபோல் ஆபிரகாம் உணர்ந்தார். அந்தளவுக்குக் கடவுளுடைய வாக்குறுதிகள்மேல் அவருக்குப் பலமான விசுவாசம் இருந்தது. அதனால்தான், “உங்கள் தகப்பனாகிய ஆபிரகாம் என் நாளைப் பார்க்கப்போகிற எதிர்பார்ப்பில் ரொம்பச் சந்தோஷமாக இருந்தார், அதைப் பார்த்து சந்தோஷப்பட்டார்” என்று தன்னுடைய காலத்திலிருந்த யூதர்களிடம் இயேசு சொன்னார். (யோவா. 8:56) இதிலிருந்து என்ன தெரிகிறது? யெகோவா கொண்டுவரப்போகிற அரசாங்கத்தில், தன்னுடைய வம்சத்தில் வரப்போகிறவர்களுக்கும் ஒரு பங்கு இருக்கும் என்பதை ஆபிரகாம் நன்றாகப் புரிந்துவைத்திருந்தார். அந்த வாக்குறுதி நிறைவேறுவதற்காக ஆபிரகாம் காத்திருந்தார்.

யெகோவாவுடைய வாக்குறுதிகளின் மேல் தனக்கிருந்த விசுவாசத்தை ஆபிரகாம் எப்படிக் காட்டினார்? (பாரா 5)

5. கடவுளால் வடிவமைக்கப்பட்ட நகரத்துக்காக ஆபிரகாம் காத்திருந்தார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?

5 கடவுளால் வடிவமைக்கப்பட்ட அந்த நகரத்துக்காக, அதாவது அந்த அரசாங்கத்துக்காக, காத்துக்கொண்டிருந்ததை நிறைய வழிகளில் ஆபிரகாம் காட்டினார். உதாரணத்துக்கு, பூமியிலிருந்த எந்த அரசாங்கத்தின் குடிமகனாகவும் ஆகாமல், கடைசிவரைக்கும் அவர் நாடோடியாகவே வாழ்ந்தார். அதாவது, நிரந்தரமாக ஒரு இடத்தில் வாழ்ந்து அங்கிருந்த ராஜாவை ஆதரிக்க வேண்டுமென்று அவர் நினைக்கவில்லை. அதுமட்டுமல்ல, தனக்கென்று ஒரு அரசாங்கத்தையும் அவர் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, தொடர்ந்து யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தார். அவர் கொடுத்த எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுவதைப் பார்ப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்தார். இப்படி, அசைக்க முடியாத விசுவாசத்தைக் காட்டினார். அதேசமயத்தில், சில கஷ்டங்களையும் அவர் அனுபவித்தார். அவருடைய உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

ஆபிரகாம் என்னென்ன கஷ்டங்களைச் சந்தித்தார்?

6. ஊர் நகரம் எப்படிப்பட்ட நகரமாக இருந்தது?

6 ஊர் நகரத்தில் எல்லா சௌகரியங்களும் இருந்தன. அங்கிருந்த மக்கள் நன்றாகப் படித்தவர்களாகவும் வசதியானவர்களாகவும் இருந்தார்கள். அதுமட்டுமல்ல, அந்த நகரம் ரொம்பப் பாதுகாப்பான நகரமாகவும் இருந்தது. அதைச் சுற்றியும் பெரிய பெரிய சுவர்கள் எழுப்பப்பட்டிருந்தன. மூன்று பக்கங்களிலும் அகழிகள் இருந்தன. அந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள், எழுதும் கலையிலும் கணிதவியலிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள். அந்த நகரம் வியாபார மையமாக இருந்தது. வியாபாரம் சம்பந்தப்பட்ட நிறைய ஆவணங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த நகரம் இருந்த இடத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த நகரத்தில் இருந்த வீடுகள், செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. அவற்றின் சுவர்கள் சாந்து பூசப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டிருந்தன. சில வீடுகளில், 13 அல்லது 14 அறைகள் இருந்தன. கற்களால் பதிக்கப்பட்ட உள்முற்றத்தைச் சுற்றி அந்த அறைகள் அமைந்திருந்தன. இவ்வளவு வசதியான நகரத்தை விட்டுவிட்டுதான் ஆபிரகாம் கிளம்பினார்.

7. தன்னையும் தன் குடும்பத்தில் இருந்தவர்களையும் யெகோவா பாதுகாப்பார் என்று ஆபிரகாம் ஏன் நம்ப வேண்டியிருந்தது?

7 தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் யெகோவா பாதுகாப்பார் என்று ஆபிரகாம் முழுமையாக நம்ப வேண்டியிருந்தது. ஏனென்றால், ஊர் நகரத்திலிருந்த பாதுகாப்பான, சௌகரியமான வீட்டை விட்டுவிட்டு கானான் தேசத்தில் திறந்தவெளிகளில் ஆபிரகாமும் சாராளும் கூடாரம்போட்டு தங்க வேண்டியிருந்தது. இப்போது, அவரையும் அவருடைய குடும்பத்தையும் பாதுகாப்பதற்குப் பலமான சுவர்களோ ஆழமான அகழிகளோ இல்லை. சொல்லப்போனால், எதிரிகளால் சுலபமாகத் தாக்கப்படும் நிலையில் அவர்கள் இருந்தார்கள்.

8. ஒரு தடவை ஆபிரகாம் என்ன சூழ்நிலையைச் சந்தித்தார்?

8 ஆபிரகாம் கடவுளுடைய விருப்பத்தைச் செய்தார். ஆனாலும், சில கஷ்டங்களைச் சந்தித்தார். உதாரணத்துக்கு, அவர் போன இடத்தில் பஞ்சம் வந்தது. அதனால், அவருடைய குடும்பத்துக்குப் போதுமான சாப்பாட்டை அவரால் கொடுக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல், குடும்பத்தோடு தற்காலிகமாக எகிப்துக்குப் போய் தங்கலாம் என்று முடிவெடுத்தார். ஆனால், எகிப்துக்குப் போனதும் அவருக்கு இன்னொரு பிரச்சினை வந்தது. எகிப்தின் ராஜா, சாராள்மேல் ஆசைப்பட்டு அவளைத் தன்னுடைய அரண்மனைக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டார். அப்போது, யெகோவா தலையிட்டு, சாராளை ஆபிரகாமிடம் கொண்டுபோய்விடச் சொல்லி எகிப்தின் ராஜாவிடம் சொன்னார். சாராள் தன்னிடம் வந்து சேரும்வரை ஆபிரகாம் எவ்வளவு துடிதுடித்துப் போயிருப்பார்!—ஆதி. 12:10-19.

9. ஆபிரகாமின் குடும்பத்தில் என்னென்ன பிரச்சினைகள் வந்தன?

9 ஆபிரகாமின் குடும்ப வாழ்க்கையில் மற்ற பிரச்சினைகளும் இருந்தன. அவருடைய ஆருயிர் மனைவி சாராளுக்குப் பிள்ளைகளே இல்லை. பல வருஷங்களாக இந்தக் கவலை அவர்கள் இரண்டு பேரையுமே வாட்டியெடுத்தது. அதனால், சாராள் ஒரு முடிவெடுத்தாள். தன்னுடைய வேலைக்காரப் பெண்ணான ஆகார் மூலமாக தங்களுக்கு ஒரு வாரிசை உருவாக்கும்படி ஆபிரகாமிடம் சொன்னாள். ஆனால், ஆகார் கர்ப்பமான உடனே சாராளைக் கேவலமாகப் பார்க்க ஆரம்பித்தாள். நிலைமை ரொம்ப மோசமானதால் ஆகாரைத் தன் வீட்டைவிட்டே சாராள் துரத்திவிட்டாள்.—ஆதி. 16:1-6.

10. இஸ்மவேலின் விஷயத்திலும் ஈசாக்கின் விஷயத்திலும் ஆபிரகாம் ஏன் யெகோவாவை முழுமையாக நம்பியிருக்க வேண்டியிருந்தது?

10 கடைசியில், சாராளும் கர்ப்பமானாள். அவளுக்குப் பிறந்த குழந்தைக்கு ஈசாக்கு என்று ஆபிரகாம் பெயர் வைத்தார். இஸ்மவேல்மீதும் ஈசாக்குமீதும் ஆபிரகாம் ரொம்ப ரொம்ப பாசம் வைத்திருந்தார். ஆனால், ஈசாக்கை இஸ்மவேல் மிகவும் மோசமாக நடத்தியதால் இஸ்மவேலையும் ஆகாரையும் வீட்டைவிட்டு அனுப்ப வேண்டிய நிலைமை வந்தது. (ஆதி. 21:9-14) கொஞ்ச வருஷம் கழித்து, ஆபிரகாமுக்கு இன்னொரு சோதனை வந்தது. ஈசாக்கைப் பலி கொடுக்கச் சொல்லி அவரிடம் யெகோவா சொன்னார். (ஆதி. 22:1, 2; எபி. 11:17-19) தன்னுடைய மகன்களான இஸ்மவேலுக்கும் சரி ஈசாக்குக்கும் சரி, யெகோவா சரியானதைத்தான் செய்வார் என்று ஆபிரகாம் நம்ப வேண்டியிருந்தது.

11. ஆபிரகாம் ஏன் பொறுமையாகக் காத்திருக்க வேண்டியிருந்தது?

11 இந்தக் காலகட்டம் முழுவதும், கொடுத்த வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் ஆபிரகாம் பொறுமையோடு காத்திருந்தார். ஊர் நகரத்தைவிட்டுக் கிளம்பியபோது அவர் 70 வயதைத் தாண்டியிருக்கலாம். (ஆதி. 11:31–12:4) கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு கானான் தேசம் முழுவதும் பல இடங்களில் அவர் கூடாரம்போட்டுத் தங்கினார். அவர் இறந்தபோது அவருக்கு 175 வயது. (ஆதி. 25:7) அவர் நடமாடிய தேசத்தை அவருடைய சந்ததிக்குக் கொடுக்கப்போவதாக யெகோவா சொன்ன வாக்குறுதிகள் நிறைவேறுவதை அவர் பார்க்கவில்லை. கடவுளுடைய அரசாங்கம் என்ற நகரம் நிறுவப்பட்டதையும் அவர் பார்க்கவில்லை. இருந்தாலும், அவர் “மனநிறைவோடு வாழ்ந்த பின்பு முதிர்வயதில் இறந்துபோனார்” என்று பைபிள் சொல்கிறது. (ஆதி. 25:8) ஆபிரகாம் நிறைய சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தாலும், தன்னுடைய விசுவாசத்தை பலமாக வைத்துக்கொண்டார். யெகோவாவுடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதற்காக ஆர்வமாகக் காத்துக்கொண்டிருந்தார். இதெல்லாம் அவரால் எப்படி முடிந்தது? அவருடைய வாழ்க்கை முழுவதும் யெகோவா அவரைப் பாதுகாத்தார். ஆபிரகாமை நண்பராக நடத்தினார்.—ஆதி. 15:1; ஏசா. 41:8; யாக். 2:22, 23.

ஆபிரகாம் மற்றும் சாராளைப் போலவே கடவுளுடைய ஊழியர்கள் விசுவாசத்தையும் பொறுமையையும் எப்படிக் காட்டுகிறார்கள்? (பாரா 12) *

12. நாம் எதற்காகக் காத்திருக்கிறோம், இப்போது எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

12 ஆபிரகாமைப் போலவே, உறுதியான அஸ்திவாரங்களைக் கொண்ட நகரத்துக்காக நாம் காத்திருக்கிறோம். ஆனால், அந்த நகரம் கட்டப்படுவதற்காக நாம் காத்துக்கொண்டிருக்கவில்லை. ஏனென்றால், அது ஏற்கெனவே கட்டப்பட்டுவிட்டது. அந்த நகரம், அதாவது அந்த அரசாங்கம், 1914-ல் நிறுவப்பட்டது; பரலோகத்தில் ஆட்சி செய்ய ஆரம்பித்தது. (வெளி. 12:7-10) அப்படியென்றால், நாம் எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம்? அது பூமியை ஆட்சி செய்வதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம்! அந்த நாள் வரும்வரைக்கும் ஆபிரகாம் மற்றும் சாராள் மாதிரியே நாமும் நிறைய பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. நவீன கால ஊழியர்களும் ஆபிரகாமைப் பின்பற்றியிருக்கிறார்களா? நிச்சயமாக! காவற்கோபுரத்தில் வருகிற அவர்களுடைய வாழ்க்கை சரிதைகளை நாம் படிக்கும்போது, ஆபிரகாம் மற்றும் சாராள் மாதிரியே அவர்களும் விசுவாசத்தையும் பொறுமையையும் காட்டியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்களில் சிலருடைய அனுபவங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இப்போது பார்க்கலாம்.

ஆபிரகாமின் உதாரணத்தைப் பின்பற்றியவர்கள்

பில் வால்டன் யெகோவாவுக்காகச் சில விஷயங்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்ததால், ஆசீர்வாதங்களை அனுபவித்தார்

13. சகோதரர் பில் வால்டனுடைய உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

13 தியாகங்கள் செய்யத் தயாராக இருங்கள். கடவுளுடைய அரசாங்கம் என்ற நகரத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென்றால், கடவுளைப் பிரியப்படுத்த சில விஷயங்களை விட்டுக்கொடுத்த ஆபிரகாம் மாதிரியே நாம் இருக்க வேண்டும். (மத். 6:33; மாற். 10:28-30) பில் வால்டன் என்ற சகோதரருடைய அனுபவத்தை இப்போது பார்க்கலாம். * 1942-ல், அமெரிக்காவில் இருந்த ஒரு பல்கலைக்கழகத்தில் (கட்டிடக்கலை வடிவமைப்பு பொறியியல் படிப்பு) படித்துக்கொண்டிருந்தார். பட்டம் பெறுவதற்குக் கொஞ்சம் முன்னால் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். பட்டம் வாங்கிய பிறகு, அவருக்கு ஒரு நல்ல வேலையை அவருடைய பேராசிரியர் ஏற்பாடு செய்தார். ஆனால், அந்த வேலையை வேண்டாமென்று அவர் சொல்லிவிட்டார். கடவுளுக்கு நிறைய சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அந்த முடிவெடுத்ததாக அவருடைய பேராசிரியரிடம் சொன்னார். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, ராணுவ சேவையில் சேரச் சொல்லி அரசாங்கம் அவருக்குக் கட்டளை கொடுத்தது. அவர் அதை மறுத்ததால், 10,000 டாலர் அபராதத்தையும் ஐந்து வருஷ சிறைத்தண்டனையையும் அரசாங்கம் கொடுத்தது. ஆனால், மூன்று வருஷத்தில் அவர் விடுதலையாகிவிட்டார். பிறகு, கிலியட் பள்ளியில் படிப்பதற்கான அழைப்பு அவருக்கு வந்தது. அதற்குப் பின் ஆப்பிரிக்காவில் அவர் மிஷனரியாகச் சேவை செய்தார். பிறகு, ஈவா என்பவரைக் கல்யாணம் செய்தார். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஆப்பிரிக்காவில் சேவை செய்தார்கள். அந்தச் சமயத்திலும் அவர்கள் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தது. கொஞ்ச காலம் கழித்து பில்லுடைய அம்மாவைக் கவனித்துக்கொள்வதற்காக அவர்கள் அமெரிக்காவுக்குத் திரும்பிப் போனார்கள். தன்னுடைய வாழ்க்கை சரிதையின் முடிவில் பில் இப்படிச் சொல்கிறார்: “70 வருஷங்களுக்கும் மேல் யெகோவா என்னைப் பயன்படுத்தியிருப்பதை நினைக்கும்போது எனக்கு ஆனந்தக் கண்ணீர் வருகிறது. என் வாழ்க்கை முழுவதும் அவருக்குச் சேவை செய்வதற்கு எனக்கு உதவியதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.” கடவுளுக்கு முழுநேர சேவை செய்வதற்காகவே உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் அர்ப்பணிப்பீர்களா?

எலெனியும் அரிஸ்டாடலிஸும் யெகோவா தங்களைப் பலப்படுத்தியதை அனுபவத்தில் பார்த்தார்கள்

14-15. சகோதரர் அரிஸ்டாடலிஸ் மற்றும் அவருடைய மனைவி எலெனியின் உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

14 வாழ்க்கையில் பிரச்சினைகளே வரக் கூடாது என்று நினைக்காதீர்கள். யெகோவாவுக்குச் சேவை செய்வதற்காகவே தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களுக்கும் பிரச்சினைகள் வரும் என்பதை ஆபிரகாமுடைய வாழ்க்கை காட்டுகிறது. (யாக். 1:2; 1 பே. 5:9) சகோதரர் அரிஸ்டாடலிஸ் அப்போஸ்டாலிடிஸ் வாழ்க்கையிலும் இதுதான் நடந்தது. * 1946-ல் கிரீஸ் நாட்டில் அவர் ஞானஸ்நானம் எடுத்தார். பிறகு, 1952-ல் எலெனி என்பவரோடு அவருக்குக் கல்யாணம் நிச்சயமானது. இவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியான குறிக்கோள்தான் இருந்தது. கொஞ்ச நாட்களிலேயே எலெனிக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. அதற்குப் பின், அறுவை சிகிச்சையின் மூலம் அந்தக் கட்டி அகற்றப்பட்டது. ஆனால், அவர்களுக்குக் கல்யாணமாகி கொஞ்ச வருஷத்தில் திரும்பவும் அந்தக் கட்டி வளர்ந்தது. மருத்துவர்கள் மறுபடியும் அறுவை சிகிச்சை செய்தார்கள். ஆனால், அவருக்குப் பக்கவாதம் வந்துவிட்டது. அதனால், அவரால் சரியாகப் பேச முடியாமல் போனது. இவ்வளவு கஷ்டங்கள் போதாதென்று, அந்தச் சமயத்தில் அரசாங்கத்தின் துன்புறுத்தலும் இருந்தது. ஆனாலும், யெகோவாவின் சேவையில் தன்னுடைய ஆர்வத்தை எலெனி இழக்கவே இல்லை.

15 முப்பது வருஷங்களாக, தன்னுடைய மனைவியை அரிஸ்டாடலிஸ் கண்ணும்கருத்துமாகப் பார்த்துக்கொண்டார். அந்தச் சமயத்திலும் அவர் ஒரு மூப்பராகச் சேவை செய்தார், மாநாட்டு குழுக்களில் சேவை செய்தார், மாநாட்டு மன்றம் கட்டுவதற்கும் உதவியாக இருந்தார். 1987-ல் எலெனி ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, ஒரு பெரிய இரும்புக் கதவு அவர்மேல் மோதியதால் மூன்று வருஷங்களுக்கு சுய நினைவில்லாமல் இருந்தார்; கடைசியில் இறந்துபோய்விட்டார். தன்னுடைய வாழ்க்கை சரிதையின் முடிவில், அரிஸ்டாடலிஸ் இப்படிச் சொன்னார்: “என் வாழ்க்கை முழுவதும் சோதனைகளையும் சவால்களையும் எதிர்பார்க்காத சம்பவங்களையும் சந்தித்தேன். இதையெல்லாம் சமாளிப்பதற்கு உறுதியும் விடாமுயற்சியும் தேவைப்பட்டன. இருந்தாலும் யெகோவா என்னைப் பலப்படுத்தினார்.” (சங். 94:18, 19) கஷ்டங்கள் மத்தியிலும் தங்களால் முடிந்ததைச் செய்கிறவர்களை யெகோவா எந்தளவு நேசிக்கிறார்!

ஆட்ரீ ஹைட் எதிர்காலத்தைப் பற்றியே யோசித்ததால் பிரச்சினைகளை சந்தோஷமாகச் சமாளித்தார்

16. தன்னுடைய மனைவிக்கு சகோதரர் நார் என்ன அறிவுரை கொடுத்தார்?

16 எதிர்காலத்தைப் பற்றியே யோசியுங்கள். எதிர்காலத்தில் யெகோவா தனக்குக் கொடுக்கப்போகிற ஆசீர்வாதங்களைப் பற்றியே ஆபிரகாம் யோசித்ததால்தான் கஷ்டங்களை அவரால் சமாளிக்க முடிந்தது. சகோதரி ஆட்ரீ ஹைடும் ஆபிரகாமைப் போலவே யோசிப்பதற்கு முயற்சி செய்தார். அவருடைய முதல் கணவர் நேதன் ஹெச். நார் புற்றுநோயால் இறந்துபோனார். அவருடைய இரண்டாவது கணவர் க்ளென் ஹைட், அல்ஸைமர் வியாதியால் பாதிக்கப்பட்டார். * இதையெல்லாம் சமாளிப்பதற்கு, தன்னுடைய முதல் கணவரான நேதன் நார் சொன்ன சில வார்த்தைகள் தனக்கு உதவியாக இருந்ததென்று ஹைட் சொல்கிறார். நார் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னால் தன்னிடம் இப்படிச் சொன்னதாக அவர் சொல்கிறார்: “‘மரணத்துக்கு அப்புறம் நம்மோட நம்பிக்கை நிச்சயம் நிறைவேறும். அப்போ நாம வேதனைய அனுபவிக்க வேண்டியதே இல்ல. எப்பவும் எதிர்காலத்துல கிடைக்கப்போற பரிச பத்தியே யோசிச்சுப் பாரு. மத்தவங்களுக்கு உதவி செய்றதுக்காகவே உன்னோட வாழ்க்கைய பயன்படுத்து. அப்பதான் உனக்கு சந்தோஷம் கிடைக்கும்.’” மற்றவர்களுக்கு உதவி செய்வதும் ‘நம்பிக்கையில் சந்தோஷமாயிருப்பதும்’ உண்மையிலேயே நமக்கும் பிரயோஜனமாக இருக்கும், இல்லையா?—ரோ. 12:12.

17. (அ) எதிர்காலத்தைப் பற்றியே யோசிப்பது ஏன் ரொம்ப முக்கியம்? (ஆ) எதிர்கால ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்கு மீகா 7:7 எப்படி உதவும்?

17 எதிர்காலத்தைப் பற்றியே யோசிப்பது, என்றைக்கும் இல்லாதளவுக்கு இப்போது ரொம்ப ரொம்ப முக்கியம். ஏனென்றால், கடைசிக் காலத்தின் கடைசிக் கட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை உலக சம்பவங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. உறுதியான அஸ்திவாரங்களைக் கொண்ட அந்த நகரத்துக்காக நாம் ரொம்ப நாட்களுக்குக் காத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், சீக்கிரத்திலேயே அது இந்தப் பூமியை ஆட்சி செய்யப்போகிறது. அப்போது நமக்கு ஏராளமான ஆசீர்வாதங்கள் கிடைக்கப்போகின்றன. அவற்றில் அற்புதமான ஓர் ஆசீர்வாதம்தான் இறந்தவர்களைத் திரும்பவும் பார்ப்பது! அந்தச் சமயத்தில், ஆபிரகாமையும் அவருடைய குடும்பத்தையும் மறுபடியும் உயிரோடு கொண்டுவருவதன் மூலம், ஆபிரகாம் காட்டிய விசுவாசத்துக்கும் பொறுமைக்கும் யெகோவா பலன் கொடுப்பார். அவர்களை வரவேற்பதற்கு நீங்கள் அங்கே இருப்பீர்களா? ஆபிரகாம் மாதிரியே கடவுளுடைய அரசாங்கத்துக்காக தியாகங்கள் செய்யத் தயாராக இருந்தால்... பிரச்சினைகள் மத்தியிலும் தொடர்ந்து விசுவாசத்தோடு இருந்தால்... யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருந்தால்... கண்டிப்பாக நீங்களும் அங்கே இருப்பீர்கள்.மீகா 7:7-ஐ வாசியுங்கள்.

பாட்டு 102 ராஜ்ய பாடலைச் சேர்ந்து பாடுவோம்

^ பாரா. 5 கடவுளுடைய வார்த்தை நிறைவேறுவதற்காகக் காத்திருப்பது நம்முடைய பொறுமையைச் சோதிக்கலாம். சிலசமயங்களில், அது நம்முடைய விசுவாசத்தையும் உரசிப் பார்க்கலாம். யெகோவா கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறுவதைப் பார்ப்பதற்காக ஆபிரகாம் ரொம்பப் பொறுமையோடு காத்திருந்தார். பொறுமையாகக் காத்திருப்பது எப்படி என்பதை அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். நவீன கால ஊழியர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம்.

^ பாரா. 13 சகோதரர் பில் வால்டனுடைய வாழ்க்கை சரிதையை டிசம்பர் 1, 2013 ஆங்கில காவற்கோபுரம் பக். 8-10-ல் பாருங்கள்.

^ பாரா. 14 சகோதரர் அப்போஸ்டாலிடிஸின் வாழ்க்கை சரிதை பிப்ரவரி 1, 2002 காவற்கோபுரத்தில் பக். 24-28-ல் வந்திருக்கிறது.

^ பாரா. 16 சகோதரி ஹைடுடைய வாழ்க்கை சரிதையை ஜூலை 1, 2004, காவற்கோபுரத்தில் பக். 23-29-ல் பாருங்கள்.

^ பாரா. 56 படவிளக்கம்: வயதான ஒரு தம்பதி, யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்கிறார்கள். எதிர்காலத்தில் யெகோவா கொண்டுவரப்போகிற ஆசீர்வாதங்களைப் பற்றி யோசித்துப் பார்ப்பதன் மூலம் அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்கிறார்கள்.