Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 35

சபையில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் மதிப்பு காட்டுங்கள்!

சபையில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் மதிப்பு காட்டுங்கள்!

“கண் கையைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்றோ, தலை காலைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்றோ சொல்ல முடியாது.”—1 கொ. 12:21.

பாட்டு 63 என்றும் பற்றுள்ளோராய்

இந்தக் கட்டுரையில்... *

1. தன்னுடைய ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் யெகோவா எதைக் கொடுத்திருக்கிறார்?

சபையில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் யெகோவா ஒரு பங்கைக் கொடுத்திருக்கிறார். நமக்கு வெவ்வேறு பங்கு இருந்தாலும், நாம் எல்லாரும் முக்கியமானவர்கள்தான்! நமக்கும் மற்றவர்கள் தேவைப்படுகிறார்கள், மற்றவர்களுக்கும் நாம் தேவைப்படுகிறோம். இந்த முக்கியமான பாடத்தை அப்போஸ்தலன் பவுல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

2. ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும் என்பதையும் ஒன்றாகச் சேர்ந்து உழைக்க வேண்டும் என்பதையும் எபேசியர் 4:16 எப்படிக் காட்டுகிறது?

2 இந்தக் கட்டுரையின் முக்கிய வசனத்தில் பவுல் வலியுறுத்தியிருக்கிறபடி, யெகோவாவின் ஊழியர்களில் ஒருவரைப் பார்த்து, ‘நீங்கள் எனக்குத் தேவையில்லை’ என்று சொல்வதுபோல் நாம் யாருமே நடந்துகொள்ள முடியாது. (1 கொ. 12:21) சபை சமாதானமாக இருக்க வேண்டுமென்றால், நாம் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்; ஒன்றாகச் சேர்ந்து உழைக்க வேண்டும். (எபேசியர் 4:16-ஐ வாசியுங்கள்.) நாம் எல்லாரும் ஒற்றுமையோடு வேலை செய்யும்போது சபை பலப்படும்; அன்புக்கும் பஞ்சம் இருக்காது.

3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றியெல்லாம் பார்ப்போம்?

3 மூப்பர்கள் எப்படி ஒருவருக்கொருவர் மதிப்பு காட்டலாம் என்பதைப் பற்றியும், கல்யாணம் ஆகாத சகோதர சகோதரிகளை நாம் எப்படி மதிக்கலாம் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். நம்முடைய மொழியைச் சரளமாகப் பேசத் தெரியாத சகோதர சகோதரிகளை எப்படி மதிக்கலாம் என்பதையும் பார்ப்போம்.

மூப்பர்களே, ஒருவருக்கொருவர் மதிப்பு காட்டுங்கள்

4. ரோமர் 12:10-ல் பவுல் சொல்லியிருக்கிற எந்த அறிவுரையை மூப்பர்கள் பின்பற்ற வேண்டும்?

4 சபையில் இருக்கிற எல்லா மூப்பர்களும் யெகோவாவின் சக்தியால் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. (1 கொ. 12:17, 18) சிலர் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கலாம்; மற்றவர்களைவிட அவர்களுக்கு அனுபவம் குறைவாக இருக்கலாம். வேறுசில மூப்பர்களால், வயதாவதாலோ உடல்நலப் பிரச்சினைகளாலோ அதிகம் செய்ய முடியாமல் போகலாம். ஆனாலும், எந்தவொரு மூப்பரும் இன்னொரு மூப்பரைப் பார்த்து, ‘நீங்கள் எனக்குத் தேவையில்லை’ என்பதுபோல் நடந்துகொள்ளக் கூடாது. அதற்குப் பதிலாக, ரோமர் 12:10-ல் அப்போஸ்தலன் பவுல் கொடுத்திருக்கிற அறிவுரையின்படி ஒவ்வொரு மூப்பரும் நடந்துகொள்ள வேண்டும்.—வாசியுங்கள்.

ஒரு மூப்பர் பேசுவதைக் கவனமாகக் கேட்பதன் மூலம், அவர்மேல் மரியாதை வைத்திருப்பதை மற்ற மூப்பர்கள் காட்டலாம் (பாராக்கள் 5-6)

5. மூப்பர்கள் ஒருவரை ஒருவர் எப்படி மதிக்கலாம், அதைச் செய்வது ஏன் முக்கியம்?

5 மூப்பர் குழுவில் இருக்கும் மூப்பர்கள் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். இதை அவர்கள் எப்படிச் செய்யலாம்? ஒரு மூப்பர் பேசும்போது, மற்ற மூப்பர்கள் கவனமாகக் கேட்க வேண்டும். அதுவும், மூப்பர் குழுவாக ஒன்றுகூடிவந்து முக்கியமான விஷயங்களைப் பேசும்போது அப்படிக் கேட்க வேண்டும். ஏன்? அக்டோபர் 1, 1988 காவற்கோபுரம் என்ன சொல்கிறது என்று கவனியுங்கள். “எந்த ஒரு சூழ்நிலையை சமாளிக்கவோ அல்லது எந்த ஒரு முக்கிய தீர்மானத்தை எடுக்கவோ தேவையான பைபிள் நியமத்தை எடுத்துரைக்க, மூப்பர்களின் குழுவிலுள்ள எந்த ஒரு மூப்பரின் மனதையும் கிறிஸ்து பரிசுத்த ஆவியின் மூலமாக வழிநடத்தக்கூடும் என்பதை மூப்பர்கள் அறிந்திருப்பார்கள். (அப். 15:6–15) ஒரு குழுவினுள் எந்தத் தனி ஒரு மூப்பரும் பரிசுத்த ஆவியின் ஏகபோக உரிமையை உடையவராக இல்லை.”

6. மூப்பர்கள் எப்படி ஒற்றுமையாகச் செயல்படலாம், அதனால் சபை எப்படிப் பிரயோஜனமடையும்?

6 மற்ற மூப்பர்களை மதிக்கும் ஒரு மூப்பர், மூப்பர் குழு கூட்டத்தில் எப்போது பார்த்தாலும் தான்தான் முதலில் பேச வேண்டுமென்று நினைக்க மாட்டார். அதோடு, அவரே பேசிக்கொண்டிருக்க மாட்டார்; எப்போதுமே தன்னுடைய கருத்துதான் சரி என்பதுபோல் நினைக்கவும் மாட்டார். அதற்குப் பதிலாக, தன்னுடைய கருத்தைத் தாழ்மையோடும் அடக்கத்தோடும் சொல்வார். மற்றவர்களுடைய கருத்துகளைக் கவனமாகக் கேட்பார். ரொம்ப முக்கியமாக, பைபிள் நியமங்களை எடுத்துப் பேசுவார். “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” கொடுத்திருக்கிற அறிவுரைகளின்படி செய்வதில் ஆர்வமாக இருப்பார். (மத். 24:45-47) மூப்பர் குழு கூட்டத்தில் அன்பான, மரியாதையான சூழல் நிலவும்போது கடவுளுடைய சக்தி தாராளமாகச் செயல்படும். சபையைப் பலப்படுத்துகிற முடிவுகளை எடுக்க அது அவர்களை வழிநடத்தும்.—யாக். 3:17, 18.

கல்யாணம் ஆகாத சகோதர சகோதரிகளுக்கு மதிப்பு கொடுங்கள்

7. கல்யாணம் ஆகாதவர்களைப் பற்றி இயேசு என்ன நினைத்தார்?

7 கல்யாணம் ஆனவர்களும், குழந்தைகுட்டிகளை வைத்திருப்பவர்களும் நம்முடைய சபைகளில் இருக்கிறார்கள். அதோடு, கல்யாணம் ஆகாத சகோதர சகோதரிகளும் * இருக்கிறார்கள். கல்யாணம் ஆகாதவர்களுக்கு நாம் எப்படி மதிப்பு காட்டலாம்? அவர்களைப் பற்றி இயேசு என்ன நினைத்தார் என்று இப்போது பார்க்கலாம். இந்தப் பூமியில் ஊழியம் செய்தபோது, இயேசு கல்யாணம் செய்துகொள்ளவில்லை. தன்னுடைய நேரத்தையெல்லாம் ஊழியம் செய்வதற்கே அர்ப்பணித்தார். அவருடைய கவனமெல்லாம் அதன்மீதுதான் இருந்தது. கிறிஸ்தவர்கள் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்றோ, செய்துகொள்ளக் கூடாதென்றோ இயேசு சொல்லவில்லை. ஆனால், கல்யாணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கு கிறிஸ்தவர்கள் சிலர் முடிவு செய்வார்கள் என்பதாக அவர் சொன்னார். (மத். 19:11, 12; மத்தேயு 19:12-க்கான “திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள்” என்ற ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) கல்யாணம் ஆகாதவர்களை, தாழ்வானவர்களாகவோ எதையோ இழந்துவிட்டவர்களாகவோ இயேசு நினைக்கவில்லை. அவர்கள்மீதும் அவர் ரொம்ப மதிப்பு வைத்திருந்தார்.

8. எதைப் பற்றி யோசித்துப்பார்க்கும்படி 1 கொரிந்தியர் 7:7-9-ல் பவுல் சொல்கிறார்?

8 அப்போஸ்தலன் பவுல் ஊழியம் செய்தபோது, இயேசுவைப் போலவே அவருக்கும் வாழ்க்கைத் துணை என யாரும் இருக்கவில்லை. கிறிஸ்தவர்கள் கல்யாணம் செய்துகொள்வது தவறென்று பவுல் எப்போதும் சொன்னதில்லை. கல்யாணம் செய்துகொள்வதா வேண்டாமா என்று முடிவெடுப்பது அவரவருடைய தனிப்பட்ட விஷயம் என்பதை அவர் புரிந்துவைத்திருந்தார். இருந்தாலும், கல்யாணம் செய்துகொள்ளாமலேயே யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியுமா என்பதைப் பற்றி யோசித்துப்பார்க்கும்படி கிறிஸ்தவர்களை அவர் கேட்டுக்கொண்டார். (1 கொரிந்தியர் 7:7-9-ஐ வாசியுங்கள்.) கல்யாணம் ஆகாத கிறிஸ்தவர்களை பவுல் தாழ்வாக நினைக்கவில்லை. சொல்லப்போனால், கல்யாணம் ஆகாத இளம் சகோதரரான தீமோத்தேயுவுக்கு அவர் பெரிய பெரிய பொறுப்புகளைக் கொடுத்தார். * (பிலி. 2:19-22) இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? ஒருவர் கல்யாணம் ஆனவரா ஆகாதவரா என்பதை மட்டுமே வைத்து அவருடைய தகுதியை எடை போடக் கூடாது.—1 கொ. 7:32-35, 38.

9. கல்யாணம் செய்துகொள்வதைப் பற்றியும் செய்துகொள்ளாமல் இருப்பதைப் பற்றியும் நமக்கு எப்படிப்பட்ட எண்ணம் இருக்க வேண்டும்?

9 இயேசுவும் சரி பவுலும் சரி, கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்றோ செய்துகொள்ளக் கூடாதென்றோ கிறிஸ்தவர்களுக்குச் சொல்லவில்லை. அப்படியென்றால், இந்த விஷயத்தை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்? அதைப் பற்றி அக்டோபர் 1, 2012 காவற்கோபுரம் (ஆங்கிலம்) இப்படிச் சொல்கிறது: “கல்யாணம் செய்துகொள்வது... செய்யாமல் இருப்பது... இவை இரண்டுமே கடவுளிடமிருந்து கிடைக்கிற வரம்தான்! கல்யாணம் செய்துகொள்ளாமல் இருப்பதை, வெட்கப்பட வேண்டிய விஷயமாகவோ வருத்தப்பட வேண்டிய விஷயமாகவோ யெகோவா நினைப்பதில்லை.“ இதை மனதில் வைத்து, நம் சபைகளில் இருக்கிற கல்யாணம் ஆகாத சகோதர சகோதரிகளை நாம் உயர்வாக மதிக்க வேண்டும்.

கல்யாணம் ஆகாத சகோதர சகோதரிகள்மீது நமக்கு மரியாதை இருந்தால் நாம் என்ன செய்ய மாட்டோம்? (பாரா 10)

10. வாழ்க்கைத் துணை இல்லாத சகோதர சகோதரிகளை மதிக்கிறோம் என்பதை நாம் எப்படிக் காட்டலாம்?

10 கல்யாணம் ஆகாத சகோதர சகோதரிகளின் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்கிறோம் என்பதையும், அவர்களுடைய உணர்வுகளை மதிக்கிறோம் என்பதையும் நாம் எப்படிக் காட்டலாம்? அவர்களில் சிலர், கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்க முடிவெடுத்திருப்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். வேறுசிலர், கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்பட்டாலும் பொருத்தமான துணை கிடைக்காததால் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கலாம். இன்னும் சிலர், தங்களுடைய துணையை மரணத்தில் பறிகொடுத்திருக்கலாம். எது எப்படியிருந்தாலும், அவர்களிடம் போய் ‘ஏன் கல்யாணம் செஞ்சுக்காம இருக்கீங்க?’ என்று கேட்பதோ, ‘நான் உங்களுக்கு பொருத்தமான துணைய தேடி தர்றேன்’ என்று சொல்வதோ சரியாக இருக்குமா? அவர்களில் சிலர், தங்களுக்கு ஒரு துணையைத் தேடித் தரும்படி நம்மிடம் கேட்கலாம். ஆனால், அவர்கள் அப்படிக் கேட்காத பட்சத்தில், நாமாகவே போய் ‘நான் உங்களுக்கு ஒரு துணைய தேடி தர்றேன்’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? (1 தெ. 4:11; 1 தீ. 5:13) துணையில்லாமல் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்துவருகிற சகோதர சகோதரிகளில் சிலர் என்ன சொல்கிறார்கள் என்று இப்போது பார்ப்போம்.

11-12. கல்யாணம் ஆகாத சகோதர சகோதரிகள் சோர்வடைவதற்கு நாம் எப்படிக் காரணமாகிவிடலாம்?

11 கல்யாணம் செய்துகொள்ளாத ஒரு வட்டாரக் கண்காணியைப் பற்றி இப்போது பார்க்கலாம். தன்னுடைய நியமிப்பை அவர் திறமையாகச் செய்துவருகிறார். கல்யாணம் செய்யாமல் இருப்பதில் நிறைய நன்மைகள் இருப்பதாக அவர் நினைக்கிறார். இருந்தாலும், அவர்மீது அக்கறை வைத்திருக்கிற சகோதர சகோதரிகள், ‘நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க?’ என்று கேட்கிறார்கள். அவர்கள் அப்படிக் கேட்பது தனக்கு ரொம்பக் கஷ்டமாக இருப்பதாக அவர் சொல்கிறார். இப்போது இன்னொரு சகோதரர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். நம்முடைய கிளை அலுவலகங்கள் ஒன்றில் அவர் சேவை செய்கிறார். “கல்யாணம் ஆகாதவங்கெல்லாம் ரொம்ப பரிதாபமான நிலைமையில இருக்குற மாதிரி சகோதர சகோதரிகள் சிலசமயங்கள்ல நினைக்க வெச்சிடுறாங்க. அதனால, கல்யாணம் பண்ணிக்காம இருக்குறத ஒரு வரம்னு நினைக்குறதுக்கு பதிலா, அது ஒரு சுமைனு நினைக்க வெச்சிடுறாங்க.”

12 பெத்தேலில் சேவை செய்கிற கல்யாணம் ஆகாத ஒரு சகோதரி இப்படிச் சொல்கிறார்: “கல்யாணம் ஆகாதவங்க எல்லாருமே தங்களுக்குனு ஒரு துணைய தேடிக்கிட்டு இருக்கிறதாவோ, சகோதர சகோதரிகள் ஒண்ணா இருக்கிற எல்லா சமயங்களையும் தங்களுக்குனு ஒரு துணைய தேடிக்கிறதுக்கான வாய்ப்புகளா பார்க்குறதாவோ சில சகோதர சகோதரிகள் நினைச்சுக்குறாங்க. ஒரு நியமிப்புக்காக நான் இன்னொரு இடத்துக்கு போனேன். நான் போய் சேர்ந்த அந்த நாள், கூட்டங்கள் நடக்குற நாளா இருந்துச்சு. நான் யார் வீட்டுல தங்கியிருந்தனோ அந்த சகோதரி, என்னோட வயசுல ரெண்டு சகோதரர்கள் அவங்க சபையில இருக்குறதா சொன்னாங்க. ‘அவங்கள்ல ஒருத்தர உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணுங்கிறதுக்காக இத நான் சொல்லல’ அப்படினு சொன்னாங்க. ஆனா, ராஜ்ய மன்றத்துக்குள்ள நுழைஞ்ச உடனே, அவங்க ரெண்டு பேரு முன்னாடி கொண்டுபோய் என்னை நிறுத்துனாங்க. அந்த ரெண்டு சகோதரர்களுக்கும் எனக்கும் ரொம்ப தர்மசங்கடமா ஆயிடுச்சு.”

13. யாருடைய உதாரணம் தனக்கு உற்சாகத்தைத் தருவதாக கல்யாணம் ஆகாத ஒரு சகோதரி சொல்கிறார்?

13 பெத்தேலில் சேவை செய்கிற கல்யாணம் ஆகாத இன்னொரு சகோதரி என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள். “ரொம்ப வருஷமா கல்யாணம் பண்ணிக்காம பயனியர் ஊழியம் செஞ்சிட்டிருக்கிற சில சகோதர சகோதரிகள எனக்கு தெரியும். அவங்க பொதுவா எல்லாத்தையும் தெளிவா யோசிப்பாங்க, நல்ல குறிக்கோள்கள வெச்சிருப்பாங்க, தியாகங்கள் செய்றதுக்கு தயாரா இருப்பாங்க, அவங்களோட சேவைய முழு திருப்தியோட செய்வாங்க. அதுமட்டும் இல்லாம, சபைக்கு ரொம்ப பிரயோஜனமா இருப்பாங்க. கல்யாணம் பண்ணிக்காம இருக்குறதால தங்களையே அவங்க உயர்வா நினைக்குறது இல்ல. அதேசமயத்துல, தங்களுக்குனு ஒரு துணையோ குழந்தைகுட்டிகளோ இல்லாதனால, எதையோ இழந்துட்ட மாதிரியும் நினைக்குறது இல்ல” என்று அவர் சொல்கிறார். சபையில் இருக்கிற ஒவ்வொருவரும் தங்களுடைய மதிப்பையும் மற்றவர்களுடைய மதிப்பையும் புரிந்து நடந்துகொள்ளும்போது, நம் எல்லாராலும் சபைக்கு அழகு சேர்க்க முடியும். அப்போது, நம்மைப் பார்த்து சகோதர சகோதரிகள் பரிதாபப்படுவதாகவோ பொறாமைப்படுவதாகவோ நம்மை அலட்சியம் செய்வதாகவோ உணர மாட்டோம். அவர்கள் நம்மை அளவுக்கு அதிகமாக உயர்த்தி வைத்திருக்கிறார்கள் என்ற உணர்வும் நமக்கு வராது. அவர்கள் நம்மை ரொம்ப நேசிக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்வோம்.

14. கல்யாணம் ஆகாத சகோதர சகோதரிகளை நாம் உயர்வாக மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

14 ஒருவருடைய மதிப்பு, அவரிடம் இருக்கிற குணங்களில்தான் இருக்கிறதே தவிர, அவர் கல்யாணம் ஆனவரா ஆகாதவரா என்பதில் கிடையாது. அதனால், கல்யாணம் ஆகாத சகோதர சகோதரிகளிடம் இருக்கிற தங்கமான குணங்களைத்தான் நாம் பார்க்க வேண்டும். அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதற்குப் பதிலாக, யெகோவாவுக்கு அவர்கள் உண்மையோடு சேவை செய்துவருவதைப் பார்த்து நாம் சந்தோஷப்பட வேண்டும். இப்படிச் செய்யும்போது, ‘அவர்கள் நமக்குத் தேவையில்லை’ என்பதுபோல் நாம் நடந்துகொள்ள மாட்டோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். (1 கொ. 12:21) அவர்களை நாம் மதிப்பதையும், அவர்கள் சபையில் இருப்பதைப் பார்த்து நாம் சந்தோஷப்படுவதையும் அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

நம்முடைய மொழியைச் சரளமாகப் பேசத் தெரியாத சகோதர சகோதரிகளுக்கு மதிப்பு காட்டுங்கள்

15. ஊழியத்தில் அதிகமாக ஈடுபடுவதற்கு சிலர் என்னென்ன மாற்றங்களைச் செய்கிறார்கள்?

15 சமீப வருஷங்களில், ஊழியத்தை அதிகமாக செய்வதற்காக சகோதர சகோதரிகள் நிறைய பேர் புதிய மொழியைக் கற்றுவருகிறார்கள். இதற்காக, தங்களுடைய வாழ்க்கையில் அவர்கள் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. தங்களுடைய தாய்மொழியில் கூட்டங்கள் நடக்கிற சபையை விட்டுவிட்டு, தேவை அதிகமுள்ள வேறொரு மொழி சபைக்கு அவர்கள் மாறிப்போகிறார்கள். (அப். 16:9) யெகோவாவுக்கு அதிகமாக சேவை செய்வதற்காக, தாங்களாகவே விருப்பப்பட்டு இந்த முடிவை எடுக்கிறார்கள். வேறொரு மொழியைச் சரளமாகப் பேசுவதற்கு அவர்களுக்கு நிறைய வருஷங்களானாலும், பல வழிகளில் சபைக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள். அவர்களுடைய அருமையான குணங்களும் அனுபவமும் சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளைப் பலப்படுத்தியிருக்கின்றன. தியாக உள்ளம் படைத்த இவர்களை நாம் உயர்வாக மதிக்கிறோம்!

16. ஒரு சகோதரரை சிபாரிசு செய்வதற்கு முன்பு மூப்பர்கள் எதை யோசித்துப்பார்க்க வேண்டும்?

16 சபையில் பேசப்படுகிற மொழி ஒரு சகோதரருக்கு சரளமாக வரவில்லை என்பதற்காக, மூப்பராகவோ உதவி ஊழியராகவோ மூப்பர் குழு அவரை சிபாரிசு செய்யாமல் இருக்கக் கூடாது. ஒரு சகோதரரை சிபாரிசு செய்வதற்கு முன்பு, பைபிளில் இருக்கிற தகுதிகளை அவர் பூர்த்தி செய்திருக்கிறாரா என்று பார்க்க வேண்டுமே தவிர, உள்ளூர் மொழி அவருக்குச் சரளமாக வருகிறதா இல்லையா என்று பார்க்கக் கூடாது.—1 தீ. 3:1-10, 12, 13; தீத். 1:5-9.

17. வேறொரு நாட்டுக்குக் குடிமாறிப் போயிருக்கிற சகோதர சகோதரிகள் எதைப் பற்றி யோசித்துப்பார்க்க வேண்டும்?

17 யெகோவாவின் சாட்சிகளில் சிலர், தங்களுடைய நாட்டில் இருக்கிற கஷ்டமான சூழ்நிலையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் வேறொரு நாட்டுக்கு குடும்பத்தோடு குடிமாறிப் போயிருக்கிறார்கள். வேறுசிலர், வேலை தேடி குடிமாறிப் போயிருக்கிறார்கள். அந்த நாட்டில் பேசப்படும் முக்கியமான மொழியில் தங்களுடைய பிள்ளைகளை அவர்கள் படிக்கவைக்க வேண்டியிருக்கலாம். அதோடு, தங்களுக்கு வேலை கிடைப்பதற்காக அவர்களும் அந்த மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம். இந்தச் சூழ்நிலையில், அவர்களுடைய தாய்மொழியில் கூட்டங்கள் நடக்கிற சபை அவர்கள் போயிருக்கிற இடத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது அவர்கள் எந்தச் சபைக்குப் போக வேண்டும்? அந்த நாட்டின் மொழியில் கூட்டங்கள் நடக்கிற சபைக்கா அல்லது அவர்களுடைய தாய்மொழியில் கூட்டங்கள் நடக்கிற சபைக்கா?

18. கலாத்தியர் 6:5-ஐ மனதில் வைத்து குடும்பத் தலைவர்கள் எடுக்கிற முடிவுக்கு நாம் எப்படி மரியாதை காட்டலாம்?

18 அந்தந்த குடும்பத் தலைவர்கள்தான் இதைப் பற்றி முடிவெடுக்க வேண்டும். இது அவரவருடைய தனிப்பட்ட விஷயமாக இருப்பதால், தங்களுடைய குடும்பத்துக்கு எது நல்லது என்பதை மனதில் வைத்து அவர்கள் முடிவெடுக்க வேண்டும். (கலாத்தியர் 6:5-ஐ வாசியுங்கள்.) குடும்பத் தலைவர்கள் எடுக்கிற முடிவுக்கு நாம் மரியாதை காட்ட வேண்டும். அவர்கள் என்ன முடிவெடுத்தாலும் சரி, நாம் அதை ஏற்றுக்கொண்டு, அவர்கள்மேலும் அவர்களுடைய குடும்பத்தார்மேலும் அன்பு காட்ட வேண்டும்.—ரோ. 15:7.

19. என்ன முடிவெடுப்பதற்கு முன்பு குடும்பத் தலைவர்கள் நன்றாக யோசித்துப்பார்க்க வேண்டும்?

19 சிலர், தங்களுடைய தாய்மொழியில் கூட்டங்கள் நடக்கிற சபைக்குப் போய்க்கொண்டிருக்கலாம். ஆனால், அவர்களுடைய பிள்ளைகளுக்கு அந்த மொழி அவ்வளவாகப் புரியாமல் இருக்கலாம். ஏனென்றால், பள்ளியில் அவர்கள் படிக்கிற மொழியும், அவர்களுடைய பெற்றோர்களின் தாய்மொழியும் வெவ்வேறாக இருக்கலாம். இந்தச் சூழ்நிலையில், கூட்டங்களில் நடக்கிற விஷயங்களைப் புரிந்துகொள்வதும் யெகோவாவிடம் நெருங்கி வருவதும் பிள்ளைகளுக்குக் கஷ்டமாக இருக்கலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், யெகோவாவிடமும் அவருடைய மக்களிடமும் நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்வதற்குப் பிள்ளைகளுக்கு எப்படி உதவலாம் என்பதைப் பற்றிக் குடும்பத் தலைவர்கள் நன்றாக யோசித்துப்பார்க்க வேண்டும். நல்ல முடிவுகள் எடுப்பதற்கான ஞானத்தைக் கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும். தங்களுடைய தாய்மொழியை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு பிள்ளைகளுக்கு உதவ வேண்டும். இல்லையென்றால், பிள்ளைகள் நன்றாகப் புரிந்துகொள்கிற மொழியில் கூட்டங்கள் நடக்கிற சபைக்கு மாறிப்போக வேண்டும். குடும்பத் தலைவர்கள் என்ன முடிவெடுத்தாலும், அவர்கள் எந்தச் சபைக்குப் போகிறார்களோ அந்தச் சபையில் இருப்பவர்கள், அவர்கள்மேலும் அவர்களுடைய குடும்பத்தார்மேலும் அன்பு காட்ட வேண்டும்.

புதிய மொழியைக் கற்றுக்கொண்டிருப்பவர்களை நாம் மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? (பாரா 20)

20. புதிய மொழியைக் கற்றுக்கொள்கிற சகோதர சகோதரிகளை நாம் மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

20 நிறைய சபைகளில், புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்குக் கடினமாக உழைக்கிற சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள் என்பதை இதுவரை பார்த்த விஷயங்கள் காட்டுகின்றன. தங்கள் மனதில் இருப்பதை அந்த மொழியில் முழுமையாக வெளிப்படுத்துவது அவர்களுக்குச் சிரமமாக இருக்கலாம். ஆனாலும், அந்த மொழியை அவர்கள் சரளமாகப் பேசுகிறார்களா இல்லையா என்று பார்ப்பதற்குப் பதிலாக, அவர்களிடம் இருக்கிற நல்லதை நாம் பார்க்க வேண்டும். அப்போது, யெகோவாமேல் அவர்கள் வைத்திருக்கிற அன்பையும் அவருக்குச் சேவை செய்ய வேண்டுமென்று அவர்கள் ஆசைப்படுவதையும் நம்மால் தெளிவாகப் பார்க்க முடியும். அவர்களிடம் இருக்கிற இந்தப் பொன்னான குணங்களைப் பார்க்கும்போது, அவர்களை நாம் உயர்வாக நினைப்போம்; அவர்களுக்கு மதிப்பு மரியாதை காட்டுவோம். நம்முடைய மொழி அவர்களுக்குச் சரளமாக வரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக, ‘நீங்கள் எனக்குத் தேவையில்லை’ என்பதுபோல் நடந்துகொள்ள மாட்டோம்.

யெகோவாவுக்கு நாம் அருமையானவர்கள்!

21-22. நமக்கு எப்படிப்பட்ட பாக்கியம் இருக்கிறது?

21 நம் ஒவ்வொருவருக்கும் சபையில் ஒரு பங்கை யெகோவா கொடுத்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய பாக்கியம்! நாம் ஆண்களோ பெண்களோ, கல்யாணம் ஆனவர்களோ ஆகாதவர்களோ, இளைஞர்களோ வயதானவர்களோ, ஒரு மொழியைச் சரளமாகப் பேசத் தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ, நாம் எல்லாரும் யெகோவாவுக்கு அருமையானவர்கள்! அதோடு, சபையில் இருக்கிற மற்றவர்கள் நமக்கு அருமையானவர்கள்; நாமும் மற்றவர்களுக்கு அருமையானவர்கள்!—ரோ. 12:4, 5; கொலோ. 3:10, 11.

22 மனித உடலைப் பற்றி பவுல் சொன்ன உவமையிலிருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டோம், இல்லையா? அந்தப் பாடங்களைக் கடைப்பிடிக்க தொடர்ந்து நாம் முயற்சி செய்யலாம். இப்படிச் செய்யும்போது, நமக்கும் மற்றவர்களுக்கும் சபையில் இருக்கிற பங்கை நாம் மதிக்கிறோம் என்பதை இன்னும் நிறைய வழிகளில் காட்டுவோம்.

பாட்டு 121 ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோம்

^ பாரா. 5 யெகோவாவின் சாட்சிகள் வெவ்வேறு பின்னணியிலிருந்து வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் சபையில் ஒரு பங்கு இருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் ஏன் மதிப்பு காட்ட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை நமக்கு உதவும்.

^ பாரா. 7 இந்தக் கட்டுரையில், “கல்யாணம் ஆகாதவர்கள்” என்ற வார்த்தைகள், தங்களுடைய துணையை மரணத்தில் பறிகொடுத்தவர்களையும் உட்படுத்துகின்றன.

^ பாரா. 8 தீமோத்தேயு கல்யாணம் செய்துகொள்ளவே இல்லையென்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது.