Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 36

‘மனுஷர்களைப் பிடிப்பதற்கு’ நீங்கள் தயாரா?

‘மனுஷர்களைப் பிடிப்பதற்கு’ நீங்கள் தயாரா?

“பயப்படாதே. இனிமேல் நீ மனுஷர்களை உயிரோடு பிடிப்பாய்.”—லூக். 5:10.

பாட்டு 137 தைரியத்தைத் தாருங்கள்

இந்தக் கட்டுரையில்... *

1. நான்கு மீனவர்களுக்கு இயேசு என்ன அழைப்பைக் கொடுத்தார், அப்போது அவர்கள் என்ன செய்தார்கள்?

சீஷர்களான பேதுருவும், அந்திரேயாவும், யாக்கோபும், யோவானும் மீன்பிடிக்கும் தொழிலைச் செய்துவந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னால் வாருங்கள், உங்களை மனுஷர்களைப் பிடிப்பவர்களாக * ஆக்குவேன்” என்று சொன்னார். இதைக் கேட்டபோது அவர்களுக்கு எவ்வளவு ஆச்சரியமாக இருந்திருக்கும்! அவர்கள் என்ன செய்தார்கள்? “உடனடியாக வலைகளை விட்டுவிட்டு அவர் பின்னால் போனார்கள்.” (மத். 4:18-22) இந்த முடிவால் அவர்களுடைய வாழ்க்கை நிரந்தரமாக மாறியது. எப்படி? அதற்குப்பின், மீன்களைப் பிடிப்பதற்குப் பதிலாக ‘மனுஷர்களை உயிரோடு பிடிப்பவர்களாக’ ஆனார்கள். (லூக். 5:10) இன்றும், சத்தியத்தை நேசிக்கிறவர்களுக்கு இந்த அழைப்பை இயேசு கொடுக்கிறார். (மத். 28:19, 20) நீங்கள் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா?

2. பிரஸ்தாபியாக ஆக வேண்டுமென்ற முக்கியமான முடிவை யார் எடுக்க வேண்டும், அந்த முடிவை எடுப்பதற்கு எது உதவும்?

2 சில காலம் நீங்கள் பைபிளைப் படித்து அதில் முன்னேறியிருக்கலாம். இப்போது, பிரஸ்தாபியாக ஆவதா வேண்டாமா என்று முடிவெடுக்கும் கட்டத்துக்கு நீங்கள் வந்திருக்கலாம். இயேசுவின் அழைப்பை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயங்குகிறீர்களா? அப்படியென்றால், அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்வது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பதை நீங்கள் தெரிந்துவைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதனால் சோர்ந்துபோகாதீர்கள்! பேதுருவும் அவருடைய நண்பர்களும் தங்கள் வலைகளை உடனடியாக விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றிப் போனார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் முன்பின் யோசிக்காமல் அந்த முடிவை எடுக்கவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பே, இயேசுதான் மேசியா என்பதைத் தெரிந்துகொண்டு அவரை ஏற்றுக்கொண்டார்கள். (யோவா. 1:35-42) அதேபோல், நீங்களும் யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் ஏற்கெனவே நிறைய கற்றுக்கொண்டீர்கள். இப்போது, யெகோவாவிடம் தொடர்ந்து நெருங்கிவர நீங்கள் ஆசைப்படலாம். ஆனால், பிரஸ்தாபியாக ஆக வேண்டுமென்ற முடிவை முன்பின் யோசிக்காமல் நீங்கள் எடுக்கக் கூடாது. இயேசுவின் சீஷர்களாக ஆவதற்கு பேதுருவுக்கும் அந்திரேயாவுக்கும் மற்றவர்களுக்கும் எது உதவியது?

3. இயேசுவின் அழைப்பை ஆசையோடு ஏற்றுக்கொள்ள எவையெல்லாம் உங்களுக்கு உதவும்?

3 மீன்பிடிக்கும் வேலையைச் செய்வதற்கான தூண்டுதலும் அறிவும் தைரியமும் சுயக்கட்டுப்பாடும் இயேசுவின் முதல் சீஷர்களிடம் இருந்தன. மனுஷர்களைப் பிடிக்கும் வேலையைத் திறமையாகச் செய்வதற்கு இவையெல்லாம் அவர்களுக்கு உதவியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சீஷராக்கும் வேலையைத் திறமையாகச் செய்வதற்கு இவற்றையெல்லாம் நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

பிரசங்கிப்பதற்கான தூண்டுதலை அதிகப்படுத்துங்கள்

பேதுருவும் மற்றவர்களும் மனுஷர்களைப் பிடிப்பவர்களாக ஆனார்கள். இந்த முக்கியமான வேலை நம்முடைய நாளிலும் தொடருகிறது (பாராக்கள் 4-5)

4. மீன்பிடிக்கும் வேலையை பேதுரு ஏன் செய்தார்?

4 தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக மீன்பிடிக்கும் வேலையை பேதுரு செய்தார். ஆனால், அதை வெறுமனே கடமைக்காக அவர் செய்யவில்லை. அந்த வேலையை அவர் ரொம்ப நேசித்ததாகத் தெரிகிறது. (யோவா. 21:3, 9-15) மனுஷர்களைப் பிடிக்கும் வேலையையும் அவர் நேசிக்க ஆரம்பித்தார். யெகோவாவின் உதவியோடு அந்த வேலையில் திறமைசாலியாக ஆனார்.—அப். 2:14, 41.

5. லூக்கா 5:8-11-ல் சொல்லியிருக்கிறபடி, பேதுரு ஏன் பயப்பட்டார், நாம் பயப்படாமல் இருக்க எது உதவும்?

5 யெகோவாமேல் அன்பு இருப்பதால்தான் நாம் ஊழியம் செய்கிறோம். இந்த வேலையைச் செய்வதற்கு அந்த அன்புதான் முக்கியமான தூண்டுதலாக இருக்கிறது. ‘இந்த வேலைய செய்றதுக்கெல்லாம் எனக்கு தகுதி இல்ல’ என்ற உணர்வைச் சமாளிக்கவும் இந்த அன்பு நமக்கு உதவும். மனுஷர்களைப் பிடிக்கும் வேலையைச் செய்வதற்கு பேதுருவை இயேசு அழைத்தபோது, “பயப்படாதே” என்று சொன்னார். (லூக்கா 5:8-11-ஐ வாசியுங்கள்.) இயேசுவின் சீஷரானால் தனக்கு என்ன ஆகுமோ என்று நினைத்து பேதுரு பயப்படவில்லை. அதற்குப் பதிலாக, மீன்களைப் பிடிக்க இயேசு அற்புதமான விதத்தில் உதவியதைப் பார்த்து அவர் மலைத்துப்போயிருந்தார். அதோடு, இயேசுவோடு சேர்ந்து வேலை செய்வதற்குத் தனக்குத் தகுதி இல்லையென்று அவர் நினைத்தார். ஆனால் நீங்களோ, இயேசுவின் சீஷராக ஆவதில் என்னவெல்லாம் அடங்கியிருக்கின்றன என்பதை நினைத்துப் பயப்படலாம். அப்படியென்றால், யெகோவாமீதும் இயேசுமீதும் மற்றவர்கள்மீதும் இருக்கிற அன்பைப் பலப்படுத்துங்கள். அப்போது, மனுஷர்களைப் பிடிக்கச் சொல்லி இயேசு கொடுக்கிற அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு உங்கள் மனம் உங்களைத் தூண்டும்.—மத். 22:37, 39; யோவா. 14:15.

6. வேறு என்ன காரணங்களுக்காக நாம் ஊழியம் செய்கிறோம்?

6 மற்ற சில காரணங்களுக்காகவும் நாம் ஊழியம் செய்கிறோம். முதலாவதாக, ‘புறப்பட்டுப் போய் . . . சீஷர்களாக்குங்கள்’ என்று இயேசு கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிய நாம் விரும்புகிறோம். (மத். 28:19, 20) இரண்டாவதாக, மக்கள் “கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும்” இருப்பதாலும் நாம் அவர்களுக்குப் பிரசங்கிக்கிறோம். (மத். 9:36) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய உண்மைகளை உடனடியாகத் தெரிந்துகொள்ள வேண்டிய சூழ்நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். மூன்றாவதாக, எல்லா விதமான மக்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்று காப்பாற்றப்பட வேண்டுமென்று யெகோவா ஆசைப்படுகிறார்.—1 தீ. 2:4.

7. பிரசங்க வேலையின் முக்கியத்துவத்தை ரோமர் 10:13-15 எப்படிக் காட்டுகிறது?

7 பிரசங்க வேலை மற்றவர்களுடைய உயிரை எப்படிக் காப்பாற்றும் என்பதை யோசித்துப்பார்க்கும்போது, அந்த வேலையைச் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் நமக்கு வரும். மீன்பிடிப்பவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை விற்பார்கள் அல்லது சாப்பிடுவார்கள். ஆனால், நாம் மனுஷர்களை ‘பிடிப்பதற்கான’ காரணமே அவர்களுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காகத்தான்!ரோமர் 10:13-15-ஐ வாசியுங்கள்; 1 தீ. 4:16.

அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்

8-9. மீனவர்கள் என்ன தெரிந்துவைத்திருக்க வேண்டும், ஏன்?

8 இயேசுவின் நாட்களில் வாழ்ந்த இஸ்ரவேல மீனவர்களுக்கு, அவர்கள் எந்த வகையான மீனைப் பிடிக்கப்போகிறார்கள் என்பது தெரிந்திருக்க வேண்டியிருந்தது. (லேவி. 11:9-12) எந்த இடத்தில் மீன்கள் கிடைக்கும் என்பதையும் அவர்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டியிருந்தது. ஏற்ற தண்ணீரும் நிறைய உணவும் எங்கே இருக்கிறதோ அங்கேதான் பொதுவாக மீன்கள் வாழும். அதனால், எந்த நேரத்தில் மீன்பிடிக்கப் போக வேண்டும் என்பதை மீனவர்கள் தெரிந்துவைத்திருப்பது முக்கியம். பசிபிக் தீவுகளில் வாழும் நம் சகோதரர்களில் ஒருவர், அங்கே மிஷனரி சேவை செய்யும் ஒரு சகோதரரை மீன்பிடிக்கக் கூப்பிட்டார். அதற்கு அந்த மிஷனரி, “நாளைக்கு காலைல ஒன்பது மணிக்கு பார்க்கலாம்” என்று சொன்னார். அதற்கு அந்தச் சகோதரர், “நான் சொல்றது உங்களுக்கு புரியலனு நினைக்கிறேன். நமக்கு வசதியான நேரத்துல போறதவிட மீன் அதிகமா கிடைக்கிற நேரத்துலதான் போகணும்” என்று சொன்னார்.

9 மனுஷர்களைப் பிடிக்கிற வேலையைச் செய்த முதல் நூற்றாண்டு சீஷர்கள், எங்கே மக்கள் இருந்தார்களோ அங்கே போய்ப் பிரசங்கித்தார்கள். எந்த நேரத்தில் மக்களைப் பார்க்க முடிந்ததோ அந்த நேரத்தில் போய்ப் பிரசங்கித்தார்கள். உதாரணத்துக்கு, ஆலயத்திலும் ஜெபக்கூடங்களிலும், வீடு வீடாகவும், சந்தையிலும் இயேசுவின் சீஷர்கள் பிரசங்கித்தார்கள். (அப். 5:42; 17:17; 18:4) நம்முடைய ஊழியப் பகுதியில் வாழ்கிற மக்கள் எங்கே இருப்பார்கள், எப்போது இருப்பார்கள் என்பதை நாமும் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அதற்கு ஏற்றபடி நாம் ஊழியம் செய்ய வேண்டும்.—1 கொ. 9:19-23.

திறமையான மீனவர்கள் . . .1. எங்கே, எப்போது மீன்கள் அதிகம் கிடைக்குமோ அங்கே, அப்போது மீன்பிடிப்பார்கள் (பாராக்கள் 8-9)

10. என்ன கருவிகளை யெகோவாவின் அமைப்பு நமக்குக் கொடுத்திருக்கிறது?

10 மீன்பிடிப்பவர்களிடம் சரியான கருவிகள் இருக்க வேண்டும். அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். மனுஷர்களைப் பிடிக்கிற வேலையைச் செய்கிற நம்மிடமும் சரியான கருவிகள் இருக்க வேண்டும். அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். மனுஷர்களைப் பிடிக்கிற வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவான அறிவுரைகளை இயேசு தன்னுடைய சீஷர்களுக்குக் கொடுத்தார். எதை எடுத்துக்கொண்டு போக வேண்டும், எங்கே பிரசங்கிக்க வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் அவர் சொன்னார். (மத். 10:5-7; லூக். 10:1-11) இன்று யெகோவாவின் அமைப்பு, கற்பிப்பதற்கான கருவிகளை நமக்குக் கொடுத்திருக்கிறது. அவையெல்லாமே அருமையான கருவிகள்! * அந்தக் கருவிகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றியும் நம்முடைய அமைப்பு சொல்லித்தருகிறது. அதனால், மனுஷர்களைப் பிடிக்கிற வேலையை நல்லபடியாகச் செய்வதற்குத் தேவையான நம்பிக்கையும் திறமையும் நமக்குக் கிடைக்கிறது.—2 தீ. 2:15.

திறமையான மீனவர்கள் . . .2. சரியான கருவிகளைப் பயன்படுத்தத் தெரிந்துவைத்திருப்பார்கள் (பாரா 10)

தைரியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்

11. மனுஷர்களைப் பிடிக்கிற வேலையைச் செய்கிறவர்கள் ஏன் தைரியமாக இருக்க வேண்டும்?

11 மீன்பிடிக்கும் வேலையைச் செய்கிறவர்களுக்குத் தைரியம் தேவை. ஏனென்றால், எதிர்பார்க்காத சூழ்நிலைகளை சிலசமயங்களில் அவர்கள் சந்திக்கலாம். அடிக்கடி ராத்திரி நேரத்தில் அவர்கள் வேலை செய்ய வேண்டியிருக்கலாம். திடீரென்று வீசுகிற புயல்காற்றை அவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கலாம். மனுஷர்களைப் பிடிக்கிற வேலையைச் செய்கிறவர்களுக்கும் தைரியம் தேவை. நாம் ஊழியத்தில் கலந்துகொண்டு நம்மை யெகோவாவின் சாட்சிகள் என்று சொல்லும்போது புயல் போன்ற பிரச்சினைகள் நம்மைத் தாக்கலாம். உதாரணத்துக்கு, குடும்பத்திலிருந்து எதிர்ப்பு வரலாம், நமக்குத் தெரிந்தவர்கள் நம்மைக் கேலி கிண்டல் செய்யலாம், சிலர் நாம் சொல்லும் செய்தியைக் கேட்க மறுக்கலாம். இதையெல்லாம் பார்த்து நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், பகை நிறைந்த உலகத்தில் நாம் பிரசங்கிக்க வேண்டியிருக்கும் என்று இயேசு சொன்னார்.—மத். 10:16.

12. யோசுவா 1:7-9-ன்படி, தைரியத்தை வளர்த்துக்கொள்ள எது நமக்கு உதவும்?

12 நீங்கள் எப்படித் தைரியத்தை வளர்த்துக்கொள்ளலாம்? முதலில், பரலோகத்திலிருந்து இயேசு இந்த வேலையை வழிநடத்துகிறார் என்பதை நீங்கள் முழுமையாக நம்ப வேண்டும். (யோவா. 16:33; வெளி. 14:14-16) அதோடு, உங்களைக் கவனித்துக்கொள்வதாக யெகோவா கொடுத்திருக்கிற வாக்குறுதிகள்மேல் உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும். (மத். 6:32-34) உங்களுடைய விசுவாசம் அதிகமாக அதிகமாக, உங்களுடைய தைரியமும் அதிகமாகும். பேதுருவும் அவருடைய நண்பர்களும் தங்களுடைய தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றிப் போனபோது பலமான விசுவாசத்தைக் காட்டினார்கள். அதேபோல், நீங்கள் யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளைப் படிப்பதாகவும் அவர்களுடைய கூட்டங்களுக்குப் போவதாகவும் உங்களுடைய குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் சொன்னபோது, நீங்களும் பலமான விசுவாசத்தைக் காட்டினீர்கள். யெகோவாவின் நீதிநெறிகளின்படி வாழ்வதற்கு உங்களுடைய நடத்தையிலும் வாழ்க்கைப்பாணியிலும் பெரிய பெரிய மாற்றங்களைச் செய்தபோதும் நீங்கள் விசுவாசத்தையும் தைரியத்தையும் காட்டியிருப்பீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. நீங்கள் தொடர்ந்து தைரியத்தை வளர்த்துக்கொள்ளும்போது ‘நீங்கள் போகும் இடமெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு இருப்பார்’ என்பதில் உறுதியாக இருக்கலாம்.யோசுவா 1:7-9-ஐ வாசியுங்கள்.

திறமையான மீனவர்கள் . . .3. சூழ்நிலைகள் மாறினாலும் தைரியமாக வேலை செய்வார்கள் (பாராக்கள் 11-12)

13. ஆழமாக யோசிப்பதும் ஜெபம் செய்வதும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள எப்படி உதவும்?

13 தைரியத்தை வளர்த்துக்கொள்ள நீங்கள் வேறென்ன செய்யலாம்? தைரியத்துக்காக ஜெபம் செய்யுங்கள். (அப். 4:29, 31) உங்களுடைய ஜெபங்களை யெகோவா நிச்சயம் கேட்பார், உங்களை ஒருபோதும் கைவிட மாட்டார். உங்களுக்கு உதவுவதற்காக அவர் எப்போதுமே தயாராக இருக்கிறார். கடந்தகாலத்தில் யெகோவா மற்றவர்களை எப்படியெல்லாம் காப்பாற்றியிருக்கிறார் என்பதை நன்றாக யோசித்துப்பாருங்கள். அதுமட்டுமல்ல, உங்களுடைய பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு அவர் எப்படி உதவியிருக்கிறார் என்பதையும், உங்களுடைய வாழ்க்கைப்பாணியில் மாற்றங்கள் செய்வதற்கான பலத்தை எப்படித் தந்திருக்கிறார் என்பதையும் யோசித்துப்பாருங்கள். தன்னுடைய மக்களை செங்கடல் வழியாகக் கடந்துபோக வைத்தவரால் கிறிஸ்துவின் சீஷராவதற்கு உங்களுக்கு உதவ முடியாதா? நிச்சயம் முடியும்! (யாத். 14:13) அதனால், “யெகோவா என் பக்கத்தில் இருக்கிறார், நான் பயப்பட மாட்டேன். மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?” என்று சொன்ன சங்கீதக்காரரைப் போலவே நீங்களும் நம்பிக்கையோடு இருங்கள்.—சங். 118:6.

14. மாசே மற்றும் டோமோயோவின் அனுபவங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

14 தைரியத்தை வரவழைத்துக்கொள்ள கூச்ச சுபாவமுள்ளவர்களுக்கு யெகோவா எப்படி உதவியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதன் மூலமும் நாம் தைரியத்தை வளர்த்துக்கொள்ளலாம். இப்போது, மாசே என்ற சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவர் கூச்ச சுபாவமுள்ளவராக இருந்தார். தன்னால் பிரசங்க வேலையைச் செய்யவே முடியாதென்று நினைத்தார். முன்பின் தெரியாதவர்களிடம் பேசுவது அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு விஷயமாக இருந்தது. அதனால், கடவுள்மீதும் மற்றவர்கள்மீதும் இன்னுமதிக அன்பை வளர்த்துக்கொள்ள அவர் நிறைய முயற்சி எடுத்தார். பிரசங்கிப்பது இன்று எவ்வளவு அவசரம் என்பதைப் பற்றி யோசித்துப்பார்த்தார். பிரசங்கிப்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்க உதவும்படி கடவுளிடம் ஜெபம் செய்தார். இப்படி, தன்னுடைய பயத்தையெல்லாம் உதறித்தள்ளினார். ஒழுங்கான பயனியர் சேவைகூட செய்தார். தைரியமாக இருப்பதற்குப் புதிய பிரஸ்தாபிகளுக்கும் யெகோவா உதவுகிறார். டோமோயோ என்ற சகோதரியின் அனுபவத்தைப் பாருங்கள். அவர் முதன்முதலாக வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தபோது, அவர் சந்தித்த முதல் பெண், “யெகோவாவின் சாட்சிகள்கூட பேசறதுக்கு எனக்கு கொஞ்சம்கூட விருப்பம் இல்ல” என்று கத்திவிட்டு, கதவை டமாரென்று சாத்தினார். அப்போது டோமோயோ பயந்துவிட்டாரா? இல்லை. தன்னோடு வந்த சகோதரியிடம், “அவங்க என்ன சொன்னாங்கனு கேட்டீங்களா? நான் ஒரு வார்த்தைகூட சொல்லாமயே நான் யெகோவாவின் சாட்சிங்கறத அவங்க கண்டுபிடிச்சிட்டாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!” என்று சொன்னார். டோமோயோ இப்போது ஒழுங்கான பயனியராகச் சேவை செய்கிறார்.

சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளுங்கள்

15. திறமையான மீனவர்கள் எப்படி சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுகிறார்கள், நாமும் சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவது ஏன் முக்கியம்?

15 திறமையான மீனவர்கள் சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவார்கள். தங்களுடைய வேலைகளைச் செய்துமுடிக்க எல்லா முயற்சியும் எடுப்பார்கள். உதாரணத்துக்கு, சீக்கிரமாகவே எழுந்திருப்பார்கள், மீன்பிடிக்கும்வரை ஓயாமல் உழைப்பார்கள், வானிலை மோசமாக இருந்தாலும் முயற்சியைக் கைவிட மாட்டார்கள். இப்படி, அவர்கள் சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவார்கள். நாமும், சகித்திருப்பதற்கும் நம்முடைய வேலையைச் செய்துமுடிப்பதற்கும் சுயக்கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டும்.—மத். 10:22.

16. நாம் எப்படி சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளலாம்?

16 நாம் யாருமே சுயக்கட்டுப்பாடோடு பிறப்பதில்லை. பொதுவாக, எது சுலபமோ அதைச் செய்யத்தான் நாம் விரும்புவோம். ஆனால், மிக முக்கியமான காரியங்களைச் செய்வதென்றாலே சிலசமயங்களில் கஷ்டம்தான். அதனால், சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு, யெகோவா தன்னுடைய சக்தியைக் கொடுத்து நமக்கு உதவுவார்.—கலா. 5:22, 23.

17. சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வதற்கு அப்போஸ்தலன் பவுல் எடுத்த முயற்சியைப் பற்றி 1 கொரிந்தியர் 9:25-27 என்ன சொல்கிறது?

17 அப்போஸ்தலன் பவுல் சுயக்கட்டுப்பாட்டைக் காட்டினார். ஆனாலும், சரியானதைச் செய்வதற்குத் தன்னுடைய உடலை ‘அடக்கியொடுக்க’ வேண்டியிருந்ததாக அவர் ஒத்துக்கொண்டார். (1 கொரிந்தியர் 9:25-27-ஐ வாசியுங்கள்.) அதோடு, சுயக்கட்டுப்பாட்டைக் காட்டும்படியும், ‘எல்லா காரியங்களையும் கண்ணியமாகவும் ஒழுங்காகவும்’ செய்யும்படியும் மற்றவர்களைக் கேட்டுக்கொண்டார். (1 கொ. 14:40) யெகோவாவைத் தொடர்ந்து வழிபடுவதற்கு சுயக்கட்டுப்பாடு தேவை. அதுவும், ஊழியத்தைத் தொடர்ந்து செய்வதற்கு சுயக்கட்டுப்பாடு தேவை.—அப். 2:46.

தள்ளிப்போடாதீர்கள்

18. நாம் என்ன செய்தால் யெகோவா நம்மை வெற்றிபெற்றவர்களாக நினைப்பார்?

18 நிறைய மீன்களைப் பிடிக்கும்போதுதான் தாங்கள் நன்றாக வேலை செய்ததாக மீனவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் பிரசங்க வேலையைப் பொறுத்தவரை, நிறைய பேரை அமைப்புக்குள் கொண்டுவந்தால்தான் நாம் நன்றாக வேலை செய்கிறோம் என்று சொல்ல முடியாது. (லூக். 8:11-15) ஊழியத்தைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தாலே நம்மை வெற்றி பெற்றவர்களாகத்தான் யெகோவா நினைப்பார். ஏனென்றால், ஊழியம் செய்யும்போது அவருக்கும் அவருடைய மகனுக்கும் நாம் கீழ்ப்படிகிறோம்!—மாற். 13:10; அப். 5:28, 29.

19-20. பிரசங்க வேலையை இன்று ஏன் தீவிரமாகச் செய்ய வேண்டும்?

19 சில நாடுகளில், குறிப்பிட்ட சில மாதங்களில்தான் மீன்பிடிப்பதற்கு அனுமதி கிடைக்கும். அங்கே இருக்கிற மீனவர்கள், மீன்பிடிப்பதற்கான காலம் முடியப்போகிற சமயத்தில் இன்னும் தீவிரமாக உழைப்பார்கள். நாமும் மனுஷர்களைப் பிடிக்கிற வேலையை இன்னும் தீவிரமாகச் செய்ய வேண்டும். ஏனென்றால், இந்த உலகத்தின் முடிவு ரொம்பப் பக்கத்தில் இருக்கிறது. மற்றவர்களுடைய உயிரைக் காப்பாற்றுகிற இந்த வேலையைச் செய்வதற்கு இன்னும் கொஞ்சக் காலம்தான் மீதியிருக்கிறது. அதனால், எல்லா பிரச்சினைகளும் தீர்ந்த பிறகு இந்த வேலையைச் செய்யலாம் என்று நினைத்துத் தள்ளிப்போட்டுக்கொண்டே போகாதீர்கள்.—பிர. 11:4.

20 பிரசங்கிப்பதற்கான தூண்டுதலை இப்போதே அதிகப்படுத்துங்கள், பைபிள் அறிவையும் தைரியத்தையும் சுயக்கட்டுப்பாட்டையும் வளர்த்துக்கொள்ளுங்கள். மனுஷர்களைப் பிடிக்கிற வேலையைச் செய்கிற 80 லட்சத்துக்கும் அதிகமானவர்களோடு சேர்ந்து உழையுங்கள். அப்போது, யெகோவா தரும் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள். (நெ. 8:10) உங்களால் முடிந்தளவுக்கு நிறைய ஊழியம் செய்யுங்கள். போதும் என்று யெகோவா சொல்லும்வரை தொடர்ந்து ஊழியம் செய்துகொண்டே இருங்கள். மனுஷர்களைப் பிடிக்கிற வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதற்கு நமக்கு உதவும் மூன்று வழிகளைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

பாட்டு 47 நற்செய்தியை அறிவியுங்கள்

^ பாரா. 5 மீன்பிடிப்பவர்களாக இருந்த சிலரைத் தன்னுடைய சீஷர்களாக ஆகும்படி இயேசு அழைத்தார். அவர்கள் மனத்தாழ்மை உள்ளவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருந்தார்கள். இன்றும், இப்படிப்பட்ட குணங்களைக் காட்டுபவர்களை ‘மனுஷர்களைப் பிடிப்பதற்காக’ இயேசு அழைக்கிறார். நம்மோடு பைபிள் படிக்கும் சிலர் இயேசுவின் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளத் தயங்கலாம். அப்படிப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரை விளக்கும்.

^ பாரா. 1 வார்த்தைகளின் விளக்கம்: ‘மனுஷர்களைப் பிடிப்பவர்கள்’ என்ற வார்த்தைகள், மற்றவர்களுக்கு நல்ல செய்தியைப் பிரசங்கித்து, கிறிஸ்துவின் சீஷர்களாவதற்குக் கற்றுக்கொடுக்கிற எல்லாரையும் குறிக்கின்றன.

^ பாரா. 10 அக்டோபர் 2018 காவற்கோபுரம் பக். 11-16-ல் இருக்கிற “சத்தியத்தைக் கற்றுக்கொடுங்கள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.