Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 40

‘உங்களிடம் ஒப்படைக்கப்பட்டதை பாதுகாத்துக்கொள்ளுங்கள்’

‘உங்களிடம் ஒப்படைக்கப்பட்டதை பாதுகாத்துக்கொள்ளுங்கள்’

“தீமோத்தேயு, உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதை நீ பாதுகாத்துக்கொள்.”—1 தீ. 6:20.

பாட்டு 34 எம் பெயருக்கேற்ப வாழ்வோம்

இந்தக் கட்டுரையில்... *

1-2. ஒன்று தீமோத்தேயு 6:20-ன்படி, தீமோத்தேயுவிடம் எவையெல்லாம் ஒப்படைக்கப்பட்டிருந்தன?

நம்முடைய பணத்தைப் பத்திரப்படுத்துவதற்காக நாம் வங்கியில் போட்டு வைப்போம் அல்லது நம்பகமான ஒருவரிடம் கொடுத்து வைப்போம். அப்போது, அது தொலைந்துபோகாது அல்லது திருட்டுப்போகாது என்று நமக்குத் தெரியும். அப்படியென்றால், ஏதோவொன்று ஒருவரிடம் ஒப்படைக்கப்படுகிறது என்றால், அது விலைமதிப்புள்ளது என்று அர்த்தம்.

2 ஒன்று தீமோத்தேயு 6:20-ஐ வாசியுங்கள். மனிதர்களுக்கான கடவுளுடைய நோக்கத்தைப் பற்றிய திருத்தமான அறிவு தீமோத்தேயுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதோடு, ‘கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கித்து’ ‘நற்செய்தியாளரின் வேலையைச் செய்கிற’ பாக்கியமும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. (2 தீ. 4:2, 5) விலைமதிப்புள்ள இவற்றையெல்லாம் பாதுகாத்துக்கொள்ளும்படி அப்போஸ்தலன் பவுல் அவருக்கு ஞாபகப்படுத்தினார். விலைமதிப்புள்ள விஷயங்களை யெகோவா நம்மிடமும் ஒப்படைத்திருக்கிறார். அவை என்ன? அவற்றை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்?

விலைமதிப்புள்ள சத்தியங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன

3-4. பைபிள் சத்தியங்கள் விலைமதிப்புள்ளவை என்று ஏன் சொல்லலாம்?

3 பைபிளில் இருக்கிற விலைமதிப்புள்ள சத்தியங்களைப் பற்றிய திருத்தமான அறிவைக் கொடுத்து யெகோவா நமக்கு உதவியிருக்கிறார். அந்தச் சத்தியங்கள் விலைமதிப்புள்ளவை என்று ஏன் சொல்கிறோம்? ஏனென்றால், நாம் எப்படி யெகோவாவுடன் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ளலாம் என்றும், எப்படி உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்கலாம் என்றும் அவை காட்டுகின்றன. நாம் அந்தச் சத்தியங்களை ஏற்றுக்கொண்டு அவற்றின்படி வாழும்போது, பொய்மத போதனைகளிலிருந்தும் ஒழுக்கங்கெட்ட பழக்கங்களிலிருந்தும் நமக்கு விடுதலை கிடைக்கிறது.—1 கொ. 6:9-11.

4 பைபிள் சத்தியங்கள் விலைமதிப்புள்ளவை என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது, ‘முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு இருக்கிற’ மனத்தாழ்மையுள்ள ஆட்களுக்கு மட்டும்தான் யெகோவா அவற்றை வெளிப்படுத்துகிறார். (அப். 13:48) அந்தச் சத்தியங்களை நமக்குச் சொல்லித்தருவதற்கு யெகோவா பயன்படுத்துகிற உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். (மத். 11:25; 24:45) நாமாகவே அந்தச் சத்தியங்களைப் புரிந்துகொள்ள முடியாது, அவற்றைப் புரிந்துகொள்வதைவிட வேறு எதுவும் இந்த உலகத்தில் முக்கியமானதாக இருக்க முடியாது.—நீதி. 3:13, 15.

5. வேறு எதையும் யெகோவா நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்?

5 யெகோவாவைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் மற்றவர்களுக்குச் சொல்லித்தரும் பாக்கியத்தை அவர் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார். (மத். 24:14) நாம் பிரசங்கிக்கிற செய்தி விலைமதிப்புள்ளது. ஏனென்றால், யெகோவாவுடைய குடும்பத்தின் பாகமாக ஆவதற்கும், முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கும் மற்றவர்களுக்கு அது உதவுகிறது. (1 தீ. 4:16) நம்மால் எவ்வளவு நேரம் ஊழியம் செய்ய முடிந்தாலும் சரி, இன்று நடந்துவருகிற மிக முக்கியமான வேலைக்கு நாம் ஆதரவு கொடுக்கிறோம். (1 தீ. 2:3, 4) கடவுளுடைய சக வேலையாட்களாக இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்!—1 கொ. 3:9.

உங்களிடம் ஒப்படைக்கப்பட்டதை உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்!

மற்றவர்கள் விசுவாசத்தைவிட்டு விலகிப்போனபோதும் தீமோத்தேயு உறுதியாக இருந்தார் (பாரா 6)

6. கிறிஸ்தவர்கள் சிலருக்கு என்ன நடந்தது?

6 தீமோத்தேயுவின் காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களில் சிலர், கடவுளுடைய சக வேலையாட்களாக இருக்கும் பாக்கியத்தை மதிக்காமல் போய்விட்டார்கள். தேமா, இந்த உலகத்தின்மேல் ஆசை வைத்ததால் பவுலோடு சேவை செய்யும் அருமையான வாய்ப்பை இழந்துவிட்டான். (2 தீ. 4:10) பிகெல்லுவும் எர்மொகெனேவும், பவுல் அனுபவித்த துன்புறுத்தலைத் தாங்களும் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று பயந்துகொண்டு, பிரசங்கிப்பதை நிறுத்திவிட்டார்கள். (2 தீ. 1:15) இமெனேயுவும் அலெக்சந்தரும் பிலேத்துவும், விசுவாசதுரோகம் செய்து சத்தியத்தைவிட்டு விலகிப்போனார்கள். (1 தீ. 1:19, 20; 2 தீ. 2:16-18) இவர்கள் எல்லாரும் ஆரம்பத்தில் யெகோவாவை நேசித்தார்கள், ஆனால் யெகோவா ஒப்படைத்திருந்த விலைமதிப்புள்ள விஷயங்களை மதிக்காமல் போய்விட்டார்கள்.

7. சாத்தான் என்னென்ன தந்திரங்களைப் பயன்படுத்துகிறான்?

7 யெகோவா நம்மிடம் ஒப்படைத்திருக்கிற விலைமதிப்புள்ள விஷயங்களை நாம் மதிக்கக் கூடாதென்று சாத்தான் நினைக்கிறான். அதற்காக சில தந்திரங்களைப் பயன்படுத்துகிறான். உதாரணத்துக்கு, பொழுதுபோக்கையும் மீடியாவையும் பயன்படுத்தி, யெகோவாவுக்குப் பிடிக்காத விதத்தில் யோசிக்கும்படியும் நடந்துகொள்ளும்படியும் நம்மைத் தூண்டுகிறான். மற்றவர்கள் ஏதாவது சொல்வார்களோ அல்லது துன்புறுத்துவார்களோ என்று பயந்து ஊழியத்தை நாம் விட்டுவிட வேண்டுமென்று நினைக்கிறான். விசுவாசதுரோகிகள் சொல்லும் விஷயங்களை, அதாவது ‘“அறிவு“ என்று தவறாக அழைக்கப்படுகிற . . . கருத்துகளை’ கேட்டு சத்தியத்தைவிட்டு நாம் போய்விட வேண்டும் என்று நினைக்கிறான்.—1 தீ. 6:20, 21.

8. டேனியலின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

8 நாம் ஜாக்கிரதையாக இல்லையென்றால், மெதுமெதுவாக சத்தியத்தைவிட்டு விலகிப்போய்விடுவோம். டேனியலுடைய * அனுபவத்தைப் பார்க்கலாம். அவர் வீடியோ கேம்ஸே கதி என்று இருந்தார். “பத்து வயசுல நான் வீடியோ கேம்ஸ் விளையாட ஆரம்பிச்சேன். முதல்ல, நல்ல கேம்ஸுகளதான் விளையாடினேன். போகப்போக, அடிதடி... சண்டை... பேய் பிசாசு... இந்த மாதிரியான கேம்ஸுகள விளையாட ஆரம்பிச்சேன்” என்று அவர் சொல்கிறார். ஒருகட்டத்தில், தினமும் கிட்டத்தட்ட 15 மணிநேரம் வீடியோ கேம்ஸ் விளையாடினார். “அந்த மாதிரி கேம்ஸுகள அவ்வளவு நேரம் விளையாடுனதால நான் யெகோவாகிட்ட இருந்து பிரிஞ்சு போயிட்டே இருந்தது எனக்கு தெரிஞ்சுது. ஆனாலும், அப்படி விளையாடறது பைபிள்படி தப்பில்லனு நானா நினைச்சுக்கிட்டேன்” என்று டேனியல் சொல்கிறார். பொழுதுபோக்கு விஷயத்தில் நாம் கவனமாக இல்லையென்றால், சத்தியத்தைவிட்டே விலகிவிடுவோம். அப்படி மட்டும் நடந்துவிட்டால், யெகோவா நம்மிடம் ஒப்படைத்திருக்கிற விலைமதிப்புள்ள விஷயங்களை இழந்துவிடுவோம்.

சத்தியத்தை எப்படி உறுதியாகப் பிடித்துக்கொள்ளலாம்?

9. ஒன்று தீமோத்தேயு 1:18, 19-ன்படி, தீமோத்தேயுவை பவுல் யாருடன் ஒப்பிட்டார்?

9 ஒன்று தீமோத்தேயு 1:18, 19-ஐ வாசியுங்கள். தீமோத்தேயுவை ஒரு படைவீரனுக்கு பவுல் ஒப்பிட்டார். (2 தீ. 2:3) “சிறந்த போராட்டத்தைப் போராடிக்கொண்டே” இருக்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டார். நிஜமாகவே போர் செய்வதைப் பற்றி அவர் சொல்லவில்லை. அப்படியென்றால், என்னென்ன விதங்களில் கிறிஸ்தவர்கள் படைவீரர்களைப் போல இருக்கிறார்கள்? கிறிஸ்துவின் படைவீரர்களாக இருக்கிற நாம் என்னென்ன குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்? பவுல் சொன்ன உவமையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஐந்து பாடங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். சத்தியத்தை உறுதியாகப் பிடித்துக்கொள்ள அவை நமக்கு உதவும்.

10. கடவுள்பக்தி என்றால் என்ன, நமக்கு ஏன் கடவுள்பக்தி தேவை?

10 கடவுள்பக்தியை வளர்த்துக்கொள்ளுங்கள். ஒரு நல்ல படைவீரர் விசுவாசமாக நடந்துகொள்வார். அவர் யாரையெல்லாம் நேசிக்கிறாரோ அவர்களைப் பாதுகாப்பதற்காக, அல்லது எதை உயர்வாக மதிக்கிறாரோ அதைப் பாதுகாப்பதற்காக, கடினமாகப் போராடுவார். கடவுள்பக்தியை வளர்த்துக்கொள்ளும்படி தீமோத்தேயுவை பவுல் கேட்டுக்கொண்டார். (1 தீ. 4:7) கடவுள்பக்தி என்பது கடவுளுக்குப் பயபக்தி காட்டுவதையும் அவருக்கு உண்மையோடு இருப்பதையும் குறிக்கிறது. கடவுள்மேல் அன்பும் பக்தியும் அதிகமாக அதிகமாக, சத்தியத்தை உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசையும் அதிகமாகும்.—1 தீ. 4:8-10; 6:6.

நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு களைத்துப்போயிருக்கும்போது, நாம் கஷ்டப்பட்டு கூட்டத்துக்குக் கிளம்பிப் போக வேண்டியிருக்கும். ஆனால், அப்படிச் செய்யும்போது நமக்கு ஆசீர்வாதம் கிடைக்கும்! (பாரா 11)

11. நமக்கு ஏன் சுயக்கட்டுப்பாடு தேவை?

11 சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளுங்கள். ஒரு படைவீரர் எப்போதும் போருக்குத் தயாராக இருக்க வேண்டுமென்றால், அவருக்கு சுயக்கட்டுப்பாடு தேவை. சாத்தானுக்கு எதிராகப் போராடுவதற்கு தீமோத்தேயு தயார்நிலையில் இருந்தார். ஏனென்றால், கெட்ட ஆசைகளைவிட்டு விலகி ஓடும்படியும், தெய்வீகக் குணங்களை வளர்த்துக்கொள்ளும்படியும், சகோதர சகோதரிகளோடு நேரம் செலவிடும்படியும் பவுல் கொடுத்த அறிவுரைகளை அவர் கேட்டு நடந்தார். (2 தீ. 2:22) இதற்கெல்லாம் தீமோத்தேயுவுக்கு சுயக்கட்டுப்பாடு தேவைப்பட்டது. கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராடுவதற்கு நமக்கும் சுயக்கட்டுப்பாடு தேவை. (ரோ. 7:21-25) அதோடு, பழைய சுபாவத்தைக் களைந்துபோடுவதற்கும் புதிய சுபாவத்தை அணிந்துகொள்வதற்கும் நமக்கு சுயக்கட்டுப்பாடு தேவை. (எபே. 4:22, 24) நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு களைத்துப்போயிருக்கும்போது, கூட்டங்களுக்குக் கிளம்பிப் போவதற்கும் நமக்கு சுயக்கட்டுப்பாடு தேவை.—எபி. 10:24, 25.

12. பைபிளைத் திறமையாகப் பயன்படுத்துவதற்கு நாம் என்ன செய்யலாம்?

12 ஒரு படைவீரர் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்குப் பழகிக்கொள்ள வேண்டும். அப்படித் தவறாமல் பழகினால்தான் திறமைசாலியாக இருக்க முடியும். அதேபோல், பைபிளைத் திறமையாகப் பயன்படுத்துவதற்கு நாம் பழகிக்கொள்ள வேண்டும். (2 தீ. 2:15) அப்படிப் பழகுவதற்குக் கூட்டங்களில் நமக்குப் பயிற்சி கிடைக்கிறது. ஆனாலும், பைபிள் சத்தியங்கள் எந்தளவு மதிப்புள்ளவை என்று மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டுமென்றால் முதலில் நாம் பைபிளைத் தவறாமல் படிக்க வேண்டும். பைபிளைப் பயன்படுத்தி நம் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படியென்றால், அதை வெறுமனே வாசித்தால் மட்டும் போதாது. வாசிக்கும் விஷயங்களை ஆழமாக யோசித்துப்பார்க்க வேண்டும், பிரசுரங்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்ய வேண்டும். அப்போதுதான், வசனங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளவும் பொருத்திக் காட்டவும் முடியும். (1 தீ. 4:13-15) இப்படி, மற்றவர்களுக்கு பைபிளை சரியாகக் கற்றுக்கொடுக்க முடியும். மறுபடியும் இந்த விஷயத்தை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்: பைபிள் வசனங்களை வெறுமனே வாசித்துக் காட்டினால் மட்டும் போதாது. அவற்றைப் புரிந்துகொள்வதற்கும் பொருத்திப் பார்ப்பதற்கும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நாம் பைபிளைத் தவறாமல் படிக்கப் படிக்க அதை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் திறமை அதிகமாகும்.—2 தீ. 3:16, 17.

13. எபிரெயர் 5:14-ன்படி, நல்லது கெட்டதை நாம் ஏன் பகுத்தறிய வேண்டும்?

13 நல்லது கெட்டதைப் பகுத்தறியுங்கள். ஒரு படைவீரர், ஆபத்துகளை எதிர்பார்த்து அவற்றைத் தவிர்க்க வேண்டும். நாமும் அதைத்தான் செய்ய வேண்டும். (நீதி. 22:3; எபிரெயர் 5:14-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, ஆபத்தான பொழுதுபோக்குகளை நாம் தவிர்க்க வேண்டும். டிவி நிகழ்ச்சிகளிலும் சினிமாக்களிலும் அடிக்கடி ஒழுக்கக்கேடான காட்சிகள் காட்டப்படுகின்றன. ஒழுக்கக்கேட்டைக் கடவுள் வெறுக்கிறார் என்பது நமக்குத் தெரியும். அதில் ஈடுபடுகிறவர்கள், தங்களுக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி, கெடுதலை வரவழைத்துக்கொள்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும். அதனால், கடவுளைவிட்டு நம்மை மெதுமெதுவாகப் பிரிக்கிற இப்படிப்பட்ட பொழுதுபோக்குகளை நாம் தவிர்க்கிறோம்.—எபே. 5:5, 6.

14. நல்லது கெட்டதைப் பகுத்தறிந்தது டேனியலுக்கு எப்படி உதவியது?

14 அடிதடி, சண்டை, பேய் பிசாசு சம்பந்தப்பட்ட வீடியோ கேம்ஸை விளையாடுவது தவறு என்பதை டேனியல் புரிந்துகொள்ள ஆரம்பித்தார். அதனால், உவாட்ச்டவர் லைப்ரரியை பயன்படுத்தி அது சம்பந்தமாக ஆராய்ச்சி செய்தார். அதன் பிறகு என்ன நடந்தது? மோசமான வீடியோ கேம்ஸ்கள் விளையாடுவதை அவர் விட்டுவிட்டார். அதற்கான சந்தாக்களை நிறுத்தியதோடு, தன்னோடு சேர்ந்து விளையாடிய மற்றவர்களுடைய நட்பையும் முறித்துக்கொண்டார். “வீடியோ கேம்ஸ் விளையாடுறதுக்கு பதிலா வெளியே போய் பொழுதுபோக்குனேன், இல்லன்னா சபையில இருந்த நண்பர்களோடு சேர்ந்து நேரம் செலவு செஞ்சேன்” என்று டேனியல் சொல்கிறார். இப்போது அவர் ஒரு பயனியராகவும் மூப்பராகவும் சேவை செய்கிறார்.

15. கட்டுக்கதைகள் ஏன் ஆபத்தானவை?

15 விசுவாசதுரோகிகள் பரப்புகிற பொய்யான விஷயங்கள் ஆபத்தானவை என்பதை தீமோத்தேயுவைப் போலவே நாமும் பகுத்தறிய வேண்டும். (1 தீ. 4:1, 7; 2 தீ. 2:16) உதாரணத்துக்கு, நம் சகோதரர்களைப் பற்றிய கட்டுக்கதைகளை அவர்கள் பரப்பலாம் அல்லது யெகோவாவின் அமைப்பைப் பற்றி நம் மனதில் சந்தேகத்தைக் கிளப்பலாம். இப்படிப்பட்ட தவறான தகவல்கள் நம் விசுவாசத்தைப் பலவீனமாக்கிவிடலாம். அவற்றை நம்பி நாம் ஏமாந்துபோய்விடக் கூடாது. ஏன்? ஏனென்றால், அவற்றைப் பரப்புகிறவர்கள் ‘புத்திகெட்டவர்கள், சத்தியத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள்.’ ‘விவாதங்களையும் . . . வாக்குவாதங்களையும்’ கிளப்புவதுதான் அவர்களுடைய குறிக்கோள். (1 தீ. 6:4, 5) அவர்கள் சொல்லும் பொய்களை நம்பி நம்முடைய சகோதரர்களையே நாம் சந்தேகப்பட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய எண்ணம்.

16. எந்தெந்த விஷயங்களில் நம் கவனத்தைச் சிதறவிடாமல் இருக்க வேண்டும்?

16 கவனத்தைச் சிதறவிடாதீர்கள். “கிறிஸ்து இயேசுவின் சிறந்த படைவீரனாக,” ஊழியத்தில் மட்டுமே தீமோத்தேயு கவனம் செலுத்தினார். பணம் பொருள் சேர்ப்பதிலோ மற்ற குறிக்கோள்களை அடைவதிலோ அவர் தன் கவனத்தை சிதறவிடாமல் இருந்தார். (2 தீ. 2:3, 4) அவரைப் போலவே நாமும், பணம் பொருளுக்குப் பின்னால் போகாமல் இருக்க வேண்டும். “செல்வத்தின் வஞ்சக சக்தி” யெகோவாமேல் நமக்கு இருக்கும் அன்பையும், பைபிள்மேல் இருக்கும் மதிப்பையும், ஊழியத்தின் மேல் இருக்கும் ஆர்வத்தையும் நெருக்கிப்போட்டுவிடும். (மத். 13:22) நாம் நம்முடைய வாழ்க்கையை எளிமையாக்கிக்கொண்டு, ‘எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கு . . . முதலிடம் கொடுப்பதற்காக’ நம் நேரத்தையும் சக்தியையும் செலவு செய்ய வேண்டும்.—மத். 6:22-25, 33.

17-18. யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்பைப் பாதுகாத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

17 உடனடியாகச் செயல்படுவதற்குத் தயாராக இருங்கள். தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஒரு படைவீரர் முன்கூட்டியே யோசித்து வைக்க வேண்டும். யெகோவா நம்மிடம் ஒப்படைத்திருக்கிற விஷயங்களைப் பாதுகாப்பதற்கு, ஆபத்தைப் பார்த்தவுடனேயே அதைவிட்டு விலகிவிட வேண்டும். அப்படிச் செய்வதற்கு எது உதவும்? ஆபத்து வரும்போது என்ன செய்வோம் என்பதை முன்கூட்டியே யோசித்து வைப்பது உதவும்.

18 ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். நீங்கள் ஒரு நிகழ்ச்சிக்குப் போவதாக வைத்துக்கொள்வோம். நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பே, ஏதாவது ஆபத்தான சூழ்நிலை வந்தால் நீங்கள் எந்தக் கதவு வழியாக வெளியே போக வேண்டுமென்று அறிவிப்பு செய்யப்படுகிறது. அதேபோல், இன்டர்நெட்டில், சினிமாவில், அல்லது டிவி நிகழ்ச்சியில் அசிங்கமான காட்சியோ வன்முறையான காட்சியோ விசுவாசதுரோகிகளின் தகவலோ திடீரென்று திரையில் தோன்றினால் அதைவிட்டு எப்படி வெளியே வருவதென்று முன்கூட்டியே யோசித்து வைக்க வேண்டும். இப்படிச் செய்தால், ஆபத்திலிருந்து உடனடியாகத் தப்பிக்க முடியும்; யெகோவாவின் பார்வையில் எப்போதுமே சுத்தமாக இருக்க முடியும்.—சங். 101:3; 1 தீ. 4:12.

19. யெகோவா நம்மிடம் ஒப்படைத்திருக்கிற விலைமதிப்புள்ள விஷயங்களைப் பாதுகாத்துக்கொள்ளும்போது என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?

19 யெகோவா நம்மிடம் ஒப்படைத்திருக்கிற விலைமதிப்புள்ள பைபிள் சத்தியங்களையும் மற்றவர்களுக்கு அவற்றைக் கற்றுக்கொடுக்கிற பாக்கியத்தையும் நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், நமக்கு சுத்தமான மனசாட்சி இருக்கும், நம் வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும், யெகோவாவைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிற சந்தோஷமும் கிடைக்கும். அவருடைய உதவியோடு, நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதை நம்மால் பாதுகாத்துக்கொள்ள முடியும்.—1 தீ. 6:12, 19.

பாட்டு 61 நான் எப்படிப்பட்ட நபராக இருக்க வேண்டும்

^ பாரா. 5 பைபிள் சொல்கிற உண்மைகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்ளவும், அவற்றை மற்றவர்களுக்குச் சொல்லித்தரவும் நமக்கு அருமையான வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பை எப்படி ஒருபோதும் நழுவவிடாமல் இருக்கலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

^ பாரா. 8 பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.