Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 43

தன்னுடைய அமைப்பை யெகோவா வழிநடத்துகிறார்

தன்னுடைய அமைப்பை யெகோவா வழிநடத்துகிறார்

“‘படை பலத்தாலும் அல்ல, மனித சக்தியாலும் அல்ல, என்னுடைய சக்தியால்தான் எல்லாமே நடக்கும்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.”—சக. 4:6.

பாட்டு 62 நாம் யாருக்குச் சொந்தம்?

இந்தக் கட்டுரையில்... *

1. ஞானஸ்நானம் எடுத்த கிறிஸ்தவர்கள் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் ஞானஸ்நானம் எடுத்துவிட்டீர்களா? அப்படியென்றால், யெகோவாமீது உங்களுக்கு விசுவாசம் இருக்கிறது என்பதையும், அவருடைய அமைப்போடு சேர்ந்து சேவை செய்ய விருப்பம் இருக்கிறது என்பதையும் எல்லாருக்கும் முன்பாகத் தெரியப்படுத்தியிருக்கிறீர்கள். * ஆனால், யெகோவாமீது இருக்கிற விசுவாசத்தை நீங்கள் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும். அதோடு, யெகோவா இன்று தன்னுடைய அமைப்பைப் பயன்படுத்துகிறார் என்பதில் உங்களுக்கு இருக்கிற நம்பிக்கையைத் தொடர்ந்து பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.

2-3. யெகோவா இன்று தன்னுடைய அமைப்பை எப்படி வழிநடத்துகிறார்? விளக்குங்கள்.

2 யெகோவா எப்படிப்பட்டவர்... அவர் என்ன செய்ய நினைக்கிறார்... அவருடைய நெறிமுறைகள் என்ன... ஆகியவையெல்லாம் பளிச்சென்று தெரிகிற விதத்தில் யெகோவா இன்று தன்னுடைய அமைப்பை வழிநடத்துகிறார். அவரைப் பற்றிய மூன்று அம்சங்கள், அவருடைய அமைப்பில் எப்படிப் பளிச்சிடுகின்றன என்று இப்போது பார்க்கலாம்.

3 ஒன்று, “கடவுள் பாரபட்சம் காட்டாதவர்.” (அப். 10:34) அவர் எல்லாரையும் நேசிக்கிறார். அதனால், “எல்லாருக்காகவும்” தன்னுடைய மகனையே “மீட்புவிலையாக” கொடுத்தார். (1 தீ. 2:6; யோவா. 3:16) மீட்புவிலையிலிருந்து எல்லாரும் பிரயோஜனம் அடைவதற்காக, தன்னுடைய மக்களைப் பயன்படுத்தி, கேட்க மனம் இருக்கிற எல்லாருக்கும் நல்ல செய்தியைச் சொல்கிறார். இரண்டு, யெகோவா எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்கிற கடவுள், சமாதானத்தை விரும்புகிற கடவுள். (1 கொ. 14:33, 40) அதனால், அவரை வணங்குகிறவர்களும் எல்லாவற்றையும் ஒழுங்கான விதத்தில் செய்கிறவர்களாகவும் சமாதானமான மக்களாகவும் இருக்க வேண்டும். மூன்று, யெகோவா ‘மகத்தான போதகர்.’ (ஏசா. 30:20, 21) அதனால், சபையிலும் சரி ஊழியத்திலும் சரி, பைபிளைப் பற்றிக் கற்றுக்கொடுக்க அவருடைய அமைப்பு நிறைய முயற்சிகளை எடுக்கிறது. யெகோவாவைப் பற்றிய இந்த மூன்று அம்சங்கள் முதல் நூற்றாண்டு சபையில் எப்படிப் பளிச்சென்று தெரிந்தது? இன்று எப்படித் தெரிகிறது? யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து சேவை செய்யும்போது அவருடைய சக்தி நமக்கு எப்படி உதவுகிறது?

யெகோவா பாரபட்சம் காட்டாதவர்

4. அப்போஸ்தலர் 1:8-ல் இருப்பதுபோல், சீஷர்களுக்கு இயேசு என்ன கட்டளை கொடுத்திருந்தார், அவர்களுக்கு என்ன உதவி கிடைக்கும் என்று சொன்னார்?

4 முதல் நூற்றாண்டில். இயேசு பிரசங்கித்த செய்தி எல்லா மக்களுக்கும் எதிர்கால நம்பிக்கையைக் கொடுத்தது. (லூக். 4:43) தான் ஆரம்பித்துவைத்த அந்த வேலையை “பூமியின் எல்லைகள் வரையிலும்” தொடர்ந்து செய்யும்படி தன்னுடைய சீஷர்களுக்கு அவர் கட்டளை கொடுத்தார். (அப்போஸ்தலர் 1:8-ஐ வாசியுங்கள்.) ஆனால், அவர்களுடைய சொந்த பலத்தால் அவர்களால் அந்த வேலையைச் செய்ய முடியாது. கடவுளுடைய சக்தியின் உதவி, அதாவது ‘சகாயரின்’ உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டது. தன்னுடைய தந்தை அதை அனுப்பப்போவதாக இயேசு வாக்குக் கொடுத்திருந்தார்.—யோவா. 14:26; சக. 4:6.

5-6. இயேசுவின் சீஷர்களுக்கு கடவுளுடைய சக்தி எப்படியெல்லாம் உதவியது?

5 கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளில், கடவுளுடைய சக்தி சீஷர்களுக்குக் கிடைத்தது. அதன் உதவியோடு, உடனடியாக அவர்கள் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள். கொஞ்சக் காலத்திலேயே ஆயிரக்கணக்கானவர்கள் நல்ல செய்தியை ஏற்றுக்கொண்டார்கள். (அப். 2:41; 4:4) எதிர்ப்புகள் வந்தபோது அவர்கள் பயந்துபோய் பிரசங்க வேலையை விட்டுவிடவில்லை. அதற்குப் பதிலாக, கடவுளிடம் உதவி கேட்டார்கள். “உங்கள் வார்த்தையை முழு தைரியத்தோடு பேசிக்கொண்டே இருக்க உங்களுடைய ஊழியர்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று ஜெபம் செய்தார்கள். அப்போது, அவர்கள் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டு “அவருடைய வார்த்தையைத் தைரியமாகப் பேச ஆரம்பித்தார்கள்.”—அப். 4:18-20, 29, 31.

6 இயேசுவின் சீஷர்களுக்கு வேறுசில சவால்களும் இருந்தன. உதாரணத்துக்கு, அவர்களிடம் வேதாகமச் சுருள்களின் பிரதிகள் கொஞ்சம்தான் இருந்தன. ஆராய்ச்சி செய்து படிப்பதற்கு உதவும் பிரசுரங்கள் இன்று நம்மிடம் இருப்பதுபோல் அன்று அவர்களிடம் இல்லை. அதோடு, வித்தியாசப்பட்ட மொழிகளைப் பேசியவர்களிடம் அவர்கள் பிரசங்கிக்க வேண்டியிருந்தது. இத்தனை சவால்கள் இருந்தும், ஆர்வத்துடிப்போடு இருந்த அந்தச் சீஷர்கள், செய்ய முடியாது என்று நினைத்த விஷயங்களை செய்துமுடித்தார்கள். கொஞ்சக் காலத்துக்குள் “வானத்தின் கீழ் இருக்கிற எல்லா மக்களுக்கும்” பிரசங்கித்திருந்தார்கள்.—கொலோ. 1:6, 23.

7. கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கும் முன்பிருந்த சகோதரர்கள், தங்களிடம் யெகோவா எதிர்பார்ப்பதை எப்படித் தெரிந்துகொண்டார்கள், உடனே என்ன செய்தார்கள்?

7 நவீன காலத்தில். தன்னுடைய மக்களை யெகோவா தொடர்ந்து வழிநடத்துகிறார், பலப்படுத்துகிறார். கடவுளுடைய சக்தியின் உதவியால் எழுதப்பட்ட பைபிள் மூலம் நமக்கு பெரும்பாலும் வழிநடத்துதல் கிடைக்கிறது. இயேசு செய்த ஊழியம்... ஊழியம் செய்யும்படி அவர் கொடுத்த கட்டளை... இவையெல்லாம் பைபிளில் இருக்கின்றன. (மத். 28:19, 20) ஜூலை, 1881 காவற்கோபுரம் (ஆங்கிலம்) இப்படிச் சொன்னது: “பேர்புகழை அடையவோ, சொத்துசுகத்தை அடையவோ நாம் அழைக்கப்படவில்லை, அபிஷேகம் செய்யப்படவும் இல்லை. நமக்கு இருக்கிற எல்லாவற்றையும் செலவு செய்து நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்காகத்தான் அழைக்கப்பட்டோம்.” 1919-ல் வெளிவந்த யாரிடம் இந்த வேலை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது? (ஆங்கிலம்) என்ற சிறு புத்தகம் இப்படிச் சொன்னது: “நமக்கு முன்னால் இருக்கிற வேலை மலைபோல் தெரியலாம். ஆனால், இது எஜமானின் வேலை. அவர் தருகிற பலத்தால் இதை நம்மால் செய்துமுடிக்க முடியும்.” முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே, எல்லா விதமான மக்களுக்கும் நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்கு கடவுளுடைய சக்தி தங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையோடு, நவீனகால ஊழியர்களும் இந்த வேலைக்காக தங்களையே தைரியமாக அர்ப்பணித்தார்கள். அவர்களுக்கு இருந்த நம்பிக்கை இன்று நமக்கும் இருக்கிறது.

நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்கு அருமையான கருவிகளை யெகோவாவின் அமைப்பு பயன்படுத்தியது (பாராக்கள் 8-9)

8-9. ஊழியத்தை இன்னும் அதிகமாகச் செய்ய யெகோவாவின் அமைப்பு என்னென்ன முறைகளைப் பயன்படுத்தியது?

8 நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்காக அருமையான கருவிகளை யெகோவாவின் அமைப்பு பயன்படுத்துகிறது. ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன், ஃபோனோகிராஃபுகள், சவுண்ட் கார்கள், ரேடியோ போன்ற கருவிகளை அமைப்பு அன்று பயன்படுத்தியது. இன்று, கம்ப்யூட்டரையும் இன்டர்நெட்டையும் பயன்படுத்திவருகிறது. அதோடு, இன்று யெகோவாவின் அமைப்பு, இதுவரை சரித்திரத்தில் இல்லாதளவுக்கு பிரமாண்டமான அளவில் மொழிபெயர்ப்பு வேலையைச் செய்துவருகிறது. அதனால், எல்லா விதமான மக்களாலும் தங்கள் தாய்மொழியில் நல்ல செய்தியைக் கேட்க முடிகிறது. யெகோவா பாரபட்சம் காட்டாதவராக இருப்பதால்தான், “எல்லா தேசத்தினருக்கும் கோத்திரத்தினருக்கும் மொழியினருக்கும் இனத்தினருக்கும்” நல்ல செய்தி சொல்லப்படும் என்று முன்கூட்டியே சொன்னார். (வெளி. 14:6, 7) எல்லா மக்களுக்கும் நல்ல செய்தி போய்ச் சேர வேண்டுமென்று யெகோவா விரும்புவதை இவையெல்லாம் காட்டுகின்றன.

9 ஆனால், சிலரிடம் நம்மால் பிரசங்கிக்க முடியாமல் இருக்கலாம். ஒருவேளை, பலத்த பாதுகாப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் அவர்கள் வாழலாம். இப்படிப்பட்ட மக்களுக்குப் பிரசங்கிப்பதற்கு வித்தியாசமான பொது ஊழிய முறைகளை அமைப்பு அறிமுகப்படுத்தியது. உதாரணத்துக்கு, 2001-ல், வீல் ஸ்டாண்டு முறையிலும் அதுபோன்ற மற்ற முறைகளிலும் ஊழியம் செய்ய, பிரான்சில் இருக்கிற சகோதர சகோதரிகளுக்கு ஆளும் குழு அனுமதி கொடுத்தது. பிறகு, மற்ற இடங்களில் இருக்கிற சகோதர சகோதரிகளும் இதை முயற்சி செய்துபார்த்தார்கள். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. 2011-ல், அமெரிக்காவின் பரபரப்பான நகரங்களில் ஒன்றான நியு யார்க்கில் “பெருநகர விசேஷ பொது ஊழியம்” ஆரம்பிக்கப்பட்டது. முதல் வருஷத்திலேயே, 1,02,129 புத்தகங்களும் 68,911 பத்திரிகைகளும் வினியோகிக்கப்பட்டன. 4,701 பேர், தங்களுக்கு பைபிள் படிப்பு நடத்தும்படி கேட்டார்கள். கடவுளுடைய சக்தியின் உதவி இருந்தது தெளிவாகத் தெரிந்தது. அதனால், வீல் ஸ்டாண்டு முறையிலும், அதுபோன்ற மற்ற முறைகளிலும் ஊழியம் செய்ய உலகம் முழுவதும் இருக்கிற சகோதர சகோதரிகளுக்கு ஆளும் குழு அனுமதி கொடுத்தது.

10. ஊழியத்தில் நன்றாக ஈடுபடுவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

10 நீங்கள் என்ன செய்யலாம்? கூட்டங்களின் மூலம் யெகோவா கொடுக்கும் பயிற்சியை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் ஊழியத் தொகுதியோடு சேர்ந்து தவறாமல் ஊழியம் செய்யுங்கள். ஊழியம் செய்வதிலும் பைபிள் படிப்பு நடத்துவதிலும் நீங்கள் முன்னேற, உங்கள் தொகுதியில் இருக்கிற சகோதர சகோதரிகள் உங்களுக்கு உதவுவார்கள். அதோடு, அவர்களுடைய முன்மாதிரியும் உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். கஷ்டங்கள் வந்தாலும் தொடர்ந்து ஊழியம் செய்யுங்கள். இந்தக் கட்டுரையின் முக்கிய வசனம் சொல்வதுபோல், நம்முடைய பலத்தால் அல்ல கடவுளுடைய சக்தியின் உதவியால்தான் அவருடைய விருப்பத்தை நம்மால் செய்ய முடிகிறது. (சக. 4:6) நாம் செய்வது கடவுளுடைய வேலை! அதனால், அவர் நமக்கு நிச்சயம் துணையாக இருப்பார் என்பதை மறந்துவிடாதீர்கள்!!

யெகோவா ஒழுங்கையும் சமாதானத்தையும் விரும்புபவர்

11. கடவுளுடைய மக்களுக்கு இடையில் ஒழுங்கைக் கட்டிக்காக்க முதல் நூற்றாண்டிலிருந்த ஆளும் குழுவினர் எப்படி ஒற்றுமையாகச் செயல்பட்டார்கள்?

11 முதல் நூற்றாண்டில். கடவுளுடைய மக்களுக்கு இடையில் ஒழுங்கையும் சமாதானத்தையும் கட்டிக்காக்க, எருசலேமிலிருந்த ஆளும் குழுவினர் ஒற்றுமையாகச் செயல்பட்டார்கள். (அப். 2:42) உதாரணத்துக்கு, கிட்டத்தட்ட கி.பி. 49-ல் விருத்தசேதனம் சம்பந்தமாக பிரச்சினை கிளம்பியபோது, கடவுளுடைய சக்தியின் உதவியோடு ஆளும் குழுவினர் அதைப் பற்றிக் கலந்துபேசினார்கள். அந்தப் பிரச்சினையால் சபையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் தொடர்ந்து அப்படியே இருந்திருந்தால், பிரசங்க வேலை பாதிக்கப்பட்டிருக்கும்! அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் ஒருகாலத்தில் யூதர்களாக இருந்தபோதும், யூத பாரம்பரியமோ அதைப் பெரிதாக நினைத்தவர்களின் கருத்துகளோ தங்கள்மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு அவர்கள் இடம்கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, கடவுளுடைய சக்தியையும் அவருடைய வார்த்தையையும் வழிநடத்துதலுக்காக நம்பியிருந்தார்கள். (அப். 15:1, 2, 5-20, 28) அதற்குப் பலன் கிடைத்ததா? நிச்சயமாக! அவர்கள் எடுத்த முடிவை யெகோவா ஆசீர்வதித்தார். சபைகளில் ஒற்றுமையும் சமாதானமும் பெருகியது. பிரசங்க வேலை தொடர்ந்து முன்னேறியது.—அப். 15:30, 31; 16:4, 5.

12. யெகோவாவின் அமைப்பில் இன்று ஒழுங்கும் சமாதானமும் இருக்கின்றன என்று எப்படிச் சொல்லலாம்?

12 நவீன காலத்தில். யெகோவாவின் மக்களுக்கு இடையில் ஒழுங்கையும் சமாதானத்தையும் கட்டிக்காக்க அமைப்பு நிறைய பாடுபட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, நவம்பர் 15, 1895-ல் வந்த ஒரு காவற்கோபுர பத்திரிகையில் “கண்ணியமாகவும் ஒழுங்காகவும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இருந்தது. 1 கொரிந்தியர் 14:40-ன் அடிப்படையில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரை இப்படிச் சொன்னது: “ஒழுங்கைப் பற்றி ஆரம்பக் கால கிறிஸ்தவ சபைகளுக்கு அப்போஸ்தலர்கள் நிறைய விஷயங்களைச் சொன்னார்கள் . . . ‘நமக்குப் போதனையாக’ இருப்பதற்காக ‘முன்பு எழுதியிருக்கிறவைகளை’ தொடர்ந்து கவனமாகச் சிந்தித்துப்பார்ப்பது நமக்கு நல்லது.” (ரோ. 15:4) ஆரம்பக்கால கிறிஸ்தவர்களுக்கு இடையில் ஒழுங்கையும் சமாதானத்தையும் கட்டிக்காக்க யெகோவாவின் அமைப்பு எப்படிக் கடினமாக உழைத்ததோ, அதேபோல் இன்றும் உழைக்கிறது. இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: நீங்கள் வேறொரு சபைக்கோ வெளிநாட்டில் இருக்கிற ஒரு சபைக்கோ போய் காவற்கோபுர படிப்பில் கலந்துகொள்வதாக வைத்துக்கொள்வோம். அந்தப் படிப்பை எப்படி நடத்துவார்கள், எந்தக் கட்டுரையைப் படிப்பார்கள் என்றெல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், முன்பின் தெரியாத ஓர் இடத்தில் இருப்பதுபோல் நீங்கள் நினைக்க மாட்டீர்கள். கடவுளுடைய சக்தியின் உதவியில்லாமல் இப்படி ஒற்றுமையாகச் செயல்பட முடியுமா?—செப். 3:9, அடிக்குறிப்பு.

13. யாக்கோபு 3:17-ஐ மனதில்வைத்து நீங்கள் என்னென்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

13 நீங்கள் என்ன செய்யலாம்? தன்னுடைய மக்கள், ‘[தன்னுடைய] சக்தி தருகிற ஒற்றுமையைக் காத்துக்கொள்ள’ வேண்டுமென்றும் ‘சமாதானமாக வாழ’ வேண்டுமென்றும் யெகோவா ஆசைப்படுகிறார். (எபே. 4:1-3) அதனால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘சபையோட ஒற்றுமைக்காகவும் சமாதானத்துக்காகவும் நான் உழைக்கிறேனா?’ ‘முன்நின்று வழிநடத்துறவங்களுக்கு நான் கட்டுப்பட்டு நடக்கிறேனா?’ ‘மத்தவங்களோட நம்பிக்கைய சம்பாதிக்கிற மாதிரி நான் நடந்துக்குறேனா, அதுவும் எனக்கு பொறுப்புகள் கொடுக்கப்படுறப்போ அப்படி நடந்துக்குறேனா?’ ‘நான் நேரம் தவறாம இருக்கேனா, மத்தவங்களுக்கு உதவுணுங்குற ஆசை எனக்கு இருக்கா?’ (யாக்கோபு 3:17-ஐ வாசியுங்கள்.) இதில் எந்த விஷயத்திலாவது முன்னேற வேண்டியிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், கடவுளுடைய சக்தியைக் கேட்டு ஜெபம் செய்யுங்கள். உங்கள் சுபாவத்தையும் செயல்களையும் மாற்றிக்கொள்ள எந்தளவுக்கு கடவுளுடைய சக்திக்கு இடம்கொடுக்கிறீர்களோ, அந்தளவுக்கு சகோதர சகோதரிகள் உங்களை நேசிப்பார்கள். அதோடு, சபைக்காக நீங்கள் செய்கிற எல்லாவற்றுக்காகவும் அவர்கள் நன்றியோடு இருப்பார்கள்.

யெகோவா நமக்கு நன்றாகக் கற்றுக்கொடுக்கிறார்

14. கொலோசெயர் 1:9, 10-ல் இருப்பதுபோல், முதல் நூற்றாண்டிலிருந்த தன்னுடைய மக்களுக்கு யெகோவா எப்படிக் கற்றுக்கொடுத்தார்?

14 முதல் நூற்றாண்டில். தன்னுடைய மக்களுக்குக் கற்றுக்கொடுப்பது யெகோவாவுக்கு ரொம்ப பிடிக்கும். (சங். 32:8) நாம் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்... அவரை நேசிக்க வேண்டும்... முடிவில்லாத வாழ்வை அனுபவிக்க வேண்டும்... என்றெல்லாம் அவர் ஆசைப்படுகிறார். அவர் நமக்கு கற்றுக்கொடுக்கவில்லை என்றால், இவை எதுவுமே நடக்காது. (யோவா. 17:3) முதல் நூற்றாண்டு சபையைப் பயன்படுத்தி அவர் தன்னுடைய மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (கொலோசெயர் 1:9, 10-ஐ வாசியுங்கள்.) இப்படிக் கற்றுக்கொடுப்பதில், கடவுளுடைய சக்திக்கு, அதாவது இயேசு வாக்குக் கொடுத்திருந்த ‘சகாயருக்கு’ பெரும்பங்கு இருந்தது. (யோவா. 14:16) கடவுளுடைய வார்த்தையை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு அது சீஷர்களுக்கு உதவியது. இயேசு சொன்ன, செய்த நிறைய விஷயங்களை ஞாபகத்துக்குக் கொண்டுவரவும் அது உதவியது. பிற்பாடு சுவிசேஷ புத்தகங்களில் அவை எழுதப்பட்டன. கடவுளுடைய சக்தி உதவுகிறது என்ற விஷயத்தைப் புரிந்துகொண்டது, ஆரம்பக் கால கிறிஸ்தவர்களின் விசுவாசத்தைப் பலப்படுத்தியது. கடவுள்மீதும், அவருடைய மகன்மீதும் வைத்திருந்த அன்பையும் பலப்படுத்தியது. ஒருவர்மீது ஒருவர் வைத்திருந்த அன்பையும் பலப்படுத்தியது.

15. ஏசாயா 2:2, 3-ல் இருக்கிற வார்த்தைகளை யெகோவா இன்று நிறைவேற்றிவருவதை நீங்கள் எப்படியெல்லாம் பார்க்கிறீர்கள்?

15 நவீன காலத்தில். “கடைசி நாட்களில்,” தன்னுடைய வழிகளைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கு எல்லா தேசத்து மக்களும் தன்னுடைய மலைக்கு வருவார்கள், அதாவது தன்னை வணங்குகிறவர்களோடு சேர்ந்துகொள்வார்கள், என்று யெகோவா முன்கூட்டியே சொன்னார். (ஏசாயா 2:2, 3-ஐ வாசியுங்கள்.) அவர் சொன்னது இன்று நடந்துவருவதை நாம் பார்க்கிறோம். எல்லா பொய் வழிபாட்டுக்கும் மேல் உண்மை வழிபாடு உயர்த்தப்பட்டிருக்கிறது. அதோடு, யெகோவா இன்று நமக்கு ஆன்மீக உணவை அள்ளி அள்ளித் தருகிறார். (ஏசா. 25:6) ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ பயன்படுத்தி நமக்கு ஏராளமான ஆன்மீக உணவை மட்டுமல்ல, விதவிதமான ஆன்மீக உணவையும் தருகிறார். (மத். 24:45) உதாரணத்துக்கு, கட்டுரைகள்... பேச்சுகள்... அனிமேஷன் வீடியோக்கள்... மற்ற வீடியோக்கள்... என வகை வகையாக நாம் ருசிக்கிறோம்! “கற்றுக்கொடுப்பதில் [கடவுளை] மிஞ்ச யாருமே இல்லை” என்று சொன்ன எலிகூவைப் போல்தான் நாமும் நினைக்கிறோம்.—யோபு 36:22.

கற்றுக்கொள்வதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள், அதன்படி நடங்கள் (பாரா 16) *

16. யெகோவா கற்றுக்கொடுப்பவற்றிலிருந்து பிரயோஜனம் அடைய நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

16 நீங்கள் என்ன செய்யலாம்? பைபிளில் கற்றுக்கொள்கிற விஷயங்களின்படி நடக்க, கடவுளுடைய சக்தி உங்களுக்கு உதவும். “யெகோவாவே, உங்களுடைய வழியை எனக்குக் கற்றுக்கொடுங்கள். உங்களுடைய சத்திய பாதையில் நான் நடப்பேன். உங்கள் பெயருக்குப் பயந்து நடக்கும்படி என் இதயத்தை ஒருமுகப்படுத்துங்கள்” என்று ஜெபம் செய்த சங்கீதக்காரரைப் போல் நீங்களும் ஜெபம் செய்யுங்கள். (சங். 86:11) பைபிளையும் அமைப்பு தருகிற பிரசுரங்களையும் தவறாமல் படியுங்கள். வெறுமனே அறிவைப் பெற்றுக்கொள்வது மட்டுமல்ல, கற்றுக்கொள்வதை மனதில் பதிய வைத்துக்கொள்வதும், அதன்படி நடப்பதும் உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். இதைச் செய்ய கடவுளுடைய சக்தி உங்களுக்கு உதவும். அதோடு, சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்துங்கள். (எபி. 10:24, 25) ஏனென்றால், நாம் எல்லாரும் ஒரே குடும்பம்! கூட்டங்களில் மனதிலிருந்து பதில் சொல்லவும், உங்கள் பேச்சுகளை நன்றாகக் கொடுக்கவும் கடவுளுடைய சக்தியைக் கேட்டு ஜெபம் செய்யுங்கள். இப்படியெல்லாம் செய்தால், யெகோவாவுக்கும் அவருடைய மகனுக்கும் சொந்தமான ‘ஆடுகளை’ நீங்கள் உயர்வாக மதிக்கிறீர்கள் என்பதை அவர்கள் இரண்டு பேருக்கும் காட்டுகிறீர்கள்.—யோவா. 21:15-17.

17. யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து உண்மையோடு சேவை செய்துவருகிறீர்கள் என்பதை எப்படியெல்லாம் காட்டலாம்?

17 சீக்கிரத்தில், கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுகிற அமைப்பு மட்டும்தான் இந்த உலகத்தில் இருக்கும். அதனால், அந்த அமைப்போடு சேர்ந்து ஆர்வத்துடிப்போடு சேவை செய்யுங்கள். நீங்கள் பார்க்கிற எல்லாரிடமும் நல்ல செய்தியைச் சொல்வதன் மூலம் யெகோவாவைப் போலவே பாரபட்சம் இல்லாத அன்பைக் காட்டுங்கள். சபையின் ஒற்றுமைக்காகப் பாடுபடுவதன் மூலம் ஒழுங்கையும் சமாதானத்தையும் கட்டிக்காத்திடுங்கள். ஏனென்றால், யெகோவா அதை விரும்புகிறார்! மகத்தான போதகராகிய யெகோவா கற்றுக்கொடுக்கிற எல்லாவற்றையும் கேட்டு நடங்கள். அப்போது, சாத்தானுடைய இந்த உலகம் அழியும்போது நீங்கள் பயந்து நடுங்க மாட்டீர்கள். யெகோவாவின் அமைப்பில் உண்மையோடு சேவை செய்பவர்களோடு சேர்ந்து நீங்களும் தைரியமாக இருப்பீர்கள்!

பாட்டு 152 எம் பலமும் நம்பிக்கையும் நீரே!

^ பாரா. 5 தன்னுடைய அமைப்பை இன்று யெகோவா வழிநடத்துகிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை யெகோவா எப்படி வழிநடத்தினார் என்றும், இன்று தன்னுடைய மக்களை எப்படித் தொடர்ந்து வழிநடத்தி வருகிறார் என்றும் பார்க்கலாம்.

^ பாரா. 1 வார்த்தைகளின் விளக்கம்: யெகோவாவுடைய அமைப்பில் இரண்டு பாகங்கள் இருக்கின்றன. ஒன்று பரலோகத்தில், இன்னொன்று பூமியில்! இந்தக் கட்டுரையில், “அமைப்பு” என்ற வார்த்தை பூமியில் இருக்கிற பாகத்தைக் குறிக்கிறது.

^ பாரா. 52 படவிளக்கம்: ஒரு பயனியர் சகோதரி, தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்பவர்களை வீடியோக்களில் பார்க்கிறார். அதேபோல் தானும் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசை அவருக்கு வருகிறது. கடைசியில், அவரும் வெளிநாட்டில் சேவை செய்கிறார்.