Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 45

கிறிஸ்துவின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்கு மற்றவர்களுக்கு உதவுங்கள்

கிறிஸ்துவின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்கு மற்றவர்களுக்கு உதவுங்கள்

“அதனால், நீங்கள் புறப்பட்டுப் போய், . . . சீஷர்களாக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.”—மத். 28:19, 20.

பாட்டு 120 கேட்போம், கடைப்பிடிப்போம், ஆசி பெறுவோம்

இந்தக் கட்டுரையில்... *

1. இயேசு கொடுத்த என்ன கட்டளை மத்தேயு 28:18-20-ல் இருக்கிறது?

இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டுவிட்டார்! இப்போது, கலிலேயாவில் ஒன்றுகூடியிருக்கிற சீஷர்களுக்குமுன் தோன்றுகிறார். அவர்களிடம் முக்கியமான ஒரு விஷயத்தை அவர் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்த விஷயம், மத்தேயு 28:18-20-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.—வாசியுங்கள்.

2. என்னென்ன கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்ப்போம்?

2 இயேசு அன்று சீஷர்களுக்குக் கொடுத்த கட்டளை இன்று நம் ஒவ்வொருவருக்கும் பொருந்துகிறது. அதனால், இப்போது மூன்று கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம். ஒன்று, கடவுள் எதிர்பார்ப்பதை சொல்லிக்கொடுப்பதோடு வேறு எதையும் நாம் செய்ய வேண்டும்? இரண்டு, பைபிள் மாணவர்கள் முன்னேறுவதற்கு சபையில் இருக்கிற எல்லாருமே எப்படி உதவலாம்? மூன்று, சீஷராக்கும் வேலையை மறுபடியும் செய்ய செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு எப்படி உதவலாம்?

கடைப்பிடிக்கக் கற்றுக்கொடுங்கள்

3. இயேசு கட்டளை கொடுத்தபோது என்ன முக்கியமான ஒரு விஷயத்தை சொன்னார்?

3 இயேசு கொடுத்த கட்டளைகள் தெளிவாக இருக்கின்றன. அவர் கட்டளையிட்ட விஷயங்களை நாம் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால், அதில் முக்கியமான ஓர் அம்சம் இருக்கிறது. அதை நாம் மறந்துவிடக் கூடாது. ‘நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்’ என்று அவர் சொல்லவில்லை. “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்றுதான் சொன்னார். இந்த அறிவுரையின்படி செய்ய வேண்டுமென்றால், பைபிள் மாணவர்களுக்கு நாம் வெறுமனே கற்றுக்கொடுப்பவர்களாக இருந்தால் மட்டும் போதாது, வழிகாட்டிகளாகவும் இருக்க வேண்டும். (அப். 8:31) ஏன் அப்படிச் சொல்கிறோம்?

4. ஒரு கட்டளையைக் கடைப்பிடிப்பது என்றால் என்ன அர்த்தம்? உதாரணத்தோடு விளக்குங்கள்.

4 ஒரு கட்டளையை ‘கடைப்பிடிப்பது’ என்றால், அதற்குக் கீழ்ப்படிவது என்று அர்த்தம். கிறிஸ்துவின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க மற்றவர்களுக்கு உதவ நாம் என்ன செய்ய வேண்டும்? ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். வண்டி ஓட்ட ஒருவருக்கு நீங்கள் கற்றுக்கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது என்ன செய்வீர்கள்? முதலில், போக்குவரத்து விதிமுறைகளைப் பற்றி சொல்லிக்கொடுப்பீர்கள். ஆனால், அது மட்டும் போதாது. நீங்கள் இன்னொன்றையும் செய்ய வேண்டும். ரோட்டில் அவர் வண்டி ஓட்டும்போது நீங்களும் அவர்கூடவே இருந்து, சொல்லிக்கொடுத்த விதிமுறைகளை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று அவருக்குக் காட்ட வேண்டும். இந்த உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

5. (அ) யோவான் 14:15 மற்றும் 1 யோவான் 2:3-ன்படி, மாணவர்களுக்கு நாம் எதை சொல்லித்தர வேண்டும்? (ஆ) அவர்களுக்கு நாம் எப்படியெல்லாம் சொல்லித்தரலாம்?

5 மற்றவர்களுக்கு பைபிள் படிப்பு எடுக்கும்போது, கடவுள் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறோம். ஆனால், அது மட்டும் போதாது. கற்றுக்கொண்ட விஷயங்களை அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்றும் சொல்லித்தர வேண்டும். (யோவான் 14:15-யும், 1 யோவான் 2:3-யும் வாசியுங்கள்.) பள்ளியில்... வேலை செய்யும் இடத்தில்... அல்லது பொழுதுபோக்கில்... பைபிள் நியமங்களின்படி எப்படி நடந்துகொள்ளலாம் என்பதை நம்முடைய முன்மாதிரியின் மூலம் பைபிள் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கலாம். நம்முடைய வாழ்க்கையில் பைபிள் நியமங்களின்படி நடந்ததால், கெட்ட விஷயங்களிலிருந்து நாம் பாதுகாக்கப்பட்டிருப்போம் அல்லது ஞானமான தீர்மானங்களை எடுத்திருப்போம். இதையெல்லாம் நம்முடைய பைபிள் மாணவரிடம் நாம் சொல்லலாம். அவரோடு சேர்ந்து ஜெபம் செய்யும்போது, ‘யெகோவாவே, உங்களோட சக்திய கொடுத்து இவருக்கு உதவுங்க’ என்று நாம் கேட்கலாம்.—யோவா. 16:13.

6. இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க மற்றவர்களுக்கு உதவ நாம் வேறென்ன செய்ய வேண்டும்?

6 இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க மற்றவர்களுக்கு உதவ நாம் வேறொன்றையும் செய்ய வேண்டும். அதாவது, சீஷராக்கும் வேலையைச் செய்ய வேண்டுமென்ற ஆசையை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவ வேண்டும். பைபிள் மாணவர்கள் சிலருக்கு, பிரசங்கிப்பதை நினைத்தாலே பயமாக இருக்கலாம். அதனால், நாம் அவர்களுக்குப் பொறுமையாக சொல்லித்தர வேண்டும். அப்போதுதான், பைபிள் சத்தியங்களை அவர்கள் நன்றாகப் புரிந்துகொள்வார்கள். படிக்கிற விஷயங்கள் அவர்களுடைய மனதைத் தொடும். பிரசங்கிக்க வேண்டுமென்ற ஆசையும் அவர்களுக்கு வரும். அந்த ஆசையை வளர்த்துக்கொள்ள பைபிள் மாணவர்களுக்கு நாம் எப்படியெல்லாம் உதவலாம்?

7. ஊழியம் செய்ய வேண்டுமென்ற ஆசையை வளர்த்துக்கொள்ள பைபிள் மாணவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?

7 நம்மோடு சேர்ந்து பைபிள் படிப்பவர்களிடம், “பைபிள் சொல்ற மாதிரி நடந்ததால உங்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைச்சிருக்கு? மத்தவங்களுக்கும் பைபிள கத்துக்கொடுக்குறது முக்கியம்னு ஏன் நினைக்கிறீங்க? அதுக்கு நீங்க என்ன செய்யலாம்?” போன்ற கேள்விகளைக் கேட்கலாம். (நீதி. 3:27; மத். 9:37, 38) அதோடு, “கற்பிக்கும் கருவிகளில்” இருக்கிற துண்டுப்பிரதிகளை அவர்களுக்குக் காட்டுங்கள். அவருடைய சொந்தக்காரர்களும் நண்பர்களும் கூட வேலை செய்பவர்களும் அவற்றில் எதைப் படிக்க ஆசைப்படுவார்கள் என்று கேளுங்கள். அவர்கள் எந்தத் துண்டுப்பிரதிகளைச் சொல்கிறார்களோ அவற்றை நிறைய கொடுங்கள். மற்றவர்களுக்கு எப்படிச் சாதுரியமாகக் கொடுக்கலாம் என்பதை அவர்களோடு சேர்ந்து ஒத்திகை பார்ப்பதன் மூலம் அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். அவர் ஞானஸ்நானம் பெறாத பிரஸ்தாபியாக ஆன பிறகு, அவரோடு சேர்ந்து ஊழியம் செய்யுங்கள்.—பிர. 4:9, 10; லூக். 6:40.

மாணவர்கள் முன்னேற சபையார் எப்படி உதவலாம்?

8. கடவுள்மேலும் மற்றவர்கள்மேலும் பைபிள் மாணவர்கள் அன்பை வளர்த்துக்கொள்வது ஏன் முக்கியம்? (“ கடவுளை இன்னும் அதிகமாக நேசிக்க பைபிள் மாணவர்களுக்கு எப்படி உதவலாம்?” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

8 தான் ‘கட்டளையிட்ட எல்லாவற்றையும் கடைப்பிடிக்க மற்றவர்களுக்கு உதவும்படி இயேசு சொன்னார். அதில், மிக முக்கியமான இரண்டு கட்டளைகளான கடவுள்மேல் அன்பு காட்டுவதும் மற்றவர்கள்மேல் அன்பு காட்டுவதும் அடங்கும். (மத். 22:37-39) நாம் பிரசங்கிப்பதற்கு முக்கியக் காரணமே, கடவுள்மேலும் மற்றவர்கள்மேலும் நமக்கு இருக்கிற அன்புதான்! ஆனால், பிரசங்கிப்பதை நினைத்தாலே பைபிள் மாணவர்கள் சிலருக்கு பயமாக இருக்கலாம். யெகோவாவின் உதவியோடு மனிதர்கள்மேல் இருக்கிற பயத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் துரத்தியடிக்க முடியுமென்று சொல்லி நாம் அவர்களைப் பலப்படுத்தலாம். (சங். 18:1-3; நீதி. 29:25) கடவுள்மேல் இன்னும் அதிக அன்பை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு நாம் எப்படி உதவலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் இருக்கிற பெட்டியில் சொல்லப்பட்டிருக்கிறது. சபையில் இருக்கிற மற்றவர்கள் எப்படி பைபிள் மாணவர்களுக்கு உதவலாம்?

9. வண்டி ஓட்டுவதற்குப் பழகுபவர், மிக முக்கியமான பாடங்களை எப்படியெல்லாம் கற்றுக்கொள்ளலாம்?

9 ஒருவருக்கு வண்டி ஓட்டக் கற்றுக்கொடுக்கிற அந்த உதாரணத்தை மறுபடியும் பார்க்கலாம். வண்டி ஓட்டுவதற்குப் பழகுபவர், உங்களிடமிருந்து எப்படியெல்லாம் கற்றுக்கொள்ளலாம்? நீங்கள் சொல்கிற அறிவுரைகளைக் கேட்பதன் மூலமும் மற்ற டிரைவர்களைக் கவனிப்பதன் மூலமும் கற்றுக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, ஒரு டிரைவர் இன்னொரு டிரைவருக்கு வழிவிடலாம். வேறொரு டிரைவர், மற்ற டிரைவர்களுடைய கண்கள் கூசாமல் இருப்பதற்காகத் தன்னுடைய வண்டியின் லைட்டைக் குறைக்கலாம். இதையெல்லாம் நீங்கள் அவருக்குக் காட்டும்போது, மிக முக்கியமான இந்தப் பாடங்களைக் கற்றுக்கொண்டு அவரும் அதேபோல் செய்வார்.

10. முன்னேற்றம் செய்ய பைபிள் மாணவர்களுக்கு எது உதவும்?

10 பைபிள் மாணவர்களும் முடிவில்லாத வாழ்வுக்கான ரோட்டில் பயணம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். இந்தப் பயணத்தில், பைபிளைக் கற்றுக்கொடுப்பவர்களிடமிருந்து மட்டுமல்ல, மற்ற சகோதர சகோதரிகளிடமிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். இந்தப் பயணத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்? கூட்டங்களுக்கு வர வேண்டும்! ஏன்? கூட்டங்களுக்கு வந்து அங்கே சொல்லப்படுகிற விஷயங்களைக் கேட்கும்போதுதான் அவர்களால் இன்னும் நிறைய தெரிந்துகொள்ள முடியும். அவர்களுடைய விசுவாசம் பலமாகும். கடவுள்மேல் வைத்திருக்கிற அன்பும் அதிகமாகும். (அப். 15:30-32) அதோடு, அவர்களைப் போன்றே பிரச்சினைகளை அனுபவித்த சகோதர சகோதரிகளை அவர்கள் சந்திக்கலாம். சபையில் நிலவுகிற அன்பான சூழலையும் அவர்கள் கவனிக்கலாம். இதைப் புரிந்துகொள்ள, சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.

11. எப்படிப்பட்ட சகோதர சகோதரிகளை பைபிள் மாணவர்கள் சந்திக்கலாம், அது எப்படி அவர்களுக்கு உதவும்?

11 தனிமரமாய் பிள்ளைகளை வளர்க்கும் ஒரு பைபிள் மாணவர், அதேபோன்ற சூழ்நிலையில் இருக்கும் ஒரு சகோதரியை சபைக் கூட்டத்தில் பார்க்கிறார். அந்தச் சகோதரி, ரொம்ப முயற்சியெடுத்து தன்னுடைய சின்னப் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வருகிறார். அதைப் பார்ப்பது அவருடைய மனதைத் தொடுகிறது. புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்குப் போராடிக்கொண்டிருக்கிற ஒரு பைபிள் மாணவர், அதே பிரச்சினையைச் சமாளித்த ஒரு சகோதரரைப் பார்க்கிறார். யெகோவாமீது இருக்கிற அன்பை அதிகமாக்கியதால்தான் அந்தப் பிரச்சினையிலிருந்து தன்னால் வெளியே வர முடிந்ததென்று அந்தச் சகோதரர் சொல்கிறார். (2 கொ. 7:1; பிலி. 4:13) பிறகு, “உங்களாலயும் கண்டிப்பா நிறுத்த முடியும்” என்று உற்சாகப்படுத்துகிறார். இதைக் கேட்கிற பைபிள் மாணவருக்கு நம்பிக்கை அதிகமாகிறது. பைபிள் படிக்கிற ஓர் இளம் பெண், தன்னுடைய வயதிலிருக்கிற ஒரு சகோதரி சந்தோஷமாக இருப்பதைப் பார்க்கிறார். அந்தச் சகோதரியால் எப்படி எப்போதும் சந்தோஷமாக இருக்க முடிகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்.

12. பைபிள் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு சபையில் இருக்கிற ஒவ்வொருவராலும் உதவ முடியும் என்று எப்படிச் சொல்லலாம்?

12 பல்வேறு சூழ்நிலைகளில் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்துவருகிற சகோதர சகோதரிகளை பைபிள் மாணவர்கள் சந்திக்கும்போது, கடவுள்மீதும் மற்றவர்கள்மீதும் அன்பு காட்டும்படி கிறிஸ்து கொடுத்த கட்டளையை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்பதை கற்றுக்கொள்கிறார்கள். (யோவா. 13:35; 1 தீ. 4:12) அதோடு, போன பாராவில் பார்த்ததைப் போல், தங்களுக்கு இருக்கிற அதேபோன்ற பிரச்சினைகளை ஏற்கெனவே சமாளித்த சகோதர சகோதரிகளிடமிருந்தும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுடைய அனுபவங்களைக் கேட்கும்போது, கிறிஸ்துவின் சீஷர்களாக ஆவதற்குத் தேவையான மாற்றங்களைத் தங்களாலும் செய்ய முடியும் என்பதைத் தெரிந்துகொள்கிறார்கள். (உபா. 30:11) பைபிள் மாணவர்கள் முன்னேறுவதற்கு சபையில் இருக்கிற ஒவ்வொருவரும் நிறைய விதங்களில் உதவ முடியும். (மத். 5:16) கூட்டங்களுக்கு வருகிற பைபிள் மாணவர்களுக்கு உதவி செய்ய நீங்கள் என்னென்ன முயற்சிகளை எடுக்கிறீர்கள்?

மறுபடியும் ஊழியம் செய்ய செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு உதவுங்கள்

13-14. மனமுடைந்துபோயிருந்த அப்போஸ்தலர்களிடம் இயேசு எப்படி நடந்துகொண்டார்?

13 சீஷராக்கும் வேலையை மறுபடியும் ஆரம்பிப்பதற்கு செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு உதவ நாம் ஆசைப்படுகிறோம். அதற்கு நாம் என்ன செய்யலாம்? மனமுடைந்துபோயிருந்த அப்போஸ்தலர்களை இயேசு எப்படி நடத்தினார் என்பதைத் தெரிந்துகொள்வது நமக்கு உதவியாக இருக்கும்.

14 இயேசுவின் ஊழியக் காலம் முடிவடையப்போகிற சமயத்தில், அதாவது அவர் இறப்பதற்குக் கொஞ்சம் முன்பு, அப்போஸ்தலர்கள் “எல்லாரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்.” (மாற். 14:50; யோவா. 16:32) சோர்ந்துபோயிருந்த அப்போஸ்தலர்களை இயேசு ஒதுக்கித்தள்ளிவிட்டாரா? இல்லை! அவர் உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, ‘பயப்படாதீர்கள்! [நான் உயிர்த்தெழுப்பப்பட்ட விஷயத்தை] என் சகோதரர்களிடம் போய் . . . சொல்லுங்கள்’ என்று சீஷர்கள் சிலரிடம் சொன்னார். (மத். 28:10அ) அப்போஸ்தலர்கள்மேல் வைத்திருந்த நம்பிக்கையை இயேசு இழந்துவிடவில்லை. அவரைவிட்டு அவர்கள் ஓடிப்போயிருந்தாலும் அவர்களை ‘என் சகோதரர்கள்’ என்றுதான் சொன்னார். யெகோவாவைப் போலவே இயேசு இரக்கமுள்ளவர், மன்னிப்பவர்.—2 ரா. 13:23.

15. ஊழியம் செய்வதை நிறுத்திவிட்டவர்களைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்?

15 ஊழியம் செய்வதை நிறுத்திவிட்டவர்கள்மேல் நாமும் அக்கறையாக இருக்கிறோம். அவர்களை நாம் ரொம்ப நேசிக்கிறோம். ஏனென்றால், அவர்களும் நம் சகோதர சகோதரிகள்தான்! யெகோவாவுக்கு அவர்கள் சேவை செய்ததை நம்மால் மறக்க முடியாது. அதுவும், அவர்களில் சிலர் ரொம்ப வருஷங்களாக சேவை செய்திருக்கிறார்கள். (எபி. 6:10) இப்போது அவர்கள் நம்மோடு சேர்ந்து சேவை செய்யாததை நினைத்தால் நமக்கு வருத்தமாக இருக்கிறது. (லூக். 15:4-7) அப்படியென்றால், இயேசுவைப் போலவே அவர்கள்மீது நாம் எப்படி அக்கறை காட்டலாம்?

16. செயலற்றவர்கள்மீது நமக்கு அக்கறை இருக்கிறது என்பதை எப்படிக் காட்டலாம்?

16 அன்பாகக் கூப்பிடுங்கள். மனமுடைந்துபோயிருந்த அப்போஸ்தலர்களை இயேசு நிறைய வழிகளில் உற்சாகப்படுத்தினார். அதில் ஒரு வழி, அவர்களை ஒன்றுகூடி வரச் சொன்னது! (மத். 28:10ஆ; 1 கொ. 15:6) அதேபோல், செயலற்ற பிரஸ்தாபிகளாக இருக்கிற சகோதர சகோதரிகளை இன்று நாமும் கூட்டங்களுக்கு வரும்படி உற்சாகப்படுத்த வேண்டும். ஓரிரு தடவை அல்ல, நிறைய தடவை நாம் அவர்களைக் கூப்பிட வேண்டும். தன்னுடைய அழைப்பை சீஷர்கள் ஏற்றுக்கொண்டபோது இயேசுவுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்!—மத்தேயு 28:16-ஐயும் லூக்கா 15:6-ஐயும் ஒப்பிடுங்கள்.

17. செயலற்ற பிரஸ்தாபி ஒருவர் கூட்டங்களுக்கு வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

17 முகம் மலர வரவேற்பு கொடுங்கள். தன்னுடைய அழைப்பை ஏற்று சீஷர்கள் வந்தபோது, இயேசு அவர்களை அன்பாக வரவேற்றார். தானாகவே முன்வந்து பேசினார். (மத். 28:18) செயலற்ற பிரஸ்தாபி ஒருவர் ராஜ்ய மன்றத்துக்கு வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? அவரைப் பார்த்த உடனே நாம் அவரை முகம் மலர வரவேற்க வேண்டும். அவரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் ஒருவேளை நாம் தயங்கலாம். ஆனால், அவரைத் தர்மசங்கடப்படுத்தாத விதத்தில் ‘உங்கள பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்’ என்று நாம் சொல்லலாம்.

18. செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு நாம் எப்படி நம்பிக்கையூட்டலாம்?

18 நம்பிக்கையூட்டுங்கள். உலகம் முழுவதும் பிரசங்கிப்பதை நினைத்து இயேசுவின் சீஷர்கள் மலைத்துப் போயிருக்கலாம். ஆனால் இயேசு, “எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்” என்று சொல்லி அவர்களுக்கு நம்பிக்கையூட்டினார். (மத். 28:20) அதனால் என்ன பலன் கிடைத்தது? சீக்கிரத்திலேயே, சீஷர்கள் “இடைவிடாமல் கற்பித்து, . . . நல்ல செய்தியை அறிவித்துவந்தார்கள்.” (அப். 5:42) அப்படியென்றால், செயலற்ற பிரஸ்தாபிகளுக்கும் நாம் நம்பிக்கையூட்ட வேண்டும். மறுபடியும் ஊழியம் செய்வதை நினைத்து ஒருவேளை அவர்கள் பயப்படலாம். ‘கவலப்படாதீங்க, நானும் உங்ககூட ஊழியத்துக்கு வர்றேன்’ என்று சொல்லி அவர்களுக்கு நம்பிக்கையூட்டலாம். இப்படி உதவும்போது அவர்கள் உண்மையிலேயே ரொம்ப சந்தோஷப்படுவார்கள். செயலற்ற பிரஸ்தாபிகளை நம்முடைய சகோதர சகோதரிகளாக நினைத்து அவர்களுக்கு உதவும்போது, மறுபடியும் அவர்கள் சுறுசுறுப்பாக ஊழியம் செய்ய ஆரம்பிப்பார்கள். அதைப் பார்த்து சபையில் இருக்கிற எல்லாருமே சந்தோஷப்படுவார்கள்.

வேலையைச் செய்து முடிக்க ஆசைப்படுகிறோம்

19. நாம் என்ன செய்ய ஆசைப்படுகிறோம், ஏன்?

19 சீஷராக்கும் வேலையை நாம் எவ்வளவு நாட்களுக்கு செய்ய வேண்டும்? இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை செய்ய வேண்டும்! (மத். 28:20; சொல் பட்டியலில் “சகாப்தத்தின் கடைசிக் கட்டம்” என்ற தலைப்பைப் பாருங்கள்.) இதை நம்மால் செய்ய முடியுமா? கண்டிப்பாக முடியும்! இதைச் செய்வதில் நாம் உறுதியாக இருக்கிறோம்!! “முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு” இருப்பவர்களைக் கண்டுபிடிக்க, நம்முடைய நேரத்தையும் சக்தியையும் பணம்பொருளையும் நாம் சந்தோஷமாக செலவு செய்கிறோம். (அப். 13:48) இப்படிச் செய்யும்போது, “என்னை அனுப்பியவருடைய விருப்பத்தின்படி செய்து அவருடைய வேலையை முடிப்பதே என்னுடைய உணவாக இருக்கிறது” என்று சொன்ன இயேசுவைப் போலவே நாம் நடந்துகொள்கிறோம் என்று அர்த்தம். (யோவா. 4:34; 17:4) நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிற இந்த வேலையைச் செய்து முடிக்கத்தான் நாமும் ஆசைப்படுகிறோம். (யோவா. 20:21) அதோடு, நம்மோடு சேர்ந்து செயலற்ற பிரஸ்தாபிகளும் இந்த வேலையைச் செய்ய வேண்டுமென்று நாம் ஆசைப்படுகிறோம்.—மத். 24:13.

20. பிலிப்பியர் 4:13-ன்படி, இயேசு கொடுத்திருக்கிற வேலையை நம்மால் செய்து முடிக்க முடியும் என்று எப்படிச் சொல்லலாம்?

20 இயேசு கொடுத்த வேலையைச் செய்து முடிப்பது அவ்வளவு சுலபம் இல்லைதான். ஆனால், நாம் தனியாக இந்த வேலையைச் செய்வதில்லை. நம்மோடு இருப்பதாக இயேசு வாக்குக் கொடுத்திருக்கிறார். ‘கடவுளுடைய சக வேலையாட்களாகவும்,’ ‘கிறிஸ்துவோடு ஒன்றுபட்டும்’ நாம் இந்த வேலையைச் செய்கிறோம். (1 கொ. 3:9; 2 கொ. 2:17) அதனால், இந்த வேலையை நிச்சயம் நம்மால் செய்து முடிக்க முடியும். இந்த வேலையைச் செய்வதும், இதைச் செய்ய மற்றவர்களுக்கு உதவுவதும் எவ்வளவு பெரிய பாக்கியம்! இதை நினைத்து நாம் ரொம்ப சந்தோஷப்படலாம்.—பிலிப்பியர் 4:13-ஐ வாசியுங்கள்.

பாட்டு 139 உறுதியாய் நிற்க உதவும்!

^ பாரா. 5 மற்றவர்களை சீஷர்களாக்கும்படி தன்னைப் பின்பற்றியவர்களிடம் இயேசு சொன்னார். அதோடு, தான் கட்டளையிட்ட எல்லாவற்றையும் கடைப்பிடிக்க அவர்களுக்கு உதவும்படியும் சொன்னார். இயேசு கொடுத்த அறிவுரைகளின்படி நாம் எப்படிச் செய்யலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஜூலை 1, 2004 காவற்கோபுரம், பக்கங்கள் 14-19-ல் இருக்கிற தகவல்களும் இந்தக் கட்டுரையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

^ பாரா. 66 பட விளக்கம்: ஒரு சகோதரி, ஒரு பெண்ணுக்கு பைபிள் படிப்பு எடுக்கிறார். யெகோவாமீது இன்னும் அதிக அன்பை வளர்த்துக்கொள்ள அந்தப் பெண் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சகோதரி சொல்கிறார். பிற்பாடு, சகோதரி சொன்ன மூன்று ஆலோசனைகளின்படி அந்தப் பெண் செய்கிறார்.