Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 47

தொடர்ந்து உங்களைச் சரிப்படுத்திக்கொள்வீர்களா?

தொடர்ந்து உங்களைச் சரிப்படுத்திக்கொள்வீர்களா?

“கடைசியாக, சகோதரர்களே, எப்போதும் சந்தோஷமாக இருங்கள், உங்களைச் சரிப்படுத்திக்கொள்ளுங்கள்.”—2 கொ. 13:11.

பாட்டு 65 ‘வழி இதுவே!’

இந்தக் கட்டுரையில்... *

1. மத்தேயு 7:13, 14-ன்படி, நாம் எப்படிப்பட்ட பயணத்தைச் செய்கிறோம்?

நம்முடைய அன்பான கடவுள் யெகோவா கொடுக்கப்போகும் புதிய உலகத்தை நோக்கி நாம் பயணம் செய்துகொண்டிருக்கிறோம். முடிவில்லாத வாழ்வைத் தரப்போகிற பாதை வழியாக பயணம் செய்ய ஒவ்வொரு நாளும் நாம் முயற்சி செய்கிறோம். ஆனால், இயேசு சொன்னதுபோல் அந்தப் பாதை குறுகலானதாக இருப்பதால் அதில் பயணம் செய்வது சிலசமயங்களில் நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். (மத்தேயு 7:13, 14-ஐ வாசியுங்கள்.) நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், அந்தப் பாதையை விட்டு வழிமாறி போவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.—கலா. 6:1.

2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்? (“ நம்மை மாற்றிக்கொள்ள மனத்தாழ்மை உதவும்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

2 முடிவில்லாத வாழ்வுக்குப் போகிற குறுகலான பாதை வழியாக தொடர்ந்து பயணம் செய்ய வேண்டுமென்றால், நம்முடைய யோசனைகள்... விருப்புவெறுப்புகள்... செயல்கள்... ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யத் தயாராக இருக்க வேண்டும். தொடர்ந்து தங்களை ‘சரிப்படுத்திக்கொள்ளும்படி’ கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் கேட்டுக்கொண்டார். (2 கொ. 13:11) அந்த அறிவுரை நமக்கும் பொருந்துகிறது. முடிவில்லாத வாழ்வுக்கான பாதையில் தொடர்ந்து பயணம் செய்வதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்ய, பைபிள் எப்படி உதவும் என்றும் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் எப்படி உதவுவார்கள் என்றும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அமைப்பு தருகிற வழிநடத்துதல்களை ஏற்றுக்கொள்வது எப்போது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம் என்பதைப் பற்றியும் பார்ப்போம். மாற்றங்கள் செய்யும்போது நம்முடைய சந்தோஷத்தை இழந்துவிடாமல் இருப்பதற்கு மனத்தாழ்மை எப்படி உதவும் என்பதையும் பார்ப்போம்.

பைபிள் உங்களைச் சரிசெய்யட்டும்!

3. பைபிள் எப்படி உங்களுக்கு உதவும்?

3 நம்முடைய யோசனைகளையும் உணர்வுகளையும் நாம் எப்போதுமே சரியாகத்தான் எடைபோடுவோம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், நம்முடைய இதயம் நயவஞ்சகமானது. அது நம்மைத் தவறான பாதையில் கொண்டுபோய் விட்டுவிடும். (எரே. 17:9) நாம் செய்வதுதான் சரி என்று நினைத்துக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. (யாக். 1:22) அதனால், நம்முடைய இதயத்தில் இருக்கிற “எண்ணங்களையும் நோக்கங்களையும்” சரியாக எடைபோடுவதற்கு நாம் பைபிளைப் படிக்க வேண்டும். (எபி. 4:12, 13) பைபிள், எக்ஸ்ரே மெஷின் போன்றது! உள்ளுக்குள் இருக்கும் எல்லாவற்றையும் அது வெளிச்சம்போட்டு காட்டிவிடும். ஆனால், பைபிளும் நம்மை முன்னின்று வழிநடத்துகிறவர்களும் கொடுக்கிற ஆலோசனையிலிருந்து பிரயோஜனம் அடைய வேண்டுமென்றால், நமக்கு மனத்தாழ்மை தேவை.

4. சவுல் தலைக்கனம் பிடித்த ஓர் ஆளாக மாறிவிட்டார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?

4 மனத்தாழ்மை மங்கிவிட்டால் என்ன நடக்கும் என்பதை சவுல் ராஜாவிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். அவருடைய யோசனைகளையும் செயல்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை அவருடைய மனதே ஏற்றுக்கொள்ளவில்லை! அந்தளவுக்கு அவர் தலைக்கனம் பிடித்தவராக மாறிவிட்டார். (சங். 36:1, 2; ஆப. 2:4) உதாரணத்துக்கு, அமலேக்கியர்களைத் தோற்கடித்த பின்பு அவர் என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா சொல்லியிருந்தார். ஆனால், யெகோவா சொன்னபடி அவர் செய்யவில்லை. சாமுவேல் தீர்க்கதரிசி வந்து இதைப் பற்றிக் கேட்டபோது, தன்னுடைய தவறை அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, தான் செய்ததை நியாயப்படுத்தினார். எப்படி? தான் செய்ததொன்றும் அவ்வளவு பெரிய தவறில்லை என்று சொன்னார். பழியைத் தூக்கி மற்றவர்கள்மேல் போட்டார். (1 சா. 15:13-24) இதற்கு முன்பும் சவுல் இப்படிச் செய்திருக்கிறார். (1 சா. 13:10-14) இப்படி, தலைக்கனம் பிடித்த ஓர் ஆளாக சவுல் மாறிவிட்டார். தன்னுடைய யோசனைகளை அவர் சரிசெய்துகொள்ளவில்லை. அதனால், அவரை யெகோவா கண்டித்தார்; ஒதுக்கித்தள்ளினார்.

5. சவுலிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

5 சவுலிடமிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘பைபிள்ல இருந்து ஏதாவது அறிவுரைய படிக்குறப்போ நான் செய்றது சரிதான்னு என்னை நானே நியாயப்படுத்திக்கிறனா? நான் செய்றது ஒண்ணும் அவ்வளவு பெரிய தப்பில்லன்னு நினைக்கிறனா? பழிய தூக்கி மத்தவங்க மேல போடுறனா?’ இவற்றில் ஏதாவது ஒரு கேள்விக்காவது ‘ஆமாம்’ என்பது நம்முடைய பதிலாக இருந்தால், நம்முடைய யோசனைகளை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று அர்த்தம். அப்படி மாற்றிக்கொள்ளவில்லை என்றால், நாம் தலைக்கனம் பிடித்தவர்களாக மாறிவிடுவோம். நம்முடைய நட்பை யெகோவா முறித்துக்கொள்வார்.—யாக். 4:6.

6. சவுல் ராஜாவுக்கும் தாவீது ராஜாவுக்கும் இருந்த வித்தியாசத்தைச் சொல்லுங்கள்.

6 சவுல் ராஜாவுக்கும் அவருக்கு அடுத்ததாக ராஜாவாக ஆன தாவீதுக்கும் இருந்த வித்தியாசத்தை யோசித்துப்பாருங்கள். தாவீது ராஜா, “யெகோவாவின் சட்டத்தை” நேசித்தார். (சங். 1:1-3) தாழ்மையுள்ளவர்களை யெகோவா காப்பாற்றுகிறார் என்பதும், கர்வமுள்ளவர்களை வெறுக்கிறார் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. (2 சா. 22:28) அதனால், கடவுளுடைய வார்த்தையைப் படித்ததன் மூலம் அவர் தன்னுடைய யோசனைகளை மாற்றிக்கொண்டே இருந்தார். “எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவை நான் புகழ்வேன். ராத்திரியில்கூட என்னுடைய அடிமனதின் யோசனைகள் என்னைத் திருத்துகின்றன” என்று அவர் எழுதினார்.—சங். 16:7.

பைபிள்

நாம் திசைமாறும்போது பைபிள் நம்மை எச்சரிக்கும். நாம் மனத்தாழ்மையாக இருந்தால், நம்முடைய தவறான யோசனைகளை மாற்றிக்கொள்ள முடியும் (பாரா 7)

7. நாம் மனத்தாழ்மையாக இருந்தால் என்ன செய்வோம்?

7 தவறான யோசனைகள்தான் தவறான செயல்களாக மாறுகின்றன. ஆனால் நாம் மனத்தாழ்மையாக இருந்தால், பைபிளைப் படித்து நம்முடைய யோசனைகளை சரிசெய்துகொள்வோம். வாழ்வுக்கான பாதையிலிருந்து நாம் வலது பக்கமாகவோ இடது பக்கமாகவோ போனால், பைபிள் நம்மை எச்சரிக்கும். “இதுதான் சரியான வழி, இதிலே நடங்கள்” என்று சொல்லும். (ஏசா. 30:21) யெகோவா சொல்படி கேட்டால் நமக்கு நிறைய பலன்கள் கிடைக்கும். (ஏசா. 48:17) உதாரணத்துக்கு, மற்றவர்கள் நம்மை சரிசெய்ய வேண்டிய ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை நமக்கு வராது. அதோடு, தன்னுடைய பிள்ளைகள்போல் நினைத்து யெகோவா நம்மை அன்பாக நடத்துகிறார் என்பதைப் புரிந்துகொண்டு, அவரிடம் இன்னும் நெருங்கிப் போவோம்.—எபி. 12:7.

8. யாக்கோபு 1:22-25 சொல்வதுபோல், பைபிளை நாம் எப்படிக் கண்ணாடிபோல் பயன்படுத்தலாம்?

8 பைபிள், கண்ணாடி போன்றது! (யாக்கோபு 1:22-25-ஐ வாசியுங்கள்.) நாம் ஒவ்வொரு நாளும் வீட்டைவிட்டு கிளம்புவதற்கு முன்பு, கண்ணாடியைப் பார்த்து நம்மை சரிசெய்துகொள்வோம். அதேபோல், நாம் ஒவ்வொரு நாளும் பைபிளைப் படித்தால், நம் யோசனைகளையும் விருப்புவெறுப்புகளையும் எப்படிச் சரிசெய்துகொள்வது என்று தெரிந்துகொள்வோம். ஒவ்வொரு நாள் காலையிலும் வீட்டைவிட்டு கிளம்புவதற்கு முன்பு தினவசனத்தைப் படிப்பது நிறைய பேருக்கு உதவியாக இருக்கிறது. அதைப் படிப்பதன் மூலம் தங்களுடைய யோசனைகளை அவர்களால் சரிசெய்துகொள்ள முடிகிறது. கற்றுக்கொண்டவற்றின்படி நடந்துகொள்ள, அந்த நாள் முழுவதும் முயற்சி செய்ய முடிகிறது. அதோடு, ஒவ்வொரு நாளும் நாம் பைபிளைப் படித்து, படித்தவற்றை ஆழமாக யோசித்துப்பார்க்க வேண்டும். ‘இதெல்லாம் செய்யணுங்குறது எனக்கு தெரிஞ்ச விஷயந்தானே!’ என்று நாம் நினைக்கலாம். ஆனால், வாழ்வுக்கான குறுகலான பாதையில் தொடர்ந்து பயணம் செய்வதற்கு இதுதான் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம்.

முதிர்ச்சியுள்ள நண்பர்கள் சொல்வதைக் கேளுங்கள்

முதிர்ச்சியுள்ள நண்பர்கள்

முதிர்ச்சியுள்ள சகோதரரோ சகோதரியோ நம்மை அன்போடு எச்சரிக்கலாம். தைரியமாக நம்மிடம் பேசியதற்காக நாம் அவருக்கு நன்றியோடு இருக்கிறோமா? (பாரா 9)

9. உங்கள் நண்பர் எப்போது உங்களைச் சரிப்படுத்த வேண்டியிருக்கலாம்?

9 யெகோவாவை விட்டு வழிதவறிப் போகவைக்கிற பாதையில் என்றாவது நீங்கள் காலடி எடுத்து வைத்திருக்கிறீர்களா? (சங். 73:2, 3) அப்போது, முதிர்ச்சியுள்ள ஒரு நண்பர் தைரியமாக உங்களைச் சரிப்படுத்த முயற்சி செய்திருக்கிறாரா? அவர் சொல்வதைக் கேட்டு அதன்படி நீங்கள் நடந்திருக்கிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் சரியானதை செய்திருக்கிறீர்கள்! உங்கள் நண்பர் உங்களை எச்சரித்ததற்காக நிச்சயம் அவருக்கு நீங்கள் ரொம்ப நன்றியோடு இருப்பீர்கள்.—நீதி. 1:5.

10. உங்கள் நண்பர் உங்களைச் சரிப்படுத்தும்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

10 “நண்பன் உண்மையுள்ளவனாக இருப்பதால் காயங்களை ஏற்படுத்துகிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 27:6) இதற்கு என்ன அர்த்தம்? இதைக் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்: போக்குவரத்து அதிகமாக இருக்கிற ஒரு ரோடு! அந்த ரோட்டை கடந்துபோவதற்காக நீங்கள் காத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் செல்ஃபோனைப் பார்த்துக்கொண்டே வண்டிகள் வருவதைக் கவனிக்காமல் ரோட்டில் காலடி எடுத்து வைக்கிறீர்கள். அப்போது, திடீரென்று உங்கள் நண்பர் பின்னாலிருந்து வேகமாக உங்கள் கையைப் பிடித்து இழுக்கிறார். அவர் இழுத்ததில் உங்கள் கை பயங்கரமாக வலிக்கிறது. ஆனால், அவர் அப்படி இழுத்ததால்தான் வண்டி உங்கள்மேல் மோதாமல் தப்பித்துக் கொள்ள முடிந்தது. ஒருவேளை, உங்களுடைய கை வலி ரொம்ப நாட்களுக்கு இருக்கலாம். அதற்காக உங்கள் நண்பர்மேல் நீங்கள் கோபப்படுவீர்களா? நிச்சயமாக இல்லை! அவர் உங்களை இழுத்து காப்பாற்றியதற்காக அவருக்கு ரொம்ப நன்றியோடு இருப்பீர்கள். அதேபோல், உங்களுடைய பேச்சோ நடவடிக்கையோ யெகோவாவின் நெறிமுறைகளுக்கு ஏற்றதுபோல் இல்லையென்று வைத்துக்கொள்வோம். அப்போது, உங்களுடைய நண்பர் தைரியமாக உங்களை எச்சரிக்கிறார். அது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். அதற்காக அவர்மேல் நீங்கள் கோபப்பட்டால் அது முட்டாள்தனம். (பிர. 7:9) அவர் தைரியமாக உங்களிடம் பேசியதற்காக, அவருக்கு நீங்கள் ரொம்ப நன்றியோடு இருக்க வேண்டும்.

11. நண்பர் சொல்கிற அறிவுரையை ஒதுக்கித்தள்ளுவதற்கு எது காரணமாக இருக்கலாம்?

11 நமக்குத் தலைக்கனம் இருந்தால், நண்பர் கொடுக்கிற அறிவுரையை நாம் ஒதுக்கித்தள்ளிவிடுவோம். தலைக்கனத்தோடு இருக்கிற ஆட்கள், “தங்கள் காதுகளுக்கு இனிமையாய் இருக்கும் விஷயங்களை” கேட்பதற்குத்தான் விரும்புவார்கள். “சத்தியத்தை” கேட்க மாட்டார்கள். (2 தீ. 4:3, 4) தாங்கள் நினைப்பதுதான் சரி என்கிற எண்ணம் அவர்களுக்கு இருக்கும். தங்களையே உயர்வாக நினைப்பார்கள். ஆனால், “ஒருவன் முக்கியமானவனாக இல்லாமலிருந்தும் தன்னை முக்கியமானவனாக நினைத்துக்கொண்டால், அவன் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதியதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். (கலா. 6:3) “வயதானவராக இருந்தாலும் எச்சரிக்கையைக் கேட்டு நடக்கிற அளவுக்குக்கூட புத்தி இல்லாத முட்டாள் ராஜாவைவிட, ஏழையாக இருந்தாலும் ஞானமாக நடக்கிற இளைஞனே மேல்” என்று சாலொமோன் ராஜாவும் எழுதினார்.—பிர. 4:13.

12. அப்போஸ்தலன் பேதுருவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (கலாத்தியர் 2:11-14)

12 இப்போது, அப்போஸ்தலன் பேதுருவைப் பற்றிப் பார்க்கலாம். எல்லாருக்கும் முன்பாக அப்போஸ்தலன் பவுல் தன்னைக் கண்டித்தபோது அவர் என்ன செய்தார்? (கலாத்தியர் 2:11-14-ஐ வாசியுங்கள்.) கோபப்பட்டாரா? பவுல் சொன்ன விதமும் சொன்ன இடமும் சரியில்லை என்று நினைத்தாரா? இல்லை! பேதுரு ஞானமாக நடந்துகொண்டார். பவுல் சொன்ன அறிவுரையை ஏற்றுக்கொண்டார். அவர் சொன்னதையே நினைத்து மனதுக்குள் புழுங்கிக்கொண்டு இருக்கவில்லை. சொல்லப்போனால், பிற்பாடு தான் எழுதிய ஒரு கடிதத்தில் பவுலை ‘அன்புச் சகோதரர்’ என்று சொன்னார்.—2 பே. 3:15.

13. மற்றவர்களுக்கு ஆலோசனை தரும்போது எதையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்?

13 இப்போது, உங்களுடைய விஷயத்துக்கு வரலாம். உங்கள் நண்பருக்கு நீங்கள் ஆலோசனை தர வேண்டுமென்று நினைக்கிறீர்கள். ஆனால் அதற்கு முன்பு, ‘நான் என்னை “பெரிய நீதிமானா” நினைச்சுக்கறனா?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். (பிர. 7:16) ஏனென்றால், தன்னையே நீதிமானாக நினைக்கும் ஒருவர், தனக்கு எது சரி என்று படுகிறதோ அதை வைத்துதான் ஒரு விஷயத்தை எடைபோடுவாரே தவிர, யெகோவாவின் நெறிமுறைகளின்படி எடைபோட மாட்டார். இரக்கமாகவும் நடந்துகொள்ளமாட்டார். இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டதற்குப் பிறகும் உங்கள் நண்பருக்கு ஆலோசனை கொடுக்க வேண்டுமென்று நினைத்தால், அவரிடம் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள். அவர் செய்த தவறைப் புரியவைப்பதற்காக கேள்விகளைக் கேளுங்கள். என்ன சொன்னாலும் பைபிளிலிருந்து சொல்லுங்கள். உங்கள் நண்பர், உங்களுக்கு அல்ல யெகோவாவுக்குத்தான் கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். அதனால், அவரை நியாயந்தீர்க்காதீர்கள். (ரோ. 14:10) ஒருவருக்கு ஆலோசனை தரும்போது, சொந்த புத்தியை நம்பாமல் பைபிளில் இருக்கிற ஞானத்தை நம்புங்கள். இயேசுவைப் போலவே கரிசனை காட்டுங்கள். (நீதி. 3:5; மத். 12:20) மற்றவர்களை நாம் எப்படி நடத்துகிறோமோ அப்படித்தான் யெகோவாவும் நம்மை நடத்துவார்.—யாக். 2:13.

அமைப்பு தருகிற வழிநடத்துதலின்படி செய்யுங்கள்

அமைப்பு

பைபிளில் இருக்கிற அறிவுரைகளின்படி நடந்துகொள்ள, பிரசுரங்களையும் வீடியோக்களையும் கூட்டங்களையும் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கிறது. சிலசமயங்களில், நம்முடைய வேலைகளில் ஆளும் குழு மாற்றங்களைச் செய்கிறது (பாரா 14)

14. அமைப்பு நமக்கு எதையெல்லாம் தருகிறது?

14 தன்னுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தைப் பயன்படுத்தி வாழ்வுக்கான பாதையில் யெகோவா நம்மை வழிநடத்துகிறார். அவருடைய வார்த்தையில் இருக்கிற ஆலோசனையின்படி நடந்துகொள்ள, வீடியோக்களையும் பிரசுரங்களையும் கூட்டங்களையும் அமைப்பு ஏற்பாடு செய்கிறது. எல்லாவற்றையும் அமைப்பு பைபிள் அடிப்படையில் தருவதால் அவற்றை நாம் முழுமையாக நம்பலாம். பிரசங்க வேலையைப் பற்றிய முடிவுகள் எடுக்கும்போது, ஆளும் குழு கடவுளுடைய சக்தியை நம்பியிருக்கிறது. அதேசமயத்தில், அந்த முடிவுகளை அடிக்கடி பரிசீலனையும் செய்கிறது. ஏனென்றால், “இந்த உலகத்தின் காட்சி மாறிக்கொண்டே இருக்கிறது.” (1 கொ. 7:31) அதனால், அதற்குத் தகுந்தபடி அமைப்பு மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.

15. சகோதர சகோதரிகள் சிலர் என்ன சூழ்நிலையைச் சந்திக்கலாம்?

15 நம்முடைய புரிந்துகொள்ளுதலில் அமைப்பு மாற்றங்களைச் செய்யும்போதோ, ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏதாவது சொல்லும்போதோ நாம் உடனடியாகக் கீழ்ப்படிவோம். ஆனால், மற்ற விஷயங்களில் அமைப்பு ஏதாவது மாற்றங்கள் செய்யும்போது நாம் கீழ்ப்படிகிறோமா? உதாரணத்துக்கு, ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கும் அவற்றைப் பராமரிப்பதற்கும் ஆகும் செலவுகள் முன்பைவிட இப்போது ரொம்ப அதிகமாகிவிட்டன. அதனால், ஒரே ராஜ்ய மன்றத்தை நிறைய சபைகள் பயன்படுத்தும்படி ஆளும் குழு கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்தால் சில சபைகள் மற்ற சபைகளோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. சில ராஜ்ய மன்றங்கள் விற்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பணத்தை வைத்து, தேவை அதிகமுள்ள இடங்களில் ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ராஜ்ய மன்றங்கள் விற்கப்பட்ட அல்லது சபைகள் ஒன்றாக இணைக்கப்பட்ட இடத்தில் நீங்கள் வாழ்ந்தால், இந்தப் புது சூழ்நிலைக்குத் தகுந்தபடி உங்களை மாற்றிக்கொள்வது கஷ்டமாக இருக்கலாம். இப்போது உங்களில் சிலர் ரொம்பத் தூரம் பயணம் செய்து கூட்டங்களுக்குப் போக வேண்டியிருக்கலாம். வேறுசிலர், ராஜ்ய மன்றத்தைக் கட்டுவதற்கோ அதை பராமரிப்பதற்கோ நிறைய பாடுபட்டிருக்கலாம். அதனால், ‘நாம கஷ்டப்பட்டு கட்டுன ராஜ்ய மன்றத்த இப்படி வித்துட்டாங்களே!’ என்று யோசிக்கலாம். ‘நம்மளோட நேரமும் உழைப்பும் வீணா போச்சே!’ என்றும் நினைக்கலாம். இருந்தாலும், இந்த மாற்றத்துக்கு அவர்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட சகோதர சகோதரிகளை நாம் மனதார பாராட்டுகிறோம்.

16. சந்தோஷத்தை இழந்துவிடாமல் இருக்க கொலோசெயர் 3:23, 24-ல் சொல்லியிருப்பதுபோல் செய்வது எப்படி உதவும்?

16 நாம் யெகோவாவுக்காக உழைக்கிறோம் என்பதையும், அவர்தான் தன்னுடைய அமைப்பை வழிநடத்துகிறார் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் ஒருபோதும் சந்தோஷத்தை இழந்துவிட மாட்டோம். (கொலோசெயர் 3:23, 24-ஐ வாசியுங்கள்.) ஆலயத்தைக் கட்டுவதற்காக தாவீது ராஜா ஏராளமான பணம்பொருளை அள்ளிக் கொடுத்தார். இருந்தாலும், “இப்படிக் காணிக்கை கொடுப்பதற்கு நான் யார்? என் மக்கள் யார்? எல்லாவற்றையும் நீங்கள்தான் தந்தீர்கள். உங்கள் கையிலிருந்து வாங்கியதைத்தான் உங்களுக்குத் திருப்பித் தந்திருக்கிறோம்” என்று சொன்னார். (1 நா. 29:14) இன்று நாமும் நன்கொடை கொடுக்கும்போது, யெகோவா கொடுத்ததைத்தான் திருப்பிக் கொடுக்கிறோம். ஆனாலும், அவருடைய சேவைக்காக நம்முடைய நேரத்தையும் சக்தியையும் பணம்பொருளையும் செலவு செய்யும்போது அவர் ரொம்ப சந்தோஷப்படுகிறார்.—2 கொ. 9:7.

குறுகலான பாதையில் தொடர்ந்து பயணம் செய்யுங்கள்

17. மாற்றங்கள் செய்வதை நினைத்து நீங்கள் ஏன் சோர்ந்துபோக வேண்டியதில்லை?

17 முடிவில்லாத வாழ்வுக்கான குறுகலான பாதையில் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டுமென்றால், நாம் இயேசுவின் முன்மாதிரியை நெருக்கமாகப் பின்பற்ற வேண்டும். (1 பே. 2:21) ஒருவேளை, நீங்கள் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டியிருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால், யெகோவாவுடைய வழிநடத்துதலின்படி நடக்க நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்று அர்த்தம். அதனால், சோர்ந்துபோகாதீர்கள்! நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், இயேசுவை அச்சுப்பிசகாமல் அப்படியே பின்பற்ற வேண்டுமென்று யெகோவா எதிர்பார்ப்பது இல்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.

18. புதிய உலகத்துக்குப் போய்ச் சேருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

18 நாம் எல்லாரும் நம்முடைய கண்களை எதிர்காலத்தின் மீதே பதிய வைக்கலாம். நம்முடைய யோசனைகளிலும் விருப்புவெறுப்புகளிலும் செயல்களிலும் மாற்றங்கள் செய்யத் தயாராக இருக்கலாம். (நீதி. 4:25; லூக். 9:62) தொடர்ந்து மனத்தாழ்மையோடு இருக்கலாம். ‘எப்போதும் சந்தோஷமாக இருக்கலாம், [நம்மை] சரிப்படுத்திக்கொள்ளலாம்.’ (2 கொ. 13:11) இப்படியெல்லாம் செய்தால், “அன்புக்கும் சமாதானத்துக்கும் ஊற்றாக இருக்கிற கடவுள் [நம்மோடு] இருப்பார்.” அப்போது, நாம் புதிய உலகத்துக்குப் போய்ச் சேருவோம். அது மட்டுமல்ல, அங்கே போய்ச் சேருவதற்கான அந்தப் பயணத்தையும் சந்தோஷமாக அனுபவிப்போம்.

பாட்டு 29 உத்தமம் காத்தல்

^ பாரா. 5 நம்முடைய யோசனைகள், விருப்புவெறுப்புகள், செயல்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்வது நம்மில் சிலருக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், நாம் எல்லாருமே மாற்றங்கள் செய்வது ஏன் முக்கியம் என்றும், அப்படிச் செய்யும்போது எப்படிச் சந்தோஷத்தை இழக்காமல் இருக்கலாம் என்றும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 76 படவிளக்கம்: தவறான ஒரு முடிவெடுத்ததால் தனக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி ஓர் இளம் சகோதரர் சொல்லிக்கொண்டு இருக்கிறார். வலது பக்கத்தில் இருக்கிற சகோதரர், அந்த இளம் சகோதரருக்கு ஆலோசனை தேவையா இல்லையா என்று முடிவெடுப்பதற்காக அவர் சொல்வதை அமைதியாக கேட்டுக்கொண்டு இருக்கிறார்.