Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 48

உங்களுடைய கண்கள் எதிர்காலத்தின் மீதே இருக்கட்டும்!

உங்களுடைய கண்கள் எதிர்காலத்தின் மீதே இருக்கட்டும்!

“உன்னுடைய கண்கள் நேராகப் பார்க்க வேண்டும். அங்கும் இங்கும் பார்க்காமல் நேராகவே பார்க்க வேண்டும்.”—நீதி. 4:25.

பாட்டு 143 இருண்ட உலகில் பேரொளி!

இந்தக் கட்டுரையில்... *

1-2. நீதிமொழிகள் 4:25-ன்படி, நாம் எப்படி நடந்துகொள்ளலாம்? உதாரணம் கொடுங்கள்.

இந்த மூன்று சூழ்நிலைகளை யோசித்துப்பாருங்கள்: வயதான ஒரு சகோதரி, ‘ஒரு காலத்துல நான் எவ்வளவு சுறுசுறுப்பா இருந்தேன், இப்போ என்னால எதுவுமே செய்ய முடியலையே!’ என்று யோசிக்கிறார். ஆனால், தன்னால் முடிந்த அளவுக்கு இப்போதும் யெகோவாவுக்கு சேவை செய்கிறார். (1 கொ. 15:58) அதோடு, தன்னுடைய குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் சேர்ந்து புதிய உலகத்தில் இருப்பதுபோல் ஒவ்வொரு நாளும் அவர் கற்பனை செய்து பார்க்கிறார். இன்னொரு சகோதரி, சபையில் இருக்கிற ஒருவரைப் பற்றி, ‘அவங்க இப்படி பண்ணிட்டாங்களே!’ என்று நினைக்கிறார். ஆனால், அதைப் பற்றியே அவர் நினைத்துக்கொண்டிருப்பதில்லை. (கொலோ. 3:13) இன்னொரு சகோதரர், முன்பு செய்த தவறை நினைத்து, ‘நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்!’ என்று யோசிக்கிறார். ஆனால், அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல், இப்போது எப்படி யெகோவாவுக்கு உண்மையாக இருக்கலாம் என்பதைப் பற்றியே யோசிக்கிறார்.—சங். 51:10.

2 இந்த மூன்று பேருக்கும் என்ன ஒற்றுமை? இவர்கள் எல்லாரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மறக்கவில்லை. அதேசமயத்தில், அதிலேயே மூழ்கிவிடவும் இல்லை. அதற்குப் பதிலாக, அவர்களுடைய கண்கள் எதிர்காலத்தையே ‘நேராகப் பார்த்துக்கொண்டிருக்கின்றன.’நீதிமொழிகள் 4:25-ஐ வாசியுங்கள்.

3. நம்முடைய கண்கள் ஏன் எதிர்காலத்தையே ‘நேராகப் பார்த்துக்கொண்டிருக்க’ வேண்டும்?

3 பின்னாலேயே பார்த்து நடக்கிற ஒருவரால் நேராக நடக்க முடியாது. அதேபோல், நடந்து முடிந்த விஷயங்களையே நினைத்துக் கொண்டிருக்கிற ஒருவரால் யெகோவாவுக்கு நன்றாக சேவை செய்ய முடியாது. (லூக். 9:62) அதனால், நம்முடைய கண்கள் எப்போதும் எதிர்காலத்தையே ‘நேராகப் பார்த்துக்கொண்டிருக்க’ வேண்டும்.

4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

4 நம்முடைய வாழ்க்கையில் நடந்து முடிந்ததைப் பற்றியே யோசிக்கவைக்கிற மூன்று விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். அவை: (1) கடந்த காலத்தை நினைத்து ஏங்குவது, (2) கோபத்தை மனதில் வைத்திருப்பது, (3) குற்ற உணர்வில் புழுங்குவது. ‘பின்னால் இருப்பவற்றை மறந்துவிட்டு, முன்னால் இருப்பவற்றை எட்டிப்பிடிப்பதற்கு’ பைபிள் நியமங்கள் எப்படி உதவும் என்று இப்போது பார்க்கலாம்.—பிலி. 3:13.

கடந்த காலத்தை நினைத்து ஏங்குவது

எதிர்காலத்தின் மீது நம் கண்களைப் பதியவைக்க விடாமல் எது நம்மைத் தடுக்கலாம்? (பாராக்கள் 5, 9, 13) *

5. பிரசங்கி 7:10 எதைப் பற்றி எச்சரிக்கிறது?

5 பிரசங்கி 7:10-ஐ வாசியுங்கள். “அந்தக் காலம் எவ்வளவு நன்றாக இருந்தது!” என்று சொல்வது தவறென இந்த வசனம் குறிப்பிடவில்லை. ஏனென்றால், இனிமையான நினைவுகள் யெகோவாவிடமிருந்து கிடைக்கும் பரிசு! “‘இந்தக் காலத்தைவிட அந்தக் காலம் எவ்வளவு நன்றாக இருந்தது!’ என்று சொல்லாதே” என்றுதான் இந்த வசனம் குறிப்பிடுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், நம்முடைய வாழ்க்கையில் இப்போது இருக்கிற சூழ்நிலையை கடந்த காலத்தில் இருந்த சூழ்நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்து, இப்போது நடப்பது எதுவுமே சரியில்லை என்று நினைப்பதுதான் தவறு.

எகிப்திலிருந்து விடுதலையானதற்குப் பிறகு இஸ்ரவேலர்கள் என்ன தவறு செய்தார்கள்? (பாரா 6)

6. ‘இந்தக் காலத்தைவிட அந்தக் காலம் எவ்வளவு நன்றாக இருந்தது’ என்று நினைப்பது ஏன் ஞானமானதல்ல? உதாரணம் கொடுங்கள்.

6 ‘இந்தக் காலத்தைவிட அந்தக் காலம் எவ்வளவு நன்றாக இருந்தது’ என்ற எண்ணம் நமக்கு இருந்தால், கடந்த காலத்தில் நாம் கஷ்டங்களையே அனுபவிக்காததைப் போலவும், எல்லாமே நன்றாகத்தான் நடந்ததைப் போலவும் காட்டிக்கொள்கிறோம் என்று அர்த்தம். உதாரணத்துக்கு, இஸ்ரவேலர்களைப் பற்றிப் பார்க்கலாம். எகிப்திலிருந்து அவர்கள் விடுதலையான கொஞ்ச நாட்களிலேயே, அங்கிருந்தபோது எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதை மறந்துவிட்டார்கள். அங்கே சாப்பிட்ட உணவு வகைகளைப் பற்றி மட்டுமே யோசித்தார்கள். “எகிப்தில் காசே கொடுக்காமல் மீன், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, வெங்காயம், வெள்ளைப்பூண்டு எல்லாம் சாப்பிட்டோமே! அதை நினைத்தாலே வாய் ஊறுகிறது” என்று சொன்னார்கள். (எண். 11:5) ஆனால், உண்மையிலேயே அவர்கள் “காசே கொடுக்காமல்” சாப்பிட்டார்களா? இல்லை! சாப்பிடுவதற்காக அவர்கள் படாதபாடு பட வேண்டியிருந்தது. அடிமைகளாக இருந்ததால், கொடுமைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. (யாத். 1:13, 14; 3:6-9) ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு கடந்த காலத்தை நினைத்து ஏங்கினார்கள். எகிப்திலிருந்து விடுதலையானதற்குப் பிறகு யெகோவா செய்த நல்லதையெல்லாம் மறந்துவிட்டு, ‘[எகிப்திலிருந்த] அந்த நாட்கள் எவ்வளவு நன்றாக இருந்தன’ என்று சொல்லிக்கொண்டு திரிந்தார்கள். யெகோவாவுக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை.—எண். 11:10.

7. கடந்த காலத்தை நினைத்து ஏங்காமல் இருக்க ஒரு சகோதரிக்கு எது உதவியது?

7 கடந்த காலத்தை நினைத்து ஏங்காமல் இருப்பதற்கு ஒரு சகோதரியின் அனுபவம் நமக்கு உதவும். இந்தச் சகோதரி, 1945-ல் புருக்லின் பெத்தேலில் சேவை செய்ய ஆரம்பித்தார். சில வருஷங்களுக்குப் பிறகு, பெத்தேலில் சேவை செய்துகொண்டிருந்த ஒரு சகோதரரைக் கல்யாணம் செய்தார். இரண்டு பேரும் சேர்ந்து நிறைய வருஷங்கள் பெத்தேலில் சேவை செய்தார்கள். 1976-ல், பயங்கரமான ஒரு நோய் சகோதரரைத் தாக்கியது. தான் சீக்கிரத்தில் சாகப்போவது அவருக்குத் தெரியவந்தது. அதனால், தான் இல்லாமல் தனிமரமாக எப்படி வாழ்க்கையை ஓட்டுவது என்பதைப் பற்றி தன்னுடைய மனைவிக்கு அவர் சில அறிவுரைகளைக் கொடுத்தார். “நாம ரெண்டு பேரும் ஒண்ணா, சந்தோஷமா வாழ்ந்திருக்கோம். நிறைய பேருக்கு இப்படி அமையறதில்ல” என்று சொன்னார். அதோடு, “நாம ரெண்டு பேரும் வாழ்ந்த வாழ்க்கைய உன்னால மறக்க முடியாதுதான். ஆனா அதையே நினச்சிட்டு இருக்காத. நாளாக நாளாக உன்னோட வேதனைகள் கொஞ்ச கொஞ்சமா குறையும். நான் இல்லன்னு நினச்சு ரொம்ப கவலபடாத. நாம அனுபவிச்ச சந்தோஷங்களயும் ஆசீர்வாதங்களயும் நினச்சுபாரு. . . . இதெல்லாம் கடவுள் நமக்கு கொடுத்த பரிசு” என்றும் சொன்னார். இது ஒரு நல்ல அறிவுரை!

8. கடந்த காலத்தை நினைத்து ஏங்காமல் இருந்ததால் ஒரு சகோதரிக்கு என்ன நன்மை கிடைத்தது?

8 தன்னுடைய கணவர் சொன்னதை அந்தச் சகோதரி மனதில் பதிய வைத்துக்கொண்டார். 92 வயதில் அந்தச் சகோதரி இறந்தார். அதுவரை யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்து வந்தார். அவர் இறப்பதற்கு கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு, “நான் 63 வருஷம் முழுநேர சேவை செஞ்சிருக்குறேன். அத நினைச்சு பார்க்குறப்போ ரொம்ப சந்தோஷமா, திருப்தியா இருக்கு” என்று சொன்னார். அவர் ஏன் அப்படிச் சொன்னார்? “அருமையான சகோதர சகோதரிகள் நமக்கு இருக்காங்க. அவங்ககூட சேர்ந்து பூஞ்சோல பூமியில வாழ்ற நம்பிக்கை நமக்கு இருக்கு. அதோட, நம்மள படைச்சவரும் ஒரே உண்மை கடவுளுமா இருக்கிற யெகோவாவ, அவங்ககூட சேர்ந்து என்னென்னைக்கும் வணங்குற வாய்ப்பும் நமக்கு இருக்கு. இதெல்லாந்தான் வாழ்க்கைக்கு அர்த்தத்த கொடுக்குது” என்று அவர் சொன்னார். * எதிர்காலத்தின் மீதே கவனமாக இருப்பதற்கு இந்தச் சகோதரியின் அனுபவம் நமக்கு ரொம்ப உதவியாக இருக்கிறது, இல்லையா?

கோபத்தை மனதில் வைத்திருப்பது

9. கோபத்தை விட்டுவிடுவது எப்போது கஷ்டமாக இருக்கலாம்? (லேவியராகமம் 19:18)

9 லேவியராகமம் 19:18-ஐ வாசியுங்கள். நம்முடைய சகோதர சகோதரிகளோ நண்பர்களோ சொந்தக்காரர்களோ நம்மை மோசமாக நடத்தும்போது, அதை மறப்பது நமக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கலாம். நமக்குக் கோபம் கோபமாக வரலாம். ஒரு சகோதரிக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். பணத்தைத் திருடிவிட்டதாக இவர்மேல் ஒரு சகோதரி பழி போட்டார். ஆனால், பழி போட்ட அந்தச் சகோதரி, தான் சொன்னது தவறு என்று பிற்பாடு மன்னிப்பு கேட்டார். பாதிக்கப்பட்ட சகோதரியோ, நடந்ததையே நினைத்துக்கொண்டிருந்தார். ஒருவேளை நமக்கு இதேபோல் நடக்காமல் இருக்கலாம். ஆனால் நம்மை யாராவது மோசமாக நடத்தும்போது, நம்மில் நிறைய பேர் கோபத்தை மனதில் வைத்துக்கொண்டிருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

10. கோபத்தை விட்டுவிட எது நமக்கு உதவும்?

10 யெகோவா எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். இதை ஞாபகம் வைப்பது கோபத்தை விட்டுவிடுவதற்கு நமக்கு உதவும். நம்முடைய வாழ்க்கையில் நடக்கிற எல்லாமே அவருக்குத் தெரியும். நமக்கு நடக்கிற அநியாயங்களைப் பற்றியும் அவருக்குத் தெரியும். (எபி. 4:13) நாம் கஷ்டப்படும்போது அவரும் கஷ்டப்படுகிறார். (ஏசா. 63:9) நமக்கு நடந்த அநியாயத்தால் நாம் அனுபவிக்கிற எல்லா கஷ்டங்களையும் தீர்க்கப்போவதாக அவர் வாக்குக் கொடுக்கிறார்.—வெளி. 21:3, 4.

11. கோபத்தை விட்டுவிடுவதால் நமக்கு என்ன நன்மை?

11 இன்னொரு விஷயத்தையும் நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். கோபத்தை விட்டுவிடுவது நமக்குதான் நல்லது. நாம் ஏற்கெனவே பார்த்த அந்தச் சகோதரி, தன்னுடைய அனுபவத்தில் இதைப் புரிந்துகொண்டார். கொஞ்ச நாட்களில் அந்தச் சகோதரி தன்னுடைய கோபத்தை விட்டுவிட்டார். மற்றவர்களை நாம் மன்னித்தால்தான் யெகோவா நம்மை மன்னிப்பார் என்பதைப் புரிந்துகொண்டார். (மத். 6:14) தன்மேல் பழி போட்ட சகோதரி செய்தது தவறு என்று அவருக்குத் தெரியும். இருந்தாலும், கோபத்தை அவர் மனதில் வைத்துக்கொண்டே இருக்கவில்லை. அதனால், அவரால் சந்தோஷமாக இருக்க முடிந்தது. யெகோவாவின் சேவையை இன்னும் அதிகமாகச் செய்ய முடிந்தது.

குற்ற உணர்வில் புழுங்குவது

12. ஒன்று யோவான் 3:19, 20-லிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

12 ஒன்று யோவான் 3:19, 20-ஐ வாசியுங்கள். நம் எல்லாரையுமே குற்ற உணர்வு சிலசமயங்களில் வாட்டலாம். நம்மில் சிலர், சத்தியத்துக்கு வருவதற்கு முன்பு தவறுகள் செய்திருக்கலாம். சிலர், சத்தியத்துக்கு வந்ததற்குப் பிறகு தவறுகள் செய்திருக்கலாம். இதையெல்லாம் நினைத்து குற்ற உணர்வில் வாடலாம். (ரோ. 3:23) நாம் சரியானதைச் செய்யத்தான் ஆசைப்படுகிறோம். ஆனால், “நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம்.” (யாக். 3:2; ரோ. 7:21-23) குற்ற உணர்வோடு இருப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், நம்மைச் சரிசெய்துகொள்ளவும் செய்த தவறுகளைத் திரும்ப செய்யாமல் இருக்கவும் அது நமக்கு உதவும்.—எபி. 12:12, 13.

13. நாம் ஏன் குற்ற உணர்வில் மூழ்கிவிடக் கூடாது?

13 அதேசமயத்தில், அளவுக்கதிகமான குற்ற உணர்வில் புழுங்குவது நமக்கு ஆபத்து. நாம் கவனமாக இல்லையென்றால், நாம் மனம் திருந்தியதற்குப் பிறகும், யெகோவா நம்மை மன்னித்ததற்குப் பிறகும், நாம் குற்ற உணர்விலேயே புழுங்கிக்கொண்டிருப்போம். (சங். 31:10; 38:3, 4) ஒரு சகோதரியின் அனுபவத்தைப் பாருங்கள். முன்பு செய்த தவறை நினைத்து அவர் குற்ற உணர்வில் மூழ்கிவிட்டார். ‘என்னதான் நான் சுறுசுறுப்பா யெகோவாவுக்கு சேவை செஞ்சாலும் அதுல ஒரு பிரயோஜனமும் இல்ல. எப்படியும் நான் புது உலகத்துக்குள்ள போக போறது இல்ல’ என்று அந்தச் சகோதரி சொன்னார். நிறைய பேர் இவரைப் போலவே நினைக்கலாம். ஆனால், குற்ற உணர்வில் மூழ்கிவிடாமல் இருக்க நாம் கவனமாக இருக்க வேண்டும். யெகோவா நம்மை மன்னித்த பிறகும் நம்மை நாம் மன்னிக்காமல் இருந்தால் சாத்தானுக்கு எவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும்!—2 கொரிந்தியர் 2:5-7, 11-ஐ ஒப்பிடுங்கள்.

14. யெகோவா நம்மை நிச்சயம் மன்னிப்பார் என்று நாம் ஏன் உறுதியாக இருக்கலாம்?

14 ‘யெகோவா என்னை மன்னிச்சிட்டாருனு எனக்கு எப்படி தெரியும்?’ என்ற கேள்வி நமக்கு இருக்கலாம். ஆனால், அந்தக் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. நிறைய வருஷங்களுக்கு முன்பு வந்த காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “நாம் ஏதாவது ஒரு கெட்ட பழக்கத்தை விட்டுவிட்டு யெகோவாவுக்கு சேவை செய்ய ஆரம்பித்திருக்கலாம். ஆனால், மறுபடியும் அதே பழக்கத்தில் விழுந்துவிடலாம். . . . அதுபோன்ற சமயங்களில் சோர்ந்துவிடாதீர்கள். மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்துவிட்டதாக முடிவுகட்டிவிடாதீர்கள். இப்படியெல்லாம் நீங்கள் நினைக்க வேண்டுமென்றுதான் சாத்தான் ஆசைப்படுகிறான். மறுபடியும் அதே தவறில் விழுந்துவிட்டதை நினைத்து நீங்கள் வேதனைப்படுகிறீர்கள் என்றால், மன்னிக்க முடியாத அளவுக்கு நீங்கள் மோசமான ஆள் இல்லை என்று அர்த்தம். மனத்தாழ்மையோடு யெகோவாவிடம் மன்னிப்பு கேளுங்கள். சுத்தமான மனசாட்சியைத் தரும்படி அவரிடம் கெஞ்சிக் கேளுங்கள். ஒரே பிரச்சினை திரும்பத் திரும்ப வந்தாலும் ஒரு பிள்ளை தன்னுடைய அப்பாவிடம் போகத் தயங்காது. அதேபோல், நீங்களும் யெகோவாவிடம் உதவி கேட்பதற்குத் தயங்காதீர்கள். ஏனென்றால், யெகோவா நிச்சயம் உதவுவார்.” *

15-16. யெகோவா தங்களை மன்னிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டபோது சிலர் எப்படி உணர்ந்தார்கள்?

15 யெகோவா தங்களை மன்னிக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டது, சகோதர சகோதரிகள் நிறைய பேருக்கு ரொம்ப ஆறுதலாக இருந்திருக்கிறது. உதாரணத்துக்கு, சில வருஷங்களுக்கு முன்பு, “பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது” என்ற தொடர் கட்டுரையில் வந்த ஒரு சகோதரியின் அனுபவம், ஒரு சகோதரருக்கு ரொம்ப உதவியாக இருந்தது. அந்த அனுபவத்தில், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில கசப்பான விஷயங்களால் யெகோவா தன்னை நேசிக்கிறார் என்று நம்புவது தனக்குக் கஷ்டமாக இருந்ததாக அந்தச் சகோதரி சொல்லியிருந்தார். ஞானஸ்நானம் எடுத்த பிறகும் நிறைய வருஷங்களாக அந்த எண்ணம் தன்னை வாட்டியதாகவும் அவர் சொல்லியிருந்தார். ஆனால், மீட்புவிலையைப் பற்றி ஆழமாக யோசித்துப்பார்த்ததால் யெகோவா தன்னை நேசிக்கிறார் என்பதை அவரால் நம்ப முடிந்தது. *

16 அந்தச் சகோதரியின் அனுபவம் இந்தச் சகோதரருக்கு எப்படி உதவியது? சகோதரர் இப்படி எழுதினார்: “நான் சின்ன வயதில் இருந்தபோது அடிக்கடி ஆபாச படங்களைப் பார்த்தேன். சமீபத்தில் மறுபடியும் பார்த்துவிட்டேன். அதனால், மூப்பர்களிடம் உதவி கேட்டேன். இந்தப் பிரச்சினையிலிருந்து வெளியே வர முயற்சி செய்துகொண்டே இருந்தேன். கடவுள் என்னை நேசிக்கிறார் என்றும் நிச்சயம் என்னை மன்னிப்பார் என்றும் மூப்பர்கள் சொன்னார்கள். ஆனாலும், நான் எதற்குமே லாயக்கில்லை என்றும் யெகோவா என்னை நேசிக்க மாட்டார் என்றும் சிலசமயங்களில் நினைத்தேன். அந்தச் சகோதரியின் அனுபவத்தைப் படித்தது எனக்கு உண்மையிலேயே உதவியது. கடவுள் என்னை மன்னிக்க மாட்டார் என்று நான் நினைத்தால், என் பாவங்களை மன்னிப்பதற்கு அவருடைய மகனின் மீட்புப் பலி போதாதென்று நான் நினைப்பதாக அர்த்தம்! நான் லாயக்கில்லை என்ற எண்ணம் எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் இந்தக் கட்டுரையைப் படிக்கவும் ஆழமாக யோசித்துப்பார்க்கவும் அதைத் தனியாக எடுத்து பத்திரப்படுத்தி வைத்தேன்.”

17. செய்த தவறுகளையே நினைத்துப் புழுங்காமல் இருக்க அப்போஸ்தலன் பவுலால் எப்படி முடிந்தது?

17 இதுபோன்ற அனுபவங்களைப் படிக்கும்போது அப்போஸ்தலன் பவுல் நம் ஞாபகத்துக்கு வருகிறார். கிறிஸ்தவராக ஆவதற்கு முன்பு, அப்போஸ்தலன் பவுல் மோசமான பல தவறுகளைச் செய்தார். ஆனால் கிறிஸ்தவராக ஆனதற்குப் பிறகு, தான் செய்த தவறுகளையே அவர் நினைத்துக்கொண்டு இருக்கவில்லை. (1 தீ. 1:12-15) ஏனென்றால், கடவுள் கொடுத்த மீட்புப் பலியால் தன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதை அவர் உறுதியாக நம்பினார். கடவுள் தனக்குக் கொடுத்த பரிசாக அதை நினைத்தார். (கலா. 2:20) அதனால், குற்ற உணர்வில் புழுங்கிக்கொண்டு இருக்காமல் யெகோவாவுடைய சேவையில் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் அவர் செய்தார்.

எதிர்காலத்தின் மீதே கவனமாக இருங்கள்!

நம்முடைய கண்கள் எதிர்காலத்தின் மீதே இருக்க வேண்டும் (பாராக்கள் 18-19) *

18. இந்தக் கட்டுரையில் என்ன கற்றுக்கொண்டோம்?

18 இந்தக் கட்டுரையில் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் இவைதான்: (1) இனிமையான நினைவுகள் யெகோவா கொடுக்கிற பரிசு! ஆனால், நம்முடைய கடந்த காலம் எவ்வளவு அருமையானதாக இருந்திருந்தாலும், புதிய உலகத்தில் வாழ்கிற வாழ்க்கையோடு அதை ஒப்பிடவே முடியாது. (2) மற்றவர்கள் நம்மைப் புண்படுத்தலாம். ஆனால், நாம் அவர்களை மன்னித்தால் யெகோவாவுடைய சேவையில் நம்மால் தொடர்ந்து நிறைய செய்ய முடியும். (3) அளவுக்கதிகமான குற்ற உணர்வு யெகோவாவுடைய சேவையில் நமக்கிருக்கிற சந்தோஷத்தைப் பறித்துவிடும். அதனால், யெகோவா நம் குற்றங்களை மன்னித்துவிட்டார் என்று பவுலைப் போலவே நாம் உறுதியாக நம்ப வேண்டும்.

19. கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் புதிய உலகத்தில் நம்மை வாட்டாது என்பது நமக்கு எப்படித் தெரியும்?

19 என்றென்றும் வாழும் அருமையான நம்பிக்கை நமக்கு இருக்கிறது. கடவுள் தரப்போகிற புதிய உலகத்தில், கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் நம்மை வாட்டாது. “முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது” என்று பைபிள் சொல்கிறது. (ஏசா. 65:17) நீங்கள் நிறைய வருஷங்களாக யெகோவாவுக்கு சேவை செய்திருக்கலாம். உங்களுக்கு வயதாகிக்கொண்டே வரலாம். ஆனால், புதிய உலகத்தில் மறுபடியும் நீங்கள் இளமைக்குத் திரும்புவீர்கள். (யோபு 33:25) அதனால், நாம் கடந்த காலத்தையே நினைத்துக்கொண்டு இருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, நம்முடைய கண்கள் எதிர்காலத்தின் மீதே இருக்க வேண்டும். புதிய உலகத்தில் வாழ நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

பாட்டு 129 நம் நங்கூர நம்பிக்கை

^ பாரா. 5 நம்முடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை நினைத்துப் பார்ப்பது நல்லதுதான். ஆனால், அதையே நாம் நினைத்துக்கொண்டிருந்தால் இப்போது யெகோவாவுக்கு செய்யும் சேவையை ஒருவேளை நாம் குறைத்துக்கொள்வோம். அதோடு, எதிர்காலத்தில் அவர் தந்திருக்கிற வாக்குறுதிகளையும் மறந்துவிடுவோம். நடந்து முடிந்ததைப் பற்றியே யோசிக்கவைக்கிற நிறைய விஷயங்கள் நம்முடைய வாழ்க்கையில் இருக்கின்றன. அதில் மூன்று விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவற்றைத் தவிர்ப்பதற்கு, பைபிள் நியமங்களும் மற்றவர்களுடைய அனுபவங்களும் நமக்கு உதவும்.

^ பாரா. 14 காவற்கோபுரம் (ஆங்கிலம்), பிப்ரவரி 15, 1954, பக் 123-ஐப் பாருங்கள்.

^ பாரா. 58 படவிளக்கம்: கடந்த காலத்தை நினைத்து ஏங்குவது, கோபத்தை மனதில் வைத்திருப்பது, குற்ற உணர்வில் புழுங்குவது ஆகிய பாரமான சுமைகளை நாம் இழுத்துக்கொண்டிருந்தால் வாழ்வுக்கான பாதையில் தொடர்ந்து பயணம் செய்வது கஷ்டமாகிவிடலாம்.

^ பாரா. 65 படவிளக்கம்: இந்தப் பாரங்களை விட்டுவிட்டால் நம்மால் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியும். புதுத்தெம்பு நமக்குக் கிடைக்கும். எதிர்காலத்தின் மீது நம் கண்களைப் பதிய வைப்பதும் சுலபமாக இருக்கும்.