Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

“யெகோவா என்னை மறக்கவே இல்லை”

“யெகோவா என்னை மறக்கவே இல்லை”

தென் அமெரிக்காவைச் சேர்ந்த கயானா நாட்டில் இருக்கிற ஓரியால்லா என்ற கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்கள் கிராமத்தில் கிட்டத்தட்ட 2,000 பேர் வாழ்கிறார்கள். இது ஓர் ஒதுக்குப்புறமான கிராமம். யாராவது இங்கே வர வேண்டுமென்றால், குட்டி விமானத்திலோ படகிலோதான் வரமுடியும்.

நான் 1983-ல் பிறந்தேன். நான் ஆரோக்கியமாகத்தான் இருந்தேன். ஆனால், பத்து வயதானபோது, என்னுடைய உடம்பு முழுக்க பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, ஒருநாள் காலையில் எழுந்தபோது என்னால் அசையவே முடியவில்லை. என்னுடைய கால்களை அசைப்பதற்கு நான் எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை. அன்றுமுதல் என்னால் நடக்க முடியாமல் போய்விட்டது. என்னுடைய உடல் வளர்ச்சியும் நின்றுவிட்டது. இன்று, ஒரு குழந்தையின் அளவுதான் என்னுடைய உயரம்.

என்னுடைய உடல்நிலை சரியில்லாமல் போனதற்குப் பிறகு, நான் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். சில மாதங்கள் கழித்து, யெகோவாவின் சாட்சிகள் இரண்டு பேர் என்னுடைய வீட்டுக்கு வந்தார்கள். பொதுவாக, யாராவது எங்கள் வீட்டுக்கு வந்தால் நான் எங்கேயாவது போய் ஒளிந்துகொள்வேன். ஆனால், அவர்கள் வந்தபோது நான் அவர்களிடம் பேசினேன். பூஞ்சோலை பூமியைப் பற்றி அவர்கள் பேசியபோது, சின்ன வயது சம்பவங்கள் என் ஞாபகத்துக்கு வந்தன. எனக்குக் கிட்டத்தட்ட ஐந்து வயது இருந்தபோது, சூரினாமில் மிஷனரியாக சேவை செய்துவந்த ஜெத்ரோ என்பவர், மாதத்துக்கு ஒருதடவை எங்கள் கிராமத்துக்கு வந்து என் அப்பாவுக்கு பைபிள் படிப்பு நடத்திக்கொண்டிருந்தார். அவர் என்னிடம் ரொம்ப அன்பாக நடந்துகொண்டார். அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்கள் கிராமத்தில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு என்னுடைய தாத்தா பாட்டி போவார்கள். சிலசமயங்களில் என்னையும் கூட்டிக்கொண்டு போவார்கள். சின்ன வயதில் நடந்த இந்த விஷயங்களெல்லாம் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தபோது, என்னைப் பார்க்க வந்திருந்த சகோதரிகளில் ஒருவரான ஃப்லாரென்ஸ், ‘இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணும்னு ஆசப்படுறீங்களா?’ என்று கேட்டார். அதற்கு நான் ஆமாம் என்று சொன்னேன்.

சகோதரி ஃப்லாரென்ஸும் அவருடைய கணவர் ஜஸ்டஸும் எனக்கு பைபிள் படிப்பை ஆரம்பித்தார்கள். எனக்குப் படிக்கத் தெரியாது என்பதைப் புரிந்துகொண்டதும் படிப்பதற்கு எனக்குச் சொல்லிக்கொடுத்தார்கள். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு நானே படிக்க ஆரம்பித்துவிட்டேன். ஒருநாள், அவர்கள் சூரினாமுக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். அதற்குப் பிறகு, எனக்கு பைபிள் படிப்பு எடுக்க எங்கள் கிராமத்தில் யாருமே இல்லை. ஆனால் சந்தோஷமான விஷயம் என்னவென்றால், யெகோவா என்னை மறந்துவிடவில்லை.

சீக்கிரத்திலேயே ஃபலாய்ட் என்ற பயனியர் எங்கள் கிராமத்துக்கு வந்தார். ஒவ்வொரு குடிசையாக அவர் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது என்னுடைய குடிசைக்கும் வந்தார். பைபிள் படிப்பைப் பற்றி அவர் சொன்னபோது நான் சிரித்தேன். “ஏன் சிரிக்கிறீங்க?” என்று அவர் கேட்டார். அப்போது, கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை நான் ஏற்கெனவே படித்து முடித்துவிட்டதாகவும், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்திலிருந்து படிக்க ஆரம்பித்திருந்ததாகவும் சொன்னேன். * என்னுடைய படிப்பு ஏன் நின்றுபோனது என்பதைப் பற்றியும் அவரிடம் சொன்னேன். அறிவு புத்தகத்திலிருந்து அவர் எனக்குப் படிப்பைத் தொடர்ந்தார். பிறகு, அவரும் இன்னொரு இடத்துக்கு நியமிக்கப்பட்டார். மறுபடியும் எனக்கு பைபிள் கற்றுக்கொடுக்க யாருமே இல்லாமல் போய்விட்டார்கள்.

2004-ல், க்ரான்வில்லும் ஜோசுவாவும் விசேஷ பயனியர்களாக எங்கள் கிராமத்துக்கு வந்தார்கள். ஒவ்வொரு குடிசையாக அவர்கள் ஊழியம் செய்தபோது என்னுடைய குடிசைக்கும் வந்தார்கள். பைபிள் படிப்புப் படிக்க எனக்கு ஆர்வம் இருக்கிறதா என்று அவர்கள் கேட்டபோது நான் சிரித்தேன். அறிவு புத்தகத்தை மறுபடியும் ஆரம்பத்திலிருந்து படிக்கலாம் என்று சொன்னேன். இதற்கு முன்பு எனக்கு பைபிள் படிப்பு எடுத்தவர்கள் சொல்லிக்கொடுத்த அதே விஷயங்களைத்தான் இவர்களும் சொல்லிக்கொடுக்கிறார்களா என்று பார்ப்பதற்காக நான் அப்படிச் சொன்னேன். எங்கள் கிராமத்திலேயே கூட்டங்கள் நடப்பதாக க்ரான்வில் சொன்னார். கிட்டத்தட்ட பத்து வருஷங்களாக நான் வீட்டைவிட்டு வெளியே போகவில்லை என்றாலும் கூட்டங்களுக்குப் போக ஆசைப்பட்டேன். அதனால், ஒரு வீல்சேரில் உட்கார வைத்து க்ரான்வில் ராஜ்ய மன்றத்துக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போனார்.

கொஞ்ச நாட்கள் கழித்து தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேரும்படி க்ரான்வில் சொன்னார். “நடக்க முடியலனாலும் உங்களால பேச முடியும். ஒருநாள் நீங்க பொது பேச்சு கொடுப்பீங்க. இது கண்டிப்பா நடக்கும்” என்று அவர் சொன்னார். அவருடைய உற்சாகமான வார்த்தைகள் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தன.

க்ரான்வில்லோடு சேர்ந்து நான் ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். எங்கள் கிராமத்தில் இருந்த நிறைய தெருக்கள் குண்டும் குழியுமாக இருந்தன. அதனால், வீல்சேரில் போக முடியவில்லை. தள்ளுவண்டியில் என்னை வைத்துத் தள்ளிக்கொண்டு போகும்படி க்ரான்வில்லிடம் கேட்டேன். அவரும் அப்படிச் செய்தார். அது எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது. ஏப்ரல் 2005-ல் நான் ஞானஸ்நானம் எடுத்தேன். சீக்கிரத்திலேயே பிரசுர இலாகாவிலும் ஒலி இலாகாவிலும் வேலை செய்ய சகோதரர்கள் எனக்குப் பயிற்சி கொடுத்தார்கள்.

2007-ல் ஒரு சோக சம்பவம் நடந்தது. என்னுடைய அப்பா ஒரு படகு விபத்தில் இறந்துபோய்விட்டார். நானும் என்னுடைய குடும்பத்தில் இருந்தவர்களும் அதிர்ச்சியில் மூழ்கிவிட்டோம். க்ரான்வில் எங்களோடு சேர்ந்து ஜெபம் செய்தார். பைபிளிலிருந்து ஆறுதலான வார்த்தைகளைச் சொன்னார். இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, இன்னொரு பெரிய இடி எங்களைத் தாக்கியது. படகு மூழ்கி க்ரான்வில்லும் இறந்துபோய்விட்டார்.

அவர் இறந்ததை நினைத்து, சபையிலிருந்த நாங்கள் எல்லாரும் துக்கத்தில் மூழ்கிவிட்டோம். அவர் இறந்ததற்குப் பிறகு எங்கள் சபையில் மூப்பரே இல்லை. ஒரேவொரு உதவி ஊழியர் மட்டும்தான் இருந்தார். க்ரான்வில் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். அவருடைய இழப்பை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நான் யெகோவாவோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள அவர் உதவியாக இருந்தார். என்னுடைய மற்ற தேவைகளையும் அவர் பார்த்துக்கொண்டார். அவர் இறந்ததற்குப் பிறகு நடந்த முதல் சபைக் கூட்டத்தில் எனக்கு காவற்கோபுர வாசிப்பு இருந்தது. இரண்டு பாராக்களைத்தான் என்னால் வாசிக்க முடிந்தது. அதற்கு பிறகு நான் அழ ஆரம்பித்துவிட்டேன். கண்ணீரை என்னால் அடக்கவே முடியவில்லை. அதனால் மேடையிலிருந்து கீழே இறங்க வேண்டியதாகிவிட்டது.

எங்கள் சபைக்கு உதவி செய்வதற்காக வேறொரு சபையிலிருந்து சகோதரர்கள் வந்தபோது, எனக்கு ஆறுதலாக இருந்தது. அதோடு, கோஜோ என்ற விசேஷ பயனியரை கிளை அலுவலகம் அனுப்பி வைத்தது. இன்னொரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், என்னுடைய அம்மாவும் தம்பியும் பைபிள் படிப்பு படித்து ஞானஸ்நானம் எடுத்தார்கள். மார்ச் 2015-ல், நான் உதவி ஊழியராக நியமிக்கப்பட்டேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு என்னுடைய முதல் பொது பேச்சைக் கொடுத்தேன். அப்போது, “ஒருநாள் நீங்க பொது பேச்சு கொடுப்பீங்க. இது கண்டிப்பா நடக்கும்” என்று சில வருஷங்களுக்கு முன்பு க்ரான்வில் சொன்னது என்னுடைய ஞாபகத்துக்கு வந்தது. அப்போது, சந்தோஷத்தில் என் கண்கள் கலங்கிவிட்டன.

என்னைப் போன்ற சூழ்நிலையில் இருக்கிற சகோதர சகோதரிகளைப் பற்றி JW பிராட்காஸ்டிங்® நிகழ்ச்சிகளிலிருந்து தெரிந்துகொண்டேன். அவர்களுக்குக் குறைபாடுகள் இருந்தாலும் நிறைய விஷயங்களை அவர்கள் செய்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்படியென்றால், என்னாலும் நிறைய விஷயங்களைச் செய்ய முடியும் என்பதைப் புரிந்துகொண்டேன். எனக்கிருக்கிற சக்தியை எல்லாம் யெகோவாவின் சேவைக்காகப் பயன்படுத்த வேண்டுமென்று ஆசைப்பட்டேன். அதனால், ஒரு ஒழுங்கான பயனியராக ஆனேன். செப்டம்பர் 2019-ல், ஒரு சந்தோஷமான விஷயம் நடந்தது. 40 பிரஸ்தாபிகள் இருக்கும் எங்களுடைய சபையில் நான் மூப்பராக நியமிக்கப்பட்டேன்.

பைபிள் படிப்பு படிப்பதற்கும் யெகோவாவுக்கு சேவை செய்வதற்கும் எனக்கு உதவிய சகோதர சகோதரிகளுக்கு ரொம்ப நன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக யெகோவாவுக்கு ரொம்ப நன்றி. ஏனென்றால், அவர் என்னை மறக்கவே இல்லை!

^ பாரா. 8 இந்தப் புத்தகம் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது. இப்போது அச்சடிக்கப்படுவதில்லை.