Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 51

சோர்ந்துபோனவர்களை யெகோவா காப்பாற்றுகிறார்

சோர்ந்துபோனவர்களை யெகோவா காப்பாற்றுகிறார்

“உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார். மனம் நொந்துபோனவர்களை அவர் காப்பாற்றுகிறார்.”—சங். 34:18, அடிக்குறிப்பு.

பாட்டு 91 என் தகப்பன், என் தேவன், என் தோழன்!

இந்தக் கட்டுரையில்... *

1-2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம்?

‘நாம வாழ்றதே கொஞ்ச காலம்தான். அதுவும் இவ்வளவு போராட்டமா இருக்கே!’ என்று நினைத்து நாம் சிலசமயங்களில் சோர்ந்து போகலாம். (யோபு 14:1) அந்தக் காலத்தில் வாழ்ந்த யெகோவாவின் ஊழியர்கள் நிறைய பேர் இப்படி சோர்ந்துபோயிருக்கிறார்கள். சாவதே மேல் என்றுகூட சிலர் நினைத்திருக்கிறார்கள். (1 ரா. 19:2-4; யோபு 3:1-3, 11; 7:15, 16) ஆனால், அவர்கள் நம்பிய கடவுளான யெகோவா, அவர்களைக் கைவிடவில்லை. திரும்பத் திரும்ப அவர்களை ஆறுதல்படுத்தினார், பலப்படுத்தினார். நம்மை ஆறுதல்படுத்துவதற்காக இந்த விஷயங்களை எல்லாம் பைபிளில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.—ரோ. 15:4.

2 யாக்கோபின் மகன் யோசேப்பு, கணவனை இழந்த நகோமி, நகோமியின் மருமகள் ரூத், 73-ம் சங்கீதத்தை எழுதிய லேவியர், அப்போஸ்தலன் பேதுரு ஆகியவர்கள் சில பிரச்சினைகளால் சோர்ந்துபோனார்கள். ஆனால், யெகோவா இவர்களை எப்படிப் பலப்படுத்தினார்? இவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ளும்போது, ஒரு விஷயத்தை நாம் உறுதியாக நம்புவோம். அதாவது, “உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார். சோர்ந்துபோனவர்களை அவர் காப்பாற்றுகிறார்” என்பதை உறுதியாக நம்புவோம்.—சங். 34:18, அடிக்குறிப்பு.

அநியாய அக்கிரமங்களை யோசேப்பு சகித்தார்

3-4. இளவயதில் யோசேப்புக்கு என்ன நடந்தது?

3 யோசேப்புக்கு கிட்டத்தட்ட 17 வயது இருந்தபோது இரண்டு கனவுகளைக் கண்டார். கடவுளிடமிருந்து வந்த கனவுகள் அவை! குடும்பத்தில் அவர் ஒரு முக்கியமான ஆளாக ஆவார் என்பதை அந்தக் கனவுகள் காட்டின. (ஆதி. 37:5-10) ஆனால், சீக்கிரத்திலேயே அவருடைய வாழ்க்கை தலைகீழாக மாறியது. அவருடைய சகோதரர்களிடமிருந்து அவருக்கு மதிப்பு மரியாதை கிடைப்பதற்குப் பதிலாக, அவர்களால் அவர் விற்கப்பட்டார். அதனால், போத்திபார் என்ற எகிப்திய அதிகாரியின் வீட்டில் அவர் அடிமையாக வேலை செய்ய வேண்டியிருந்தது. (ஆதி. 37:21-28) அப்பாவுக்குச் செல்லப்பிள்ளையாக இருந்த யோசேப்பு, இப்போது அடிமையாக இருக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார். அதுவும் பொய் தெய்வங்களைக் கும்பிட்ட ஓர் அதிகாரியிடம்!—ஆதி. 39:1.

4 பிறகு, யோசேப்புடைய நிலைமை இன்னும் மோசமானது. போத்திபாருடைய மனைவி, தன்னை யோசேப்பு கற்பழித்ததாகச் சொல்லி அவர்மீது அபாண்டமாக பழிபோட்டாள். எந்த விசாரணையும் செய்யப்படாமலேயே யோசேப்பு சிறையில் தள்ளப்பட்டார். அவருடைய கழுத்தில் இரும்புச் சங்கிலி மாட்டப்பட்டது. (ஆதி. 39:14-20; சங். 105:17, 18) இளம் வயதில் அவ்வளவு பெரிய அபாண்டமான குற்றத்தைச் சுமப்பது யோசேப்புக்கு எவ்வளவு பாரமாக இருந்திருக்கும்! அதோடு, யோசேப்புடைய கடவுளைப் பற்றி மற்றவர்கள் தவறாகப் பேசியிருக்கலாம். இப்படியெல்லாம் நடந்ததால் யோசேப்பு ஒரேயடியாக சோர்ந்துபோய்விட்டாரா?

5. சோர்வை யோசேப்பு எப்படிச் சமாளித்தார்?

5 அடிமையாக இருந்தபோதும் சரி, சிறையில் அடைபட்டு கிடந்தபோதும் சரி, தன்னுடைய சூழ்நிலையை யோசேப்பால் மாற்ற முடியவில்லை. ஆனாலும், அவர் நம்பிக்கை இழந்துவிடவில்லை. எப்படி அவரால் அப்படி இருக்க முடிந்தது? செய்ய முடியாததை நினைத்து கவலைப்படுவதற்குப் பதிலாக தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நல்லபடியாக செய்வதற்கு எல்லா முயற்சியும் அவர் எடுத்தார். ரொம்ப முக்கியமாக, யெகோவாவை சந்தோஷப்படுத்துவதுதான் அவருடைய குறிக்கோளாக இருந்தது. அதனால், யோசேப்பு செய்த எல்லாவற்றையும் யெகோவா ஆசீர்வதித்தார்.—ஆதி. 39:21-23.

6. யோசேப்பு கண்ட கனவு அவருக்கு எப்படி ஆறுதலைத் தந்திருக்கலாம்?

6 ரொம்ப வருஷங்களுக்கு முன்பு யெகோவா கொடுத்த கனவுகளைப் பற்றி யோசேப்பு நினைத்துப் பார்த்தார். தன்னுடைய குடும்பத்தோடு மறுபடியும் ஒன்றுசேர முடியும் என்றும், தன்னுடைய சூழ்நிலை மாறும் என்றும் அதிலிருந்து அவர் தெரிந்துகொண்டார். இதுவும் அவரை பலப்படுத்தியிருக்கலாம். அவருக்குக் கிட்டத்தட்ட 37 வயதானபோது அவர் கண்ட கனவு நிறைவேற ஆரம்பித்தது.—ஆதி. 37:7, 9, 10; 42:6, 9.

7. ஒன்று பேதுரு 5:10-ன்படி, பிரச்சினைகளைத் தாக்குப்பிடிக்க எது உதவும்?

7 பாடங்கள்: இன்று நாமும் அநியாய அக்கிரமம் நிறைந்த ஓர் உலகத்தில்தான் வாழ்கிறோம். நமக்கும் மற்றவர்கள் அநீதி செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. நம்முடைய சகோதர சகோதரிகளேகூட நமக்கு அநீதி செய்துவிடலாம். ஆனால், யெகோவாவை நம்முடைய கற்பாறையாகவும் அடைக்கலமாகவும் நினைத்தால் நாம் சோர்ந்துவிட மாட்டோம். அவருக்குச் சேவை செய்வதை நிறுத்திவிட மாட்டோம். (சங். 62:6, 7; 1 பேதுரு 5:10-ஐ வாசியுங்கள்.) யோசேப்புக்கு யெகோவா கனவுகளைக் கொடுத்தபோது, அவருக்குக் கிட்டத்தட்ட 17 வயது இருந்திருக்கலாம். இதிலிருந்து என்ன தெரிகிறது? இளைஞர்கள்மேல் யெகோவா முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்! இன்று நிறைய இளைஞர்கள் யோசேப்பைப் போலவே நடந்துகொள்கிறார்கள். அவரைப் போலவே யெகோவாமீது விசுவாசம் வைத்திருக்கிறார்கள். அவருக்கு உண்மையாக இருந்ததற்காக சிலர் சிறைத் தண்டனையையும் அனுபவித்திருக்கிறார்கள்.—சங். 110:3.

மனமுடைந்துபோன இரண்டு பெண்கள்

8. நகோமிக்கும் ரூத்துக்கும் என்ன நடந்தது?

8 பஞ்சம் தலைவிரித்தாடியதால் நகோமியும் அவளுடைய குடும்பத்தாரும் தங்களுடைய சொந்த தேசமான யூதாவை விட்டுவிட்டு மோவாப் தேசத்துக்கு குடிமாறி போயிருந்தார்கள். நகோமியின் கணவர் எலிமெலேக்கு அங்கே இறந்துபோனார். நகோமி தன்னுடைய இரண்டு மகன்களோடு தனிமரமாக ஆனாள். பிறகு, மோவாபியப் பெண்களான ரூத்தையும் ஒர்பாளையும் அவளுடைய மகன்கள் கல்யாணம் செய்துகொண்டார்கள். கிட்டத்தட்ட பத்து வருஷங்களுக்குப் பிறகு, நகோமியின் இரண்டு மகன்களும் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனார்கள். (ரூத் 1:1-5) அப்போது, அந்த மூன்று பெண்களும் எந்தளவு வேதனையில் மூழ்கிப்போயிருப்பார்கள் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்! ரூத்தும் ஒர்பாளும் நினைத்தால் இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளலாம். ஆனால், வயதான நகோமியை யார் கவனித்துக்கொள்வார்கள்? ஒரு கட்டத்தில் ரொம்பவே சோர்வடைந்த நகோமி, “என்னை நகோமி என்று கூப்பிடாதீர்கள். மாராள் என்று கூப்பிடுங்கள். சர்வவல்லமையுள்ளவர் என் வாழ்க்கையை ரொம்பவே கசப்பாக்கிவிட்டார்” என்று சொன்னாள். கஷ்டத்துக்குமேல் கஷ்டம் வாட்டி எடுத்ததால், பெத்லகேமுக்கே திரும்பிப் போவதென்று முடிவெடுத்தாள். ரூத்தும் அவளோடு போனாள்.—ரூத் 1:7, 18-20.

சோர்வைச் சமாளிக்க நகோமிக்கும் ரூத்துக்கும் யெகோவா உதவினார். அப்படியென்றால், உங்களுக்கும் நிச்சயம் உதவுவார், இல்லையா? (பாராக்கள் 8-13) *

9. ரூத் 1:16, 17, 22-ன்படி, ரூத் எப்படி நகோமிக்கு பக்கபலமாக இருந்தாள்?

9 பிரச்சினைகளைத் தாக்குப்பிடிக்க, மற்றவர்கள் காட்டிய மாறாத அன்புதான் நகோமிக்கு உதவியது. உதாரணத்துக்கு, நகோமியை விட்டு ரூத் பிரியவே இல்லை. நகோமியின் மேல் மாறாத அன்பைக் காட்டினாள். (ரூத் 1:16, 17, 22-ஐ வாசியுங்கள்.) பெத்லகேமுக்குப் போனதற்குப் பிறகு, தனக்காகவும் நகோமிக்காகவும் ரூத் கடினமாக உழைத்து பார்லி கதிர்களை சேகரித்தாள். இப்படிச் செய்ததால், அவள் நல்ல பெண் என்பதையும் கடின உழைப்பாளி என்பதையும் மற்றவர்கள் தெரிந்துகொண்டார்கள்.—ரூத் 3:11; 4:15.

10. நகோமி மற்றும் ரூத் போன்ற ஏழைகளுக்கு யெகோவா எப்படிக் கரிசனை காட்டினார்?

10 ஏழைகள்மீது இருந்த கரிசனையால் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா ஒரு சட்டத்தைக் கொடுத்திருந்தார். அதாவது, அறுவடை செய்யும்போது வரப்பு ஓரத்தில் இருக்கிற கதிர்களை முழுமையாக அறுவடை செய்யக் கூடாது என்றும், ஏழைகளுக்காக அதை விட்டுவிட வேண்டும் என்றும் சொல்லியிருந்தார். (லேவி. 19:9, 10) அதனால், உணவுக்காக மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய நிலைமை நகோமிக்கும் ரூத்துக்கும் வரவில்லை. அவர்களுடைய சுயமரியாதைக்கும் எந்தப் பங்கமும் ஏற்படவில்லை.

11-12. இழந்துபோன சந்தோஷத்தை நகோமியும் ரூத்தும் எப்படித் திரும்பவும் பெற்றுக்கொண்டார்கள்?

11 போவாஸ் என்ற பணக்காரரின் நிலத்தில்தான் ரூத் கதிர்களைப் பொறுக்கினாள். ரூத் தன்னுடைய மாமியார் கூடவே இருந்து அவரை நன்றாகப் பார்த்துக்கொண்டது போவாஸின் மனதைத் தொட்டது. ரூத்தை கல்யாணம் செய்துகொண்டதன் மூலம் நகோமியின் குடும்ப சொத்தை போவாஸ் மீட்டுக்கொண்டார். (ரூத் 4:9-13) போவாஸுக்கும் ரூத்துக்கும் குழந்தை பிறந்தது. அதற்கு ஓபேத் என்று பெயர் வைத்தார்கள். ஓபேத், தாவீது ராஜாவின் தாத்தா.—ரூத் 4:17.

12 ஓபேத் பிறந்தபோது நகோமி எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள்! குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு யெகோவாவுக்கு அவள் நன்றி சொல்வதை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? ஆனால், நகோமிக்கும் சரி ரூத்துக்கும் சரி, இதைவிட ஒரு பெரிய சந்தோஷம் எதிர்காலத்தில் காத்திருக்கிறது. அவர்கள் உயிர்த்தெழுந்து வரும்போது, மேசியாவான இயேசு கிறிஸ்துவின் மூதாதைதான் ஓபேத் என்பதைத் தெரிந்துகொள்வார்கள்.

13. நகோமி மற்றும் ரூத்தின் வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

13 பாடங்கள்: பிரச்சினைக்குமேல் பிரச்சினை தாக்கும்போது நாம் ரொம்பவே சோர்ந்துபோய்விடலாம். இடிந்துபோய் அப்படியே உட்கார்ந்துவிடலாம். அந்தப் பிரச்சினைகளை நம்மால் சமாளிக்கவே முடியாதென்று நினைக்கலாம். ஆனால், அதுபோன்ற சமயங்களில் யெகோவாமேல் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். நம்முடைய சகோதர சகோதரிகளை விட்டுப் பிரியவே கூடாது. அதேசமயத்தில், யெகோவா எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவிட மாட்டார் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நகோமியின் கணவரையும் மகன்களையும் யெகோவா உயிரோடு கொண்டுவரவில்லையே! ஆனால், பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு அவர் உதவுவார். ஒருவேளை, நம்மேல் மாறாத அன்பு காட்டும்படி சகோதர சகோதரிகளை அவர் தூண்டலாம்.—நீதி. 17:17.

நிலைதடுமாறிய லேவியர்

யெகோவாவுக்கு சேவை செய்யாதவர்கள் நன்றாக வாழ்வதாக நினைத்து, 73-ம் சங்கீதத்தை எழுதியவர் நிலைதடுமாறி விட்டார். நமக்கும் இப்படி நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது (பாராக்கள் 14-16)

14. ஒரு லேவியர் ஏன் ரொம்பவே சோர்ந்துபோனார்?

14 சங்கீதம் 73-ஐ எழுதியவர் ஒரு லேவியர். அதனால், யெகோவாவுடைய ஆலயத்தில் சேவை செய்கிற பாக்கியம் அவருக்கு இருந்தது. ஆனாலும், ஒரு கட்டத்தில் அவர் சோர்ந்துபோனார். ஏன்? அநியாய அக்கிரமம் செய்கிறவர்களைப் பார்த்து அவர் பொறாமைப்பட்டார். அவர்களைப் போல் தன்னால் இருக்க முடியவில்லையே என்று நினைத்து அல்ல, தன்னைவிட அவர்கள் நன்றாக இருக்கிறார்களே என்று நினைத்துதான் பொறாமைப்பட்டார். (சங். 73:2-9, 11-14) அவர்களிடம் சொத்துசுகம் நிறைய இருப்பதாகவும், எந்தக் கவலையும் இல்லாமல் அவர்கள் வாழ்க்கையை அனுபவிப்பதாகவும் நினைத்தார். இதனால் ரொம்பவே சோர்ந்துபோய் “நான் சுத்தமான இதயத்தோடும், கறைபடியாத கைகளோடும் வாழ்ந்தது வீணிலும் வீண்தான்” என்று சொன்னார். யெகோவாவுக்கு சேவை செய்வதையே நிறுத்திவிடும் அளவுக்கு அவர் சோர்ந்துபோயிருக்கலாம் என்பது இதிலிருந்து தெரிகிறது.

15. சங்கீதம் 73:16-19 மற்றும் 22-25-ன்படி, ஒரு லேவியர் சோர்வை எப்படிச் சமாளித்தார்?

15 சங்கீதம் 73:16-19-யும், 22-25-யும் வாசியுங்கள். ‘கடவுளுடைய பரிசுத்த ஆலயத்துக்குள்’ லேவியர் நுழைகிறார். கடவுளை வணங்குவதற்காக அங்கே மற்றவர்களும் வந்திருக்கிறார்கள். ஆலயத்தில் நிதானமாகவும் தெளிவாகவும் அவரால் யோசிக்க முடிகிறது. தன்னுடைய நிலைமையைப் பற்றி ஜெபம் செய்யவும் முடிகிறது. இப்படியெல்லாம் செய்ததால், தான் நினைத்தது முட்டாள்தனம் என்பதை அவர் புரிந்துகொள்கிறார். யெகோவாவைவிட்டு தன்னை பிரிக்கும் ஆபத்தான ஒரு பாதையில் தான் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்திருந்ததையும் அவர் உணர்கிறார். கெட்டவர்கள் “சறுக்கலான தரையில்” நிற்பதையும், அவர்களுக்கு ‘கோரமான முடிவு’ காத்திருப்பதையும் அவர் புரிந்துகொள்கிறார். பொறாமையையும் சோர்வையும் சமாளிப்பதற்கு, எல்லாவற்றையும் யெகோவா பார்ப்பதுபோல் அவர் பார்க்க வேண்டியிருந்தது. அப்படி அவர் பார்த்ததால், இழந்துபோன சந்தோஷமும் மனசமாதானமும் அவருக்குத் திரும்பவும் கிடைத்தது. அதனால்தான், “இந்தப் பூமியில் [யெகோவாவை] தவிர வேறு எதுவும் எனக்கு வேண்டாம்” என்று அவர் சொன்னார்.

16. லேவியரிடமிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

16 பாடங்கள்: அக்கிரமம் செய்கிறவர்கள் சந்தோஷமாக இருப்பதாக நினைத்து அவர்கள்மேல் நாம் பொறாமைப்படக் கூடாது. அவர்களுடைய சந்தோஷம் நிரந்தரமானது கிடையாது. முடிவில்லாத வாழ்க்கை என்பதும் அவர்களுக்குக் கிடையவே கிடையாது. (பிர. 8:12, 13) ஒருவேளை, அவர்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டால் நாம் சோர்ந்துவிடுவோம். யெகோவாவுக்கும் நமக்கும் இருக்கிற பந்தத்திலும் விரிசல் ஏற்பட்டுவிடும். அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஒருவேளை உங்களுக்கு வந்தால், லேவியர் செய்ததை நீங்கள் செய்ய வேண்டும். கடவுளுடைய அறிவுரையைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும். கடவுளுக்குப் பிடித்ததைச் செய்பவர்களோடு நட்பு வைத்துக்கொள்ள வேண்டும். வேறு எதையும், வேறு யாரையும்விட யெகோவாவை அதிகமாக நேசிக்க வேண்டும். அப்போது, உங்களுக்கு உண்மையான சந்தோஷம் கிடைக்கும். அதோடு, ‘உண்மையான வாழ்வுக்கான’ பாதையில் உங்களால் தொடர்ந்து பயணம் செய்ய முடியும்.—1 தீ. 6:19.

பலவீனங்களால் சோர்ந்துபோன பேதுரு

சோர்வைச் சமாளித்து தொடர்ந்து யெகோவாவுக்கு சேவை செய்ய பேதுருவுக்கு எது உதவியது என்பதை யோசித்துப்பார்ப்பது நமக்குப் பிரயோஜனமாக இருக்கும். மற்றவர்களைப் பலப்படுத்தவும் அது உதவும் (பாராக்கள் 17-19)

17. என்னென்ன காரணங்களால் பேதுரு சோர்வடைந்திருக்கலாம்?

17 அப்போஸ்தலன் பேதுரு, சுறுசுறுப்பான ஒரு மனிதராக இருந்தார். ஆனால், சிலசமயங்களில் அவசரப்பட்டு எதையாவது செய்துவிடுவார் அல்லது சொல்லிவிடுவார். பிறகு, அதை நினைத்து வருத்தப்படுவார். உதாரணத்துக்கு, எதிரிகள் தன்னை சித்திரவதை செய்து கொலை செய்வார்கள் என்று அப்போஸ்தலர்களிடம் இயேசு சொன்னபோது, “இதெல்லாம் உங்களுக்கு நடக்கவே நடக்காது” என்று அதட்டலாகச் சொன்னார். (மத். 16:21-23) அப்போது, பேதுருவை இயேசு சரிசெய்தார். பிறகு, ஒரு கும்பல் இயேசுவைக் கைது செய்ய வந்தபோது, பேதுரு அவசரப்பட்டு தலைமைக் குருவின் வேலைக்காரனுடைய காதை அறுத்துவிட்டார். (யோவா. 18:10, 11) திரும்பவும் இயேசு அவரைத் திருத்தினார். அதோடு, அப்போஸ்தலர்கள் தன்னைவிட்டு ஓடிப்போய்விடுவார்கள் என்று இயேசு சொன்னபோது ‘யார் ஓடிப்போனாலும் நான் ஓடிப்போக மாட்டேன்’ என்று பேதுரு சொன்னார். (மத். 26:33) ஆனால், அவருடைய அளவுக்கதிகமான தன்னம்பிக்கையால் என்ன ஆனது? மனிதர்களைப் பார்த்து பயந்துபோய், இயேசுவை யாரென்றே தெரியாது என்று மூன்று தடவை அவர் மறுத்துவிட்டார். பிறகு, அதை நினைத்து பயங்கரமான சோர்வில் மூழ்கிவிட்டார். “வெளியே போய்க் கதறி அழுதார்.” (மத். 26:69-75) தன்னை இயேசு மன்னிக்கவே மாட்டார் என்று அவர் நினைத்திருக்க வேண்டும்!

18. சோர்வைச் சமாளிக்க பேதுருவுக்கு இயேசு எப்படி உதவினார்?

18 ஆனால், பேதுரு சோர்விலேயே மூழ்கிவிடவில்லை. தன்னுடைய தவறுகளை நினைத்து மனம் வருந்தினார், சோர்வைச் சமாளித்தார். தொடர்ந்து யெகோவாவுக்கு சேவை செய்தார். (யோவா. 21:1-3; அப். 1:15, 16) சோர்வைச் சமாளிக்க அவருக்கு எது உதவியது? அவர் தன்னுடைய விசுவாசத்தை விட்டுவிடக் கூடாது என்று அவருக்காக இயேசு ஏற்கெனவே ஜெபம் செய்திருந்தார். இயேசுவின் இதயப்பூர்வமான அந்த ஜெபத்தை யெகோவா கேட்டார். அதோடு, மனம் திரும்பியதும் சகோதரர்களைப் பலப்படுத்தும்படி இயேசு அவரிடம் சொல்லியிருந்தார். இதையெல்லாம் யோசித்துப்பார்த்தது, சோர்வைச் சமாளிக்க பேதுருவுக்கு உதவியிருக்கும். பிற்பாடு, பேதுரு முன் இயேசு நேரடியாகத் தோன்றியபோது அவரைப் பலப்படுத்தியிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. (லூக். 22:32; 24:33, 34; 1 கொ. 15:5) இன்னொரு சமயம், ஒரு ராத்திரியில் அப்போஸ்தலர்கள் மீன் கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருந்தபோது இயேசு அவர்கள் முன் தோன்றினார். அப்போது, பேதுரு தன்னை எந்தளவு நேசிக்கிறார் என்பதைச் சொல்வதற்கு அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். தன்னுடைய ஆருயிர் நண்பனான பேதுருவை இயேசு மன்னித்திருந்தார். அதனால், அவரை நம்பி இன்னும் நிறைய பொறுப்புகளை கொடுத்தார்.—யோவா. 21:15-17.

19. யெகோவா நம்மைப் பார்ப்பதுபோல் நாம் நம்மைப் பார்ப்பதற்கு சங்கீதம் 103:13, 14 எப்படி உதவுகிறது?

19 பாடங்கள்: பேதுருவிடம் இயேசு நடந்துகொண்டதிலிருந்து யெகோவாவைப் போலவே இயேசுவும் கருணை உள்ளம் படைத்தவர் என்பது தெரிகிறது. அதனால், நாம் தவறுகள் செய்யும்போது, யெகோவா நம்மை மன்னிக்கவே மாட்டார் என்று நினைக்கக் கூடாது. நாம் அப்படி நினைத்து சோர்விலேயே மூழ்கிவிட வேண்டுமென்றுதான் சாத்தான் ஆசைப்படுகிறான். ஆனால், நம்மையும் சரி நமக்கு எதிராக தவறு செய்பவர்களையும் சரி, யெகோவா எப்படிப் பார்க்கிறாரோ அப்படி நாம் பார்க்க வேண்டும். நம்மையும் மற்றவர்களையும் அன்போடும் கரிசனையோடும் யெகோவா நடத்துவதுபோல் நாமும் நடத்த வேண்டும்.—சங்கீதம் 103:13, 14-ஐ வாசியுங்கள்.

20. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம்?

20 “உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார்” என்பதை யோசேப்பு, நகோமி, ரூத், லேவியர் மற்றும் பேதுரு ஆகியவர்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் காட்டுகின்றன. (சங். 34:18) பிரச்சினைகளால் சோர்ந்துபோகிற எல்லா சமயங்களிலும் யெகோவா அவற்றை முழுவதுமாக நீக்கிவிடுவதில்லை. (1 பே. 1:6, 7) ஆனால், அவற்றை சமாளிக்க அவர் உதவுகிறார். அப்போது, நம்முடைய விசுவாசம் பலமாகிறது. அடுத்த கட்டுரையில், தங்களுடைய குறைகளாலோ பிரச்சினைகளாலோ சோர்ந்துபோன தன்னுடைய ஊழியர்களை யெகோவா எப்படித் தூக்கி நிறுத்துகிறார் என்பதைப் பார்ப்போம்.

பாட்டு 23 யெகோவாவே எம் பலம்

^ பாரா. 5 யோசேப்பு, நகோமி, ரூத், லேவியர், அப்போஸ்தலன் பேதுரு ஆகியவர்கள் சில பிரச்சினைகளால் சோர்ந்துபோனார்கள். அவர்களை யெகோவா எப்படி ஆறுதல்படுத்தினார் என்றும், எப்படிப் பலப்படுத்தினார் என்றும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, அவர்களிடமிருந்தும் அவர்களை யெகோவா நடத்திய விதத்திலிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதையும் தெரிந்துகொள்ளப்போகிறோம்.

^ பாரா. 56 படவிளக்கம்: கணவனை இழந்த துக்கத்தில், நகோமியும் ரூத்தும் ஒர்பாளும் சோர்ந்துபோயிருக்கிறார்கள். ஓபேத் பிறந்ததைப் பார்த்து, போவாஸோடு சேர்ந்து நகோமியும் ரூத்தும் சந்தோஷப்படுகிறார்கள்.