Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் பொறுப்பை முழு ஆர்வத்தோடு செய்யுங்கள்!

உங்கள் பொறுப்பை முழு ஆர்வத்தோடு செய்யுங்கள்!

உங்கள் நண்பரிடமிருந்து ஒரு கடிதம் வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? இப்படித்தான் அப்போஸ்தலன் பவுலிடமிருந்து தீமோத்தேயுவுக்கு ஒரு கடிதம் வந்தது. பைபிளில் இருக்கிற 2 தீமோத்தேயு புத்தகம்தான் அந்தக் கடிதம்! அந்தக் கடிதம் கையில் கிடைத்தவுடன் தன்னுடைய அருமை நண்பர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள, தீமோத்தேயு அமைதியான ஓர் இடத்துக்குப் போயிருக்கலாம். கடிதத்தைப் படிப்பதற்கு முன்பு ஒருவேளை அவர் இப்படியெல்லாம் யோசித்திருக்கலாம்: ‘பவுல் எப்படி இருக்காருனு தெரியலயே? என்னோட பொறுப்புகள நல்லா செய்றதுக்கு தேவையான அறிவுரைகள இதுல சொல்லி இருப்பாரா? என்னோட ஊழியத்த இன்னும் சிறப்பா செய்றதுக்கும் மத்தவங்களுக்கு உதவுறதுக்கும் தேவையான தகவல்கள் இந்த கடிதத்துல இருக்குமா?’ இந்த எல்லா கேள்விகளுக்கும் அந்தக் கடிதத்தில் பதில் இருந்தது. வேறுசில முக்கியமான விஷயங்களைப் பற்றியும் பவுல் அதில் சொல்லியிருந்தார். ஆனால், பவுல் சொன்ன அறிவுரையிலிருந்து சில விஷயங்களை மட்டும் இப்போது பார்க்கலாம்.

“எல்லா கஷ்டங்களையும் . . . சகித்துவருகிறேன்”

“அன்பான பிள்ளை” என்ற வார்த்தைகளோடு பவுல் தன் கடிதத்தை ஆரம்பித்திருந்தார். (2 தீ. 1:2) அதைப் படித்தவுடன் பவுலோடு நேரம் செலவழித்த அந்தத் தருணங்களையும் அவர் தன்மீது காட்டிய அக்கறையையும் தீமோத்தேயு நினைத்துப் பார்த்திருப்பார். கிட்டத்தட்ட கி.பி. 65-ல் அந்தக் கடிதம் அவருக்குக் கிடைத்தபோது அவர் 30 வயதைத் தாண்டியிருந்தார். ஏற்கெனவே அனுபவமுள்ள ஒரு மூப்பராக அவர் இருந்தார். பத்து வருஷங்களுக்குமேல் பவுலுடன் நெருக்கமாகப் பழகி, அவரிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றிருந்தார்.

இந்தக் கடிதத்தை எழுதியபோது, பவுல் ரோமில் சிறையில் இருந்தார். சீக்கிரத்தில் சாவை எதிர்நோக்கியிருந்தார். (2 தீ. 1:15, 16; 4:6-8) இருந்தாலும், “எல்லா கஷ்டங்களையும் . . . சகித்துவருகிறேன்” என்று தைரியமாக சொன்னார். (2 தீ. 2:8-13) இதைப் படித்தது தீமோத்தேயுவைப் பலப்படுத்தியிருக்கும். பவுலுடைய சகிப்புத்தன்மை இன்று நம்மையும் பலப்படுத்துகிறது.

“வரத்தை நெருப்புபோல் மூட்டிவிட்டுக்கொண்டே இரு”

கடவுள் கொடுத்திருந்த பொறுப்பை தீமோத்தேயு பொக்கிஷமாக நினைக்க வேண்டுமென்று பவுல் சொன்னார். கடவுள் கொடுத்த “அந்த வரத்தை [தீமோத்தேயு] நெருப்புபோல் மூட்டிவிட்டுக்கொண்டே” இருக்க வேண்டுமென்று அவர் ஆசைப்பட்டார். (2 தீ. 1:6) ‘வரம்’ என்ற வார்த்தைக்கு கரிஸ்மா என்ற கிரேக்க வார்த்தையை பவுல் பயன்படுத்தினார். இந்த வார்த்தை, பெற்றுக்கொள்வதற்குத் தகுதியில்லாதபோதும் இலவசமாகக் கிடைக்கிற பரிசைக் குறிக்கிறது. சபையில் ஒரு விசேஷ பொறுப்புக்காக தீமோத்தேயு நியமிக்கப்பட்டபோது இந்த வரத்தைப் பெற்றுக்கொண்டார்.—1 தீ. 4:14.

தனக்கு கடவுள் கொடுத்த வரத்தை தீமோத்தேயு எப்படிப் பயன்படுத்த வேண்டியிருந்தது? “நெருப்புபோல் மூட்டிவிட்டுக்கொண்டே இரு” என்ற வார்த்தைகளைப் படித்ததும் வீடுகளில் நெருப்பு மூட்டுவது தீமோத்தேயுவுக்கு ஞாபகம் வந்திருக்கலாம். பொதுவாக நெருப்பு எரியும்போது சிலசமயத்தில் அது அணைந்துவிடும். மறுபடியும் தணலை ஊதிவிட்டால்தான் அது பற்றியெரியும். பவுல் பயன்படுத்திய ஆனாஸோபைரியோ என்ற கிரேக்க வினைச்சொல்லுக்கு “தூண்டிவிடுவது, மூட்டிவிடுவது, தணலை ஊதிவிடுவது” போன்ற அர்த்தங்கள் இருப்பதாகவும், இப்படி “சந்தோஷமாகவும் ஆர்வமாகவும் ஒரு செயலைச் செய்வதை” அது குறிப்பதாகவும் ஓர் அகராதி சொல்கிறது. அப்படியென்றால், தீமோத்தேயுவிடம் பவுல் சொல்லவந்த விஷயம் இதுதான்: ‘முழு ஆர்வத்தோடு உன் பொறுப்பை செய்!’ இன்று நாமும் அதே ஆர்வத்தோடும் சந்தோஷத்தோடும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பைச் செய்ய வேண்டும்.

“அருமையான இந்தப் பொக்கிஷத்தைக் . . . காத்துக்கொள்”

பவுல் எழுதிய கடிதத்தை தீமோத்தேயு தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தபோது, அவர் எழுதிய இன்னொரு விஷயம் அவருடைய கண்ணில் படுகிறது. “உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிற அருமையான இந்தப் பொக்கிஷத்தை நமக்குள் குடியிருக்கிற கடவுளுடைய சக்தியால் காத்துக்கொள்” என்று பவுல் சொல்லியிருந்தார். (2 தீ. 1:14) இந்த வார்த்தைகள், ஊழியத்தை இன்னும் நன்றாகச் செய்வதற்கு தீமோத்தேயுவுக்கு உதவியிருக்கும். அப்படியென்றால், என்ன பொக்கிஷம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது? 2 தீமோத்தேயு 1:13-ல், “பயனுள்ள வார்த்தைகளை,” அதாவது வேதவசனங்களிலிருந்து தீமோத்தேயுவுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட சத்தியங்களைப் பற்றி பவுல் சொன்னார். ஒரு ஊழியராக, சபைக்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி சத்தியத்தை அவர் கற்றுக்கொடுக்க வேண்டியிருந்தது. (2 தீ. 4:1-5) அதோடு, கடவுளுடைய மந்தையைக் கவனித்துக்கொள்வதற்கு அவர் மூப்பராக நியமிக்கப்பட்டிருந்தார். (1 பே. 5:2) கடவுளுடைய சக்தியையும் அவருடைய வார்த்தையையும் நம்பி தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பொக்கிஷத்தை, அதாவது சத்தியத்தை, அவர் காத்துக்கொள்ள வேண்டியிருந்தது.—2 தீ. 3:14-17.

இன்று நம்மிடமும் சத்தியம் என்ற பொக்கிஷத்தை கடவுள் ஒப்படைத்திருக்கிறார். இந்தச் சத்தியத்தை நாம் மற்றவர்களிடம் சொல்கிறோம். (மத். 28:19, 20) நாம் விடாமல் ஜெபம் செய்தால்... பைபிளைத் தவறாமல் படித்தால்... இந்தப் பொக்கிஷத்துக்கு நன்றி காட்ட முடியும். (ரோ. 12:11, 12; 1 தீ. 4:13, 15, 16) இது இல்லாமல், வேறுசில பொக்கிஷங்களும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கலாம். ஒருவேளை, நாம் மூப்பராகவோ முழுநேர ஊழியராகவோ இருக்கலாம். இந்தப் பொக்கிஷங்கள் நம்மிடம் இருந்தால், நாம் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும். பொறுப்புகளை நன்றாகச் செய்வதற்கு எப்போதும் கடவுளை நம்பியிருக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், கடவுள் நம்மிடம் ஒப்படைத்த பொக்கிஷத்தை நாம் மதிக்கிறோம் என்பதைக் காட்ட முடியும்.

இந்த “விஷயங்களை உண்மையுள்ள ஆட்களிடம் சொல்”

தான் மட்டுமே செய்வதற்காக தீமோத்தேயுவிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படவில்லை. “என்னிடமிருந்து நீ கற்றுக்கொண்ட . . . விஷயங்களை உண்மையுள்ள ஆட்களிடம் சொல்; அப்போது, மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க அவர்கள் போதிய தகுதி பெறுவார்கள்” என்று பவுல் சொன்னார். (2 தீ. 2:2) அதனால், மற்றவர்களுக்கும் தீமோத்தேயு பயிற்சி கொடுக்க வேண்டியிருந்தது. தான் கற்றுக்கொண்ட எல்லா விஷயங்களையும் சகோதரர்களுக்கும் அவர் சொல்லித் தர வேண்டியிருந்தது. இன்றிருக்கிற மூப்பர்களும் இதேபோல் செய்வது முக்கியம். ஒரு நல்ல கண்காணியாக இருக்க விரும்புகிற ஒரு மூப்பர், ஒரு பொறுப்பை எப்படிச் செய்வது என்று மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார். தனக்குத் தெரிந்ததை தனக்குள்ளேயே வைத்துக்கொள்ள மாட்டார். இப்படிப் பயிற்சி கொடுப்பதால் மற்றவர்களால் கற்றுக்கொள்ள முடிகிறது. மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தால் அவர்கள் தன்னைவிட திறமைசாலிகளாக ஆகிவிடுவார்களோ என்று நினைத்து அவர் பயப்பட மாட்டார். அதனால், வெறுமனே அடிப்படையான விஷயங்களை மட்டும் சொல்லிக் கொடுக்காமல் மற்றவர்கள் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஆவதற்குத் தேவையான எல்லா பயிற்சிகளையும் கொடுப்பார். இப்படியெல்லாம் ஒரு மூப்பர் செய்யும்போது, அவரிடம் பயிற்சி பெற்ற ‘உண்மையுள்ள ஆட்கள்’ சபைக்கு ஓர் ஆசீர்வாதமாக இருப்பார்கள்.

பவுலிடமிருந்து வந்த அந்த அருமையான கடிதத்தை தீமோத்தேயு உயர்வாக மதித்திருப்பார். அடிக்கடி அந்தக் கடிதத்தை எடுத்துப் பார்த்து அதிலிருந்த ஆலோசனைகளை ஆழமாக யோசித்துப்பார்த்திருப்பார். தன்னுடைய பொறுப்புகளை நல்லபடியாகச் செய்வதற்கு அது அவருக்கு உதவியிருக்கும்.

பவுல் கொடுத்த அறிவுரையின்படி நடக்க நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்குக் கொடுக்கப்பட்ட வரத்தை நெருப்புபோல் மூட்டிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிற பொக்கிஷத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய அனுபவத்தையும் நாம் கற்றுக்கொண்டதையும் உண்மையுள்ள ஆட்களிடம் சொல்ல வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், பவுல் தீமோத்தேயுவிடம் சொன்னதை நம்மால் செய்ய முடியும். அதாவது, நம்முடைய “ஊழியத்தை முழுமையாகச் செய்து” முடிக்க முடியும்.—2 தீ. 4:5.