Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜெபம் செய்வது உங்களுக்கு எப்படி உதவும்?

ஜெபம் செய்வது உங்களுக்கு எப்படி உதவும்?

பமலா என்பவர் புற்றுநோயால் ரொம்ப அவதிப்பட்டார். அதனால், ஒரு மருத்துவ நிபுணரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக்கொண்டார். இருந்தாலும், தன்னுடைய சூழ்நிலையைச் சமாளிக்க பலம் கேட்டு கடவுளிடம் ஜெபம் செய்தார். அப்படிச் செய்தது அவருக்குப் பிரயோஜனமாக இருந்ததா?

இதைப் பற்றி பமலா என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்: “சிகிச்சை எடுக்குறப்பல்லாம் எனக்கு ரொம்ப பயமா இருக்கும். ஆனா, யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சப்போ என் மனசு அப்படியே அமைதியாயிடுச்சு, என்னால தெளிவா யோசிக்க முடிஞ்சுது. இப்பக்கூட வலி தாங்க முடியாம கஷ்டப்படுகிறேன். ஆனாலும், நம்பிக்கையான மனநிலையோட இருக்க ஜெபம்தான் எனக்கு உதவி செய்யுது. ‘எப்படி இருக்கீங்க’னு மத்தவங்க என்கிட்ட கேக்குறப்போ ‘முடியலதான், ஆனாலும் சந்தோஷமா இருக்கேன்’னு சொல்லுவேன்.”

உயிருக்கு ஆபத்தான ஒரு பெரிய பிரச்சினை வந்த பிறகு ஜெபம் செய்துகொள்ளலாம் என்று இருந்துவிடக் கூடாது. நம் எல்லாருக்குமே பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவை சின்ன பிரச்சினையாகவோ, பெரிய பிரச்சினையாகவோ இருக்கலாம். அவற்றைச் சமாளிக்க உதவி தேவை என்பதை நாம் உணருகிறோம். ஜெபம் அதற்குக் கைகொடுக்குமா?

“யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு. அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாட விடமாட்டார்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 55:22) இது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! அப்படியென்றால் ஜெபம் செய்வது உங்களுக்கு எப்படி உதவும்? சரியான விதத்தில் கடவுளிடம் ஜெபம் செய்தால், உங்களுடைய பிரச்சினையைச் சமாளிப்பதற்குத் தேவையான உதவியை அவர் செய்வார்.—“ ஜெபம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.