Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புதிய உலகில் வாழ நீங்கள் என்ன செய்யலாம்?

புதிய உலகில் வாழ நீங்கள் என்ன செய்யலாம்?

தனக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும், இந்தப் பூமியில் இருக்கிற எல்லா பிரச்சினைகளுக்கும் கடவுள் சீக்கிரத்தில் முடிவு கொண்டுவரப் போகிறார் என்று முந்தின கட்டுரைகளில் பார்த்தோம். இது கண்டிப்பாக நடக்கும் என்று நாம் உறுதியாக நம்பலாம். ஏனென்றால், கடவுளுடைய வார்த்தையான பைபிள் இந்த வாக்குறுதியைக் கொடுக்கிறது:

‘இந்த உலகம் . . . ஒழிந்துபோகும்.’​—1 யோவான் 2:17.

ஆனால், உலக முடிவிலிருந்து தப்பிக்கிறவர்கள் இருப்பார்கள் என்று நாம் உறுதியாக நம்பலாம். ஏனென்றால், அதே வசனம் இந்த வாக்குறுதியையும் கொடுக்கிறது.

“கடவுளுடைய விருப்பத்தை செய்கிறவனோ என்றென்றும் நிலைத்திருப்பான்.”

அப்படியென்றால், அந்த முடிவிலிருந்து தப்பிப்பதற்கு கடவுளுடைய விருப்பத்தைச் செய்ய வேண்டும். கடவுளுடைய விருப்பத்தைத் தெரிந்துகொள்வதற்கு முதலில் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

முடிவிலிருந்து தப்பிப்பதற்கு கடவுளைப் பற்றித் ‘தெரிந்துகொள்ளுங்கள்’

ஒரே உண்மையான கடவுளைப் பற்றி “தெரிந்துகொண்டே இருந்தால்” முடிவில்லாத வாழ்வு கிடைக்கும் என்று இயேசு சொன்னார். (யோவான் 17:3) உலக முடிவிலிருந்து தப்பித்து, புதிய பூமியில் என்றென்றும் வாழ வேண்டுமென்றால், நாம் கடவுளைப் பற்றி ‘தெரிந்துகொள்வது’ முக்கியம். அப்படியென்றால், வெறுமனே கடவுள்மேல் நம்பிக்கை வைப்பதோ அவரைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துவைத்திருப்பதோ மட்டும் போதாது. நாம் அவருடைய நண்பராக ஆக வேண்டும். பொதுவாக, ஒருவரோடு நல்ல நட்பு வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், அவரோடு நிறைய நேரம் செலவிட வேண்டும். கடவுளோடு நல்ல நட்பை வைத்துக்கொள்வதற்கும் இதைத்தான் செய்ய வேண்டும். கடவுளோடு நண்பராவதற்கும், அந்த நட்பை விட்டுவிடாமல் இருப்பதற்கும் நமக்கு உதவுகிற சில முக்கியமான பைபிள் உண்மைகளை இப்போது பார்க்கலாம்.

கடவுளுடைய வார்த்தையான பைபிளைத் தினமும் படியுங்கள்

உதவி கேட்டு கடவுளிடம் ஜெபம் செய்தால்... அவருடைய விருப்பத்தைச் செய்தால்... இந்த உலகத்தின் முடிவிலிருந்து உங்களால் தப்பிக்க முடியும்

நாம் உயிர் வாழ்வதற்கு தினமும் உணவு சாப்பிடுகிறோம். ஆனால், “உணவால் மட்டுமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையாலும் மனுஷன் உயிர்வாழ்வான்” என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 4:4.

யெகோவாவின் வார்த்தைகள் பைபிளில்தான் இருக்கின்றன. பரிசுத்தமான அந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்கும்போது, மனிதர்களுக்காக கடந்த காலத்தில் அவர் என்ன செய்திருக்கிறார்... இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்... எதிர்காலத்தில் என்ன செய்வார்... என்பதையெல்லாம் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.

உதவி கேட்டு கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள்

கடவுளுடைய பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்கள். ஆனால், தவறு என்று அவர் சொல்கிற ஒரு விஷயத்தை விட்டுவிடுவது உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால் என்ன செய்யலாம்? அப்படிப்பட்ட சமயங்களில், கடவுளைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்வது உங்களுக்கு உதவும்.

சாக்கூரா என்ற பெண்ணின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவர் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார். அவர் பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது, “பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்” என்று கடவுள் கொடுத்திருக்கிற கட்டளையைப் பற்றித் தெரிந்துகொண்டார். (1 கொரிந்தியர் 6:18) பலத்துக்காக அவர் கடவுளிடம் ஜெபம் செய்தார். அதனால், தனக்கிருந்த கெட்ட பழக்கத்தை அவரால் விட முடிந்தது. ஆனாலும், கெட்ட ஆசைகளை எதிர்த்து அவர் தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. “ஒழுக்கங்கெட்ட எண்ணங்கள் வந்தா, மனசு விட்டு யெகோவாகிட்ட ஜெபம் செய்வேன். ஏன்னா, என்னால தனியா போராடி ஜெயிக்க முடியாதுனு எனக்கு தெரியும். ஜெபம் செஞ்சது யெகோவாகிட்ட நெருங்கிப்போக எனக்கு உதவியா இருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். சாக்கூராவைப் போன்ற லட்சக்கணக்கான ஆட்கள் கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்வதற்கும், தனக்குப் பிடித்த மாதிரி வாழ்வதற்கும் தேவையான பலத்தை அவர்களுக்குக் கடவுள் கொடுக்கிறார்.—பிலிப்பியர் 4:13.

நீங்கள் கடவுளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளும்போது கடவுளுக்கு நீங்களும் நன்றாகத் தெரிந்தவராக இருப்பீர்கள்; அதாவது அவருடைய நெருக்கமான நண்பராக இருப்பீர்கள். (கலாத்தியர் 4:9; சங்கீதம் 25:14) அப்போதுதான் இந்த உலகத்தின் முடிவிலிருந்து தப்பித்து, புதிய உலகத்தில் உங்களால் வாழ முடியும். புதிய உலகம் எப்படி இருக்கும்? அடுத்த கட்டுரையில் அதைப் பற்றி பார்க்கலாம்.

a கடவுளுடைய பெயர் யெகோவா என்று பைபிள் சொல்கிறது.