வாழ்க்கை சரிதை
யெகோவா என்ன சொன்னாலும் அதை செய்யக் கற்றுக்கொண்டோம்
அது 1971! என் கணவர் ஹார்வேயும் நானும் தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்தோம். எங்களுடைய சொந்த ஊரிலிருந்து ஆயிரக்கணக்கான மைல் தூரத்தில் அது இருக்கிறது. நாங்களும் அமிஸ் மொழியில் மொழிபெயர்ப்பதற்கு எங்களோடு வந்த சகோதரரும் ஒரு ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. பயங்கரமான புயல் காற்று வந்திருந்ததால் ஆறு சேறும் சகதியுமாக இருந்தது. பெரிய பெரிய கற்களையெல்லாம் தண்ணீர் புரட்டிப் போட்டிருந்தது. அதோடு, பாலத்தையும் அடித்துக்கொண்டு போயிருந்தது. நாங்கள் ரொம்ப பயந்துபோயிருந்தோம். அக்கரையில் நின்றுகொண்டிருந்த சகோதரர்களும் கவலையோடு எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் எங்களுடைய காரை ஒரு பெரிய ட்ரக்கின் மேல் ஏற்றினோம். ஆனால் காரைக் கட்டுவதற்கு கயிறுகளோ சங்கிலிகளோ இல்லை. அதனால், வேகமாக அடித்துக்கொண்டு வருகிற தண்ணீரில் ட்ரக் மெதுவாக நகர்ந்தது. நாங்கள் போய்க்கொண்டே இருந்தோம், அக்கரை வந்தபாடில்லை. யெகோவாவிடம் ஜெபம் செய்துகொண்டே இருந்தோம். ஒருவழியாக பத்திரமாக அக்கரைக்குப் போய்ச் சேர்ந்தோம். எங்களுடைய கதையை இப்போது சொல்கிறேன், கேளுங்கள்.
யெகோவாவை நேசிக்க கற்றுக்கொண்டோம்
ஹார்வேயின் அப்பா அம்மாவுக்கு மொத்தம் நான்கு பையன்கள். ஹார்வேதான் மூத்த பையன். கிட்டத்தட்ட என்பது வருஷங்களுக்கு முன்பு, மேற்கு ஆஸ்திரேலியாவில் இருந்த மிட்லண்ட் ஜங்ஷன் என்ற ஊரில் அவருடைய குடும்பத்துக்குச் சத்தியம் கிடைத்தது. அந்தச் சமயத்தில், அந்த நாட்டில் பயங்கர பஞ்சம் இருந்தது. 14 வயதில் ஹார்வே ஞானஸ்நானம் எடுத்தார். அவர் இளைஞனாக இருந்தபோது, காவற்கோபுர வாசிப்பு செய்ய முடியாது என்று ஒருதடவை சொல்லிவிட்டாராம். ஏனென்றால், அதற்குத் தனக்குத் தகுதி இல்லாததாக அவர் நினைத்திருக்கிறார். ஆனால், ‘யெகோவாவோட அமைப்பு உன்ன எதையாவது செய்ய சொன்னா உனக்கு தகுதி இருக்குணுதான் அர்த்தம்’ என்று ஒரு சகோதரர் அவரிடம் சொன்னார். சீக்கிரத்திலேயே, யெகோவா என்ன சொன்னாலும் அதைச் செய்ய அவர் கற்றுக்கொண்டார்.—2 கொ. 3:5.
என்னுடைய அம்மாவுக்கும் அக்காவுக்கும் எனக்கும் இங்கிலாந்தில் சத்தியம் கிடைத்தது. ஆனால், என்னுடைய அப்பா ரொம்ப நாள் கழித்துதான் சத்தியத்துக்கு வந்தார். நாங்கள் சத்தியத்துக்கு வந்தது ஆரம்பத்தில் அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், நான் ஒன்பது வயதில் ஞானஸ்நானம் எடுத்தேன்.
முதலில் ஒரு பயனியராகவும், பிறகு ஒரு மிஷனரியாகவும் ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள். எனக்கு 21 வயது ஆகும்வரை பயனியர் சேவை செய்ய அப்பா என்னை விட மாட்டார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அதுவரைக்கும் என்னால் காத்திருக்க முடியவில்லை. அதனால், எனக்கு 16 வயதானபோது அப்பாவின் சம்மதத்தோடு ஆஸ்திரேலியாவில் இருக்கிற அக்கா வீட்டுக்குக் குடிமாறி போனேன். 18 வயதில் பயனியர் சேவையை ஆரம்பித்தேன்.ஆஸ்திரேலியாவில்தான் ஹார்வேயை சந்தித்தேன். அவருக்கும் மிஷனரியாக ஆக வேண்டுமென்ற ஆசை இருந்தது. 1951-ல், நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம். நாங்கள் ஒன்றாக சேர்ந்து இரண்டு வருஷம் பயனியர் ஊழியம் செய்த பிறகு, வட்டார சேவைக்கு நியமிக்கப்பட்டோம். எங்களுடைய வட்டாரத்தில் மேற்கு ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதி இருந்ததால், நாங்கள் அடிக்கடி ஒதுக்குப்புறமான, வறண்ட பகுதிகள் வழியாக வண்டியை ஓட்டிக்கொண்டு போக வேண்டியிருந்தது.
எங்கள் கனவு நனவானது!
1954-ல், 25-வது கிலியட் பள்ளியில் கலந்துகொள்கிற வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. சீக்கிரத்தில் எங்களுடைய கனவு நிறைவேற போவதை நினைத்து நாங்கள் சந்தோஷப்பட்டோம். கப்பலில் நியு யார்க்குக்கு போய்ச் சேர்ந்தோம். பிறகு, கிலியட் பள்ளியில் பைபிளை ஆழமாகப் படிக்க ஆரம்பித்தோம். அந்தப் பள்ளியில் ஸ்பானிஷ் மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதைக் கற்றுக்கொள்ள ஹார்வே ரொம்ப கஷ்டப்பட்டார். முக்கியமாக, “ஆர்” (r) என்ற எழுத்தை ஸ்பானிஷ் மொழியில் உச்சரிப்பதற்கு அவர் படாதபாடுபட்டார்.
ஜப்பானுக்குப் போய் சேவை செய்ய விரும்புபவர்கள் தங்களுடைய பெயரைத் தரும்படி பள்ளியில் சொல்லப்பட்டது. நாங்களாக ஒரு முடிவு எடுப்பதற்குப் பதிலாக, யெகோவாவின் அமைப்பு எங்களை நியமிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டதால், எங்களுடைய பெயர்களை நாங்கள் தரவில்லை. அதனால், போதகர்களில் ஒருவரான ஆல்பர்ட் ஷ்ரோடர் எங்களிடம் வந்து, “இன்னும் கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருங்க“ என்று சொன்னார். அப்போதும் நாங்கள் பெயர்களைத் தராததால், “மத்த போதகர்களும் நானும் உங்க பேரை குடுத்துட்டோம். அதனால, ஜப்பான் மொழிய கத்துக்க முடியுமானு பாருங்க,“ என்று சொன்னார். ஹார்வே சுலபமாக அந்த மொழியைக் கற்றுக்கொண்டார்.
1955-ல், ஜப்பானுக்குப் போய்ச் சேர்ந்தோம். அப்போது, ஹார்வேக்கு 26 வயது எனக்கு 24. அந்தச் சமயத்தில், ஜப்பானில் வெறும் 500 பிரஸ்தாபிகள்தான் இருந்தார்கள். துறைமுக நகரமான கோபேக்கு நாங்கள் நியமிக்கப்பட்டோம். நான்கு வருஷங்கள் அங்கே சேவை செய்தோம். பிறகு, மறுபடியும் வட்டார சேவைக்கு நியமிக்கப்பட்டோம். நகோயா நகரத்துக்குப் பக்கத்தில் நாங்கள் வட்டார சேவை செய்தோம். சகோதர சகோதரிகள்... அங்கிருந்த உணவு... அழகான கிராமங்கள்... என இந்த நியமிப்பில் எல்லாமே எங்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஆனால், யெகோவா செய்யச் சொன்னதைச் செய்வதற்கு சீக்கிரத்திலேயே இன்னொரு வாய்ப்பு கிடைத்தது.
புதிய நியமிப்பு, புதிய சவால்கள்
மூன்று வருஷம் வட்டார சேவை செய்ததற்குப் பிறகு, தைவானுக்குப் போய், அங்கிருக்கிற பழங்குடியினரான * ஜப்பானில் சேவை செய்வது எங்களுக்கு ரொம்ப பிடித்திருந்ததால் தைவானுக்குப் போவது கஷ்டமாக இருந்தது. ஆனாலும், யெகோவாவின் அமைப்பு எந்த நியமிப்பு கொடுத்தாலும் அதைத் தட்டக் கூடாது என்பதை ஹார்வே கற்றிருந்தார். அதனால், தைவானுக்குப் போக நாங்கள் சம்மதித்தோம்.
அமிஸ் மக்களுக்கு பிரசங்கிக்க முடியுமா என்று ஜப்பான் கிளை அலுவலகம் எங்களைக் கேட்டுக்கொண்டது. அந்தச் சமயத்தில், தைவானில் விசுவாச துரோகம் அதிகமாக இருந்தது. அதனால், சரளமாக ஜப்பான் மொழியைப் பேசத் தெரிந்த ஒரு சகோதரருடைய தேவை இருந்தது.நவம்பர் 1962-ல் தைவானுக்குப் போய்ச் சேர்ந்தோம். அப்போது, அந்த நாட்டில் 2,271 பிரஸ்தாபிகள் இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அமிஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் சீன மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், எங்களிடம் ஒரே ஒரு புத்தகம்தான் இருந்தது. எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவருக்கும் ஆங்கிலம் தெரியாது. ஆனால், எப்படியோ கற்றுக்கொண்டோம்.
தைவானுக்குப் போய்ச் சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே ஹார்வே கிளை அலுவலகக் கண்காணியாக நியமிக்கப்பட்டார். கிளை அலுவலகம் சிறியதாக இருந்ததால், அலுவலக வேலைகளைப் பார்த்துக்கொண்டே மாதத்துக்கு மூன்று வாரங்கள் அமிஸ் இன சகோதரர்களோடு சேர்ந்து சேவை செய்யவும் அவரால் முடிந்தது. அவ்வப்போது மாவட்டக் கண்காணியாகவும் அவர் சேவை செய்தார். அதனால், மாநாடுகளில் அவர் பேச்சுக் கொடுக்க வேண்டியிருந்தது. ஜப்பான் மொழியில் பேச்சு கொடுத்திருந்தால்கூட அமிஸ் சகோதரர்களால் புரிந்துகொண்டிருக்க முடியும். ஆனால், மதக் கூட்டங்கள் சீன மொழியில்தான் நடத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் சொல்லியிருந்தது. அதனால், எப்படியோ கஷ்டப்பட்டு சீன மொழியில் ஹார்வே பேச்சு கொடுத்தார். சகோதரர்கள் அதை அமிஸ் மொழியில் மொழிபெயர்த்தார்கள்.
அப்போது தைவானில் ராணுவச் சட்டம் அமலில் இருந்ததால், மாநாடுகளை நடத்துவதற்கு அனுமதி வாங்க வேண்டியிருந்தது. ஆனால், போலீஸ்காரர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் அனுமதி கொடுத்துவிட மாட்டார்கள். ஒருவேளை மாநாடு நடக்கிற வாரம்வரை அனுமதி கிடைக்கவில்லை என்றால், ஹார்வே காவல் நிலையத்தில் போய் உட்கார்ந்துகொள்வார். ஒரு வெளிநாட்டுக்காரர் காவல் நிலையத்தில் உட்கார்ந்திருப்பது போலீஸ்காரர்களுக்கு தர்மசங்கடமாக இருக்கும். அதனால், சீக்கிரத்தில் அனுமதி கொடுத்துவிடுவார்கள்.
முதன்முதலாக மலையேறிய அனுபவம்
நாங்கள் சகோதரர்களோடு சேர்ந்து சேவை செய்த வாரங்களில், அடிக்கடி மலையேற வேண்டியிருந்தது, ஆறுகளைக் கடக்க வேண்டியிருந்தது. ஒரு மணி நேரமோ அதற்கும் அதிகமாகவோ அப்படிப் போக வேண்டியிருந்தது. முதன்முதலாக மலையேறியது எனக்கு ஞாபகம் இருக்கிறது. காலையில் அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு ஐந்தரை மணி பஸ்ஸைப் பிடித்து தூரத்திலிருந்த ஒரு கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கிருந்து ஒரு ஆறு வழியாக நடந்து போனோம். பிறகு மலைமேல் ஏறினோம். எனக்கு முன்னால் ஏறிக்கொண்டிருந்த சகோதரரின் பாதம்தான் என் கண்ணுக்கு நேராக இருந்தது. அந்தளவுக்கு அந்த மலை செங்குத்தாக இருந்தது!
அன்று காலையில் உள்ளூர் சகோதரர்களோடு சேர்ந்து ஹார்வே ஊழியம் செய்துகொண்டிருந்தார். ஜப்பான் மொழி பேசுகிற மக்கள் இருக்கிற ஒரு கிராமத்தில் நான் தனியாக ஊழியம் செய்துகொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 1 மணி ஆகிவிட்டது. ரொம்ப நேரம் எதுவும் சாப்பிடாததால் எனக்கு மயக்கமாக வந்தது. நான் ஹார்வேயைப் பார்த்தபோது அவரோடு யாருமில்லை. பத்திரிகைகளைக் கொடுத்துவிட்டு, ஹார்வே மூன்று கோழி முட்டைகளை வாங்கி வந்திருந்தார். முட்டையில் ஓட்டை போட்டு அதை உறிஞ்சிக் குடிப்பது எப்படி என்று சாப்பிட்டுக் காட்டினார். எனக்குச் சாப்பிட பிடிக்கவில்லை என்றாலும், ஒரு முட்டையை சாப்பிட்டேன். நான் மயங்கிவிட்டால் என்னைக் கீழே தூக்கிக் கொண்டு போவது கஷ்டம் என்பதால், இன்னொரு முட்டையையும் ஹார்வே எனக்கே கொடுத்துவிட்டார்.
வித்தியாசமான குளியல்
ஒரு வட்டார மாநாட்டுக்கு நாங்கள் போயிருந்தபோது வித்தியாசமான ஓர் அனுபவம் கிடைத்தது. ராஜ்ய மன்றத்துக்கு
பக்கத்திலிருந்த ஒரு சகோதரர் வீட்டில் நாங்கள் தங்கியிருந்தோம். குளிப்பதை அமிஸ் மக்கள் ரொம்ப முக்கியமானதாக நினைத்ததால், நாங்கள் குளிப்பதற்கு வட்டாரக் கண்காணியின் மனைவி ஏற்பாடு செய்தார். ஹார்வே மற்ற வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்ததால், என்னை முதலில் குளிக்கச் சொன்னார். ஒரு பக்கெட்டில் குளிர்ந்த நீரையும் இன்னொரு பக்கெட்டில் வெந்நீரையும் ஒரு காலி பக்கெட்டையும் கொண்டுபோய், வீட்டுக்கு வெளியில் வட்டாரக் கண்காணியின் மனைவி வைத்துவிட்டார். அங்கிருந்து பார்த்தால் ராஜ்ய மன்றத்தில் மாநாட்டு வேலைகளைச் செய்துகொண்டிருந்த சகோதரர்கள் தெரிந்தார்கள். அதனால், மறைப்பதற்கு ஏதாவது ஒன்றைத் தரும்படி அந்தச் சகோதரியிடம் கேட்டேன். ஆனால், அவர் ஒரு பிளாஸ்டிக் திரையைக் கொண்டுவந்தார். அது மறைவாகவே இல்லை. அதனால், வீட்டுக்கு பின்னால் போய் குளிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அங்கே வேலிக்கு பக்கத்தில் ஒரு வாத்துக் கூட்டம் இருந்தது. பக்கத்தில் போனால் கொத்திவிடுமோ என்று பயமாக இருந்தது. அதனால், “சகோதரர்கள் ரொம்ப மும்முரமா வேலை செஞ்சுட்டு இருக்காங்க. இந்த பக்கமெல்லாம் பார்க்க மாட்டாங்க. குளிக்கலனாதான் தப்பா எடுத்துக்குவாங்க. அதனால, போய் குளிக்கலாம்” என்று எனக்குள் சொல்லிக்கொண்டு குளிக்கப் போனேன்.பிரசுரங்கள்-அமிஸ் மொழியில்
அமிஸ் இன மக்களில் பெரும்பாலானவர்களுக்கு படிப்பறிவு இல்லாததாலும், அந்த மொழியில் பிரசுரங்கள் இல்லாததாலும் யெகோவாவோடு அவர்களால் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதை ஹார்வே கவனித்தார். அப்போதுதான் அந்த மொழிக்கு எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டிருந்ததால், அந்த மொழியைக் கற்றுக்கொடுப்பது பிரயோஜனமாக இருக்கும் என்று நினைத்தோம். அது ஒரு சாதாரணமான வேலை இல்லைதான். ஆனால் அதைச் செய்ததால், சகோதரர்கள் தாங்களாகவே யெகோவாவைப் பற்றி படித்து தெரிந்துகொண்டார்கள். கிட்டத்தட்ட 1966-ல் அந்த மொழியில் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. 1968-ல், முதல் காவற்கோபுர இதழ் வெளியானது.
ஆனால், சீன மொழியைத் தவிர மற்ற மொழிகளில் இருக்கிற பிரசுரங்களை விநியோகிக்கக் கூடாது என்று அரசாங்கம் தடை போட்டிருந்தது. இந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கு வெவ்வேறு விதங்களில் காவற்கோபுரம் வெளியிடப்பட்டது. உதாரணத்துக்கு, கொஞ்சக் காலம்வரை ஒரே காவற்கோபுர இதழில் சீன மொழியும் இருந்தது, அமிஸ் மொழியும் இருந்தது. யாருக்காவது சந்தேகம் வந்தால் நாங்கள் சீன மொழியைக் கற்றுக்கொடுப்பது போல்தான் தெரிந்தது. அன்றுமுதல் அமிஸ் மொழியில் ஏராளமான பிரசுரங்களை அமைப்பு வெளியிட்டு வருகிறது. பைபிள் சத்தியங்களை நன்றாகப் புரிந்துகொள்ள அமிஸ் இன மக்களுக்கு இது ரொம்ப உதவியாக இருக்கிறது.—அப். 10:34, 35.
அசுத்தமான பழக்கங்களை விட்டு வெளியே வந்தார்கள்
அமிஸ் இன சகோதரர்கள், நிறைய வருஷங்களாக கடவுளுடைய நெறிமுறைகளின்படி நடக்கவில்லை. பைபிள் நியமங்கள் அவர்களுக்கு நன்றாகப் புரியாததால், சிலர்
ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்தார்கள். போதை தலைக்கேறும் அளவுக்கு குடிக்கிற பழக்கம் அவர்களுக்கு இருந்தது. புகையிலையும் வெற்றிலை பாக்கும் போடுகிற பழக்கமும் இருந்தது. இதைப் பற்றியெல்லாம் யெகோவா என்ன நினைக்கிறார் என்பதை சகோதரர்களுக்குப் புரியவைப்பதற்காக ஹார்வே நிறைய சபைகளுக்குப் போனார். அப்படி ஒரு தடவை நாங்கள் போய்க்கொண்டிருந்தபோதுதான் ஆரம்பத்தில் நான் சொன்ன சம்பவம் நடந்தது.மனத்தாழ்மையுள்ள சகோதரர்கள், மாற்றங்கள் செய்யத் தயாராக இருந்தார்கள். ஆனால், நிறைய பேர் அதற்குத் தயாராக இருக்கவில்லை. அதனால், 2450-க்கும் அதிகமாக இருந்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை, 20 வருஷங்களில் கிட்டத்தட்ட 900-மாக குறைந்தது. இதைப் பார்த்து நாங்கள் ரொம்பவே சோர்ந்துபோனோம். ஆனால், அசுத்தமான பழக்கங்கள் இருந்தால் யெகோவாவின் ஆசீர்வாதம் இருக்காது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். (2 கொ. 7:1) காலங்கள் போகப் போக, எல்லா அசுத்தமான பழக்கத்தையும் சகோதரர்கள் விட்டுவிட்டார்கள். யெகோவாவின் ஆசீர்வாதத்தால், தைவானில் இன்று 11,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள்.
அமிஸ் மொழி சபைகளில் இருந்த சகோதர சகோதரிகள், 1980-க்குப் பிறகு நல்ல முன்னேற்றம் செய்ய ஆரம்பித்தார்கள். அதனால், சீன மொழி சபைகளுக்கு ஹார்வே அதிக கவனம் கொடுக்க ஆரம்பித்தார். சத்தியத்தில் தனியாக இருந்த சகோதரிகளுடைய கணவர்களும் யெகோவாவின் சாட்சிகளாக ஆவதற்கு ஹார்வே நிறைய முயற்சி எடுத்தார். அப்படிப்பட்ட சகோதரிகளில் ஒருவருடைய கணவர் முதன்முதலாக யெகோவாவிடம் ஜெபம் செய்தது தனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்ததாக ஒரு தடவை ஹார்வே என்னிடம் சொன்னார். நிறைய பேர் யெகோவாவோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்கு என்னாலும் உதவ முடிந்தது. நான் பைபிள் படிப்பு எடுத்த ஒருவருடைய மகனும் மகளும் என்னோடு சேர்ந்து தைவான் கிளை அலுவலகத்தில் சேவை செய்தார்கள். அதை நினைத்து நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
பெரிய இழப்பு
நாங்கள் கிட்டத்தட்ட 59 வருஷங்கள் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்தோம். பிறகு, புற்றுநோயால் ஜனவரி 1, 2010-ல் ஹார்வே இறந்துவிட்டார். அவர் இல்லாமல் இப்போது நான் தனிமரமாக இருக்கிறேன். அவர் கிட்டத்தட்ட 60 வருஷங்கள் முழுநேர சேவை செய்தார். அவர் இல்லாதது இன்றும் எனக்கு வேதனையாகத்தான் இருக்கிறது. ஆனால், இரண்டு நாடுகளில் சேவை செய்வதற்கு அவருக்குப் பக்கபலமாக இருந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன். கஷ்டமான இரண்டு ஆசிய மொழிகளில் பேசுவதற்கு நாங்கள் கற்றுக்கொண்டோம். அந்த இரண்டு மொழிகளில் எழுதுவதற்கும் ஹார்வே கற்றுக்கொண்டார்.
எனக்கு வயதாகிக்கொண்டே வந்ததால், நான் ஆஸ்திரேலியாவுக்கே திரும்பிப் போவதுதான் நல்லது என்று ஆளும் குழு கொஞ்ச வருஷங்களுக்குப் பிறகு முடிவெடுத்தார்கள். ஆரம்பத்தில், தைவானை விட்டுப்போக எனக்கு மனசே இல்லை. ஆனால், யெகோவாவின் அமைப்பு செய்யச் சொல்கிற எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று ஹார்வே எனக்குக் கற்றுக்கொடுத்திருந்தார். அதனால், ஆஸ்திரேலியாவுக்குப் போனேன். அங்கே போன பிறகுதான் அது ஒரு நல்ல முடிவு என்று எனக்குப் புரிந்தது.
இன்று ஆஸ்திரலேசியா கிளை அலுவலகத்தில் நான் சேவை செய்கிறேன். வார இறுதி நாட்களில் உள்ளூர் சபையோடு சேர்ந்து ஊழியத்துக்குப் போகிறேன். எனக்கு ஜப்பான் மொழியும் சீன மொழியும் தெரிந்திருப்பதால், அந்த மொழியைப் பேசுபவர்கள் பெத்தேலுக்கு வரும்போது, சந்தோஷமாக அவர்களுக்கு பெத்தேலைச் சுற்றிக்காட்டுகிறேன். ஹார்வே உயிரோடு எழுந்து வரும் அந்த நாளுக்காக நான் ஆர்வமாகக் காத்துக்கொண்டிருக்கிறேன். அவர் யெகோவாவின் ஞாபகத்தில் இருக்கிறார். அவர் எப்போதுமே யெகோவா செய்யச் சொன்ன எல்லாவற்றையும் செய்திருக்கிறார். —யோவா. 5:28, 29.
^ பாரா. 14 இன்று சீன மொழிதான் தைவானுடைய அதிகாரப்பூர்வமான மொழி. ஆனால், நிறைய வருஷங்களாக ஜப்பான் மொழிதான் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தது. அதனால், இன்றும் தைவானில் இருக்கிற நிறைய இனங்களைச் சேர்ந்தவர்கள், ஜப்பான் மொழியையும் பேசுகிறார்கள்.