Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 7

தலைமை ஸ்தானம்​—⁠சபையில்

தலைமை ஸ்தானம்​—⁠சபையில்

‘கிறிஸ்து சபைக்குத் தலையாக இருக்கிறார். தன்னுடைய உடலாகிய சபையின் மீட்பராக இருக்கிறார்.’—எபே. 5:23.

பாட்டு 86 விசுவாசமிக்க பெண்கள், கிறிஸ்தவ சகோதரிகள்

இந்தக் கட்டுரையில்... *

1. யெகோவாவின் குடும்பம் ஒற்றுமையாக இருப்பதற்கு ஒரு காரணம் என்ன?

யெகோவாவின் குடும்பத்தில் சமாதானத்துக்கும் ஒற்றுமைக்கும் பஞ்சமே இல்லை! அதற்கு ஒரு காரணம், யெகோவா ஏற்படுத்தியிருக்கிற தலைமை ஸ்தானம் என்ற ஏற்பாட்டை நாம் மதிப்பதுதான்! சொல்லப்போனால், இதை எந்தளவுக்கு நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறோமோ அந்தளவுக்கு நம்முடைய ஒற்றுமை அதிகமாகும். இப்படியொரு குடும்பத்தில் இருப்பதை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறோம்!

2. எந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்?

2 சபையில் இருக்கிற தலைமை ஸ்தானத்தைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் பார்ப்போம்: சபையில் சகோதரிகளுக்கு என்ன பங்கு இருக்கிறது? ஒவ்வொரு சகோதரிக்கும் ஒவ்வொரு சகோதரர் தலையாக இருக்கிறாரா? மனைவி பிள்ளைகள்மீது குடும்பத் தலைவர்களுக்கு இருக்கிற அதிகாரத்துக்கும் சபையின் மீது மூப்பர்களுக்கு இருக்கிற அதிகாரத்துக்கும் வித்தியாசம் இருக்கிறதா? முதலில், சகோதரிகளை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைக் கவனிக்கலாம்.

சகோதரிகளை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்?

3. சகோதரிகள்மேல் இருக்கும் மதிப்பு மரியாதையை நாம் எப்படி இன்னும் அதிகமாக வளர்த்துக்கொள்ளலாம்?

3 குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதற்காகவும் ஊழியம் செய்வதற்காகவும் சபையில் இருப்பவர்களுக்கு உதவுவதற்காகவும் சகோதரிகள் கடினமாக உழைக்கிறார்கள். இப்படிப்பட்ட சகோதரிகளை நாம் உயர்வாக மதிக்கிறோம். யெகோவாவும் இயேசுவும் அவர்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது அவர்கள்மீது நாம் வைத்திருக்கும் மதிப்பு இன்னும் அதிகமாகும். சகோதரிகளை அப்போஸ்தலன் பவுல் எப்படி நடத்தினார் என்பதைத் தெரிந்துகொள்வதும் உதவியாக இருக்கும்.

4. ஆண்களையும் பெண்களையும் யெகோவா ஒரே மாதிரிதான் பார்க்கிறார் என்பதை பைபிள் எப்படிக் காட்டுகிறது?

4 ஆண்களையும் பெண்களையும் யெகோவா ஒரே மாதிரிதான் பார்க்கிறார். உதாரணத்துக்கு, முதல் நூற்றாண்டில், ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி யெகோவா தன்னுடைய சக்தியைக் கொடுத்தார். அதனால், வெவ்வேறு மொழிகளில் பேசுவது உட்பட நிறைய அற்புதங்களை அவர்களால் செய்ய முடிந்தது. (அப். 2:1-4, 15-18) கிறிஸ்துவோடு சேர்ந்து ஆட்சி செய்வதற்குப் பெண்களையும் யெகோவா தேர்ந்தெடுக்கிறார். (கலா. 3:26-29) பூமியில் முடிவில்லாத வாழ்க்கை வாழும் வாய்ப்பு பெண்களுக்கும் கிடைக்கப்போகிறது. (வெளி. 7:9, 10, 13-15) பிரசங்கித்து கற்பிக்கிற வேலையை ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் யெகோவா கொடுத்திருக்கிறார். (மத். 28:19, 20) பிரிஸ்கில்லாள் என்ற பெண்ணைப் பற்றி அப்போஸ்தலர் புத்தகம் சொல்கிறது. மெத்தப் படித்த அப்பொல்லோ என்பவருக்கு வேதவசனங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள, தன்னுடைய கணவர் ஆக்கில்லாவோடு சேர்ந்து இவரும் உதவி செய்தார்.—அப். 18:24-26.

5. பெண்களை இயேசு மதித்தார் என்பதை லூக்கா 10:38, 39, 42 எப்படிக் காட்டுகிறது?

5 பெண்களை மதிப்பு மரியாதையோடு இயேசு நடத்தினார். அந்தக் காலத்திலிருந்த பரிசேயர்கள் பெண்களைத் தாழ்வாகப் பார்த்தார்கள். பொது இடங்களில் அவர்களிடம் பேசக்கூட மாட்டார்கள். அப்படி இருக்கும்போது, நிச்சயம் வேதவசனங்களைப் பற்றி அவர்களிடம் பேசியிருக்கவே மாட்டார்கள். ஆனால், இயேசு ஆண்களிடம் மட்டுமல்ல பெண்களிடமும் முக்கியமான சத்தியங்களைப் பற்றி பேசினார். * (லூக்கா 10:38, 39, 42-ஐ வாசியுங்கள்.) ஊழியம் செய்வதற்காக இயேசு நிறைய இடங்களுக்குப் பயணம் செய்தபோது, தன்னோடு வருவதற்குப் பெண்களையும் அனுமதித்தார். (லூக். 8:1-3) அதோடு, தான் உயிர்த்தெழுப்பப்பட்ட விஷயத்தைப் பற்றி சீஷர்களிடம் சொல்லும் பாக்கியத்தையும் பெண்களுக்குக் கொடுத்தார்.—யோவா. 20:16-18.

6. பெண்களை உயர்வாக மதித்ததை பவுல் எப்படிக் காட்டினார்?

6 பெண்களுக்கு மதிப்பு கொடுக்கும்படி தீமோத்தேயுவிடம் பவுல் சொன்னார். “வயதான பெண்களை அம்மாக்கள்” போலவும் “இளம் பெண்களை . . . தங்கைகள்” போலவும் நடத்தும்படி அவரிடம் பவுல் சொன்னார். (1 தீ. 5:1, 2) முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆவதற்கு தீமோத்தேயுவுக்கு பவுல் நிறைய உதவி செய்திருந்தாலும், முதன்முதலில் அவருக்கு “பரிசுத்த எழுத்துக்களை” கற்றுக்கொடுத்தது அவருடைய பாட்டியும் அம்மாவும்தான் என்று பவுல் சொன்னார். (2 தீ. 1:5; 3:14, 15) ரோமர்களுக்கு கடிதம் எழுதியபோது, சகோதரிகளுடைய பெயர்களைக் குறிப்பிட்டு வாழ்த்து சொன்னார். சகோதரிகள் செய்த ஊழியத்தைக் கவனித்ததோடு மட்டுமல்லாமல், அதற்காக அவர்களை மனதாரப் பாராட்டினார்.—ரோ. 16:1-4, 6, 12; பிலி. 4:3.

7. எந்தக் கேள்விகளுக்கு இப்போது பதில்களைப் பார்ப்போம்?

7 இதுவரை பார்த்தபடி, சகோதரர்களைவிட சகோதரிகள் தாழ்வானவர்கள் என்று பைபிளில் எங்கேயும் சொல்லப்படவில்லை. அன்பான, தாராள குணமுள்ள சகோதரிகள் சபைக்கு நிஜமாகவே ஒரு சொத்து! சபை சமாதானமாகவும் சந்தோஷமாகவும் இருப்பதற்கு அவர்கள் எடுக்கும் முயற்சிகளை மூப்பர்கள் உயர்வாக மதிக்கிறார்கள். ஆனால், இப்போது நம் மனதுக்குள் சில கேள்விகள் இருக்கலாம். சிலசமயங்களில் சகோதரிகள் முக்காடு போட வேண்டுமென்று யெகோவா ஏன் எதிர்பார்க்கிறார்? சகோதரர்கள் மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் நியமிக்கப்படுவதால், ஒவ்வொரு சகோதரிக்கும் சபையில் இருக்கிற ஒவ்வொரு சகோதரர் தலையாக இருக்கிறாரா?

ஒவ்வொரு சகோதரிக்கும் ஒவ்வொரு சகோதரர் தலையாக இருக்கிறாரா?

8. ஒவ்வொரு சகோதரிக்கும் ஒவ்வொரு சகோதரர் தலையாக இருப்பதாக எபேசியர் 5:23 சொல்கிறதா? விளக்குங்கள்.

8 இல்லை! சபை என்ற ஏற்பாட்டின் கீழ் எல்லா சகோதரிகளுக்கும் கிறிஸ்துதான் தலை! (எபேசியர் 5:23-ஐ வாசியுங்கள்.) சகோதரிகள்மீதும் சகோதரர்கள்மீதும் மூப்பர்களுக்கு ஓரளவுதான் அதிகாரம் இருக்கிறது. (1 தெ. 5:12; எபி. 13:17) குடும்பம் என்ற ஏற்பாடு வரும்போது, கணவர்கள்தான் மனைவிகளுக்குத் தலை. ஞானஸ்நானம் எடுத்த ஒரு மகன், தன்னுடைய அம்மாவுக்குத் தலையாக இருக்க முடியாது. (எபே. 6:1, 2) ஒருவேளை, கல்யாணமாகாத ஒரு சகோதரி அப்பா அம்மாவை விட்டு தனியாக வாழ்ந்து வந்தால் அவர் யாருடைய தலைமை ஸ்தானத்தின் கீழ் வருவார்? அப்பா அம்மாவையும் சபை மூப்பர்களையும் அவர்கள் மதிக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், தலைமை ஸ்தானம் என்று வரும்போது சபையில் இருக்கிற சகோதரர்களைப் போலவே இவர்களும் கிறிஸ்துவுக்குக் கீழ்தான் இருக்கிறார்கள்.

தனியாக வாழ்கிறவர்கள், இயேசுவின் தலைமை ஸ்தானத்தின் கீழ் வருகிறார்கள் (பாரா 8)

9. சிலசமயங்களில் சகோதரிகள் ஏன் முக்காடு போட வேண்டும்?

9 சபை சீராக செயல்பட வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். அதனால், கிறிஸ்துவை ஆண்களுக்குத் தலையாக நியமித்திருக்கிறார். சபையில் முன்னின்று வழிநடத்தும் பொறுப்பைச் சகோதரர்களுக்கு கொடுத்திருக்கிறார். இந்தப் பொறுப்பைச் சகோதரிகளுக்கு அவர் கொடுக்கவில்லை. (1 தீ. 2:12) அதனால், சகோதரர்களுடைய நியமிப்புகளைச் சகோதரிகள் செய்ய வேண்டிய சூழ்நிலை வரும்போது அவர்கள் முக்காடு போட வேண்டுமென்று யெகோவா சொல்லியிருக்கிறார். * (1 கொ. 11:4-7) அப்படியென்றால், யெகோவா அவர்களைத் தாழ்வாக நினைக்கிறாரா? இல்லை! தலைமை ஸ்தானம் என்ற ஏற்பாட்டுக்கு அவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, இப்போது இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்க்கலாம்: குடும்பத் தலைவர்களுக்கும் மூப்பர்களுக்கும் எந்தளவு அதிகாரம் இருக்கிறது?

குடும்பத் தலைவர்களுக்கும் மூப்பர்களுக்கும் இருக்கிற அதிகாரம்

10. சபையில் சட்டங்களைப் போட வேண்டுமென்று சில மூப்பர்கள் ஏன் நினைக்கலாம்?

10 மூப்பர்கள் கிறிஸ்துவை நேசிக்கிறார்கள். யெகோவாவும் இயேசுவும் தங்களிடம் ஒப்படைத்திருக்கிற ‘ஆடுகளையும்’ நேசிக்கிறார்கள். (யோவா. 21:15-17) அதனால், ஒரு அப்பா ஸ்தானத்திலிருந்து சபையில் இருக்கிற எல்லாரையும் நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்று ஒரு மூப்பர் நினைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் நன்றாக இருப்பதற்காகச் சில சட்டங்களை போடும் உரிமை குடும்பத் தலைவர்களுக்கு இருப்பதுபோல், கடவுளுடைய ஆடுகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக சில சட்டங்களை போடும் உரிமை தங்களுக்கு இருப்பதாக சில மூப்பர்கள் நினைக்கலாம். அதோடு, சகோதர சகோதரிகள் சிலர் மூப்பர்களைக் குடும்பத் தலைவர்களைப் போல் நினைத்துக்கொண்டு தங்களுக்காக முடிவுகளை எடுக்கச் சொல்லி அவர்களிடம் கேட்கலாம். அப்படியென்றால், குடும்பத் தலைவர்களுக்கு இருக்கிற அதே அதிகாரம் மூப்பர்களுக்கும் இருக்கிறதா?

மூப்பர்கள், யெகோவாவிடம் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள சபையில் இருப்பவர்களுக்கு உதவுகிறார்கள். அவர்கள்மீது அன்பு வைத்திருக்கிறார்கள். சபையை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பை யெகோவா மூப்பர்களுக்குக் கொடுத்திருக்கிறார் (பாராக்கள் 11-12)

11. குடும்பத் தலைவர்களுக்கும் மூப்பர்களுக்கும் என்னென்ன ஒற்றுமைகள் இருக்கின்றன?

11 குடும்பத் தலைவர்களுக்கும் மூப்பர்களுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (1 தீ. 3:4, 5) உதாரணத்துக்கு, குடும்பத்தில் இருப்பவர்கள் குடும்பத் தலைவருக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். (கொலோ. 3:20) அதேமாதிரி, சபையில் இருப்பவர்கள் மூப்பர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். குடும்பத்தில் இருப்பவர்கள் தன்னோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள குடும்பத் தலைவர்கள் உதவ வேண்டுமென்று யெகோவா எதிர்பார்ப்பதுபோல், சபையில் இருப்பவர்கள் தன்னோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள மூப்பர்கள் உதவ வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். குடும்பத் தலைவர்களும் சரி, மூப்பர்களும் சரி, தங்கள் கவனிப்பின் கீழ் இருப்பவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது, நல்ல குடும்பத் தலைவர்கள் ஓடோடிப் போய் அவர்களுக்கு உதவி செய்வதுபோல், சகோதர சகோதரிகள் கஷ்டப்படும்போது மூப்பர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். (யாக். 2:15-17) தங்களுடைய கவனிப்பின் கீழ் இருப்பவர்கள் யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய மூப்பர்களும் குடும்பத் தலைவர்களும் உதவ வேண்டும். அதேசமயத்தில், பைபிளில் “எழுதப்பட்ட விஷயங்களுக்கு மிஞ்சி” போய்விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.—1 கொ. 4:6.

குடும்பத் தலைவர்கள், தங்களுடைய குடும்பத்தை வழிநடத்த வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். அன்பான குடும்பத் தலைவர்கள் முடிவுகளை எடுப்பதற்கு முன்பு தங்கள் மனைவியிடம் கலந்துபேசுவார்கள் (பாரா 13)

12-13. நீதிமொழிகள் 6:20 சொல்வதுபோல், குடும்பத் தலைவர்களுக்கும் மூப்பர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

12 இப்போது, குடும்பத் தலைவர்களுக்கும் மூப்பர்களுக்கும் இருக்கிற சில வித்தியாசங்களைப் பார்க்கலாம். உதாரணத்துக்கு, குடும்பத்தில் இருப்பவர்கள் யாராவது தவறு செய்துவிட்டு மனம் திருந்தாமல் இருந்தால் அவர்களைச் சபை நீக்கம் செய்கிற அதிகாரத்தை குடும்பத் தலைவர்களுக்கு யெகோவா கொடுக்கவில்லை. மூப்பர்களுக்குத்தான் கொடுத்திருக்கிறார்.—1 கொ. 5:11-13.

13 ஆனால், மூப்பர்களுக்குக் கொடுக்காத சில அதிகாரங்களைக் குடும்பத் தலைவர்களுக்கு யெகோவா கொடுத்திருக்கிறார். உதாரணத்துக்கு, குடும்பத்தில் சில சட்டங்களைப் போடும் அதிகாரம் குடும்பத் தலைவர்களுக்குத்தான் இருக்கிறது. (நீதிமொழிகள் 6:20-ஐ வாசியுங்கள்.) பிள்ளைகள் எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்துசேர வேண்டுமென்று முடிவெடுக்கும் உரிமை குடும்பத் தலைவர்களுக்கு இருக்கிறது. அதன்படி பிள்ளைகள் செய்யாதபோது அவர்களைக் கண்டிக்கிற உரிமையும் அவர்களுக்கு இருக்கிறது. (எபே. 6:1) அன்பான ஒரு குடும்பத் தலைவர், தன்னுடைய மனைவியிடம் கேட்காமல் தன்னுடைய இஷ்டப்படி சட்டங்களைப் போட மாட்டார். ஏனென்றால், கணவனும் மனைவியும் “ஒரே உடலாக” இருக்கிறார்கள். *மத். 19:6.

சபையின் தலைவரான கிறிஸ்துவுக்கு மதிப்பு காட்டுங்கள்

இயேசு, யெகோவாவுடைய தலைமையின் கீழ் சபைகளுக்கு வழிநடத்துதல் கொடுக்கிறார் (பாரா 14)

14. (அ) இயேசுவை சபையின் தலைவராக யெகோவா நியமித்தது பொருத்தமானது என்பதை மாற்கு 10:45 எப்படிக் காட்டுகிறது? (ஆ) ஆளும் குழுவுக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கின்றன? (“ ஆளும் குழுவின் பொறுப்புகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

14 மீட்புவிலையைக் கொடுத்து சபையில் இருக்கிற ஒவ்வொருவரையும் யெகோவா விலைக்கு வாங்கியிருக்கிறார். (மாற்கு 10:45-ஐ வாசியுங்கள்; அப். 20:28; 1 கொ. 15:21, 22) இயேசு தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுத்ததால் அவரை சபையின் தலைவராக யெகோவா நியமித்திருப்பது பொருத்தமாக இருக்கிறது. இயேசு தலைவராக இருப்பதால், ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் குடும்பங்களுக்கும் முழு சபைக்கும் சட்டங்களைப் போடும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது. (கலா. 6:2) ஆனால், வெறுமனே சட்டங்களை மட்டும் அவர் போடுவதில்லை. அவர் நம்மை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார். நம்மை நேசிக்கிறார்.—எபே. 5:29.

15-16. சகோதரி மார்லேவும் சகோதரர் பெஞ்சமினும் சொன்னதிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறீர்கள்?

15 கிறிஸ்துவால் நியமிக்கப்பட்ட ஆண்களுக்கு சகோதரிகள் கட்டுப்பட்டு நடப்பதன் மூலம் கிறிஸ்துமீது வைத்திருக்கும் மரியாதையை காட்டுகிறார்கள். அமெரிக்காவில் வாழ்கிற மார்லே என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “ஒரு மனைவியாவும் சபையில ஒரு சகோதரியாவும் எனக்கு இருக்கிற பொறுப்புகள உயர்வா மதிக்கிறேன். என்னோட கணவருக்கும் மூப்பர்களுக்கும் யெகோவா கொடுத்திருக்கிற அதிகாரத்த மதிக்குறதுக்கு தொடர்ந்து முயற்சி செஞ்சிட்டே இருக்குறேன். அவங்க என்னை மதிக்கிறதுனாலயும் நான் செய்ற ஒவ்வொண்ணையும் மனசார பாராட்டுறதுனாலயும் கட்டுப்பட்டு நடக்குறது எனக்கு சுலபமா இருக்கு.” மார்லேவைப் போல்தான் நிறைய சகோதரிகள் நினைக்கிறார்கள்.

16 சகோதரிகளை மதிப்பு மரியாதையோடு நடத்துவதன் மூலம் தலைமை ஸ்தானத்தை சரியாகப் புரிந்துவைத்திருப்பதை சகோதரர்கள் காட்டுகிறார்கள். “சகோதரிகள் பதில் சொல்றப்போ, அதிலிருந்து நிறைய கத்துக்குறேன். எப்படி நல்லா ஆராய்ச்சி செஞ்சு படிக்கலாங்குறத பத்தியும் எப்படி நல்லா ஊழியம் பண்ணலாங்குறத பத்தியும் அவங்ககிட்ட இருந்து தெரிஞ்சிக்கிறேன். அவங்க செய்ற வேலை உண்மையிலேயே பிரயோஜனமான வேலை” என்று இங்கிலாந்தில் வாழ்கிற பெஞ்சமின் சொல்கிறார்.

17. தலைமை ஸ்தானம் என்ற ஏற்பாட்டை ஏன் மதிக்க வேண்டும்?

17 ஆண்கள், பெண்கள், குடும்பத் தலைவர்கள், மூப்பர்கள் என சபையில் இருக்கிற எல்லாரும் தலைமை ஸ்தானம் என்ற ஏற்பாட்டைப் புரிந்துகொண்டு, அதற்கு மதிப்பு கொடுக்கும்போது சபையில் சமாதானத்துக்குக் குறைவே இருக்காது. எல்லாவற்றுக்கும் மேலாக, நம்முடைய பரலோகத் தந்தை யெகோவாவுக்கு நாம் புகழ் சேர்ப்போம்.—சங். 150:6.

பாட்டு 125 தேவ அமைப்புக்குப் பற்றுமாறாமல் கீழ்ப்படிவோம்

^ பாரா. 5 சகோதரிகளுக்கு சபையில் என்ன பங்கு இருக்கிறது? ஒவ்வொரு சகோதரிக்கும் ஒவ்வொரு சகோதரர் தலையாக இருக்கிறாரா? மூப்பர்களுக்கும் குடும்பத் தலைவர்களுக்கும் ஒரே மாதிரியான அதிகாரம் இருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு பைபிள் சொல்லும் பதில்களைப் பார்க்கலாம்.

^ பாரா. 5 செப்டம்பர் 2020, காவற்கோபுரத்தில் இருக்கிற “கிறிஸ்தவப் பெண்களுக்குப் பக்கபலமாக இருங்கள்” என்ற கட்டுரையில் பாரா 6-ஐ பாருங்கள்.

^ பாரா. 13 குடும்பமாக எந்தச் சபைக்குப் போக வேண்டுமென்று முடிவு எடுக்கிற அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, ஆகஸ்ட் 2020 காவற்கோபுரத்தில் “சபையில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் மதிப்பு காட்டுங்கள்!” என்ற கட்டுரையில், பாராக்கள் 17-19-ஐ பாருங்கள்.

^ பாரா. 56 ஒருவேளை, கணவரோ ஞானஸ்நானம் எடுத்த சகோதரரோ அந்தச் சகோதரிக்குப் பக்கத்தில் இருக்கலாம். அதாவது, கண்ணுக்கு எட்டும் தூரத்தில் அல்லது சகோதரி பேசுவது காதில் விழும் தூரத்தில் இருக்கலாம்.

^ பாரா. 65 ஆளும் குழுவின் பொறுப்புகளைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள, ஜூலை 15, 2013 காவற்கோபுரம் பக்கங்கள் 20-25-ல் இருக்கிற கட்டுரையைப் பாருங்கள்.