Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

“மற்றவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்!”

“மற்றவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்!”

நடுராத்திரி... கும்மிருட்டு... அல்ஜீரியாவின் மலைப்பகுதி... பயங்கர போர் நடந்துகொண்டிருந்த சமயம். நான் பிரெஞ்சு படையில் இருந்தேன். மணல் மூட்டைகளுக்குப் பின்னாடி கையில் மெஷின் கன்னோடு தனியாகக் காவல் காத்துக்கொண்டிருந்தேன். திடீரென்று யாரோ நடந்து வருகிற சத்தம் கேட்டது. நான் அப்படியே பயந்து நடுங்கிவிட்டேன். எனக்கு அப்போது வெறும் இருபது வயதுதான். அந்த வயதில் நான் சாக வேண்டுமென்றும் நினைக்கவில்லை, மற்றவர்களைச் சாகடிக்க வேண்டுமென்றும் நினைக்கவில்லை. அதனால், “கடவுளே! என்னை காப்பாத்துங்க!” என்று சத்தமாகச் சொன்னேன்.

அந்தத் திகிலான சம்பவத்துக்கு அப்புறம் என் வாழ்க்கையே மாறிவிட்டது. அப்போதுதான், நான் கடவுளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். அன்றைக்கு ராத்திரி என்ன நடந்ததென்று சொல்வதற்கு முன்னாடி கடவுளைப் பற்றி நான் ஏன் யோசிக்க ஆரம்பித்தேன் என்பதைப் பற்றிச் சொல்கிறேன். சின்ன வயதில் நடந்த சம்பவங்கள்தான் என்னை அப்படி யோசிக்க வைத்தது.

என் அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள்

பிரான்சின் வடக்குப் பகுதியில் கைனான் என்ற ஓர் ஊர் இருக்கிறது. 1937-ல் நான் அங்கே பிறந்தேன். எங்களுடைய ஊரில் இருந்த நிலக்கரி சுரங்கத்தில் அப்பா வேலை செய்துகொண்டிருந்தார். கடினமாக உழைப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். அதோடு, எல்லாருக்கும் நீதிநியாயம் கிடைக்கவேண்டுமென்று அவர் ஆசைப்பட்டார். அந்தக் குணத்தையும் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். சுரங்கத் தொழிலாளிகளின் பரிதாபமான நிலையைப் பார்த்து அவர்களுக்காக அப்பா குரல் கொடுத்தார். அவர்களுடைய வாழ்க்கையை முன்னுக்குக் கொண்டுவர வேண்டுமென்பதற்காக சில அமைப்புகளோடு சேர்ந்து அவர்களுடைய உரிமைகளுக்காகப் போராடினார். உள்ளூர் பாதிரிகளின் அட்டூழியத்தைப் பார்த்தும் அவர் கொதித்துப்போனார். அவர்கள் சொகுசாக வாழ்ந்தார்கள். ஆனாலும், சுரங்கத் தொழிலாளிகளைச் சுரண்டிப் பிழைத்தார்கள். சாப்பாடும் பணமும் கேட்டு அவர்களைக் கஷ்டப்படுத்தினார்கள். இதையெல்லாம் பார்த்து, அப்பாவுக்கு மதம் என்றாலே வெறுப்பாகிவிட்டது. அதனால், மதத்தைப் பற்றி அவர் எனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை. எங்களுடைய வீட்டில் கடவுளைப் பற்றி நாங்கள் பேசிக்கொள்ளவே மாட்டோம்.

வளர வளர நானும் அநீதியை வெறுக்க ஆரம்பித்தேன். வெளிநாட்டிலிருந்து வந்து பிரான்சில் குடியேறியவர்களை மக்கள் தாழ்வாகப் பார்த்தார்கள். அதைப் பார்த்து எனக்குக் கோபம் கோபமாக வந்தது. நான் அப்படிக் குடியேறியவர்களுடைய பிள்ளைகளோடு சேர்ந்து கால்பந்து விளையாடுவேன். அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னுடைய அம்மாவும் பிரான்சைச் சேர்ந்தவர்கள் இல்லை, போலந்தைச் சேர்ந்தவர்கள். அதனால், எந்த இன வேறுபாடும் இல்லாமல், எல்லாரும் சரிசமமாக வாழ்கிற அந்தக் காலத்துக்காக நான் ஏங்கினேன்.

வாழ்க்கையைப் பற்றித் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன்

நான் ராணுவத்தில் இருந்தபோது...

1957-ல் நான் ராணுவத்தில் சேர்ந்தேன். அந்தச் சமயத்தில்தான் ஆரம்பத்தில் சொன்ன அந்தச் சம்பவம் நடந்தது. “கடவுளே! என்னை காப்பாத்துங்க!” என்று சத்தமாகச் சொன்னதுக்கு அப்புறம் பார்த்தால் என் எதிரில் எதிரி நாட்டு ராணுவ வீரர்கள் இல்லை, ஒரு காட்டுக் கழுதை நின்றுகொண்டிருந்தது! அப்போதுதான், எனக்கு ‘அப்பாடா!’ என்று இருந்தது. அந்தச் சம்பவமும் சரி, போரும் சரி, வாழ்க்கையைப் பற்றித் தீவிரமாக யோசிக்க வைத்தது. “நாம எதுக்காக வாழறோம்? கடவுளுக்கு நம்ம மேல அக்கற இருக்குதா? எல்லாரும் சமாதானமா வாழ்ற காலம் என்னைக்காவது வருமா?” என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தேன்.

கொஞ்ச நாளைக்கு அப்புறம் அப்பா அம்மாவைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தேன். அப்போது, ஒரு யெகோவாவின் சாட்சியைச் சந்தித்தேன். அவர் எனக்கு ஒரு பைபிள் கொடுத்தார். நான் அல்ஜீரியாவுக்குத் திரும்பிப் போனவுடனே அதைப் படிக்க ஆரம்பித்தேன். ஒரு வசனம் என்னை ரொம்ப யோசிக்க வைத்தது. வெளிப்படுத்துதல் 21:3, 4-தான் அது. “கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கும், . . . அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது” என்று அந்த வசனம் சொல்கிறது. அதைப் படித்தவுடனே எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. ‘இதெல்லாம் உண்மையிலேயே நடக்குமா?’ என்று யோசித்தேன். ஏனென்றால், அந்தச் சமயத்தில் எனக்குக் கடவுளைப் பற்றியும் சரி, பைபிளைப் பற்றியும் சரி, எதுவுமே தெரியாது.

1959-ல் நான் ராணுவ சேவையை முடித்து விட்டு திரும்பி வந்தேன். அந்தச் சமயத்தில் பிரான்ஸுவா என்ற ஒரு யெகோவாவின் சாட்சியைச் சந்தித்தேன். பைபிளிலிருந்து நிறைய விஷயங்களை அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். கடவுளுக்கு ஒரு பெயர் இருப்பதாகவும், யெகோவா என்பது தான் அந்தப் பெயர் என்பதையும் சொல்லிக் கொடுத்தார். (சங். 83:18) யெகோவா இந்தப் பூமியில் நீதி நியாயத்தைக் கொண்டுவருவார் என்றும் இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்றுவார் என்றும் அந்தச் சமயத்தில் வெளிப்படுத்துதல் 21:3, 4-ல் சொல்லியிருக்கிறது எல்லாம் நடக்கும் என்று அவர் எனக்குச் சொன்னார்.

பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் எல்லாம் எனக்கு நியாயமாகப் பட்டது. அது எல்லாமே என் மனதை ஆழமாகத் தொட்டது. ஆனால், பைபிளில் இல்லாத விஷயங்களைப் பாதிரிகள் சொல்லிக் கொடுப்பதை நினைத்து எனக்கு பயங்கர கோபம் வந்தது. உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்போதுதான் என் அப்பா மாதிரியே நானும் யோசிக்கிறேன் என்பது எனக்கு புரிய வந்தது. எனக்கு இன்னும் பொறுமை தேவை என்பதைப் புரிந்துகொண்டேன்.

பிரான்ஸுவாவும் மற்ற யெகோவாவின் சாட்சிகளும் நான் பொறுமையாக இருப்பதற்கு உதவி செய்தார்கள். மற்றவர்கள் செய்வது சரியா தப்பா என்று சொல்வது கிறிஸ்தவர்களின் வேலை இல்லை என்பதையும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி நல்ல செய்தியைச் சொல்வதுதான் நம்முடைய வேலை என்பதையும் அவர்கள் அன்பாக எடுத்துச் சொன்னார்கள். இந்த வேலையைச் செய்ய வேண்டும் என்றுதான் இயேசுவும் தன்னுடைய சீஷர்களிடம் சொல்லி இருக்கிறார். (மத். 24:14; லூக். 4:43) மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தாலும்சரி, அவர்களிடம் அன்பாவும் சாதுரியமாகவும் பேசுவதற்கு நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஏனென்றால், ‘எஜமானின் ஊழியன் சண்டைபோடக் கூடாது; அதற்குப் பதிலாக, எல்லாரிடமும் மென்மையாக நடந்துகொள்ள’ வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.—2 தீ. 2:24.

நான் தேவையான மாற்றங்களைச் செய்தேன். 1959-ல் நடந்த வட்டார மாநாட்டில் ஞானஸ்நானம் எடுத்தேன். அங்கே ஆஞ்சல் என்ற ஒரு சகோதரியைச் சந்தித்தேன். அவரை எனக்கு ரொம்ப பிடித்துப்போனது. அவருடைய சபைக்கு அவ்வப்போது போய் அவரைச் சந்தித்து பேசினேன். 1960-ல் நாங்கள் கல்யாணம் பண்ணிக்கொண்டோம். அவள் அருமையான மனைவி, உண்மையிலேயே யெகோவாவிடமிருந்து வந்த அற்புதமான பரிசு.—நீதி. 19:14.

எங்களுடைய கல்யாண நாளில்...

ஞானமும் அனுபவமும் உள்ள சகோதரர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்

இத்தனை வருடங்களாக ஞானமும் அனுபவமும் இருக்கிற சகோதரர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அதில் முக்கியமான பாடத்தைச் சொல்ல வேண்டும் என்றால், கஷ்டமான நியமிப்புகள் கிடைக்கும்போது நாம் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும். நீதிமொழிகள் 15:22 சொல்கிறபடி செய்ய வேண்டும். “ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி நிச்சயம்” என்று இந்த வசனம் சொல்கிறது.

1965-ல் பிரான்சில் வட்டார சேவையில் இருந்தபோது...

இந்த வசனம் சொல்வது எவ்வளவு உண்மை என்பதை 1964-ல் நன்றாகப் புரிந்துகொண்டேன். ஏனென்றால், அந்த வருஷத்தில் என்னை வட்டாரக் கண்காணியாக நியமித்தார்கள். சபைகளுக்குப் போய் சகோதர சகோதரிகளைப் பலப்படுத்துவதுதான் என்னுடைய வேலை. ஆனால், அப்போது எனக்கு வெறும் 27 வயதுதான். அனுபவமும் அவ்வளவாக இல்லை. அதனால், அவ்வப்போது சில தவறுகளைச் செய்தேன். அதிலிருந்து எல்லாம் பாடம் கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்தேன். எல்லாவற்றுக்கும்மேல் திறமையும் அனுபவமும் உள்ள ‘ஆலோசகர்களிடமிருந்து’ நிறைய கற்றுக்கொண்டேன்.

நான் வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்ய ஆரம்பித்த புதிதில் நடந்த ஒரு சம்பவம் என் ஞாபகத்திற்கு வருகிறது. பாரிஸில் இருக்கிற ஒரு சபைக்கு வட்டார சந்திப்புக்காக போயிருந்தேன். அந்த வாரத்தின் கடைசியில் முதிர்ச்சியுள்ள ஒரு சகோதரர் என்னிடம் வந்து, “லூயீ, உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா?” என்று கேட்டார். “கண்டிப்பா” என்று சொன்னேன்.

“லூயீ, பொதுவா யாருக்கு டாக்டர் தேவை?” என்று அவர் கேட்டார்.

“உடம்பு சரி இல்லாதவங்களுக்குத்தான்” என்று நான் சொன்னேன்.

“கரெக்டா சொன்னீங்க. ஆனா, சபை கண்காணி கூடயும் முதிர்ச்சியுள்ள மத்தவங்க கூடயும்தான் நீங்க நிறைய நேரம் செலவு பண்ற மாதிரி தெரியுது. நம்ம சபையில, சோர்ந்துபோனவங்க... புதுசா வர்றவங்க... கூச்சசுபாவம் உள்ளவங்க... நிறைய பேர் இருக்காங்க. அவங்ககூட சேந்து நேரம் செலவு பண்ணினா... அவங்க வீட்டுக்கு சாப்பாட்டுக்கு போனீங்கன்னா... அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க” என்று அவர் சொன்னார்..

அந்தச் சகோதரர் கொடுத்தது உண்மையிலேயே நல்ல அறிவுரை. யெகோவாவின் ஆடுகள்மேல் அவர் வைத்திருக்கிற அன்பைப் பார்த்து நான் நெகிழ்ந்துபோய்விட்டேன். என்னைப் பற்றி நான் பெரிதாக நினைக்காமல் உடனடியாக அவர் சொன்னபடி செய்தேன். இந்த மாதிரி சகோதரர்கள் கிடைத்ததற்கு யெகோவாவுக்கு ரொம்ப நன்றி.

பாரிஸில் இருக்கிற கொலம்பே நகரத்தில் 1969-லிருந்து 1973 வரைக்கும் இரண்டு சர்வதேச மாநாடுகள் நடந்தது. அதில், உணவு இலாகா கண்காணியாக என்னை நியமித்தார்கள். 1973-ல் நடந்த மாநாட்டில் ஐந்து நாளைக்கு கிட்டத்தட்ட 60,000 பேருக்குச் சாப்பாடு தயார் செய்ய வேண்டியிருந்தது. நான் அப்படியே ஆடிப்போய்விட்டேன். ஆனால், திரும்பவும் நீதிமொழிகள் 15:22 எனக்குக் கை கொடுத்தது. நம்முடைய சகோதரர்களில் இறைச்சி விற்பவர்கள், காய்கறி தோட்டம் வைத்திருப்பவர்கள், சமையல்காரர்கள், பொருள்களை வாங்குவதில் அனுபவம் இருக்கிறவர்கள் என்று எல்லாரிடமும் அறிவுரை கேட்டேன். இவர்கள் எல்லாருக்கும் உணவுத் துறையில் அனுபவம் இருந்தது, ஆன்மீக முதிர்ச்சியும் இருந்தது. நாங்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து மலைமாதிரி இருந்த அந்த வேலையை நல்லபடியாக செய்து முடித்தோம்.

1973-ல் என் மனைவியையும், என்னையும் பிரான்சில் இருக்கிற பெத்தேலில் சேவை செய்வதற்குக் கூப்பிட்டார்கள். அங்கே எனக்குக் கிடைத்த முதல் வேலையே கஷ்டமான ஒரு வேலை. ஆப்பிரிக்காவில் இருக்கிற கேமரூன் நாட்டிலிருக்கிற சகோதர சகோதரிகளுக்குப் பிரசுரங்களை அனுப்பி வைப்பதுதான் அந்த வேலை. 1970-லிருந்து 1993 வரைக்கும் அந்த நாட்டில் நம்முடைய வேலையைத் தடை செய்திருந்தார்கள். என்னுடைய நியமிப்பை நினைத்து நான் திகைத்துப்போய்விட்டேன். பிரான்சில் நடந்துகொண்டிருந்த நம்முடைய வேலையை மேற்பார்வை செய்துவந்த ஒரு சகோதரர், அதைப் பார்த்து, “கேமரூன்ல இருக்கற நம்ம சகோதரர்களுக்கு பிரசுரங்க ரொம்பவே தேவை. அவங்கள கவனிச்சிக்கிறது நம்மளோட பொறுப்பு” என்று சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார். அவர் சொன்ன மாதிரியே நாங்கள் செய்தோம்.

கேமரூனிலிருந்து வந்திருந்த சாட்சிகளோடு நைஜீரியாவில் நடந்த ஒரு விசேஷ கூட்டம், 1973

கேமரூனில் இருக்கிற மூப்பர்களைச் சந்திப்பதற்காக அந்த நாட்டின் எல்லையை ஒட்டியிருக்கிற நாடுகளுக்கு நான் அடிக்கடி பயணம் செய்தேன். அந்த மூப்பர்கள் தைரியமானவர்கள், அதே சமயத்தில், விவேகமானவர்கள். எந்தத் தடையும் இல்லாமல், கேமரூனுக்குள்ளே பிரசுரங்களை அனுப்பி வைப்பதற்குத் தேவையான உதவிகளைச் செய்தார்கள். எங்களுடைய முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்தார். கிட்டத்தட்ட 20 வருஷங்களாக, காவற்கோபுரமும் சரி, நம் ராஜ்ய சேவையும் சரி, ஒரு மாதம்கூட தவறாமல் அவர்களுடைய கைக்குப் போய் சேர்ந்தது.

1977-ல் கேமரூனில் இருந்து வந்திருந்த வட்டாரக் கண்காணிகளையும் அவர்களுடைய மனைவிகளையும் ஆஞ்சலும் நானும் நைஜீரியாவில் சந்தித்தபோது...

என்னுடைய அருமையான மனைவியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்

நாங்கள் காதலிக்க ஆரம்பித்த அந்தச் சமயத்திலேயே ஆஞ்சலுக்கு யெகோவாவிடம் நெருக்கமான நட்பு இருந்ததையும், அருமையான குணங்கள் இருந்ததையும் கவனித்தேன். கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அந்தக் குணங்களை இன்னும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. சொல்லப்போனால், எங்களுக்குக் கல்யாணம் ஆன அன்றைக்கே தம்பதியாக யெகோவாவுக்கு நிறைய சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருப்பதைப் பற்றி ஜெபத்தில் என்னைச் சொல்லச் சொன்னாள். அந்த ஜெபத்திற்கு யெகோவா பதில் கொடுத்தார்.

யெகோவாமேல் முழு நம்பிக்கை வைப்பதற்கு ஆஞ்சல் எப்போதுமே எனக்கு உதவியாக இருந்திருக்கிறாள். ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்றால் 1973-ல் எங்களைப் பெத்தேலுக்குக் கூப்பிட்டபோது நான் தயங்கினேன். ஏனென்றால், வட்டார சேவை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஆனால் ஆஞ்சல், ‘நாம யெகோவாவுக்கு தானே அர்ப்பணித்து இருக்கறோம். அப்படின்னா அவருடைய அமைப்பு சொல்ற எல்லாத்தையும் நாம செய்யனும்தானே?’ என்று கேட்டாள். (எபி. 13:17) அதற்கு மறுபேச்சு ஏதாவது சொல்ல முடியுமா? அதனால், நாங்கள் பெத்தேலுக்குப் போனோம். என் மனைவி புத்திசாலியாக நடந்துகொள்வாள், தெளிவாக யோசிப்பாள். எல்லாவற்றையும் யெகோவா பார்க்கிற மாதிரி பார்ப்பாள். இந்தக் குணங்கள் எல்லாம் இவ்வளவு வருஷமாக எங்களுடைய குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதற்கு உதவியது. நல்ல முடிவுகளை எடுப்பதற்கும் உறுதுணையாக இருந்தது.

பிரான்சு பெத்தேலில் இருக்கிற தோட்டத்தில் ஆஞ்சலோடு...

எங்களுக்கு வயதாகிக்கொண்டே போகிறது. இப்போதும் ஆஞ்சல் எனக்குப் பக்கபலமாக இருக்கிறாள். அமைப்பு நடத்துகிற நிறைய பள்ளிகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் நடப்பதால், அந்த மொழியை நாங்கள் இரண்டு பேரும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதனால், அந்த மொழியை நன்றாக கற்றுக்கொள்ள முயற்சி செய்தோம். அதற்காக, ஆங்கில மொழி சபைக்குப் போனோம். அந்தச் சமயத்தில், எங்களுக்கு 70 வயதுக்குமேல் ஆகியிருந்தது. நான் பிரான்சு நாட்டு கிளை அலுவலகக் குழுவில் இருப்பதால் எனக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. அதனால், இன்னொரு மொழியை கற்றுக்கொள்வது சவால்தான். ஆனாலும், நாங்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்துகொண்டோம். இப்போது எங்களுக்கு 80 வயதுக்குமேல் ஆகிறது. கூட்டங்களுக்காக ஆங்கிலத்திலும் தயாரிக்கிறோம், பிரெஞ்சிலும் தயாரிக்கிறோம். அதோடு, சபைக் கூட்டங்களுக்குப் போவதற்கும், சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து ஊழியத்துக்குப் போவதற்கும் எங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுக்கிறோம். ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள நாங்கள் எடுத்த முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்தார்.

2017-ல் எங்களுக்கு ஒரு பெரிய ஆசீர்வாதம் கிடைத்தது. கிளை அலுவலகக் குழு அங்கத்தினர்களுக்கும் அவர்களுடைய மனைவிகளுக்கும் நடக்கிற பள்ளியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அது நியு யார்க், பேட்டர்சனில் இருக்கிற வாட்ச்டவர் கல்வி மையத்தில் நடந்தது.

யெகோவாவின் மக்களில் வயதானவர்களாக இருந்தாலும் சரி, இளைஞர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்குச் சிறந்த கல்வி கிடைக்கிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. (உபா. 4:5-8) ஏனென்றால், யெகோவா மகத்தான போதகர். (ஏசா. 30:20) யெகோவா சொல்வதையும் அனுபவமுள்ள சகோதர சகோதரிகள் சொல்வதையும் சின்ன வயதில் இருக்கிறவர்கள் கேட்டு நடக்கும்போது அவர்கள் முதிர்ச்சியுள்ள ஆட்களாக ஆகிறார்கள். வாழ்க்கையில் அவர்களுக்கு வெற்றியும் கிடைக்கிறது. இதை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். “ஞானமுள்ளவனுக்கு உபதேசம் பண்ணு, அவன் இன்னும் ஞானமாக நடப்பான். நீதிமானுக்குக் கற்றுக்கொடு, அவன் இன்னும் அறிவாளியாக ஆவான்” என்று நீதிமொழிகள் 9:9 சொல்வது எவ்வளவு உண்மை!

60 வருஷத்துக்கு முன்னாடி அல்ஜீரியாவின் மலைப்பகுதியில் அந்தத் திகிலான ராத்திரியில் நடந்த சம்பவத்தை அவ்வப்போது நான் நினைத்துப் பார்ப்பேன். எனக்கு முன்னாடி எவ்வளவு அருமையான ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பது அந்தச் சமயத்தில் எனக்கு தெரியாது. மற்றவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்! எனக்கும் சரி, ஆஞ்சலுக்கும் சரி, யெகோவா அற்புதமான ஒரு வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறார். அதனால், யெகோவாவிடமிருந்தும் அவரை நேசிக்கிற ஞானமும் அனுபவமும் உள்ள சகோதர சகோதரிகளிடமிருந்தும் கற்றுக்கொள்வதை நாங்கள் நிறுத்தவே மாட்டோம்.