Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 24

சாத்தானின் கண்ணிகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள்

சாத்தானின் கண்ணிகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள்

‘பிசாசுடைய கண்ணியிலிருந்து விடுபடுங்கள்.’​—2 தீ. 2:26.

பாட்டு 36 நம் இதயத்தை பாதுகாப்போம்

இந்தக் கட்டுரையில்... *

1. சாத்தானை ஒரு வேட்டைக்காரன் என்று ஏன் சொல்லலாம்?

வேட்டைக்காரனின் முக்கியக் குறிக்கோளே ஒரு பறவையை அல்லது மிருகத்தைப் பிடிப்பது, இல்லையென்றால் கொல்வது. அதற்காக, அவன் விதவிதமான கண்ணிகளைப் பயன்படுத்துகிறான். இதைப் பற்றி பைபிளும் சொல்கிறது. (யோபு 18:8-10) ஒரு மிருகத்தை வேட்டையாடுவதற்கு முன்பு அதைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்துக்கொள்கிறான். அது எங்கே போகிறது? அதற்கு என்ன பிடிக்கும்? எந்தக் கண்ணியை வைத்தால் அதைச் சுலபமாக பிடிக்கலாம்? என்பதைப் பற்றி எல்லாம் பார்த்து வைத்துக்கொள்கிறான். சாத்தானும் அந்த வேட்டைக்காரன் மாதிரிதான். நம்மைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறான். நாம் எங்கே போகிறோம்? எது நமக்குப் பிடிக்கும்? என்றெல்லாம் பார்த்து வைத்துக்கொள்கிறான். பின்பு, நம்மைச் சிக்க வைப்பதற்காக கண்ணியை விரிக்கிறான். ஒருவேளை, அவனுடைய கண்ணியில் நாம் மாட்டிக்கொண்டாலும் அதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதைப் பற்றி பைபிள் சொல்கிறது. அதோடு, எந்தக் கண்ணியிலும் சிக்காமல் இருப்பது எப்படி என்பதைப் பற்றியும் சொல்கிறது.

தலைக்கனம், பேராசை என்ற கண்ணியில் சாத்தான் நிறைய பேரைச் சிக்க வைத்திருக்கிறான் (பாரா 2) *

2. சாத்தான் பயன்படுத்துகிற இரண்டு கண்ணிகள் எவை?

2 சாத்தான் நிறைய தந்திரங்களைப் பயன்படுத்துகிறான். அதில் முக்கியமானது தலைக்கனமும் பேராசையும். * இந்தத் தந்திரங்களைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான வருஷங்களாக அவன் நிறைய பேரைச் சிக்க வைத்திருக்கிறான். ஒரு வேடன் எப்படி இரையைப் போட்டு தந்திரமாகப் பறவையைப் பிடிக்கிறானோ, அதே மாதிரிதான் அவனும் செய்கிறான். (சங். 91:3) ஆனால், அவனுடைய வலையில் சிக்காமல் நம்மால் தப்பித்துக்கொள்ள முடியும். ஏனென்றால், அவன் என்னென்ன இரைகளைப் பயன்படுத்துவான் என்பதைப் பற்றி யெகோவா நமக்குச் சொல்லியிருக்கிறார்.​—2 கொ. 2:11.

சாத்தானுடைய கண்ணிகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவும் அப்படியே சிக்கிக்கொண்டாலும் அதிலிருந்து தப்பிக்கவும் பைபிளில் இருக்கிற சிலருடைய அனுபவங்கள் நமக்கு உதவும் (பாரா 3) *

3. தலைக்கனத்தோடும் பேராசையோடும் நடந்துகொண்டவர்களைப் பற்றி யெகோவா ஏன் பைபிளில் பதிவுசெய்து வைத்திருக்கிறார்?

3 தலைக்கனம், பேராசை என்ற கண்ணிகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதைப் பற்றி நம்மை எச்சரிப்பதற்காக அதில் சிக்கியவர்களைப் பற்றி யெகோவா நமக்குச் சொல்லியிருக்கிறார். சொல்லப்போனால், நிறைய வருஷங்களாக யெகோவாவுக்குச் சேவை செய்துகொண்டிருந்தவர்கள்கூட அந்தக் கண்ணிகளில் சிக்கியிருக்கிறார்கள். அப்படியென்றால், நாமும் அதில் கண்டிப்பாகச் சிக்கிக்கொள்வோம் என்று அர்த்தமா? இல்லை. “நம்மை எச்சரிப்பதற்காக” இவர்களுடைய உதாரணங்களை யெகோவா பைபிளில் பதிவுசெய்து வைத்திருக்கிறார். (1 கொ. 10:11) அந்த உதாரணங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம் என்றும் பிசாசுடைய கண்ணிகளில் சிக்காமல் இருப்போம் என்றும் யெகோவா நம்புகிறார்.

தலைக்கனம் என்ற கண்ணி

(பாரா 4)

4. தலைக்கனம் வந்தால் நமக்கு என்ன நடந்துவிடலாம்?

4 நாம் தலைக்கனத்தோடு நடந்தால், சாத்தான் மாதிரியே நமக்கும் முடிவில்லாத வாழ்வு கிடைக்காது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். அதனால், நாம் அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவன் ரொம்பவே ஆசைப்படுகிறான். (நீதி. 16:18) ஒருவருக்கு ‘தலைக்கனம் வந்துவிட்டால், பிசாசுக்குக் கிடைத்திருக்கும் தண்டனை அவருக்கும் கிடைத்துவிடலாம்’ என்று அப்போஸ்தலன் பவுலும் எச்சரித்தார். (1 தீ. 3:6, 7) இந்த நிலைமை நம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நாம் புதிதாக சத்தியத்துக்கு வந்திருந்தாலும் சரி, ரொம்ப வருஷங்களாக சத்தியத்தில் இருந்தாலும் சரி.

5. தலைக்கனம் பிடித்தவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்று பிரசங்கி 7:16, 20 சொல்கிறது?

5 தலைக்கனத்தோடு நடந்துகொள்பவர்கள் சுயநலவாதிகள். யெகோவாவைப் பற்றி யோசிக்காமல் தங்களைப் பற்றியேதான் அவர்கள் யோசிப்பார்கள். நாமும் அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சாத்தான் நினைக்கிறான். முக்கியமாக, பிரச்சினைகள் வரும்போது நாம் அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறான். உதாரணத்துக்கு, உங்கள்மேல் யாராவது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தியிருக்கலாம். இல்லையென்றால், உங்களை அநியாயமாக நடத்தியிருக்கலாம். அந்த மாதிரி சமயங்களில் யெகோவாவையும் சகோதர சகோதரிகளையும் நீங்கள் குறை சொல்ல வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். யெகோவா சொல்கிறபடி செய்யாமல், உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி செய்தால்தான் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான்.​பிரசங்கி 7:16, 20-ஐ வாசியுங்கள்.

6. நெதர்லாந்தில் இருக்கிற சகோதரியின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

6 நெதர்லாந்தில் இருக்கிற ஒரு சகோதரியின் அனுபவத்தை இப்போது பார்க்கலாம். மற்றவர்களிடம் இருக்கிற சின்னச் சின்ன குறைகளைப் பார்த்து அவர் கோபப்பட்டார். மற்றவர்களிடம் அவரால் பழக முடியவில்லை. “எனக்கு தனியா இருக்கிற மாதிரி இருந்துச்சு. மத்தவங்கள என்னால மன்னிக்க முடியல. அதனால, வேற ஒரு சபைக்கு போயிடலாம்னு என் கணவர்கிட்ட சொன்னேன்” என்று அவர் சொல்கிறார். அதற்குப் பின்பு, மார்ச் 2016 பிராட்காஸ்டிங் நிகழ்ச்சியை அவர் பார்த்தார். மற்றவர்களிடம் குறை இருந்தாலும் அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதைப் பற்றி சில ஆலோசனைகள் அந்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்டிருந்தது. “என்னை பத்தி நான் நேர்மையா யோசிச்சு பாக்க வேண்டியிருந்துச்சு. சபையில இருக்கிற சகோதர சகோதரிகள மாத்தணும்னு நினைக்கிறதுக்கு பதிலா, எங்கிட்டயே நிறைய தவறு இருக்குங்கறத ஒத்துக்க வேண்டியிருந்துச்சு. என்னோட கவனத்த எல்லாம் யெகோவா மேலயும் அவரோட அரசாட்சி மேலயும் திருப்பறதுக்கு அந்த நிகழ்ச்சி எனக்கு உதவுச்சு” என்று அவர் சொல்கிறார். இதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? உங்களுக்குக் கஷ்டங்கள் வரும்போது, உங்களுடைய கவனத்தை யெகோவா பக்கம் திருப்புங்கள். மற்றவர்களை யெகோவா பார்க்கிற மாதிரி பார்ப்பதற்கு உதவச் சொல்லி அவரிடம் கெஞ்சிக் கேளுங்கள். மற்றவர்களுடைய தவறுகளை அவர் பார்க்கிறார். ஆனாலும், மன்னிக்கிறார். நீங்களும் அதையேதான் செய்ய வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார்.​—1 யோ. 4:20.

(பாரா 7)

7. உசியா ராஜாவுக்கு என்ன நடந்தது?

7 உசியா ராஜா ரொம்ப திறமைசாலியாக இருந்தார். அவர் செய்த போர்களில் எல்லாம் அவருக்கு வெற்றி கிடைத்தது. நிறைய நகரங்களைக் கட்டினார். அவருடைய ஆட்சியில் விவசாயமும் நல்லபடியாக நடந்தது. “யெகோவா அவரை ஆசீர்வதித்தார்.” (2 நா. 26:3-7, 10) ஆனால், அவர், “வலிமைமிக்கவராக ஆனதும், அவருக்கு ஆணவம் தலைக்கேறியது. அதுவே அவருடைய அழிவுக்குக் காரணமானது” என்று பைபிள் சொல்கிறது. எப்படி? தன்னுடைய ஆலயத்துக்குள்ளே குருமார்கள் மட்டும்தான் தூபம் காட்ட வேண்டும் என்று யெகோவா கட்டளை கொடுத்திருந்தார். ஆனால், உசியா அதையும் மீறி தூபம் காட்டப் போனார். அப்போது, அவருக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் தலைக்கனத்தோடு நடந்துகொண்டார். அந்த ஆலோசனையை அவர் கேட்கவில்லை. அவர் அப்படி நடந்துகொண்டது யெகோவாவுக்குச் சுத்தமாகப் பிடிக்காததால், அவரைத் தண்டித்தார். சாகும் வரைக்கும் அவர் தொழுநோயால் கஷ்டப்பட வேண்டியிருந்தது.​—2 நா. 26:16-21.

8. தலைக்கனம் இல்லாமல் நடந்துகொள்ள 1 கொரிந்தியர் 4:6, 7 எப்படி உதவும்?

8 தலைக்கனம் என்ற கண்ணியில் உசியா மாதிரியே நாமும் சிக்கிக்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா? ஹோசே என்பவருடைய அனுபவத்தைப் பார்க்கலாம். அவர் ஒரு சபையில் மூப்பராக இருந்தார். வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தார். மாநாடுகளில் பேச்சுகளைக் கொடுத்தார். சில விஷயங்களைப் பற்றி வட்டாரக் கண்காணிகள்கூட அவரிடம் ஆலோசனை கேட்டார்கள். “நான் என்னோட திறமையயும், அனுபவத்தயும்தான் நம்பி இருந்தேன். யெகோவாவ ஓரம் கட்டிட்டேன். எனக்கு எல்லாமே தெரியும்னு நினைச்சுட்டேன். அதனால, யெகோவா கொடுத்த எச்சரிக்கைகளயும், அறிவுரைகளயும் காதிலயே போட்டுக்கல” என்று அவர் சொல்கிறார். கடைசியில் என்ன நடந்தது? அவர் ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டார். அதனால், சபை நீக்கம் செய்யப்பட்டார். நிறைய வருஷங்களுக்குப் பின்பு அவர் மறுபடியும் யெகோவாவின் சாட்சியாக ஆனார். “யெகோவா எனக்கு ஒரு நல்ல பாடத்த கத்துக்கொடுத்தாரு. நாம என்ன பொறுப்புல இருக்கறோம்கறதவிட அவர் சொன்னத கேக்கறோமாங்கறதுதான் முக்கியம்” என்று அவர் சொல்கிறார். நாம் எல்லாரும் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். நமக்கு என்ன திறமை இருந்தாலும் சரி, சபையில் என்ன பொறுப்புகள் கிடைத்தாலும் சரி, அது யெகோவாவிடம் இருந்துதான் வருகிறது. (1 கொரிந்தியர் 4:6, 7-ஐ வாசியுங்கள்.) நாம் தலைக்கனத்தோடு நடந்துகொண்டால், யெகோவா நம்மைப் பயன்படுத்தவே மாட்டார்.

பேராசை என்ற கண்ணி

(பாரா 9)

9. பேராசை இருந்ததால் சாத்தானும் ஏவாளும் என்ன செய்தார்கள்?

9 பேராசை என்று சொன்னாலே நமக்கு ஒருவேளை பிசாசாகிய சாத்தான் ஞாபகத்துக்கு வரலாம். அவன் ஒரு தேவதூதனாக இருந்தான். யெகோவா அவனுக்குக் கண்டிப்பாக நிறைய பொறுப்புகளைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் நிறைய வேண்டும் என்று அவன் பேராசைப்பட்டான். யெகோவாவுக்கு மட்டுமே போய்ச்சேர வேண்டிய வணக்கம் தனக்குக் கிடைக்க வேண்டும் என்று நினைத்தான். மனிதர்கள் எல்லாரும் அவனை மாதிரியே திருப்தி இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். அதனால், அவனுடைய வேலையை முதன்முதலில் ஏவாளிடம் ஆரம்பித்தான். ஏவாளுக்கும் ஆதாமுக்கும் திருப்தியாக சாப்பிட யெகோவா நிறைய கொடுத்திருந்தார். ஒரேவொரு மரத்தில் இருக்கிற பழத்தைத் தவிர, தோட்டத்தில் இருக்கிற “எல்லா மரங்களின் பழங்களையும்” சாப்பிடலாம் என்று சொல்லியிருந்தார். (ஆதி. 2:16) ஆனால், யெகோவா தடை செய்திருந்த அந்த மரத்தின் பழத்தைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை சாத்தான் ஏவாளுக்குள்ளே தூண்டிவிட்டான். ஏவாளும் தனக்கு இருப்பதில் திருப்தி அடையாமல் இன்னும் நிறைய வேண்டும் என்று பேராசைப்பட்டாள். அதன் விளைவு என்ன என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அவள் பாவம் செய்தாள், கடைசியில் செத்துப்போனாள்.​—ஆதி. 3:6, 19.

(பாரா 10)

10. பேராசை என்ற கண்ணியில் தாவீது ராஜா எப்படி விழுந்தார்?

10 தாவீது ராஜாவும் பேராசை என்ற கண்ணியில் விழுந்துவிட்டார். வசதிவாய்ப்புகள்... பேர் புகழ்... போர்களில் வெற்றி... என்று யெகோவா அவருக்கு எல்லாமே கொடுத்திருந்தார். அவர் கொடுத்த ஆசீர்வாதங்கள், “கணக்கில் அடங்காதவை” என்று தாவீது சொன்னார். (சங். 40:5) ஆனால், ஒருகட்டத்தில் யெகோவா கொடுத்த எல்லாவற்றையும் தாவீது மறந்துவிட்டார். அவருக்கு என்ன இருந்ததோ அதில் அவர் திருப்தியாக இல்லை. இன்னும் நிறைய வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஏற்கெனவே அவருக்கு நிறைய மனைவிகள் இருந்தும் இன்னொருவருடைய மனைவிமேல் ஆசைப்பட்டார். ஏத்தியனான உரியாவின் மனைவி பத்சேபாள்தான் அந்தப் பெண். சுயநலத்தோடு பத்சேபாளுடன் அவர் உடலுறவு கொண்டார். அதனால், அவள் கர்ப்பமானாள். இவ்வளவு பெரிய பாவத்தைச் செய்தது பத்தாது என்று உரியாவைக் கொல்லவும் ஏற்பாடு செய்தார்! (2 சா. 11:2-15) தான் செய்துகொண்டிருந்ததை எல்லாம் யெகோவா கவனிக்க மாட்டார் என்று ஒருவேளை தாவீது நினைத்திருப்பாரோ? ரொம்ப வருடங்களாக தாவீது யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். ஆனால், இந்தச் சமயத்தில் சுயநலத்தோடும் பேராசையோடும் நடந்துவிட்டார். அதன் விளைவுகளையும் அனுபவித்தார். ஆனால், சந்தோஷமான விஷயம் என்னவென்றால், அவர் செய்த தவறை உணர்ந்து மனம் திரும்பினார். மறுபடியும் யெகோவாவின் தயவை அனுபவித்தார். அதற்காக, யெகோவாவுக்கு அவர் எவ்வளவு நன்றியோடு இருந்திருப்பார்!​—2 சா. 12:7-13.

11. பேராசை என்ற கண்ணிக்குள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கு எபேசியர் 5:3, 4 எப்படி உதவும்?

11 தாவீது ராஜாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? யெகோவா நமக்காகச் செய்திருக்கிற எல்லாவற்றுக்கும் நன்றியோடு இருந்தால், பேராசை என்ற கண்ணியில் நாம் சிக்கிக்கொள்ள மாட்டோம். (எபேசியர் 5:3, 4-ஐ வாசியுங்கள்.) நமக்கு என்ன இருக்கிறதோ அதில் நாம் திருப்தியாக இருக்க வேண்டும். புதிதாக பைபிள் படிப்பு படிக்கிறவர்களிடம், ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விஷயத்துக்காவது யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள் என்று நாம் கற்றுக்கொடுக்கிறோம். வாரம் முழுக்க அவர்கள் அப்படிச் செய்யும்போது குறைந்தது ஏழு விஷயத்துக்காவது அவர்களால் நன்றி சொல்ல முடியும். (1 தெ. 5:18) நாமும் அதே மாதிரி செய்யலாம், இல்லையா? யெகோவா நமக்காகச் செய்திருக்கிற எல்லாவற்றையும் பற்றி நன்றாக யோசித்துப் பார்க்கும்போது, அவருக்கு நாம் நன்றியோடு இருக்க முடியும். அப்படி நன்றியோடு இருக்கும்போது என்ன இருக்கிறதோ அதில் திருப்தியாக இருப்போம். திருப்தியாக இருக்கும்போது பேராசை என்ற கண்ணிக்குள் நாம் சிக்கிக்கொள்ள மாட்டோம்.

(பாரா 12)

12. பேராசை இருந்ததால் யூதாஸ் இஸ்காரியோத்து என்ன செய்தான்?

12 பேராசை என்ற கண்ணியில் விழுந்த இன்னொரு ஆள் யூதாஸ் இஸ்காரியோத்து. பேராசையால் அவன் பெரிய துரோகியாக மாறிவிட்டான். ஆனால், ஆரம்பத்தில் அவன் அப்படிப்பட்டவன் இல்லை. (லூக். 6:13, 16) அதனால்தான், அவனை அப்போஸ்தலனாக இயேசு தேர்ந்தெடுத்தார். அவனிடம் திறமை இருந்தது, அவனை நம்ப முடிந்தது. அதனால்தான், பணப்பெட்டி அவனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்தப் பணப்பெட்டியில் இருக்கிற பணத்தைப் பிரசங்க வேலைக்காக இயேசுவும் அப்போஸ்தலர்களும் பயன்படுத்தினார்கள். ஒருவிதத்தில், இன்றைக்கு நாம் கொடுக்கிற உலகளாவிய வேலைக்கான நன்கொடை மாதிரிதான் அது. ஒருகட்டத்தில், யூதாஸ் அந்தப் பணப்பெட்டியில் இருக்கிற பணத்தைத் திருட ஆரம்பித்தான். பேராசையைப் பற்றி இயேசு எத்தனையோ எச்சரிக்கைகளை கொடுத்தும் அவன் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.​—மாற். 7:22, 23; லூக். 11:39; 12:15.

13. யூதாஸ் பேராசை பிடித்தவன் என்பது எந்தச் சமயத்தில் ரொம்ப தெளிவாக தெரிந்தது?

13 யூதாசுக்கு எந்தளவுக்கு பேராசை இருந்தது என்பது இயேசு இறப்பதற்குக் கொஞ்சம் முன்பு நடந்த ஒரு சம்பவத்திலிருந்து தெளிவாகத் தெரிந்தது. அந்தச் சமயத்தில், இயேசுவும் அவருடைய சீஷர்களும், மரியாளும் அவளுடைய சகோதரி மார்த்தாளும், தொழுநோயாளியாக இருந்த சீமோனின் வீட்டுக்கு விருந்துக்காகப் போயிருந்தார்கள். விருந்து நடந்துகொண்டிருந்தபோது, மரியாள் எழுந்து விலை உயர்ந்த வாசனை எண்ணெயை இயேசுவின் தலையில் ஊற்றினாள். அதைப் பார்த்து, யூதாசும் மற்ற சீஷர்களும் கோபப்பட்டார்கள். அந்தப் பணம் இருந்திருந்தால் ஏழைகளுக்கு உதவி செய்திருக்கலாமே என்று மற்ற சீஷர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், யூதாஸ் அப்படி நினைத்திருக்க வாய்ப்பு இல்லை. “அவன் திருடனாக இருந்ததால்” அந்தப் பணத்தை பணப்பெட்டியில் போட்டிருந்தால் திருடியிருக்கலாமே என்று யோசித்தான். அவனுக்கு அந்தளவுக்கு பேராசை இருந்ததால், கடைசியில் ஒரு அடிமையை விற்கும் விலைக்காக இயேசுவையே காட்டிக்கொடுத்தான்.​—யோவா. 12:2-6; மத். 26:6-16; லூக். 22:3-6.

14. லூக்கா 16:13-ல் சொல்லியிருக்கிற அறிவுரையின்படி ஒரு கணவனும் மனைவியும் எப்படிச் செய்தார்கள்?

14 “நீங்கள் ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் அடிமையாக இருக்க முடியாது” என்று இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார். (லூக்கா 16:13-ஐ வாசியுங்கள்.) இன்றும் அது உண்மை. ருமேனியாவில் இருக்கிற ஒரு கணவனும் மனைவியும் இயேசுவின் வார்த்தைகளைக் கருத்தாக எடுத்துக்கொண்டார்கள். எப்படி என்பதை இப்போது பார்க்கலாம். பணக்கார நாட்டில் தற்காலிகமாக அவர்களுக்கு ஒரு வேலை கிடைத்தது. “எங்களுக்கு நிறைய கடன் இருந்துச்சு. யெகோவாதான் இந்த வாய்ப்பு கொடுத்தார்னு முதல்ல நாங்க நினைச்சோம்” என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், அங்கே அவர்களுக்கு ஒரு கண்ணி இருந்தது. அவர்கள் அந்த வேலைக்குப் போனால், யெகோவாவுக்கு நிறைய சேவை செய்ய முடியாது. ஆகஸ்ட் 15, 2008 காவற்கோபுரத்தில், முழு இருதயத்தோடு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருங்கள்” என்ற கட்டுரையைப் படித்த பின்பு அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். “வேறொரு நாட்டுக்கு போய் நிறைய பணம் சம்பாதிக்கிறது எங்களோட குறிக்கோளா இருந்துச்சுன்னா யெகோவாகிட்ட இருக்கிற பந்தத்த ரெண்டாவது இடத்துக்கு தள்ளுறோம்னுதான் அர்த்தம். அப்படி செஞ்சா அவருக்கும் எங்களுக்கும் இருக்கிற பந்தம் பாதிக்கப்படும்ங்கிறத நாங்க புரிஞ்சுகிட்டோம்” என்று அவர்கள் சொல்கிறார்கள். அதனால், அந்த வேலையை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அடுத்து என்ன நடந்தது? அவர்களுக்குப் போதுமான வருமானம் கிடைக்கிற அளவுக்கு அவர்கள் நாட்டிலேயே அந்தக் கணவருக்கு ஒரு வேலை கிடைத்தது. “யெகோவாவோட கை குறுகினது இல்ல” என்று அந்த மனைவி சொல்கிறார். பணத்தை எஜமானாக வைக்காமல் யெகோவாவை எஜமானாக வைத்தது நினைத்து அந்தக் கணவனும் மனைவியும் ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள்.

சாத்தானின் கண்ணிகளிலிருந்து தப்பிக்க முடியும்

15. சாத்தானின் கண்ணிகளிலிருந்து நம்மால் தப்பிக்க முடியுமா? விளக்குங்கள்.

15 தலைக்கனம் அல்லது பேராசை என்ற கண்ணியில் நீங்கள் சிக்கிவிட்டதாக நினைக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள், உங்களால் தப்பிக்க முடியும்! பிசாசால் ‘உயிரோடு பிடித்து வைக்கப்பட்டிருக்கிறவர்கள்’ அவனுடைய கண்ணியிலிருந்து தப்பிக்க முடியும் என்று பவுலும் சொன்னார். (2 தீ. 2:26) தாவீதைப் பற்றி நினைத்துப் பாருங்கள். நாத்தான் தீர்க்கதரிசி அவரைக் கண்டித்தபோது அதை ஏற்றுக்கொண்டார், மனம் திரும்பினார். யெகோவாவுக்கும் அவருக்கும் இருக்கிற பந்தத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்தார். ஒரு விஷயத்தை எப்போதுமே மறந்துவிடாதீர்கள். சாத்தானைவிட யெகோவா பலமுள்ளவர். அவருடைய உதவியை ஏற்றுக்கொண்டால், நமக்கு முன்பு சாத்தான் எப்படிப்பட்ட கண்ணியை வைத்தாலும் சரி, அதிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும்.

16. சாத்தானின் கண்ணிகளில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கு எது உதவும்?

16 சாத்தானின் கண்ணிகளில் சிக்கிவிட்டு தப்பிப்பதைவிட சிக்காமலேயே பார்த்துக்கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது. யெகோவாவின் உதவியோடு நிச்சயம் நம்மால் அப்படிச் செய்ய முடியும். ஆனால், நாம் மெத்தனமாக இருந்து விடக் கூடாது! ஏனென்றால், நிறைய வருஷங்களாக யெகோவாவுக்குச் சேவை செய்தவர்கள்கூட தலைக்கனம் அல்லது பேராசை என்ற கண்ணியில் சிக்கியிருக்கிறார்கள். அதனால், இந்த மோசமான குணங்கள் உங்களை ஆட்டிப்படைக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள்! அதற்காக தினமும் யெகோவாவிடம் கெஞ்சிக் கேளுங்கள்.​—சங். 139:23, 24.

17. பிசாசுக்கு சீக்கிரத்தில் என்ன நடக்கப்போகிறது?

17 ஆயிரக்கணக்கான வருஷங்களாக, சாத்தான் திறமையான வேட்டைக்காரனாக இருந்திருக்கிறான். ஆனால், சீக்கிரத்தில் அவனால் எதுவுமே செய்ய முடியாதபடி யெகோவா அவனைக் கட்டிப் போடப் போகிறார், பின்பு அழிக்கப் போகிறார். (வெளி. 20:1-3, 10) அந்த நாளுக்காக நாம் எல்லாரும் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறோம். அது வரைக்கும் அவனுடைய கண்ணிகளில் சிக்கிக்கொள்ளாமல் நாம் பார்த்துக்கொள்ளலாம். தலைக்கனம், பேராசை என்ற மோசமான குணங்கள் நமக்குள்ளே கொஞ்சம்கூட எட்டிப் பார்க்காத மாதிரி பார்த்துக்கொள்ளலாம். ‘பிசாசுக்கு எதிர்த்து நிற்கலாம், அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.’​—யாக். 4:7.

பாட்டு 127 நான் எப்படிப்பட்ட நபராக இருக்க வேண்டும்

^ பாரா. 5 சாத்தான் திறமையான ஒரு வேட்டைக்காரன். நம்மைக் கண்ணியில் மாட்ட வைக்க அவன் முயற்சி செய்கிறான். நாம் எத்தனை வருடங்களாக சத்தியத்தில் இருந்தாலும் சரி, அவனிடம் சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன. யெகோவாவுக்கும் நமக்கும் இருக்கிற பந்தத்தைச் சீரழிப்பதற்கு அவன் பயன்படுத்துகிற இரண்டு கண்ணிகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். ஒன்று, தலைக்கனம். இன்னொன்று, பேராசை. இந்த இரண்டு கண்ணிகளில் சிக்கிக்கொண்டவர்களைப் பற்றியும் நாம் எப்படி அதில் சிக்காமல் இருக்கலாம் என்பதைப் பற்றியும் பார்க்கப்போகிறோம்.

^ பாரா. 2 வார்த்தைகளின் விளக்கம்: மற்றவர்களை விட தன்னை உயர்வாக நினைப்பதுதான் தலைக்கனம். பணத்துக்காகவும், பதவிக்காகவும் செக்ஸுக்காகவும் மற்ற சில விஷயங்களுக்காகவும் அளவுக்கு அதிகமாக ஆசைப்படுவதுதான் பேராசை.

^ பாரா. 53 படவிளக்கம்: ஒரு சகோதரருக்கு ஆலோசனை கொடுக்கிறார்கள். ஆனால், அவருக்கு தலைக்கனம் இருப்பதால், அந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். ஒரு சகோதரி ஏற்கெனவே நிறைய பொருள்களை வாங்கியிருக்கிறார். ஆனால், இன்னும் நிறைய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

^ பாரா. 55 படவிளக்கம்: சாத்தானும் உசியா ராஜாவும் தலைக்கனத்தோடு நடந்துகொண்டார்கள். பேராசை இருந்ததால்தான் தடை செய்யப்பட்ட பழத்தை ஏவாள் சாப்பிட்டாள், பத்சேபாளோடு தாவீது முறைகேடான உறவு வைத்துக்கொண்டார், யூதாஸ் பணத்தைத் திருடினான்.