Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 26

சீஷராக்கும் வேலையை உங்களால் செய்ய முடியும்

சீஷராக்கும் வேலையை உங்களால் செய்ய முடியும்

‘கடவுள் . . . ஆர்வத்தையும் வல்லமையையும் உங்களுக்குக் கொடுப்பார்.’—பிலி. 2:13.

பாட்டு 64 அறுவடை வேலையில் ஆனந்த நடைபோடுவோம்

இந்தக் கட்டுரையில்... *

1. யெகோவா உங்களுக்கு என்ன செய்திருக்கிறார்?

நீங்கள் எப்படி ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனீர்கள்? உங்கள் அப்பா அம்மாவோ, கூட வேலை செய்கிறவர்களோ, கூட படிப்பவர்களோ ‘நல்ல செய்தியை’ உங்களுக்குச் சொல்லி இருக்கலாம். இல்லையென்றால், யாரோ ஒருவர் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டி யெகோவாவைப் பற்றிச் சொல்லியிருக்கலாம். (மாற். 13:10) அதற்குப் பின்பு நிறைய நேரமெடுத்து... நிறைய முயற்சி செய்து... ஒருவர் உங்களுக்குப் பைபிள் படிப்பு நடத்தியிருக்கலாம். படிக்க படிக்க யெகோவாமேல் உங்களுக்கு அன்பு வந்திருக்கும். அவரும் உங்கள்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். யெகோவாதான் உங்களை அவர் பக்கம் ஈர்த்திருக்கிறார். இன்றைக்கு இயேசு கிறிஸ்துவின் சீஷராக நீங்கள் இருக்கிறீர்கள். என்றென்றும் வாழும் நம்பிக்கையும் இப்போது உங்களுக்கு இருக்கிறது. (யோவா. 6:44) யாரோ ஒருவரைப் பயன்படுத்தி யெகோவா உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லிக் கொடுத்ததற்காக நீங்கள் ரொம்ப நன்றியோடு இருப்பீர்கள். அவருடைய ஊழியராக உங்களை ஏற்றுக்கொண்டதை நினைத்து நீங்கள் ரொம்ப சந்தோஷப்படுவீர்கள்.

2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப்போகிறோம்?

2 முடிவில்லாத வாழ்க்கையை நோக்கி நாம் எல்லோருமே பயணம் செய்துகொண்டிருக்கிறோம். நம்முடன் சேர்ந்து பயணம் செய்ய மற்றவர்களுக்கு உதவுகிற பாக்கியமும் நமக்கு இருக்கிறது. வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வது நமக்குச் சுலபமாக இருக்கலாம், ஆனால், பைபிள் படிப்பு ஆரம்பிப்பதும் அதைத் தொடர்ந்து நடத்துவதும் நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். அப்படி என்றால், இந்தக் கட்டுரையில் அருமையான ஆலோசனைகள் இருக்கின்றன. மற்றவர்களைச் சீஷராக்க வேண்டும் என்ற ஆசை நமக்கு எப்போது வரும் என்பதைப் பார்க்கப்போகிறோம். பைபிள் படிப்பு எடுப்பதில் இருக்கிற சவால்களை எப்படிச் சமாளிக்கலாம் என்பதைப் பற்றி பார்க்கப்போகிறோம். முதலில் பிரசங்கிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதும் ஏன் முக்கியம் என்பதைப் பார்க்கலாம்.

பிரசங்கிக்கவும் கற்றுக்கொடுக்கவும் இயேசு கட்டளை கொடுத்தார்

3. நாம் ஏன் பிரசங்கிக்கிறோம்?

3 இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது தன்னுடைய சீஷர்களிடம் இரண்டு வேலைகளை செய்யச் சொல்லி கட்டளை கொடுத்தார். ஒன்று, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிக்கச் சொன்னார். அதை எப்படிச் செய்வது என்று சொல்லிக்கொடுத்தார். (மத். 10:7; லூக். 8:1) மற்றவர்கள் நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ளும்போது என்ன செய்ய வேண்டும் என்றும் அப்படி ஏற்றுக்கொள்ளாதபோது என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார். (லூக். 9:2-5) பிரசங்க வேலை எந்தளவுக்குப் பிரம்மாண்டமான அளவில் நடக்கும் என்று சொன்னார், அதாவது, அவருடைய சீஷர்கள் “எல்லா தேசத்தாருக்கும் சாட்சி” கொடுப்பார்கள் என்று சொன்னார். (மத். 24:14; அப். 1:8) அவர்கள் பிரசங்கிக்கும்போது, மக்கள் அதை ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியும் அது எதையெல்லாம் சாதிக்கப்போகிறது என்பதைப் பற்றியும் அவர்கள் சொல்ல வேண்டியிருந்தது.

4. மத்தேயு 28:18-20 சொல்கிறபடி, பிரசங்கிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் நாம் வேறு எதையும் செய்ய வேண்டும்?

4 இயேசு நமக்குக் கொடுத்த இன்னொரு வேலை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது. யாரெல்லாம் நல்ல செய்தியை ஆர்வமாக கேட்கிறார்களோ, அவர்களுக்குத் தான் கட்டளையிட்ட எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கச் சொல்லி சொன்னார். முதல் நூற்றாண்டில் இருந்த சீஷர்களிடம்தான் இயேசு இந்தக் கட்டளையைக் கொடுத்தார் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், அது உண்மை கிடையாது. இந்த முக்கியமான வேலை, “இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம் வரை” நடக்கும் என்று அவர் சொன்னார். (மத்தேயு 28:18-20-ஐ வாசியுங்கள்.) 500-க்கும் அதிகமான சீஷர்களுக்கு முன்பு தோன்றியபோது, அவர் இந்தக் கட்டளையைக் கொடுத்திருக்கலாம். (1 கொ. 15:6) யோவானுக்குக் கொடுத்த வெளிப்படுத்துதலிலும் தன்னுடைய சீஷர்கள் எல்லாரும் யெகோவாவைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.—வெளி. 22:17.

5. பிரசங்கிப்பதற்கும் கற்றுக்கொடுப்பதற்கும் இருக்கிற தொடர்பைப் பற்றி விளக்க அப்போஸ்தலன் பவுல் 1 கொரிந்தியர் 3:6-9-ல் என்ன உதாரணத்தைச் சொன்னார்?

5 சீஷராக்கும் வேலை ஒரு செடி வளர்க்கிற மாதிரி என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். நாம் வெறுமனே விதை விதைத்தால் மட்டும் போதாது. அதனால்தான் கொரிந்தியர்களிடம், “நான் நட்டேன், அப்பொல்லோ தண்ணீர் ஊற்றினார். . . . நீங்கள் கடவுளால் பண்படுத்தப்படுகிற நிலமாக . . . இருக்கிறீர்கள்” என்று பவுல் சொன்னார். (1 கொரிந்தியர் 3:6-9-ஐ வாசியுங்கள்.) ‘கடவுளுடைய நிலத்தில்’ வேலை செய்யும் நாம் வெறுமனே விதை விதைத்தால் மட்டும் போதாது, தண்ணீரும் ஊற்ற வேண்டும். செடி எப்படி வளருகிறது என்பதையும் தவறாமல் கண்காணிக்க வேண்டும். (யோவா. 4:35) அதே சமயத்தில், கடவுள்தான் வளர வைக்கிறார் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

6. மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும்போது நாம் அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவலாம்?

6 “முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு” இருப்பவர்களைத்தான் நாம் தேடிக் கொண்டிருக்கிறோம். (அப். 13:48) அவர்களைக் கண்டுபிடித்ததும் பைபிளில் இருக்கிற விஷயங்களை (1) புரிந்துகொள்வதற்கும் (2) ஏற்றுக்கொள்வதற்கும் (3) அதன்படி செய்வதற்கும் அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். (யோவா. 17:3; கொலோ. 2:6, 7; 1 தெ. 2:13) சபையில் இருக்கிற எல்லாருமே பைபிள் மாணவர்களுக்கு உதவலாம். எப்படி? அவர்கள் கூட்டங்களுக்கு வரும்போது அவர்கள்மேல் அன்பு காட்டலாம், அவர்களுடன் நட்பாகப் பழகலாம். (யோவா. 13:35) பைபிள் படிப்பு படிப்பவர்களின் மனதில் சில நம்பிக்கைகள் ‘ஆழமாக வேரூன்றி’ இருக்கலாம். சில பழக்கவழக்கங்களில் அவர்கள் ஊறிப்போயிருக்கலாம். அதை எல்லாம் அவர்கள் விட்டுவிட வேண்டும் என்றால் படிப்பு எடுக்கிறவர்கள் நிறைய நேரத்தையும் சக்தியையும் செலவு செய்ய வேண்டியிருக்கலாம். (2 கொ. 10:4, 5) நிறைய மாதங்களாக அவர்களுக்குப் பொறுமையாக உதவ வேண்டியிருக்கலாம். அப்படி உதவும்போது, ஞானஸ்நானம் எடுக்கிற அளவுக்கு அவர்கள் முன்னேறுவார்கள். இப்படி நாம் எடுக்கிற முயற்சி நிச்சயம் வீண்போகாது.

அன்பு இருப்பதால்தான் நாம் பிரசங்கிக்கிறோம்

7. சீஷராக்கும் வேலையை நாம் ஏன் செய்கிறோம்?

7 யார்மேல் இருக்கிற அன்பு? முதலில், யெகோவாமேல் இருக்கிற அன்பு. இயேசு கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் யெகோவாமேல் வைத்திருக்கிற அன்பை நீங்கள் காட்ட வேண்டும். (1 யோ. 5:3) இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: யெகோவாமேல் அன்பு இருப்பதால்தான் நீங்கள் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய ஆரம்பித்தீர்கள், அப்படிச் செய்வது உங்களுக்குக் கஷ்டமாக இருந்திருக்கலாம். முதன்முதலில் ஒரு வீட்டுக் கதவைத் தட்டி நல்ல செய்தியைச் சொன்னபோது, உங்களுக்குப் பதட்டமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த வேலையை நீங்கள் செய்ய வேண்டும் என்று இயேசு ஆசைப்படுகிறார் என்பது உங்களுக்குத் தெரிந்ததால் நீங்கள் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தீர்கள். நாட்கள் போக போக, பிரசங்க வேலை செய்வது உங்களுக்குச் சுலபமாக இருந்திருக்கும். ஆனால், பைபிள் படிப்பு எடுப்பதைப் பற்றி இப்போதும் பயப்படுகிறீர்களா? அப்படியென்றால், பதட்டப்படாமல் தைரியமாக பைபிள் படிப்பு ஆரம்பிப்பதற்கு உதவச் சொல்லி யெகோவாவிடம் கேளுங்கள். அப்படிக் கேட்கும்போது உங்களுடைய ஆசையை யெகோவா கண்டிப்பாக நிறைவேற்றுவார்.

8. மாற்கு 6:34 சொல்கிறபடி, மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு வேறு எதுவும் நமக்கு உதவும்?

8 இரண்டாவது, மக்கள்மேல் இருக்கிற அன்பு. ஒரு தடவை இயேசுவும் அவருடைய சீஷர்களும் ரொம்ப நேரம் ஊழியம் செய்து களைப்பாக இருந்தார்கள். அவர்களுக்கு ஓய்வு தேவைப்பட்டது. ஆனால், ஏராளமான பேர் அவரைத் தேடி வந்துவிட்டார்கள். அவர்களைப் பார்த்து இயேசு மனம் உருகியதால், “நிறைய விஷயங்களைச்” சொல்லிக்கொடுத்தார். (மாற்கு 6:34-ஐ வாசியுங்கள்.) அவருக்குக் களைப்பாக இருந்தாலும் அவர் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். ஏனென்றால், அங்கு வந்திருந்த மக்களுடைய இடத்தில் தன்னை வைத்துப் பார்த்தார். அவர்கள் படுகிற கஷ்டங்கள் அவருக்குத் தெரிந்திருந்தது. எந்த நம்பிக்கையும் இல்லாமல் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதனால், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஆசைப்பட்டார். இன்றைக்கும் மக்கள் அதே நிலைமையில்தான் இருக்கிறார்கள். மேலோட்டமாக பார்த்தால், அவர்கள் சந்தோஷமாக இருக்கிற மாதிரி தெரியும். ஆனால், அது உண்மை கிடையாது. அவர்கள் காணாமல் போன ஆடுகள் மாதிரி இருக்கிறார்கள். அவர்களை வழிநடத்துவதற்கு யாருமே இல்லை. இந்த மாதிரியான மக்களுக்குக் கடவுளைப் பற்றி தெரியாது என்றும், அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்றும் அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபே. 2:12) அவர்கள் ‘அழிவுக்குப் போகிற பாதையில்’ இருக்கிறார்கள்! (மத். 7:13) கடவுளைப் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லையே என்று நாம் யோசிக்கும்போது அவர்கள்மேல் அன்பும் கரிசனையும் வரும். அப்படி என்றால், அவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? அதற்கு ஓர் அருமையான வழி அவர்களுக்கு பைபிள் படிப்பு ஆரம்பிப்பதுதான்.

9. யெகோவா உங்களுக்கு என்ன செய்வார் என்று பிலிப்பியர் 2:13 சொல்கிறது?

9 பைபிள் படிப்புக்காக நீங்கள் நிறைய நேரம் செலவு செய்ய வேண்டியிருக்கும். இதை நினைத்து நீங்கள் தயங்குகிறீர்களா? அப்படி என்றால், அதைப் பற்றி யெகோவாவிடம் சொல்லுங்கள். பைபிள் படிப்பு எடுப்பதற்கான ஆர்வத்தை தரச் சொல்லி அவரிடம் கேளுங்கள். (பிலிப்பியர் 2:13-ஐ வாசியுங்கள்.) அவருடைய விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி நீங்கள் ஜெபம் செய்யும்போது, அவர் கண்டிப்பாகக் கேட்பார் என்று அப்போஸ்தலன் யோவான் சொன்னார். (1 யோ. 5:14, 15) அதனால், சீஷராக்கும் வேலை செய்வதற்கான ஆர்வத்தை யெகோவா நிச்சயம் உங்களுக்குக் கொடுப்பார். இதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்.

சீஷராக்கும் வேலையில் இருக்கும் சவால்களை எப்படிச் சமாளிக்கலாம்?

10-11. பைபிள் படிப்பு எடுப்பது எப்போது நமக்குக் கஷ்டமாகிவிடலாம்?

10 சீஷராக்கும் வேலையை நிறைய செய்ய வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். ஆனால், அதில் சில கஷ்டங்கள் இருக்கலாம். இந்த வேலையை முக்கியமாக நினைப்பதால், என்னதான் கஷ்டம் இருந்தாலும் அதைச் செய்ய வேண்டுமென ஆசைப்படுகிறோம். அப்படி என்றால், என்னென்ன சவால்கள் வரலாம் என்பதைப் பற்றியும் எப்படிச் சமாளிக்கலாம் என்பதைப் பற்றியும் இப்போது பார்க்கலாம்.

11 சூழ்நிலைகள் நம்மைக் கட்டுப்படுத்தலாம். உதாரணத்துக்கு, சகோதர சகோதரிகள் சிலருக்கு வயதாகிவிடலாம். இல்லையென்றால், உடல்நிலை மோசமாகிவிடலாம். நீங்களும் இதே நிலைமையில் இருக்கிறீர்களா? அப்படி என்றால், கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் நாம் எப்படி பைபிள் படிப்பு எடுக்கிறோம் என்பதை யோசித்துப்பாருங்கள். போன் வழியாகவும், மற்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் வழியாகவும் நாம் படிப்புகளை எடுக்கிறோம்! அதனால், நீங்கள் வீட்டில் இருந்தாலும் உங்களால் பைபிள் படிப்புகள் எடுக்க முடியும். இப்படி எடுப்பதில் இன்னொரு நன்மையும் இருக்கிறது. பைபிள் படிப்பு படிப்பதற்கு விடியற்காலையிலோ ராத்திரியிலோதான் சிலரால் நேரம் ஒதுக்க முடியும். அந்த மாதிரி ஆட்களுக்கு வீட்டில் இருந்தே நாம் படிப்பு எடுக்கலாம். இயேசுவும்கூட நிக்கொதேமுவுக்கு ராத்திரி நேரத்தில்தான் சொல்லிக்கொடுத்தார். ஏனென்றால், நிக்கொதேமுவுக்கு அந்த நேரம்தான் வசதியாக இருந்தது.—யோவா. 3:1, 2.

12. மற்றவர்களுக்கு உங்களால் கற்றுக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை வருவதற்கு நீங்கள் எதையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்?

12 மற்றவர்களுக்கு பைபிள் படிப்பு எடுக்கிற அளவுக்கு எனக்குத் தகுதியில்லை என்று நாம் நினைக்கலாம். ‘பைபிள் படிப்பு எடுக்க வேண்டும் என்றால் நான் இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு எனக்கு திறமை பத்தாது’ என்று நாம் நினைக்கலாம். ஒருவேளை நீங்கள் அப்படி நினைத்தால் மூன்று விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, உங்களுடைய நம்பிக்கை அதிகமாகும். முதலில், மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிற தகுதி உங்களுக்கு இருக்கிறது என்று யெகோவா நினைக்கிறார். (2 கொ. 3:5) இரண்டாவதாக, ‘பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிற’ இயேசுதான் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிற பொறுப்பை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். (மத். 28:18) மூன்றாவதாக, உங்களுக்கு உதவி செய்வதற்குச் சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிற விஷயத்தில் இயேசு யெகோவாவை நம்பி இருந்தார். நீங்களும் அவரையே நம்பி இருக்கலாம். (யோவா. 8:28; 12:49) அதுமட்டுமல்ல, உங்களுடைய தொகுதி கண்காணியிடமோ, திறமையான பயனியர்களிடமோ, அனுபவமுள்ள மற்ற சகோதர சகோதரிகளிடமோ நீங்கள் உதவி கேட்கலாம். அவர்கள் பைபிள் படிப்பு நடத்தும்போது நீங்களும் அவர்களுடன் போய் அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதைக் கவனிக்கலாம். இப்படி எல்லாம் செய்யும்போது, உங்களுடைய நம்பிக்கை அதிகமாகும்.

13. புது முறைகளுக்குத் தகுந்த மாதிரி நம்மை ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்?

13 புது முறைகளுக்கும் அமைப்பு தருகிற புது கருவிகளுக்கும் தகுந்த மாதிரி நம்மை மாற்றிக்கொள்வது கஷ்டமாக இருக்கலாம். பைபிள் படிப்பு எடுக்கும் முறை இப்போது மாறிவிட்டது. இப்போது, நாம் இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்திலிருந்து படிப்பு எடுப்போம். இவ்வளவு நாட்கள் நாம் எப்படிப் படிப்புக்காக தயாரித்தோமோ... படிப்பு நடத்தினோமோ... அந்த மாதிரி பண்ண மாட்டோம். இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இந்தப் புத்தகத்தில் கொஞ்சம் பத்திகள்தான் இருக்கும். பெரும்பாலும், நாம் மாணவர்களிடம் நிறைய கலந்து பேசுகிற மாதிரிதான் இது இருக்கும். கற்றுக்கொடுக்கும்போது நிறைய வீடியோக்களையும், நம்முடைய வெப்சைட்டிலும் JW லைஃப்ரரி அப்ளிகேஷனிலும் இருக்கிற தகவல்களையும் பயன்படுத்துவோம். இதையெல்லாம் பயன்படுத்துவது உங்களுக்குச் சௌகரியமாக இல்லை என்றால், பயன்படுத்த தெரிந்தவர்களிடம் உதவி கேளுங்கள். பொதுவாக, ஒரு விஷயத்தைச் செய்து பழகிவிட்டால் அதைச் செய்யத்தான் நமக்குப் பிடிக்கும். புதிதாக எதையாவது கற்றுக்கொண்டு செய்வது நமக்குக் கஷ்டமாக இருக்கும். ஆனால், யெகோவாவின் உதவியும் மற்றவர்களுடைய உதவியும் நமக்கு இருந்தால் கண்டிப்பாக நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். சந்தோஷமாக மற்றவர்களுக்குப் படிப்பு எடுக்க முடியும். இந்தப் புது முறையில் படிப்பு எடுப்பது, “படிப்பு நடத்தறவருக்கும் சரி, படிக்கறவருக்கும் சரி, ரொம்ப நல்லா இருக்கு” என்று ஒரு பயனியர் சகோதரர் சொன்னார்.

14. உங்கள் ஊழியப் பகுதியில் பைபிள் படிப்பு எடுப்பது கஷ்டமாக இருந்தது என்றால் நீங்கள் எதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும், 1 கொரிந்தியர் 3:6, 7 உங்களுக்கு எப்படி உதவியாக இருக்கும்?

14 நம் ஊழியப் பகுதியில் பைபிள் படிப்பு ஆரம்பிப்பது கஷ்டமாக இருக்கலாம். சொல்லப்போனால், நாம் சொல்கிற செய்தியை அவர்கள் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் இருக்கலாம். இல்லையென்றால், நம்மை எதிர்க்கலாம். இந்த மாதிரி சூழ்நிலையில் சந்தோஷமாக ஊழியம் செய்வதற்கு எது உதவியாக இருக்கும்? இந்த மோசமான உலகத்தில் மக்களுடைய மனநிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு காலத்தில் நாம் சொல்கிற செய்தியில் ஆர்வம் காட்டாதவர்கள் இப்போது தங்களுக்குக் கடவுளுடைய வழிநடத்துதல் தேவை என்பதை உணரலாம். (மத். 5:3) முன்பு நம்முடைய பிரசுரங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இன்றைக்கு பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், யெகோவாதான் அறுவடையின் எஜமானர் என்பதை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். (மத். 9:38) நாம் தொடர்ந்து விதைக்க வேண்டும், தண்ணீர் ஊற்ற வேண்டும் என்றுதான் அவர் ஆசைப்படுகிறார். விளைய வைக்கும் பொறுப்பு அவருடையது. (1 கொ. 3:6, 7) இப்போது, உங்களுக்கு ஒரு பைபிள் படிப்பு இல்லையா? கவலைப்படாதீர்கள்! எவ்வளவு முயற்சி எடுக்கிறீர்கள் என்பதைத்தான் யெகோவா பார்க்கிறாரே தவிர நீங்கள் எத்தனை பிரசுரங்களைக் கொடுக்கிறீர்கள், எத்தனை பேருக்கு பைபிள் படிப்பு எடுக்கிறீர்கள் என்பதை அல்ல! *

சீஷராக்குங்கள், சந்தோஷத்தை அனுபவியுங்கள்

பிரசங்கிக்கும் வேலையும் கற்றுக்கொடுக்கும் வேலையும் மற்றவர்களுடைய வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்று பாருங்கள் (பாராக்கள் 15-17) *

15. ஒருவர் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்போதும், அதை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும்போதும் யெகோவாவுக்கு எப்படி இருக்கும்?

15 ஒருவர் பைபிள் சத்தியத்தை தெரிந்துகொள்ளும்போதும் மற்றவர்களுக்கு அதைக் கற்றுக்கொடுக்கும்போதும் யெகோவா ரொம்ப சந்தோஷப்படுகிறார். (நீதி. 23:15, 16) இன்றைக்கு நடப்பதை எல்லாம் பார்க்கும்போது யெகோவாவின் மனம் எவ்வளவு சந்தோஷப்படும்! உதாரணத்துக்கு, உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பு இருந்தாலும், 2020 ஊழிய ஆண்டில் 77,05,765 பைபிள் படிப்புகளை நாம் நடத்தியிருக்கிறோம். 2,41,994 பேர் ஞானஸ்நானம் எடுத்திருக்கிறார்கள். இந்தப் புதிய சீஷர்கள் இன்னும் நிறைய பேரை சீஷராக்குவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (லூக். 6:40) சீஷராக்கும் வேலையை நாம் சுறுசுறுப்பாகச் செய்வதைப் பார்க்கும்போது யெகோவா உண்மையிலேயே ரொம்ப சந்தோஷப்படுவார்!

16. நீங்கள் என்ன குறிக்கோள் வைக்கலாம்?

16 சீஷராக்கும் வேலை அவ்வளவு சுலபமான வேலை கிடையாதுதான். ஆனால், யெகோவாவின் உதவி இருந்தால் நிச்சயம் அதை உங்களால் செய்ய முடியும். மற்றவர்கள் அவரை நேசிப்பதற்கு உங்களால் கற்றுக்கொடுக்கவும் முடியும். அப்படியென்றால், குறைந்தபட்சம் ஒரு பைபிள் படிப்பாவது ஆரம்பிப்பதற்கு நீங்கள் குறிக்கோள் வைக்கலாம், இல்லையா? அதற்கு நீங்கள் பார்க்கிற எல்லாரிடமும் பைபிள் படிப்பதற்கு அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்று கேளுங்கள். இப்படி நீங்கள் எடுக்கிற முயற்சிகளை யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார். கிடைக்கிற பலன்களைப் பார்த்து உண்மையிலேயே நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

17. மற்றவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்தும்போது நம் மனதுக்கு எப்படி இருக்கும்?

17 நல்ல செய்தியை மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதும், கற்றுக்கொடுப்பதும் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்! இதில் கிடைக்கிற சந்தோஷம் வேறு எதிலுமே நமக்குக் கிடைக்காது. தெசலோனிக்கேயாவில் இருந்த நிறைய பேர் சீஷர்கள் ஆவதற்கு அப்போஸ்தலன் பவுல் உதவினார். அதில் கிடைத்த சந்தோஷத்தைப் பற்றி அவர் இப்படிச் சொன்னார்: “நம் எஜமானாகிய இயேசுவின் பிரசன்னத்தின்போது அவர் முன்னால் எங்கள் நம்பிக்கையாகவும் சந்தோஷமாகவும் பெருமைக்குரிய கிரீடமாகவும் இருக்கப்போகிறவர்கள் யார்? நீங்கள்தானே? நிச்சயமாகவே, நீங்கள்தான் எங்கள் மகிமை, நீங்கள்தான் எங்கள் சந்தோஷம்.” (1 தெ. 2:19, 20; அப். 17:1-4) அவருக்கு இருந்த அதே உணர்வுகள்தான் இன்றைக்கு நிறைய பேருக்கு இருக்கின்றன. உதாரணத்துக்கு, ஸ்டெஃபானி என்ற சகோதரியும் அவருடைய கணவரும் ஞானஸ்நானம் எடுக்க நிறைய பேருக்கு உதவியிருக்கிறார்கள். ஸ்டெஃபானி இப்படிச் சொல்கிறார்: “யெகோவாவுக்கு தங்கள அர்ப்பணிச்சு ஞானஸ்நானம் எடுக்கறதுக்கு மத்தவங்களுக்கு உதவறதுல கிடைக்கிற சந்தோஷம் வேற எதிலயுமே கிடைக்காது.”

பாட்டு 57 எல்லாவித மக்களுக்கும் பிரசங்கிப்போம்!

^ பாரா. 5 மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கும் வேலை மட்டுமல்ல, கற்றுக்கொடுக்கும் வேலையையும் யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். இயேசு சொல்லிக்கொடுத்த எல்லா விஷயங்களையும் கடைப்பிடிப்பதற்கு மற்றவர்களுக்கு நாம் உதவ வேண்டும். கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆசை நமக்கு எப்போது வரும்? இந்த வேலையைச் செய்வதில் என்னென்ன சவால்கள் எல்லாம் வரலாம்? அந்தச் சவால்களை நாம் எப்படிச் சமாளிக்கலாம்? இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

^ பாரா. 14 சீஷராக்கும் வேலையில் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிற பங்கைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு மார்ச் 2021, காவற்கோபுரத்தில் இருக்கிற “பைபிள் மாணவர்கள் முன்னேற நாம் ஒவ்வொருவரும் எப்படி உதவலாம்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

^ பாரா. 53 படவிளக்கம்: ஒருவர் பைபிள் படிப்பு படிக்கும்போது அவருடைய வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை இந்தப் படம் காட்டுகிறது. ஒருவர் வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் இருக்கிறார். யெகோவாவைப் பற்றி அவருக்கு எதுவுமே தெரியவில்லை. பின்பு, யெகோவாவின் சாட்சிகள் ஊழியத்தில் அவரைப் பார்க்கிறார்கள். பைபிள் படிப்பதற்கு அவரும் ஒத்துக்கொள்கிறார். பைபிளில் இருக்கிற விஷயங்களைப் படித்து தன்னை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கிறார். அவரும் மற்றவர்களைச் சீஷர் ஆக்குகிறார். கடைசியாக, எல்லாரும் சேர்ந்து பூஞ்சோலை பூமியில் சந்தோஷமாக இருக்கிறார்கள்.