Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 30

யெகோவாவின் குடும்பத்தில் உங்களுக்கு இருக்கும் இடத்தை உயர்வாக மதியுங்கள்

யெகோவாவின் குடும்பத்தில் உங்களுக்கு இருக்கும் இடத்தை உயர்வாக மதியுங்கள்

“தேவதூதர்களைவிட அவனைக் கொஞ்சம் தாழ்ந்தவனாக ஆக்கினீர்கள். மகிமையையும் மேன்மையையும் அவனுக்குக் கிரீடமாகச் சூட்டினீர்கள்.”—சங். 8:5.

பாட்டு 123 தேவ அமைப்புக்கு பணிந்து செல்வோம்

இந்தக் கட்டுரையில்... *

1. இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது நமக்கு என்ன நினைக்கத் தோன்றுகிறது?

யெகோவா படைத்திருக்கிற இந்தப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தைப் பார்க்கும்போது நமக்குப் புல்லரிக்கிறது, இல்லையா? தாவீதுக்கும் அப்படித்தான் இருந்தது. அதனால்தான், ஒருதடவை ஜெபம் செய்யும்போது, “உங்கள் கைகளால் படைக்கப்பட்ட வானத்தைப் பார்க்கும்போது, நீங்கள் உண்டாக்கிய சந்திரனையும் நட்சத்திரங்களையும் பார்க்கும்போது, அற்ப மனுஷனை நீங்கள் ஞாபகம் வைப்பதற்கோ மனிதகுமாரனை அக்கறையோடு கவனித்துக்கொள்வதற்கோ அவன் யார் என்று நினைக்கத் தோன்றுகிறது” என்று சொன்னார். (சங். 8:3, 4) இந்தப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தோடு ஒப்பிடும்போது நாம் ஒன்றுமே இல்லை. ஆனாலும், யெகோவா நம்மைக் கவனிக்கிறார் என்பதைப் பார்க்கும்போது தாவீதைப் போலவே நமக்கும் நினைக்கத் தோன்றுகிறது. ஆதாம் ஏவாளையும் யெகோவா ரொம்ப அக்கறையாக கவனித்தார். வெறுமனே கவனித்துக்கொண்டது மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தில் அவர்களையும் ஒருவராக ஆக்கினார்.

2. ஆதாம் ஏவாளிடமிருந்து யெகோவா என்ன எதிர்பார்த்தார்?

2 பூமியைப் பொறுத்தவரைக்கும், ஆதாமும் ஏவாளும்தான் யெகோவாவின் முதல் பிள்ளைகள். அவர் அவர்களுக்கு அன்பான அப்பாவாக இருந்தார். அவர்கள் பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்றும் பூமியைப் பராமரிக்க வேண்டும் என்றும் அவர் எதிர்பார்த்தார். அதனால்தான், “நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்; அதைப் பண்படுத்துங்கள்” என்று சொன்னார். (ஆதி. 1:28) அவர்கள் மட்டும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து அவர் எதிர்பார்த்ததைச் செய்திருந்தால் அவர்களும் அவர்களுடைய சந்ததியில் வந்தவர்களும் என்றென்றைக்கும் கடவுளுடைய குடும்பத்தில் ஒருவராக இருந்திருக்க முடியும்.

3. யெகோவாவின் குடும்பத்தில் ஆதாம் ஏவாளுக்கு மதிப்பான ஒரு ஸ்தானம் இருந்தது என்று ஏன் சொல்லலாம்?

3 ஆதாமுக்கும் ஏவாளுக்கும் யெகோவா தன்னுடைய குடும்பத்தில் மதிப்பான ஒரு ஸ்தானத்தைக் கொடுத்திருந்தார். மனிதர்களை அவர் படைத்ததைப் பற்றி தாவீது இப்படிச் சொன்னார்: “தேவதூதர்களைவிட அவனைக் கொஞ்சம் தாழ்ந்தவனாக ஆக்கினீர்கள். மகிமையையும் மேன்மையையும் அவனுக்குக் கிரீடமாகச் சூட்டினீர்கள்.” (சங். 8:5) உண்மைதான், தேவதூதர்களுக்கு இருக்கும் அளவுக்கு சக்தியோ அறிவோ திறமைகளோ மனிதர்களுக்கு இல்லை. (சங். 103:20) ஆனாலும், அவர்களைவிட மனிதர்கள் ‘கொஞ்சம்தான் தாழ்ந்தவர்களாக’ இருக்கிறார்கள். இதை யோசித்துப் பாருங்கள். இது எவ்வளவு பெரிய விஷயம்! நம்முடைய முதல் பெற்றோருக்கு அற்புதமான ஒரு வாழ்க்கையை யெகோவா கொடுத்திருந்தார்.

4. ஆதாம் ஏவாளுக்கு என்ன ஆனது, இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப்போகிறோம்?

 4 ஆனால், வருத்தமான ஒரு விஷயம் நடந்தது. ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை. அதனால், அவருடைய குடும்பத்தில் ஒருவராக இருக்கும் வாய்ப்பை இழந்துவிட்டார்கள். அவர்களுடைய சந்ததியில் வந்தவர்களின் நிலைமையும் படுமோசமாகிவிட்டது. ஆனால், மனிதனை யெகோவா எதற்காகப் படைத்தாரோ அந்த நோக்கம் மாறவில்லை. யாரெல்லாம் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் என்றென்றைக்கும் அவருடைய பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்பட்டார். அப்படியென்றால், நம்மை அவர் உயர்வாக மதிக்கிறார் என்பதை ஏற்கெனவே எப்படிக் காட்டியிருக்கிறார்? அவருடைய குடும்பத்தில் ஒருவராக இருப்பதற்கு நாம் ஆசைப்படுகிறோம் என்பதை நாம் எப்படிக் காட்டலாம்? பூமியில் இருக்கிற அவருடைய பிள்ளைகள் என்ன ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள்? இதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

மனிதர்களை யெகோவா மதிக்கிறார் என்பதை எப்படிக் காட்டியிருக்கிறார்?

யெகோவா நம்மை மதிக்கிறார் என்பதை என்னென்ன வழிகளில் காட்டியிருக்கிறார்? (பாராக்கள் 5-11) *

5. தன்னுடைய சாயலில் யெகோவா நம்மைப் படைத்திருப்பதற்கு நாம் எப்படி அவருக்கு நன்றி காட்டலாம்?

5தன்னுடைய சாயலில் யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார். (ஆதி. 1:26, 27) அதனால், அவரிடம் இருக்கிற அன்பு, கரிசனை, உண்மைத்தன்மை, நீதி போன்ற குணங்களையும் மற்ற குணங்களையும் நம்மால் காட்ட முடியும். (சங். 86:15; 145:17) இந்தக் குணங்களை வளர்த்துக்கொள்ளும்போது யெகோவாவை நாம் மதிக்கிறோம் என்பதையும் அவருக்கு நன்றியோடு இருக்கிறோம் என்பதையும் காட்டுகிறோம். (1 பே. 1:14-16) அவருக்குப் பிடித்த மாதிரி நாம் நடந்துகொள்ளும்போது நம்மால் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்க முடியும். அவருடைய சாயலில் நம்மைப் படைத்திருப்பதால் அவருடைய குடும்பத்தில் ஒருவராக இருப்பதற்குத் தேவையான குணங்களையும் நம்மால் வளர்த்துக்கொள்ள முடியும்.

6. மனிதனை யெகோவா மதிக்கிறார் என்பதை வேறு எப்படியும் காட்டியிருக்கிறார்?

6அற்புதமான வீட்டைக் கொடுத்திருக்கிறார். ஆதாமைப் படைப்பதற்கு ரொம்ப காலத்துக்கு முன்பே மனிதர்களுக்காக அவர் பூமியைத் தயார்படுத்தினார். (யோபு 38:4-6; எரே. 10:12) மனிதன் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக எக்கச்சக்கமான விஷயங்களைப் பார்த்து பார்த்து அவர் படைத்தார். (சங். 104:14, 15, 24) சில சமயங்களில், நேரமெடுத்து அவர் படைத்ததை எல்லாம் யோசித்துப்பார்த்தார், அவையெல்லாம் ‘நன்றாக இருந்தன.’ (ஆதி. 1:10, 12, 31) அதுமட்டுமல்ல, பூமியில் அவர் படைத்திருக்கிற எல்லாவற்றின் மேலும் மனிதனுக்கு ‘அதிகாரத்தைக் கொடுத்ததன்’ மூலமாகவும் அவனைக் கௌரவப்படுத்தினார். (சங். 8:6) அவருடைய அற்புதமான படைப்புகளை மனிதன் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதும், அதிலிருந்து மனிதனுக்கு என்றென்றும் சந்தோஷம் கிடைக்க வேண்டும் என்பதும்தான் அவருடைய விருப்பம். இதை நினைக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது? இதற்காக நீங்கள் அவருக்குத் தவறாமல் நன்றி சொல்கிறீர்களா?

7. நமக்குச் சுதந்திரம் இருக்கிறது என்பதை யோசுவா 24:15 எப்படிக் காட்டுகிறது?

7யெகோவா நமக்குச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அதனால், வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று நாமாகவே முடிவெடுக்கலாம். (யோசுவா 24:15-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று நாம் முடிவெடுக்கும்போது அவர் ரொம்ப சந்தோஷப்படுவார். (சங். 84:11; நீதி. 27:11) அப்படியென்றால், நம்முடைய சுதந்திரத்தை நாம் எப்படிச் சரியாகப் பயன்படுத்தலாம்? இயேசு எப்படிப் பயன்படுத்தினார் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

8. இயேசு தன்னுடைய சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்தினார் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்லுங்கள்.

8 இயேசு எப்போதுமே தன்னைப் பற்றி யோசிக்காமல் மற்றவர்களைப் பற்றித்தான் யோசித்தார். ஒருதடவை, அவரும் அப்போஸ்தலர்களும் ரொம்ப களைப்பாக இருந்ததால் அமைதியான ஓரிடத்துக்குப் போய் ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால், அவர்களால் ஓய்வெடுக்க முடியவில்லை. ஏனென்றால், நிறைய மக்கள் அங்கே வந்துவிட்டார்கள். இயேசு தங்களுக்கு ஏதாவது கற்றுக்கொடுக்க வேண்டுமென்று அவர்கள் ரொம்ப ஆசைப்பட்டார்கள். அவர்களைப் பார்த்ததும் இயேசுவுக்கு எரிச்சல் வந்ததா? இல்லை, அவர் மனம் உருகியது. “அதனால், அவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.” (மாற். 6:30-34) இயேசுவைப் போலவே நாமும் நம்முடைய நேரத்தையும் பலத்தையும் மற்றவர்களுக்காகப் பயன்படுத்தும்போது யெகோவாவை மகிமைப்படுத்த முடியும். (மத். 5:14-16) அதுமட்டுமல்ல, யெகோவாவின் குடும்பத்தில் நாமும் ஒருவராக இருக்க ஆசைப்படுகிறோம் என்பதையும் காட்ட முடியும்.

9. பெற்றோர்கள் எதை மனதில் வைக்க வேண்டும்?

9பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் திறனை மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார். யெகோவாவை நேசிக்கவும் அவருக்குச் சேவை செய்யவும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒரு பெற்றோரா? அப்படியென்றால், யெகோவா கொடுத்திருக்கிற இந்தத் திறனையும் பொறுப்பையும் நீங்கள் உயர்வாக மதிக்கிறீர்களா? தேவதூதர்களுக்கு யெகோவா நிறைய திறன்களைக் கொடுத்திருந்தாலும் பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் திறன் அவர்களுக்கு இல்லை. இதை மனதில் வைத்து, பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை முக்கியமாக நினையுங்கள். “யெகோவா சொல்கிற விதத்தில் அவர்களைக் கண்டித்து, அவர் தருகிற புத்திமதியின்படி” வளர்க்கும் பொறுப்பை யெகோவா உங்களை நம்பி கொடுத்திருக்கிறார். (எபே. 6:4; உபா. 6:5-7; சங். 127:3) அதை நல்லபடியாகச் செய்வதற்கும் உதவுகிறார். அமைப்பைப் பயன்படுத்தி பிரசுரங்கள், வீடியோக்கள், பாடல்கள், வெப்சைட்டில் இருக்கும் கட்டுரைகள் என நிறைய உதவி செய்கிறார். நம்முடைய பிள்ளைகளை யெகோவாவும் இயேசுவும் ரொம்ப நேசிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. (லூக். 18:15-17) பெற்றோர்கள் யெகோவாவை நம்பியிருக்கும்போதும்... பிள்ளைகளை நல்லபடியாகப் பார்த்துக்கொள்வதற்கு முடிந்ததையெல்லாம் செய்யும்போதும்... யெகோவா சந்தோஷப்படுகிறார். இப்படிச் செய்யும் பெற்றோர்கள், யெகோவாவின் குடும்பத்தில் என்றென்றைக்கும் ஒருவராக இருப்பதற்கு பிள்ளைகளுக்கு உதவுகிறார்கள்.

10-11. மீட்புவிலையால் நமக்கு என்ன கிடைக்கப்போகிறது?

10யெகோவாவின் குடும்பத்தில் ஒருவராக மறுபடியும் நாம் ஆவதற்காக அவருடைய மகனையே கொடுத்திருக்கிறார்.  4-வது பாராவில் பார்த்தபடி, ஆதாமும் ஏவாளும் யெகோவாவின் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் வாய்ப்பை இழந்துவிட்டார்கள். அவர்களுடைய சந்ததியில் வந்தவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காமல் செய்துவிட்டார்கள். (ரோ. 5:12) ஆதாமும் ஏவாளும் வேண்டுமென்றே கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்காதது நியாயம்தான். ஆனால், அவர்களுடைய சந்ததியில் வந்தவர்கள் அவர்கள் மாதிரி இல்லையே! அப்படியென்றால், அவர்களுக்கு எப்படி யெகோவா அன்பு காட்டினார்? யாரெல்லாம் தனக்குக் கீழ்ப்படிகிறார்களோ அவர்களைத் தன்னுடைய குடும்பத்தில் ஒருவராகத் தத்தெடுப்பதற்காக அவர் ஓர் ஏற்பாடு செய்தார். அதாவது, தன்னுடைய ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை மீட்புப் பலியாக கொடுத்தார். (யோவா. 3:16; ரோ. 5:19) அந்தப் பலியின் மூலம் பூமியிலிருந்து 1,44,000 பேரைத் தன்னுடைய மகன்களாக தத்தெடுக்கிறார்.—ரோ. 8:15-17; வெளி. 14:1.

11 அதுமட்டுமல்ல, இன்றைக்கும் லட்சக்கணக்கான பேர் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய விருப்பத்தைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் 1,000 வருஷ ஆட்சியின் கடைசியில் நடக்கப்போகிற சோதனைக்குப் பின்பு அவருடைய குடும்பத்தில் ஒருவராக ஆகும் நம்பிக்கை இருக்கிறது. (சங். 25:14; ரோ. 8:20, 21) இந்த நம்பிக்கை இருப்பதால் தங்களைப் படைத்தவரான யெகோவாவை இன்றைக்கே அவர்கள் “தகப்பனே” என்று கூப்பிடுகிறார்கள். (மத். 6:9) அதோடு, உயிர்த்தெழுந்து வருகிறவர்களுக்கும் யெகோவா தங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். யாரெல்லாம் அவர் சொல்கிறபடி கேட்டு நடக்கிறார்களோ அவர்களெல்லாம் அவருடைய குடும்பத்தில் ஒருவராக ஆகலாம்.

12. எந்தக் கேள்விக்கு இப்போது பதில் பார்க்கப்போகிறோம்?

12 இதுவரை பார்த்தபடி, மனிதர்களை யெகோவா மதிக்கிறார் என்பதை நிறைய வழிகளில் காட்டியிருக்கிறார். அபிஷேகம் செய்யப்பட்டவர்களை ஏற்கெனவே தன்னுடைய மகன்களாகத் தத்தெடுத்து விட்டார். ‘திரள் கூட்டத்தைச்’ சேர்ந்தவர்களுக்கு, புதிய உலகத்தில் தன்னுடைய பிள்ளைகளாக ஆகும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார். (வெளி. 7:9) அப்படியென்றால், அவருடைய குடும்பத்தில் ஒருவராக இருப்பதற்கு ஆசைப்படுகிறோம் என்பதை நாம் யெகோவாவுக்கு எப்படியெல்லாம் காட்டலாம்? அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

யெகோவாவின் குடும்பத்தில் இருக்க ஆசைப்படுகிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

13. யெகோவாவின் குடும்பத்தில் ஒருவராக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (மாற்கு 12:30)

13யெகோவாவுக்கு முழு இதயத்தோடு சேவை செய்வதன் மூலம் அவர்மேல் இருக்கும் அன்பைக் காட்டுங்கள். (மாற்கு 12:30-ஐ வாசியுங்கள்.) யெகோவா நமக்காக எவ்வளவோ செய்திருக்கிறார்! அதில் முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டுமென்றால், அவரை வணங்கும் திறனைக் கொடுத்திருக்கிறார். ‘[அவருடைய] கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன்’ மூலம் அவர்மேல் வைத்திருக்கும் அன்பை நாம் காட்டலாம். (1 யோ. 5:3) இயேசுவின் கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டுமென்றும் யெகோவா எதிர்பார்க்கிறார். அதாவது, மற்றவர்களைச் சீஷராக்கி ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்ற கட்டளைக்கும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டும் என்ற கட்டளைக்கும் நாம் கீழ்ப்படிய வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். (மத். 28:19; யோவா. 13:35) இப்படி கீழ்ப்படிந்து நடக்கும் பிள்ளைகளுக்கு உலகம் முழுவதும் இருக்கிற தன்னுடைய குடும்பத்தில் ஓர் இடத்தைக் கொடுப்பார்.—சங். 15:1, 2.

14. மற்றவர்கள்மேல் நாம் அன்பு வைத்திருக்கிறோம் என்பதை எப்படியெல்லாம் காட்டலாம்? (மத்தேயு 9:36-38; ரோமர் 12:10)

14மற்றவர்கள்மேல் அன்பு காட்டுங்கள். யெகோவாவிடம் இருக்கிற குணங்களிலேயே அன்புதான் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு குணம். (1 யோ. 4:8) அவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்வதற்கு முன்பே, அவர் நம்மேல் அன்பு காட்டியிருக்கிறார். (1 யோ. 4:9, 10) மற்றவர்கள்மேல் அன்பு காட்டுவதன் மூலம் நாம் அவரைப் போலவே நடந்துகொள்ளலாம். (எபே. 5:1) அப்படி அன்பு காட்டுவதற்கான சிறந்த வழி, அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவுவதுதான். காலம் இருக்கும்போதே இதை நாம் செய்ய வேண்டும். (மத்தேயு 9:36-38-ஐ வாசியுங்கள்.) இப்படிச் செய்யும்போது, மற்றவர்களாலும் யெகோவாவின் குடும்பத்தில் ஒருவராக ஆக முடியும். ஒருவர் ஞானஸ்நானம் எடுத்த பின்பும் அவர்மேல் நாம் அன்பும் மரியாதையும் காட்ட வேண்டும். (1 யோ. 4:20, 21) இதை எப்படிச் செய்யலாம்? ஒரு வழி, அவர் எதைச் செய்தாலும் நல்ல எண்ணத்தோடுதான் செய்வார் என்று நம்ப வேண்டும். ஒருவேளை, அவர் செய்த ஏதாவது ஒரு விஷயம் நமக்குப் புரியவில்லை என்றால், கெட்ட எண்ணத்தோடு அவர் செய்திருக்க மாட்டார் என்று நம்ப வேண்டும். நம்மைவிட அவரை உயர்ந்தவராக நினைத்து மதிக்க வேண்டும்.—ரோமர் 12:10-ஐ வாசியுங்கள்; பிலி. 2:3.

15. நாம் யாரை இரக்கத்தோடும் அன்போடும் நடத்த வேண்டும்?

15எல்லாருக்கும் இரக்கம் காட்டுங்கள். யெகோவாவின் குடும்பத்தில் ஒருவராக இருந்து அவரை என்றென்றைக்கும் அப்பா என்று கூப்பிடுகிற பாக்கியம் கிடைக்க வேண்டுமென்றால், பைபிள் சொல்கிறபடி நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, எல்லாரையும் இரக்கத்தோடு நடத்த வேண்டும் என்று இயேசு சொன்னார். நம்மை எதிர்ப்பவர்களையும் அப்படி நடத்த வேண்டும் என்று சொன்னார். (லூக். 6:32-36) ஆனால், சில சமயங்களில் இப்படிச் செய்வது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில், இயேசுவைப் போலவே யோசிப்பதற்கும் நடப்பதற்கும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதற்கும் இயேசுவைப் போலவே நடந்துகொள்வதற்கும் நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யும்போது யெகோவாவின் குடும்பத்தில் என்றென்றைக்கும் நாம் இருக்க விரும்புகிறோம் என்பதைக் காட்டுகிறோம்.

16. யெகோவாவின் குடும்பத்துக்கு இருக்கும் நல்ல பெயரை நாம் எப்படிக் காப்பாற்றலாம்?

16யெகோவாவின் குடும்பத்துக்கு இருக்கும் நல்ல பெயரைக் காப்பாற்றுங்கள். பொதுவாக, ஒரு குடும்பத்தில் அண்ணன் என்ன செய்கிறானோ, தம்பியும் அதே மாதிரிதான் செய்வான். பைபிள் சொல்வதுபோல் அண்ணன் நடந்தால், தம்பியும் அதே மாதிரி நடப்பான். ஆனால், அண்ணன் கெட்டது செய்தால் தம்பிக்கும் கெட்டது செய்ய வேண்டும் என்ற ஆசை வரலாம். யெகோவாவின் குடும்பத்தைப் பொறுத்தவரைக்கும் இதுதான் உண்மை. ரொம்ப வருஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்த ஒரு சகோதரனோ சகோதரியோ விசுவாசதுரோகியாக மாறும்போது... ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழும்போது... நேர்மையில்லாமல் நடக்கும்போது... அதே மாதிரி நடக்க வேண்டும் என்ற எண்ணம் மற்றவர்களுக்கும் வரலாம். இப்படிச் செய்பவர்கள், யெகோவாவின் குடும்பத்துக்கு இருக்கும் நல்ல பெயரைக் கெடுக்கிறார்கள். (1 தெ. 4:3-8) ஆனால், நாம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கெட்டது செய்பவர்கள் பின்னால் போய் நம்முடைய அன்பான அப்பா யெகோவாவை விட்டு விலகிவிடக் கூடாது.

17. எப்படிப்பட்ட எண்ணங்கள் நமக்கு இருக்கக் கூடாது, ஏன்?

17பணம் பொருள்மேல் நம்பிக்கை வைக்காமல் யெகோவாமேல் நம்பிக்கை வையுங்கள். அவருடைய அரசாங்கத்தையும் நீதிநெறிகளையும் முதலிடத்தில் வைத்தால் நமக்குத் தேவையான சாப்பாடு, துணிமணி, இருக்க இடம் என எல்லாம் தருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். (சங். 55:22; மத். 6:33) இந்த வாக்குறுதியை நாம் நம்பினால் பணமும் பொருளும் நமக்கு உண்மையான சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் தரும் என்று நினைக்க மாட்டோம். யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும்போது மட்டும்தான் நமக்கு உண்மையான சந்தோஷமும் சமாதானமும் கிடைக்கும். (பிலி. 4:6, 7) ஒருவேளை, நிறைய பொருள்களை நம்மால் வாங்க முடியலாம். ஆனால், கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: ‘இதெல்லாம் ரொம்ப அவசியமாயிடுச்சு. இது இல்லாம நான் எப்படி வாழ்றது?’ என்ற நிலைக்கு நீங்கள் போய்விடுவீர்களா? இதையெல்லாம் பராமரிப்பதிலேயே உங்களுடைய நேரமும் சக்தியும் போய்விடுமா? யெகோவாவின் குடும்பத்தில் இருக்கும் நம் எல்லாருக்கும் அவர் ஒரு முக்கியமான வேலையைக் கொடுத்திருக்கிறார். அதைச் சுறுசுறுப்பாக செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதனால், எந்த விஷயமும் நம்மைத் திசைதிருப்புவதற்கு நாம் இடங்கொடுக்கக் கூடாது. இயேசுவைப் பின்பற்றாமல் போன அந்த இளைஞன் மாதிரி நாமும் இருக்கக் கூடாது. அவனிடம் இருக்கும் சொத்து அவனுக்கு அவ்வளவு பெரிதாகத் தெரிந்ததால், யெகோவாவுக்குச் சேவை செய்கிற வாய்ப்பையும் கடவுளுடைய மகனாகத் தத்தெடுக்கப்படுகிற பாக்கியத்தையும் இழந்துவிட்டான்.—மாற். 10:17-22.

என்றென்றும் என்ன ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன?

18. கீழ்ப்படிந்து நடக்கும் ஒவ்வொருவரையும் யெகோவா எப்படிக் கௌரவப்படுத்துவார், என்ன ஆசீர்வாதங்களைக் கொடுப்பார்?

18 யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் எல்லாருக்குமே என்றென்றைக்கும் அவரை நேசிப்பதற்கும் வணங்குவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். இது எவ்வளவு பெரிய பாக்கியம்! எவ்வளவு பெரிய கௌரவம்!! பூமியில் வாழும் நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்? மனிதர்களுக்காக யெகோவா படைத்த இந்த அழகான வீட்டை நன்றாகப் பராமரிப்பதற்கான வாய்ப்பும் சந்தோஷமும் கிடைக்கும். கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் இந்தப் பூமியை புத்தம் புது பூமியாக மாற்றப் போகிறது. ஆதாமும் ஏவாளும் யெகோவாவின் குடும்பத்தைவிட்டு விலகிப் போனதால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் எல்லாவற்றையும் இயேசு சரிசெய்யப் போகிறார். இறந்துபோன லட்சக்கணக்கானவர்களை யெகோவா உயிரோடு கொண்டுவந்து, நோய்நொடி இல்லாமல், முடிவில்லாத வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்பை அவர்களுக்குக் கொடுக்கப்போகிறார். (லூக். 23:42, 43) இந்தப் பூமியில் வாழ்கிற எல்லாரும் பரிபூரணத்தை நோக்கி தொடர்ந்து முன்னேறுவார்கள். அந்தச் சமயத்தில் இந்தப் பூமியில் வாழப்போகிற யெகோவாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தாவீது எழுதியபடியே “மகிமையையும் மேன்மையையும்” அனுபவிப்பார்கள்.—சங். 8:5.

19. நீங்கள் எதை மனதில் வைக்க வேண்டும்?

19 நீங்கள் ‘திரள் கூட்டத்தைச்’ சேர்ந்தவர்களில் ஒருவரா? அப்படியென்றால், உங்களுக்கு அற்புதமான ஒரு வாழ்க்கை காத்துக்கொண்டிருக்கிறது. யெகோவா உங்களை ரொம்ப நேசிக்கிறார், அவருடைய குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதனால், அவருக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்வதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். அவர் தந்த வாக்குறுதிகளை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் வாழுங்கள். அவரை வணங்குவதற்கும் என்றென்றும் அவரைப் புகழ்வதற்கும் அவர் கொடுத்திருக்கிற அந்த வாய்ப்பை உயர்வாக மதியுங்கள்!

பாட்டு 107 கடவுள் காட்டும் அன்பின் வழி

^ பாரா. 5 ஒரு குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பைச் சரியாகச் செய்ய வேண்டும். ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும். உதாரணத்துக்கு, அப்பா குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அம்மா அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். பிள்ளைகள், அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். யெகோவாவுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் அவர் சில விஷயங்களை எதிர்பார்க்கிறார். அவர் எதிர்பார்க்கிறபடி நாம் நடந்துகொண்டால் என்றென்றைக்கும் அவருடைய குடும்பத்தில் ஒருவராக இருக்க முடியும்.

^ பாரா. 55 படவிளக்கம்: தன்னுடைய சாயலில் மனிதர்களை யெகோவா படைத்திருப்பதால் ஒரு கணவராலும் மனைவியாலும் ஒருவருக்கொருவர் அன்பையும் கரிசனையையும் காட்ட முடிகிறது. தங்களுடைய பிள்ளைகளிடமும் அந்தக் குணங்களைக் காட்ட முடிகிறது. அந்தத் தம்பதி யெகோவாவை நேசிக்கிறார்கள். அதனால், பிள்ளைகள் யெகோவாவை நேசிக்கவும் அவருக்குச் சேவை செய்யவும் கற்றுக்கொடுக்கிறார்கள். பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் திறனை யெகோவா கொடுத்ததால்தான், அவர்களால் இப்படியெல்லாம் செய்ய முடிகிறது. யெகோவா ஏன் இயேசுவை மீட்புவிலையாகக் கொடுத்தார் என்பதைப் பற்றி விளக்குகிற வீடியோவைக் காட்டுகிறார்கள். வரப்போகிற பூஞ்சோலையைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கிறார்கள். அந்தச் சமயத்தில், பூமியையும் மிருகங்களையும் நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லிக்கொடுக்கிறார்கள்.