Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 32

படைத்தவர்மேல் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்

படைத்தவர்மேல் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்

“விசுவாசம் என்பது . . . பார்க்க முடியாத காரியங்கள் நிஜமானவை என்பதற்குத் தெளிவான அத்தாட்சியை பார்ப்பதாகும்.”—எபி. 11:1.

பாட்டு 11 யெகோவாவை போற்றும் படைப்புகள்

இந்தக் கட்டுரையில்... *

1. நம்மைப் படைத்தவரைப் பற்றி உங்களுடைய அப்பா அம்மா என்ன சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்?

உங்களுடைய அப்பா அம்மா யெகோவாவின் சாட்சியா? அப்படியென்றால், நீங்கள் சின்னப் பிள்ளையாக இருந்ததிலிருந்தே யெகோவாவைப் பற்றி உங்களுக்குச் சொல்லிக்கொடுத்திருப்பார்கள். யெகோவாதான் எல்லாவற்றையும் படைத்தார்... அவரிடம் அருமையான குணங்கள் இருக்கின்றன... இந்தப் பூமி முழுவதும் பூஞ்சோலையாக மாற வேண்டுமென அவர் ஆசைப்படுகிறார்... என்றெல்லாம் உங்களுக்குச் சொல்லிக்கொடுத்திருப்பார்கள்.—ஆதி. 1:1; அப். 17:24-27.

2. படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்று நம்புகிறவர்களைப் பற்றிச் சிலர் என்ன நினைக்கிறார்கள்?

2 இன்றைக்கு நிறைய பேர் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றே நம்புவதில்லை. அப்படியிருக்கும்போது, அவர்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று எப்படி நம்புவார்கள்? எல்லாம் தானாகவே உருவானது என்று அவர்கள் சொல்கிறார்கள். முதலில், எளிமையான உயிர்கள் தோன்றியதாகவும் பின்பு பரிணாமம் மூலம் அவையெல்லாம் சிக்கலான உயிர்களாக மாறியதாகவும் அவர்கள் சொல்கிறார்கள். இப்படிச் சொல்கிறவர்களில் சிலர் ரொம்ப படித்தவர்கள். பைபிள் சொல்வதெல்லாம் அறிவியலின்படி தப்பு என்று அவர்கள் சொல்கிறார்கள். படிக்காதவர்களும் விவரம் தெரியாதவர்களும்தான் கடவுளை நம்புவார்கள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.

3. நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்வது ஏன் முக்கியம்?

3 ரொம்ப படித்தவர்கள் சொல்கிற கருத்துகளைக் கேட்டு நம்முடைய விசுவாசம் ஆட்டம் காணாமல் இருக்க வேண்டுமென்றால் யெகோவாதான் எல்லாவற்றையும் படைத்தார் என்று நாம் ஏன் நம்புகிறோம் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும். மற்றவர்கள் சொல்லிக்கொடுத்ததால் அதை நம்புகிறோமா? அல்லது நாமே ஆராய்ச்சி செய்து அத்தாட்சிகளின் அடிப்படையில் நம்புகிறோமா? (1 கொ. 3:12-15) நாம் எவ்வளவு வருஷங்கள் யெகோவாவின் சாட்சியாக இருந்தாலும், நாம் எல்லாருமே நம்முடைய விசுவாசத்தைத் தொடர்ந்து பலப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், பைபிளுக்கு விரோதமாக இருக்கிற ‘தத்துவங்களையும் வஞ்சனையான வீண் கருத்துகளையும்’ நம்பி நாம் ஏமாந்துபோக மாட்டோம். (கொலோ. 2:8; எபி. 11:6) அப்படி ஏமாந்துவிடாமல் இருக்க, இந்தக் கட்டுரையில் மூன்று கேள்விகளுக்கு நாம் பதில்களைப் பார்ப்போம். (1) படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்று நிறைய பேர் ஏன் நம்புவதில்லை? (2) எல்லாவற்றையும் படைத்தவரான யெகோவாமேல் நாம் எப்படி விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளலாம்? (3) அந்த விசுவாசம் குறையாமல் நாம் எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்?

படைத்தவர் ஒருவர் இருக்கிறாரென ஏன் நிறைய பேர் நம்புவதில்லை?

4. எபிரெயர் 11:1 சொல்கிறபடி, எது உண்மையான விசுவாசம்?

4 எந்த ஆதாரமும் இல்லாமல் எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவதுதான் விசுவாசம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், பைபிளைப் பொறுத்தவரைக்கும் அப்படி நம்புவது விசுவாசம் இல்லை. (எபிரெயர் 11:1-ஐ வாசியுங்கள்.) பார்க்க முடியாத காரியங்கள் உண்மை என்பதை தெளிவான அத்தாட்சிகளுடன் நம்புவதுதான் விசுவாசம். உதாரணத்துக்கு, யெகோவாவையும் இயேசுவையும் நம்மால் பார்க்க முடியாது. ஆனால், அவர்கள் நிஜமாகவே இருக்கிறார்கள் என்பதற்குத் தெளிவான அத்தாட்சிகள் இருக்கின்றன. பரலோக அரசாங்கத்தையும் பார்க்க முடியாது. ஆனால், அதுவும் நிஜம் என்பதற்குத் தெளிவான அத்தாட்சி இருக்கிறது. (எபி. 11:3) உயிர்வேதியியல் அறிஞராக இருக்கும் ஒரு யெகோவாவின் சாட்சி இப்படிச் சொல்கிறார்: “யெகோவாவின் சாட்சிகள் அறிவியல் ஆதாரத்த ஒதுக்கிதள்றது இல்ல, எல்லாத்தையும் ஆதாரத்தோடதான் நம்பறாங்க.”

5. எல்லாம் தானாகவே உருவானதாக ஏன் நிறைய பேர் நம்புகிறார்கள்?

5 ‘இவ்வளவு தெளிவான அத்தாட்சி இருந்தும் கடவுள்தான் எல்லாத்தையும் படைச்சாருங்கிறத ஏன் நிறைய பேர் நம்பறதில்ல?’ என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். ஏனென்றால், அதற்கான ஆதாரங்களை அவர்கள் தேடுவதில்லை. ராபர்ட் என்ற யெகோவாவின் சாட்சி அவருடைய சின்ன வயதில் நடந்ததைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “பள்ளியில எனக்கு படைப்ப பத்தி சொல்லி தந்ததே இல்ல. அதனால, அப்படி ஒரு விஷயம் இருக்கறதாவே நான் நம்பல. ஆனா எனக்கு 22 வயசு இருந்தப்ப, யெகோவாவின் சாட்சிகள சந்திச்சேன். கடவுள்தான் எல்லாத்தையும் படைச்சாருங்கறதுக்கு பைபிள்ல இருந்து அவங்க ஆதாரத்த காட்டுனாங்க. அது நியாயமாவும் நம்பற மாதிரியும் இருந்துச்சு.” *—“ பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள்!” என்ற பெட்டியைப் பாருங்கள்.

6. படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்று ஏன் சிலர் நம்புவதில்லை?

6 ‘நான் எதயுமே கண்ணுல பாத்தாதான் நம்புவேன், கடவுளதான் கண்ணுல பாக்க முடியாதே, அப்புறம் எப்படி நம்பறது?’ என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், கண்ணில் பார்க்காத சில விஷயங்களை அவர்கள் நம்பத்தான் செய்கிறார்கள். ஏனென்றால், அதற்குத் தெளிவான அத்தாட்சிகள் இருக்கின்றன. புவியீர்ப்பு விசை அதற்கு ஓர் உதாரணம். அதேபோல், ‘பார்க்க முடியாத [மற்ற] காரியங்களும் நிஜம்’ என்பதற்குத் தெளிவான அத்தாட்சிகள் இருக்கின்றன. (எபி. 11:1) அந்த அத்தாட்சிகளை வைத்து நம்புவதைதான் விசுவாசம் என்று பைபிள் சொல்கிறது. ஆனால், அந்த அத்தாட்சிகளைப் பார்ப்பதற்கு நம் நேரத்தையும் சக்தியையும் செலவு செய்ய வேண்டும். அப்படிச் செய்வதற்கு நிறைய பேருக்கு ஆர்வம் இல்லை. அதனால், கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

7. படித்தவர்கள் எல்லாரும் படைத்தவர் ஒருவர் இல்லை என்று நினைக்கிறார்களா? விளக்குங்கள்.

7 ஆனால், போதுமான ஆதாரங்களை அலசிப் பார்த்த பின்பு, விஞ்ஞானிகள் சிலர் கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று நம்புகிறார்கள். * ராபர்ட்டைப் போன்ற சிலர், படைத்தவர் ஒருவர் இல்லை என்று நம்புவதற்குக் காரணம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அதைப் பற்றிச் சொல்லிக் கொடுக்காததுதான். ஆனால், விஞ்ஞானிகள் சிலர் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு அவரை நேசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். நாம் ரொம்ப படித்திருந்தாலும் சரி, அவ்வளவாகப் படிக்காவிட்டாலும் சரி, இந்த விஞ்ஞானிகளைப் போலவே நாம் எல்லாரும் கடவுள்மேல் இருக்கும் விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும். அதை நாம்தான் செய்ய வேண்டும், நமக்காக வேறு யாரும் செய்ய முடியாது.

படைத்தவர்மேல் எப்படி விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளலாம்?

8-9. (அ) எந்தக் கேள்விக்கான பதில்களை இப்போது பார்க்கப்போகிறோம்? (ஆ) படைப்புகளைப் பற்றிப் படித்து தெரிந்துகொள்வது எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?

8 படைத்தவர்மேல் நீங்கள் எப்படி விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளலாம்? நான்கு வழிகளை இப்போது பார்க்கலாம்.

9படைப்பைப் பற்றிப் படித்து தெரிந்துகொள்ளுங்கள். விலங்குகள், தாவரங்கள், நட்சத்திரங்கள் என எல்லாவற்றையும் கவனமாகப் பார்க்கும்போது படைத்தவர்மேல் இருக்கிற விசுவாசத்தை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும். (சங். 19:1; ஏசா. 40:26) படைப்புகளைப் பற்றி எந்தளவுக்கு நீங்கள் படித்து தெரிந்துகொள்கிறீர்களோ, அந்தளவுக்கு யெகோவாதான் எல்லாவற்றையும் படைத்தார் என்ற நம்பிக்கை உங்களுக்கு வரும். படைப்புகளைப் பற்றிய விவரமான தகவல்கள் நம்முடைய பிரசுரங்களில் இருக்கின்றன. அதையெல்லாம் புரிந்துகொள்வது கஷ்டம் என்று நினைத்து படிக்காமல் இருந்துவிடாதீர்கள், உங்களால் முடிந்தளவுக்குக் கற்றுக்கொள்ளுங்கள். சமீப வருஷங்களில் நடந்த மண்டல மாநாடுகளில், படைப்புகளைப் பற்றி அழகான வீடியோக்கள் வந்திருக்கின்றன. அவையெல்லாம் இப்போது நம்முடைய வெப்சைட்டில் இருக்கின்றன, மறக்காமல் அவற்றை மறுபடியும் பாருங்கள்.

10. படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்பதைப் படைப்புகள் எப்படி நிரூபிக்கின்றன? (ரோமர் 1:20)

10 படைப்புகளைப் பற்றி ஆழமாகப் படித்து தெரிந்துகொள்ளும்போது அவற்றைப் படைத்தவரைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். (ரோமர் 1:20-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான வெப்பத்தை சூரியன் தருகிறது. அதேசமயம், உயிருக்கு ஆபத்தான புறஊதா கதிர்களையும் அது வெளியிடுகிறது. இருந்தாலும், அந்தக் கதிர்கள் நமக்குக் கெடுதல் பண்ணுவதில்லை. எப்படி? பூமியைச் சுற்றிலும் ஓசோன் வாயு ஒரு படலம்போல் இருக்கிறது. ஆபத்தான புறஊதா கதிர்களை அது வடிகட்டிவிட்டு, நமக்குத் தேவையான வெப்பக் கதிர்களை அனுப்புகிறது. ஒருவேளை, சூரியன் அதிகமான புறஊதா கதிர்களை வெளியிட்டால் என்ன ஆகும்? ஓசோன் படலத்தில் இருக்கிற வாயுவின் அளவும் அதிகமாகும். இதையெல்லாம் யோசித்துப் பார்க்கும்போது ரொம்ப ஞானமான படைப்பாளர் ஒருவர் இருக்க வேண்டும் என்பது புரிகிறது, இல்லையா? அதேசமயம், மனிதர்கள்மேல் அவர் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதும் தெரிகிறது, இல்லையா?

11. படைத்தவர்மேல் விசுவாசத்தை வளர்ப்பதற்குத் தேவையான தகவல்களை நீங்கள் எங்கே பார்க்கலாம்? (“ விசுவாசத்தை வளர்க்க உதவும் சில பிரசுரங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

11 யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேட்டிலும் jw.org வெப்சைட்டிலும் படைப்புகளைப் பற்றிய அற்புதமான தகவல்கள் இருக்கின்றன. இதைப் படிக்கும்போது, உங்களுடைய விசுவாசம் பலமாகும். அவற்றில், “யாருடைய கைவண்ணம்” என்ற தலைப்பில் வருகிற வீடியோக்களையும் கட்டுரைகளையும் நீங்கள் பார்க்கலாம். அதோடு, விலங்குகளைப் பற்றியும், மற்ற படைப்புகளைப் பற்றியும் அருமையான தகவல்கள் சுருக்கமாகவும் அழகாகவும் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, இயற்கையை காப்பி அடிப்பதற்கு விஞ்ஞானிகள் எப்படியெல்லாம் முயற்சி செய்கிறார்கள் என்பதற்குச் சில உதாரணங்களும் இருக்கின்றன.

12. பைபிளைப் படிக்கும்போது, நீங்கள் எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

12பைபிளை ஆழமாகப் படியுங்கள். உயிர்வேதியியல் அறிஞராக இருந்த ஒருவரைப் பற்றி 4-வது பாராவில் பார்த்தோம். படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்று ஆரம்பத்தில் அவருக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், போக போக நம்ப ஆரம்பித்தார். “அறிவியல்ல படிச்சத வெச்சு மட்டுமே நான் விசுவாசத்த வளர்த்துக்கல, பைபிளையும் ஆழமா படிக்க வேண்டியிருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். ஒருவேளை, பைபிளைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கலாம். ஆனால், படைத்தவர்மேல் இருக்கிற விசுவாசத்தை வளர்த்துக்கொள்வதற்கு, நீங்கள் தொடர்ந்து அதைப் படிக்க வேண்டும். (யோசு. 1:8; சங். 119:97) அப்படிப் படிக்கும்போது வரலாற்றில் நடந்த சில சம்பவங்களை பைபிள் எவ்வளவு துல்லியமாகச் சொல்லியிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். அதில் இருக்கிற தீர்க்கதரிசனங்களைப் பாருங்கள், பைபிள் புத்தகங்கள் ஒன்றோடொன்று எப்படி ஒத்துப்போகின்றன என்பதையும் பாருங்கள். இப்படியெல்லாம் செய்யும்போது, அன்பான... ஞானமான... ஒரு படைப்பாளர்தான் நம்மைப் படைத்திருக்கிறார் என்பதிலும், அவர்தான் நமக்கு பைபிளைக் கொடுத்திருக்கிறார் என்பதிலும் உங்களுக்கு இருக்கிற விசுவாசம் அதிகமாகும். *2 தீ. 3:14; 2 பே. 1:21.

13. பைபிளில் இருக்கும் ஞானமான ஆலோசனைக்கு ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.

13 பைபிளைப் படிக்கும்போது அதில் இருக்கும் ஆலோசனைகள் எவ்வளவு பிரயோஜனமாக இருக்கின்றன என்பதைக் கவனியுங்கள். உதாரணத்துக்கு, பண ஆசை இருந்தால், ‘பலவிதமான வேதனைகள்’ வரும் என்று ரொம்ப காலத்துக்கு முன்பே பைபிள் சொல்லியிருக்கிறது. (1 தீ. 6:9, 10; நீதி. 28:20; மத். 6:24) அந்த ஆலோசனை இந்தக் காலத்துக்கு ஒத்துவருமா? இன்றைக்கு இருக்கிற மனிதர்களுடைய குணங்களைப் பற்றி விவரிக்கிற ஒரு புத்தகம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்: “பொதுவாக, பணம் பொருளோடு வசதியாக இருக்க வேண்டும், இதுதான் வாழ்க்கை என்று நினைப்பவர்களுக்குச் சந்தோஷம் கிடைப்பதில்லை, மனச்சோர்வுதான் வருகிறது. நிறைய பணம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து, அதற்காக உழைக்கிறவர்களும் மனச்சோர்வால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உடல்நல பிரச்சினைகளும் வருகின்றன.” அப்படியென்றால், பண ஆசை கூடாது என்று பைபிள் கொடுக்கும் எச்சரிக்கை எவ்வளவு பிரயோஜனமாக இருக்கிறது! இதைப்போல, பைபிளில் இருக்கிற வேறு ஆலோசனைகள் உங்கள் ஞாபகத்துக்கு வருகிறதா? அந்த ஆலோசனைகளை நாம் மதித்தால், நம்மைப் படைத்தவர் எவ்வளவு அன்பாக நமக்குப் பிரயோஜனமான தகவல்களைக் கொடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வோம். எப்போதும் அவரையே நம்பி இருப்போம். (யாக். 1:5) இப்படிச் செய்யும்போது, நம்முடைய வாழ்க்கை உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கும்.—ஏசா. 48:17, 18.

14. பைபிளைப் படிக்கும்போது யெகோவாவைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்துகொள்வீர்கள்?

14பைபிளை சரியான குறிக்கோளோடு படியுங்கள். அதாவது, யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற குறிக்கோளோடு படியுங்கள். (யோவா. 17:3) அப்படிப் படிக்கும்போது, அவருடைய குணங்களைப் பற்றி உங்களால் தெரிந்துகொள்ள முடியும். அந்தக் குணங்கள்தான் படைப்புகளிலும் தெரிகின்றன என்பது உங்களுக்குப் புரியவரும். அதனால், யெகோவா நிஜமாகவே இருக்கிறார் என்றும், அவர் ஏதோ ஒரு கற்பனை கதாபாத்திரம் கிடையாது என்றும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். (யாத். 34:6, 7; சங். 145:8, 9) அவரைப் பற்றி தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள அவர்மேல் இருக்கிற விசுவாசம் வளரும், அன்பு ஆழமாகும், அவரிடம் இருக்கிற நட்பும் பலமாகும்.

15. நீங்கள் கற்றுக்கொண்டதை மற்றவர்களிடம் சொல்வது உங்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?

15நீங்கள் கற்றுக்கொண்டதை மற்றவர்களிடம் சொல்லுங்கள். அப்படிச் சொல்ல சொல்ல உங்களுடைய விசுவாசம் பலமாகும். நீங்கள் யாரிடமாவது பேசும்போது, ‘கடவுளே இல்ல’ என்று அவர் சொல்வதாக வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு எப்படிப் பதில் சொல்வது என்று உங்களுக்குத் தெரியவில்லை. இப்போது நீங்கள் என்ன செய்யலாம்? கடவுள் இருக்கிறார் என்று பைபிள் எப்படிக் காட்டுகிறது என்பதை நம்முடைய பிரசுரங்களிலிருந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள். அனுபவம் இருக்கிற சகோதர சகோதரிகளிடம் உதவி கேட்கலாம். நீங்கள் கற்றுக்கொண்டதை உங்களிடம் கேள்வி கேட்டவரிடம் சொல்லுங்கள். (1 பே. 3:15ஆ) அவர் அதை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ உங்களுடைய விசுவாசம் பலமாகும். அப்படி, உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொண்டால் இந்த உலகத்தில் ரொம்ப படித்தவர்கள்... ஞானிகள்... என்று சொல்லிக்கொள்பவர்கள் தவறான தகவல்களை உங்களிடம் சொல்லும்போது அதை நம்பி நீங்கள் ஏமாந்து போகமாட்டீர்கள்.

விசுவாசம் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

16. நம்முடைய விசுவாசத்தைத் தொடர்ந்து பலப்படுத்தாவிட்டால் என்ன ஆகிவிடலாம்?

16 நாம் எவ்வளவு வருஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்துகொண்டிருந்தாலும், தொடர்ந்து விசுவாசத்தைப் பலப்படுத்துவது முக்கியம். இல்லையென்றால், நம்முடைய விசுவாசம் பலவீனமாகிவிடும். விசுவாசம் என்றால் என்ன என்பதைக் கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பாருங்கள். பார்க்க முடியாத காரியங்கள் உண்மை என்பதைத் தெளிவான அத்தாட்சிகளை வைத்து நம்புவதுதான் விசுவாசம். பொதுவாக, ஒரு விஷயத்தைப் பார்க்க முடியவில்லை என்றால், நாம் அதை மறந்துவிடுவோம். அதைப் போலதான் விசுவாசமும். அதனால்தான், விசுவாசம் இல்லாமல் போவதை நம்மை ‘எளிதில் சிக்க வைக்கிற பாவம்’ என்று பவுல் சொன்னார். (எபி. 12:1) அப்படியென்றால், அந்தப் பாவத்தில் விழுந்துவிடாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?—2 தெ. 1:3.

17. விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

17 முதலில், யெகோவாவின் சக்திக்காக அவரிடம் கெஞ்சிக் கேளுங்கள். அதுவும் அடிக்கடி கேளுங்கள். ஏனென்றால், விசுவாசம் என்பது அவருடைய சக்தியால் உண்டாகிற குணங்களில் ஒன்று. (கலா. 5:22, 23) அவருடைய சக்தி இல்லாமல் நம்மால் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளவோ பலப்படுத்திக்கொள்ளவோ முடியாது. அவருடைய சக்திக்காக நாம் தொடர்ந்து கேட்டால் அவர் நிச்சயம் கொடுப்பார். (லூக். 11:13) நீங்கள் ஜெபம் செய்யும்போது, “எங்களுடைய விசுவாசத்தை அதிகமாக்குங்கள்” என்று கேட்கலாம்.—லூக். 17:5.

18. சங்கீதம் 1:2, 3 சொல்வதுபோல் செய்வதற்கு இன்று நமக்கு என்ன பாக்கியம் இருக்கிறது?

18 இரண்டாவதாக, பைபிளைத் தவறாமல் படியுங்கள். (சங்கீதம் 1:2, 3-ஐ வாசியுங்கள்.) முதலாம் சங்கீதத்தை எழுதிய சமயத்தில், திருச்சட்டத்தின் முழு பிரதி இஸ்ரவேலர்கள் கொஞ்சம் பேரிடம்தான் இருந்தது. ஆனால், ராஜாக்களுக்கும் குருமார்களுக்கும் அதன் நகல்கள் கிடைத்தன. அதே சமயத்தில், ‘ஆண்களுக்கும், பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும்’ மற்ற தேசத்து ஜனங்களுக்கும் ஏழு வருஷத்துக்கு ஒருதடவை திருச்சட்டத்தை வாசித்துக் காட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. (உபா. 31:10-12) இயேசுவின் நாட்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள். வேதாகமச் சுருள்கள் கொஞ்சம் பேரிடமும், ஜெபக்கூடங்களிலும்தான் இருந்தன. ஆனால், இன்றைக்கு நிலைமை எப்படி இருக்கிறது? பைபிளை முழுமையாகவோ பகுதியாகவோ நிறைய பேரால் படிக்க முடிகிறது. அந்தளவுக்கு அது தாராளமாகக் கிடைக்கிறது. இது எவ்வளவு பெரிய பாக்கியம்! இந்தப் பாக்கியத்தை நாம் உயர்வாக மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

19. நம்முடைய விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

19 பைபிள் நம்மிடம் இருப்பதை ஒரு பாக்கியமாக நினைத்தால் நாம் அதைத் தவறாமல் படிப்போம். நேரம் இருந்தால் படித்துக்கொள்ளலாம் என்று நினைக்க மாட்டோம். இப்படித் தொடர்ந்து பைபிளைப் படித்தால் நம்முடைய விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்ள முடியும்.

20. என்ன செய்வதற்கு நாம் உறுதியாக இருக்க வேண்டும்?

20 படைத்தவர் ஒருவர் இருப்பதை இந்த உலகத்தின் ‘ஞானிகளும் அறிவாளிகளும்’ நம்புவதில்லை. (மத். 11:25, 26) ஆனால், பைபிளில் இருக்கிற ஆதாரங்களை வைத்து, அப்படி ஒருவர் இருக்கிறார் என்பதை நாம் நம்புகிறோம். பைபிளைப் படிப்பதால், இந்த உலகம் ஏன் இவ்வளவு சீரழிந்து கிடக்கிறது என்றும் யெகோவா சீக்கிரத்தில் என்ன செய்யப்போகிறார் என்றும் நமக்குத் தெரியும். அதனால், நம்மைப் படைத்தவர்மேல் இருக்கிற விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். அவர்மேல் மற்றவர்கள் விசுவாசம் வைப்பதற்கும் நாம் உதவலாம். (1 தீ. 2:3, 4) சீக்கிரத்தில், இந்த உலகத்தில் இருக்கிற எல்லாருமே ‘எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மகிமையை . . . பெற்றுக்கொள்ளத் தகுதியானவர். ஏனென்றால், நீங்கள்தான் எல்லாவற்றையும் படைத்தீர்கள்’ என்று சொல்லும் காலம் வரப்போகிறது. (வெளி. 4:11) அந்தக் காலத்துக்காக நாம் எல்லாருமே ஆசை ஆசையாகக் காத்திருக்கலாம்.

பாட்டு 2 யெகோவா என்பதே உங்கள் பெயர்

^ பாரா. 5 எல்லாவற்றையுமே யெகோவாதான் படைத்தார் என்று பைபிள் சொல்கிறது. ஆனால், நிறைய பேர் அதை ஏற்றுக்கொள்வதில்லை. எல்லாம் தானாகவே உருவானது என்று அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டு நம்முடைய விசுவாசம் ஆட்டம் காணாமல் இருக்க வேண்டுமானால் கடவுள் மீதும் பைபிள் மீதும் இருக்கிற நம்பிக்கையை நாம் பலப்படுத்த வேண்டும். அதை எப்படிச் செய்யலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரை சொல்லும்.

^ பாரா. 5 இன்றைக்கு நிறைய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் எல்லாவற்றையும் கடவுள் படைத்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றுகூட சொல்லிக்கொடுப்பதில்லை. அப்படிச் சொல்லிக்கொடுத்தால், கடவுள்மேல் நம்பிக்கை வைக்கும்படி மாணவர்களைக் கட்டாயப்படுத்துவதாக இருக்கும் என்று சில கல்வியாளர்கள் சொல்கிறார்கள்.

^ பாரா. 7 யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேட்டில் “அறிவியலும் தொழில்நுட்பமும்” என்ற தலைப்புக்குக் கீழே “‘பேட்டிகள்’ (விழித்தெழு! தொடர் கட்டுரைகள்)” என்ற பகுதியைப் பாருங்கள்.

^ பாரா. 12 உதாரணத்துக்கு, ஜூலை 2011 விழித்தெழு!-வில் “அறிவியலும் பைபிளும் ஒன்றோடொன்று ஒத்துப்போகிறதா?” என்ற கட்டுரையையும், ஜனவரி 1, 2008 காவற்கோபுரத்தில்யெகோவா முன்னறிவிப்பவை நிறைவேறியே தீரும்” என்ற கட்டுரையையும் பாருங்கள்.