Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 35

வயதானவர்களை வைரங்களாக பாருங்கள்

வயதானவர்களை வைரங்களாக பாருங்கள்

“நரைமுடி அழகான கிரீடம்.”—நீதி. 16:31.

பாட்டு 138 நரைமுடி—அழகான கிரீடம்!

இந்தக் கட்டுரையில்... *

1-2. (அ) நீதிமொழிகள் 16:31 சொல்கிறபடி, வயதானவர்களை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்? (ஆ) இந்தக் கட்டுரையில் எந்தெந்த கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொள்வோம்?

பூமியிலிருந்து எடுக்கப்படும் வைரக் கற்கள் ஆரம்பத்தில் ஜொலிக்காது, பார்ப்பதற்கும் அழகாக இருக்காது. அதைப் பார்க்கும் ஒருவர், சாதாரண கல் என்று நினைத்து அதன் மதிப்பு தெரியாமல் அதைக் கண்டுகொள்ளாமல் போய்விடலாம்.

2 யெகோவாவுக்கு உண்மையாக இருக்கும் வயதானவர்களும் ஒருவிதத்தில் இந்த வைரங்கள் மாதிரிதான். நரைமுடி அழகான கிரீடம் என்று பைபிள்கூட சொல்கிறது. (நீதிமொழிகள் 16:31-ஐ வாசியுங்கள்; 20:29) ஆனால், சில சமயங்களில் இந்த வைரங்களை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இளைஞர்களே, வயதானவர்களுடைய மதிப்பை நீங்கள் புரிந்துகொண்டால் பணம் பொருளைவிட மதிப்பான ஒன்று உங்களுக்குக் கிடைக்கும். இந்தக் கட்டுரையில் மூன்று கேள்விகளுக்குப் பதில்களைப் பார்க்கப்போகிறோம். யெகோவா ஏன் வயதானவர்களை வைரங்களாக பார்க்கிறார்? யெகோவாவின் அமைப்பில் வயதானவர்கள் ஏன் முக்கியமானவர்கள்? வயதானவர்களுடைய வாழ்க்கையிலிருந்து நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்ள நாம் என்ன செய்யலாம்?

வயதானவர்களை யெகோவா ஏன் வைரங்களாக பார்க்கிறார்?

யெகோவாவின் பார்வையிலும், அவருடைய மக்களின் பார்வையிலும் வயதானவர்கள் வைரங்கள் போல் இருக்கிறார்கள் (பாரா 3)

3. சங்கீதம் 92:12-15 சொல்கிறபடி, யெகோவா ஏன் வயதானவர்களை ரொம்ப மதிக்கிறார்?

3 வயதானவர்களை யெகோவா ரொம்ப உயர்வாக பார்க்கிறார். ஏனென்றால், அவர்கள் உண்மையிலேயே எப்படிப்பட்டவர்கள் என்பது அவருக்குத் தெரியும். அவர்களிடம் அழகான குணங்கள் இருப்பதால் அவர் அவர்களை மதிக்கிறார். இத்தனை வருஷ அனுபவத்தில் அவர்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை இளைஞர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும்போது, யெகோவா அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்படுகிறார். (யோபு 12:12; நீதி. 1:1-4) அவர்கள் வாழ்க்கையில் எத்தனையோ மேடுபள்ளங்கள் இருந்தாலும் அவர்களுடைய விசுவாசம் குறையவே இல்லை, தொடர்ந்து சகித்திருக்கிறார்கள். (மல். 3:16) அவர்களுக்கு இருக்கும் எதிர்கால நம்பிக்கை, சத்தியத்தைக் கற்றுக்கொண்டபோது இருந்ததைவிட இப்போது இன்னும் பிரகாசமாகியிருக்கும். “வயதான காலத்திலும்” யெகோவாவைப் பற்றி அவர்கள் மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வதால் அவர்களை யெகோவாவுக்கு ரொம்ப பிடிக்கும்.—சங்கீதம் 92:12-15-ஐ வாசியுங்கள்.

4. எதை நினைத்து வயதான சகோதர சகோதரிகள் சந்தோஷப்படலாம்?

4 சகோதர சகோதரிகளே, உங்களுக்கு வயது கூடிக்கொண்டே போகிறதே என்று கவலைப்படுகிறீர்களா? அதை நினைத்து நீங்கள் சோர்ந்துவிடாதீர்கள். நீங்கள் இத்தனை வருஷங்களாக யெகோவாவுக்குச் செய்த சேவையை அவர் கண்டிப்பாக மறக்க மாட்டார். (எபி. 6:10) நீங்கள் யெகோவாவுக்குச் சுறுசுறுப்பாக ஊழியம் செய்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் வந்த சறுக்கல்களையெல்லாம் சகித்து நின்றிருக்கிறீர்கள். பைபிளில் இருக்கும் நீதியான சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருக்கிறீர்கள். எப்போதும் அதை ஆதரித்தும் இருக்கிறீர்கள். பெரிய பெரிய பொறுப்புகளை எடுத்துச் செய்திருக்கிறீர்கள். மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறீர்கள். யெகோவாவின் அமைப்பில் நிறைய மாற்றங்கள் வந்தபோது அதற்கு ஏற்றபடி உங்கள் வாழ்க்கையை மாற்றியிருக்கிறீர்கள். முழுநேர சேவை செய்கிறவர்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறீர்கள், அவர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறீர்கள். யெகோவாவுக்கு இவ்வளவு உண்மையாகச் சேவை செய்த உங்களை அவர் ரொம்ப நேசிக்கிறார்! உங்கள்மேல் உயிரையே வைத்திருக்கிறார்! தனக்கு ‘உண்மையாக இருப்பவர்களை [அவர்] கைவிட மாட்டார்.’ (சங். 37:28) “உங்களுடைய தலைமுடி நரைத்துப்போனாலும் உங்களைத் தாங்குவேன்” என்று யெகோவா சொல்லியிருக்கிறார். (ஏசா. 46:4) இருந்தாலும், ‘எனக்குதான் வயசாயிடுச்சே, இதுக்குமேல பெருசா என்னால என்ன செஞ்சுட முடியும்?’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், தயவுசெய்து அப்படி நினைக்காதீர்கள். யெகோவாவின் அமைப்பில் உங்களுக்கு முக்கியமான ஓர் இடம் இருக்கிறது.

வயதானவர்களுக்கு முக்கியமான ஓர் இடம் இருக்கிறது

5. வயதானவர்கள் எதை மனதில் வைக்க வேண்டும்?

5 வயதானவர்கள் யெகோவாவின் அமைப்புக்கு ரொம்ப ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பு இருந்ததுபோல் இப்போது உடம்பில் தெம்பு இல்லாமல் போகலாம். ஆனாலும், வாழ்க்கை அனுபவம் நிறைய இருக்கிறது. யெகோவா அவர்களை நிறைய விதத்தில் பயன்படுத்துவார். அந்தக் காலத்திலும் யெகோவா வயதானவர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். இப்போதும் பயன்படுத்திக்கொண்டு வருகிறார். அதைப் பற்றித்தான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம்.

6-7. யெகோவாவின் ஆசீர்வாதத்தை அனுபவித்த சில வயதானவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

6 வயதானாலும் யெகோவாவுக்குச் சுறுசுறுப்பாகச் சேவை செய்த நிறைய பேரைப் பற்றி பைபிள் பேசுகிறது. உதாரணத்துக்கு, யெகோவாவின் தீர்க்கதரிசியாகவும் இஸ்ரவேல் தேசத்துக்குத் தலைவராகவும் இருந்தபோது, மோசேக்கு கிட்டத்தட்ட 80 வயது இருந்திருக்கும். தானியேலை யெகோவா தீர்க்கதரிசியாக பயன்படுத்தியபோது, அவருக்கு 90 வயது தாண்டியிருந்தது. வெளிப்படுத்துதல் புத்தகத்தை அப்போஸ்தலன் யோவான் எழுதியபோது, அவருக்கும் 90 வயதுக்குமேல் ஆகியிருந்தது.

7 வயதான மற்றவர்களும் யெகோவாவுக்கு உண்மையாக இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அவ்வளவு பிரபலமாக இல்லாததால் மக்களுடைய கண்ணில் பெரிதாகப்படவில்லை. ஆனால், யெகோவா அவர்களைக் கவனித்தார். அவர்கள் உண்மையாக இருந்ததற்குப் பலன் கொடுத்தார். உதாரணத்துக்கு, சிமியோனைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவர் ‘நீதிமானாகவும் பக்தியுள்ளவராகவும்’ இருந்தார். பைபிள் அவரைப் பற்றி பெரிதாக எதுவும் சொல்லவில்லை. ஆனால், அவர் எப்படிப்பட்டவர் என்பது யெகோவாவுக்குத் தெரிந்திருந்தது. இயேசு குழந்தையாக இருந்தபோது அவரைப் பார்ப்பதற்கும், அவரைப் பற்றியும் அவருடைய அம்மா மரியாளைப் பற்றியும் ஒரு தீர்க்கதரிசனம் சொல்வதற்கும் சிமியோனுக்கு வாய்ப்புக் கொடுத்தார். (லூக். 2:22, 25-35) இப்போது கணவனை இழந்த அன்னாளைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவர் தீர்க்கதரிசியாக இருந்தார். அவருக்கு 84 வயதானாலும், “ஆலயத்துக்கு வராமல் இருந்ததே இல்லை.” நாம் எப்படி இன்றைக்கு கூட்டங்களுக்குத் தவறாமல் போகிறோமோ அதைப்போலவே அவரும் தொடர்ந்து ஆலயத்துக்குப் போனார். அதனால், யெகோவா அவரை ஆசீர்வதித்தார். எப்படியென்றால், இயேசு குழந்தையாக இருக்கும்போது, அவரைப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தார். சிமியோனும் சரி, அன்னாளும் சரி, யெகோவாவுக்குக் கண்மணிகளாக இருந்தார்கள்.—லூக். 2:36-38.

சகோதரி டீடர் 80 வயதைத் தாண்டியிருந்தாலும் யெகோவாவுக்கு இப்போதும் உண்மையாகச் சேவை செய்கிறார் (பாரா 8)

8-9. கணவனை இழந்த பின்பு, வயதான ஒரு சகோதரி எப்படி யெகோவாவின் அமைப்புக்குத் தொடர்ந்து பிரயோஜனமாக இருக்கிறார்?

8 இன்றைக்கும் வயதான சகோதர சகோதரிகள் நிறைய பேர், இளம் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். இப்போது சகோதரி லோயிஸ் டீடரைப் பற்றிப் பார்க்கலாம். கனடாவில் விசேஷ பயனியராக சேவை செய்ய ஆரம்பித்தபோது அவருக்கு வெறும் 21 வயதுதான்! பிறகு, அவரும் அவருடைய கணவர் ஜானும் சேர்ந்து பல வருஷங்களாக வட்டார சேவை செய்தார்கள். 20 வருஷங்களுக்கும் மேலாக கனடா பெத்தேலிலும் சேவை செய்திருக்கிறார்கள். சகோதரி லோயிசுக்கு 58 வயதானபோது, ‘உக்ரைன் நாட்டுக்கு போய் சேவை செய்ய முடியுமா?’ என்று அமைப்பிலுள்ள சகோதரர்கள் அவர்களிடம் கேட்டார்கள். ‘இந்த வயசுல இன்னொரு நாட்டுக்கு போய் நம்மளால சேவை செய்ய முடியுமா?’ என்று யோசித்து அவர்கள் தயங்கவில்லை. உடனே அந்த நியமிப்பை ஏற்றுக்கொண்டார்கள். அவருடைய கணவர் ஜான் அந்தக் கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்ய நியமிக்கப்பட்டார். அவர்கள் அங்கே போய் ஏழு வருஷங்கள் சேவை செய்த பின்பு ஜான் இறந்துவிட்டார். ஆனாலும், அங்கேயே இருந்து தொடர்ந்து சேவை செய்ய லோயிஸ் முடிவெடுத்தார். இன்றைக்கு அவருக்கு 81 வயது. இப்போதும் யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்துகொண்டிருக்கிறார். உக்ரைன் பெத்தேல் குடும்பத்தில் இருக்கும் நிறைய சகோதர சகோதரிகளின் அன்பைச் சம்பாதித்திருக்கிறார்.

9 கணவன் மனைவியாக சேர்ந்து சேவை செய்தபோது கிடைத்த கவனிப்பு, கணவனை இழந்த பின்பு சில சகோதரிகளுக்குக் கிடைக்காமல் போய்விடலாம். ஆனால், கணவனை இழந்துவிட்டதால் அவர்களுடைய மதிப்பு குறைந்துவிடுவதில்லை. அவர்கள் பல வருஷங்களாக தங்களுடைய கணவருக்கு ஆதரவு கொடுத்து வந்திருக்கிறார்கள். இப்போது, யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையாக இருக்கிறார்கள். இதுபோன்ற சகோதரிகளை யெகோவா ரொம்ப உயர்வாகப் பார்க்கிறார். (1 தீ. 5:3) நிறைய இளைஞர்களை இவர்கள் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

10. சகோதரர் டோனி நமக்கு எப்படி ஓர் அருமையான முன்மாதிரியாக இருக்கிறார்?

10 சில நாடுகளில், வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளும் இல்லங்கள் இருக்கின்றன. அதில் வயதான சகோதர சகோதரிகள் சிலரும் இருக்கிறார்கள். அவர்களும் சரி, சபையில் இருக்கும் மற்ற வயதானவர்களும் சரி, யெகோவாவின் பார்வையில் வைரங்களாக ஜொலிக்கிறார்கள். சகோதரர் டோனியின் அனுபவத்தை இப்போது நாம் பார்க்கலாம். வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளும் ஓர் இல்லத்தில்தான் அவர் இப்போது இருக்கிறார். 1942 ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவில் இருக்கும் பென்ஸில்வேனியாவில் அவர் ஞானஸ்நானம் எடுத்தார். அப்போது அவருக்கு 20 வயது. நடுநிலையோடு இருந்ததால் ஞானஸ்நானம் எடுத்த கொஞ்ச நாட்களிலேயே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே அவர் இரண்டரை வருஷங்கள் இருந்திருக்கிறார். அவரும் அவருடைய மனைவி ஹில்டாவும் அவர்களுடைய இரண்டு பிள்ளைகளைச் சத்தியத்தில் வளர்த்தார்கள். இத்தனை வருஷங்களில், அவர் மூன்று சபைகளில் நடத்தும் கண்காணியாக * இருந்திருக்கிறார். வட்டார மாநாட்டு கண்காணியாகவும் சேவை செய்திருக்கிறார். சிறைச்சாலைகளில் கூட்டங்களையும் பைபிள் படிப்புகளையும் நடத்தியிருக்கிறார். இப்போது அவருக்கு 98 வயதாகிறது. ஆனாலும், எதுவுமே செய்யாமல் இருப்பதற்குப் பதிலாக, இப்போதும் சுறுசுறுப்பாக யெகோவாவுக்குச் சேவை செய்கிறார். அவர் இருக்கும் சபைக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறார்.

11. வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளும் இல்லங்களில் இருக்கும் சகோதர சகோதரிகளையும், சபையில் இருக்கும் மற்ற வயதானவர்களையும் நாம் வைரங்களாக பார்க்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

11 வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளும் இல்லங்களில் இருக்கும் சகோதர சகோதரிகளையும் சபையில் இருக்கும் மற்ற வயதானவர்களையும் நாம் எப்படி மதிப்பு மரியாதையுடன் நடத்தலாம்? கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும், முடிந்தளவுக்கு ஊழியம் செய்வதற்கும் மூப்பர்கள் அவர்களுக்கு உதவி செய்யலாம். நாம் அவர்களை நேரில் போய்ப் பார்க்கலாம். அல்லது வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக அவர்களிடம் பேசலாம். அவர்களில் சிலர், சபையிலிருந்து ரொம்ப தூரமாக இருக்கும் இல்லங்களில் வாழலாம். அவர்களையும் நாம் கவனித்துக்கொள்ள வேண்டும். நாம் கவனமாக இல்லாவிட்டால் இதுபோன்ற வயதானவர்களை மறந்துவிட வாய்ப்பிருக்கிறது. அதனால், அவர்களிடம் நிறைய நேரம் செலவு செய்வதற்கு நாம் முயற்சி எடுக்க வேண்டும். வயதான சகோதர சகோதரிகளில் சிலர் தங்களைப் பற்றிப் பேசுவதற்குத் தயங்கலாம் அல்லது சங்கடப்படலாம். ஆனால், யெகோவாவின் சேவையை அவர்கள் எவ்வளவு சந்தோஷமாகச் செய்தார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும்போது நமக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கும்.

12. நம்முடைய சபையில் எப்படிப்பட்ட சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள்?

12 யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்யும் வயதான சகோதர சகோதரிகள் நம்முடைய சபைகளிலும் இருக்கிறார்கள். அவர்களுடைய அனுபவங்களைக் கேட்கும்போது நமக்கே ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். ஹேரியட் என்ற சகோதரியின் அனுபவத்தை இப்போது பார்க்கலாம். அவர் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸியில் இருக்கிற ஒரு சபையில் பல வருஷங்களாக யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்துகொண்டிருந்தார். அதற்குப் பின்பு, தன்னுடைய மகளோடு சேர்ந்து இருப்பதற்காக வேறொரு இடத்துக்கு குடிமாறிப் போனார். புது சபையில் இருக்கும் சகோதரர்கள் இவரிடம் நேரமெடுத்து நன்றாகப் பேசினார்கள். அப்போதுதான், இவர் ஒரு ஜொலிக்கிற வைரம் என்பதைப் புரிந்துகொண்டார்கள். சகோதரி ஹேரியட் கிட்டத்தட்ட 1925-ல் சத்தியத்துக்கு வந்தவர். ஊழியத்துக்குப் போகும்போது, ‘கைது பண்ணி கொஞ்ச நாளைக்கு ஜெயில்ல வெச்சிடுவாங்களோ’ என்று நினைத்து பல் தேய்க்க ஒரு பிரஷையும் எடுத்துக்கொண்டு போவாராம். சொல்லப்போனால், 1933-ல் இரண்டு தடவை சிறைக்குப் போயிருக்கிறார். ஒவ்வொரு தடவையும் அங்கே ஒரு வாரம் இருந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் அவருடைய கணவர்தான், அவர்களுடைய மூன்று சின்ன பிள்ளைகளையும் நன்றாகப் பார்த்துக்கொண்டார். அவர் எப்போதுமே இவருக்கு ஆதரவாக இருந்திருக்கிறார். இத்தனைக்கும் அவர் ஒரு யெகோவாவின் சாட்சி கிடையாது! சகோதரி ஹேரியட்டைப் போல் யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்யும் வயதான சகோதர சகோதரிகள் உண்மையிலேயே வைரங்கள்தான்!

13. யெகோவாவின் அமைப்பில் இருக்கும் வயதானவர்களைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்துகொண்டீர்கள்?

13 வயதான சகோதர சகோதரிகளுக்கு யெகோவாவின் அமைப்பில் முக்கியமான ஓர் இடம் இருக்கிறது. யெகோவா அவருடைய அமைப்பை எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தங்கள் வாழ்க்கையிலும் யெகோவாவின் ஆசீர்வாதத்தை ருசித்திருக்கிறார்கள். சில தவறுகளைச் செய்தாலும் அதிலிருந்து முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர்கள் எல்லாரையும் ‘ஞானத்தின் ஊற்றாக’ நாம் பார்க்க வேண்டும், அவர்களுடைய அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். (நீதி. 18:4) நேரமெடுத்து, அவர்களிடம் பழகினால் உங்களுடைய விசுவாசம் கண்டிப்பாக பலமாகும். ஏராளமான விஷயங்களை அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள முடியும்.

வயதானவர்களுடைய வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

எலியாவோடு இருந்தது எலிசாவுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்ததோ அதுபோல வயதானவர்களுடைய அனுபவங்களைக் கேட்பது சகோதர சகோதரிகளுக்கும் ரொம்ப பிரயோஜனமாக இருக்கும் (பாராக்கள் 14-15)

14. இளைஞர்களை என்ன செய்யும்படி உபாகமம் 32:7 சொல்கிறது?

14 வயதானவர்களிடம் பேச நீங்கள் முதல்படி எடுங்கள். (உபாகமம் 32:7-ஐ வாசியுங்கள்.) அவர்களுடைய கண்பார்வை மங்கிப்போயிருக்கலாம். அவர்கள் தளர்ந்துபோயிருக்கலாம். அவர்களுடைய குரலில்கூட ஒரு நடுக்கம் வந்திருக்கலாம். ஆனால், மனதளவில் அவர்கள் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறார்கள். யெகோவாவிடம் ‘நல்ல பெயரை’ சம்பாதித்திருக்கிறார்கள். (பிர. 7:1) யெகோவா அவர்களை வைரங்களாக பார்க்கிறார் என்பதை தயவுசெய்து மறந்துவிடாதீர்கள். அதனால், எப்போதும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பு மரியாதையைக் கொடுங்கள். நாம் எல்லாருமே எலிசாவைப் போல் இருக்க வேண்டும். எலியாவோடு இருந்த கடைசி நாளில், “நான் உங்களைவிட்டுப் போக மாட்டேன்” என்று மூன்று தடவை எலிசா சொன்னார்.—2 ரா. 2:2, 4, 6.

15. வயதானவர்களிடம் நீங்கள் என்னென்ன கேள்விகளைக் கேட்கலாம்?

15 வயதானவர்களிடம் கேள்விகளைக் கேட்டு அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். (நீதி. 1:5; 20:5; 1 தீ. 5:1, 2) ஒருவேளை, நீங்கள் இதுபோன்ற கேள்விகளைக்கூட கேட்கலாம்: “உங்களோட சின்ன வயசுல இதுதான் சத்தியம்னு நீங்க எப்படி நம்புனீங்க?” “யெகோவாகிட்ட நெருங்கி போறதுக்கு உங்க வாழ்க்கையில நடந்த சில விஷயங்கள் எப்படி உதவியா இருந்துச்சு?” “யெகோவாவுக்கு சந்தோஷமா சேவை செய்றதுக்கு எது உங்களுக்கு உதவி செஞ்சுச்சு?” (1 தீ. 6:6-8) இவற்றைப் பற்றி அவர்கள் உங்களிடம் சொல்லும்போது கவனமாகக் கேளுங்கள்.

16. வயதானவர்களும் இளைஞர்களும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போது எப்படி நன்மை அடைவார்கள்?

16 இளைஞர்கள் வயதானவர்களிடம் பேசும்போது வயதானவர்களுக்கும் உற்சாகம் கிடைக்கும், இளைஞர்களுக்கும் உற்சாகம் கிடைக்கும். (ரோ. 1:12) யெகோவா அவருடைய ஊழியர்களை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்கிறார் என்பதை இளைஞர்களால் புரிந்துகொள்ள முடியும். மற்றவர்கள் நம்மை மதிக்கிறார்கள் என்ற எண்ணம் வயதானவர்களுக்கும் வரும். யெகோவா அவர்களை எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை அவர்களும் சந்தோஷம் பொங்க சொல்வார்கள்.

17. யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்கிற வயதானவர்களுடைய அழகு கூடிக்கொண்டேதான் போகிறது என்று எப்படிச் சொல்லலாம்?

17 வயதாக வயதாக ஒருவருடைய அழகு மங்கிக்கொண்டே போகலாம். ஆனால், யெகோவாவின் பார்வையில் வயதானவர்களுடைய அழகு கூடிக்கொண்டேதான் போகிறது. (1 தெ. 1:2, 3) ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், காலங்கள் போகப் போக யெகோவா கொடுத்த பயிற்சிகளையெல்லாம் அவர்கள் நல்லபடியாக எடுத்துக்கொண்டு அழகான குணங்களை வளர்த்திருக்கிறார்கள். இதுபோன்ற வயதான சகோதர சகோதரிகளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளும்போதும் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளும்போதும், அவர்களை நாம் மதிப்போம், வைரங்களாகவும் பார்ப்போம்!

18. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப்போகிறோம்?

18 இளைஞர்கள் வயதானவர்களை வைரங்களாக பார்க்கும்போது மட்டுமல்ல, வயதானவர்களும் இளைஞர்களை உயர்வாக மதிக்கும்போதுதான் சபை பலப்படும். அப்படியென்றால், இளைஞர்களை வயதானவர்கள் எப்படி மதிக்கலாம்? பதிலை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

பாட்டு 144 கண் முன் பரிசை வைப்போம்

^ பாரா. 5 யெகோவாவுக்கு உண்மையாக இருக்கும் வயதானவர்கள் வைரங்கள் மாதிரி. அவர்கள்மேல் இருக்கும் அன்பையும் மரியாதையையும் நாம் எப்படி அதிகமாக்கலாம் என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அவர்களுக்கு இருக்கும் ஞானத்திலிருந்தும் அனுபவத்திலிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதையும் பார்ப்போம். வயதானவர்களே, யெகோவாவின் அமைப்பில் உங்களுக்கு முக்கியமான ஓர் இடம் இருக்கிறது. அதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 10 இப்போது, மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.