Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 36

இளைஞர்களைப் பார்த்து பெருமைப்படுங்கள்

இளைஞர்களைப் பார்த்து பெருமைப்படுங்கள்

“இளைஞர்களுடைய அழகு அவர்களுடைய பலம்.”—நீதி. 20:29.

பாட்டு 88 வழிகாட்டுங்கள் என் தேவனே!

இந்தக் கட்டுரையில்... *

1. வயதானவர்கள் என்ன செய்யலாம்?

வயதான சகோதர சகோதரிகளே, இளமைத் துடிப்போடு இருந்தபோது நீங்கள் யெகோவாவுக்கு நிறைய செய்திருப்பீர்கள். ஆனால், ‘இப்ப என்னால அவ்வளவா எதுவும் செய்ய முடியலயே’ என்று நினைத்து நீங்கள் கவலைப்படலாம். அப்போது இருந்த பலம் இப்போது உங்களுக்கு இல்லை என்பது உண்மைதான். ஆனால், உங்களுக்கு நிறைய அனுபவமும் ஞானமும் இருக்கிறது. அதனால், இளம் சகோதரர்களுக்கு நீங்கள் பயிற்சி கொடுக்க முடியும். அவர்கள் புதுப்புது பொறுப்புகளை எடுத்துச் செய்ய உங்களால் உதவ முடியும். “வயசாயிட்டே போகுதேனு நினச்சு நான் ரொம்ப கவலப்பட்டேன். ஆனால், வேலைகள எடுத்து செய்ய இளம் சகோதரர்கள் இருக்காங்கன்னு நினைக்கறப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று ரொம்ப காலமாக மூப்பராக இருக்கும் ஒருவர் சொல்கிறார்.

2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

2 இளைஞர்கள், வயதானவர்களோடு நல்ல நட்பை வைத்துக்கொள்ளும்போது கிடைக்கும் நன்மைகளைப் பற்றிப் போன கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் வயதானவர்கள் எப்படி இளைஞர்களுக்கு உதவி செய்யலாம் என்பதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். அதற்கு மனத்தாழ்மை... அடக்கம்... நன்றியோடு இருப்பது... தாராள குணம் போன்றவை வயதானவர்களுக்கு எப்படி உதவும் என்பதைப் பற்றியும் பார்க்கலாம். இப்படி, வயதானவர்களும் இளைஞர்களும் ஒன்றுசேர்ந்து உழைக்கும்போது அது சபைக்குப் பெரிய ஆசீர்வாதமாக இருக்கும்.

மனத்தாழ்மையோடு இருங்கள்

3. பிலிப்பியர் 2:3, 4 சொல்கிறபடி, மனத்தாழ்மை என்றால் என்ன, அது ஏன் ரொம்ப அவசியம்?

3 இளைஞர்களுக்கு உதவி செய்ய வயதானவர்களுக்கு மனத்தாழ்மை தேவை. ஏனென்றால், மனத்தாழ்மை இருந்தால்தான் தங்களைவிட மற்றவர்களை உயர்ந்தவர்களாக பார்க்க முடியும். (பிலிப்பியர் 2:3, 4-ஐ வாசியுங்கள்.) அதோடு, பைபிள் நியமங்களை மீறாதபடி ஒரு வேலையைச் செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன என்பதை அவர்கள் புரிந்து வைத்திருப்பார்கள். முன்பு எப்படிச் செய்தார்களோ அதேபோல்தான் இப்போதும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள். (பிர. 7:10) வாழ்க்கை அனுபவத்தில் அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களை இளைய தலைமுறைக்குச் சொல்லிக்கொடுப்பார்கள். அதேசமயம், “இந்த உலகத்தின் காட்சி மாறிக்கொண்டே இருக்கிறது” என்பதைப் புரிந்துவைத்திருப்பதால், புது சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொள்வார்கள்.—1 கொ. 7:31.

வயதானவர்கள் தங்களுடைய அனுபவத்தை மற்றவர்களிடம் சந்தோஷமாகச் சொல்கிறார்கள் (பாராக்கள் 4-5) *

4. லேவியர்கள் காட்டிய எந்தக் குணத்தை வட்டாரக் கண்காணிகளும் காட்டுகிறார்கள்?

4 முன்பு செய்தளவுக்கு இப்போது செய்ய முடியாது என்பதை மனத்தாழ்மையோடு இருக்கும் வயதானவர்கள் புரிந்துகொள்வார்கள். உதாரணத்துக்கு, வட்டாரக் கண்காணிகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர்களுக்கு 70 வயதானவுடனே அந்த நியமிப்பை விட்டுவிட்டு வேறொரு நியமிப்புக்குப் போகவேண்டியிருக்கிறது. இத்தனை வருஷங்களாக அதை அவர்கள் ஆசை ஆசையாகச் செய்திருப்பார்கள். இப்போதும் அந்த நியமிப்பையே செய்ய வேண்டும் என்ற ஆசையும் அவர்களுக்கு இருக்கலாம். ஆனால், அவர்களைவிட இளம் சகோதரர்கள் அதை இன்னும் நன்றாகச் செய்வார்கள் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். சொல்லப்போனால், அந்தக் காலத்தில் இருந்த லேவியர்களைப் போலவே இவர்களும் இருக்கிறார்கள். 50 வயதைத் தாண்டிய லேவியர்கள் வேலையிலிருந்து ஓய்வுபெற வேண்டியிருந்தது. முன்பு செய்த அதே வேலையைச் செய்தால்தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்று அவர்கள் நினைக்கவில்லை. அதற்குப் பதிலாக, இளைஞர்களுக்குச் சந்தோஷமாக உதவி செய்தார்கள். (எண். 8:25, 26) முன்பு வட்டாரக் கண்காணிகளாக இருந்தவர்களும் இப்போது நிறைய சபைகளைப் போய்ச் சந்திப்பதற்குப் பதிலாக, எந்தச் சபைக்கு அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களோ அந்தச் சபைக்காக நன்றாக உழைக்கிறார்கள். சபையில் இருப்பவர்களுக்கு உதவி செய்கிறார்கள், அவர்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.

5. சகோதரர் டேனிடமிருந்தும் சகோதரி கேட்டிடமிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

5 டேன் என்ற சகோதரருடைய அனுபவத்தை இப்போது பார்க்கலாம். அவர் 23 வருஷங்கள் வட்டாரக் கண்காணியாக சேவை செய்திருக்கிறார். அவருக்கு 70 வயதானபோது, அவரும் அவருடைய மனைவி கேட்டும் விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டார்கள். இந்த நியமிப்பையும் அவர்கள் ரொம்ப சந்தோஷமாக செய்கிறார்கள். சொல்லப்போனால், முன்பைவிட இப்போது ரொம்ப பிஸியாக இருப்பதாக சகோதரர் டேன் சொல்கிறார். அவர் இப்போது சபையில் நிறைய வேலைகளைச் செய்கிறார். மற்றவர்கள் உதவி ஊழியர்கள் ஆவதற்கு பயிற்சி கொடுக்கிறார். அதுமட்டுமல்ல, பெருநகரங்களிலும், சிறைச்சாலைகளிலும் ஊழியம் செய்ய மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார். வயதான சகோதர சகோதரிகளே, நீங்கள் முழுநேர சேவையில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, உங்களால் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும்! புது சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். புது இலக்குகளை வையுங்கள். செய்ய முடியாததை நினைத்து கவலைப்படுவதற்குப் பதிலாக உங்களால் முடிந்ததையெல்லாம் செய்யுங்கள்.

அடக்கமாக இருங்கள்

6. நாம் ஏன் அடக்கமாக இருக்க வேண்டும்? விளக்குங்கள்.

6 அடக்கமாக இருக்கும் ஒருவர், தன்னால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதைப் புரிந்து வைத்திருப்பார். (நீதி. 11:2) தன்னால் செய்ய முடியாததைச் செய்ய வேண்டும் என்று நினைக்க மாட்டார். அதனால், சந்தோஷமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார். இந்த உதாரணத்தை யோசித்துப்பாருங்கள். மலைமேல் வண்டி ஓட்டும்போது சாதாரண ரோட்டில் ஓட்டுவதுபோல் ஓட்ட முடியாது. மெதுவாகவும் நிதானமாகவும்தான் ஓட்ட முடியும். அப்போதுதான் தொடர்ந்து பயணம் செய்ய முடியும். அதேபோல், அடக்கமாக இருக்கும் ஒருவர், வயதான பின்பு சில விஷயங்களை மெதுவாகவும் நிதானமாகவும்தான் செய்ய முடியும் என்பதைப் புரிந்துகொள்வார். அதனால், யெகோவாவுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் சந்தோஷமாகச் செய்வார்.—பிலி. 4:5.

7. பர்சிலா எப்படி அடக்கமாக நடந்துகொண்டார்?

7 பர்சிலாவின் உதாரணத்தை யோசித்துப்பாருங்கள். அவருக்கு 80 வயது இருந்தபோது, அரண்மனைக்கு வந்து தன்னுடைய ஆலோசகர்களில் ஒருவராக இருக்கும்படி தாவீது ராஜா அவரைக் கூப்பிட்டார். ஆனால், வரமுடியாத சூழ்நிலையில் தான் இருப்பதாக பர்சிலா சொன்னார். தனக்கு வயதாகிவிட்டதால், தனக்குப் பதிலாக கிம்காம் என்ற இளைஞரைக் கூட்டிக்கொண்டு போகும்படி சொன்னார். அவருக்கு எவ்வளவு அடக்கம் பார்த்தீர்களா? (2 சா. 19:35-37) பர்சிலாவைப் போலவே, இன்றைக்கு இருக்கிற வயதான சகோதரர்களும் யெகோவாவுக்கு சேவை செய்ய இளம் சகோதரர்களுக்குச் சந்தோஷமாக வழிவிடுகிறார்கள்.

சாலொமோன்தான் ஆலயத்தைக் கட்டுவார் என்று யெகோவா முடிவெடுத்தபோது, தாவீது ராஜா அதை ஏற்றுக்கொண்டார் (பாரா 8)

8. தாவீது ராஜா எப்படி அடக்கமாக நடந்துகொண்டார்?

8 தாவீது ராஜாவும் அடக்கமாக நடந்துகொண்டார். யெகோவாவுக்கு ஓர் ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று அவர் ரொம்ப ஆசைப்பட்டார். ஆனால், ஆலயம் கட்டுகிற பாக்கியத்தை, சாலொமோனுக்குக் கொடுக்கப்போவதாக யெகோவா சொன்னார். யெகோவாவின் முடிவை தாவீது ஏற்றுக்கொண்டார். ஆலயம் கட்டும் வேலைக்கு மனப்பூர்வமாக ஆதரவு கொடுத்தார். (1 நா. 17:4; 22:5) சாலொமோன் ‘சின்னப் பையனாக’ இருந்ததாலும் அவருக்கு ‘அவ்வளவாக அனுபவம் இல்லாததாலும்’ தன்னால்தான் இந்த வேலையை நன்றாகச் செய்ய முடியும் என்று தாவீது நினைக்கவில்லை. (1 நா. 29:1) ஆலயத்தை நல்லபடியாக கட்டிமுடிக்க வயதோ அனுபவமோ தேவையில்லை, யெகோவாவின் ஆசீர்வாதம்தான் முக்கியம் என்பதைப் புரிந்துவைத்திருந்தார். இன்றுள்ள வயதான சகோதரர்களும் தாவீதைப் போல்தான் இருக்கிறார்கள். அவர்கள் ஒருகாலத்தில் செய்துகொண்டிருந்த பொறுப்புகளை இளம் சகோதரர்கள் எடுத்துச் செய்யும்போது சந்தோஷப்படுகிறார்கள். இளைஞர்கள் செய்கிற வேலையை யெகோவா ஆசீர்வதிப்பார் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

9. கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்யும் ஒரு சகோதரர் எப்படி அடக்கத்தைக் காட்டினார்?

9 இப்போது சிஜியோ என்ற சகோதரரைப் பற்றிப் பார்க்கலாம். 1976-ல், அவருக்கு 30 வயது இருக்கும்போது கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்ய நியமிக்கப்பட்டார். 2004-ல் கிளை அலுவலகக் குழு ஒருங்கிணைப்பாளராக ஆனார். ஆனால், வயதாக வயதாக முன்பு செய்த அளவுக்கு தன்னால் இப்போது வேலைகளைச் செய்ய முடியவில்லை என்பதைப் புரிந்துகொண்டார். அதனால், இதைப் பற்றி நன்றாக ஜெபம் செய்தார். வேறொரு இளம் சகோதரர் இந்தப் பொறுப்பை எடுத்துச் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார். இப்போது, சகோதரர் சிஜியோ ஒருங்கிணைப்பாளராக இல்லை. ஆனால், அந்தக் குழுவில் இருக்கிற மற்றவர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக வேலை செய்கிறார். பர்சிலா, தாவீது ராஜா, சிஜியோவைப் போல் மனத்தாழ்மையாகவும் அடக்கமாகவும் நடக்கிற வயதான சகோதரர்கள் இளைஞர்களிடமுள்ள பலத்தைதான் பார்க்கிறார்கள். அவர்களுக்கு அனுபவம் இல்லையே என்று யோசிக்க மாட்டார்கள். இளைஞர்களைப் போட்டியாக பார்க்க மாட்டார்கள், சக வேலையாட்களாகத்தான் பார்ப்பார்கள்.—நீதி. 20:29.

நன்றியோடு இருங்கள்

10. வயதானவர்கள் இளைஞர்களை எப்படிப் பார்க்க வேண்டும்?

10 வயதான சகோதரர்கள், இளம் சகோதரர்களை யெகோவாவிடமிருந்து கிடைத்த வரமாகப் பார்க்கிறார்கள். ஒருகாலத்தில் அவர்கள் செய்துகொண்டிருந்த வேலைகளை இப்போது நல்ல பலமுள்ள இளைஞர்கள் எடுத்துச் செய்ய முன்வருவதைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள், யெகோவாவுக்கு நன்றி சொல்கிறார்கள்.

11. இளைஞர்களுடைய உதவியை ஏற்றுக்கொள்ளும்போது எப்படி ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று ரூத் 4:13-16 காட்டுகிறது?

11 இளைஞர்களுடைய உதவியை நன்றியோடு ஏற்றுக்கொண்ட வயதானவர்களில் நகோமியும் ஒருவர். ஆரம்பத்தில் ரூத்தை தன்னுடைய சொந்த ஊருக்கே போகும்படி நகோமி சொன்னார். ஆனால், நான் உங்களோடுதான் வருவேன் என்று சொல்லி ரூத் நகோமியுடன் பெத்லகேமுக்குப் போனார். ரூத் செய்த உதவியை நகோமி ஏற்றுக்கொண்டார். (ரூத் 1:7, 8, 18) அதனால், இருவருமே ஆசீர்வதிக்கப்பட்டார்கள்! (ரூத் 4:13-16-ஐ வாசியுங்கள்.) மனத்தாழ்மையோடு இருக்கிற வயதானவர்கள் நகோமியைப் போலவே நடந்துகொள்வார்கள்.

12. தான் நன்றியோடு இருந்ததை அப்போஸ்தலன் பவுல் எப்படிக் காட்டினார்?

12 இப்போது அப்போஸ்தலன் பவுலைப் பற்றிப் பார்க்கலாம். அவருக்கும் நிறைய பேர் உதவி செய்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, பிலிப்பி நகரத்து சபையில் இருந்தவர்கள் அவருக்குப் பொருளுதவி செய்தார்கள். (பிலி. 4:16) தீமோத்தேயு அவருக்குப் பக்கபலமாக இருந்தார். இதற்கெல்லாம் தான் ரொம்ப நன்றியோடு இருப்பதாக அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (பிலி. 2:19-22) ஒரு கைதியாக ரோமுக்குப் போய்க்கொண்டிருந்த சமயத்தில் நிறைய பேர் வந்து அவரைப் பலப்படுத்தினார்கள். அதற்காகவும் அவர் யெகோவாவுக்கு ரொம்ப நன்றி சொன்னார். (அப். 28:15) இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். பிரசங்கிப்பதற்கும் சபைகளைப் பலப்படுத்துவதற்கும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பவுல் பயணம் செய்தார். அந்தளவுக்குச் சுறுசுறுப்பான ஒரு நபராக இருந்தாலும் மற்ற சகோதர சகோதரிகள் கொடுத்த உதவியை மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டார்.

13. இளைஞர்களுக்கு நன்றியோடு இருப்பதை வயதானவர்கள் எப்படியெல்லாம் காட்டலாம்?

13 வயதான சகோதர சகோதரிகளே, இளைஞர்களுக்கு நீங்கள் நன்றியோடு இருக்க நிறைய வழிகள் இருக்கின்றன. ஒருவேளை, வெளியே போய்வர... கடையில் ஏதாவது சாமான்கள் வாங்க... வேறு ஏதாவது அவசர வேலைக்கு... இளைஞர்கள் செய்யும் உதவியை நீங்கள் நன்றியோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் மூலமாக யெகோவா உங்களுக்கு அன்பு காட்டுகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் இப்படியெல்லாம் செய்யும்போது உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நட்பு மலரும். இளைஞர்கள் யெகோவாவுடன் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள உதவி செய்யுங்கள். சபையில் அவர்கள் பொறுப்புகளை எடுத்துச் செய்யும்போது அதைப் பார்த்து நீங்கள் சந்தோஷப்படுவதாகச் சொல்லுங்கள். உங்களுடைய அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் இப்படியெல்லாம் செய்தால் இளைஞர்களை சபையிடம் ஈர்த்திருப்பதற்காக யெகோவாவுக்கு ‘நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்’ என்பதைக் காட்டுகிறீர்கள்.—கொலோ. 3:15; யோவா. 6:44; 1 தெ. 5:18.

தாராள குணத்தைக் காட்டுங்கள்

14. தாவீது ராஜா எப்படித் தாராள குணத்தைக் காட்டினார்?

14 வயதானவர்கள் தாவீது ராஜாவிடமிருந்து இன்னொரு குணத்தையும் கற்றுக்கொள்ளலாம். அதுதான் தாராள குணம். ஆலயத்தைக் கட்ட ஏராளமான சொத்தை தாவீது கொடுத்தார். (1 நா. 22:11-16; 29:3, 4) ஆலயத்தைக் கட்டிய பெருமை சாலொமோனுக்குத்தான் போய்ச் சேரும் என்று தெரிந்திருந்தும் அவர் அப்படிச் செய்தார். இன்றைக்கு நடக்கிற கட்டுமான வேலைகளில் கலந்துகொள்ளுமளவுக்கு உங்களுக்கு உடல் பலம் இல்லாவிட்டாலும் உங்களால் முடிந்த நன்கொடைகளைக் கொடுத்து அதை ஆதரிக்கலாம். அதுமட்டுமல்ல, இத்தனை வருட அனுபவத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை இளைஞர்களுக்கு சொல்லிக்கொடுப்பதன் மூலமாகவும் தாராள குணத்தைக் காட்டலாம்.

15. அப்போஸ்தலன் பவுல் எப்படித் தாராள குணத்தைக் காட்டினார்?

15 அப்போஸ்தலன் பவுல் தாராள குணத்தைக் காட்டினாரா? ஆம், காட்டினார். மிஷனரி ஊழியம் செய்யும்போது அவர் தீமோத்தேயுவையும் கூட்டிக்கொண்டு போனார். பிரசங்கிக்கவும் போதிக்கவும் தான் பயன்படுத்திய எல்லா முறைகளையும் தீமோத்தேயுவுக்குச் சொல்லிக்கொடுத்தார். (அப். 16:1-3) பவுல் கொடுத்த பயிற்சியால் தீமோத்தேயு நன்றாக ஊழியம் செய்தார். (1 கொ. 4:17) பவுல் கற்றுக்கொடுத்த முறைகளை வைத்து தீமோத்தேயுவும் மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார்.

16. சகோதரர் சிஜியோ ஏன் மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார்?

16 இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்தால் தங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடுமோ என்று வயதான சகோதரர்கள் பயப்படுவதில்லை. நாம் முன்பு பார்த்த சகோதரர் சிஜியோவின் உதாரணத்தை மறுபடியும் யோசித்துப் பார்க்கலாம். கிளை அலுவலகக் குழுவில் இருந்த இளம் சகோதரர்களுக்கு அவர் பயிற்சி கொடுத்தார். அவர் இருந்த நாட்டில் யெகோவாவுடைய வேலை நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக அவர் இப்படிச் செய்தார். இதனால், என்ன பலன் கிடைத்தது? அவரால் ஒருங்கிணைப்பாளராக சேவை செய்ய முடியாது என்ற சூழ்நிலை வந்தபோது அந்தப் பொறுப்பை எடுத்துச் செய்ய நன்கு பயிற்சி பெற்ற ஒரு சகோதரர் அந்தக் குழுவில் இருந்தார். 45 வருஷங்களுக்கும்மேல் சகோதரர் சிஜியோ கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்துகொண்டு வருகிறார். அந்த அனுபவத்தை வைத்து நிறைய இளம் சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார். இதுபோன்ற வயதான சகோதரர்கள் உண்மையிலேயே நமக்குக் கிடைத்த பெரிய சொத்து, இல்லையா?

17. லூக்கா 6:38 சொல்கிறபடி, வயதானவர்கள் என்ன செய்யலாம்?

17 வயதான சகோதர சகோதரிகளே, விசுவாசத்தோடும் உண்மையோடும் யெகோவாவுக்குச் சேவை செய்தால் சந்தோஷம் கிடைக்கும் என்பதற்கு நீங்கள் உயிருள்ள உதாரணங்கள். பைபிள் நியமங்களைக் கற்றுக்கொண்டு, அதன்படி வாழ்வதற்காக எடுக்கும் முயற்சிகளெல்லாம் வீண்போகாது என்பதை உங்களைப் பார்த்து நாங்கள் தெரிந்துகொள்கிறோம். அமைப்பில் வந்த மாற்றங்களையெல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். புது சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி உங்களை மாற்றியிருக்கிறீர்கள். சமீபத்தில் ஞானஸ்நானம் எடுத்த வயதானவர்களும் இளைஞர்களை உற்சாகப்படுத்த முடியும். இந்த வயதில் யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொண்டது உங்களுக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்தது என்று இளைஞர்களிடம் சொல்லுங்கள். உங்களுடைய அனுபவத்தை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்கள் கண்டிப்பாக அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள். வாழ்க்கை அனுபவம் என்ற களஞ்சியத்திலிருந்து “கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.” அப்போது, யெகோவா உங்களை அமோகமாக ஆசீர்வதிப்பார்.—லூக்கா 6:38-ஐ வாசியுங்கள்.

18. வயதானவர்களும் இளைஞர்களும் எப்படி ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கலாம்?

18 வயதானவர்களிடம் இளைஞர்கள் நட்பு வைத்துக்கொள்ளும்போது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க முடியும். (ரோ. 1:12) ஒருவருடைய குறைகளை இன்னொருவரால் நிறைவு செய்ய முடியும். வயதானவர்களிடம் ஞானமும் வாழ்க்கை அனுபவமும் இருக்கிறது. இளைஞர்களிடம் பலமும் இளமைத் துடிப்பும் இருக்கிறது. இவர்கள் இரண்டு பேரும் கைகோர்க்கும்போது சபை பலப்படும், யெகோவாவுக்குப் புகழ் சேரும்.

பாட்டு 90 ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவோம்

^ பாரா. 5 நம்முடைய சபைகளில் நிறைய இளம் சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். இவர்கள் யெகோவாவின் அமைப்பில் நிறைய வேலைகளைச் செய்கிறார்கள். இவர்கள் எல்லாரும் உண்மையிலேயே நமக்குக் கிடைத்த பெரிய வரம்! வயதான சகோதர சகோதரிகளும் நம்முடைய சபைகளில் இருக்கிறார்கள். அவர்களுடைய கலாச்சாரம் எதுவாக இருந்தாலும், இளம் சகோதர சகோதரிகளுக்கு அவர்களால் உதவி செய்ய முடியும். இளைஞர்கள் தங்களுடைய பலத்தையெல்லாம் பயன்படுத்தி யெகோவாவுக்கு நிறைய செய்வதற்கு வயதானவர்களால் உற்சாகப்படுத்த முடியும்.

^ பாரா. 55 படவிளக்கம்: ஒரு வட்டாரக் கண்காணிக்கு 70 வயதாகிவிட்டதால், அவருக்கும் அவருடைய மனைவிக்கும் வேறொரு புதிய நியமிப்பு கிடைத்தது. இத்தனை வருட அனுபவத்தை வைத்து, இப்போது அவர்கள் சேவை செய்யும் சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள்.