Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 38

யெகோவா மீதும் சகோதர சகோதரிகள் மீதும் இருக்கிற அன்பு பெருகட்டும்

யெகோவா மீதும் சகோதர சகோதரிகள் மீதும் இருக்கிற அன்பு பெருகட்டும்

‘நான் என் தகப்பனிடமும் உங்கள் தகப்பனிடமும் . . . போகப்போகிறேன்.’—யோவா. 20:17.

பாட்டு 3 எம் பலமும் நம்பிக்கையும் நீரே!

இந்தக் கட்டுரையில்... *

1. யெகோவாவை நாம் எப்படிக் கூப்பிடலாம்?

யெகோவாவின் குடும்பத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? ‘படைப்புகளிலேயே முதல் படைப்பான’ இயேசுவும் கோடிக்கணக்கான தேவதூதர்களும் இருக்கிறார்கள். (கொலோ. 1:15; சங். 103:20) மனிதர்களும் யெகோவாவை அப்பாவாக பார்க்கலாம் என்று இயேசு பூமியில் இருந்தபோது சொல்லிக்கொடுத்தார். யெகோவாவைப் பற்றி சீஷர்களிடம் சொன்னபோது, ‘என் தகப்பன்’ என்று மட்டும் சொல்லாமல், ‘உங்கள் தகப்பன்’ என்றும் சொன்னார். (யோவா. 20:17) யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கும்போது அன்பான சகோதர சகோதரிகள் இருக்கும் குடும்பத்தில் நாமும் ஒருவராகிறோம்.—மாற். 10:29, 30.

2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

2 சிலரால், யெகோவாவை ஓர் அன்பான அப்பாவாக பார்க்க முடியாமல் இருக்கலாம். வேறு சிலருக்கு, சகோதர சகோதரிகள்மேல் எப்படி அன்பு காட்டுவது என்று தெரியாமல் இருக்கலாம். யெகோவாவை ஓர் அன்பான அப்பாவாக பார்ப்பதற்கும், அவரிடம் நெருங்கிப்போவதற்கும் இயேசு நமக்கு எப்படி உதவி செய்திருக்கிறார் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, யெகோவாவைப் போலவே நம்முடைய சகோதர சகோதரிகளை எப்படி நடத்தலாம் என்பதைப் பற்றியும் பார்க்கப்போகிறோம்.

நாம் யெகோவாவிடம் நெருங்கிப்போக வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார்

3. இயேசு சொல்லிக் கொடுத்த ஜெபம் நம்மை எப்படி யெகோவாவிடம் நெருங்கிப்போக வைக்கிறது?

3 யெகோவா வெறுமனே சட்டங்களைப் போடுகிற ஒரு கறாரான அப்பா கிடையாது. அவர் ரொம்ப பாசமானவர். நம்மேல் அன்பைப் பொழிகிறவர். எப்போது வேண்டுமானாலும் அவரிடம் பேசலாம். இதெல்லாம் நமக்கு எப்படித் தெரியும்? இதை யோசித்துப் பாருங்கள். ஜெபத்தில் என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று இயேசு தன்னுடைய சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தபோது, யெகோவாவை எப்படிக் கூப்பிட வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்? ஒருவேளை, ‘சர்வவல்லமையுள்ளவர்,’ ‘படைப்பாளர்,’ “என்றென்றுமுள்ள ராஜா” என்றெல்லாம் கூப்பிடும்படி அவர் சொல்லிக் கொடுத்திருக்கலாம். (ஆதி. 49:25; ஏசா. 40:28; 1 தீ. 1:17) அப்படிச் சொல்வதும் சரியாகத்தான் இருந்திருக்கும். ஆனாலும், யெகோவாவை “எங்கள் தகப்பனே” என்றுதான் கூப்பிடச் சொன்னார்.—மத். 6:9.

4. நாம் யெகோவாவிடம் நெருங்கிப்போக வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறாரா? விளக்குங்கள்.

4 சில அப்பாக்கள் தங்கள் பிள்ளைகள்மேல் பாசத்தைக் காட்டியிருக்கவே மாட்டார்கள். அதனால், அப்பா பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் பிள்ளைகள் வளர்ந்திருப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் வளர்ந்தவர்களுக்கு யெகோவாவை ஓர் அன்பான அப்பாவாக பார்ப்பது கஷ்டமாக இருக்கலாம். ஆனால், யெகோவா நம்முடைய உணர்வுகளைப் புரிந்துகொள்கிறார். நாம் அவரிடம் நெருங்கிவர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதனால்தான், “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று பைபிள் சொல்கிறது. (யாக். 4:8) யெகோவா நம்மேல் ரொம்ப பாசம் வைத்திருக்கிறார். அவரைப்போல் ஓர் அப்பா நமக்குக் கிடைக்கவே மாட்டார்.

5. லூக்கா 10:22 சொல்கிறபடி, யெகோவாவிடம் நெருங்கிப்போவதற்கு இயேசு நமக்கு எப்படி உதவுகிறார்?

5 யெகோவாவிடம் நெருங்கிப்போவதற்கு இயேசு நமக்கு உதவி செய்கிறார். யெகோவாவைப் பற்றி இயேசுவுக்கு ரொம்ப நன்றாகத் தெரிந்திருந்தது. அவருடைய குணங்களை இயேசு அப்படியே காட்டினார். அதனால்தான், “என்னைப் பார்த்தவன் என் தகப்பனையும் பார்த்திருக்கிறான்” என்று அவரால் சொல்ல முடிந்தது. (யோவா. 14:9) ஒரு குடும்பத்தில் இருக்கும் மூத்த அண்ணன் மற்றவர்களுக்கு நல்ல விஷயங்களெல்லாம் சொல்லிக்கொடுப்பார். மூத்த அண்ணன் போல, இயேசுவும், யெகோவாவுக்கு எப்படி மரியாதை கொடுப்பது... எப்படிக் கீழ்ப்படிவது.. என்ன செய்தால் அவருடைய மனது கஷ்டப்படும்.. எப்படி நடந்துகொண்டால் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.. என்றெல்லாம் நமக்குச் சொல்லிக் கொடுக்கிறார். முக்கியமாக, யெகோவா எவ்வளவு அன்பானவர், இரக்கமானவர் என்பதை இயேசு தான் வாழ்ந்த விதத்தில் நமக்குக் காட்டினார். (லூக்கா 10:22-ஐ வாசியுங்கள்.) அதற்கு, சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.

தன்னுடைய மகனை பலப்படுத்த ஒரு தேவதூதரை அனுப்பி, தான் ஓர் அன்பான அப்பா என்பதை யெகோவா காட்டினார் (பாரா 6) *

6. இயேசு பேசியதையெல்லாம் யெகோவா கேட்டாரா? சில உதாரணங்களைச் சொல்லுங்கள்.

6 அவருடைய பிள்ளைகள் அவரிடம் பேசும்போது யெகோவா அதைக் கேட்கிறார். அவருடைய மூத்த மகன் அவரிடம் பேசியபோதெல்லாம் யெகோவா அதை எவ்வளவு கவனமாகக் கேட்டிருப்பார் என்று யோசித்துப்பாருங்கள். இயேசு பூமியில் இருந்தபோது நிறைய சந்தர்ப்பங்களில் யெகோவாவிடம் ஜெபம் செய்தார். (லூக். 5:16) முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அவர் ஜெபம் செய்தார். உதாரணத்துக்கு, 12 அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்ததைப் பற்றிச் சொல்லலாம். (லூக். 6:12, 13) வலியிலும் வேதனையிலும் இருந்தபோதும் அவர் ஜெபம் செய்தார். காட்டிக் கொடுக்கப்படுவதற்கு கொஞ்சம் முன்புகூட உருக்கமாக ஜெபம் செய்தார். வரப்போகிற கஷ்டங்களையெல்லாம் தாங்கிக்கொள்ள உதவும்படி யெகோவாவிடம் கேட்டார். இந்த ஜெபங்களையெல்லாம் யெகோவா கேட்டதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. தன்னுடைய பாசமான மகனை பலப்படுத்த ஒரு தேவதூதரையும் அனுப்பினார்.—லூக். 22:41-44.

7. உங்கள் ஜெபங்களை யெகோவா கேட்கிறார் என்று நினைக்கும்போது உங்கள் மனதுக்கு எப்படி இருக்கிறது?

7 இன்றைக்கும் அவருடைய பிள்ளைகள் செய்கிற ஜெபங்களை யெகோவா கேட்கிறார். எப்போது, எப்படிப் பதில் கொடுக்க வேண்டுமோ அப்படிப் பதில் கொடுக்கிறார். (சங். 116:1, 2) இந்தியாவில் இருக்கும் ஒரு சகோதரிக்கு யெகோவா எப்படிப் பதில் கொடுத்தார் என்று பார்க்கலாம். பயத்தோடும் கவலைகளோடும் அவர் போராடிக்கொண்டிருந்தார். இதைப் பற்றி அவர் யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்தார். “மே 2019 பிராட்காஸ்டிங் நிகழ்ச்சியில் எனக்குப் பதில் கிடைத்தது. கவலைகளை எப்படிச் சமாளிப்பது என்று அந்த நிகழ்ச்சியிலிருந்து கற்றுக்கொண்டேன். அது உண்மையிலேயே என்னுடைய ஜெபத்துக்குக் கிடைத்த பதில் என்றுதான் சொல்ல வேண்டும்” என்று அந்தச் சகோதரி எழுதினார்.

8. இயேசுமேல் யெகோவா எப்படியெல்லாம் அன்பு காட்டினார்?

8 இயேசு பூமியில் இருந்தபோது யெகோவா அவரை அன்பாகவும் அக்கறையாகவும் பார்த்துக்கொண்டார். (யோவா. 5:20) விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்ள அவருக்கு உதவினார். வேதனைகளோடு போராடும்போது அவரைப் பலப்படுத்தினார், வாழ்க்கையை ஓட்டுவதற்கு தேவையானவற்றைக் கொடுத்தார். தன்னுடைய மகன்மேல் தனக்கு எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை வாய்விட்டுச் சொன்னார். (மத். 3:16, 17) யெகோவா எப்போதுமே தன்னுடன் இருப்பதை இயேசுவால் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால், தனியாக இருக்கிறோம் என்ற எண்ணம் இயேசுவுக்கு வந்ததே இல்லை.—யோவா. 8:16.

9. யெகோவா நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதை எப்படியெல்லாம் தெரிந்துகொள்ளலாம்?

9 இயேசுவைப் போலவே யெகோவாவின் அன்பை நாம் நிறைய தடவை ருசித்திருப்போம். யெகோவா நம்மை அவர் பக்கமாக ஈர்த்திருக்கிறார். (யோவா. 6:44) அன்பான... ஒற்றுமையான... சந்தோஷமான... ஒரு குடும்பத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் சோர்ந்துபோகும்போது நம்மைப் பலப்படுத்துகிறார். அவரோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள உதவுகிறார். வாழ்க்கையை ஓட்டுவதற்குத் தேவையான விஷயங்களையும் கொடுக்கிறார். (மத். 6:31, 32) இதையெல்லாம் யோசித்துப் பார்க்கும்போது, அவர்மேல் நமக்கு அன்பு இன்னும் அதிகமாகும்.

யெகோவா பார்ப்பதுபோல் சகோதர சகோதரிகளைப் பாருங்கள்

10. யெகோவாவைப் போல் நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?

10 நம்முடைய சகோதர சகோதரிகள்மேல் யெகோவா ரொம்ப அன்பு வைத்திருக்கிறார். ஆனால், அவரைப் போலவே சகோதர சகோதரிகள்மேல் அன்பை வளர்த்துக்கொள்வதும் அதைச் செயலில் காட்டுவதும் நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஏனென்றால், நாம் வெவ்வேறு கலாச்சாரத்திலிருந்து வந்திருக்கிறோம். வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, நாம் எல்லாரும் சில சமயங்களில் தவறு செய்துவிடுகிறோம். அதனால், நமக்கு இடையே மனஸ்தாபங்கள் வரலாம். இருந்தாலும், யெகோவாவின் குடும்பத்திலுள்ள அன்பு பெருகுவதற்கு நம்மாலும் உதவ முடியும். எப்படி? யெகோவாவைப் போல் சகோதர சகோதரிகள்மேல் அன்பு காட்டுவதன் மூலம்தான். (எபே. 5:1, 2; 1 யோ. 4:19) அவர் எப்படியெல்லாம் இந்த அன்பை காட்டியிருக்கிறார் என்று இப்போது பார்க்கலாம்.

11. இயேசு எப்படி யெகோவாவைப் போலவே கரிசனை காட்டினார்?

11 யெகோவா ‘கரிசனையோடு’ நடந்துகொள்கிறார். (லூக். 1:78) கரிசனையுள்ள ஒருவரால் மற்றவர்கள் அனுபவிக்கும் வேதனையைப் பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியாது. அவர்களுக்கு உதவி செய்ய உடனே ஓடுவார், அவர்களை ஆறுதல்படுத்துவார். இயேசுவும் இதைத்தான் செய்தார். யெகோவாவைப் போலவே கரிசனை காட்டினார். (யோவா. 5:19) ஒருசமயம், மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது அவருடைய “மனம் உருகியது; ஏனென்றால், மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்கள்.” (மத். 9:36) இயேசு அங்கிருந்த நோயாளிகளைக் குணமாக்கினார். அதோடு, ‘உழைத்துக் களைத்துப்போனவர்களுக்கும் பாரமான சுமையைச் சுமக்கிறவர்களுக்கும்’ புத்துணர்ச்சி கொடுத்தார்.—மத். 11:28-30; 14:14.

சகோதர சகோதரிகளுக்கு கரிசனையையும் தாராள குணத்தையும் காட்டும்போது யெகோவாவைப் போல் நடந்துகொள்கிறோம் (பாராக்கள் 12-14) *

12. நீங்கள் எப்படியெல்லாம் கரிசனை காட்டலாம்? சில உதாரணங்களைச் சொல்லுங்கள்.

12 சகோதர சகோதரிகள்மேல் கரிசனை காட்டுவதற்கு நாம் அவர்களுடைய சூழ்நிலைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை, உங்கள் சபையில் ஒரு சகோதரிக்கு உடம்பு முடியாமல் இருக்கலாம். ஆனால், அவருடைய கஷ்டங்களைப் பற்றி அவர் அவ்வளவாக வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம். அவருடைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு நாமாகவே போய் உதவி செய்தால் அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார்! ‘குடும்பத்த ஓட்டுவதற்கு என்ன செய்றீங்க?’ என்று அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அவருடைய வீட்டுக்குப் போய் ஏதாவது சமைத்துக் கொடுக்கலாம் அல்லது வீட்டைச் சுத்தம் செய்தும் கொடுக்கலாம். இப்போது, இதை யோசித்துப் பாருங்கள். உங்களுக்குத் தெரிந்த ஒரு சகோதரருக்கு வேலை பறிபோய் விடுகிறது. அப்போது, உங்களால் முடிந்த பண உதவியைச் செய்யலாம், இல்லையா? ஒருவேளை, நீங்கள்தான் உதவுகிறீர்கள் என்று காட்டிக்கொள்ளாமல்கூட அதைச் செய்யலாம். வேறொரு வேலை கிடைக்கும்வரை, அது அவருக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.

13-14. யெகோவாவைப் போலவே நாம் எப்படித் தாராள குணத்தைக் காட்டலாம்?

13 யெகோவா தாராள குணத்தைக் காட்டுகிறார். (மத். 5:45) நாம் கேட்காமலேயே அவர் நமக்கு எல்லாவற்றையும் செய்கிறார். உதாரணத்துக்கு, சூரியனை எல்லார் மேலும் உதிக்க வைக்கிறார், அவருக்கு நன்றி இல்லாதவர்களும்கூட அதனால் நன்மை அடைகிறார்கள். யெகோவா நம்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது! அவர் நம்மேல் இவ்வளவு கரிசனை காட்டுவதைப் பார்க்கும்போது, அவர்மேல் இருக்கும் அன்பு பெருகுகிறது, இல்லையா? யெகோவாவைப் போலவே நாமும் கரிசனை காட்ட வேண்டும். சகோதர சகோதரிகள் நம்மிடம் வந்து உதவி கேட்பதற்கு முன்பே நாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

14 யெகோவாவைப் போலவே, நிறைய சகோதர சகோதரிகள் தாராள குணத்தைக் காட்டுகிறார்கள். 2013-ல் ஹயான் என்ற சூறாவளி பிலிப்பைன்ஸ் நாட்டையே புரட்டிப் போட்டது. நிறைய சகோதர சகோதரிகள் தங்கள் வீடுகளையும் சொத்துபத்துகளையும் இழந்தார்கள். உடனே, உலகம் முழுவதும் இருக்கும் சகோதர சகோதரிகள் அவர்களுக்கு உதவ தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார்கள். நிறைய பேர் பண உதவி செய்தார்கள். வேறு சிலர், வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் வேலையிலும் அவற்றைச் சரிசெய்து கொடுக்கும் வேலையிலும் முழுமூச்சோடு ஈடுபட்டார்கள். ஒரு வருஷத்துக்குள் கிட்டத்தட்ட 750 வீடுகள் தயாராக இருந்தன. கோவிட் 19 பெருந்தொற்று சமயத்திலும் சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்திருக்கிறார்கள். உதவி தேவைப்படும்போது உடனே போய் உதவுவதன் மூலமாக அவர்கள்மேல் இருக்கும் அன்பை நாம் காட்டுகிறோம்.

15-16. லூக்கா 6:36 சொல்கிறபடி நாம் எப்படி யெகோவாவைப் போல் நடந்துகொள்ளலாம்?

15 யெகோவா இரக்கம் காட்டுகிறார், நம்மை மன்னிக்கிறார். (லூக்கா 6:36-ஐ வாசியுங்கள்.) இதை நாம் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிறோம். (சங். 103:10-14) இயேசுவின் சீஷர்களும் நிறைய தவறுகள் செய்தார்கள். இருந்தாலும், இயேசு அவர்களுக்கு இரக்கம் காட்டினார், அவர்களை மன்னித்தார். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக அவருடைய உயிரையே தியாகம் செய்தார். (1 யோ. 2:1, 2) யெகோவாவும் இயேசுவும் நம்மேல் இரக்கம் காட்டுவதையும், நம்மை மன்னிப்பதையும் யோசித்துப் பார்க்கும்போது அவர்கள்மேல் இருக்கும் அன்பு ரொம்ப அதிகமாகிறது, இல்லையா?

16 சகோதர சகோதரிகளை நாம் ‘தாராளமாக மன்னிக்கும்போது’ நமக்கிடையில் அன்பு பெருகும். (எபே. 4:32) ஆனால், இப்படி மன்னிப்பது சில சமயங்களில் கஷ்டமாக இருக்கலாம். அதனால், நாம் நிறைய முயற்சியெடுக்க வேண்டும். “ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்” என்ற தலைப்பில் வந்த காவற்கோபுர கட்டுரை ரொம்ப உதவியாக இருந்தது என்று ஒரு சகோதரி சொல்கிறார். * அவர் இப்படி எழுதினார்: “மற்றவர்களை மன்னிப்பது எனக்கு எப்படி உதவியாக இருக்கும் என்பதை இந்தக் கட்டுரையிலிருந்து தெரிந்துகொண்டேன். மற்றவர்களை மன்னிப்பது அவர்களுடைய தவறான நடத்தையை அங்கீகரிப்பதையோ, எந்த விதத்திலும் நாம் பாதிக்கப்படாததுபோல் காட்டிக்கொள்வதையோ அர்த்தப்படுத்தாது. மாறாக, மனதிலிருந்து எல்லா மனக்கசப்பையும் களைந்துவிட்டு உள்ளுக்குள் சமாதானமாக இருப்பதை அர்த்தப்படுத்துகிறது” என்று அந்தக் கட்டுரை சொன்னது. சகோதர சகோதரிகளை நாம் தாராளமாக மன்னிக்கும்போது அவர்கள்மேல் அன்பு இருக்கிறது என்பதைக் காட்டுகிறோம். அதோடு, யெகோவாவைப் போலவே நடந்துகொள்கிறோம் என்பதையும் காட்டுகிறோம்.

யெகோவாவின் குடும்பத்தில் இருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்

சிறியவர்களும் சரி, பெரியவர்களும் சரி, சகோதர சகோதரிகள்மேல் அன்பு காட்டுகிறார்கள் (பாரா 17) *

17. மத்தேயு 5:16 சொல்கிறபடி, நாம் எப்படி யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கலாம்?

17 நம்முடைய குடும்பம் ரொம்ப பெரியது, உலகம் முழுவதும் இருக்கிறது. அதில் நாமும் ஒருவராக இருக்கிறோம். இது எவ்வளவு பெரிய விஷயம்! இந்தக் குடும்பத்தில் இன்னும் நிறைய பேர் வந்துசேர வேண்டும் என்று ரொம்ப ஆசைப்படுகிறோம். அதனால், இந்தக் குடும்பத்துக்குத் தலைவராக இருக்கிற யெகோவாவுக்கும், இந்தக் குடும்பத்துக்கும், கெட்ட பெயர் வராதபடி நாம் நடந்துகொள்ள வேண்டும். நம் நடத்தையைப் பார்த்து மக்கள் நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தளவுக்கு நம்முடைய நடத்தையும் இருக்க வேண்டும்.—மத்தேயு 5:16-ஐ வாசியுங்கள்.

18. தைரியமாகப் பேச எது நமக்கு உதவும்?

18 நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதால் சில சமயங்களில் மற்றவர்கள் நம்மைக் கேலி கிண்டல் செய்யலாம் அல்லது துன்புறுத்தலாம். நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது நமக்குப் பயமாக இருக்கலாம். இதுபோன்ற சமயங்களில், யெகோவாவும் இயேசுவும் நமக்கு உதவி செய்வார்கள். எப்படிப் பேசுவது, என்ன பேசுவது என்று நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்று இயேசு சொன்னார். ஏன்? “நீங்கள் என்ன பேச வேண்டுமோ அது அந்த நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். அப்போது நீங்களாகவே பேச மாட்டீர்கள், உங்கள் பரலோகத் தகப்பனுடைய சக்தி உங்களைப் பேச வைக்கும்” என்று சொன்னார்.—மத். 10:19, 20.

19. ராபர்ட்டால் எப்படித் தைரியமாகப் பேச முடிந்தது?

19 ராபர்ட் என்ற சகோதரரின் அனுபவத்தை இப்போது பார்க்கலாம். அவர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்துக்கொண்டிருந்த புதிதில் தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் ராணுவ நீதிமன்றத்தில் நிற்க வேண்டிய ஒரு நிலைமை வந்தது. அப்போது, அவருக்கு பைபிளைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. என்றாலும், சகோதர சகோதரிகள்மேல் அன்பு இருப்பதால்தான் நடுநிலையோடு இருக்க விரும்புவதாக நீதிபதியிடம் தைரியமாகச் சொன்னார். “யார் உன்னுடைய சகோதரர்கள்?” என்று நீதிபதி கேட்டிருக்கிறார். ராபர்ட் இதைக் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. உடனே, அன்றைக்குப் படித்த தினவசனம் அவருக்கு ஞாபகம் வந்திருக்கிறது. மத்தேயு 12:50-தான் அன்றைய தினவசனம். “என்னுடைய பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி நடக்கிறவர்தான் என் சகோதரர், என் சகோதரி, என் அம்மா” என்று அந்த வசனம் சொல்கிறது. ராபர்ட் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்து கொஞ்ச நாட்களே ஆகியிருந்தாலும் யெகோவாவின் சக்தி அவருக்கு உதவி செய்தது. நீதிபதி கேட்ட எல்லா கேள்விகளுக்கும் அவரால் பதில் சொல்ல முடிந்தது. யெகோவா ராபர்ட்டை நினைத்து நிச்சயம் பெருமைப்பட்டிருப்பார்! இவரைப் போல் நாமும் யெகோவாவை நம்பி தைரியமாகப் பேசும்போது நம்மைப் பார்த்தும் அவர் பெருமைப்படுவார்.

20. நாம் எல்லாரும் என்ன செய்ய வேண்டும்? (யோவான் 17:11, 15)

20 ஓர் அன்பான குடும்பத்தை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார் என்று இதுவரை பார்த்தோம். யெகோவா மாதிரி ஒரு அப்பா இருக்கவே முடியாது. நம்மேல் ரொம்ப பாசம் வைத்திருக்கிறார். இந்தக் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நாம் என்றைக்கும் நன்றியோடு இருக்க வேண்டும். ஆனால், இந்தக் குடும்பத்தின் ஒற்றுமையைக் கெடுக்க வேண்டும் என்று சாத்தான் நினைக்கிறான். யெகோவாவுக்கு உண்மையிலேயே நம்மேல் பாசம் இருக்கிறதா என்ற சந்தேகத்தைக் கிளப்ப பார்க்கிறான். அதனால்தான், ஒரு குடும்பமாக நாம் ஒற்றுமையாக இருக்க உதவும்படி யெகோவாவிடம் இயேசு நமக்காக ஜெபம் செய்தார். (யோவான் 17:11-யும் 15-யும் வாசியுங்கள்.) அந்த ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுத்துக்கொண்டே வருகிறார். தன்மேல் யெகோவாவுக்கு அன்பு இருக்கிறதா என்ற சந்தேகம் இயேசுவுக்கு வந்ததே இல்லை. நமக்கும் அந்தச் சந்தேகம் வரவே கூடாது. யெகோவா மீதும் சகோதர சகோதரிகள் மீதும் நமக்கு இருக்கும் அன்பு பெருகிக்கொண்டே போவதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.

பாட்டு 99 மாபெரும் ஒரு குடும்பம்

^ பாரா. 5 அன்பான சகோதர சகோதரிகள் இருக்கும் ஒரு குடும்பத்தில் யெகோவா நமக்கும் ஓர் இடம் கொடுத்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய பாக்கியம்! இந்தக் குடும்பத்துக்குள் இருக்கும் அன்பு பெருகிக்கொண்டே போக வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? நம்முடைய அன்பான அப்பா நம்மேல் எப்படி அன்பு காட்டுகிறாரோ அதேபோல் நாமும் மற்றவர்கள்மேல் அன்பு காட்ட வேண்டும். அதுமட்டுமல்ல, அன்பு காட்டுவது எப்படி என்று இயேசுவிடமிருந்தும் சகோதர சகோதரிகளிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும்.

^ பாரா. 16 நவம்பர் 15, 2012 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 26-30-ஐ பாருங்கள்.

^ பாரா. 57 படவிளக்கம்: கெத்செமனே தோட்டத்தில் இருந்த இயேசுவை பலப்படுத்த யெகோவா ஒரு தேவதூதரை அனுப்பினார்.

^ பாரா. 59 படவிளக்கம்: கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் சகோதர சகோதரிகளுக்கு உணவுப்பொருள்களை கொடுக்க மற்ற சகோதர சகோதரிகள் நிறைய முயற்சி எடுத்தார்கள்.

^ பாரா. 61 படவிளக்கம்: சிறையில் இருக்கும் ஒரு சகோதரரை உற்சாகப்படுத்த ஒரு சின்ன பெண் கடிதம் எழுதுகிறாள். அவள் அம்மா அவளுக்கு உதவி செய்கிறார்.