Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 43

சோர்ந்துவிடாதீர்கள்!

சோர்ந்துவிடாதீர்கள்!

“நன்மை செய்வதை நாம் விட்டுவிடாமல் இருக்க வேண்டும்.”—கலா. 6:9.

பாட்டு 68 அரசாங்கத்தின் செய்தியை விதைப்போம்

இந்தக் கட்டுரையில்... *

1. ஒரு யெகோவாவின் சாட்சியாக இருப்பதை நினைத்து நாம் ஏன் சந்தோஷப்படுகிறோம்?

 ஒரு யெகோவாவின் சாட்சியாக இருப்பது பெரிய பாக்கியம். அதை நினைத்து நாம் ரொம்ப சந்தோஷப்படுகிறோம். மற்றவர்களுக்குப் பிரசங்கித்து அவர்களை சீஷராக்குவதன் மூலம் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயருக்கு ஏற்றபடி நாம் வாழ்கிறோம். ‘முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு இருக்கிறவர்கள்’ ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு உதவும்போது நமக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. (அப். 13:48) இயேசுவின் சீஷர்கள் ஊழியம் செய்துவிட்டுத் திரும்பி வந்தபோது அவருக்கு இருந்த அதே உணர்வுதான் நமக்கும் இருக்கிறது. அந்தச் சமயத்தில், அவர் ‘சந்தோஷத்தாலும் கடவுளுடைய சக்தியாலும் நிறைந்தார்’ என்று பைபிள் சொல்கிறது.—லூக். 10:1, 17, 21.

2. ஊழியத்தை நாம் ரொம்ப முக்கியமாக நினைக்கிறோம் என்பதை எந்தெந்த வழிகளில் காட்டலாம்?

2 ஊழியம்தான் நமக்கு உயிர்நாடி. “உன் மீதும் உன் போதனையின் மீதும் எப்போதும் கவனம் செலுத்து” என தீமோத்தேயுவிடம் அப்போஸ்தலன் பவுல் சொன்னார். ஏன் அப்படிச் சொன்னார்? அதற்கு அவரே பதில் சொல்கிறார்: “இப்படிச் செய்யும்போது நீயும் மீட்புப் பெறுவாய், நீ சொல்வதைக் கேட்கிறவர்களும் மீட்புப் பெறுவார்கள்.” (1 தீ. 4:16) இதிலிருந்து என்ன தெரிகிறது? நாம் ஊழியம் செய்யும்போது மற்றவர்களுடைய உயிரைக் காப்பாற்றுகிறோம். நாம் கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக இருப்பதால் எப்போதுமே நம்மீது கவனம் செலுத்த வேண்டும். இதை எப்படிச் செய்யலாம்? யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கிற விதத்திலும், நாம் பிரசங்கிக்கிற நல்ல செய்திக்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்வதன் மூலமாகவும் நம்மீது கவனம் செலுத்தலாம். (பிலி. 1:27) அப்படியென்றால், ‘நம் போதனையின்மேல்’ எப்படி ‘கவனம் செலுத்தலாம்’? ஊழியம் செய்வதற்கு முன்பு நன்றாகத் தயாரிப்பதன் மூலமாகவும் யெகோவாவின் ஆசீர்வாதத்துக்காக அவரிடம் ஜெபம் செய்வதன் மூலமாகவும் கவனம் செலுத்தலாம்.

3. நாம் ஊழியம் செய்யும்போது எல்லாருமே நன்றாகக் கேட்பார்களா? ஓர் அனுபவத்தைச் சொல்லுங்கள்.

3 ஊழியம் செய்வதற்காக நம்மால் முடிந்ததையெல்லாம் செய்தாலும் சில சமயங்களில் நம்முடைய ஊழியப் பகுதியில் நல்ல பலன்கள் கிடைப்பதில்லை. இப்போது சகோதரர் ஜார்ஜ் லிண்டலின் அனுபவத்தைப் பார்க்கலாம். ஐஸ்லாந்தில் அவர் 1929-லிருந்து 1947 வரை தனியாளாக ஊழியம் செய்தார். ஆயிரக்கணக்கான பிரசுரங்களை மக்களுக்குக் கொடுத்தார். ஆனால், ஒருவர்கூட சத்தியத்துக்கு வரவில்லை. “சிலர் சத்தியத்தை வெறுப்பதாகவும் தோன்றியது. ஆனால், நிறைய பேருக்கு அதில் ஆர்வமே இல்லை” என்று அவர் எழுதினார். கிலியட் பள்ளியில் பட்டம் பெற்ற மிஷனரிகள் அங்கே போன பின்பும்கூட நிறைய வருஷங்களுக்கு ஒருவர்கூட சத்தியத்துக்கு வரவில்லை. ஒன்பது வருஷங்களுக்குப் பின்புதான் சிலர் சத்தியத்துக்கு வந்தார்கள். *

4. பைபிள் படிப்புக்கு யாருமே ஒத்துக்கொள்ளாதபோது நாம் எப்படியெல்லாம் நினைக்கலாம்?

4 இயேசுவை மேசியாவாக யூதர்கள் ஏற்றுக்கொள்ளாதபோது பவுலுக்கு “மிகுந்த துக்கமும் தீராத வேதனையும்” இருந்தது. (ரோ. 9:1-3) பைபிள் படிப்புக்கு மற்றவர்கள் ஒத்துக்கொள்ளாதபோது நமக்கும் பவுல் மாதிரியே வேதனையாக இருக்கலாம். ஒருவேளை, நீங்கள் யாருக்கு பைபிள் படிப்பு நடத்துகிறீர்களோ அவருக்காக நிறைய முயற்சிகள் எடுத்திருக்கலாம், ஊக்கமாக ஜெபம் செய்திருக்கலாம். ஆனாலும், அவர்கள் முன்னேறாமல் இருக்கலாம். இல்லையென்றால், உங்களுடைய பைபிள் மாணவர்களில் ஒருவர்கூட இதுவரை ஞானஸ்நானம் எடுக்காமல் இருக்கலாம். இந்தச் சூழ்நிலையில் உங்களுடைய ஊழியத்தை யெகோவா ஆசீர்வதிக்கவில்லை என்று நினைத்து நீங்கள் குற்றவுணர்வில் புழுங்க வேண்டுமா? இதற்கு, நீங்கள் இரண்டு கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள வேண்டும். (1) யெகோவாவைப் பொறுத்தவரை எது வெற்றிகரமான ஊழியம்? (2) உங்களுடைய எதிர்பார்ப்புகள் எப்படி இருக்க வேண்டும்?

வெற்றிகரமான ஊழியம் என்றால் என்ன?

5. யெகோவாவின் வேலையை செய்யும்போது எல்லா சமயத்திலும் நாம் நினைக்கிற விதமாக வெற்றி கிடைக்கும் என்று ஏன் சொல்லிவிட முடியாது?

5 யெகோவாவின் விருப்பத்தைச் செய்கிற ஒருவர் என்ன ‘செய்தாலும் வெற்றி பெறுவார்’ என்று பைபிள் சொல்கிறது. (சங். 1:3) அதற்காக யெகோவாவுக்கு நாம் என்ன செய்தாலும் நாம் நினைக்கிற மாதிரி அதில் வெற்றி கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் நாமும் சரி, மற்றவர்களும் சரி, பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் நம்முடைய வாழ்க்கை ‘பெரிய போராட்டமாக’ இருக்கிறது. (யோபு 14:1) அதோடு, நாம் ஊழியம் செய்வதற்கு முயற்சி எடுக்கும்போது எதிரிகள் தலையிட்டு நம்மை தடுக்கிறார்கள். (1 கொ. 16:9; 1 தெ. 2:18) அப்படியென்றால், யெகோவா எதை வெற்றி என்று நினைக்கிறார்? இதைத் தெரிந்துகொள்ள இப்போது சில பைபிள் நியமங்களைப் பார்க்கலாம்.

ஒருவரை நேருக்கு நேர் பார்த்து சத்தியத்தைச் சொன்னாலும் சரி, கடிதம் வழியாகவோ போன் வழியாகவோ பிரசங்கித்தாலும் சரி, நம்முடைய முயற்சிகளை யெகோவா உயர்வாக மதிக்கிறார் (பாரா 6)

6. யெகோவாவைப் பொறுத்தவரை எது வெற்றி?

6 நாம் யெகோவாவுக்காக உழைப்பதையும் சோர்ந்துபோகாமல் இருப்பதையும் அவர் கவனிக்கிறார். நாம் சொல்லும் செய்தியை மற்றவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, யெகோவாமேல் இருக்கிற அன்பினால் நாம் விடாமல் ஊழியம் செய்வதைத்தான் அவர் வெற்றி என்று நினைக்கிறார். “பரிசுத்தவான்களுக்காக நீங்கள் சேவை செய்திருக்கிறீர்கள், சேவை செய்தும் வருகிறீர்கள்; அதனால், உங்களுடைய உழைப்பையும் தன்னுடைய பெயருக்காக நீங்கள் காட்டிய அன்பையும் மறந்துவிடுவதற்குக் கடவுள் அநீதியுள்ளவர் கிடையாது” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபி. 6:10) இதிலிருந்து என்ன தெரிகிறது? நம்மோடு பைபிள் படிக்கிறவர்கள் ஞானஸ்நானம் எடுக்காவிட்டாலும் நாம் செய்கிற முயற்சியையும் நாம் காட்டுகிற அன்பையும் யெகோவா மறக்கவே மாட்டார். அதனால், அப்போஸ்தலன் பவுல் கொரிந்து சபைக்கு எழுதியதை நாமும் மனதில் வைத்துக்கொள்ளலாம். ஊழியத்தில் நாம் நினைக்கிற பலன்கள் கிடைக்காவிட்டாலும் “நம் எஜமானுக்காக நீங்கள் உழைப்பது வீண்போகாது.”—1 கொ. 15:58.

7. தான் செய்த ஊழியத்தைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் சொன்ன விஷயத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

7 அப்போஸ்தலன் பவுல் திறமையான மிஷனரியாக இருந்தார். நிறைய நகரங்களில் சபைகள் உருவாவதற்குக் காரணமாக இருந்தார். ஆனால், அவர் ஒரு சிறந்த போதகர் கிடையாது என்று சிலர் குறை சொன்னார்கள். அவர்கள் பவுலைவிட தங்களை உயர்த்திக்கொண்டார்கள். அவர்களுக்குப் பதில் சொன்னபோது, அவர் எவ்வளவு பேரைக் கிறிஸ்தவர்களாக ஆக்கியிருக்கிறார் என்ற கணக்கெல்லாம் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, ‘நான் அதிகமாக உழைத்தேன்’ என்று சொன்னார். (2 கொ. 11:23) நாம் எடுக்கும் முயற்சிகளையும் நாம் சோர்ந்துபோகாமல் இருப்பதையும்தான் வெற்றி என்று யெகோவா நினைக்கிறார் என்பதை பவுல் புரிந்துவைத்திருந்தார். நாமும் அதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

8. ஊழியத்தைப் பொறுத்தவரை, நாம் உண்மையிலேயே எதை நினைத்து சந்தோஷப்பட வேண்டும்?

8 நாம் செய்கிற ஊழியத்தைப் பார்த்து யெகோவா அப்பா சந்தோஷப்படுகிறார். ஒரு சமயம், நல்ல செய்தியைப் பிரசங்கிக்க 70 சீஷர்களை இயேசு அனுப்பினார். அவர்கள் ‘சந்தோஷத்தோடு திரும்பி வந்தார்கள்.’ எதை நினைத்து அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்? அதற்கான காரணத்தை அவர்களே சொல்வதைக் கேளுங்கள்: “எஜமானே! உங்கள் பெயரைச் சொல்லிக் கட்டளையிடும்போது பேய்கள்கூட எங்களுக்கு அடங்கிவிடுகின்றன” என்று சொன்னார்கள். அப்போது இயேசு அவர்கள் யோசிக்கும் விதத்தை சரிசெய்தார். “பேய்கள் உங்களுக்கு அடங்கிவிடுவதை நினைத்து சந்தோஷப்படாதீர்கள்; உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருப்பதை நினைத்தே சந்தோஷப்படுங்கள்” என்று சொன்னார். (லூக். 10:17-20) இதிலிருந்து என்ன தெரிகிறது? ஊழியத்தில் அவர்களுக்கு எல்லா சமயத்திலும் நல்ல பலன்கள் கிடைக்காது என்பது இயேசுவுக்குத் தெரியும். சொல்லப்போனால், ஆரம்பத்தில் அவர்கள் சொன்னதை நன்றாகக் கேட்டவர்களில் எத்தனை பேர் கடைசியில் சீஷர்களாக ஆனார்கள் என்று தெரியாது. உண்மையான சந்தோஷம் என்பது, அவர்கள் சொல்வதை எத்தனை பேர் கேட்கிறார்கள் என்பதைப் பொறுத்தது கிடையாது. அவர்கள் எடுக்கிற முயற்சிகளைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுகிறார் என்பதைப் பொறுத்துதான் இருந்தது. இதை சீஷர்கள் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது.

9. சோர்ந்துபோகாமல் ஊழியம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று கலாத்தியர் 6:7-9 சொல்கிறது?

9 நாம் சோர்ந்துபோகாமல் ஊழியம் செய்தால் முடிவில்லாத வாழ்வு என்ற பரிசு கிடைக்கும். நாம் முழு இதயத்தோடு சத்திய விதைகளை விதைத்து அது வளருவதற்கு உதவும்போது, ‘கடவுளுடைய சக்திக்காக விதைக்கிறோம்’ என்று அர்த்தம். ஏனென்றால், இப்படிச் செய்யும்போது கடவுளுடைய சக்தி நம் வாழ்க்கையில் தாராளமாக செயல்படுவதற்கு நாம் இடம் கொடுக்கிறோம். ஒருவர் ஞானஸ்நானம் எடுப்பதற்கு நம்மால் உதவ முடிகிறதோ இல்லையோ, “விட்டுவிடாமல்” அல்லது “சோர்ந்துபோகாமல்” ஊழியம் செய்தால் நமக்கு முடிவில்லாத வாழ்வு உறுதி என்று யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார்.—கலாத்தியர் 6:7-9-ஐ வாசியுங்கள்.

எப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் நமக்கு இருக்க வேண்டும்?

10. ஒருவர் நல்ல செய்தியைக் கேட்பதும் கேட்காததும் எதைப் பொறுத்து இருக்கிறது?

10 ஒருவர் நாம் சொல்லும் செய்தியைக் கேட்பதும் கேட்காததும் அவருடைய இதயத்தைப் பொறுத்தே இருக்கிறது. இதைப் புரிந்துகொள்வதற்கு, விதைக்கிறவனைப் பற்றிய ஒரு உவமையை இயேசு சொன்னார். அவன் வெவ்வேறு நிலத்தில் விதை விதைத்தான். ஆனால், ஒரு நிலம்தான் பலன் கொடுத்தது. (லூக். 8:5-8) மக்களின் இதயத்தைதான் வெவ்வேறு நிலம் என்று இயேசு சொன்னார். ஒருவர் ‘கடவுளுடைய செய்தியை’ ஏற்றுக்கொள்வது அவருடைய இதயத்தைப் பொறுத்துதான் இருக்கிறது என்று அவர் சொன்னார். (லூக். 8:11-15) ஒரு விதையின் வளர்ச்சி எப்படி விதைக்கிறவனின் கட்டுப்பாட்டில் இல்லையோ, அதேபோல் நம்மோடு பைபிள் படிப்பவர், முன்னேறுவதும் முன்னேறாததும் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. அது அவருடைய இதயத்தைப் பொறுத்து இருக்கிறது. நம்முடைய வேலையெல்லாம் சத்தியம் என்ற விதையை நல்லபடியாக விதைப்பதுதான். “ஒவ்வொருவனும் தன்னுடைய உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவான்” என்றுதான் பவுல் சொன்னாரே தவிர, ஊழியத்தில் செய்த சாதனைகளுக்கு ஏற்ற பலனைப் பெறுவான் என்று சொல்லவில்லை.—1 கொ. 3:8.

நோவா நிறைய வருஷங்கள் உண்மையாக பிரசங்கித்தாலும், அவருடைய மனைவி, மகன்கள், மருமகள்கள் மட்டும்தான் பேழைக்குள் அவருடன் போனார்கள். இருந்தாலும், நோவா யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து அவர் கொடுத்த வேலையைச் செய்துமுடித்தார். (பாரா 11)

11. ‘நீதியைப் பிரசங்கித்த’ நோவா ஒரு வெற்றிகரமான ஊழியர் என்று ஏன் சொல்லலாம்? (அட்டைப் படம்)

11 அந்தக் காலத்திலிருந்தே, கடவுளுடைய ஊழியர்கள் பிரசங்கித்தபோது நிறைய பேர் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. உதாரணத்துக்கு, நோவா நிறைய வருஷங்களாக ‘நீதியைப் பிரசங்கித்தார்.’ (2 பே. 2:5) அன்றிருந்த மக்கள் அதைக் காதுகொடுத்துக் கேட்பார்கள் என்று அவர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், அப்படிக் கேட்பார்கள் என்று யெகோவா சொல்லவில்லை. அவர் பேழையைக் கட்ட சொன்னபோது, “நீயும், உன் மனைவியும், உன் மகன்களும், உன் மருமகள்களும் பேழைக்குள் போக வேண்டும்” என்றுதான் சொன்னார். (ஆதி. 6:18) அதோடு, பேழையின் அளவை வைத்தே நிறைய பேர் தான் சொல்வதைக் கேட்க மாட்டார்கள் என்பது நோவாவுக்குப் புரிந்திருக்கும். (ஆதி. 6:15) அன்றிருந்த ஒரு நபர்கூட காதுகொடுத்துக் கேட்கவில்லை என்பது நமக்கும் தெரிந்ததுதான். (ஆதி. 7:7) அதற்காக நோவா தோற்றுப்போய்விட்டார் என்று அர்த்தமா? இல்லை. கடவுளைப் பொறுத்தவரை அவர் வெற்றிகரமான ஊழியர்தான். ஏனென்றால், யெகோவா சொன்ன எல்லாவற்றையும் அவர் அப்படியே செய்தார்.—ஆதி. 6:22.

12. எரேமியாவால் எப்படிச் சந்தோஷத்தை இழக்காமல் தொடர்ந்து பிரசங்கிக்க முடிந்தது?

12 இப்போது எரேமியாவைப் பற்றி யோசித்துப்பாருங்கள். நிறைய வருஷங்களாக அவர் பிரசங்கித்தார். ஆனால், ஜனங்கள் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. சொல்லப்போனால், அவரை எதிர்த்தார்கள். அவருடைய எதிரிகள் ‘கிண்டல் செய்தார்கள்,’ அவரை ‘கண்டபடி பேசினார்கள்.’ அதனால், அவர் சோர்ந்துபோய் பிரசங்கிப்பதை நிறுத்திவிடலாம் என்று நினைத்தார். (எரே. 20:8, 9) ஆனாலும், தொடர்ந்து பிரசங்கிக்க எப்படி அவரால் முடிந்தது? முக்கியமான இரண்டு விஷயங்களை அவர் மனதில் ஆழமாகப் பதிய வைத்துக்கொண்டார். ஒன்று, மக்களுக்கு அவர் சொன்ன கடவுளுடைய செய்தி அவர்களுக்கு நல்ல “எதிர்காலத்தையும் நம்பிக்கையையும்” கொடுக்கும் என்பதைப் புரிந்துவைத்திருந்தார். (எரே. 29:11) இரண்டாவது, யெகோவாவின் பெயரில் அவருக்காக ஜனங்களிடம் பேசினார். (எரே. 15:16) இன்றைக்கு நாம் சொல்கிற செய்தியும் மக்களுக்கு நல்ல எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது. அதோடு, நாமும் யெகோவாவின் பெயரில் இன்றைக்குப் பேசுகிறோம். முக்கியமான இந்த இரண்டு விஷயங்களை நாம் மனதில் பதிய வைத்துவிட்டால், மற்றவர்கள் நாம் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்டாலும் கேட்காவிட்டாலும், நம் சந்தோஷத்தை இழந்துவிட மாட்டோம்.

13. மாற்கு 4:26-29-ல் இயேசு சொன்ன கதையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

13 விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள ஒருவருக்குக் கொஞ்சம் காலம் எடுக்கும். இதைப் புரிந்துகொள்ள இயேசு ஒரு கதையைச் சொன்னார். அதில், ஒருவர் விதை விதைத்துவிட்டுத் தூங்கப்போகிறார். (மாற்கு 4:26-29-ஐ வாசியுங்கள்.) அந்த விதை கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறது. ஆனால், அதை வேகமாக வளர வைப்பது அந்த விவசாயியின் கட்டுப்பாட்டில் இல்லை. அதேபோல், நாமும் சத்தியம் என்ற விதையை ஒருவருடைய மனதில் விதைக்கிறோம். அவருடைய மனதில் விசுவாசம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளரும். அப்படி வளருவதுகூட சில காலத்துக்கு நமக்கே தெரியாமல் இருக்கலாம். எப்படி ஒரு விவசாயியால் அவர் ஆசைப்பட்டபடி ஒரு பயிரை வேகமாக வளர வைக்க முடியாதோ அப்படித்தான் நாம் ஆசைப்பட்டபடி நம்முடைய பைபிள் மாணவர்களும் வேகமாக முன்னேற வேண்டுமென எதிர்பார்க்க முடியாது. அதனால், சோர்ந்துவிடாதீர்கள். அந்த விவசாயியைப் போல் பொறுமையாக இருங்கள்.—யாக். 5:7, 8.

14. ஊழியத்தில் நல்ல பலன்கள் கிடைப்பதற்குக் கொஞ்சம் காலம் எடுக்கும் என்பதைப் புரிந்துகொள்ள ஓர் அனுபவத்தை சொல்லுங்கள்.

14 சில இடங்களில், நிறைய வருஷங்களாக நம்முடைய ஊழியத்துக்குப் பலன் கிடைப்பதில்லை. இப்போது க்ளாடிஸ் ஆலன், அவருடைய தங்கை ரூபி ஆலனின் அனுபவத்தைப் பார்க்கலாம். இவர்கள் இருவரும் கனடாவில் இருக்கிற கியுபெக்கில் உள்ள ஒரு ஊரில் 1959-ஆம் வருஷம் ஒழுங்கான பயனியர்களாக நியமிக்கப்பட்டார்கள். * அந்த இடத்தில் கத்தோலிக்க சர்ச்சின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. யெகோவாவின் சாட்சிகளிடம் பேசினால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும் குருமார்களும் என்ன நினைப்பார்களோ என்று பயந்து மக்கள் அவர்கள் சொன்ன செய்தியைக் கேட்கவே இல்லை. “நாங்க ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் ஊழியம் செஞ்சோம். அதுவும் இரண்டு வருஷத்துக்கு அப்படி செஞ்சோம். ஆனா, ஒருத்தர்கூட கேக்கல. நாங்க கதவ தட்டுன உடனே யாராவது வருவாங்க. ஆனா, நாங்கன்னு தெரிஞ்சவுடனே அவங்க பாட்டுக்கு போயிட்டே இருப்பாங்க. ஆனாலும், நாங்க சோர்ந்து போகல” என்று க்ளாடிஸ் சொல்கிறார். காலப்போக்கில் மக்கள் மனம் இளகியது, நல்ல செய்தியைக் காதுகொடுத்துக் கேட்க ஆரம்பித்தார்கள். இன்றைக்கு, அந்த ஊரில் மூன்று சபைகள் இருக்கின்றன.—ஏசா. 60:22.

15. சீஷராக்கும் வேலையைப் பற்றி 1 கொரிந்தியர் 3:6, 7-லிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

15 சீஷராக்கும் வேலை என்பது ஒரு கூட்டு முயற்சி. ஒருவர் ஞானஸ்நானம் எடுப்பதில் சபையிலுள்ள எல்லாருக்குமே பங்கு இருக்கிறது என்பது நமக்கு நன்றாகத் தெரியும். (1 கொரிந்தியர் 3:6, 7-ஐ வாசியுங்கள்.) இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். ஆர்வம் காட்டும் ஒருவருக்கு ஒரு சகோதரனோ சகோதரியோ ஒரு துண்டுப்பிரதியை அல்லது ஒரு பத்திரிகையைக் கொடுக்கிறார். ஆனால், அந்த நபரை மறுபடியும் போய்ப் பார்க்க அவரால் முடிவதில்லை. அதனால், ஆர்வம் காட்டிய அந்த நபரைப் போய்ப் பார்க்கும்படி இன்னொருவரிடம் சொல்கிறார். ஆர்வம் காட்டிய நபருக்கு அவர் பைபிள் படிப்பு ஆரம்பிக்கிறார். அந்தப் படிப்புக்கு வெவ்வேறு சகோதர சகோதரிகளைக் கூட்டிக்கொண்டு போகிறார். அப்படிப் போகிற எல்லா சகோதர சகோதரிகளும் பைபிள் படிப்பவரின் மனதில் இருக்கிற சத்திய விதைக்குத் தண்ணீர் ஊற்றுகிறார்கள். அது வளர்ந்து அறுவடைக்குத் தயாராகும்போது, அதாவது அவர் ஞானஸ்நானம் எடுக்கும்போது, அவருக்கு முதன்முதலில் சத்தியத்தைச் சொன்னவரும் சரி, அவருக்கு உதவிய மற்றவர்களும் சரி, ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள்.—யோவா. 4:35-38.

16. ஊழியத்தில் உங்களால் அவ்வளவாக செய்ய முடியாவிட்டாலும் நீங்கள் ஏன் சந்தோஷப்படலாம்?

16 உடல்நிலை சரியில்லாததாலோ அவ்வளவாக பலம் இல்லாததாலோ உங்களால் ஊழியத்தை அதிகமாக செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால், உங்களால் செய்ய முடிந்ததை நினைத்து நீங்கள் சந்தோஷப்படலாம். இப்போது தாவீது ராஜாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம். ஒருதடவை அவருடைய ஆட்களையும், குடும்பங்களையும், அவர்களுடைய பொருள்களையும் அமலேக்கியர்களிடமிருந்து மீட்டு வருவதற்காக அவர் போருக்குப் போனார். அந்தச் சமயத்தில், அவருடன் போருக்குப் போன 200 பேர் ரொம்பவே களைத்துப்போனதால் மூட்டைமுடிச்சுகளைப் பார்த்துக்கொள்வதற்காக ஓரிடத்தில் தங்கிவிட்டார்கள். அமலேக்கியர்களை ஜெயித்த பின்பு, அவர்களிடம் இருந்து கைப்பற்றிய நிறைய பொருள்களை தாவீது கொண்டுவந்தார். அந்தப் பொருள்களை அவருடன் சேர்ந்து போர் செய்தவர்களுக்கு மட்டுமல்ல, மூட்டைமுடிச்சுகளைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த 200 பேருக்கும் சரிசமமாகப் பங்குபோட்டு தர வேண்டும் என்று சொன்னார். (1 சா. 30:21-25) இன்றைக்கு உலகம் முழுவதும் நடக்கிற ஊழிய வேலையைப் பொறுத்தவரை இதுதான் உண்மை. உங்களால் அவ்வளவாக செய்ய முடியாவிட்டாலும், ஒருவர் புதிதாக ஞானஸ்நானம் எடுக்கும்போது மற்றவர்களோடு சேர்ந்து நீங்களும் சந்தோஷப்படலாம்.

17. எதற்காக நாம் யெகோவாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்?

17 நாம் செய்கிற சேவையை யெகோவா உயர்வாக மதிக்கிறார் என்பதை இதுவரை பார்த்தோம். இதற்காக நாம் அவருக்கு ரொம்ப நன்றியோடிருக்கிறோம். நாம் சொல்கிற செய்தியைக் காதுகொடுத்துக் கேட்கும்படியோ யெகோவாவை வழிபடும்படியோ யாரையும் நம்மால் கட்டாயப்படுத்த முடியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஊழியம் செய்வதற்காக நாம் எடுக்கிற முயற்சிகளையும், அவர்மேல் நாம் வைத்திருக்கிற அன்பையும் அவர் பார்க்கிறார். அதற்கான பலன்களைக் கொடுக்கிறார். ஊழியத்தில் நம்மால் அவ்வளவாக ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும், செய்ய முடிந்ததை எப்படிச் சந்தோஷமாக செய்வது என்று அவர் சொல்லிக்கொடுக்கிறார். (யோவா. 14:12) சோர்ந்துபோகாமல் நாம் ஊழியம் செய்யும்போது நிச்சயம் அவர் நம்மைப் பார்த்து சந்தோஷப்படுவார்!

பாட்டு 67 சுறுசுறுப்பாக பிரசங்கி

^ நம்முடன் ஒருவர் பைபிளைப் படிக்கும்போது நாம் ரொம்ப சந்தோஷப்படுகிறோம். ஆனால், நமக்கு ஒரு பைபிள் படிப்புகூட இல்லையென்றால் அப்படியே சோர்ந்துவிடுவோம். ஒருவேளை, உங்களோடு பைபிளைப் படிப்பவர் எந்த முன்னேற்றமும் செய்யாமல் இருக்கலாம். உங்களுடைய பைபிள் மாணவர்களில் ஒருவர்கூட இதுவரை ஞானஸ்நானம் எடுக்காமல் இருக்கலாம். அப்படியென்றால், சீஷராக்கும் வேலையில் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று அர்த்தமா? நீங்கள் சொல்லும் செய்தியை மக்கள் காதுகொடுத்துக் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, உங்களால் வெற்றிகரமாக ஊழியம் செய்ய முடியும், சந்தோஷமாகவும் இருக்க முடியும். இதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

^ செப்டம்பர் 1, 2002 காவற்கோபுரத்தில்ஒன்றையுமே மாற்ற மாட்டேன்!” என்ற தலைப்பில் இருக்கிற க்ளாடிஸ் ஆலனின் வாழ்க்கை சரிதையைப் பாருங்கள்.