Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நட்பு என்ற வீட்டைத் திரும்பக் கட்ட யெகோவா உங்களுக்கு உதவுவார்

நட்பு என்ற வீட்டைத் திரும்பக் கட்ட யெகோவா உங்களுக்கு உதவுவார்

ஒவ்வொரு வருஷமும் சபைநீக்கம் செய்யப்பட்ட நிறைய பேர் மறுபடியும் யெகோவாவின் சாட்சியாக ஆகிறார்கள். அந்தச் சமயத்தில், ‘பரலோகத்தில் ஏற்படுகிற சந்தோஷத்தை’ கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். (லூக். 15:7, 10) நீங்கள் மறுபடியும் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆகி இருக்கிறீர்களா? அப்படியென்றால், உங்களைப் பார்த்து இயேசுவும் தேவதூதர்களும் யெகோவாவும் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆனால், யெகோவாவிடம் இருக்கிற நட்பை நீங்கள் மறுபடியும் பலப்படுத்தும்போது உங்களுக்குச் சில சவால்கள் வரலாம். என்னென்ன சவால்கள் வரலாம்? அதை நீங்கள் எப்படிச் சமாளிக்கலாம்?

சவால்கள்

மறுபடியும் யெகோவாவின் சாட்சியான நிறைய பேர் சோர்வான எண்ணங்களோடு போராடுகிறார்கள். இப்போது, தாவீது ராஜாவைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவருடைய பாவங்களை யெகோவா மன்னித்த பின்பும், “என் குற்றங்கள் மலைபோல் குவிந்து நிற்கின்றன” என்று அவர் சொன்னார். (சங். 40:12; 65:3) ஒருவர் யெகோவாவிடம் திரும்பிவந்த பின்பும் நிறைய வருஷங்களுக்கு குற்றவுணர்வோடு புழுங்கிக்கொண்டிருக்கலாம். இசபெல் என்ற சகோதரி 20 வருஷங்களுக்கும் மேலாக சபைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.  * “யெகோவா என்னை மன்னிச்சிட்டாருனு நம்பறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். ஒருவேளை, நீங்கள் சோர்ந்துவிட்டால் யெகோவாவுக்கும் உங்களுக்கும் இருக்கிற நட்பில் மறுபடியும் விரிசல் விழுந்துவிடும். (நீதி. 24:10) அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

மறுபடியும் யெகோவாவின் சாட்சியான சிலர், முன்பு யெகோவாவோடு இருந்த நட்பை மறுபடியும் வளர்த்துக்கொள்ள முடியுமா என்று நினைத்துக் கவலைப்படுகிறார்கள். “நான் சபைநீக்கம் செய்யப்படறதுக்கு முன்னாடி கத்துக்கிட்ட விஷயங்களயும், செஞ்ச விஷயங்களயும் சுத்தமா மறந்திட்ட மாதிரி தோனுது” என்று சகோதரர் அன்டனி சொல்கிறார். இந்த மாதிரியான எண்ணங்கள் ஒருவருக்கு இருக்கும்போது அவரால் யெகோவாவுக்கு நிறைய செய்ய முடியாமல் போய்விடும்.

இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். பயங்கரமான ஒரு புயலால் ஒருவருடைய வீடு இடிந்து தரைமட்டமாகிறது. அந்த வீட்டை மறுபடியும் கட்ட வேண்டுமென்றால், நிறைய நேரமும் முயற்சியும் தேவை. அதை நினைத்து அவர் மலைத்துப் போய்விடலாம். அதைப் போலவே, மோசமான பாவம் என்ற புயலால் யெகோவாவோடு ஒருவருக்கு இருக்கிற நட்பு என்ற அழகான வீடும் இடிந்துபோயிருக்கலாம். அதை மறுபடியும் சரிசெய்ய ஒருவருக்கு நிறைய நேரமும், முயற்சியும் தேவைப்படும். அதை நினைத்து அவர் மலைத்துப்போகலாம். ஆனால், அவர் தனியாகப் போராட வேண்டிய அவசியமில்லை.

“வாருங்கள், நம்மிடையே இருக்கிற பிரச்சினையைச் சரிசெய்யலாம்” என்று யெகோவா நம்மைக் கூப்பிடுகிறார். (ஏசா. 1:18) ‘பிரச்சினையைச் சரிசெய்வதற்கு’ ஏற்கெனவே நீங்கள் நிறைய முயற்சி செய்திருக்கிறீர்கள், அதற்காக யெகோவா உங்களை ரொம்ப நேசிக்கிறார். இப்போது அவரால், ‘பாரு, என் பிள்ளை என்கிட்ட வந்துட்டான்’ என்று சொல்லி சாத்தானுக்குப் பதிலடி கொடுக்க முடியும்.—நீதி. 27:11.

யெகோவாவிடம் மறுபடியும் வந்ததன் மூலமாக நீங்கள் ஏற்கெனவே அவரிடம் நெருங்கி வந்திருக்கிறீர்கள். (யாக். 4:8) அவரும் உங்களிடம் நெருங்கி வருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். இப்போது நீங்கள் சபைக்கு வந்தது ரொம்ப நல்ல விஷயம். உங்களைப் பார்த்து எல்லாரும் சந்தோஷப்படுவார்கள். ஆனால், அது மட்டுமே போதாது. உங்களுடைய அப்பாவும், நண்பருமான யெகோவாமேல் உள்ள அன்பை நீங்கள் அதிகமாக்கிக்கொண்டே போக வேண்டும். அதற்காக, நீங்கள் என்ன செய்யலாம்?

எட்ட முடிந்த இலக்குகளை வையுங்கள்

உங்களால் எட்ட முடிந்த இலக்குகளை வையுங்கள். யெகோவாவைப் பற்றி... அவர் வாக்குக் கொடுத்திருக்கிற பூஞ்சோலை பூமியைப் பற்றி... இன்னும் சில அடிப்படையான விஷயங்களைப் பற்றி... நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இவையெல்லாம் ஒரு வீட்டின் அஸ்திவாரம் போன்றவை. இப்போது, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த அஸ்திவாரத்தின்மேல் கட்டிடத்தைத் திரும்பவும் எழுப்ப வேண்டும். அதாவது, பிரசங்கிப்பது, கூட்டங்களுக்குப் போவது, சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து நேரம் செலவு செய்வது, இவற்றையெல்லாம் தவறாமல் செய்ய வேண்டும். இதைச் செய்வதற்கு நீங்கள் என்னென்ன குறிக்கோள்களை வைக்கலாம்?

யெகோவாவிடம் அடிக்கடி பேசுங்கள். நீங்கள் குற்றவுணர்வில் புழுங்கிக்கொண்டிருந்தால், அவரிடம் பேசுவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். (ரோ. 8:26) ஆனாலும், “விடாமல் ஜெபம் செய்யுங்கள்.” (ரோ. 12:12) யெகோவாவிடம் இருக்கிற நட்பை நீங்கள் எந்தளவுக்கு மதிக்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள். “குற்ற உணர்வு என்னை வாட்டி எடுத்துச்சு. ரொம்ப அவமானமா இருந்துச்சு. ஆனா, ஒவ்வொரு தடவயும் ஜெபம் செஞ்சதுக்கு அப்புறம் அந்த எண்ணம் குறஞ்சுடுச்சு. என் மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருந்துச்சு” என்று அன்ட்ரேஜ் சொல்கிறார். என்ன சொல்லி ஜெபம் செய்வது என்றே உங்களுக்கு தெரியவில்லையா? கவலைப்படாதீர்கள். சங்கீதம் 51-லும் 65-லும் இருக்கிற தாவீது ராஜாவின் ஜெபத்தைப் படித்துப்பாருங்கள்.

தவறாமல் பைபிள் படியுங்கள். அப்படிச் செய்யும்போது உங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்த முடியும். யெகோவாவோடு இருக்கிற அன்பும் வளரும். (சங். 19:7-11) “பைபிளயும், பிரசுரங்களயும் நான் தவறாம படிக்காததாலதான் யெகோவாகிட்ட இருக்கிற நட்பில விரிசல் விழுந்துச்சு. அவரோட மனசயும் நான் காயப்படுத்திட்டேன். அதே தப்ப திரும்பவும் செய்ய விரும்பல. அதனால, பைபிளயும் பிரசுரங்களயும் தவறாம படிக்கணும்னு முடிவெடுத்தேன்” என்று பிலிப் சொல்கிறார். அவர் செய்ததை நீங்களும் செய்யலாம். ஆனால், எதைப் படிப்பது என்று உங்களுக்கு தெரியவில்லையா? முதிர்ச்சியுள்ள ஒரு நண்பரிடம் கேளுங்கள்.

சகோதர சகோதரிகளிடம் இருக்கிற நட்பை மறுபடியும் பலப்படுத்துங்கள். யெகோவாவிடம் திரும்பி வந்த சிலருக்கு மற்றவர்கள் நம்மேல் இன்னும் கோபமாக இருப்பார்களோ என்ற எண்ணம் இருக்கலாம். “எனக்கு ரொம்ப அவமானமா இருந்துச்சு. சகோதர சகோதரிகளுக்கு நான் துரோகம் பண்ணிட்டதா நினச்சேன். இந்த எண்ணம் ரொம்ப வருஷமா என் மனசுக்குள்ள இருந்துச்சு” என்று லாரிஸா என்ற சகோதரி சொல்கிறார். உங்களுக்கும் அதே மாதிரி எண்ணம் இருக்கிறதா? அப்படியென்றால், மூப்பர்களும் முதிர்ச்சியுள்ள சகோதர சகோதரிகளும் யெகோவாவோடு இருக்கிற நட்பு என்ற அந்த வீட்டை மறுபடியும் கட்ட உங்களுக்கு உதவி செய்வார்கள். (“ மூப்பர்கள் என்ன செய்யலாம்?” என்ற பெட்டியைப் பாருங்கள்.) நீங்கள் திரும்பி வந்ததை நினைத்து அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். நீங்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். உங்களுக்கு உதவுவதற்கு ரொம்ப ஆசையாக இருக்கிறார்கள்.—நீதி. 17:17.

சகோதர சகோதரிகளிடம் இருக்கிற நட்பை நீங்கள் எப்படிப் பலப்படுத்திக்கொள்ளலாம்? அவர்கள் என்ன செய்கிறார்களோ அதை நீங்களும் செய்யுங்கள். அதாவது, எல்லா கூட்டத்துக்கும் போங்கள். தவறாமல் ஊழியம் செய்யுங்கள். இது எப்படி உங்களுக்கு உதவும்? “நான் திரும்பவும் யெகோவாகிட்ட வர்றதுக்காக சகோதர சகோதரிகள் ஆர்வமா காத்துகிட்டிருந்தாங்க. அவங்க என்னை ஏத்துகிட்டாங்கங்கறத நான் புரிஞ்சுகிட்டேன். சபைங்கற குடும்பத்தில நானும் ஒருத்தன்தாங்கற எண்ணத்த வளர்த்துக்கறதுக்கும், யெகோவா என்னை மன்னிச்சிட்டாருங்கறத புரிஞ்சுக்கறதுக்கும் அவருக்கு நிறைய சேவை செய்றதுக்கும் அவங்க எல்லாரும் எனக்கு உதவினாங்க” என்று பெலிக்ஸ் சொல்கிறார்.—“ நீங்கள் என்ன செய்யலாம்?” என்ற பெட்டியைப் பாருங்கள்.

சோர்ந்துவிடாதீர்கள்!

யெகோவாவுக்கும் உங்களுக்கும் இருக்கிற நட்பு என்ற அழகான வீட்டை இடித்து தரைமட்டமாக்க சாத்தான் புயல் மாதிரியான நிறைய பிரச்சினைகளை உருவாக்கிக்கொண்டுதான் இருப்பான். (லூக். 4:13) என்ன ஆனாலும் சரி, அந்த வீடு இடிந்து விழாமல் இருப்பதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் இப்போதே செய்யுங்கள்.

“தொலைந்துபோனதை நான் தேடிப்போவேன், வழிமாறிப்போனதைக் கண்டுபிடித்துக் கொண்டுவருவேன், காயப்பட்டதுக்குக் கட்டு போடுவேன், துவண்டுபோனதைத் தெம்பாக்குவேன்” என்று யெகோவா வாக்குறுதி கொடுத்திருக்கிறார். (எசே. 34:16) இந்த வசனத்தில் சொன்ன மாதிரி ஏற்கெனவே அவர் நிறைய பேருக்கு உதவியிருக்கிறார். அதனால், உங்களுக்கும் அவருக்கும் இருக்கிற நட்பு என்ற அழகான வீட்டை பலமாக வைத்துக்கொள்ள அவர் நிச்சயம் உங்களுக்கு உதவி செய்வார்.

^ சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.