Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தேடிப் பயணம்

அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தேடிப் பயணம்

நான் மத்தியதரைக் கடலில் பயணம் செய்துகொண்டிருந்தேன். நடுக்கடலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது படகுக்குள்ளே தண்ணீர் ஏற ஆரம்பித்துவிட்டது. அதில் ஒரு ஓட்டை இருந்ததால், ‘மட மட’வென்று தண்ணீர் உள்ளே வர ஆரம்பித்தது. அதற்குப் பின்பு, திடீரென்று புயல் அடிக்க ஆரம்பித்தது. நான் ரொம்ப பயந்துபோய் வாழ்க்கையில் முதல் தடவையாக ஜெபம் செய்தேன். நான் ஏன் இந்தக் கடல் பயணத்தை ஆரம்பித்தேன்? கதையை ஆரம்பத்திலிருந்து சொல்கிறேன்.

என் குடும்பத்தோடு பிரேசிலில் இருந்தபோது—ஏழு வயதில்

நான் 1948-ல் நெதர்லாந்தில் பிறந்தேன். அடுத்த வருஷம் பிரேசிலில் இருக்கிற சாவோ போலோ என்ற இடத்துக்கு நாங்கள் குடும்பமாக குடிமாறிப்போனோம். எங்களுடைய அப்பாவும் அம்மாவும் தவறாமல் சர்ச்சுக்குப் போவார்கள். ராத்திரி சாப்பிட்ட பின்பு, குடும்பமாக பைபிள் படிக்கிற பழக்கம் எங்களுக்கு இருந்தது. 1959-ல் நாங்கள் திரும்பவும் வேறொரு இடத்துக்கு குடிமாறிப்போனோம். இந்தத் தடவை அமெரிக்காவில் இருக்கிற மாஸசூஸெட்ஸ் என்ற இடத்துக்கு குடிமாறிப்போனோம்.

எங்களுடைய வீட்டில் மொத்தம் எட்டு பேர். அதனால் குடும்பத்துக்காக அப்பா பாடுபட்டு உழைத்தார். சேல்ஸ்மேன் வேலை... ரோடு போடும் வேலை... என நிறைய வேலைகள் செய்தார். ஒரு சர்வதேச ஏர்லைன் கம்பெனியிலும் சேல்ஸ்மேனாக வேலை பார்த்தார். அந்த வேலை கிடைத்தபோது எங்கள் வீட்டில் எல்லாருக்கும் ஒரே கொண்டாட்டமாக இருந்தது. ஏனென்றால், எங்களால் நிறைய இடங்களுக்குப் போக முடிந்தது.

நான் பள்ளியில் படிக்கிற காலத்திலேயே, ‘அடுத்து நான் என்ன செய்வேன்?’ என்று அடிக்கடி யோசிப்பேன். என்னுடைய நண்பர்கள் சிலர் கல்லூரியில் சேரலாம் என்று முடிவு பண்ணினார்கள். இன்னும் சிலர் ராணுவத்தில் சேரலாம் என்று முடிவு பண்ணினார்கள். ஆனால், எனக்கு ராணுவத்தில் சேர கொஞ்சம்கூட இஷ்டமில்லை. அடிதடி, சண்டையெல்லாம் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. அதனால், ராணுவத்தில் சேருவதற்குப் பதிலாக கல்லூரியில் சேரலாம் என்று முடிவு பண்ணினேன். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதுமே இருந்தது. ஏனென்றால், அதுதான் வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தை கொடுக்கிறது என்று நினைத்தேன்.

கல்லூரி வாழ்க்கை

நிறைய வருஷங்களாக வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடி அலைந்தேன்

கல்லூரியில் படிக்கும்போது, மனிதவியல் பாடம்தான் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஏனென்றால், உயிர் எப்படி வந்தது என்பதைத் தெரிந்துகொள்வதில் எனக்கு ரொம்ப ஆர்வம் இருந்தது. அந்தப் பாடத்தில், பரிணாமத்தைப் பற்றி கற்றுக்கொடுத்தார்கள். அதுதான் உண்மை என்று சொன்னார்கள். ஆனால், அவர்கள் கொடுத்த சில விளக்கமெல்லாம் எனக்கு நியாயமாகப் படவில்லை. அதை கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டியதாக இருந்தது. அறிவியல்பூர்வமாக அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஒழுக்கமாக வாழ்வதைப் பற்றியும் கல்லூரியில் எங்களுக்கு சொல்லித் தரவில்லை. எப்படியாவது நல்ல மார்க் வாங்க வேண்டும் என்பதற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார்கள். நண்பர்களோடு சேர்ந்து பார்ட்டிகளுக்குப் போக ஆரம்பித்தேன். போதைப்பொருள்களையும் பயன்படுத்த ஆரம்பித்தேன். அதெல்லாம் எனக்கு சந்தோஷத்தைத் தந்தது. ஆனால், அந்தச் சந்தோஷம் அப்போதைக்கு மட்டும்தான் இருந்தது. ‘இப்படி வாழ்ற வாழ்க்கையில ஏதாவது அர்த்தம் இருக்கா?’ என்று யோசித்தேன்.

இதற்கு இடையில் நான் பாஸ்டன் நகரத்துக்குப் போய் அங்கே இருக்கிற ஒரு கல்லூரியில் சேர்ந்தேன். என்னுடைய படிப்பு செலவுகளைக் கவனித்துக்கொள்வதற்காக விடுமுறை நாட்களில் ஒரு வேலையில் சேர்ந்தேன். அங்கேதான் முதன்முதலாக ஒரு யெகோவாவின் சாட்சியைச் சந்தித்தேன். அவர் தானியேல் 4-ஆம் அதிகாரத்தில் சொல்லியிருக்கிற ‘ஏழு காலங்களை’ பற்றிய தீர்க்கதரிசனத்தைக் காட்டி, நாம் கடைசி நாட்களில் வாழ்ந்துகொண்டிருப்பதாகச் சொன்னார். (தானி. 4:13-17) பைபிளைப் பற்றி இவர் பேசுவதை நான் கேட்டுக்கொண்டே இருந்தால் நிறைய விஷயங்களில் என்னை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைத்தேன். அதனால், முடிந்தவரை அவரிடம் பேச்சுக் கொடுக்காத மாதிரி பார்த்துக்கொண்டேன்.

அந்தக் கல்லூரியில் சேர்ந்தபோது, தென் அமெரிக்காவில் வாலண்டியர் வேலை செய்வதற்கு உதவும் பாடங்களைத் தேர்ந்தெடுத்தேன். மற்றவர்களுக்கு உதவி செய்வதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கை என்று நினைத்தேன். ஆனால், அதுவும் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கவில்லை என்பதைப் பின்பு புரிந்துகொண்டேன். அதனால், அந்த செமஸ்டரோடு கல்லூரிக்குப் போவதை நிறுத்திவிட்டேன்.

தூர இடங்களுக்குப் பயணம்—அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தேடி

1970, மே மாதம் நெதர்லாந்தில் இருக்கிற ஆம்ஸ்டர்டாமுக்குப் போனேன். அங்கே, எங்கள் அப்பா வேலை பார்த்த அதே ஏர்லைன்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அதனால், நிறைய இடங்களுக்கு என்னால் போக முடிந்தது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா போன்ற நிறைய நாடுகளுக்குப் போக முடிந்தது. நான் எந்த நாட்டுக்குப் போனாலும் அங்கே இருக்கிறவர்கள் பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அதிலிருந்து வெளியே வருவதற்கு அவர்களுக்கு வழி இருப்பதாகத் தெரியவுமில்லை. வாழ்க்கையில் எதையாவது சாதித்தே ஆக வேண்டும் என்ற ஆசையில் திரும்பவும் அமெரிக்காவுக்குப் போய் பாஸ்டனில் இருக்கிற அதே கல்லூரியில் சேரலாம் என்று முடிவு பண்ணினேன்.

கல்லூரியில் சேர்ந்தும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. எனக்குள்ளே இருந்த கேள்விகளுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. கடைசியில் என்ன செய்வது என்று தெரியாமல் மனிதவியல் பாடம் நடத்துகிற பேராசிரியரிடம் ஆலோசனை கேட்டேன். அவர் சொன்ன பதில் எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. ‘நீ எதுக்கு படிக்கிறே, பேசாம நிறுத்திடு’ என்று சொன்னார். ரொம்ப சந்தோஷம் என்று நினைத்துக்கொண்டு கல்லூரியிலிருந்து நின்றுவிட்டேன்.

அதற்குப் பின்பும் வாழ்க்கைக்கான அர்த்தத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் மனம்போன போக்கில் வாழ்கிற ஹிப்பி ஆட்களோடு சேர்ந்துகொள்ளலாம் என்று முடிவு பண்ணினேன். நானும் என்னுடைய நண்பர்கள் சிலரும் அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவில் இருக்கிற அகபுல்கோ வரை ஓசியிலேயே சவாரி செய்துவந்தோம். ஹிப்பிகளோடு சேர்ந்து வாழ்ந்தபோது ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டேன். அவர்கள் வாழ்க்கையி லும் அர்த்தமோ உண்மையான சந்தோஷமோ இல்லை. ஏனென்றால், அவர்களில் நிறைய பேர் நேர்மையாகவும் உண்மையாகவும் நடக்கவில்லை.

தேடல் பயணம்—பாய்மர படகில்

என் நண்பனோடு சேர்ந்து ஓர் அழகான தீவைத் தேடிப் போனேன்

இதற்கு இடையில், சின்ன வயதில் எனக்கு இருந்த ஓர் ஆசை மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்தது. கடலில் பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. ஒரு பயணியாக அல்ல, ஒரு கேப்டனாகப் பயணம் செய்ய வேண்டும்! எந்தச் சமுதாயக் கட்டுப்பாடும் இல்லாத ஓர் அழகான தீவைக் கண்டுபிடித்து அங்கே போய் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என்னுடைய நண்பன் டாமுக்கும் கடலில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், சொந்தமாக ஒரு பாய்மரப் படகு இருந்தால்தான் இப்படிப் பயணம் செய்ய முடியும்.

அதனால், நானும் டாமும் ஸ்பெய்னில் பார்சிலோனாவுக்குப் பக்கத்தில் இருக்கிற எரனிஸ் டீ மாருக்குப் போய் ஒரு பாய்மரப் படகை வாங்கினோம். 31 அடி நீளத்தில் இருந்த அந்த பாய்மரப் படகின் பெயர் லிக்கரா. கடலில் பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்கு ஏற்ற மாதிரி அதில் சில வேலைகளைச் செய்தோம். நாங்கள் நினைத்த இடத்துக்கு வேகமாகப் போய் சேர வேண்டும் என்ற அவசரம் எதுவும் இல்லாததால் என்ஜினை கழற்றிவிட்டு குடிப்பதற்கு நிறைய தண்ணீரை சேமித்துவைக்க அந்த இடத்தைப் பயன்படுத்திக்கொண்டோம். சின்னச் சின்ன துறைமுகங்களில் பாய்மரப் படகை ஓட்டுவதற்கு 16 அடி நீளமுள்ள இரண்டு துடுப்புகளை வாங்கினோம். ஒருவழியாக, இந்தியப் பெருங்கடலில் இருக்கிற ஸேசேல்ஸ் என்ற இடத்துக்குக் கிளம்பினோம். ஆப்பிரிக்காவின் மேற்கு கரையோரமாகப் போய், அப்படியே தென் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிவர வேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டம். சரியான திசையில் பயணம் செய்வதற்கு நட்சத்திரங்கள், வரைபடங்கள், புத்தகங்கள், சில கருவிகள் என இவை எல்லாமே எங்களுக்கு உதவியாக இருந்தன. நாங்கள் சரியாக எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. அது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

கடலில் பயணம் செய்வதற்கு இந்தப் பழைய படகு உதவாது என்பதைச் சீக்கிரத்தில் புரிந்துகொண்டோம். ஒரு மணிநேரத்துக்கு 22 லிட்டர் என்ற கணக்கில் தண்ணீர் படகுக்குள் ஏறிக்கொண்டே இருந்தது. அதற்குப் பின்பு புயல் அடித்தது. அந்தச் சமயத்தில்தான், ஆரம்பத்தில் நான் சொன்ன மாதிரி, பயத்தில் முதல் தடவையாக ஜெபம் செய்தேன். ‘எங்கள காப்பாத்துனா உங்கள பத்தி கண்டிப்பா தெரிஞ்சுக்குவேன்’ என்று சொல்லி கடவுளிடம் வாக்குக் கொடுத்தேன். கொஞ்ச நேரத்திலேயே புயல் நின்றுவிட்டது. அதனால், கடவுளுக்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினேன்.

கடலில் பயணம் செய்துகொண்டே பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். துள்ளிக் குதிக்கிற மீன்களையும் டால்பின்களையும் அழகான அடிவானத்தையும் பார்த்து ரசித்துக்கொண்டே போனேன். ராத்திரியில் நட்சத்திரக்கூட்டத்தைப் பார்த்து ரசித்தேன். அதை பார்க்க பார்க்க, நிச்சயம் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நான் நம்பினேன். அவருக்கு நம்மேல் உண்மையிலேயே ரொம்ப அக்கறை இருக்கிறது என்றும் நம்பினேன்.

சில வாரங்களுக்குப் பின்பு, ஸ்பெயினில் இருக்கிற அலிகான்ட் துறைமுகத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கே போன பின்பு, எங்களுடைய படகை விற்றுவிட்டு புதிதாக ஒன்று வாங்குவதற்கு முயற்சி செய்தோம். ஆனால், என்ஜின் இல்லாத இந்த ஓட்டை படகை யார் வாங்குவார்கள்? அதனால், அதை விற்பதற்கு கொஞ்சம் நாள் ஆனது. அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி பைபிளை நன்றாகப் படித்தேன்.

பைபிளைப் படிக்க படிக்க, நாம் சந்தோஷமாக வாழ்வதற்குத் தேவையான நிறைய விஷயங்கள் அதில் இருப்பதைப் புரிந்துகொண்டேன். சுத்தமாக... ஒழுக்கமாக... வாழ்வது எப்படி என்று பைபிள் ரொம்ப தெளிவாகச் சொல்கிறது. அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. என்னைப் போல் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நிறையப் பேர் ஏன் பைபிள் சொல்கிறபடி நடப்பதில்லை என்று யோசித்தேன்.

என்னுடைய வாழ்க்கையை மாற்றியே ஆக வேண்டும் என்று முடிவு பண்ணினேன். அதனால், போதைப் பொருள்களை பயன்படுத்துவதை நிறுத்தினேன். பைபிள் சொல்கிற மாதிரியே நடக்கிற மக்கள் கண்டிப்பாக இருப்பார்கள் என்று தோன்றியது. அதனால், வாழ்க்கையில் இரண்டாவது தடவையாக கடவுளிடம் ஜெபம் செய்தேன். அப்படிப்பட்ட மக்களைக் கண்டுபிடிப்பதற்கு உதவி செய்யும்படி கேட்டேன்.

உண்மை மதத்தைத் தேடி...

ஒவ்வொரு மதமாக ஆராய்ந்து பார்த்தால் உண்மையான மதத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்று நினைத்தேன். அலிகான்ட்டில் இருக்கிற தெரு வழியாக நடந்து போகும்போது நிறைய வழிபாட்டு இடங்களைப் பார்த்தேன். அங்கெல்லாம் பெரும்பாலும் ஏதாவது சிலைகளோ உருவங்களோ இருந்தன. அதனால், அவையெல்லாம் உண்மையான மதங்கள் இல்லை என்று ஓரங்கட்டினேன்.

ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம், துறைமுகத்தைப் பார்த்த மாதிரி இருந்த ஒரு மலையோரமாக உட்கார்ந்து யாக்கோபு 2:1-5-ஐ வாசித்துக்கொண்டிருந்தேன். அந்த வசனத்தில், பணக்காரர்களை ஒருவிதமாகவும் ஏழைகளை ஒருவிதமாகவும் நடத்துவது தவறு என்று சொல்லியிருந்தது. அதற்குப் பின்பு, எங்களுடைய படகுக்குப் போகும் வழியில் ஒரு வழிபாட்டு இடத்தைப் பார்த்தேன். அந்தக் கட்டிடத்துக்கு முன்பு “யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றம்” என எழுதியிருந்தது.

‘இங்கே இருக்கிறவங்க என்கிட்ட எப்படி நடந்துக்குறாங்கன்னு பாக்கணும்’ என்று நினைத்தேன். அதனால், அந்த ராஜ்ய மன்றத்துக்குள்ளே போனேன். கிழிந்த ஜீன்ஸ் போட்டுக்கொண்டு தாடியோடு வெறும் காலில் நான் உள்ளே போனேன். அங்கே இருந்த ஒரு சகோதரர், என்னைக் கூட்டிக்கொண்டுபோய் ஒரு வயதான சகோதரியின் பக்கத்தில் இருந்த சேரில் உட்கார வைத்தார். பேச்சுக் கொடுத்தவர் சொன்ன வசனங்களை அந்தச் சகோதரி எனக்கு எடுத்துக் காட்டினார். கூட்டம் முடிந்த பின்பு, அங்கே இருந்தவர்கள் எல்லாருமே என்னிடம் வந்து பேசினார்கள். அது எனக்கு பயங்கர ஆச்சரியமாக இருந்தது. அதில் ஒருவர், பைபிள் படிப்பதற்காக என்னை அவருடைய வீட்டுக்குக்கூட கூப்பிட்டார். ‘அத பத்தி நான் யோசிச்சுட்டு அப்புறம் சொல்றேன்’ என்று சொன்னேன். நான் இன்னும் பைபிளைப் படித்து முடிக்காததால்தான் அப்படிச் சொன்னேன். ஆனாலும், நான் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தேன்.

கொஞ்ச வாரங்கள் கழித்து, பைபிள் படிப்பு பற்றி என்னிடம் பேசிய சகோதரருடைய வீட்டுக்குப் போனேன். நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் பைபிளிலிருந்தே பதில் சொன்னார். பின்பு ஒரு வாரம் கழித்து, அவர் ஒரு பை நிறைய நல்ல துணிமணிகளை என்னிடம் கொடுத்தார். அந்த துணிகளின் சொந்தக்காரர் சிறையில் இருப்பதாகச் சொன்னார். ஒருவர்மேல் ஒருவர் அன்புகாட்ட வேண்டும் என்ற பைபிளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து போருக்குப் போகாததால் அவருக்கு அந்த நிலைமை வந்ததாகச் சொன்னார். (ஏசா. 2:4; யோவா. 13:34, 35) அவர் சொன்னதைக் கேட்ட பின்பு, பைபிள் சொல்கிறபடி வாழ்கிற ஜனங்கள் இவர்கள்தான் என்பதைப் புரிந்துகொண்டேன். ஒருவழியாக, உண்மை மதத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்! சந்தோஷத்தைத் தேடி இனி எந்தத் தீவுக்கும் போகக் கூடாது என்றும் பைபிளை ஆழமாகப் படிக்க வேண்டும் என்றும் நினைத்தேன். அதனால், நெதர்லாந்துக்கே திரும்பிப் போனேன்.

வேலையைத் தேடி...

நெதர்லாந்தில் இருக்கும் க்ரோனிங்கன் என்ற இடத்துக்கு நான் ஓசியில் பயணம் செய்து வந்தேன். வந்து சேர நான்கு நாட்கள் ஆகிவிட்டன. அங்கே வாழ்க்கையை ஓட்டுவதற்கு எனக்கு ஒரு வேலை தேவைப்பட்டது. அதனால், மரவேலை செய்யும் ஒரு கடையில் வேலை கேட்டேன். அங்கே இருந்தவர் எனக்கு ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தார். அதில், நான் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று ஒரு கேள்வி இருந்தது. அதில் நான், “யெகோவாவின் சாட்சி” என்று எழுதினேன். அதைப் பார்த்ததும் அந்த முதலாளியின் முகமே மாறிவிட்டது. ‘நான் உங்களுக்கு சொல்லி அனுப்பறேன்’ என்று அவர் என்னிடம் சொன்னார். ஆனால், திரும்ப அவர் என்னைக் கூப்பிடவே இல்லை.

மர வேலை செய்யும் இன்னொரு கடையில் நான் வேலை கேட்டேன். அங்கிருந்த முதலாளி, நான் என்ன படித்திருக்கிறேன், இதற்கு முன்பு வேலை பார்த்த அனுபவம் இருக்கிறதா என்றெல்லாம் கேட்டார். நான் ஒரு படகை பழுதுபார்த்து இருப்பதாகச் சொன்னேன். அதற்கு அவர், “இன்னைக்கு சாயங்காலமே வேலைக்கு சேர்ந்துடு” என்று சொன்னார். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது! “ஆனா ஒரு கண்டிஷன், நான் ஒரு யெகோவாவின் சாட்சி, பைபிள் சொல்ற மாதிரி வாழ்றேன். அதனால, எந்த பிரச்சினையும் பண்ணாத மாதிரி பார்த்துக்கோ” என்று சொன்னார். அதற்கு, “நானும் யெகோவாவின் சாட்சிதான்” என்று சொன்னேன். நீளமான முடி, தாடி எல்லாம் வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு நான் இன்னும் ஒரு யெகோவாவின் சாட்சி ஆகவில்லை என்பதை அவர் புரிந்துகொண்டார். அதனால், “நான் உனக்கு பைபிள் படிப்பு எடுக்கறேன்” என்று சொன்னார். நான் சந்தோஷமாக ஒத்துக்கொண்டேன். என்னுடைய ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுத்திருக்கிறார்! (சங். 37:4) அதனால்தான், அவர் என்னை இங்கே கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். இதற்கு முன்பு போன கடையில் எனக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை என்பது அப்போதுதான் புரிந்தது. அந்தச் சகோதரரின் கடையில் ஒரு வருஷம் வேலை செய்தேன். அந்தச் சமயத்தில், அவர் எனக்கு பைபிள் படிப்பு எடுத்தார். அதற்குப் பின்பு, ஜனவரி 1974-ல் ஞானஸ்நானம் எடுத்தேன்.

அர்த்தமுள்ள வாழ்க்கையைக் கண்டுபிடித்தேன்

ஒரு மாதத்துக்குப் பின்பு பயனியர் சேவையை ஆரம்பித்தேன். அது என் மனதுக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது. அதற்கு அடுத்த மாதம், ஆம்ஸ்டர்டாமில் புதிதாக ஆரம்பித்திருந்த ஸ்பானிஷ் மொழி தொகுதிக்கு உதவி செய்வதற்காகப் போனேன். ஸ்பானிஷ் மொழியிலும் போர்ச்சுகீஸ் மொழியிலும் பைபிள் படிப்பு எடுத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மே 1975-ல் விசேஷ பயனியராகச் சேவை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

விசேஷ பயனியராக இருந்த ஈனிக்கா என்ற ஒரு சகோதரி, ஸ்பானிஷ் மொழியில் நடக்கிற எங்களுடைய கூட்டத்துக்கு ஒருநாள் வந்தார். அவரோடு பைபிள் படித்த, பொலிவியா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை எங்களிடம் அறிமுகப்படுத்துவதற்காக கூட்டிக்கொண்டு வந்தார். ஈனிக்காவும் நானும் ஒருவரையொருவர் நன்றாகத் தெரிந்துகொள்வதற்காக கடிதங்கள் எழுதினோம். அப்போது எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான குறிக்கோள்கள் இருப்பது தெரியவந்தது. 1976-ல் நாங்கள் கல்யாணம் பண்ணிக்கொண்டோம். அதற்குப் பின்பு, நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து 1982-வரை விசேஷ பயனியர்களாகச் சேவை செய்தோம். அந்த வருஷத்தில் 73-வது கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள எங்களுக்கு அழைப்பு கிடைத்தது. பள்ளி முடிந்த பின்பு, நாங்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் நியமிக்கப்பட்டோம். அது எங்களுக்கு ரொம்ப ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அங்கே கென்யாவில் இருக்கிற மோம்பாசரில் நாங்கள் ஐந்து வருஷம் சேவை செய்தோம். 1987-ல் டான்ஜானியாவில் நாங்கள் நியமிக்கப்பட்டோம். ஊழிய வேலைக்கு போட்டிருந்த தடை அப்போதுதான் அங்கே நீக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் நாங்கள் 26 வருஷங்கள் சேவை செய்தோம். அதற்குப் பின்பு திரும்பவும் கென்யாவுக்கே வந்துவிட்டோம்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கிற மக்களுக்கு பைபிளைப் பற்றிச் சொல்லிக் கொடுப்பது எனக்கும் என்னுடைய மனைவிக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது

ஆர்வமுள்ள மக்களுக்கு பைபிளைப் பற்றிக் கற்றுக்கொடுப்பது எங்களுடைய வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறது. உதாரணத்துக்கு, மோம்பாசரில் இருந்தபோது பொது ஊழியத்தில் ஒருவரைச் சந்தித்தேன். அங்கே நான் முதன்முதலில் பைபிள் படிப்பு எடுத்தது அவருக்குத்தான். நான் அவரைச் சந்தித்தபோது இரண்டு பத்திரிகைகளைக் கொடுத்தேன். உடனே அவர், ‘இத படிச்சு முடிச்சுட்டு நான் என்ன செய்யணும்?’ என்று கேட்டார். அடுத்த வாரமே அவருக்கு நாங்கள் பைபிள் படிப்பை ஆரம்பித்தோம். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்திலிருந்து படித்தோம். அந்தப் புத்தகம் ஸ்வாஹிலி மொழியில் அப்போதுதான் வெளியிடப்பட்டிருந்தது. ஒரு வருஷம் பைபிள் படிப்பு படித்த பின்பு அவர் ஞானஸ்நானம் எடுத்தார். ஒழுங்கான பயனியராகவும் சேவை செய்தார். ஞானஸ்நானம் எடுக்க கிட்டத்தட்ட நூறு பேருக்கு அவரும் அவருடைய மனைவியும் உதவி செய்திருக்கிறார்கள்.

அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ தன்னுடைய மக்களுக்கு யெகோவா எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்று நானும் ஈனிக்காவும் கண்ணாரப் பார்த்திருக்கிறோம்

வாழ்க்கையின் அர்த்தத்தை முதன்முதலில் புரிந்துகொண்டபோது, ஓர் அருமையான முத்தைக் கண்டுபிடித்த வியாபாரியைப் போலவே நானும் சந்தோஷப்பட்டேன். (மத். 13:45, 46) அதை இழக்க நான் விரும்பவே இல்லை. அதனால், வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ தன்னுடைய மக்களுக்கு யெகோவா எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்று நானும் என்னுடைய மனைவியும் கண்ணாரப் பார்த்திருக்கிறோம்.