Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் ஒரு நல்ல சக வேலையாளா?

நீங்கள் ஒரு நல்ல சக வேலையாளா?

“நான் அவருக்குப் பக்கத்தில் கைதேர்ந்த கலைஞனாக இருந்தேன். . . . அவர்முன் எப்போதும் சந்தோஷமாக இருந்தேன்.” (நீதி. 8:30) யெகோவாவோடு சேர்ந்து இயேசு கோடிக்கணக்கான வருஷங்களாக வேலை செய்ததைப் பற்றி இந்த வசனம் சொல்கிறது. இந்த வசனத்தில் இருக்கிற இன்னொரு விஷயத்தைக் கவனித்தீர்களா? கடவுளுடைய சக வேலையாளாக இயேசு அவர் முன்பு எப்போதுமே “சந்தோஷமாக” இருந்திருக்கிறார்.

ஒரு நல்ல சக வேலையாளாக இருப்பது எப்படி என்பதைப் பரலோகத்தில் இருந்தபோது இயேசு கற்றுக்கொண்டார். அவர் பூமிக்கு வந்த பின்பு, ஒரு நல்ல சக வேலையாளாக தன்னைப் பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்கிற அளவுக்கு நடந்துகொண்டார். அவர் எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது ஒரு நல்ல சக வேலையாளாக இருப்பதற்குத் தேவையான மூன்று நியமங்களைத் தெரிந்துகொள்வோம். அந்த நியமங்களின்படி நடந்துகொள்ளும்போது நாம் சகோதர சகோதரிகளுடன் தோளோடு தோள் சேர்ந்து இன்னும் ஒற்றுமையாக வேலை செய்ய முடியும்.

யெகோவாவையும் இயேசுவையும் போல நீங்களும் உங்களோடு வேலை செய்பவர்களிடம் உங்களுடைய அனுபவத்தையும் உங்களுக்குத் தெரிந்தவற்றையும் பகிர்ந்துகொள்ளுங்கள்

நியமம் 1: ‘ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுங்கள்’

நல்ல சக வேலையாளாக இருக்கிற ஒருவர் பணிவாக இருப்பார். தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ளாமல் தன்னோடு வேலை செய்பவர்களை முக்கியமானவர்களாக நினைப்பார். இந்தக் குணத்தைத்தான் யெகோவாவிடமிருந்து இயேசு கற்றுக்கொண்டார். எப்படி? யெகோவா மட்டும்தான் படைப்பாளராக இருந்தாலும் படைப்பு வேலையில் இயேசுவுக்கு இருந்த முக்கியமான பங்கை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். “மனிதனை நம்முடைய சாயலில் நம்மைப் போலவே உண்டாக்கலாம்” என்று அவர் சொன்னதிலிருந்தே இது தெளிவாகத் தெரிகிறது. (ஆதி. 1:26) யெகோவா சொன்ன இந்த வார்த்தையிலிருந்து அவர் எவ்வளவு பணிவாக இருக்கிறார் என்பதை இயேசு தெரிந்துகொண்டார்.—சங். 18:35.

இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது பணிவோடு நடந்துகொண்டார். அவர் செய்த அற்புதங்களுக்காக மற்றவர்கள் அவரைப் புகழ்ந்தபோது தனக்குப் புகழ் சேர்த்துக்கொள்ளாமல் யெகோவாவுக்குப் புகழ் சேர்த்தார். (மாற். 10:17, 18; யோவா. 7:15, 16) தன்னுடைய சீஷர்களிடம் எப்போதும் சமாதானமாக நடந்துகொண்டார், அவர்களை அடிமைகளைப் போல் நடத்தாமல் நண்பர்களைப் போல் நடத்தினார். (யோவா. 15:15) பணிவாக இருப்பது எப்படி என்று கற்றுக்கொடுப்பதற்காக அவர்களுடைய பாதங்களைக்கூட கழுவினார். (யோவா. 13:5, 12-14) நாமும் நம்மைப் பெரிய ஆளாக நினைக்காமல் நம்மோடு வேலை செய்பவர்களை மதிப்பாக நடத்த வேண்டும். நமக்குப் பேர்புகழ் சேர்ப்பதிலேயே குறியாக இல்லாமல் ‘ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுத்தோம்’ என்றால் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும்.—ரோ. 12:10.

“ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி நிச்சயம்” என்பதைப் பணிவாக இருக்கிற ஒருவர் நன்றாகப் புரிந்துவைத்திருப்பார். (நீதி. 15:22) நமக்கு அனுபவம் இருக்கலாம், திறமைகள் இருக்கலாம். ஆனால், எல்லாம் தெரிந்தவர் யாருமே இல்லை என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இயேசுவும்கூட தனக்கு எல்லாமே தெரியாது என்பதை ஒத்துக்கொண்டார். (மத். 24:36) அவருடைய சீஷர்கள் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தாலும் அவர்களுடைய கருத்துகளைக் கேட்டார். (மத். 16:13-16) அதனால்தான், அவரோடு வேலை செய்வது சீஷர்களுக்கு சந்தோஷமாக இருந்தது. அதைப் போல் நாமும் நமக்கு எல்லாமே தெரியாது என்பதை ஒத்துக்கொண்டு, மற்றவர்களுடைய கருத்துகளைக் கேட்டு அவர்களோடு சமாதானமாக இருந்தால் எல்லாரும் சேர்ந்து வேலையில் “வெற்றி” அடைய முடியும்.

மூப்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்யும்போது இயேசுவைப் போலவே பணிவாக நடந்துகொள்வது ரொம்ப முக்கியம். மூப்பர் குழுவில் இருக்கிற எந்த மூப்பரை வேண்டுமானாலும் கடவுளுடைய சக்தி தூண்டும் என்பதை அவர்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். மூப்பர் குழுவின் கூட்டத்தில் எல்லாருமே மனம் திறந்து தாராளமாகப் பேசும் ஒரு சூழல் இருந்தால் முழு சபைக்கும் பிரயோஜனமான முடிவுகளை எடுக்க முடியும்.

நியமம் 2: “நீங்கள் நியாயமானவர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கட்டும்”

நல்ல சக வேலையாளாக இருக்கிற ஒருவர் தன்னோடு வேலை செய்பவர்களிடம் நியாயமாக நடந்துகொள்வார். அதாவது, தேவையான சமயங்களில் வளைந்துகொடுப்பார். யெகோவா நிறைய சமயங்களில் இந்தக் குணத்தைக் காட்டியது இயேசுவுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். உதாரணத்துக்கு, மனிதர்கள் மரண தண்டனைக்குத் தகுதியுள்ளவர்களாக இருந்தும் அதிலிருந்து அவர்களை விடுதலை செய்வதற்காக யெகோவா தன்னை அனுப்பியபோது இயேசுவுக்கு இது தெரிந்திருக்கும்.—யோவா. 3:16.

தேவையான சமயங்களிலெல்லாம் இயேசு வளைந்துகொடுத்தார். இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: இஸ்ரவேல் மக்களிடம்தான் இயேசுவை யெகோவா அனுப்பினார். ஆனால், பெனிக்கேயப் பெண்ணுக்கும் இயேசு உதவினார். (மத். 15:22-28) தன்னுடைய சீஷர்களிடமிருந்தும் அவர் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கவில்லை. அவருடைய நெருங்கிய நண்பனான பேதுரு எல்லாருக்கும் முன்பு அவரை யாரென்றே தெரியாது என்று சொல்லியிருந்தாலும், அவரை இயேசு தாராளமாக மன்னித்தார். சொல்லப்போனால், பேதுருவிடம் முக்கியமான பொறுப்புகளை ஒப்படைத்தார். (லூக். 22:32; யோவா. 21:17; அப். 2:14; 8:14-17; 10:44, 45) இயேசுவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நாம் ‘நியாயமானவர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்க’ வேண்டும், மற்றவர்களுக்கு வளைந்துகொடுக்க வேண்டும்.—பிலி. 4:5.

நாம் நியாயமானவர்களாக இருந்தால், வேலை செய்யும்போது எல்லா விதமான மக்களோடும் ஒத்துப்போவோம். இயேசு அதைத்தான் செய்தார். அதனால்தான், பொறாமை பிடித்த அவருடைய எதிரிகள், “வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்” என்று அவரை குறைசொன்னார்கள். (மத். 11:19) இயேசுவைப் போலவே நாமும் எல்லா விதமான மக்களோடும் ஒத்துப்போகலாம், இல்லையா? இப்போது சகோதரர் லூயிஸின் அனுபவத்தைப் பார்க்கலாம். வட்டாரக் கண்காணியாகவும் பெத்தேலிலும் அவர் சேவை செய்தபோது வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த சகோதர சகோதரிகளோடு வேலை செய்தார். “என்னை மாதிரியே பாவ இயல்புள்ள மத்தவங்களோட வேலை செய்றது வேற வேற அளவுல இருக்கற கல்லை வெச்சு ஒரு சுவரு கட்டற மாதிரி. ஒவ்வொரு கல்லும் ஒவ்வொரு அளவுல இருக்கறனால அத சரியான இடத்தில வெக்கறதுக்கு நிறைய முயற்சி தேவைப்படுது. அப்பதான் சுவர நல்லபடியா கட்டி முடிக்க முடியும். அதே மாதிரி வேற வேற பின்னணியில இருந்து வந்திருக்கற சகோதர சகோதரிகளோட வேலை செய்றதுக்கு நான் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்குது. அப்பதான் நல்லபடியா வேலைய செஞ்சு முடிக்க முடியுது” என்று அவர் சொல்கிறார். அவர் எவ்வளவு சரியாக யோசித்திருக்கிறார் பார்த்தீர்களா?

ஒரு நல்ல சக வேலையாள், எல்லாமே தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்பதற்காக மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியதை அவர்களிடம் சொல்லாமல் இருக்க மாட்டார்

சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளோடு நியாயமாக நடந்துகொள்ள நமக்கு நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. நம்முடைய ஊழியத் தொகுதியில் இருக்கிற சிலருக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகமாக இருக்கலாம், சிலருக்கு வயதாகியிருக்கலாம். ஊழியத்தை நாம் ஒரு வேகத்தில் செய்வோம், நமக்கென்று ஒரு விதம் இருக்கும். அதேபோல் அவர்களும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காமல் ஊழியத்தை அவர்களும் சந்தோஷமாக செய்வதற்கு நாம் வளைந்துகொடுக்கலாம், இல்லையா?

நியமம் 3: ‘பகிர்ந்துகொள்ள மனமுள்ளவர்களாக இருங்கள்’

நல்ல சக வேலையாளாய் இருக்கிற ஒருவர், மற்றவர்களிடம் ‘பகிர்ந்துகொள்ள மனமுள்ளவராக’ இருப்பார். (1 தீ. 6:18) இந்தக் குணத்தையும் யெகோவாவிடமிருந்து இயேசு கற்றுக்கொண்டார். அவரோடு சேர்ந்து வேலை செய்தபோது, அவர் எதையுமே தன்னிடமிருந்து மறைக்கவில்லை என்பதை இயேசு நிச்சயம் பார்த்திருப்பார். அவர் “வானத்தைப் படைத்தபோது” இயேசு அங்கே ‘இருந்தார்,’ அவரிடமிருந்து கற்றுக்கொண்டார். (நீதி. 8:27) இயேசு பூமிக்கு வந்த பின்பு, தன்னுடைய அப்பாவிடமிருந்து ‘கேட்டிருந்த’ எல்லா விஷயங்களையும் சீஷர்களிடம் தாராளமாகப் பகிர்ந்துகொண்டார். (யோவா. 15:15) இயேசுவைப் போலவே நாமும் நம்மோடு வேலை செய்பவர்களிடம் நம்முடைய அனுபவத்தையும் நமக்குத் தெரிந்த விஷயங்களையும் தாராளமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒரு நல்ல சக வேலையாள், எல்லாமே தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியதை அவர்களிடம் சொல்லாமல் இருக்க மாட்டார். அதற்குப் பதிலாக, தனக்குத் தெரிந்த நல்ல விஷயங்களை சந்தோஷமாகப் பகிர்ந்துகொள்வார்.

நம்மோடு வேலை செய்பவர்களிடம் அன்பான வார்த்தைகள் சொல்லி அவர்களைப் பாராட்டலாம். ஒருவர் நீங்கள் எடுக்கிற முயற்சிகளையெல்லாம் பார்த்து உங்களை மனதாரப் பாராட்டியபோது உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! இயேசுவும் தன்னுடைய சீஷர்கள் செய்த நல்ல விஷயங்களைப் பார்த்து பாராட்டினார். (மத்தேயு 25:19-23-ஐ ஒப்பிடுங்கள்; லூக். 10:17-20) சொல்லப்போனால், தன்னைவிட தன்னுடைய சீஷர்கள் ‘பெரிய செயல்களை செய்வார்கள்’ என்று சொன்னார். (யோவா. 14:12) தான் இறப்பதற்கு முந்தைய நாள் ராத்திரி “எனக்குச் சோதனைகள் வந்தபோது என்னோடுகூட நிலைத்திருந்தவர்கள் நீங்கள்தான்” என்று சொல்லி அவர்களைப் பாராட்டினார். (லூக். 22:28) இயேசு சொன்னதையெல்லாம் கேட்டபோது, சீஷர்களுடைய மனதுக்கு எவ்வளவு இதமாக இருந்திருக்கும்! இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற ஆசையும் அவர்களுக்கு வந்திருக்கும். நாமும் நேரமெடுத்து நம்மோடு வேலை செய்பவர்களை மனதாரப் பாராட்டினால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். யெகோவாவின் சேவையை இன்னும் நன்றாக செய்வார்கள்.

உங்களால் ஒரு நல்ல சக வேலையாளாக இருக்க முடியும்

“ஒரு நல்ல சக வேலையாளாக இருக்கறதுக்கு எல்லாத்தையும் நூறு சதவீதம் சரியா செய்றவரா இருக்கணும்னு இல்ல. ஆனா தன்னோட வேலை செய்றவங்கள அவர் சந்தோஷமா வெச்சுக்கணும். தன்னோட சேர்ந்து வேலை செய்றத அவங்க பாரமா நினைக்காத மாதிரி பாத்துக்கணும்” என்று சகோதரர் கெயோட் சொல்கிறார். நீங்கள் அப்படிப்பட்ட ஒரு சக வேலையாளாக இருக்கிறீர்களா? நீங்கள் எப்படிப்பட்டவராக இருக்கிறீர்கள் என்று உங்களோடு சேர்ந்து வேலை செய்பவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம், இல்லையா? இயேசுவின் சீஷர்கள் அவரோடு சேர்ந்து வேலை செய்வதை சந்தோஷமாக நினைத்த மாதிரி உங்களோடு வேலை செய்பவர்களும் நினைக்கிறார்களா? அப்படி நினைத்தார்கள் என்றால் “உங்களுடைய சந்தோஷத்துக்காக உங்கள் சக வேலையாட்களாகவே இருக்கிறோம்” என்று அப்போஸ்தலன் பவுலைப் போல் உங்களாலும் சொல்ல முடியும்.—2 கொ. 1:24.