Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 50

நல்ல மேய்ப்பரின் குரலைக் கவனமாகக் கேளுங்கள்

நல்ல மேய்ப்பரின் குரலைக் கவனமாகக் கேளுங்கள்

“அவை என்னுடைய குரலைக் கேட்கும்.”யோவா. 10:16.

பாட்டு 3 எம் பலமும் நம்பிக்கையும் நீரே!

இந்தக் கட்டுரையில்... *

1. தன்னுடைய சீஷர்களை இயேசு ஏன் ஆடுகளோடு சம்பந்தப்படுத்தி சொன்னார்?

சீஷர்களோடு தனக்கிருந்த பந்தத்தை ஒரு மேய்ப்பருக்கும் அவருடைய ஆடுகளுக்கும் இடையே இருக்கும் பந்தத்தோடு சம்பந்தப்படுத்தி இயேசு சொன்னார். (யோவா. 10:14) அவர் சொன்னது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது, இல்லையா? ஆடுகளுக்கு அதன் மேய்ப்பர் யார் என்று தெரியும், அவருடைய குரலும் நன்றாகத் தெரியும். இதை ஒரு சுற்றுலாப் பயணி கண்ணாரப் பார்த்திருக்கிறார். அவர் இப்படிச் சொல்கிறார்: “ஆடுகள பக்கத்துல வர வெச்சு போட்டோ எடுக்க நாங்க முயற்சி பண்ணுனோம். ஆனா, அதுங்க வரவே இல்ல. ஏன்னா, எங்க குரல் அதுங்களுக்கு பழக்கம் இல்ல. ஆனா, ஆடு மேய்க்கிற ஒரு சின்ன பையன் வந்து குரல் கொடுத்ததுதான் மிச்சம். அதுங்க எல்லாமே அவன் பின்னாடி வந்துடுச்சு.”

2-3. (அ) இயேசுவின் சீஷர்கள் அவருடைய குரலை எந்த விதத்தில் கேட்கிறார்கள்? (ஆ) இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

2 அந்தச் சுற்றுலாப் பயணி சொன்னதைக் கேட்கும்போது இயேசு தன்னுடைய ஆடுகளை, அதாவது சீஷர்களை, பற்றிச் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. “அவை என்னுடைய குரலைக் கேட்கும்” என்று அவர் சொன்னார். (யோவா. 10:16) ஆனால், ‘இயேசுதான் பரலோகத்துல இருக்கறாரே, அப்புறம் எப்படி அவரோட குரல கேட்க முடியும்?’ என்று நாம் நினைக்கலாம். அவர் சொல்லிக் கொடுத்தபடி வாழும்போது அவர் குரலை நாம் கேட்கிறோம் என்று அர்த்தம்.—மத். 7:24, 25.

3 இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் இயேசு நமக்கு சொல்லிக் கொடுத்த சில விஷயங்களைப் பார்க்கப்போகிறோம். நாம் என்னென்ன விஷயங்களைச் செய்யக் கூடாது என்றும் என்னென்ன விஷயங்களைச் செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னார் என்பதைத் தெரிந்துகொள்வோம். நல்ல மேய்ப்பராக இருந்த இயேசு நாம் செய்யக் கூடாது என்று சொன்ன இரண்டு விஷயங்களைப் பற்றி முதலில் பார்ப்போம்.

“என்ன ஆகுமோ என்று அநாவசியமாகக் கவலைப்படுவதை விட்டுவிடுங்கள்”

4. லூக்கா 12:29 சொல்கிறபடி, எதை நினைத்து நாம் ‘அநாவசியமாகக் கவலைப்பட’ வாய்ப்பிருக்கிறது?

4 லூக்கா 12:29-ஐ வாசியுங்கள். அடிப்படைத் தேவைகளுக்காக என்ன செய்வோமோ, “என்ன ஆகுமோ என்று அநாவசியமாகக் கவலைப்படுவதையும் விட்டுவிடுங்கள்” என்று இயேசு சொன்னார். அவர் சொன்னது எப்போதும் சரியாகத்தான் இருக்கும் என்று நமக்குத் தெரியும். அவர் சொன்னபடி வாழ வேண்டும் என்றுதான் நாம் ஆசைப்படுவோம். ஆனால், சில சமயங்களில் அது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஏன்?

5. அடிப்படைத் தேவைகளுக்காக ஏன் சிலர் கவலைப்படுகிறார்கள்?

 5 இன்றைக்கு சிலர் சாப்பாட்டுக்கு... துணிமணிக்கு... குடியிருக்க ஒரு வீட்டுக்கு... என்ன செய்வோம், எங்கே போவோம் என்று நினைத்துக் கவலைப்படுகிறார்கள். ஏனென்றால், சிலர் ஏழை நாடுகளில் வாழ்கிறார்கள். இன்னும் சிலர், குடும்பத்துக்குத் தேவையான வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். சில வீடுகளில், குடும்பத்துக்காக ஓடியோடி உழைத்தவர்கள் இறந்துபோயிருக்கிறார்கள். இது போதாதென்று, இந்த கொரோனா பெருந்தொற்று சமயத்தில் நிறைய பேருக்கு வேலை பறிபோயிருக்கிறது. (பிர. 9:11) இப்படிப்பட்ட ஏதோவொரு பிரச்சினையால் நீங்களும் கஷ்டப்படுகிறீர்களா? அப்படியென்றால், கவலைப்படுவதை விட்டுவிடும்படி இயேசு சொன்னதைக் கேட்டு நடக்க நீங்கள் என்ன செய்யலாம்?

அநாவசியமான கவலைகளில் மூழ்கிவிடுவதற்குப் பதிலாக யெகோவாமேல் முழு நம்பிக்கை வையுங்கள் (பாராக்கள் 6-8) *

6. ஒருசமயம் பேதுருவுக்கு என்ன நடந்தது?

6 ஒருசமயம், அப்போஸ்தலன் பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் கலிலேயா கடலில் ஒரு படகில் போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது, பயங்கரமாக புயல் அடித்தது. அந்தச் சமயம் கடலில் இயேசு நடந்து வருவதை அவர்கள் பார்த்தார்கள். அப்போது பேதுரு, “எஜமானே, நீங்களா? அப்படியானால், நானும் தண்ணீர்மேல் நடந்து உங்களிடம் வருவதற்குக் கட்டளையிடுங்கள்” என்று சொன்னார். உடனே இயேசு, “வா!” என்று அவரிடம் சொன்னார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி, “தண்ணீர்மேல் நடந்து இயேசுவை நோக்கிப் போனார்.” பின்பு என்ன நடந்தது தெரியுமா? பேதுரு “புயல்காற்றைப் பார்த்ததும் பயந்துபோய்த் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தார்; அப்போது, ‘எஜமானே, என்னைக் காப்பாற்றுங்கள்!’” என்று அலறினார். உடனே இயேசு அவருடைய கையைப் பிடித்து அவரைக் காப்பாற்றினார். இயேசுவின்மேல் கவனம் இருந்தவரை பேதுரு தண்ணீர்மேல் நடந்துபோனார். ஆனால், எப்போது புயலைப் பார்த்தாரோ, அப்போது அரண்டுபோய் மூழ்க ஆரம்பித்தார்.—மத். 14:24-31.

7. பேதுருவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

7 பேதுருவிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். படகிலிருந்து இறங்கி தண்ணீர்மேல் நடக்க ஆரம்பித்தபோது, புயலைப் பார்த்து பயப்படுவோம் என்றோ தண்ணீரில் மூழ்கிவிடுவோம் என்றோ பேதுரு நினைத்துக்கூட பார்க்கவில்லை. இயேசுவிடம் போய்ச் சேர வேண்டும் என்பதுதான் அவருடைய குறிக்கோளாக இருந்தது. ஆனால், எப்போது அவர் புயலைப் பார்த்து பயந்தாரோ அப்போது தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தார். இன்றைக்கு நம்மால் தண்ணீர்மேல் நடக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், நம் விசுவாசத்தை உரசிப் பார்க்கிற நிறைய பிரச்சினைகள் நமக்கு வருகின்றன. யெகோவாமீதும் அவருடைய வாக்குறுதிகள்மீதும் நாம் நம்பிக்கை வைக்காவிட்டால், நம்முடைய விசுவாசம் குறைந்துவிடும், பிரச்சினைகளிலேயே மூழ்க ஆரம்பித்துவிடுவோம். வாழ்க்கையில் புயல் மாதிரி என்ன பிரச்சினை வந்தாலும்சரி, நம்முடைய கவனம் முழுவதும் யெகோவாமேல்தான் இருக்க வேண்டும். அவரால் நமக்கு உதவி செய்ய முடியும் என்பதை உறுதியாக நம்ப வேண்டும். இதை நாம் எப்படிச் செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

8. நம்முடைய தேவைகளைப் பற்றி அளவுக்குமீறி கவலைப்படாமல் இருக்க எது நமக்கு உதவும்?

8 யெகோவாமேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், நம்முடைய கவலைகளையெல்லாம் தூக்கிப்போட்டுவிட வேண்டும். நம்முடைய அன்பான அப்பா யெகோவாவுக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுத்தால், நம் தேவைகளையெல்லாம் கவனித்துக்கொள்வதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (மத். 6:32, 33) கொடுத்த வாக்கை அவர் ஒருநாளும் காப்பாற்றாமல் இருந்ததில்லை. (உபா. 8:4, 15, 16; சங். 37:25) பூக்களையும் பறவைகளையுமே யெகோவா கவனித்துக்கொள்கிறார் என்றால், நமக்குத் தேவையான சாப்பாட்டையும் துணிமணியையும் தராமல் இருப்பாரா? (மத். 6:26-30; பிலி. 4:6, 7) பிள்ளைகள்மேல் அப்பா அம்மாவுக்குப் பாசம் இருப்பதால், அவர்களுடைய தேவைகளையெல்லாம் கவனித்துக்கொள்கிறார்கள். அதேபோல், யெகோவா அப்பாவுக்கும் நம்மேல் பாசம் இருப்பதால் நம்முடைய தேவைகளையெல்லாம் கவனித்துக்கொள்வார். அதில் நாம் உறுதியாக இருக்கலாம்.

9. ஒரு தம்பதியின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

9 நம்முடைய தேவைகளையெல்லாம் யெகோவா கவனித்துக்கொள்வார் என்பதற்கு இப்போது ஓர் அனுபவத்தைப் பார்க்கலாம். ஒரு தம்பதி முழுநேர சேவை செய்துகொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஒரு பழைய கார் இருந்தது. அவர்களுடைய வீட்டிலிருந்து ஒரு மணிநேரத்துக்கும் அதிகமான பயண தூரத்தில் ஓர் அகதிகள் முகாம் இருந்தது. ஒருசமயம், அங்கே தங்கியிருந்த சில சகோதரிகளை இவர்கள் கூட்டங்களுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். கூட்டங்கள் முடிந்த பின்பு, அந்தச் சகோதரிகளைத் தங்களுடைய வீட்டுக்குச் சாப்பிட வரச்சொல்லி கூப்பிட்டார்கள். “ஆனா, அவங்களுக்கு கொடுக்கறதுக்கு ஒண்ணுமே இல்லன்னு அவங்கள கூப்பிட்டதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது” என்று அந்தச் சகோதரர் சொல்கிறார். அதனால், அந்தத் தம்பதி என்ன செய்தார்கள்? அதைப் பற்றி அந்தச் சகோதரர் சொல்வதைக் கவனியுங்கள்: “நாங்க வீட்டுக்கு வந்து பாத்தப்ப கதவுக்கு முன்னாடி ரெண்டு பை நிறைய உணவு பொருள்கள் இருந்துச்சு. அத யார் வெச்சாங்கன்னு எங்களுக்குத் தெரியாது. ஆனா, அதுக்கு பின்னாடி யெகோவா இருந்தாருன்னு மட்டும் எங்களுக்கு கண்டிப்பா தெரியும்.” இது நடந்து கொஞ்ச நாட்களுக்குப் பின்பு அவர்களுடைய கார் ரிப்பேர் ஆகிவிட்டது. ஊழியம் செய்வதற்கு அந்த காரைதான் அவர்கள் நம்பியிருந்தார்கள். அந்த காரை சரி செய்வதற்குக்கூட அவர்களிடம் காசு இருக்கவில்லை. அதை ரிப்பேர் செய்வதற்கு எவ்வளவு ஆகும் என்று தெரிந்துகொள்ள பக்கத்தில் இருந்த ஒரு ஒர்க்-ஷாப்புக்கு அந்தச் சகோதரர் போனார். அப்போது ஒருவர் வந்து, “இது யாரோட காரு?” என்று கேட்டார். அதற்கு அந்தச் சகோதரர், அது தன்னுடைய கார் என்றும் அது ரிப்பேர் ஆகிவிட்டது என்றும் சொன்னார். அதற்கு அவர், “அது இருக்கட்டும், என் மனைவி இதே காருதான் வேணும்னு கேட்டுட்டு இருக்கா, அதுவும் இதே கலர்ல. எவ்வளவு கொடுத்தா இத தருவீங்க?” என்று கேட்டார். அதற்குப் பின்பு என்ன நடந்தது தெரியுமா? இன்னொரு கார் வாங்குமளவுக்கு அந்தச் சகோதரருக்குப் பணம் கிடைத்தது. இதைப் பார்த்த அந்தத் தம்பதிக்கு எப்படி இருந்தது? “எங்களோட சந்தோஷத்த விவரிக்க வார்த்தைகளே இல்ல. இதெல்லாம் ஏதோ எதேச்சையா நடக்கல. இதுக்கு பின்னாடி இருந்தது நிச்சயம் யெகோவாதான்” என்று அந்தச் சகோதரர் சொன்னார்.

10. அநாவசியமாகக் கவலைப்படாமல் இருப்பதற்கு சங்கீதம் 37:5 நமக்கு எப்படி உதவுகிறது?

10 நம்முடைய நல்ல மேய்ப்பர் சொல்வதைக் கேட்டு அநாவசியமாகக் கவலைப்படுவதை விட்டுவிட்டோம் என்றால், யெகோவா நம்மைக் கவனித்துக்கொள்வார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். (சங்கீதம் 37:5-ஐ வாசியுங்கள்; 1 பே. 5:7)  5-வது பாராவில் பார்த்த சூழ்நிலைகளை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இதுவரை குடும்பத் தலைவரைப் பயன்படுத்தியோ, முதலாளியைப் பயன்படுத்தியோ யெகோவா நம்மைக் கவனித்து வந்திருக்கலாம். ஆனால், இப்போது குடும்பத் தலைவரால் நம்மைக் கவனிக்க முடியாமல் போயிருக்கலாம். இல்லையென்றால், நமக்கு வேலை பறிபோயிருக்கலாம். ஆனாலும், ஏதாவது ஒரு வழியில் யெகோவா நம்மை நிச்சயம் கவனித்துக்கொள்வார். இதுவரை, அநாவசியமாகக் கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பார்த்தோம். அடுத்து, எதை செய்வதை நாம் நிறுத்த வேண்டும் என்று பார்ப்போம்.

“நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள்”

மற்றவர்களைக் குறை சொல்வதை நிறுத்த வேண்டுமென்றால் அவர்களிடம் இருக்கிற நல்ல குணங்களைப் பாருங்கள் (பாராக்கள் 11, 14-16) *

11. எதைச் செய்வதை நாம் நிறுத்த வேண்டும் என்று மத்தேயு 7:1, 2-ல் இயேசு சொல்கிறார், அதைச் செய்வது நமக்கு ஏன் கஷ்டமாக இருக்கலாம்?

11 மத்தேயு 7:1, 2-ஐ வாசியுங்கள். மனிதர்கள் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் முக்கியமாக மற்றவர்களுடைய குறைகளைத்தான் பார்ப்பார்கள் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான், “மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள்” என்று அவர் சொன்னார். ஆனால், நாம் என்னதான் முயற்சி செய்தாலும், சில சமயங்களில் மற்றவர்களைக் குறை சொல்ல ஆரம்பித்துவிடுவோம். அதை நிறுத்துவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? இயேசு சொல்வதைக் கேட்க வேண்டும். மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

12-13. தாவீது ராஜாவிடம் யெகோவா எப்படி நடந்துகொண்டார், மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்த இது நமக்கு எப்படி உதவும்?

12 மற்றவர்களிடம் யெகோவா எப்படி நடந்துகொள்கிறார் என்று யோசித்துப்பார்ப்பது நமக்கு உதவியாக இருக்கும். மற்றவர்களிடம் இருக்கிற நல்லதையே அவர் பார்த்தார். தாவீது ராஜாவிடம் அவர் எப்படி நடந்துகொண்டார் என்று இப்போது பார்க்கலாம். தாவீது படுமோசமான தவறுகளைச் செய்தார். உதாரணத்துக்கு, பத்சேபாளுடன் உடலுறவு வைத்துக்கொண்டார். அவளுடைய கணவரைக் கொல்வதற்கும் ஏற்பாடு செய்தார். (2 சா. 11:2-4, 14, 15, 24) அதனால், அவருடைய முழு குடும்பத்துக்கும் அவருடைய மற்ற மனைவிகளுக்கும் பாதிப்பு வந்தது. (2 சா. 12:10, 11) இன்னொரு சமயம், படைவீரர்களை யெகோவா கணக்கெடுக்கக் கூடாது என்று சொல்லியிருந்ததை மீறி அதையே செய்தார். ஒருவேளை, தன்னுடைய பெரிய படையை நினைத்து அவர் பெருமைப்பட்டிருக்கலாம். அதுதான் தனக்குப் பாதுகாப்பு தரும் என்று நம்பியிருக்கலாம். அதனால் என்ன ஆனது? கொள்ளைநோயால் 70,000 இஸ்ரவேலர்கள் செத்துப்போனார்கள்!—2 சா. 24:1-4, 10-15.

13 இவையெல்லாம் நடந்தபோது ஒருவேளை இஸ்ரவேலில் நீங்கள் இருந்திருந்தால் தாவீதைப் பற்றி என்ன நினைத்திருப்பீர்கள்? அவரை யெகோவா மன்னிக்கவே மாட்டார் என்று நினைத்திருப்பீர்களா? ஆனால், யெகோவா அப்படி நினைக்கவில்லை. வாழ்க்கை முழுவதும் தாவீது தனக்கு உண்மையாக இருந்ததையும் அவர் உண்மையிலேயே மனம் திருந்தியதையும் அவர் பார்த்தார். அதனால், தாவீது மோசமான பாவங்களைச் செய்திருந்தாலும் அவரை மன்னித்தார். தாவீது தன்னை ரொம்ப நேசிக்கிறார் என்றும் சரியானதைச் செய்யத்தான் ஆசைப்படுகிறார் என்றும் யெகோவாவுக்குத் தெரியும். நம்மிடமும் அவர் நல்லதையே பார்க்கிறார் என்பதை யோசிக்கும்போது அவருக்கு இன்னும் நன்றியோடு இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது, இல்லையா?—1 ரா. 9:4; 1 நா. 29:10, 17.

14. மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்த எது நமக்கு உதவும்?

14 நம்மிடம் குறையே இருக்கக் கூடாது என்று யெகோவா எதிர்பார்ப்பது கிடையாது. அதனால், நாமும் மற்றவர்களிடம் அதை எதிர்பார்க்கக் கூடாது. மற்றவர்களிடம் இருக்கிற குறைகளைப் பார்ப்பது சுலபம். ஆனால், யெகோவாவிடம் ஒரு நல்ல பந்தத்தை வைத்திருப்பவர், மற்றவர்களிடம் இருக்கிற குறைகளையும் தாண்டி அவர்களிடம் இருக்கிற நல்லதைப் பார்ப்பார், அவர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக வேலை செய்வார். உதாரணத்துக்கு, வைரத்தைப் பற்றி யோசித்துப்பாருங்கள். பட்டைத் தீட்டாத வைரத்தைப் பார்க்கிற ஒருவர் அது அழகாக இல்லையென்று நினைக்கலாம். ஆனால், ஞானமாக யோசிக்கிற ஒருவர் வைரத்தைப் பட்டைத் தீட்டி பாலிஷ் செய்த பின்பு அதன் மதிப்பு எவ்வளவு கூடும் என்பதைப் புரிந்துவைத்திருப்பார். யெகோவாவையும் இயேசுவையும் போல், நாமும் மற்றவர்களை மேலோட்டமாகப் பார்க்காமல் அவர்களுடைய நல்ல குணத்தைப் பார்க்க வேண்டும்.

15. மற்றவர்களைக் குறை சொல்லாமல் இருப்பதற்கு அவர்களுடைய சூழ்நிலையை யோசித்துப்பார்ப்பது ஏன் முக்கியம்?

15 மற்றவர்களைக் குறை சொல்லாமல் இருப்பதற்கு அவர்களுடைய நல்ல குணங்களைப் பார்ப்பதோடு இன்னொன்றும் நாம் செய்ய வேண்டும். அதாவது, அவர்களுடைய சூழ்நிலையை யோசித்துப்பார்க்க வேண்டும். இந்த உதாரணத்தைப் பாருங்கள். ஒருதடவை எருசலேம் ஆலயத்தில் இயேசு இருந்தபோது, ஓர் ஏழை விதவை மிகக் குறைந்த மதிப்புள்ள இரண்டு சிறிய காசுகளைக் காணிக்கைப் பெட்டியில் போட்டார். இந்த விதவை ஏன் அதிகமாகப் போடவில்லை என்று இயேசு அவளைக் குறை சொன்னாரா? இல்லை. அவள் ஏன் அவ்வளவு குறைவாகப் போட்டாள் என்றும் அவள் என்ன சூழ்நிலையில் இருக்கிறாள் என்றும் இயேசு யோசித்துப்பார்த்தார். தன்னால் முடிந்ததையெல்லாம் அவள் போட்டதால் அவளைப் புகழ்ந்து பேசினார்.—லூக். 21:1-4.

16. வெரோனிக்காவின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

16 மற்றவர்களுடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என்பதற்கு வெரோனிக்கா என்ற சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவர் இருந்த சபையில் ஒரு சகோதரி தனி ஆளாக தன்னுடைய மகனை வளர்த்துவந்தார். அவரைப் பற்றி வெரோனிக்கா இப்படிச் சொல்கிறார்: “அவங்க கூட்டத்துக்கும் ஊழியத்துக்கும் சரியாவே வர மாட்டாங்க. அதனால, அவங்கள பத்தி நான் தப்பா நெனச்சேன். அப்புறம் ஒருநாள் அவங்களோட சேர்ந்து நான் ஊழியம் செஞ்சேன். அப்பதான் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட அவங்க பையன கவனிச்சிக்கறதுக்கு அவங்க எவ்வளவு சிரமப்படறாங்கன்னு சொன்னாங்க. அவங்களோட தேவைகள கவனிச்சிக்கறதுக்கும் யெகோவாவோட இருக்கிற பந்தத்த நல்லா வெச்சுக்கறதுக்கும் அவங்களால முடிஞ்சதயெல்லாம் செஞ்சிட்டிருக்காங்க. சிலசமயத்துல அவங்க பையனோட உடம்புக்கு முடியாம போயிடறதுனால வேறொரு சபையில நடக்கிற கூட்டத்துக்கு அவங்க போயிடறாங்க. அவங்களுக்கு இவ்வளவு கஷ்டங்கள் இருக்கும்னு நான் யோசிச்சுகூட பாக்கல. யெகோவாவுக்கு சேவை செய்றதுக்காக அவங்க இவ்வளவு கஷ்டப்படறாங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் அவங்கமேல எனக்கு அன்பும் மரியாதையும் அதிகமாச்சு.”

17. நம்மை என்ன செய்யும்படி யாக்கோபு 2:8 சொல்கிறது, அதை நாம் எப்படிச் செய்யலாம்?

17 மற்றவர்களிடம் குறை கண்டுபிடிக்கும் பழக்கம் நமக்கு இருப்பது தெரிந்தால், சகோதர சகோதரிகளிடம் அன்பு காட்ட வேண்டும் என்ற கட்டளையை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். (யாக்கோபு 2:8-ஐ வாசியுங்கள்.) அதோடு, இந்தப் பழக்கத்தை விட்டுவிடுவதற்கு உதவும்படி யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்ய வேண்டும். நாம் செய்த ஜெபத்துக்குத் தகுந்த மாதிரி நடந்துகொள்ள வேண்டும். அதாவது, யாரிடம் நாம் குறை கண்டுபிடிக்கிறோமோ அவரிடம் நன்றாகப் பழகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஒருவேளை, அவரோடு சேர்ந்து ஊழியம் செய்யலாம், இல்லையென்றால், ஒரு நேர சாப்பாட்டுக்காக அவரை வீட்டுக்கு அழைக்கலாம். இப்படியெல்லாம் செய்யும்போது அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வீர்கள். அப்படி அவரை நன்றாகத் தெரிந்துகொண்டால், யெகோவாவையும் இயேசுவையும் போல் அவரிடம் இருக்கிற நல்லதைப் பார்க்க முடியும். அப்போது, மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள் என்று நல்ல மேய்ப்பர் சொன்ன கட்டளையைக் கேட்டு அதன்படி செய்கிறோம் என்று அர்த்தம்.

18. நல்ல மேய்ப்பருடைய குரலைக் கேட்டு அதன்படி நடக்கிறோம் என்பதை நாம் எப்படிக் காட்டலாம்?

18 ஆடுகள் எப்படி மேய்ப்பருடைய குரலைக் கேட்கின்றனவோ அதேபோல் இயேசுவின் சீஷர்களாக இருக்கிற நாமும் அவருடைய குரலைக் கேட்கிறோம். நம்முடைய தேவைகளை நினைத்து அநாவசியமாகக் கவலைப்படுவதையும் மற்றவர்களிடம் குறை கண்டுபிடிப்பதையும் நிறுத்த நாம் முயற்சி செய்தால், யெகோவாவும் இயேசுவும் நம்முடைய முயற்சிகளை ஆசீர்வதிப்பார்கள். நாம் ‘சிறுமந்தையில்’ ஒருவராக இருந்தாலும் சரி, ‘வேறே ஆடுகளில்’ ஒருவராக இருந்தாலும் சரி, தொடர்ந்து நல்ல மேய்ப்பருடைய குரலைக் கேட்க வேண்டும், கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். (லூக். 12:32; யோவா. 10:11, 14, 16) அடுத்த கட்டுரையில், இயேசு நம்மை செய்யச் சொன்ன இரண்டு விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

பாட்டு 101 ஒற்றுமையாக உழைப்போம்

^ பாரா. 5 தன்னுடைய ஆடுகள் தன் குரலைக் கேட்கும் என்று இயேசு சொன்னார். அதாவது, தன்னுடைய சீஷர்கள் தான் சொல்வதைக் கேட்டு அதன்படி நடப்பார்கள் என்று இயேசு சொன்னார். இந்தக் கட்டுரையில் அவர் சொன்ன இரண்டு விஷயங்களைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். முதலாவதாக, பணம் பொருளைப் பற்றி நாம் எப்படிக் கவலைப்படாமல் இருக்கலாம் என்றும் இரண்டாவதாக, மற்றவர்களை நியாயந்தீர்க்காமல் எப்படி இருக்கலாம் என்றும் பார்க்கப்போகிறோம்.

^ பாரா. 51 படவிளக்கம்: ஒரு சகோதரருக்கு வேலை போய்விடுகிறது. அதனால் குடும்பத்துக்குத் தேவையான பணம் அவரிடம் இல்லை. அதோடு, வேறொரு இடத்துக்கு அவர் குடிமாறிப் போக வேண்டியிருக்கிறது. இதை நினைத்து அவர் ரொம்ப கவலைப்பட்டால், யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்க முடியாமல் போய்விடும்.

^ பாரா. 53 படவிளக்கம்: ஒரு சகோதரர் கூட்டத்துக்கு தாமதமாக வருகிறார். ஆனால், அவர் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கிறார், வயதான ஒரு சகோதரிக்கு உதவுகிறார், ராஜ்ய மன்றத்தை அழகாக வைத்துக்கொள்கிறார். இப்படிப்பட்ட நல்ல குணங்களைக் காட்டுகிறார்.