Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 8

நீங்கள் கொடுக்கிற ஆலோசனை ‘இதயத்துக்குச் சந்தோஷத்தைத் தருகிறதா’?

நீங்கள் கொடுக்கிற ஆலோசனை ‘இதயத்துக்குச் சந்தோஷத்தைத் தருகிறதா’?

“அக்கறையோடு ஆலோசனை தருகிறவருடைய இனிய நட்பு, எண்ணெயையும் தூபப்பொருளையும் போலவே இதயத்துக்குச் சந்தோஷம் தரும்.”—நீதி. 27:9.

பாட்டு 102 ‘பலவீனருக்கு உதவி செய்யுங்கள்’

இந்தக் கட்டுரையில்... *

1-2. ஆலோசனை கொடுப்பதைப் பற்றி ஒரு சகோதரர் என்ன பாடத்தைக் கற்றுக்கொண்டார்?

 ரொம்ப வருஷங்களுக்கு முன்பு, இரண்டு மூப்பர்கள் கூட்டங்களுக்குச் சரியாக வராத ஒரு சகோதரியைப் பார்க்கப் போனார்கள். அதில் ஒரு மூப்பர், கூட்டங்களுக்கு வருவது ஏன் முக்கியம் என்று புரிந்துகொள்ள அந்தச் சகோதரிக்கு நிறைய பைபிள் வசனங்களை எடுத்துக்காட்டினார். அந்தச் சகோதரிக்கு ரொம்ப உற்சாகம் கிடைத்திருக்கும் என்று அவர் நினைத்தார். ஆனால், அவரும் அவரோடு வந்திருந்த இன்னொரு மூப்பரும் அங்கிருந்து கிளம்பும்போது அந்தச் சகோதரி, “என் கஷ்டத்த உங்களால புரிஞ்சுக்க முடியாது” என்று சொன்னார். அந்தச் சகோதரியின் பிரச்சினை என்னவென்று தெரியாமலேயே இந்தச் சகோதரர்கள் ஆலோசனை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அதனால், அவர்கள் கொடுத்த எந்த ஆலோசனையுமே அந்தச் சகோதரிக்குப் பிரயோஜனமாக இருக்கவில்லை.

2 நிறைய வசனங்களை எடுத்துக் காட்டிய அந்த மூப்பர் இப்படிச் சொல்கிறார்: “அந்த சமயத்தில, ‘என்ன இந்த சிஸ்டர் இப்படி பட்டுனு சொல்லிட்டாங்களே’னு நான் நெனச்சேன். ஆனா, அப்புறமா அத பத்தி யோசிச்சு பார்த்தேன். அவங்களுக்கு எந்த வசனங்கள எடுத்து காட்டலாம்னு யோசிச்சதுக்கு பதிலா அவங்கள பத்தி நான் யோசிச்சு பாத்திருக்கணும். ‘அவங்க எப்படி இருக்காங்க, அவங்களுக்கு எதாவது உதவி வேணுமா?’னு நான் கேட்டிருந்திருக்கணும்.” இந்த அனுபவத்திலிருந்து அந்த மூப்பர் பாடம் கற்றுக்கொண்டார். இப்போது அவர் அனுதாபமும் அக்கறையும் உள்ள ஒரு மூப்பராக இருக்கிறார்.

3. சபையில் இருக்கிற யாரெல்லாம் ஆலோசனை கொடுக்கலாம்?

 3 மூப்பர்கள் மேய்ப்பர்களாக இருப்பதால், தேவைப்படும்போது ஆலோசனை கொடுக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. ஆனால், சில சமயங்களில் சபையில் இருக்கிற மற்றவர்களும் ஆலோசனை கொடுக்க வேண்டியிருக்கலாம். உதாரணமாக, ஒரு சகோதரரோ ஒரு சகோதரியோ பைபிளிலிருந்து தன்னுடைய நண்பருக்கு ஏதாவது ஆலோசனை கொடுக்கலாம். (சங். 141:5; நீதி. 25:12) தீத்து 2:3-5-ல் இருக்கிற விஷயங்களைப் பற்றி ஒரு வயதான சகோதரி, ‘இளம் பெண்களுக்கு . . . புத்தி சொல்லலாம்.’ அப்பா அம்மாவும் தங்களுடைய பிள்ளைகளுக்குத் தேவைப்படும்போது ஆலோசனையும் அறிவுரையும் கொடுப்பார்கள். இந்தக் கட்டுரை குறிப்பாக மூப்பர்களுக்காக இருந்தாலும் நாம் எல்லாருமே இதிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். ‘இதயத்துக்குச் சந்தோஷம் தருகிற’ நடைமுறையான... உற்சாகப்படுத்துகிற... ஆலோசனைகளை எப்படிக் கொடுக்கலாம் என்று இதிலிருந்து கற்றுக்கொள்வோம்.—நீதி. 27:9.

4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

4 இந்தக் கட்டுரையில் ஆலோசனை கொடுப்பதைப் பற்றி நான்கு கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்வோம்: (1) எந்த நோக்கத்தோடு ஆலோசனை கொடுக்க வேண்டும்? (2) இந்த ஆலோசனை உண்மையிலேயே தேவைதானா? (3) யார் ஆலோசனை கொடுக்க வேண்டும்? (4) எப்படிப் பயனுள்ள ஆலோசனை கொடுக்கலாம்?

எந்த நோக்கத்தோடு ஆலோசனை கொடுக்க வேண்டும்?

5. சுலபமாக ஏற்றுக்கொள்ளும் விதத்தில் ஆலோசனை கொடுக்க ஒரு மூப்பருக்கு சரியான நோக்கம் இருப்பது ஏன் முக்கியம்? (1 கொரிந்தியர் 13:4, 7)

5 மூப்பர்களுக்கு சகோதர சகோதரிகள்மேல் அன்பு இருக்கிறது. சிலசமயங்களில், யாராவது தப்பான பாதையில் அடியெடுத்து வைக்கும்போது, அவருக்கு ஆலோசனை கொடுப்பதன் மூலமாக மூப்பர்கள் அவர்மேல் அன்பு காட்டுகிறார்கள். (கலா. 6:1) அவரிடம் பேசுவதற்கு முன்பு, ஒரு மூப்பர் அன்பு காட்டுவது சம்பந்தமாக பவுல் சொன்ன இந்த விஷயங்களை யோசித்துப்பார்ப்பார்: “அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது. . . . எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும், எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்.” (1 கொரிந்தியர் 13:4-யும் 7-யும் வாசியுங்கள்.) அந்த மூப்பர் இந்த வசனங்களை நன்றாக யோசித்துப் பார்க்கும்போது, சரியான நோக்கத்தோடுதான் ஆலோசனை கொடுக்க விரும்புகிறாரா, அதை அன்பான விதத்தில் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாரா என்பதைப் புரிந்துகொள்வார். ஆலோசனையைக் கேட்கிறவரும் தன்மேல் இருக்கிற அன்பால்தான் இந்த மூப்பர் ஆலோசனை கொடுக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டால் அதை ஏற்றுக்கொள்வதும் அவருக்குச் சுலபமாக இருக்கும்.—ரோ. 12:10.

6. அப்போஸ்தலன் பவுலிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

6 மூப்பர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் நல்ல முன்மாதிரியாக இருக்கிறார். உதாரணமாக, தெசலோனிக்கேயாவில் இருந்த சகோதரர்களுக்கு ஆலோசனை தேவைப்பட்டபோது அதைக் கொடுக்க பவுல் தயங்கவில்லை. அதேசமயம், அவர்களுக்கு எழுதிய கடிதங்களில் விசுவாசத்தால் அவர்கள் செய்கிற ஊழியத்தையும், அவர்களுடைய அன்பான உழைப்பையும் சகிப்புத்தன்மையையும் பாராட்டினார். அவர்களுடைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டார். கஷ்டங்களையும் துன்புறுத்துதல்களையும் அனுபவிப்பதால் அவர்களுடைய வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கும் என்பது தனக்குத் தெரியும் என்று சொன்னார். (1 தெ. 1:3; 2 தெ. 1:4) அவர்கள் மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரி வைப்பதாகவும் சொன்னார். (1 தெ. 1:8, 9) பவுல் அப்படித் தங்களைப் பாராட்டுவதைக் கேட்டபோது, அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! சகோதரர்கள்மேல் பவுலுக்கு ரொம்ப அன்பு இருந்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால்தான், தெசலோனிக்கேயர்களுக்கு எழுதிய இரண்டு கடிதங்களிலும் அவர்களுக்குப் பயனுள்ள ஆலோசனைகளை அவரால் கொடுக்க முடிந்தது.—1 தெ. 4:1, 3-5, 11; 2 தெ. 3:11, 12.

7. சிலர் ஏன் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதில்லை?

7 ஆலோசனை கொடுக்கும்போது அதைச் சரியான விதத்தில் கொடுக்கவில்லை என்றால் என்ன ஆகும்? அனுபவமுள்ள ஒரு மூப்பர் இப்படிச் சொல்கிறார்: “ஆலோசனை கொடுக்கும்போது சிலர் அத ஏத்துக்காததுக்கு காரணம் அது தப்பான ஆலோசனைங்கறதுக்காக இல்ல, அத அன்பா கொடுக்காததுனாலதான்.” இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? நாம் கொடுக்கும் ஆலோசனையை ஒருவர் சுலபமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அதை அன்பாக கொடுக்க வேண்டும், கோபத்தோடு அல்ல.

இந்த ஆலோசனை உண்மையிலேயே தேவைதானா?

8. ஒருவருக்கு ஆலோசனை கொடுக்க வேண்டுமா வேண்டாமா என்று தீர்மானிப்பதற்கு முன்னால் ஒரு மூப்பர் என்னவெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டும்?

8 மூப்பர்கள் அவசரப்பட்டு ஆலோசனை கொடுத்துவிடக் கூடாது. ஆலோசனை கொடுப்பதற்கு முன்பு இப்படியெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘கண்டிப்பா அவருக்கு ஆலோசனை கொடுக்கணுமா? அவர் செய்றது உண்மையிலேயே தப்புன்னு எனக்கு நல்லா தெரியுமா? பைபிள்ல இருக்கறதுக்கு எதிரா அவர் நடக்கறாரா? இல்ல எனக்குதான் வித்தியாசமா தெரியுதா?’ ‘அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விடாதபடி’ மூப்பர்கள் கவனமாக இருக்க வேண்டும். (நீதி. 29:20) ஒருவருக்கு ஆலோசனை கொடுக்க வேண்டுமா வேண்டாமா என்று ஒரு மூப்பருக்குச் சரியாகத் தெரியவில்லை என்றால் இன்னொரு மூப்பரிடம் இதைப் பற்றிப் பேசலாம். ‘அந்த சகோதரர் பைபிளுக்கு எதிரா நடக்கிற மாதிரி உங்களுக்கும் தோணுதா? அவருக்கு உண்மையிலேயே ஆலோசனை கொடுக்கணுமா?’ என்றெல்லாம் அந்த மூப்பரிடம் கேட்கலாம்.—2 தீ. 3:16, 17.

9. உடையையும் அலங்காரத்தையும் பற்றி ஆலோசனை கொடுப்பது சம்பந்தமாக பவுலிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? (1 தீமோத்தேயு 2:9, 10)

9 ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு மூப்பர் சபையில் இருக்கிற ஒருவருடைய உடையையும் அலங்காரத்தையும் பற்றி ஆலோசனை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு முன்பு, ‘ஆலோசனை கொடுக்க பைபிள் அடிப்படையில ஏதாவது காரணம் இருக்குதா?’ என்று அவர் கேட்டுக்கொள்ள வேண்டும். தன்னுடைய சொந்தக் கருத்தைச் சொல்லக் கூடாது என்று அந்த மூப்பருக்குத் தெரியும். அதனால், இன்னொரு மூப்பரிடமோ அல்லது அனுபவமுள்ள பிரஸ்தாபியிடமோ இதைப் பற்றிக் கேட்கலாம். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து உடையையும் அலங்காரத்தையும் பற்றி பவுல் கொடுத்த ஆலோசனையைக் கலந்துபேசலாம். (1 தீமோத்தேயு 2:9, 10-ஐ வாசியுங்கள்.) பவுல் இங்கே பொதுவான ஒரு நியமத்தைச் சொல்கிறார். கிறிஸ்தவர்களுடைய உடையும் அலங்காரமும் நேர்த்தியாகவும் அடக்கமாகவும் இருக்க வேண்டும், யெகோவாவுக்குக் கெட்ட பெயரைக் கொண்டு வராத விதத்தில் இருக்க வேண்டும் என்று பவுல் சொல்கிறார். இதைத்தான் போட வேண்டும், இதைப் போடக் கூடாது என்று எந்தவொரு பட்டியலையும் கொடுக்கவில்லை. பைபிள் நியமங்களை மீறாதவரை தங்களுக்குப் பிடித்த உடையைப் போட்டுக்கொள்ள சகோதர சகோதரிகளுக்கு உரிமை இருக்கிறது என்று பவுல் புரிந்துவைத்திருந்தார். அதனால், ஆலோசனை கொடுக்க வேண்டுமா வேண்டாமா என்று மூப்பர்கள் முடிவு செய்வதற்கு முன்பு, அந்தச் சகோதரருக்கோ சகோதரிக்கோ அடக்கமாகவும் நேர்த்தியாகவும் உடை உடுத்தும் பழக்கம் இருக்கிறதா என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும்.

10. மற்றவர்களுடைய விருப்பங்கள் சம்பந்தமாக நாம் எதை மனதில் வைத்துக்கொள்வோம்?

10 இரண்டு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் இருந்தால், அவர்களில் ஒருவருக்கு ஒன்று பிடிக்கலாம், இன்னொருவருக்கு வேறொன்று பிடிக்கலாம். அதற்காக, அதில் ஒன்று சரி இன்னொன்று தப்பு என்று அர்த்தம் கிடையாது. நாம் சொல்வதுதான் சரி, அதைத்தான் செய்ய வேண்டும் என்று மற்ற சகோதர சகோதரிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது.—ரோ. 14:10.

யார் ஆலோசனை கொடுக்க வேண்டும்?

11-12. ஆலோசனை கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த பின்பு ஒரு மூப்பர் என்னவெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டும், ஏன்?

11 ஒருவருக்கு கண்டிப்பாக ஆலோசனை கொடுக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. அப்படியானால், அடுத்து வருகிற கேள்வி, ‘அதை யார் கொடுப்பது?’ என்பதுதான். ஒரு மூப்பர் ஒரு கல்யாணமான சகோதரிக்கோ அல்லது ஒரு சின்ன பிள்ளைக்கோ ஆலோசனை கொடுப்பதற்கு முன்பு அந்தக் குடும்பத் தலைவரிடம் இதைப் பற்றிப் பேச வேண்டும். ஒருவேளை, அந்தக் குடும்பத் தலைவரே தன்னுடைய மனைவியிடமோ பிள்ளையிடமோ இதைப் பற்றி பேச விருப்பப்படலாம். * இல்லையென்றால், மூப்பர் ஆலோசனை கொடுக்கும்போது குடும்பத் தலைவரையும் அங்கே இருக்கச் சொல்லலாம்.  3-வது பாராவில் பார்த்தபடி, சில சமயங்களில் ஓர் இளம் சகோதரிக்கு வயதான சகோதரி ஆலோசனை கொடுப்பது நன்றாக இருக்கும்.

12 இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. ‘இந்த ஆலோசனையை நான் கொடுத்தா சரியா இருக்குமா, இல்ல இன்னொரு சகோதரர் கொடுத்தா நல்லா இருக்குமா?’ என்று ஒரு மூப்பர் யோசித்துப்பார்க்க வேண்டும். உதாரணமாக, நான் எதற்குமே லாயக்கில்லை என்ற எண்ணத்தோடு போராடிக்கொண்டிருக்கிற ஒரு சகோதரருக்கு ஒரு மூப்பர் ஆலோசனை கொடுக்க வேண்டியிருக்கலாம். ஆனால், இதே பிரச்சினையைச் சமாளித்த ஒரு மூப்பர் ஆலோசனை கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்வது அந்தச் சகோதரருக்கு சுலபமாக இருக்கும். ஏனென்றால், அந்த மூப்பரால் அந்தச் சகோதரரை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். அவர் ஏற்றுக்கொள்கிற விதமாக ஆலோசனையும் கொடுக்க முடியும். அதற்காக அதே பிரச்சினையைச் சமாளித்த ஒரு மூப்பர்தான் எப்போதும் ஆலோசனை கொடுக்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. பைபிள் ஆலோசனைகளுக்கு ஏற்றபடி தங்களை சரிசெய்துகொள்ள சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்தும் பொறுப்பு எல்லா மூப்பர்களுக்கும் இருக்கிறது. ஆலோசனை தேவைப்பட்டால் அதைக் கண்டிப்பாக அவர்கள் கொடுக்க வேண்டும்.

எப்படிப் பயனுள்ள ஆலோசனை கொடுப்பது?

மூப்பர்கள் ஏன் ‘நன்றாகக் காதுகொடுத்துக் கேட்க’ வேண்டும்? (பாராக்கள் 13-14)

13-14. மூப்பர்கள் கவனித்துக் கேட்பது ஏன் ரொம்ப முக்கியம்?

13 கவனித்துக் கேளுங்கள். ஆலோசனை கொடுப்பதற்கு முன்பு ஒரு மூப்பர் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘அந்தச் சகோதரரோட சூழ்நிலைய பத்தி எனக்கு தெரியுமா? அவரோட வாழ்க்கை எப்படி போயிட்டிருக்கு? அவருக்கு இருக்கற பிரச்சினைகள் எல்லாமே எனக்கு தெரியுமா? தெரியாதது எதாவது இருக்கா? இப்போ அவருக்கு என்ன தேவை?’

14 ஆலோசனை கொடுக்கிறவர்கள் யாக்கோபு 1:19-ல் இருக்கிற நியமத்தைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். “ஒவ்வொருவரும் நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும், சட்டென்று கோபப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும்” என்று யாக்கோபு எழுதினார். ஒருவேளை, ஒரு மூப்பர் தனக்கு எல்லா விஷயமும் தெரியும் என்று நினைக்கலாம். ஆனால், அவருக்கு எல்லாமே தெரியுமா? நீதிமொழிகள் 18:13-ல் ஒரு நல்ல ஆலோசனை இருக்கிறது: “ஒரு விஷயத்தை முழுமையாகக் கேட்பதற்குமுன் பதில் சொல்வது முட்டாள்தனம். அது அவமானத்தைத்தான் தேடித்தரும்.” அவருடைய பிரச்சினை என்னவென்று அந்தச் சகோதரரிடமே கேட்டுத் தெரிந்துகொள்வது ரொம்ப நல்லது. அப்படியென்றால், ஒரு மூப்பர் ஆலோசனை கொடுப்பதற்கு முன்னால் நன்றாக கவனித்துக் கேட்க வேண்டும். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் ஒரு மூப்பரைப் பற்றிப் பார்த்தோம். அவர் என்ன பாடம் கற்றுக்கொண்டார் என்று ஞாபகம் இருக்கிறதா? எடுத்ததும், தான் தயாரித்துக் கொண்டுவந்த குறிப்புகளைப் பேசாமல், “நீங்க எப்படி இருக்கீங்க? உங்களுக்கு எதாவது உதவி வேணுமா?” என்று அந்தச் சகோதரியிடம் கேட்டிருக்க வேண்டும் என்று அவர் சொன்னார். மூப்பர்கள் நேரமெடுத்து உண்மைகளைத் தெரிந்துகொள்ளும்போது சகோதர சகோதரிகளுக்கு அவர்களால் உதவவும் முடியும், உற்சாகப்படுத்தவும் முடியும்.

15. நீதிமொழிகள் 27:23-ல் இருக்கிற நியமத்தை மூப்பர்கள் எப்படிப் பின்பற்றலாம்?

15 ஆடுகளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். ஆரம்பத்தில் பார்த்த விதமாக, ஒருசில வசனங்களை வாசித்துவிட்டு ஓரிரு குறிப்புகளை மட்டும் சொல்வது பயனுள்ள ஆலோசனை என்று சொல்ல முடியாது. நாம் ஆலோசனை கொடுக்கும் விதத்தில் இருந்தே சகோதர சகோதரிகள்மேல் அன்பு வைத்திருக்கிறோம், அவர்களை புரிந்திருக்கிறோம், அவர்களுக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறோம் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். (நீதிமொழிகள் 27:23-ஐ வாசியுங்கள்.) சகோதர சகோதரிகளோடு நல்ல நண்பராவதற்கு மூப்பர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

ஆலோசனை கொடுப்பது மூப்பர்களுக்கு எப்போது சுலபமாக இருக்கும்? (பாரா 16)

16. பயனுள்ள ஆலோசனைகளைக் கொடுக்க மூப்பர்கள் என்ன செய்ய வேண்டும்?

16 நாம் ஏதாவது தப்பு செய்துவிட்டாலோ நமக்கு ஏதாவது ஆலோசனை கொடுக்க வேண்டுமென்றாலோ மட்டும்தான் மூப்பர்கள் நம்மிடம் பேசுவார்கள் என்று சகோதர சகோதரிகள் நினைக்கிற விதமாக மூப்பர்கள் நடந்துகொள்ளக் கூடாது. மூப்பர்கள் அவர்களோடு அடிக்கடி பேச வேண்டும். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் வரும்போது அக்கறையோடு விசாரிக்க வேண்டும். “இப்படிச் செஞ்சா சகோதர சகோதரிகளோட நல்ல நண்பர்கள் ஆயிடுவீங்க. அப்பறம் ஆலோசனை கொடுக்கறது உங்களுக்கு சுலபமா இருக்கும்” என்று அனுபவமுள்ள ஒரு மூப்பர் சொல்கிறார். அதுமட்டுமல்ல, ஆலோசனையைக் கேட்பவர்களுக்கும் அதை ஏற்றுக்கொள்வது சுலபமாக இருக்கும்.

ஆலோசனை கொடுக்கும்போது ஒரு மூப்பர் ஏன் பொறுமையாகவும் கனிவாகவும் நடந்துகொள்ள வேண்டும்? (பாரா 17)

17. முக்கியமாக எந்தச் சமயத்தில் ஒரு மூப்பர் பொறுமையாகவும் கனிவாகவும் இருக்க வேண்டும்?

17 பொறுமையாகவும், கனிவாகவும் நடந்துகொள்ளுங்கள். பைபிளிலிருந்து ஆலோசனை கொடுக்கும்போது, ஒருவர் அதை உடனே ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவரிடம் பொறுமையாகவும் கனிவாகவும் நடந்துகொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம். ஒருவருக்கு ஆலோசனை கொடுக்கும்போது அதை அவர் ஏற்றுக்கொள்ளாமலோ தன்னை மாற்றிக்கொள்ளாமலோ இருந்தால் சட்டென்று கோபப்படாதபடி ஒரு மூப்பர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இயேசுவைப் பற்றி ஒரு தீர்க்கதரிசனம் இப்படிச் சொல்கிறது: “நசுங்கிய எந்த நாணலையும் இவர் ஒடிக்க மாட்டார்; மங்கியெரிகிற எந்தத் திரியையும் அணைக்க மாட்டார்.” (மத். 12:20) அதனால், அந்த மூப்பர் தன்னுடைய தனிப்பட்ட ஜெபத்தில், ‘நான் எதுக்கு அவருக்கு ஆலோசனை கொடுத்தேன்னு புரிஞ்சிக்கவும், அத ஏத்துக்கவும் அவருக்கு உதவுங்க’ என்று யெகோவாவிடம் கேட்கலாம். ஆலோசனை கிடைத்தவருக்கும் அதைப் பற்றி யோசித்துப்பார்த்து புரிந்துகொள்ள நேரம் தேவைப்படலாம். அந்த மூப்பர் பொறுமையாகவும் கனிவாகவும் நடந்துகொண்டால், ஆலோசனை கிடைத்தவர் தனக்கு எப்படி ஆலோசனை கொடுக்கப்பட்டது என்பதைப் பற்றி யோசிக்காமல், என்ன ஆலோசனை கொடுக்கப்பட்டது என்று யோசிப்பார். ஆலோசனை கொடுக்கும்போது, எப்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்துதான் அதைக் கொடுக்க வேண்டும்.

18. (அ) ஆலோசனை கொடுக்கும்போது நாம் தவறாகப் பேசிவிட்டால் எதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்? (ஆ) பெட்டியில் உள்ள படத்தில் இருக்கிற அப்பா-அம்மா எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்?

18 செய்த தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நாம் எல்லாருமே தவறு செய்பவர்கள்தான். அதனால், இந்தக் கட்டுரையில் பார்த்த எல்லா ஆலோசனைகளையும் அப்படியே செய்வோம் என்று சொல்ல முடியாது. (யாக். 3:2) நாம் தவறு செய்வோம்தான். அப்படித் தவறு செய்யும்போது அதிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நம்முடைய சகோதர சகோதரிகள்மேல் அன்பு வைத்திருக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்போது, நாம் அவர்களைக் கஷ்டப்படுத்தும் விதமாக ஏதாவது சொல்லியிருந்தாலோ செய்திருந்தாலோ அவர்கள் நம்மைத் தாராளமாக மன்னித்துவிடுவார்கள்.—“ பெற்றோர்களின் கவனத்துக்கு...” என்ற பெட்டியையும் பாருங்கள்.

நாம் என்ன கற்றுக்கொண்டோம்?

19. நம்முடைய சகோதர சகோதரிகளுடைய இதயத்தை எப்படிச் சந்தோஷப்படுத்தலாம்?

19 நாம் பார்த்தது போல், பயனுள்ள ஆலோசனைகளைக் கொடுப்பது சுலபம் கிடையாது. நாமும் சரி, ஆலோசனை கேட்பவர்களும் சரி, குறையுள்ளவர்கள்தான். இந்தக் கட்டுரையில் நாம் படித்த விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். சரியான நோக்கத்தோடு ஆலோசனை கொடுக்க வேண்டும். ‘இந்த ஆலோசனை உண்மையிலேயே தேவைதானா? நீங்கள்தான் ஆலோசனை கொடுக்க வேண்டுமா அல்லது வேறொருவர் கொடுத்தால் சரியாக இருக்குமா?’ என்றெல்லாம் யோசித்துப்பாருங்கள். ஆலோசனை கொடுக்கும் முன்பு அவருக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அவர் சொல்லும்போது கவனமாக கேளுங்கள். அப்போதுதான் உங்களால் அவரை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். அவருடைய இடத்தில் உங்களை வைத்துப்பாருங்கள். கனிவாக நடந்துகொள்ளுங்கள், சகோதர சகோதரிகளுடன் நல்ல நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். நம்முடைய குறிக்கோள் பயனுள்ள ஆலோசனையைக் கொடுப்பது மட்டுமல்ல. அவர்களுடைய ‘இதயத்துக்குச் சந்தோஷத்தை’ கொடுப்பதும்தான்.—நீதி. 27:9.

பாட்டு 103 மேய்ப்பர்கள்—கடவுள் தரும் பரிசு

^ ஆலோசனை கொடுப்பது எப்போதுமே சுலபம் கிடையாது. ஆனால், அப்படி ஆலோசனை கொடுக்க வேண்டியிருக்கும்போது எப்படி மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதத்திலும் அவர்களுக்கு உதவும் விதத்திலும் ஆலோசனை கொடுக்கலாம்? குறிப்பாக இந்தக் கட்டுரை, கேட்டு கடைப்பிடிக்கிற விதமாக ஆலோசனைகளைக் கொடுக்க மூப்பர்களுக்கு உதவும்.

^ பிப்ரவரி 2021 காவற்கோபுரத்தில் வந்த “தலைமை ஸ்தானம்—சபையில்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.