Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 9

இயேசுவைப் போல் தியாகம் செய்யுங்கள்

இயேசுவைப் போல் தியாகம் செய்யுங்கள்

“வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது.”—அப். 20:35.

பாட்டு 17 நான் ஆசையாய் செய்வேன்

இந்தக் கட்டுரையில்... *

1. யெகோவாவின் மக்களுக்கு என்ன மனப்பான்மை இருக்கிறது?

 இயேசுவின் வழிநடத்துதலின்கீழ் கடவுளின் மக்கள், ‘மனப்பூர்வமாகத் தங்களை அர்ப்பணித்து’ யெகோவாவுக்குச் சேவை செய்வார்கள் என்று பைபிள் ரொம்ப வருஷங்களுக்கு முன்பே சொன்னது. (சங். 110:3) இது இன்றைக்கு நிறைவேறி வருகிறது. ஒவ்வொரு வருஷமும் யெகோவாவின் மக்கள் ரொம்ப ஆர்வமாக லட்சக்கணக்கான மணிநேரம் ஊழியம் செய்கிறார்கள். இதை அவர்கள் மனப்பூர்வமாக சொந்த செலவில் செய்கிறார்கள். அதோடு, மற்ற சகோதர சகோதரிகளுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்கிறார்கள், அவர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். அவர்கள் யெகோவாவிடம் நெருங்கிப்போவதற்கு உதவி செய்கிறார்கள். மூப்பர்களும், உதவி ஊழியர்களும் கூட்டங்களுக்குத் தயாரிப்பதற்காகவும் சகோதர சகோதரிகளைப் போய்ப் பார்த்து உற்சாகப்படுத்துவதற்காகவும் நிறைய நேரம் செலவிடுகிறார்கள். இதையெல்லாம் அவர்கள் ஏன் செய்கிறார்கள்? அன்பினால்! யெகோவாமேலும் மற்றவர்கள்மேலும் இருக்கிற அன்பினால் செய்கிறார்கள்.—மத். 22:37-39.

2. ரோமர் 15:1-3 சொல்கிறபடி, இயேசு என்ன முன்மாதிரி வைத்தார்?

2 தன்னுடைய தேவைகளைவிட மற்றவர்களுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் இயேசுதான் சிறந்த முன்மாதிரி. இந்த விஷயத்தில் நாமும் அவரைப் போலவே நடந்துகொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். (ரோமர் 15:1-3-ஐ வாசியுங்கள்.) அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது” என்று இயேசு சொன்னார்.—அப். 20:35.

3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 இந்தக் கட்டுரையில் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக இயேசு செய்த தியாகங்களைப் பற்றியும், அவருடைய முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம் என்பதைப் பற்றியும் பார்ப்போம். அதோடு, மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கான ஆசையை எப்படி அதிகமாக்கலாம் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.

இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்

களைப்பாக இருந்தாலும், மக்கள் கூட்டமாக இயேசுவை பார்க்க வந்தபோது அவர் என்ன செய்தார்? (பாரா 4)

4. இயேசு எப்படி மற்றவர்களுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்?

4 களைப்பாக இருந்தபோதும் இயேசு மற்றவர்களுக்கு உதவினார். கப்பர்நகூம் பக்கத்தில் இருந்த மலைக்கு இயேசுவைப் பார்க்க நிறைய மக்கள் கூட்டங்கூட்டமாக வந்தபோது, அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். அதற்கு முந்தின ராத்திரி முழுவதும் அவர் ஜெபம் செய்திருக்கிறார். கண்டிப்பாக அவர் களைப்பாக இருந்திருப்பார். ஆனாலும், மக்களைப் பார்த்தபோதும் அங்கிருந்த ஏழைகளையும் உடம்பு சரி இல்லாதவர்களையும் பார்த்தபோதும் அவர் இரக்கப்பட்டார். அவர்களைக் குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பேச்சையும் கொடுத்தார். அதுதான் பிரபலமான மலைப்பிரசங்கம்.—லூக். 6:12-20.

இயேசுவைப் போலவே நாம் என்னென்ன வழிகளில் தியாகங்கள் செய்யலாம்? (பாரா 5)

5. களைப்பாக இருக்கும்போதும் குடும்பத் தலைவர்கள் எப்படி இயேசுவைப் போலவே தியாகம் செய்கிறார்கள்?

5 குடும்பத் தலைவர்கள் எப்படி இயேசுவைப் பின்பற்றுகிறார்கள்? இப்படி ஒரு சூழ்நிலையை யோசித்துப்பாருங்கள்: ஒரு குடும்பத்தலைவர், நாள் முழுக்க வேலை செய்துவிட்டு ரொம்ப களைப்பாக வீட்டுக்கு வருகிறார். அன்றைக்கு சாயங்காலம் நடத்த வேண்டிய குடும்ப வழிபாட்டைச் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறார். ஆனாலும், ‘குடும்ப வழிபாடு நடத்த சக்தி குடுங்க’ என்று யெகோவாவிடம் ஜெபம் செய்கிறார். யெகோவாவும் அவருக்கு உதவி செய்கிறார். அதனால், வழக்கம் போல் குடும்ப வழிபாடு நடக்கிறது. அன்றைக்குப் பிள்ளைகள் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறார்கள். அதாவது, என்ன நடந்தாலும் சரி, தங்களுடைய அம்மாவும் அப்பாவும் யெகோவாவை வணங்குவதற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்ற பாடத்தைக் கற்றுக்கொள்கிறார்கள்.

6. தனக்கான நேரத்தை இயேசு மற்றவர்களுக்கு கொடுத்ததைப் பற்றி ஓர் உதாரணம் சொல்லுங்கள்.

6 இயேசு தனக்கான நேரத்தையும் மற்றவர்களுக்காகக் கொடுத்தார். தன்னுடைய நண்பரான யோவான் ஸ்நானகரின் தலை வெட்டப்பட்ட விஷயத்தைக் கேள்விப்பட்டபோது இயேசுவுக்கு எப்படி இருந்திருக்கும்? அவருக்கு ரொம்ப வேதனையாக இருந்திருக்கும். பைபிள் இப்படிச் சொல்கிறது: “இயேசு இதைக் கேட்டதும், [யோவான் இறந்ததைக் கேட்டதும்] கொஞ்ச நேரம் தனியாக இருப்பதற்காகப் படகில் ஏறி, ஒதுக்குப்புறமான ஓர் இடத்துக்குப் போனார்.” (மத். 14:10-13) வேதனையில் இருக்கும்போது நிறைய பேர் தனியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இயேசுவும் அப்படித்தான் நினைத்தார். தனியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓர் இடத்துக்குப் போனார். ஆனால், அவர் போவதற்கு முன்பே மக்கள் அங்கே கூட்டமாக வந்துவிட்டார்கள். அப்போது இயேசு என்ன செய்தார்? அவர்களுடைய தேவைகளைப் பற்றி யோசித்துப்பார்த்து அவர்கள்மேல் “மனம் உருகினார்.” அவர்களுக்கு உதவியும் ஆறுதலும் தேவை என்பதைப் புரிந்துகொண்டு இயேசு உடனே உதவி செய்தார். சொல்லப்போனால், அவர்களுக்கு ஓரிரு விஷயங்களை அல்ல, “நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.”—மாற். 6:31-34; லூக். 9:10, 11.

7-8. சபையில் இருக்கிறவர்களுக்கு உதவி தேவைப்படும்போது மூப்பர்கள் எப்படி இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள்? அதற்கு உதாரணம் கொடுங்கள்.

7 அன்பான மூப்பர்கள் எப்படி இயேசுவைப் பின்பற்றுகிறார்கள்? நமக்கு உதவி செய்வதற்காக மூப்பர்கள் நிறைய தியாகங்களைச் செய்கிறார்கள். அதற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவர்கள் செய்கிற நிறைய வேலைகள் சபையில் இருக்கிற நமக்கு தெரிவதில்லை. உதாரணமாக, நம்முடைய சகோதர சகோதரிகளில் யாருக்காவது அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படும்போது, மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவில் இருக்கிற சகோதரர்கள் உடனே போய் உதவி செய்கிறார்கள். பெரும்பாலும், இப்படிப்பட்ட அவசர நிலை ராத்திரி நேரத்தில்தான் வருகிறது! அந்தச் சமயத்தில் நம்முடைய அன்பான மூப்பர்களும் அவர்களுடைய குடும்பத்தில் இருக்கிறவர்களும் சகோதர சகோதரிகள்மேல் கரிசனை காட்டுகிறார்கள். தங்களுடைய தேவைகளைவிட சகோதர சகோதரிகளுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், ஓடிப் போய் உதவி செய்கிறார்கள்.

8 அதுமட்டுமல்ல, ராஜ்ய மன்றங்களைக் கட்டுவது, மற்ற கட்டிடங்களைக் கட்டுவது, நிவாரண வேலைகளைச் செய்வது என்று மூப்பர்கள் நிறைய வேலைகளைச் செய்கிறார்கள். அதோடு, மூப்பர்கள் சபையில் இருக்கிற நம்மை உற்சாகப்படுத்துவதற்கும், நமக்கு அறிவுரை கொடுப்பதற்கும், உதவி செய்வதற்கும் நிறைய மணிநேரங்களைச் செலவு செய்கிறார்கள். இந்த சகோதரர்களும் அவர்களுடைய குடும்பமும் செய்கிற தியாகத்தை மனதாரப் பாராட்டுகிறோம். இவர்கள் செய்கிற தியாகத்தை யெகோவாவும் ஆசீர்வதிப்பார். அதேசமயம், மற்றவர்களைப் போலவே மூப்பர்களும் சமநிலையாக இருப்பது ரொம்ப முக்கியம். சபை வேலைகளுக்காக நிறைய நேரம் செலவு செய்துவிட்டு, தங்களுடைய குடும்பத்தின் தேவைகளைக் கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது.

தியாகம் செய்யும் மனப்பான்மையை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?

9. பிலிப்பியர் 2:4, 5-ல் சொல்லப்பட்டபடி, எல்லா கிறிஸ்தவர்களும் எப்படிப்பட்ட மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்?

9 பிலிப்பியர் 2:4, 5-ஐ வாசியுங்கள். மூப்பர்கள் மட்டுமல்ல, நாம் எல்லாருமே இயேசுவைப் போல் தியாகம் செய்யும் மனப்பான்மையைக் காட்ட முடியும். இயேசு, “ஓர் அடிமையைப் போல் ஆனார்” என்று பைபிள் சொல்கிறது. (பிலி. 2:7) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? என்ன செய்தால் எஜமான் சந்தோஷப்படுவார் என்றுதான் ஒரு பொறுப்பான அடிமை அல்லது ஊழியர் யோசிப்பார். யெகோவாவுக்கு அடிமைகளாக இருந்து, சகோதர சகோதரிகளுக்குச் சேவை செய்கிற நாம் அவர்களுக்காக இன்னும் நிறைய செய்வதற்குத்தான் ஆசைப்படுவோம். அப்படிச் செய்வதற்கு உங்களுக்கு எது உதவும் என்று இப்போது பார்க்கலாம்.

10. நம்மை நாமே என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

10 உதவும் மனப்பான்மை உங்களுக்கு இருக்கிறதா என்று யோசித்துப்பாருங்கள். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மத்தவங்களுக்கு உதவி செய்றதுக்காக நான் தியாகம் செய்ய தயாரா இருக்கறேனா? ஒருவேளை கொஞ்சநேரம் ஒரு வயதான சகோதரரை கவனிச்சிக்க சொன்னாலோ, ஒரு வயதான சகோதரியை கூட்டங்களுக்கு கூட்டிட்டு வர சொன்னாலோ, அதைச் செய்ய நான் தயாரா இருக்கறேனா? மாநாட்டு மன்றத்த சுத்தம் செய்றதுக்கும், ராஜ்ய மன்றத்த பராமரிக்கிறதுக்கும் வாலண்டியர்கள் தேவைனு சொன்னா நான் உடனே போய் உதவி செய்றேனா?’ யெகோவாவுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது நம்மிடம் இருக்கிற எல்லாவற்றையும் அவருக்காகப் பயன்படுத்துவோம் என்று வாக்குக் கொடுத்திருக்கிறோம். சொன்னது போலவே நாம் சுயநலம் இல்லாமல் நம்முடைய நேரம், சக்தி, பொருள் எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக கொடுக்கும்போது யெகோவா அதைப் பார்த்து சந்தோஷப்படுகிறார். ஒருவேளை, இதில் நாம் முன்னேற வேண்டியிருந்தால் என்ன செய்யலாம்?

11. தியாகம் செய்யும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள ஜெபம் எப்படி உதவும்?

11 மனம்திறந்து யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். ஒரு விஷயத்தில் முன்னேற்றம் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால், முன்னேற்றம் செய்ய உங்களுக்குத் தோன்றவில்லை என்றால் என்ன செய்யலாம்? மனம் திறந்து யெகோவாவிடம் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும், நேர்மையாக சொல்ல வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை யெகோவாவிடம் சொல்லுங்கள். அதோடு, கடவுளுக்குப் பிரியமானதை “செய்வதற்கான ஆர்வத்தையும் வல்லமையையும்” கொடுக்கும்படி ஜெபத்தில் கேளுங்கள்.—பிலி. 2:13.

12. ஞானஸ்நானம் எடுத்த இளம் சகோதரர்கள் சபைக்கு எப்படி உதவலாம்?

12 நீங்கள் ஞானஸ்நானம் எடுத்த இளம் சகோதரரா? அப்படியென்றால், சபைக்கு நிறைய சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொள்ள யெகோவாவிடம் உதவி கேளுங்கள். நிறைய நாடுகளில், மூப்பர்களைவிட உதவி ஊழியர்கள் குறைவாக இருக்கிறார்கள். அதிலும் ஒருசிலர்தான் இளைஞர்கள். அமைப்பு வளர வளர மூப்பர்களுக்கு இளம் சகோதரர்களுடைய உதவி தேவைப்படுகிறது. அப்போதுதான் மூப்பர்களால் சகோதர சகோதரிகளை நன்றாக கவனித்துக்கொள்ள முடியும். தேவை அதிகம் இருக்கிற இடத்தில் சேவை செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அப்படியென்றால், கண்டிப்பாக உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கும். ஏனென்றால், யெகோவாவை நீங்கள் சந்தோஷப்படுத்துவீர்கள். சகோதர சகோதரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவுவதை நினைத்து சந்தோஷமாகவும் இருப்பீர்கள்.

யூதேயாவிலிருந்த கிறிஸ்தவர்கள் யோர்தான் ஆற்றைக் கடந்து பெல்லா நகரத்துக்குப் போனார்கள். ஏற்கெனவே அந்த நகரத்துக்குப் போய்ச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் அப்போதுதான் வந்து சேர்ந்தவர்களுக்கு உணவுப் பொருள்களைக் கொடுக்கிறார்கள் (பாரா 13)

13-14. நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு நாம் எப்படியெல்லாம் உதவலாம்? (அட்டைப் படம்)

13 மற்றவர்களுக்கு உதவி தேவைப்படுகிறதா என்று பாருங்கள். அப்போஸ்தலன் பவுல் எபிரெயர்களுக்கு ஓர் ஆலோசனை கொடுத்தார்: “நல்லது செய்வதற்கும், உங்களிடம் இருப்பதை மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுப்பதற்கும் மறந்துவிடாதீர்கள்; இப்படிப்பட்ட பலிகளைக் கடவுள் மிகவும் விரும்புகிறார்.” (எபி. 13:16) இது ரொம்ப தேவையான ஆலோசனை. ஏனென்றால், இதை அவர் எழுதி கொஞ்ச நாட்களிலேயே யூதேயாவில் இருந்த கிறிஸ்தவர்கள் தங்களுடைய வீடுகளையும் வேலைகளையும் சத்தியத்தில் இல்லாத சொந்தக்காரர்களையும் விட்டுவிட்டு “மலைகளுக்குத் தப்பியோட” வேண்டியிருந்தது. (மத். 24:16) அப்போது, அவர்களிடம் இருந்த கொஞ்சநஞ்ச பொருள்களையும் மற்றவர்களுக்குத் தாராளமாக கொடுத்து உதவ வேண்டிய சூழ்நிலை வந்தது. பவுல் கொடுத்த இந்த ஆலோசனைக்கு அவர்கள் ஏற்கெனவே கீழ்ப்படிந்திருந்தால்தான் இந்தக் கஷ்டமான சூழ்நிலையில் அதைச் செய்வது அவர்களுக்குச் சுலபமாக இருந்திருக்கும்.

14 நம்முடைய சகோதர சகோதரிகள் தங்களுக்கு உதவி தேவைப்பட்டாலும் எல்லா சமயத்திலும் அதை வெளிப்படையாக கேட்க மாட்டார்கள். உதாரணத்துக்கு, ஒரு சகோதரருடைய மனைவி இறந்துவிட்டதால் அவர் தனிமையில் கஷ்டப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது சாப்பாட்டுக்காக... வெளியில் போய்வர... வீட்டில் இருக்கிற மற்ற வேலைகளைச் செய்ய... அந்தச் சகோதரருக்கு உதவி தேவைப்படுமா? நம்மைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்று அவர் நம்மிடம் உதவி கேட்காமல் இருக்கலாம். ஆனால், நாமாகப் போய் அவருக்கு உதவிகளைச் செய்யும்போது அவர் கண்டிப்பாக சந்தோஷப்படுவார். ‘அவருக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா அவரே வந்து கேப்பாரு, இல்லன்னா வேற யாராவது அவருக்கு உதவி செய்வாங்க’ என்று நாமே நினைத்துக்கொள்ளக் கூடாது. ஒருவேளை, ‘நான் அந்த சகோதரரோட இடத்தில இருந்திருந்தா என்ன மாதிரி உதவிகளை எதிர்பார்த்திருப்பேன்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

15. மற்றவர்களுக்கு உதவி செய்ய ஆசைப்பட்டால் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

15 மற்றவர்கள் உங்களிடம் தயக்கம் இல்லாமல் உதவி கேட்கும் விதத்தில் நடந்துகொள்ளுங்கள். எப்போது உதவி கேட்டாலும் உடனே உதவி செய்கிற சகோதர சகோதரிகள் உங்கள் சபையிலும் இருப்பார்கள். நாம் அவர்களை கஷ்டப்படுத்துகிறோம் என்று அவர்கள் நினைக்கவே மாட்டார்கள். அதனால், எப்போது உதவி தேவைப்பட்டாலும் அவர்களிடம் தயங்காமல் உதவி கேட்போம். அப்படிப்பட்டவர்களைப் போல் இருக்கத்தான் நாமும் ஆசைப்படுவோம். 45 வயதான ஆலன் என்ற மூப்பர், மற்றவர்கள் தன்னிடம் வந்து தயங்காமல் உதவி கேட்கும் விதமாக நடந்துகொள்ள ஆசைப்படுவதாக சொல்கிறார். இயேசு வைத்த முன்மாதிரியைப் பற்றி ஆலன் இப்படிச் சொல்கிறார்: “இயேசு ரொம்ப பிஸியா இருந்தார். ஆனா, சின்னவங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் அவரை பிடிச்சிருந்தது. அவர்கிட்ட எந்த பயமும் இல்லாம வந்து உதவி கேட்டாங்க. இயேசுவுக்கு அவங்க மேல உண்மையான அக்கறை இருக்குன்னு அவங்களுக்கு தெரிஞ்சது. இயேசு மாதிரியேதான் நானும் இருக்கணும்னு ஆசப்படறேன். மத்தவங்க என்கிட்ட வந்து தயங்காம உதவி கேட்கிற மாதிரி அன்பா அக்கறையா நடந்துக்கணும்னு ஆசப்படறேன்.”

16. இயேசுவின் முன்மாதிரியை நெருக்கமாக பின்பற்றுவதற்கு சங்கீதம் 119:59, 60 எப்படி உதவி செய்கிறது?

16 ஒருவேளை நம்மால் இயேசுவைப் போல அப்படியே நடந்துகொள்ள முடியவில்லை என்றாலும், நாம் சோர்ந்துபோக வேண்டிய அவசியமில்லை. (யாக். 3:2) புதிதாக படம் வரைய கற்றுக்கொள்பவரால் தன்னுடைய டீச்சர் அளவுக்குத் திறமையாக படம் வரைய முடியாது. ஆனால், தன்னுடைய தவறிலிருந்து கற்றுக்கொள்ளும்போதும், தன்னுடைய டீச்சரைப் போலவே வரைய முயற்சி செய்யும்போதும் அவரால் நன்றாகப் படம் வரைய கற்றுக்கொள்ள முடியும். அதே போல், பைபிளிலிருந்து நாம் கற்றுக்கொண்ட விஷயங்களின்படி நடக்கும்போதும், நாம் செய்த தவறைத் திருத்திக்கொள்ள முயற்சி செய்யும்போதும், இயேசுவின் முன்மாதிரியை நம்மால் நெருக்கமாகப் பின்பற்ற முடியும்.—சங்கீதம் 119:59, 60-ஐ வாசியுங்கள்.

தியாகம் செய்யும் மனப்பான்மையால் கிடைக்கிற நன்மைகள்

மூப்பர்கள் இயேசுவைப் போல் தியாகங்கள் செய்யும்போது, இளைஞர்களுக்கு நல்ல முன்மாதிரி வைக்கிறார்கள் (பாரா 17) *

17-18. இயேசுவைப் போலவே தியாகங்கள் செய்யும்போது நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும்?

17 உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றிக்கொள்ளும். டிம் என்ற மூப்பர் இப்படிச் சொல்கிறார்: “எங்கள் சபையில இருக்கிற இளம் சகோதரர்கள் நல்ல முன்னேற்றம் செய்தாங்க. அதனால, சிலர் சின்ன வயசிலயே உதவி ஊழியர்கள் ஆகிட்டாங்க. அதுக்கு காரணம், மத்தவங்கள பார்த்து உதவி செய்யணுங்கற ஆசைய வளர்த்துகிட்டதுதான். இந்த இளம் சகோதரர்கள் சுயநலம் இல்லாம சபைக்காக உழைக்கறது மூப்பர்களுக்கு ரொம்ப உதவியா இருக்குது.”

18 இந்த உலகம் சுயநலக்காரர்களால்தான் நிறைந்திருக்கிறது. ஆனால், யெகோவாவின் மக்களாக நாம் ரொம்ப வித்தியாசமாக இருக்கிறோம். இயேசு செய்த தியாகங்கள் நம்முடைய மனதைத் தொட்டதால் அவரைப் போலவே நடந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இயேசுவை நம்மால் அப்படியே பின்பற்ற முடியாது. ஆனால், ‘நெருக்கமாகப் பின்பற்ற’ முடியும். (1 பே. 2:21) இயேசுவைப் போலவே தியாகங்கள் செய்ய நம்மால் முடிந்ததையெல்லாம் செய்யும்போது யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவோம். அதனால், நாமும் சந்தோஷமாக இருப்போம்.

பாட்டு 13 ஏசு நமக்கு முன்மாதிரி

^ இயேசு எப்போதுமே தன்னுடைய தேவைகளை விட மற்றவர்களுடைய தேவைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார். இந்தக் கட்டுரையில் அவருடைய முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம் என்று பார்க்கப்போகிறோம். அதோடு, இயேசுவைப் போலவே தியாகம் செய்யும்போது நமக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பதையும் பார்க்கப்போகிறோம்.

^ பட விளக்கம்: டான் என்ற இளம் சகோதரர் தன்னுடைய அப்பாவைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்த இரண்டு மூப்பர்களைக் கவனிக்கிறார். மூப்பர்களுடைய முன்மாதிரியைப் பார்த்து டான் சபையில் இருக்கிற மற்றவர்களுக்கு உதவி செய்கிறார். டான் அக்கறையாக கவனித்துக்கொள்வதைப் பார்த்து, பென் என்ற இன்னொரு இளம் சகோதரரும் அவரைப் போலவே நடந்துகொள்கிறார். சபையைச் சுத்தம் செய்ய உதவி செய்கிறார்.