Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

சிறந்த மருந்தைக் கண்டுபிடித்தேன்

சிறந்த மருந்தைக் கண்டுபிடித்தேன்

“நீங்க சொல்றத கேட்டா சின்ன வயசுல நான் கண்ட கனவு நிறைவேறர மாதிரி இருக்குது.” 1971-ல் என்னிடம் சிகிச்சைக்கு வந்த கணவன் மனைவியிடம் இந்த வார்த்தைகளைத்தான் ரொம்ப ஆச்சரியமாக சொன்னேன். நான் டாக்டராகி அப்போதுதான் புதிதாக ஒரு கிளினிக் ஆரம்பித்திருந்தேன். என்னிடம் சிகிச்சைக்கு வந்த அந்தக் கணவன் மனைவி யார்? என்னுடைய கனவு என்ன? அன்றைக்கு அவர்கள் என்னிடம் பேசிய விஷயம் என்னுடைய வாழ்க்கையை எப்படி மாற்றியது? சின்ன வயதில் நான் கண்ட கனவு நிறைவேறும் என்று எனக்கு ஏன் அப்போது தோன்றியது? இதைப் பற்றி நான் உங்களிடம் சொல்கிறேன்.

நான் 1941-ல் பிறந்தேன். எங்கள் குடும்பம் பிரான்சில் இருக்கிற பாரிஸில் இருந்தது. நாங்கள் அவ்வளவு பணக்காரர்கள் கிடையாது. படிப்பு என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், எனக்குப் பத்து வயது இருக்கும்போது டிபி நோய் வந்ததால் என்னால் ஸ்கூலுக்குப் போக முடியவில்லை. படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது. என்னுடைய நுரையீரல் ரொம்ப பலவீனமாக இருந்ததால் டாக்டர்கள் என்னை படுத்தேயிருக்கச் சொன்னார்கள். வீட்டில் இருந்தபோது, டிக்ஸ்னரியைப் படித்தேன், பாரிஸ் பல்கலைக்கழகம் நடத்திய ரேடியோ நிகழ்ச்சிகளைக் கேட்டேன். இப்படியே பல மாதங்கள் ஓடிவிட்டன. ஒருவழியாக, என்னுடைய டாக்டர், ‘நீ குணமாயிட்ட, இனி ஸ்கூலுக்கு போகலாம்’ என்று சொன்னார். அதைக் கேட்டபோது, எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. டாக்டர்களால் எப்படி இவ்வளவு பெரிய விஷயத்தைச் செய்ய முடிந்தது என்று நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன். அன்றிலிருந்து உடம்பு சரியில்லாதவர்களைக் குணப்படுத்த வேண்டும் என்பதுதான் என் கனவே. ‘நீ வளர்ந்து என்னவா ஆகணும்?’ என்று அப்பா என்னிடம் கேட்கும்போதெல்லாம், “நான் டாக்டர் ஆவேன்” என்பதுதான் எப்போதுமே என்னுடைய பதிலாக இருக்கும். டாக்டராக வேண்டும் என்பதுதான் என் வாழ்க்கையிலேயே முக்கியமான விஷயமாக இருந்தது.

படைப்புகளால் படைப்பாளரிடம் நெருங்கிப்போனேன்

எங்கள் குடும்பத்தில் எல்லாருமே கத்தோலிக்கர்கள்தான். ஆனால், கடவுளைப் பற்றி எனக்கு அதிகமாக எதுவும் தெரியாது. என் மனதில் நிறைய கேள்விகள் இருந்தன. நான் டாக்டருக்குப் படிக்க ஆரம்பித்த பின்புதான் உயிர் உருவாக்கப்பட்டது, அது தானாக வரவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.

மைக்ரோஸ்கோப் வழியாக முதல் தடவை ஒரு செடியின் செல்லைப் பார்த்தது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. வெப்பத்திலிருந்தும் குளிரிலிருந்தும் செல்கள் தங்களை எப்படிப் பாதுகாத்துக்கொள்கின்றன என்று பார்த்தபோது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. செல்லில் இருக்கிற சைட்டோபிளாசம் உப்பு தண்ணீரில் சுருங்குவதையும் நல்ல தண்ணீரில் விரிவடைவதையும் கவனித்தேன். இப்படி, பல விஷயங்களை செல்கள் செய்வதால்தான் உயிரினங்களால் எல்லா விதமான சூழ்நிலைகளிலும் வாழ முடிகிறது. ஒவ்வொரு செல்களும் இவ்வளவு சிக்கலான வேலைகளைச் செய்வதைப் பார்த்தபோது, உயிர் எதேச்சையாக வந்திருக்காது என்று புரிந்துகொண்டேன்.

என்னுடைய மருத்துவ படிப்பின் இரண்டாவது வருஷத்தில் கடவுள் இருக்கிறார் என்பதற்கான நிறைய ஆதாரங்களைப் பார்த்தேன். மனித உடலைப் பற்றிப் படித்தபோது ஒரு மனிதனுடைய முழங்கை அமைப்பு, விரல்களை மடக்கவும் நீட்டவும் எப்படி உதவி செய்கிறது என்று தெரிந்துகொண்டேன். தசைகளும் தசைநார்களும் தசைநாண்களும் எலும்போடு சேர்ந்து எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டது ஆச்சரியமாக இருந்தது. உதாரணமாக, உள்ளங்கையிலிருந்து விரல்களுக்குப் போகும் ஒரு தசையை, தசைநாண்கள் விரல் எலும்புகளோடு இணைக்கின்றன. இந்தத் தசைநாண்கள், விரலுக்கு நடுப்பகுதியில் வரும்போது இரண்டாகப் பிரிகின்றன. இதற்குக் கீழே, இன்னொரு தசைநாண் விரல் நுனிவரை போகிறது. இந்தத் தசைநாண்களை சில திசுக்கள் எலும்போடு சேர்த்து கெட்டியாக பிடித்துக்கொள்கிறது. இப்படி தசைநார்கள் ஒழுங்காக வடிவமைக்கப்படவில்லை என்றால் அது புடைத்துக்கொண்டிருக்கும். விரல்களும் ஒழுங்காக வேலை செய்யாது. ரொம்ப திறமையான ஒருவர்தான் மனித உடலை இவ்வளவு அழகாக வடிவமைத்திருக்கிறார் என்று நான் புரிந்துகொண்டேன்.

உயிரைப் படைத்தவரை நினைத்து நான் வாயடைத்துப் போனேன். அது எப்போது தெரியுமா? குழந்தை பிறந்ததும் எப்படி மூச்சு விட ஆரம்பிக்கிறது என்று தெரிந்துகொண்டபோது! நுரையீரலில் இருக்கிற குட்டி குட்டியான பலூன் போன்ற காற்றுப் பைகள்தான் நாம் மூச்சு விடுவதற்கு உதவி செய்கின்றன. ஆனால், கருவில் இருக்கும் குழந்தைக்கு அம்மாவின் தொப்புள்கொடி வழியாகத்தான் ஆக்ஸிஜன் கிடைக்கும். அதனால், கருவில் இருக்கிற குழந்தையின் காற்றுப் பைகளில் காற்று இருக்காது. குழந்தை பிறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே அந்தக் காற்றுப் பைகளில் ஸர்ஃபக்டன்ட் என்ற ஒருவிதமான நீர் சுரக்கும். குழந்தை பிறந்தவுடனே அது மூச்சுவிட வசதியாக அடுத்தடுத்து ஆச்சரியமான விஷயங்கள் நடக்கும். குழந்தையின் நுரையீரலுக்கு இரத்தம் போவதற்காக, இதயத்தில் இருக்கிற ஓர் ஓட்டை தானாக மூடிக்கொள்ளும். உடனே, காற்றுப் பைகளில் காற்று நிரம்ப ஆரம்பிக்கும். அந்தக் காற்றுப் பைகள் சுருங்கிப்போய் ஒட்டிக்கொள்ளாமல் ஸர்ஃபக்டன்ட் பார்த்துக்கொள்ளும். இவை எல்லாமே குழந்தை பிறந்தவுடன் சட்டென்று நடக்கும். குழந்தை தானாக மூச்சுவிட ஆரம்பித்துவிடும்.

இவ்வளவு அற்புதமாக படைத்தது யார் என்று தெரிந்துகொள்கிற ஆசையில் பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். 3,000 வருஷங்களுக்கு முன்பே இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த சட்டத்தில் சுத்தத்தைப் பற்றிச் சொல்லியிருப்பதைப் படித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கடவுள் இஸ்ரவேலர்களிடம் கழிவுகளைத் தோண்டி புதைக்க வேண்டும் என்றும் கைகால்களைக் கழுவி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்றும் சொன்னார். யாருக்காவது தொற்றுநோய் வந்தால் அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் சொன்னார். (லேவி. 13:50; 15:11; உபா. 23:13) நோய்கள் எப்படிப் பரவுகின்றன என்பதை விஞ்ஞானிகள் இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், பைபிளில் அதைப் பற்றி முன்பே சொல்லப்பட்டிருக்கிறது. செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது சுத்தமாக இருப்பது சம்பந்தமாக லேவியராகமம் புத்தகத்தில் கொடுக்கப்பட்ட சட்டங்கள் முழு இஸ்ரவேல் தேசமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவி செய்தன என்று நான் புரிந்துகொண்டேன். (லேவி. 12:1-6; 15:16-24) இஸ்ரவேலர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் படைப்பாளர் இந்தச் சட்டங்களை அவர்களுக்குக் கொடுத்தார், அதற்குக் கீழ்ப்படிந்தவர்களுக்கு ஆசீர்வாதத்தையும் கொடுத்தார் என்று புரிந்துகொண்டேன். இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டபோது, பைபிள் கடவுள் தந்த புத்தகம் என்று எனக்குப் புரிந்தது. ஆனால், அப்போதும் கடவுளுடைய பெயர் எனக்குத் தெரியவில்லை.

என் மனைவியை எப்போது பார்த்தேன், யெகோவாவை எப்படிக் கண்டுபிடித்தேன்

நானும் லிடியும் எங்களுடைய கல்யாண நாளில், ஏப்ரல் 3, 1965

நான் டாக்டருக்குப் படித்துக்கொண்டிருந்தபோது லிடியை சந்தித்தேன். நாங்கள் காதலிக்க ஆரம்பித்தோம். 1965-ல் நான் படித்துக்கொண்டிருந்தபோதே எங்கள் கல்யாணம் நடந்தது. எங்களுக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். 1971-க்குள் மூன்று குழந்தைகள் பிறந்துவிட்டார்கள். என்னுடைய வேலையிலும் சரி, குடும்பத்திலும் சரி, லிடி எப்போதுமே எனக்கு ஒரு நல்ல துணையாக இருந்திருக்கிறாள்.

மூன்று வருஷங்களாக நான் ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்குப் பின்பு, ஒரு கிளினிக்கை ஆரம்பித்தேன். ஒருநாள், புதிதாக ஒரு கணவனும் மனைவியும் சிகிச்சைக்காக என்னுடைய கிளினிக்குக்கு வந்தார்கள். ஆரம்பத்தில் நான் சொன்ன கணவன்-மனைவி இவர்கள்தான். அந்தக் கணவருக்கு என்னென்ன மருந்துகள் வாங்க வேண்டும் என்று நான் எழுதப்போனேன். உடனே அவருடைய மனைவி, “ரத்தம் சேர்க்காத மருந்தா எழுதுங்க டாக்டர், ப்ளீஸ்” என்று சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “ஏன் அப்படி சொல்றீங்க?” என்று கேட்டேன். “நாங்க யெகோவாவின் சாட்சிகள்” என்று அவர் சொன்னார். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியோ இரத்தம் சம்பந்தமாக அவர்களுடைய நம்பிக்கையைப் பற்றியோ எனக்கு எதுவுமே தெரியாது. அதனால், இரத்தம் வேண்டாம் என்று சொன்னதற்கான காரணத்தை அவர் பைபிளிலிருந்து எடுத்துக் காட்டினார். (அப். 15:28, 29) பிறகு, கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் செய்யப்போகிறது என்று அவர்கள் இரண்டு பேரும் எனக்கு பைபிளிலிருந்து காட்டினார்கள். நோய், வேதனை, மரணம் என எதுவுமே இருக்காது என்று சொன்னார்கள். (வெளி. 21:3, 4) அதைக் கேட்ட ஆச்சரியத்தில்தான், “நீங்க சொல்றத கேட்டா, சின்ன வயசுல நான் கண்ட கனவு நிறைவேறர மாதிரி இருக்குது. உடம்பு சரி இல்லாதவங்கள குணமாக்கறதுக்குதான் நான் டாக்டராவே ஆனேன்” என்று சொன்னேன். கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் உற்சாகமாக இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அவர்கள் அங்கிருந்து கிளம்பும்போது, ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்துகொண்டேன். இவ்வளவு நாளாக நான் தேடிக்கொண்டிருந்த அந்தப் புத்திசாலியான படைப்பாளருடைய பெயர் யெகோவா என்று! இனிமேலும் நான் ஒரு கத்தோலிக்கனாக இருக்க மாட்டேன் என்று என் மனதுக்குள்ளே சொல்லிக்கொண்டேன்.

அந்தத் தம்பதி மூன்று தடவை என்னை கிளினிக்கில் பார்க்க வந்தார்கள். ஒவ்வொரு தடவையும் ஒருமணிநேரத்துக்கும் மேலே நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். வீடாக இருந்தால் பைபிளைப் பற்றி இன்னும் நிறைய நேரம் பேசலாமென்று அவர்களை என்னுடைய வீட்டுக்குக் கூப்பிட்டேன். லிடியும் எங்களோடு பைபிள் படிக்க ஒத்துக்கொண்டாலும் சில கத்தோலிக்க கோட்பாடுகள் தவறானவை என்று அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், ஒரு பாதிரியாரை வீட்டுக்குக் கூப்பிட்டேன். சர்ச்சில் சொல்லிக்கொடுக்கிற போதனைகளைப் பற்றி பைபிளை மட்டுமே வைத்து ராத்திரி வரைக்கும் பேசிக்கொண்டிருந்தோம். கடைசியாக, யெகோவாவின் சாட்சிகள்தான் உண்மையைச் சொல்லித் தருகிறார்கள் என்று லிடி புரிந்துகொண்டாள். யெகோவாமேல் எங்களுக்கு இருந்த அன்பு அதிகமானது. 1974-ல் நாங்கள் இரண்டு பேரும் ஞானஸ்நானம் எடுத்தோம்.

யெகோவாவுக்கு முதலிடம்

மனிதர்களுக்காக கடவுள் வைத்திருக்கிற நோக்கத்தைப் பற்றித் தெரிந்துகொண்டபோது, என்னுடைய வாழ்க்கையில் நான் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று புரிந்துகொண்டேன். யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதுதான் எனக்கும் லிடிக்கும் முக்கியமாக இருந்தது. பைபிள் சொல்கிறபடிதான் எங்களுடைய பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். கடவுள்மேலும் மற்றவர்கள்மேலும் வைத்திருந்த அன்புதான் எங்கள் குடும்பம் ஒற்றுமையாக இருப்பதற்கு உதவியது.—மத். 22:37-39.

நானும் லிடியும் எப்போதுமே ஒரே மாதிரிதான் யோசிப்போம். அதை எங்களுடைய பிள்ளைகள் எந்தளவுக்குப் புரிந்து வைத்திருந்தார்கள் என்று இப்போது யோசித்தாலும் சிரிப்புதான் வரும். இயேசு சொன்ன மாதிரி, “‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும், ‘இல்லை’ என்று சொல்வது ‘இல்லை’ என்றே இருக்கட்டும்” என்பதுதான் எங்களுடைய வீட்டின் சட்டம் என்று எங்கள் பிள்ளைகளுக்கு நன்றாகவே தெரியும். (மத். 5:37) எங்கள் மூத்த மகளுக்கு 17 வயது இருக்கும்போது நண்பர்களோடு சேர்ந்து வெளியே போகக் கூடாது என்று லிடி சொல்லிவிட்டாள். அவளுடைய நண்பர்களில் ஒரு பெண், “உங்க அம்மா தானே வேணாம்னு சொன்னாங்க. உங்க அப்பாகிட்ட கேளு” என்று சொன்னாள். அதற்கு என்னுடைய மகள், “அப்பாகிட்ட கேட்டு எந்த பிரயோஜனமும் இல்ல. இரண்டு பேரும் ஒரே மாதிரிதான் சொல்வாங்க” என்று சொன்னாள். பைபிள் நியமங்களின்படி செய்யும்போது நாங்கள் இருவரும் ஒரே மாதிரிதான் யோசிப்போம் என்று எங்களுடைய ஆறு பிள்ளைகளுக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது. நாங்கள் யெகோவாவுக்கு ரொம்ப நன்றியோடு இருக்கிறோம். ஏனென்றால், இன்றைக்கு எங்களுடைய குடும்பத்தில் நிறைய பேர் யெகோவாவுக்குச் சேவை செய்துகொண்டிருக்கிறார்கள்.

சத்தியத்தைத் தெரிந்துகொண்ட பின்பு, யெகோவாவின் சேவை என்னுடைய வாழ்க்கையில் முதலிடத்துக்கு வந்துவிட்டது. ஆனால், ஒரு டாக்டராக நான் கற்றுக்கொண்ட விஷயங்களை யெகோவாவின் மக்களுக்காகப் பயன்படுத்த ஆசைப்பட்டேன். அதனால், பாரிஸில் இருக்கிற பெத்தேலில் டாக்டராக வாலண்டியர் சேவை செய்தேன். அதற்குப் பின்பு, லூவ்யேவில் இருந்த புது பெத்தேலிலும் சேவை செய்தேன். கிட்டத்தட்ட 50 வருஷமாக பெத்தேலுக்குப் போய்வந்து நான் சேவை செய்கிறேன். இத்தனை வருஷங்களில் எனக்கு பெத்தேலில் நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். அதில் சிலருக்கு இப்போது 90 வயதுக்குமேல் இருக்கும். அதில் ஒரு சுவாரசியமான விஷயத்தைச் சொல்ல வேண்டுமென்றால், பெத்தேலில் புதிதாகச் சேர்ந்திருந்த ஒரு சகோதரரைப் பார்த்தேன். அவரிடம் பேசப் பேசத்தான், 20 வருஷங்களுக்கு முன்பு அவர் பிறக்கும்போது அவருடைய அம்மாவுக்கு நான்தான் பிரசவம் பார்த்திருக்கிறேன் என்பது தெரிந்தது!

யெகோவா தன்னுடைய மக்களை நன்றாக கவனித்துக்கொள்வதைப் பார்த்தேன்

வருஷங்கள் போகப் போக அமைப்பு மூலமாக யெகோவா எப்படித் தன்னுடைய மக்களை வழிநடத்துகிறார், பாதுகாக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டேன். இதனால், யெகோவாமேல் எனக்கு அன்பு இன்னும் அதிகமானது. யெகோவாவின் சாட்சிகள் ஏன் ரத்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை டாக்டர்களிடம் பேசுவதற்காக 1980-களின் ஆரம்பத்தில் ஆளும் குழு ஓர் ஏற்பாடு செய்தது.

1988-ல், ஆளும் குழு மருத்துவமனை தகவல் சேவைகள் என்ற புது டிபார்ட்மெண்ட்டை பெத்தேலில் ஆரம்பித்தது. ஆரம்பத்தில், இந்த டிபார்ட்மெண்ட் அமெரிக்காவில் மட்டும் இருந்த மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுக்களை (HLC) கவனித்துக்கொண்டிருந்தது. யெகோவாவின் சாட்சிகளுக்கு ரத்தம் ஏற்றாமல் சிகிச்சை செய்கிற டாக்டர்களைக் கண்டுபிடிக்க இந்தக் குழுக்கள்தான் உதவி செய்தன. பின்பு, உலகம் முழுவதும் ஹெச்எல்சி குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அப்போது, பிரான்சிலும் ஹெச்எல்சி குழு ஆரம்பிக்கப்பட்டது. உடம்பு சரியில்லாத சகோதர சகோதரிகளுக்கு உதவி தேவைப்படும்போது யெகோவாவின் அமைப்பு அவர்களை எவ்வளவு அன்பாக கவனித்துக்கொள்கிறது என்பதைப் பார்த்தபோது நான் அசந்துபோய்விட்டேன்!

கனவு நிஜமானது

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை சந்தோஷமாக மக்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறோம்

டாக்டர் ஆவதுதான் என்னுடைய கனவு. ஆனால், நன்றாக யோசித்துப்பார்த்த பின்பு, டாக்டராக இருந்து மக்களை குணப்படுத்துவதைவிட உயிர் கொடுத்த யெகோவாவைப் பற்றி மக்களுக்குச் சொல்லிக்கொடுப்பதுதான் ரொம்ப முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டேன். நான் ரிட்டையர்ட் ஆன பின்பு நானும் லிடியும் ஒழுங்கான பயனியர் ஆனோம். யெகோவாவின் அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை மக்களுக்குச் சொல்வதற்கு எங்களுடைய நேரத்தையெல்லாம் பயன்படுத்தினோம். உயிரைக் காப்பாற்றும் இந்த வேலையில் ஈடுபட எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறோம்.

நானும் லிடியும், 2021-ல்

உடம்பு சரி இல்லாதவர்களைக் குணப்படுத்துவதற்கு இப்போது என்னால் முடிந்ததை செய்துகொண்டிருக்கிறேன். ஆனால், எவ்வளவு பெரிய டாக்டராக இருந்தாலும் மக்களுடைய எல்லா நோய்களையும் சரிசெய்ய முடியாது, சாவையும் தடுத்து நிறுத்த முடியாது. வலி இல்லாத... நோய் இல்லாத... சாவு இல்லாத... வாழ்க்கைக்காகத்தான் நான் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன். சீக்கிரம் வரப் போகிற புதிய உலகத்தில் யெகோவாவின் படைப்புகளைப் பற்றி படித்துக்கொண்டே இருப்பேன். மனிதர்களை அவர் எவ்வளவு அழகாக வடிவமைத்திருக்கிறார் என்று தெரிந்துகொண்டே இருப்பேன். ஏனென்றால், அங்கேதான் முடிவே இல்லையே! இப்போது, என்னுடைய கனவு கொஞ்சம்தான் நிறைவேறியிருக்கிறது. சீக்கிரத்தில் அது முழுமையாக நிறைவேறும் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.