Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 10

உங்களால் “பழைய சுபாவத்தை” மாற்றிக்கொள்ள முடியும்

உங்களால் “பழைய சுபாவத்தை” மாற்றிக்கொள்ள முடியும்

‘பழைய சுபாவத்தையும் அதற்குரிய பழக்கவழக்கங்களையும் களைந்துபோடுங்கள்.’—கொலோ. 3:9.

பாட்டு 29 எம் பெயருக்கேற்ப வாழ்வோம்

இந்தக் கட்டுரையில்... *

1. பைபிளைப் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது?

 யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்று கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். நம்மில் நிறைய பேர் அதைப் பற்றி யோசித்துப் பார்ப்பதற்குக்கூட விரும்ப மாட்டோம். எது சரி, எது தவறு என்று இந்த உலகம் சொல்கிறதோ அதன்படிதான் நம்முடைய எண்ணமும் சுபாவமும் இருந்திருக்கும். பைபிள் சொல்வது போல, “நம்பிக்கை இல்லாதவர்களாகவும், கடவுளைப் பற்றித் தெரியாதவர்களாகவும்” இருந்திருப்போம். (எபே. 2:12) பைபிளைப் படிக்க ஆரம்பித்த பிறகு நம்முடைய வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது.

2. பைபிளைப் படிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள் எதைப் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டீர்கள்?

2 பைபிளைப் படிக்க ஆரம்பித்த பிறகு உங்கள்மேல் கொள்ளை அன்பு வைத்திருக்கிற ஒரு பரலோக அப்பா உங்களுக்கு இருப்பதைப் பற்றித் தெரிந்திருப்பீர்கள். யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடக்க வேண்டுமென்றால்... அவரை வணங்குகிறவர்களுடைய குடும்பத்தில் ஒருவராக ஆக வேண்டுமென்றால்... உங்களுடைய வாழ்க்கையிலும் எண்ணத்திலும் யோசனைகளிலும் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்று புரிந்திருப்பீர்கள். அப்படியென்றால், அவர் எதைச் சரி என்று சொல்கிறாரோ அதைச் செய்வதற்கும் எதைத் தவறு என்று சொல்கிறாரோ அதை விட்டுவிடுவதற்கும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருந்திருக்கும்.—எபே. 5:3-5.

3. கொலோசெயர் 3:9, 10 சொல்கிறபடி, நாம் என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார், இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

3 யெகோவா நம்மை படைத்தவர். நம்முடைய பரலோக அப்பாவும் அவர்தான். தன்னுடைய குடும்பத்தில் இருக்கிறவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று சொல்வதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது. ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்னால் ‘பழைய சுபாவத்தையும் அதற்குரிய பழக்கவழக்கங்களையும் களைந்துபோட’ நாம் முயற்சி எடுக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். * (கொலோசெயர் 3:9, 10-ஐ வாசியுங்கள்.) ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறவர்களுக்கு, இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உதவும்: (1) ‘பழைய சுபாவம்’ என்றால் என்ன? (2) அந்தச் சுபாவத்தை நாம் களைந்துபோட வேண்டுமென்று யெகோவா ஏன் எதிர்பார்க்கிறார்? (3) அதை நாம் எப்படிச் செய்யலாம்? ஏற்கெனவே ஞானஸ்நானம் எடுத்தவர்கள் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது தங்களுக்குள் பழைய சுபாவம் மறுபடியும் எட்டிப் பார்க்காமலிருக்க என்ன செய்யலாம் என்று தெரிந்துகொள்ள முடியும்.

‘பழைய சுபாவம்’ என்றால் என்ன?

4. ‘பழைய சுபாவம்’ இருக்கிற ஒருவர் எப்படி நடந்துகொள்வார்?

4 ‘பழைய சுபாவம்’ இருக்கிற ஒருவர் பொதுவாக பாவ இயல்புக்குரிய விஷயங்களையெல்லாம் யோசிப்பார், செய்வார். அவர் சுயநலமாக நடந்துகொள்ளலாம், சட்டென்று கோபப்படலாம், நன்றிகெட்டவராகவும் பெருமைபிடித்தவராகவும் இருக்கலாம். ஆபாசமான காட்சிகளைப் பார்ப்பதற்கோ, ஒழுக்கக்கேடான விஷயங்களும் சண்டைக் காட்சிகளும் நிறைந்த படங்களைப் பார்ப்பதற்கோ அவர் ஆசைப்படலாம். அவரிடம் சில நல்ல குணங்கள் இருக்கும்தான். ஏதாவது கெட்ட விஷயத்தைச் சொல்லிவிட்டோ செய்துவிட்டோ அதை நினைத்து வருத்தமும்படலாம். ஆனாலும், தன்னுடைய கெட்ட எண்ணத்தையும் நடத்தையையும் மாற்றிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை அவருக்கு அந்தளவுக்கு இல்லாமல் இருக்கலாம்.—கலா. 5:19-21; 2 தீ. 3:2-5.

“பழைய சுபாவத்தை” தூக்கிப்போட்டு விட்டோம் என்றால் கெட்ட எண்ணங்களும் பழக்கவழக்கங்களும் நம்மை ஆட்டிப்படைக்காது (பாரா 5) *

5. பழைய சுபாவத்தை நம்மால் முழுமையாகத் தூக்கிப்போட முடியுமா? விளக்குங்கள். (அப்போஸ்தலர் 3:19)

5 நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் கெட்ட எண்ணங்களையும் ஆசைகளையும் நம்முடைய இதயத்திலிருந்தும் மனதிலிருந்தும் முழுமையாக எடுத்துப்போட முடியாதுதான். சிலசமயங்களில், எதையாவது சொல்லிவிட்டு அல்லது செய்துவிட்டு, பிறகு அதை நினைத்து வேதனைப்படுகிறோம். (எரே. 17:9; யாக். 3:2) ஆனால், பழைய சுபாவத்தை நாம் தூக்கிப்போடும்போது பாவ இயல்புக்குரிய எண்ணங்களும் பழக்கங்களும் நம்மை ஆட்டிப்படைக்காது. நாம் ஆளே மாறிவிடுவோம்.—ஏசா. 55:7; அப்போஸ்தலர் 3:19-ஐ வாசியுங்கள்.

6. தப்பான யோசனைகளையும் கெட்ட பழக்கங்களையும் நாம் அடியோடு விட்டுவிட வேண்டுமென்று யெகோவா ஏன் எதிர்பார்க்கிறார்?

6 யெகோவா நம்மேல் கொள்ளை அன்பு வைத்திருக்கிறார், நாம் சந்தோஷமாக வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறார். (ஏசா. 48:17, 18) அதனால்தான், தப்பான யோசனைகளையும், கெட்ட பழக்கங்களையும் நாம் அடியோடு விட்டுவிட வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். கெட்ட ஆசைகளை எதிர்த்து நாம் போராடவில்லை என்றால் நமக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பு வரும் என்று அவருக்குத் தெரியும். இப்படி, நாமும் மற்றவர்களும் பாதிக்கப்படுவதை அவர் பார்க்கும்போது அவருடைய மனம் வலிக்கும்.

7. ரோமர் 12:1, 2 சொல்கிறபடி, நாம் என்ன முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது?

7 நம்முடைய சுபாவத்தை மாற்றிக்கொள்ள நாம் முயற்சி எடுக்கும்போது நம்முடைய நண்பர்களும் குடும்பத்தில் இருக்கிற சிலரும் நம்மைக் கேலி செய்யலாம். (1 பே. 4:3, 4) நமக்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் செய்வதற்கு நமக்கு உரிமை இருக்கிறது என்றும் நாம் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று மற்றவர்கள் நமக்குச் சொல்ல வேண்டியதில்லை என்றும் அவர்கள் சொல்லலாம். ஆனால், யெகோவாவின் நெறிமுறைகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் உண்மையிலேயே தங்களுடைய சொந்த விருப்பப்படி எதையும் செய்வதில்லை, சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற உலகம் சொல்கிறபடிதான் செய்கிறார்கள். (ரோமர் 12:1, 2-ஐ வாசியுங்கள்.) பாவத்தாலும் சாத்தானுடைய உலகத்தாலும் நமக்குக் கிடைத்திருக்கிற பழைய சுபாவத்தை நாம் அப்படியே வைத்திருக்கப் போகிறோமா அல்லது யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நம்முடைய சுபாவத்தை மாற்றிக்கொள்ளப் போகிறோமா? (ஏசா. 64:8) இந்த முடிவை எடுப்பது நம்முடைய கையில்தான் இருக்கிறது.

பழைய சுபாவத்தை நாம் எப்படி ‘களைந்துபோடலாம்’?

8. கெட்ட எண்ணங்களையும் மோசமான பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொள்ள எது நமக்கு உதவும்?

8 கெட்ட எண்ணங்களையும் மோசமான பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொள்ள நமக்குக் கொஞ்சம் காலம் எடுக்கும், அதற்கு நிறைய முயற்சி தேவைப்படும் என்பது யெகோவாவுக்குத் தெரியும். (சங். 103:13, 14) அதனால், அவருடைய வார்த்தை மூலமாகவும் சக்தி மூலமாகவும் அமைப்பு மூலமாகவும் நமக்கு ஞானத்தையும் பலத்தையும் அவர் கொடுக்கிறார். தேவையான மாற்றங்களைச் செய்வதற்கும் உதவுகிறார். இதுவரை அவர் உங்களுக்கு உதவி செய்த மாதிரியே இனியும் உதவுவார் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். பழைய சுபாவத்தை முழுமையாக மாற்றிக்கொள்வதற்கும், ஞானஸ்நானம் எடுக்கிற அளவுக்கு முன்னேறுவதற்கும் நாம் என்னென்ன செய்யலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

9. எதைச் செய்வதற்கு கடவுளுடைய வார்த்தை உங்களுக்கு உதவும்?

9 உங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள பைபிளைப் பயன்படுத்துங்கள். கடவுளுடைய வார்த்தை ஒரு கண்ணாடியைப் போல் இருக்கிறது. நீங்கள் எப்படி யோசிக்கிறீர்கள், பேசுகிறீர்கள், நடந்துகொள்கிறீர்கள் என்று அது காட்டுகிறது. (யாக். 1:22-25) உங்களுக்கு பைபிள் படிப்பு எடுப்பவரும் அனுபவமுள்ள சகோதர சகோதரிகளும் கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்தி உங்களுக்கு உதவலாம். உதாரணத்துக்கு, உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதைக் கண்டுபிடிக்க வசனங்களைப் பயன்படுத்தி அவர்கள் உதவி செய்யலாம். கெட்ட பழக்கங்களை மாற்றிக்கொள்ளத் தேவையான ஆலோசனைகளை பைபிளிலிருந்து எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று அவர்கள் சொல்லிக்கொடுக்கலாம். எல்லாவற்றுக்கும்மேல் உங்களுக்கு உதவி செய்ய யெகோவா எப்போதுமே தயாராக இருக்கிறார். அவரால்தான் உங்களுக்கு இன்னும் நன்றாக உதவி செய்ய முடியும். ஏனென்றால், உங்களுடைய மனதில் இருப்பது அவருக்குத்தான் நன்றாகத் தெரியும். (நீதி. 14:10; 15:11) அதனால், ஒவ்வொரு நாளும் ஜெபம் செய்யுங்கள், பைபிளைப் படியுங்கள்.

10. ஈலியின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன தெரிந்துகொண்டீர்கள்?

10 யெகோவாவின் நெறிமுறைகள்தான் மிகச் சிறந்தது என்பதை நம்புங்கள். யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கிற விஷயங்களைச் செய்வதால் நமக்குத்தான் நன்மை. அவருடைய நெறிமுறைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் சுயமரியாதையோடு வாழலாம். நம்முடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருக்கும். ரொம்ப சந்தோஷமாகவும் இருப்போம். (சங். 19:7-11) ஆனால், யெகோவாவின் நெறிமுறைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனால் என்ன நடக்கும்? பாவ இயல்புக்குரிய செயல்களைச் செய்வதால் வருகிற பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஈலி என்பவருடைய அனுபவத்தைக் கவனியுங்கள். அவருடைய அப்பா-அம்மா யெகோவாவை ரொம்ப நேசித்தார்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் வளர்ந்த ஈலி டீனேஜில் கெட்ட நண்பர்களுடன் பழக ஆரம்பித்தார். போதைப்பொருள்களை எடுத்துக்கொள்வது, ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வது, திருடுவது என்று மோசமான வாழ்க்கையும் வாழ ஆரம்பித்தார். போகப் போக ரொம்பக் கோபக்காரனாகவும் முரடனாகவும் ஆகிவிட்டதாக ஈலி சொல்கிறார். “எதையெல்லாம் செய்யக் கூடாதுனு அப்பா-அம்மா பைபிள்ல இருந்து சொல்லிக்கொடுத்தாங்களோ அதையெல்லாம் செஞ்சேன்” என்று அவர் சொல்கிறார். ஆனாலும், சின்ன வயதில் கற்றுக்கொண்ட விஷயங்களை ஈலி மறக்கவில்லை. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, திரும்பவும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். கெட்ட பழக்கங்களை விடுவதற்கு கடினமாக முயற்சி செய்தார். 2000-ல் ஞானஸ்நானம் எடுத்தார். யெகோவாவின் நெறிமுறைகள்படி வாழ்ந்ததால் அவருக்கு என்ன நன்மை கிடைத்தது? “நான் இப்ப மன நிம்மதியோட, சுத்தமான மனசாட்சியோட வாழ்றேன்” * என்று அவர் சொல்கிறார். இந்த அனுபவம் காட்டுகிறபடி, யெகோவாவின் நெறிமுறைகளை ஒதுக்கித் தள்ளுகிறவர்களுக்கு வேதனைதான் மிஞ்சும். ஆனாலும், அப்படிப்பட்டவர்கள் தங்களை மாற்றிக்கொள்வதற்கு உதவி செய்ய யெகோவா ஆசையாக இருக்கிறார்.

11. எவற்றையெல்லாம் யெகோவா வெறுக்கிறார்?

11 யெகோவா வெறுக்கிற விஷயங்களை வெறுக்கக் கற்றுக்கொள்ளுங்கள். (சங். 97:10) “ஆணவத்தோடு பார்க்கும் கண்கள், பொய் பேசும் நாவு, அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்தும் கைகள்” போன்றவற்றை யெகோவா வெறுப்பதாக பைபிள் சொல்கிறது. (நீதி. 6:16, 17) அதுமட்டுமல்ல, “வன்முறையில் இறங்குகிறவர்களையும் ஏமாற்றுக்காரர்களையும் யெகோவா அருவருக்கிறார்.” (சங். 5:6) இப்படிப்பட்ட எண்ணங்களையும் செயல்களையும் அவர் ரொம்பவே வெறுப்பதால்தான் நோவா காலத்திலிருந்த கெட்டவர்களை அழித்தார். நோவாவின் காலத்தில் பூமியில் வன்முறை நிறைந்திருந்ததாக பைபிள் சொல்கிறது. (ஆதி. 6:13) இன்னொரு உதாரணத்தைக் கவனியுங்கள். மல்கியா தீர்க்கதரிசி காலத்தில் வாழ்ந்த சிலர் எந்தத் தவறும் செய்யாத தங்களுடைய மணத்துணையை விவாகரத்து செய்யத் தந்திரமாகத் திட்டம் போட்டார்கள். அப்படிப்பட்டவர்களை வெறுப்பதாகவும் அவர்களுடைய வணக்கத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் மல்கியா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா சொன்னார். அப்படிப்பட்டவர்களை நியாயந்தீர்க்கப்போவதாகவும் அவர் சொன்னார்.—மல். 2:13-16; எபி. 13:4.

கெட்டுப்போன உணவை நாம் அருவருக்கிற விதமாக கெட்டது என்று யெகோவா சொல்கிற விஷயத்தையும் அருவருக்க வேண்டும். (பாராக்கள் 11-12)

12. ‘பொல்லாததை அடியோடு வெறுப்பது’ என்றால் என்ன அர்த்தம்?

12 நாம் ‘பொல்லாததை அடியோடு வெறுக்க’ வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். (ரோ. 12:9) ‘அடியோடு வெறுப்பது’ என்றால் ஒரு விஷயத்தை யோசித்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு ரொம்பவே அருவருப்பதை அர்த்தப்படுத்துகிறது. இதைப் புரிந்துகொள்ள இப்படி யோசித்துப்பாருங்கள்: கெட்டுப் போன உணவை ஒரு தட்டில் வைத்து யாராவது உங்களிடம் சாப்பிட சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அதைப் பற்றி நினைத்தாலே உங்களுக்குக் குமட்டும் இல்லையா? அருவருப்பாக இருக்கும் இல்லையா? அதுபோலவே, கெட்டது என்று யெகோவா சொல்கிற ஒரு விஷயத்தைப் பற்றி யோசிப்பதே நமக்கு அருவருப்பாக இருக்க வேண்டும். அதை அடியோடு வெறுக்க வேண்டும்.

13. கெட்ட எண்ணங்களை நாம் ஏன் பிடுங்கி எறிய வேண்டும்?

13 கெட்ட எண்ணங்களைப் பிடுங்கி எறியுங்கள். நாம் என்ன யோசிக்கிறோமோ அதைத்தான் செய்ய வேண்டுமென்று நினைப்போம். அதனால்தான், மோசமான பாவத்தைச் செய்யத் தூண்டுகிற எண்ணங்களை முளையிலேயே கிள்ளி எறியும்படி இயேசு சொன்னார். (மத். 5:21, 22, 28, 29) யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய ஆசை. அதனால், கெட்ட எண்ணங்கள் ஏதாவது மனதில் வந்தால் அதை உடனடியாக கிள்ளி எறிவது எவ்வளவு முக்கியம் இல்லையா?

14. நம்முடைய பேச்சு எதைக் காட்டும், என்னென்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்?

14 உங்களுடைய வாய்க்குக் கடிவாளம் போடுங்கள். “வாயிலிருந்து வருவதெல்லாம் இதயத்திலிருந்து வருகின்றன” என்று இயேசு சொன்னார். (மத். 15:18) நாம் எப்படிப்பட்டவர்கள் என்று நம்முடைய பேச்சே காட்டிவிடும். அதனால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘உண்மைய சொன்னா மாட்டிக்குவேன்னு தெரிஞ்சும்கூட பொய் சொல்லாம இருக்குறேனா? என்னுடைய துணை இல்லாத ஒருத்தர்கிட்ட வழியற மாதிரி பேசாம இருக்குறேனா? ஆபாசமான பேச்சை அறவே தவிர்க்குறேனா? யாராவது என்னை கோபப்படுத்தினாலும் அவங்ககிட்ட எரிஞ்சு விழாம அமைதியா பேசுறேனா?’ இந்தக் கேள்விகளையெல்லாம் ஆழமாக யோசித்துப் பார்ப்பது உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும். உங்களுடைய பேச்சு, சட்டையில் இருக்கிற பட்டன் மாதிரி இருக்கிறது என்று சொல்லலாம். பட்டனைக் கழற்றிவிட்டால் சட்டையைச் சுலபமாகக் கழற்றிவிடலாம். அதேபோல் மோசமாகப் பேசுவது, பொய் பேசுவது, ஆபாசமாகப் பேசுவது போன்றவற்றை விடுவதற்கு நீங்கள் கடினமாக முயற்சி செய்தால் பழைய சுபாவத்தைச் சுலபமாகத் தூக்கிப்போட்டு விடலாம்.

15. நம்முடைய பழைய சுபாவத்தை ‘மரக் கம்பத்தில் வைத்து ஆணியடிப்பது’ என்றால் என்ன அர்த்தம்?

15 மாற்றங்கள் செய்யத் தயாராக இருங்கள். மாற்றங்களைச் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை நமக்குக் கற்றுக்கொடுக்க அப்போஸ்தலன் பவுல் ரொம்பவே பொருத்தமான ஓர் உதாரணத்தைச் சொன்னார். நம்முடைய பழைய சுபாவத்தை ‘மரக் கம்பத்தில் வைத்து ஆணியடிக்க’ வேண்டுமென்று அவர் எழுதினார். (ரோ. 6:6) வேறுவார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், கிறிஸ்துவைப் போலவே நாம் நடக்க வேண்டும். யெகோவா வெறுக்கிற எண்ணங்களையும், பழக்கவழக்கங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படிச் செய்தால்தான் நம்முடைய மனசாட்சி சுத்தமாக இருக்கும். எதிர்காலத்தில் என்றென்றைக்கும் வாழ்வதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். (யோவா. 17:3; 1 பே. 3:21) ஒரு விஷயத்தை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்: நமக்கு ஏற்ற மாதிரி தன்னுடைய நெறிமுறைகளை யெகோவா மாற்றிக்கொள்ள மாட்டார். நாம்தான் அவருடைய நெறிமுறைகளுக்கு ஏற்ற மாதிரி நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.—ஏசா. 1:16-18; 55:9.

16. கெட்ட ஆசைகளை எதிர்த்துத் தொடர்ந்து போராட நீங்கள் ஏன் உறுதியாக இருக்க வேண்டும்?

16 கெட்ட ஆசைகளை எதிர்த்து தொடர்ந்து போராடுங்கள். ஞானஸ்நானம் எடுத்த பிறகும்கூட கெட்ட ஆசைகளை எதிர்த்துத் தொடர்ந்து போராட வேண்டியிருக்கும். மாரிஸியூ என்ற சகோதரருடைய அனுபவத்தைக் கவனியுங்கள். இளம் வயதிலேயே அவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட ஆரம்பித்தார். ஒருநாள் யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தார். அவர்களோடு பைபிளைப் படிக்கவும் ஆரம்பித்தார். தன்னுடைய கெட்ட பழக்கங்களை எல்லாம் மாற்றிக்கொண்டு 2002-ல் ஞானஸ்நானம் எடுத்தார். நிறைய வருஷங்களாக அவர் யெகோவாவுக்கு சேவை செய்துகொண்டுதான் இருக்கிறார். “ஆனாலும் சிலசமயங்கள்ல எனக்குள்ள கெட்ட ஆசைகள் வந்துட்டுதான் இருக்குது” என்று மாரிஸியூ சொல்கிறார். அதை நினைத்து அவர் அப்படியே சோர்ந்துபோகவில்லை. “கெட்ட ஆசைகளுக்கு அடிபணியாம இருந்தா யெகோவாவ சந்தோஷப்படுத்த முடியும். அதை நினைக்கிறப்போ மனசுக்கு ஆறுதலா இருக்கு” என்று அவர் சொல்கிறார். *

17. நாபிகாவின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன தெரிந்துகொண்டீர்கள்?

17 உதவி கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். உங்கள் பலத்தை நம்பியிருக்காமல் அவருடைய சக்தியை நம்பியிருங்கள். (கலா. 5:22; பிலி. 4:6) பழைய சுபாவத்தைத் தூக்கிப்போடுவதற்கும், அது திரும்பவும் நமக்குள் எட்டிப் பார்க்காமல் இருப்பதற்கும் நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். நாபிகா என்ற சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவளுக்கு ஆறு வயது இருந்தபோது அவளுடைய அப்பா அவளை அம்போவென்று விட்டுவிட்டு போய்விட்டார். “அந்த வலிய என்னால தாங்கிக்கவே முடியல” என்று அவள் சொல்கிறாள். வளர வளர நாபிகா ரொம்பக் கோபக்காரியாகவும் எரிந்து விழுகிறவளாகவும் ஆகிவிட்டாள். போதைப்பொருள்களையும் விற்க ஆரம்பித்தாள். அதனால், கொஞ்ச வருஷம் ஜெயிலில் இருந்தாள். ஜெயிலில் இருக்கிறவர்களுக்கு சாட்சி கொடுக்க வந்த யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். நாபிகா பெரிய பெரிய மாற்றங்களைச் செய்தாள். “சில கெட்ட பழக்கங்கள விடுறது எனக்கு பெரிய விஷயமாவே தெரியல. ஆனா, புகைப் பிடிக்கறத விடுறதுதான் ரொம்ப போராட்டமா இருந்துச்சு” என்று அவள் சொல்கிறாள். அந்தப் பழக்கத்தை விடுவதற்கு ஒரு வருஷத்துக்குமேல் அவள் போராடினாள். கடைசியில், ஒருவழியாக அதை விட்டுவிட்டாள். அவளால் அதை எப்படி விட முடிந்தது? “விடாம யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சுட்டே இருந்ததாலதான் என்னால அந்த பழக்கத்தில இருந்து வெளியே வர முடிஞ்சுது” என்று அவள் சொல்கிறாள். இப்போது மற்றவர்களிடம் அவள் சொல்ல ஆசைப்படுவது என்னவென்றால், “யெகோவாவ சந்தோஷப்படுத்துறதுக்கு என்னாலேயே மாற்றங்கள செய்ய முடிஞ்சுதுன்னா யாருனாலயும் முடியும்.” *

ஞானஸ்நானம் எடுக்கும் அளவுக்கு உங்களால் முன்னேற முடியும்

18. ஒன்று கொரிந்தியர் 6:9-11 சொல்கிறபடி, கடவுளுடைய ஊழியர்கள் நிறைய பேரால் என்ன செய்ய முடிந்திருக்கிறது?

18 கிறிஸ்துவோடு சேர்ந்து ஆட்சி செய்வதற்கு முதல் நூற்றாண்டில் யெகோவா தேர்ந்தெடுத்த ஆண்கள் பெண்கள் சிலருக்கு ஒருகாலத்தில் கெட்ட பழக்கங்கள் இருந்தன. உதாரணத்துக்கு, அவர்கள் ஒழுக்கங்கெட்டவர்களாகவும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களாகவும் திருடர்களாகவும் இருந்தார்கள். ஆனால், கடவுளுடைய சக்தியின் உதவியால் தங்களுடைய சுபாவத்தை மாற்றிக்கொள்ள அவர்களால் முடிந்தது. (1 கொரிந்தியர் 6:9-11-ஐ வாசியுங்கள்.) அதேபோல் இன்றைக்கும் தங்களுடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ள பைபிள் லட்சக்கணக்கானவர்களுக்கு உதவி செய்திருக்கிறது. * அவர்களுக்குள் ஊறிப்போயிருந்த கெட்ட பழக்கங்களையெல்லாம் அடியோடு விட்டிருக்கிறார்கள். உங்களாலும் உங்கள் சுபாவத்தையும் கெட்ட பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொண்டு ஞானஸ்நானம் எடுக்கிற அளவுக்கு முன்னேற முடியும் என்பதை அவர்களுடைய உதாரணம் காட்டுகிறது, இல்லையா?

19. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப்போகிறோம்?

19 ஞானஸ்நானம் எடுக்க ஆசைப்படுகிறவர்கள் பழைய சுபாவத்தைத் தூக்கிப்போட்டால் மட்டும் போதாது. புதிய சுபாவத்தை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யவும் வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்? அதற்கு மற்றவர்கள் எப்படி உதவி செய்யலாம்? இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

பாட்டு 41 யெகோவாவே, என் ஜெபம் கேளுங்கள்

^ பாரா. 5 ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமென்றால் நம்முடைய சுபாவத்தை மாற்றிக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். பழைய சுபாவம் என்றால் என்ன? அதை நாம் ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்? அதை எப்படிச் செய்யலாம்? இதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஞானஸ்நானம் எடுத்த பிறகும்கூட நாம் எப்படிப் புதிய சுபாவத்தைத் தொடர்ந்து அணிந்துகொள்ளலாம் என்று அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 3 வார்த்தைகளின் விளக்கம்: ‘பழைய சுபாவத்தைக் களைந்துபோடுவது’ என்றால், யெகோவா வெறுக்கிற எண்ணங்களையும், அவருக்குப் பிடிக்காததைச் செய்ய வேண்டுமென்ற ஆசைகளையும் அடியோடு விட்டுவிடுவது என்று அர்த்தம். ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்னாலேயே இதையெல்லாம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.—எபே. 4:22.

^ பாரா. 10 கூடுதலாகத் தெரிந்துகொள்ள ஜூலை 1, 2012 காவற்கோபுரத்தில் வெளிவந்த “பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது,—‘நான் யெகோவாவிடம் திரும்பிப் போக வேண்டும்’” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

^ பாரா. 16 கூடுதலாகத் தெரிந்துகொள்ள மே 1, 2012, ஆங்கில காவற்கோபுரத்தில் வெளிவந்த “பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது—‘அவர்கள் என்னிடம் அன்பாக நடந்துகொண்டார்கள்’” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

^ பாரா. 17 கூடுதலாகத் தெரிந்துகொள்ள அக்டோபர் 1, 2012 ஆங்கில காவற்கோபுரத்தில் வெளிவந்த “பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது—‘சின்ன வயதிலேயே பயங்கர கோபக்காரியாக ஆகிவிட்டேன்’” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

^ பாரா. 18 பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது” என்ற பெட்டியைப் பாருங்கள்.

^ பாரா. 64 படவிளக்கம்: கெட்ட எண்ணங்களையும் மோசமான பழக்கவழக்கங்களையும் விட்டுவிடுவது, பழைய உடையைக் கழற்றிப் போடுவதுபோல் இருக்கிறது.