Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 13

யெகோவாவை வணங்கும்போது உங்கள் சந்தோஷம் அதிகமாகும்

யெகோவாவை வணங்கும்போது உங்கள் சந்தோஷம் அதிகமாகும்

“எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மகிமையும் மாண்பும் வல்லமையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்.”—வெளி. 4:11.

பாட்டு 31 கடவுளுடைய வழியில் நடப்போம்

இந்தக் கட்டுரையில்... *

1-2. நம்முடைய வணக்கத்தைக் கடவுள் ஏற்றுக்கொள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

 கடவுளை “வணங்குவது” என்று சொன்னால் சட்டென்று உங்கள் கண் முன்னால் என்ன காட்சி வருகிறது? ஒரு சகோதரர் தன்னுடைய படுக்கைக்குப் பக்கத்தில் மண்டிபோட்டு மனதில் இருப்பதையெல்லாம் கொட்டி ரொம்ப உருக்கமாக ஜெபம் செய்கிற காட்சி உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். இல்லையென்றால், ஒரு குடும்பம் சந்தோஷமாக ஒன்றுசேர்ந்து பைபிளை ஆராய்ச்சி செய்து படிப்பது உங்கள் கண் முன்னால் வரலாம்.

2 அந்தச் சகோதரரும் சரி, அந்தக் குடும்பமும் சரி, வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட விஷயங்களைத்தான் செய்கிறார்கள். அவர்களுடைய வணக்கத்தை யெகோவா ஏற்றுக்கொள்வாரா? அவருடைய நோக்கத்துக்கு ஏற்ற விதமாகவும், அவர்மேல் இருக்கிற அன்பையும் மரியாதையையும் காட்டும் விதமாகவும் அவரை வணங்கினால் நிச்சயம் ஏற்றுக்கொள்வார். யெகோவாமேல் நாம் உயிரையே வைத்திருக்கிறோம். அவரைத்தான் வணங்க வேண்டும் என்பது நமக்குத் தெரியும். அதனால், அவருக்குப் பிடித்த மாதிரி அவரை வணங்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம்.

3. எதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்?

3 பைபிள் காலங்களில் எப்படிப்பட்ட வணக்கத்தைக் கடவுள் ஏற்றுக்கொண்டார் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் நாம் பார்ப்போம். யெகோவாவை வணங்க இன்றைக்கு நாம் செய்ய வேண்டிய எட்டு விஷயங்களைப் பற்றியும் பார்ப்போம். அதுமட்டுமல்ல, யெகோவாவைச் சரியான விதத்தில் வணங்குவது நமக்கு எப்படி சந்தோஷத்தைத் தரும் என்பதையும் பார்ப்போம். யெகோவாவை வணங்கும் விஷயத்தில் நாம் எப்படி முன்னேறலாம் என்பதை யோசித்துப் பார்க்கவும் இந்தக் கட்டுரை உதவும்.

பைபிள் காலங்களில் யெகோவா எப்படிப்பட்ட வணக்கத்தை ஏற்றுக்கொண்டார்?

4. யெகோவாவுக்கு உண்மையாக இருந்த நிறைய பேர் அவர்மேல் அன்பையும் மரியாதையையும் வைத்திருந்ததை எப்படிக் காட்டினார்கள்?

4 கடவுளுக்கு உண்மையாக இருந்த நிறைய பேர், உதாரணமாக ஆபேல்... நோவா... ஆபிரகாம்... யோபு... போன்ற நிறைய பேர், யெகோவாமேல் ரொம்ப அன்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். அதை அவர்கள் எப்படிக் காட்டினார்கள்? அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்கள்... அவர்மேல் விசுவாசம் வைத்தார்கள்... அவருக்குப் பலிகளையும் கொடுத்தார்கள். கடவுளை வணங்குவதற்காக அவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருந்தது என்று பைபிள் குறிப்பாக சொல்லவில்லை. ஆனால், யெகோவாவுக்கு மதிப்புக் கொடுப்பதற்காக அவர்களால் முடிந்ததையெல்லாம் செய்ததால் அவர்களுடைய வணக்கத்தை அவர் ஏற்றுக்கொண்டார் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, மோசே மூலமாக இஸ்ரவேலர்களுக்கு யெகோவா திருச்சட்டத்தைக் கொடுத்தார். அவருக்குப் பிடித்த மாதிரி அவரை எப்படி வணங்க வேண்டும் என்பதைப் பற்றிய நிறைய சட்டங்கள் அதில் இருந்தன.

5. இயேசு இறந்து உயிர்த்தெழுந்த பிறகு கிறிஸ்தவர்கள் தன்னை எப்படி வணங்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்த்தார்?

5 இயேசு இறந்து உயிர்த்தெழுந்த பிறகு மக்கள் திருச்சட்டத்துக்குக் கீழ்ப்படிய வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கவில்லை. (ரோ. 10:4) அதற்குப் பதிலாக, கிறிஸ்தவர்கள் ஒரு புதிய சட்டத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். அதுதான் ‘கிறிஸ்துவின் சட்டம்.’ (கலா. 6:2) இந்த ‘சட்டத்துக்கு’ கீழ்ப்படிய அவர்கள் அதை மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏராளமான விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், இயேசுவைப் போலவே நடந்துகொள்வதும், அவர் கற்றுக்கொடுத்த விஷயங்களைக் கடைப்பிடிப்பதும்தான். இன்றைக்கும்கூட யெகோவாவின் மக்கள் கிறிஸ்துவைப் போலவே நடந்துகொள்ள தங்களால் முடிந்ததையெல்லாம் செய்கிறார்கள். யெகோவாவை சந்தோஷப்படுத்தவும் தங்களுக்கு “புத்துணர்ச்சி” கிடைக்கவும் அப்படிச் செய்கிறார்கள்.—மத். 11:29.

6. இந்தக் கட்டுரையிலிருந்து பிரயோஜனம் அடைய நீங்கள் என்ன செய்யலாம்?

6 யெகோவாவை வணங்குவதற்காக நாம் செய்ய வேண்டிய எட்டு விஷயங்களைப் பற்றி இப்போது பார்ப்போம். அதை ஒவ்வொன்றாகப் பார்க்கும்போது ‘இதுல நான் என்ன முன்னேற்றம் செஞ்சிருக்கேன்? இன்னும் ஏதாவது முன்னேற்றம் செய்யணுமா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் முன்னேற்றம் செய்திருந்தால் அது உங்களுக்கே ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஆனாலும், நீங்கள் இன்னும் முன்னேற்றம் செய்ய வேண்டியிருக்கிறதா என்று தெரிந்துகொள்ள யெகோவாவிடம் உதவி கேளுங்கள்.

யெகோவாவை வணங்குவதில் அடங்கியிருக்கும் சில விஷயங்கள்

7. இதயத்திலிருந்து நாம் செய்கிற ஜெபங்களை யெகோவா எப்படிப் பார்க்கிறார்?

7 ஜெபம் செய்யும்போது நாம் யெகோவாவை வணங்குகிறோம். ஆரம்பத்தில் வழிபாட்டுக் கூடாரத்திலும், அதற்குப் பிறகு ஆலயத்திலும், ரொம்பக் கவனமாகத் தயாரிக்கப்பட்ட தூபப்பொருள் யெகோவாவுக்கு முன்னால் செலுத்தப்பட்டது. நம்முடைய ஜெபமும் அந்தத் தூபப்பொருள் போல இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. (சங். 141:2) தூபப்பொருளைச் செலுத்தும்போது வந்த வாசனை யெகோவாவுக்கு ரொம்பப் பிரியமாக இருந்தது. அதேபோல், நாம் ஜெபம் செய்யும்போது இதயத்திலிருந்து சொல்கிற வார்த்தைகள், அவை ரொம்ப சாதாரணமாக இருந்தாலும், யெகோவாவுக்குப் ‘பிரியமாக’ இருக்கிறது. (நீதி. 15:8; உபா. 33:10) அவர்மேல் நாம் அன்பு வைத்திருக்கிறோம், அவருக்கு நன்றியோடு இருக்கிறோம் என்பதை ஜெபத்தில் சொல்லும்போது அதைக் கேட்டு யெகோவா சந்தோஷப்படுகிறார். நம் மனதில் இருக்கிற கவலைகளையும் நமக்கு இருக்கிற ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அவரிடம் சொல்ல வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதனால், அவரிடம் ஜெபம் செய்வதற்கு முன், என்னென்ன விஷயங்களைச் சொல்லப்போகிறீர்கள் என்று யோசித்துவையுங்கள். அப்படிச் செய்தால், அருமையான ‘தூபப்பொருளை’ யெகோவா அப்பாவுக்குச் செலுத்த முடியும்.

8. கடவுளைப் புகழ்வதற்கு என்ன அருமையான வாய்ப்பு நமக்கு இருக்கிறது?

8 யெகோவாவைப் பற்றிப் புகழ்ந்து பேசும்போது நாம் அவரை வணங்குகிறோம். (சங். 34:1) யெகோவாவுக்கு இருக்கிற அருமையான குணங்களைப் பற்றியும் அவர் செய்திருக்கிற விஷயங்களைப் பற்றியும், மற்றவர்களிடம் ஆசை ஆசையாக சொல்லும்போது நாம் அவரைப் புகழ்கிறோம். நாம் யெகோவாவுக்கு நன்றியோடு இருந்தால் அவரைப் பற்றி மற்றவர்களிடம் புகழ்ந்து பேசுவோம். கடவுள் நமக்குச் செய்திருக்கிற நல்ல விஷயங்களைப் பற்றி நாம் நேரமெடுத்து யோசித்துப் பார்த்தோமென்றால் அவரைப் பற்றிச் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும். முக்கியமாக, ஊழியம் செய்யும்போது கடவுளுக்கு நம்முடைய ‘உதடுகளின் கனியைப் பலி செலுத்த,’ அதாவது ‘புகழ்ச்சிப் பலியைச் செலுத்த’ அருமையான வாய்ப்பு கிடைக்கிறது. (எபி. 13:15) எப்படி? ஜெபத்தில் நாம் எதைப் பற்றிச் சொல்லப்போகிறோம் என்று முன்கூட்டியே கவனமாக யோசித்துப்பார்ப்பது போலவே ஊழியத்தில் எதைப் பற்றி சொல்லப்போகிறோம் என்றும் முன்கூட்டியே யோசித்துப்பார்க்கலாம். நாம் செலுத்துகிற “புகழ்ச்சிப் பலி” மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய ஆசை. அதனால்தான், ஊழியத்தில் மற்றவர்களிடம் பேசும்போது நாம் ரொம்ப ஆர்வமாக பேசுகிறோம்.

9. கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது இஸ்ரவேலர்களைப் போலவே நமக்கும் என்ன நன்மைகள் கிடைக்கின்றன? உங்களுக்குக் கிடைத்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள்.

9 கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது நாம் யெகோவாவை வணங்குகிறோம். “வருஷத்தில் மூன்று தடவை, . . . உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்துக்கு ஆண்கள் எல்லாரும் அவர் முன்னால் வர வேண்டும்” என்று இஸ்ரவேலர்களிடம் யெகோவா சொல்லியிருந்தார். (உபா. 16:16) அதனால், வீட்டையும் வயலையும் யார் பார்த்துக்கொள்வார்கள் என்று கவலைப்படாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவர்கள் போக வேண்டியிருந்தது. ஆனால், அவர்களுக்குக் கடவுள் ஒரு வாக்கு கொடுத்திருந்தார். “உங்கள் கடவுளாகிய யெகோவாவின் சன்னிதிக்கு நீங்கள் போகும்போது, யாரும் வந்து உங்கள் தேசத்தைப் பிடிக்க மாட்டார்கள்” என்று சொல்லியிருந்தார். (யாத். 34:24) யெகோவாமேல் முழு நம்பிக்கை இருந்ததால் இஸ்ரவேலர்கள் அந்த வருடாந்தர பண்டிகைகளில் கலந்துகொண்டார்கள். அதனால், அவர்களுக்கு அருமையான ஆசீர்வாதங்கள் கிடைத்தன. திருச்சட்டத்தை நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது. யெகோவா எவ்வளவு நல்லவர் என்பதை யோசித்துப்பார்க்க முடிந்தது. யெகோவாவை நேசிக்கிற மற்ற இஸ்ரவேலர்களுடன் உற்சாகமாகப் பேசிப் பழக முடிந்தது. (உபா. 16:15) கூட்டங்களில் கலந்துகொள்ள நம்மால் முடிந்ததையெல்லாம் செய்தோம் என்றால் அவர்களைப் போலவே நமக்கும் நிறைய நன்மைகள் கிடைக்கும். நன்றாகத் தயாரித்து கூட்டங்களில் சுருக்கமாகப் பதில் சொல்லும்போது அதைப் பார்த்து யெகோவாவும் ரொம்ப சந்தோஷப்படுவார்.

10. பாடல்களைப் பாடுவது நம்முடைய வணக்கத்தின் ஒரு முக்கியமான பாகம் என்று ஏன் சொல்கிறோம்?

10 சகோதர சகோதரிகளோடு சேர்ந்து பாடல்களைப் பாடும்போது நாம் யெகோவாவை வணங்குகிறோம். (சங். 28:7) பாடல்கள் பாடுவதை வணக்கத்தின் ஒரு முக்கிய பாகமாக இஸ்ரவேலர்கள் நினைத்தார்கள். ஆலயத்தில், பாடல்களைப் பாடுவதற்கு 288 லேவியர்களை தாவீது ராஜா நியமித்தார். (1 நா. 25:1, 6-8) இன்றைக்கு நாமும் யெகோவாவைப் புகழ்ந்து பாட்டுப் பாடுவதன் மூலமாக அவர்மேல் வைத்திருக்கிற அன்பைக் காட்டலாம். பாட்டுப் பாடுவதற்கு இனிமையான குரல் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். பேசும்போது, “நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம்.” (யாக். 3:2) அதற்காக நாம் சபையிலோ ஊழியத்திலோ பேசாமல் இருப்பதில்லை. அதே மாதிரி நமக்கு சரியாகப் பாட வரவில்லை என்றால்கூட, நாம் தயங்க வேண்டியதில்லை. தாராளமாக யெகோவாவைப் புகழ்ந்து பாடலாம்.

11. சங்கீதம் 48:13 சொல்கிறபடி, குடும்பமாக பைபிளை ஆராய்ச்சி செய்து படிக்க நாம் ஏன் நேரம் ஒதுக்க வேண்டும்?

11 யெகோவாவின் வார்த்தையை ஆழமாகப் படிக்கும்போதும், அவரைப் பற்றிப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும்போதும் நாம் அவரை வணங்குகிறோம். ஓய்வுநாளில் இஸ்ரவேலர்கள் வேறெந்த வேலையும் செய்யவில்லை, யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்காக அந்த நாளைப் பயன்படுத்தினார்கள். (யாத். 31:16, 17) யெகோவாவுக்கு உண்மையாக இருந்த நிறைய பேர் அவரைப் பற்றியும், அவர் செய்த நல்ல நல்ல விஷயங்களைப் பற்றியும், தங்களுடைய பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்தார்கள். இன்றைக்கு நாமும் பைபிளை வாசிப்பதற்கும் அதை ஆராய்ச்சி செய்து படிப்பதற்கும் மற்ற வேலைகளிலிருந்து கொஞ்ச நேரத்தை ஒதுக்க வேண்டும். ஏனென்றால், அது நம்முடைய வணக்கத்தின் ஒரு பாகம். யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கு அது உதவும். (சங். 73:28) குடும்பமாக பைபிளை ஆராய்ச்சி செய்து படிக்கும்போது, யெகோவா அப்பாவோடு நல்ல நட்பை வைத்துக்கொள்ள வருங்கால தலைமுறைக்கு, அதாவது நம்முடைய பிள்ளைகளுக்கு, நம்மால் உதவ முடியும்.—சங்கீதம் 48:13-ஐ வாசியுங்கள்.

12. வழிபாட்டுக் கூடாரத்திலிருந்த பொருள்களைச் செய்கிற வேலையை யெகோவா எப்படிப் பார்த்தார், அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

12 வணக்கத்துக்காகக் கட்டிடங்களைக் கட்டும்போதும் அதைப் பராமரிக்கும்போதும் நாம் யெகோவாவை வணங்குகிறோம். வழிபாட்டுக் கூடாரத்தை அமைப்பதும் அதிலிருக்கிற பொருள்களைச் செய்வதும் ‘பரிசுத்த வேலையாக’ இருந்ததாக பைபிள் சொல்கிறது. (யாத். 36:1, 4) இன்றைக்கும்கூட ராஜ்ய மன்றங்களையும் அமைப்பின் மற்ற கட்டிடங்களையும் கட்டுகிற வேலையை யெகோவா பரிசுத்த சேவையாக நினைக்கிறார். சில சகோதர சகோதரிகள் இந்தக் கட்டுமான வேலைக்காக நிறைய நேரத்தை செலவு செய்கிறார்கள். அவர்கள் எல்லாரையும் நாம் மனதாரப் பாராட்டலாம். கட்டுமான வேலை செய்வதோடு அவர்கள் ஊழியமும் செய்கிறார்கள். அவர்களில் சிலர் பயனியராகச் சேவை செய்ய ஆசைப்படலாம். கடினமாக உழைக்கிற இந்தச் சகோதர சகோதரிகளுக்கு பயனியர் ஆவதற்கான தகுதி இருந்தால், மூப்பர்கள் அவர்களை ஒழுங்கான பயனியர்களாக நியமிக்கலாம். இப்படி, அவர்கள் செய்கிற கட்டுமான வேலைக்கு ஆதரவு கொடுப்பதை மூப்பர்கள் காட்டலாம். கட்டுமான வேலைகளைச் செய்வதற்கு நமக்குத் திறமைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்முடைய கட்டிடங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்கும் அவற்றைப் பராமரிப்பதற்கும் நம் எல்லாராலும் உதவ முடியும்.

13. கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளை ஆதரிக்க நாம் கொடுக்கிற நன்கொடைகளைப் பற்றி எப்படி நினைக்க வேண்டும்?

13 கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு நன்கொடை கொடுத்து ஆதரிக்கும்போது நாம் யெகோவாவை வணங்குகிறோம். பண்டிகைகளுக்காக கூடிவரும்போது இஸ்ரவேலர்கள் வெறும் கையோடு வரக் கூடாது என்று யெகோவா கட்டளை கொடுத்திருந்தார். (உபா. 16:16) அவர்கள் தங்களுடைய சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி நன்கொடை கொண்டுவர வேண்டியிருந்தது. இதன் மூலமாக, யெகோவா செய்த எல்லாவற்றுக்கும் நன்றியோடு இருப்பதை அவர்கள் காட்டினார்கள். இன்றைக்கு யெகோவா நமக்குச் செய்திருக்கிற எல்லா ஏற்பாடுகளுக்கும் நாம் நன்றியோடு இருக்கிறோம் என்பதையும் அவர்மேல் அன்பு வைத்திருக்கிறோம் என்பதையும் எப்படிக் காட்டலாம்? நம்முடைய சூழ்நிலையைப் பொறுத்து சபைச் செலவுகளுக்கும், உலகளாவிய வேலைக்கும் நன்கொடை கொடுப்பதன் மூலமாக அதைச் செய்யலாம். இதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இப்படிச் சொன்னார்: “கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒருவனுக்கு இருந்தால், அவன் தன்னிடம் இருப்பதற்கு ஏற்றபடி எதைக் கொடுத்தாலும் அதைக் கடவுள் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார். இல்லாததைக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை.” (2 கொ. 8:4, 12) நாம் கொடுக்கிற நன்கொடை சிறியதாக இருந்தாலும், மனதாரக் கொடுக்கும்போது யெகோவா அதை ரொம்பப் பெரிதாக நினைக்கிறார்.—மாற். 12:42-44; 2 கொ. 9:7.

14. நீதிமொழிகள் 19:17 சொல்கிறபடி, கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு நாம் உதவி செய்வதை யெகோவா எப்படிப் பார்க்கிறார்?

14 கஷ்டத்தில் இருக்கிற சகோதரர்களுக்கு உதவி செய்யும்போது நாம் யெகோவாவை வணங்குகிறோம். இஸ்ரவேலர்கள் ஏழைகளுக்குத் தாராளமாக கொடுக்கும்போது அவர்களை ஆசீர்வதிப்பதாக யெகோவா வாக்குக் கொடுத்தார். (உபா. 15:7, 10) கஷ்டத்தில் இருக்கிற சகோதரர்களுக்கு ஒவ்வொரு தடவை நாம் உதவி செய்யும்போதும் யெகோவா அதை அவருக்கே செய்வதாக நினைக்கிறார். (நீதிமொழிகள் 19:17-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, பிலிப்பி நகரத்திலிருந்த கிறிஸ்தவர்கள் சிறையிலிருந்த பவுலுக்குப் பரிசுகளை அனுப்பினார்கள். அந்தப் பரிசுகள், கடவுள் ‘பிரியத்தோடு ஏற்றுக்கொள்கிற பலியாக இருக்கின்றன’ என்று பவுல் சொன்னார். (பிலி. 4:18) உங்கள் சபையில் இருப்பவர்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள். ‘என்னால் யாருக்காவது உதவி செய்ய முடியுமா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். நம்முடைய நேரம், சக்தி, திறமை, பொருள்கள் எல்லாவற்றையும் பயன்படுத்தி கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு நாம் உதவி செய்யும்போது அதைப் பார்த்து யெகோவா ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதை வணக்கத்தின் ஒரு பாகமாக நினைக்கிறார்.—யாக். 1:27.

யெகோவாவை வணங்குவது சந்தோஷத்தைத் தரும்

15. யெகோவாவை வணங்குவதற்காக நேரமும் சக்தியும் செலவு செய்ய வேண்டியிருந்தாலும் நாம் ஏன் அதைக் கஷ்டமாக நினைப்பதில்லை?

15 யெகோவாவை வணங்குவதற்கு நேரமும் சக்தியும் தேவைப்படும் என்பது உண்மைதான். ஆனால், அவரை வணங்குவது ஒரு கஷ்டமான விஷயம் இல்லை. (1 யோ. 5:3) ஏனென்றால், நாம் யெகோவாமேல் உயிரையே வைத்திருக்கிறோம். இதைக் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். ஒரு சின்னப் பையன் தன்னுடைய அப்பாவுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறான். அதற்காக மணிக்கணக்காக உட்கார்ந்து ஒரு படம் வரைகிறான். ‘இதுக்குப் போய் இவ்வளவு நேரம் செலவு பண்ணிட்டோமே’ என்றெல்லாம் அவன் நினைக்க மாட்டான். ஏனென்றால், தன்னுடைய அப்பாமேல் அவன் உயிரையே வைத்திருக்கிறான். அப்பாவுக்கு அந்தப் பரிசைக் கொடுப்பதில் அவனுக்கு அப்படியொரு சந்தோஷம்! அந்தப் பையனை மாதிரிதான் நாமும் யெகோவா அப்பாமேல் உயிரையே வைத்திருக்கிறோம். அதனால், அவரை வணங்குவதற்காக நேரத்தையும் சக்தியையும் செலவு செய்வது நமக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதை நாம் கஷ்டமாக நினைப்பதில்லை.

16. எபிரெயர் 6:10 சொல்கிறபடி, தன்னை சந்தோஷப்படுத்த நாம் ஒவ்வொருவரும் எடுக்கிற முயற்சியைப் பார்க்கும்போது யெகோவா என்ன நினைக்கிறார்?

16 பிள்ளைகள்மேல் அன்பு வைத்திருக்கிற அப்பா-அம்மா, பிள்ளைகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒரேமாதிரி பரிசு கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்க மாட்டார்கள். ஏனென்றால், ஒவ்வொரு பிள்ளையாலும் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று அவர்களுக்குத் தெரியும். அதேபோல் யெகோவா அப்பாவும் நம் ஒவ்வொருவரையும் நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறார். ஒருவேளை, உங்களுக்குத் தெரிந்த நிறைய பேரைவிட நீங்கள் யெகோவாவுக்காக அதிகமாகச் செய்யலாம். இல்லையென்றால், வயதானதாலோ, உடல்நல பிரச்சினைகளாலோ குடும்பப் பொறுப்புகளாலோ நீங்கள் அதிகமாகச் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால், அதை நினைத்து சோர்ந்துவிடாதீர்கள். (கலா. 6:4) யெகோவாவுக்காக நீங்கள் செய்வதை அவர் ஒருநாளும் மறக்க மாட்டார். யெகோவாவுக்காக உங்களால் முடிந்ததையெல்லாம் செய்யும்போது, அதுவும் நல்ல எண்ணத்தோடு செய்யும்போது, அதைப் பார்த்து அவர் ரொம்ப சந்தோஷப்படுவார். (எபிரெயர் 6:10-ஐ வாசியுங்கள்.) நீங்கள் என்ன செய்ய ஆசைப்படுகிறீர்கள் என்பதுகூட யெகோவாவுக்குத் தெரியும். அதனால், அவரை வணங்குவதற்காக உங்களால் முடிந்ததையெல்லாம் செய்வதை நினைத்து நீங்கள் சந்தோஷப்பட வேண்டும், திருப்தியாக இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

17. (அ) யெகோவாவை வணங்குவதில் சில விஷயங்களைச் செய்வது நமக்குக் கஷ்டமாக இருந்தால் என்ன செய்யலாம்? (ஆ) “ உங்கள் சந்தோஷத்தை அதிகமாக்குங்கள்” என்ற பெட்டியில் இருக்கிற எந்த விஷயம் உங்களுக்குப் பிரயோஜனமாக இருந்திருக்கிறது?

17 நாம் இவ்வளவு நேரம் பார்த்த விஷயங்களில் சிலவற்றைச் செய்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? உதாரணத்துக்கு, பைபிளை ஆராய்ச்சி செய்து படிப்பதோ ஊழியம் செய்வதோ உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? அப்படியென்றால், இதை யோசித்து பாருங்கள்: ஒரு விஷயத்தை எந்தளவுக்கு அதிகமாகச் செய்கிறோமோ அந்தளவுக்கு அது நமக்குப் பிடித்துவிடும். அதிலிருந்து நமக்குப் பிரயோஜனமும் கிடைக்கும். நம்முடைய வணக்கத்தை உடற்பயிற்சி செய்வதோடு, அல்லது ஒரு இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்வதோடு ஒப்பிடலாம். இதை எப்போதாவது ஒருதடவை செய்தால் அதில் எந்தப் பிரயோஜனமும் இருக்காது. ஆனால், தினமும் செய்வதற்கு நாம் முயற்சி செய்தால் எப்படி இருக்கும்? ஆரம்பத்தில் அதைக் கொஞ்ச நேரம் செய்வோம். போகப் போக அதிக நேரம் செய்ய முயற்சி செய்வோம். இப்படிச் செய்யும்போது நமக்கு அது ரொம்பப் பிடித்துவிடும். திரும்பவும் எப்போது செய்வோம் என்று நாம் காத்துக்கொண்டிருப்போம். யெகோவாவை வணங்குகிற விஷயத்திலும் இதுதான் உண்மை.

18. நம் வாழ்க்கையில் எது ரொம்ப முக்கியமாக இருக்க வேண்டும், அதனால் நமக்கு என்ன நன்மை கிடைக்கிறது?

18 யெகோவாவை வணங்குவதுதான் நம்முடைய வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானதாக இருக்க வேண்டும். அதற்காக நம்மால் முடிந்த எல்லாவற்றையுமே செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது, நம்முடைய வாழ்க்கை சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கும்; அவரை என்றென்றைக்கும் வணங்குகிற வாய்ப்பும் கிடைக்கும். (நீதி. 10:22) நமக்குப் பிரச்சினைகள் வரும்போது, உதவி செய்வதற்கு யெகோவா இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டதே நம்முடைய மனதுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கிறது. (ஏசா. 41:9, 10) அப்படியென்றால், ‘மகிமையும் மாண்பும் . . . பெற்றுக்கொள்ள தகுதியானவரான’ யெகோவா அப்பாவை வணங்குவதை நினைத்து நாம் ரொம்ப சந்தோஷப்படலாம், இல்லையா?—வெளி. 4:11.

பாட்டு 24 வாருங்கள் யெகோவாவின் மலைக்கு!

^ பாரா. 5 எல்லாவற்றையும் படைத்தது யெகோவாதான். அதனால் நாம் அவரைத்தான் வணங்க வேண்டும். யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவர் கொடுத்திருக்கிற நியமங்களின்படி நாம் வாழ்ந்தால்தான் அவரை வணங்குவதற்காக நாம் செய்கிற ஒவ்வொரு விஷயத்தையும் அவர் ஏற்றுக்கொள்வார். யெகோவாவை வணங்குவதற்காக நாம் செய்கிற எட்டு விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, இந்த விஷயங்களில் நாம் எப்படி முன்னேறலாம் என்றும் அது நமக்கு எப்படி சந்தோஷத்தைக் கொடுக்கும் என்றும் பார்ப்போம்.