Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 14

மூப்பர்களே, எப்போதும் அப்போஸ்தலன் பவுலைப் போல் நடந்துகொள்ளுங்கள்

மூப்பர்களே, எப்போதும் அப்போஸ்தலன் பவுலைப் போல் நடந்துகொள்ளுங்கள்

“நீங்கள் என்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.”—1 கொ. 11:1.

பாட்டு 99 மாபெரும் ஒரு குடும்பம்

இந்தக் கட்டுரையில்... *

1-2. அப்போஸ்தலன் பவுலின் உதாரணம் மூப்பர்களுக்கு எப்படி உதவியாக இருக்கும்?

 அப்போஸ்தலன் பவுலுக்கு சகோதரர்கள்மேல் ரொம்ப அன்பு இருந்தது. அவர்களுக்காக ராத்திரி பகலாக உழைத்தார். (அப். 20:31) சகோதர சகோதரிகளும் அவர்மேல் ரொம்பப் பாசம் வைத்திருந்தார்கள். ஒருசமயம், பவுலை இனிமேல் பார்க்க முடியாது என்று எபேசுவில் இருந்த மூப்பர்களுக்குத் தெரிந்தபோது ‘அவர்கள் எல்லாரும் கதறி அழுதார்கள்.’ (அப். 20:38) கடினமாக உழைக்கிற நம்முடைய மூப்பர்களும் நம்மேல் உயிரையே வைத்திருக்கிறார்கள். நமக்கு உதவுவதற்காக தங்களால் முடிந்ததையெல்லாம் செய்கிறார்கள். (பிலி. 2:16, 17) ஆனால், அவர்களுக்கும் சில சவால்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் சமாளிப்பதற்கு எது அவர்களுக்கு உதவும்?

2 கடினமாக உழைக்கிற மூப்பர்கள் பவுலின் உதாரணத்தை யோசித்துப்பார்க்கலாம். (1 கொ. 11:1) பவுல் நம்மைப் போலவே பாவ இயல்புள்ள ஒரு சாதாரண ஆள்தான். சரியானதைச் செய்வது சிலசமயங்களில் அவருக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. (ரோ. 7:18-20) அதுமட்டுமல்ல, நிறைய பிரச்சினைகளை அவர் சமாளிக்க வேண்டியிருந்தது. ஆனாலும், அவர் சோர்ந்துபோய் அப்படியே உட்கார்ந்துவிடவில்லை, சந்தோஷத்தையும் இழக்கவில்லை. அவரைப் போல நடந்துகொண்டால் மூப்பர்களாலும் சவால்களைச் சமாளிக்க முடியும். தொடர்ந்து யெகோவாவுக்கு சந்தோஷமாக சேவை செய்யவும் முடியும். எப்படியென்று பார்க்கலாம்.

3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம், வேறு என்ன கேள்விகளுக்கும் பதில் தெரிந்துகொள்வோம்?

3 பொதுவாக மூப்பர்களுக்கு வருகிற நான்கு சவால்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். (1) மற்ற பொறுப்புகளோடு சேர்த்து ஊழியத்துக்கும் நேரத்தை ஒதுக்குவது, (2) சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்த நேரம் ஒதுக்குவது, (3) தங்களுக்கு இருக்கிற பலவீனங்களை நினைத்து சோர்ந்துபோகாமல் இருப்பது, (4) மற்றவர்களுடைய பலவீனங்களைப் பொறுத்துக்கொள்வது. இந்தச் சவால்கள் ஒவ்வொன்றையும் பவுல் எப்படி சமாளித்தார்? அவரைப் போலவே இன்றைக்கு மூப்பர்கள் எப்படி நடந்துகொள்ளலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதிலை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

மற்ற பொறுப்புகளோடு சேர்த்து ஊழியத்துக்கும் நேரம் ஒதுக்குவது

4. சிலசமயங்களில் ஊழியம் செய்வதற்கு நேரம் ஒதுக்குவது மூப்பர்களுக்கு ஏன் சவாலாக இருக்கலாம்?

4 இது ஏன் ஒரு சவாலாக இருக்கலாம்? ஊழியம் செய்வது மட்டுமல்லாமல் இன்னும் நிறைய பொறுப்புகளும் மூப்பர்களுக்கு இருக்கின்றன. அவர்கள் வார நாட்களில் நடக்கிற கூட்டங்களில் சேர்மனாக இருக்க வேண்டியிருக்கிறது. அல்லது, சபை பைபிள் படிப்பை நடத்த வேண்டியிருக்கிறது. மற்ற பேச்சுகளையும் கொடுக்க வேண்டியிருக்கலாம். அதுமட்டுமல்ல, உதவி ஊழியர்களுக்கு அவர்கள் நிறைய பயிற்சி கொடுக்கிறார்கள்; சகோதர சகோதரிகளை எப்போதும் உற்சாகப்படுத்துகிறார்கள். (1 பே. 5:2) மூப்பர்கள் சிலர், ராஜ்ய மன்றங்களையும் வணக்கத்துக்காகப் பயன்படுத்துகிற மற்ற கட்டிடங்களையும் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் உதவி செய்கிறார்கள். இவ்வளவு வேலைகள் இருந்தாலும் சபையில் இருக்கிற மற்ற எல்லாரையும் போல முக்கியமாக ஊழிய வேலையையும் அவர்கள் செய்ய வேண்டும்.—மத். 28:19, 20.

5. ஊழியம் செய்யும் விஷயத்தில் பவுல் எப்படி ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருந்தார்?

5 பவுலின் உதாரணம். ஊழிய வேலையை அவர் வெற்றிகரமாகச் செய்தார். அதற்கான காரணத்தை பிலிப்பியர் 1:10-லிருந்து தெரிந்துகொள்ள முடியும். “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று அந்த வசனம் சொல்கிறது. அதைத்தான் பவுல் செய்தார். அவருக்குக் கிடைத்த ஊழிய வேலையைப் பல வருஷங்களாக செய்தார். அதை மிக முக்கியமான வேலையாக அவர் நினைத்தார். “பொது இடங்களிலும் வீடு வீடாகவும்” அவர் பிரசங்கித்தார். (அப். 20:20) வாரத்தில் ஒரு நாள் மட்டுமோ ஒரு நாளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மட்டுமோ அவர் ஊழியம் செய்யவில்லை. வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் நல்ல செய்தியைச் சொன்னார். உதாரணத்துக்கு, அத்தேனே நகரத்தில் தன்னுடைய நண்பர்களுக்காக அவர் காத்துக்கொண்டிருந்தபோது சமுதாயத்தில் பிரபலமாக இருந்த சிலரிடம் நல்ல செய்தியைச் சொன்னார். அதனால் நல்ல பலன்களும் கிடைத்தன. (அப். 17:16, 17, 34) “கைதியாக” இருந்தபோதுகூட மற்றவர்களுக்கு நல்ல செய்தியைச் சொன்னார்.—பிலி. 1:13, 14; அப். 28:16-24.

6. மற்றவர்களுக்கு பவுல் என்ன விஷயங்களையெல்லாம் கற்றுக்கொடுத்தார்?

6 பவுல் தன்னுடைய நேரத்தை நல்ல விதத்தில் பயன்படுத்தினார். தன்னோடு சேர்ந்து ஊழியம் செய்ய மற்றவர்களையும் அவர் அடிக்கடி கூப்பிட்டார். உதாரணத்துக்கு, முதல் மிஷனரி பயணம் செய்தபோது, மாற்கு என்ற யோவானையும் இரண்டாவது மிஷனரி பயணம் செய்தபோது, தீமோத்தேயுவையும் கூட்டிக்கொண்டு போனார். (அப். 12:25; 16:1-4) அவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார். சபையை எப்படி ஒழுங்கமைப்பது, சகோதர சகோதரிகளை எப்படிக் கவனித்துக்கொள்வது, எப்படித் திறமையாக போதிப்பது என்பதையெல்லாம் கற்றுக்கொடுக்க தன்னால் முடிந்ததையெல்லாம் அவர் செய்தார்.—1 கொ. 4:17.

பவுலைப் போல் நல்ல செய்தியைச் சொல்ல எப்போதும் தயாராக இருங்கள் (பாரா 7) *

7. எபேசியர் 6:14, 15-ல் பவுல் சொன்னபடி மூப்பர்கள் எப்படி நடந்துகொள்ளலாம்?

7 பாடம். பவுலைப் போல் மூப்பர்களும் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வது மட்டுமல்லாமல் கிடைக்கிற எல்லா சந்தர்ப்பங்களிலும் நல்ல செய்தியைச் சொல்லத் தயாராக இருக்க வேண்டும். (எபேசியர் 6:14, 15-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, பொருள் வாங்க கடைக்குப் போகிறபோதும் வேலை செய்கிற இடத்திலும் மற்றவர்களிடம் நல்ல செய்தியைச் சொல்லலாம். ராஜ்ய மன்றத்தைக் கட்டும் வேலைக்கு உதவும்போது அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்களிடம் அல்லது பொருள்களை விற்கிறவர்களிடம் பைபிள் விஷயங்களைப் பேசலாம். பவுலைப் போலவே மூப்பர்கள் உதவி ஊழியர்களோடும் மற்றவர்களோடும் சேர்ந்து ஊழியம் செய்யும்போது அவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்கலாம்.

8. சிலசமயங்களில் ஒரு மூப்பர் என்ன செய்ய வேண்டியிருக்கலாம்?

8 ஊழியம் செய்ய நேரம் இல்லாத அளவுக்கு சபை வேலைகளிலோ வட்டார வேலைகளிலோ மூப்பர்கள் மூழ்கிவிடக் கூடாது. எல்லா விஷயங்களையும் செய்வதற்கு அவர்களுக்கு நேரம் வேண்டுமென்றால் சிலசமயங்களில் கூடுதலாக வருகிற பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க வேண்டும். அப்படி ஏதாவது பொறுப்புகள் வந்ததென்றால் அதைப் பற்றி ஜெபம் செய்து நன்றாக யோசித்துப்பார்க்க வேண்டும். ஒருவேளை அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் மிக முக்கியமான வேலைகளை அவர்களால் செய்ய முடியாமல் போய்விடும் என்பதை அப்போது அவர்கள் புரிந்துகொள்வார்கள். உதாரணத்துக்கு, வாரா வாரம் குடும்ப வழிபாடு நடத்துவது, ஆர்வமாக ஊழியம் செய்வது, ஊழியம் செய்ய பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பது போன்ற முக்கியமான விஷயங்களைச் செய்ய முடியாமல் போய்விடும் என்பதைப் புரிந்துகொள்வார்கள். கூடுதலாகப் பொறுப்புகள் வரும்போது அதை வேண்டாம் என்று சொல்வது சிலருக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், ஏற்கெனவே இருக்கிற பொறுப்புகளை நன்றாகச் செய்வதற்கு அவர்கள் ஆசைப்படுவதை யெகோவா புரிந்துகொள்வார் என்று அவர்கள் உறுதியாக நம்பலாம்.

சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்த நேரம் ஒதுக்குவது

9. மூப்பர்களுக்கு நிறைய வேலை இருப்பதால் எதைச் செய்வது அவர்களுக்குச் சவாலாக இருக்கலாம்?

9 இது ஏன் ஒரு சவாலாக இருக்கலாம்? யெகோவாவின் மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. இந்தக் கடைசி நாட்களில் நம் எல்லாருக்குமே உற்சாகமும் உதவியும் ஆறுதலும் தேவைப்படுகிறது. சிலசமயங்களில், மோசமான ஒரு பழக்கத்தை விட்டுவிட சிலருக்கு உதவி தேவைப்படுகிறது. (1 தெ. 5:14) யெகோவாவின் மக்களுக்கு வருகிற எல்லா பிரச்சினைகளையும் மூப்பர்களால் தீர்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனாலும், தன்னுடைய மக்களை உற்சாகப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் மூப்பர்கள் தங்களால் முடிந்ததையெல்லாம் செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். மூப்பர்களுக்கு ஏகப்பட்ட வேலை இருந்தாலும் சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வதற்காக அவர்கள் எப்படி நேரம் ஒதுக்கலாம்?

மற்றவர்களைப் பாராட்டுங்கள், உற்சாகப்படுத்துங்கள் (பாராக்கள் 10, 12) *

10. யெகோவாவின் மக்களை பவுல் எப்படிக் கவனித்துக்கொண்டதாக 1 தெசலோனிக்கேயர் 2:7 சொல்கிறது?

10 பவுலின் உதாரணம். பவுல் எப்போதுமே சகோதரர்களைப் பாராட்டினார். அவர்களை உற்சாகப்படுத்தினார். அவரைப் போலவே மூப்பர்களும் சபையில் இருக்கிறவர்களிடம் அன்பாகவும் கனிவாகவும் நடந்துகொள்ள வேண்டும். (1 தெசலோனிக்கேயர் 2:7-ஐ வாசியுங்கள்.) சகோதர சகோதரிகள்மேல் தனக்கும் சரி, யெகோவாவுக்கும் சரி, ரொம்ப அன்பு இருப்பதாக பவுல் சொன்னார். (2 கொ. 2:4; எபே. 2:4, 5) அவர் சகோதர சகோதரிகளை நண்பர்களாகப் பார்த்தார். அவர்களோடு நேரம் செலவு செய்தார். அவர்கள்மேல் நம்பிக்கை வைத்திருந்தார். அதனால், தன்னுடைய கவலைகளையும் பலவீனங்களையும் பற்றி அவர்களிடம் சொன்னார். (2 கொ. 7:5; 1 தீ. 1:15) இருந்தாலும், தன்னுடைய பிரச்சினைகளைப் பெரிதுபடுத்திக் காட்ட வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருக்கவில்லை. அதற்குப் பதிலாக, சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வதுதான் அவருடைய நோக்கமாக இருந்தது.

11. சகோதர சகோதரிகளுக்கு பவுல் ஏன் ஆலோசனை கொடுத்தார்?

11 சிலசமயங்களில், சகோதர சகோதரிகளுக்கு பவுல் ஆலோசனை கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், அவர்கள் செய்ததை நினைத்து வெறுத்துப்போய் அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கவில்லை. அவர்கள்மேல் அன்பு இருந்ததாலும், எந்தக் கெடுதலும் வந்துவிடாமல் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆசையினாலும் ஆலோசனை கொடுத்தார். அதுமட்டுமல்ல, அவர்கள் சுலபமாகப் புரிந்துகொள்கிற விதமாகவும் ஏற்றுக்கொள்கிற விதமாகவும் அவர் ஆலோசனை கொடுத்தார். உதாரணத்துக்கு, கொரிந்தியர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர்களுக்குக் கடுமையான ஆலோசனை கொடுத்திருந்தார். அந்தக் கடிதத்தை எழுதிய பிறகு, தீத்துவை அவர்களிடம் அனுப்பினார். அந்தக் கடிதம் மூலமாகக் கொடுத்த ஆலோசனையை அவர்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்று தெரிந்துகொள்ள அவர் ஆசைப்பட்டார். அதை அவர்கள் நல்ல விதமாக ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்தார்கள் என்று தெரிந்தபோது அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார்.—2 கொ. 7:6, 7.

12. சகோதர சகோதரிகளைப் பலப்படுத்த மூப்பர்கள் என்ன செய்யலாம்?

12 பாடம். சகோதர சகோதரிகளோடு நேரம் செலவு செய்வதன் மூலமாக மூப்பர்கள் பவுலைப் போல நடந்துகொள்ளலாம். இதைச் செய்வதற்காக, சபைக் கூட்டங்களுக்கு சீக்கிரமாகவே வந்து எல்லாரிடமும் உற்சாகமாகப் பேசலாம். சகோதர சகோதரிகளிடம் சில நிமிஷங்கள் பேசினாலே அது அவர்களுக்கு உற்சாகமாக இருக்கும். (ரோ. 1:12; எபே. 5:16) பவுலைப் போலவே நடந்துகொள்ளும் ஒரு மூப்பர், கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்தி சகோதர சகோதரிகளைப் பலப்படுத்துவார். கடவுளுக்கு அவர்கள்மேல் அன்பு இருக்கிறது என்பதை அவர்களுடைய மனதில் பதிய வைப்பார். தனக்கும் அவர்கள்மேல் அன்பு இருக்கிறது என்பதைக் காட்டுவார். அவர்களிடம் அடிக்கடி பேசுவார். அவர்கள் செய்வதையெல்லாம் நன்றாகக் கவனித்து அவர்களைப் பாராட்டுவார். அவர்களுக்கு ஆலோசனை கொடுக்க வேண்டியிருந்தால், கடவுளுடைய வார்த்தையிலிருந்து அதைக் கொடுப்பார். அவர்களுக்கு என்ன ஆலோசனை தேவைப்படுகிறதோ அதைக் குறிப்பாகச் சொல்வார். அதேசமயத்தில், அதை அன்பாகவும் சொல்வார். ஏனென்றால், அவர்கள் அந்த ஆலோசனையைக் கேட்டு நடக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை.—கலா. 6:1.

தங்களுடைய பலவீனங்களை நினைத்து சோர்ந்துபோகாமல் இருப்பது

13. ஒரு மூப்பர் தன்னுடைய பலவீனங்களைப் பற்றி எப்படியெல்லாம் நினைக்க வாய்ப்பிருக்கிறது?

13 இது ஏன் ஒரு சவாலாக இருக்கலாம்? எல்லாரையும் போல் மூப்பர்களும் தப்பு செய்கிறவர்கள்தான். (ரோ. 3:23) அதனால், தங்களுக்கு இருக்கிற பலவீனங்களைப் பற்றிச் சரியான மனநிலையோடு இருப்பது அவர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். சிலர் தங்களுடைய பலவீனங்களைப் பற்றியே ரொம்ப யோசித்து சோர்ந்துபோய்விடுவார்கள். ஆனால், வேறுசிலர் அதெல்லாம் தப்பு என்றே நினைக்க மாட்டார்கள். தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் நினைக்க மாட்டார்கள்.

14. பிலிப்பியர் 4:13 சொல்கிறபடி, தன்னுடைய பலவீனங்களைச் சமாளிக்க பவுலுக்கு மனத்தாழ்மை எப்படி உதவி செய்தது?

14 பவுலின் உதாரணம். பவுலுக்கு மனத்தாழ்மை இருந்ததால், தன்னுடைய சொந்த முயற்சியால் தன்னுடைய பலவீனங்களைச் சமாளிக்க முடியாது என்று புரிந்துகொண்டார். அதைச் சமாளிப்பதற்குக் கடவுள் கொடுக்கிற பலம் அவருக்குத் தேவைப்பட்டது. ஒருகாலத்தில் அவர் திமிர் பிடித்தவராக இருந்தார். கிறிஸ்தவர்களைப் பயங்கரமாக துன்புறுத்தினார். அதற்குப் பிறகு, தான் செய்ததெல்லாம் தப்பு என்பதைப் புரிந்துகொண்டு தன்னுடைய எண்ணத்தையும் சுபாவத்தையும் மாற்றிக்கொண்டார். (1 தீ. 1:12-16) யெகோவாவின் உதவியால் அவர் அன்பான மூப்பராக ஆனார். கரிசனையும் மனத்தாழ்மையும் காட்டினார். தன்னிடம் நிறைய குறைகள் இருந்தாலும் அவற்றைப் பற்றியே அவர் யோசித்துக்கொண்டிருக்கவில்லை. யெகோவா தன்னை மன்னிப்பார் என்று உறுதியாக நம்பினார். (ரோ. 7:21-25) கிறிஸ்தவ குணங்களை நூறு சதவீதம் அப்படியே காட்ட வேண்டும் என்று நினைப்பதற்குப் பதிலாக அந்தக் குணங்களை வளர்த்துக்கொள்வதற்குக் கடினமாக முயற்சி செய்தார். ஊழிய வேலையை முழுமையாகச் செய்து முடிப்பதற்கு மனத்தாழ்மையாக யெகோவாவையே நம்பியிருந்தார்.—1 கொ. 9:27; பிலிப்பியர் 4:13-ஐ வாசியுங்கள்.

உங்களுடைய பலவீனங்களைச் சமாளிக்க கடினமாக முயற்சி செய்யுங்கள் (பாராக்கள் 14-15) *

15. மூப்பர்கள் தங்களுடைய பலவீனங்களைப் பற்றிச் சரியான மனநிலையோடு இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

15 பாடம். மூப்பர்கள் எந்தத் தவறும் செய்யாதவர்கள் என்பதால் அந்தப் பொறுப்பில் யெகோவா அவர்களை நியமிக்கவில்லை. ஆனால், அவர்கள் தங்களுடைய தவறுகளை ஒத்துக்கொள்ள வேண்டும், நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். (எபே. 4:23, 24) ஒரு மூப்பர் பைபிள் படிக்கும்போது, எந்த விஷயத்தில் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று யோசித்துப்பார்த்து அந்த மாற்றத்தைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது சந்தோஷமாக இருப்பதற்கும், ஒரு நல்ல மூப்பராக இருப்பதற்கும், யெகோவா அவருக்கு உதவி செய்வார்.—யாக். 1:25.

மற்றவர்களுடைய பலவீனங்களைப் பொறுத்துக்கொள்வது

16. மூப்பர்கள் மற்றவர்களுடைய குறைகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் என்ன நடக்க வாய்ப்பிருக்கிறது?

16 இது ஏன் ஒரு சவாலாக இருக்கலாம்? சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளோடு நிறைய நேரம் செலவு செய்வதால் அவர்களிடம் என்னென்ன குறைகள் இருக்கின்றன என்று மூப்பர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கலாம். ஆனால், மூப்பர்கள் கவனமாக இல்லையென்றால் சகோதர சகோதரிகள்மேல் எரிச்சலடைந்து கடுகடுவென பேசுவதற்கும் அவர்களிடம் குறை கண்டுபிடிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. மூப்பர்கள் அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் சாத்தான் ஆசைப்படுகிறான். அதனால், கவனமாக இருக்க வேண்டும் என்று கிறிஸ்தவர்களை பவுல் எச்சரித்தார்.—2 கொ. 2:10, 11.

17. சகோதர சகோதரிகளைப் பற்றி பவுல் எப்படி யோசித்துப்பார்த்தார்?

17 பவுலின் உதாரணம். சகோதர சகோதரிகளைப் பற்றி அவர் எப்போதுமே நல்ல விதமாகத்தான் யோசித்தார். அவர்கள் செய்த தவறெல்லாம் அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஏனென்றால், சிலசமயங்களில் அவருடைய மனதைக் காயப்படுத்துகிற விதமாக அவர்கள் நடந்திருக்கிறார்கள். இருந்தாலும், ஒருவர் ஒரு தப்பு செய்துவிட்டால் உடனே அவரை மோசமானவர் என்று முத்திரை குத்த முடியாது என்று பவுலுக்குத் தெரியும். சகோதரர்கள்மேல் அவருக்கு அன்பு இருந்ததால், அவர்களிடம் இருக்கிற நல்ல குணங்களைப் பார்த்தார். சரியானதைச் செய்ய அவர்கள் கஷ்டப்படுகிறபோது, ‘அவங்க நல்லது செய்யத்தான் ஆசைப்படறாங்க. கொஞ்சம் உதவி செஞ்சா அவங்களால அத செய்ய முடியும்’ என்று அவர் யோசித்துப்பார்த்தார்.

18. எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் பவுல் உதவி செய்ததிலிருந்து நீங்கள் என்ன தெரிந்துகொண்டீர்கள்? (பிலிப்பியர் 4:1-3)

18 பிலிப்பி சபையிலிருந்த இரண்டு சகோதரிகளுக்கு பவுல் எப்படி உதவி செய்தார் என்று பாருங்கள். (பிலிப்பியர் 4:1-3-ஐ வாசியுங்கள்.) எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் இடையில் மனஸ்தாபம் வந்ததால் அவர்களுடைய நட்பில் விரிசல் விழுந்துவிட்டது. அவர்களிடம் பவுல் கடுகடுப்பாகவும் குறை கண்டுபிடிக்கிற விதமாகவும் பேசவில்லை. அதற்குப் பதிலாக அவர்களிடமிருந்த நல்ல குணங்களைப் பார்த்தார். உண்மையுள்ள அந்தச் சகோதரிகள் நிறைய வருஷங்களாக யெகோவாவுக்குச் சேவை செய்திருக்கிறார்கள். அதனால், யெகோவாவுக்கு அவர்களை ரொம்பப் பிடிக்கும் என்று பவுலுக்குத் தெரியும். அவர்களைப் பற்றி பவுலுக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததால் ஒருவருக்கொருவர் சமாதானமாவதற்கு அவர்களை உற்சாகப்படுத்தினார். இப்படி, மற்றவர்களிடம் இருக்கிற நல்ல குணங்களைப் பார்த்ததால் எப்போதும் சந்தோஷமாக இருக்கவும் சபையில் இருக்கிற எல்லாரிடமும் நல்ல நட்பு வைத்துக்கொள்ளவும் அவரால் முடிந்தது.

மற்றவர்களிடம் குறை கண்டுபிடிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள் (பாரா 19) *

19. (அ) சகோதர சகோதரிகளைப் பற்றி நல்ல எண்ணத்தை வளர்த்துக்கொள்வதற்கு மூப்பர்கள் என்ன செய்யலாம்? (ஆ) ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்யும் சகோதரருடைய படத்திலிருந்து நீங்கள் என்ன தெரிந்துகொண்டீர்கள்?

19 பாடம். மூப்பர்களே, சகோதர சகோதரிகளிடம் இருக்கிற நல்ல குணங்களைப் பாருங்கள். எல்லாருமே தப்பு செய்கிறவர்களாக இருந்தாலும் ஒவ்வொருவரிடமும் நமக்குப் பிடித்த நல்ல குணங்கள் இருக்கின்றன. (பிலி. 2:3) ஒரு சகோதரருக்கோ சகோதரிக்கோ அவ்வப்போது மூப்பர்கள் ஆலோசனை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது உண்மைதான். ஆனாலும், யாராவது எரிச்சல்படுத்துகிற மாதிரி பேசினாலோ நடந்துகொண்டாலோ மூப்பர்கள் பவுலைப் போல் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பதற்குக் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். யெகோவாமேல் அவர்கள் வைத்திருக்கிற அன்பு... பல காலமாக அவருக்குச் செய்துகொண்டிருக்கிற சேவை... நல்லது செய்ய அவர்களுக்கு இருக்கிற திறமை... இதையெல்லாம் மூப்பர்கள் யோசித்துப்பார்ப்பது நல்லது. இப்படி, மற்றவர்களிடம் இருக்கிற நல்ல குணங்களை மூப்பர்கள் பார்த்தார்கள் என்றால் சபையில் எப்போதும் அன்பான சூழல் இருக்கும்.

தொடர்ந்து பவுலைப் போல நடந்துகொள்ளுங்கள்

20. பவுலின் உதாரணத்திலிருந்து தொடர்ந்து பிரயோஜனம் அடைய மூப்பர்கள் என்ன செய்யலாம்?

20 மூப்பர்களே, பவுலின் உதாரணத்தைப் பற்றித் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து படிப்பது உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும். உதாரணத்துக்கு, சாட்சி கொடுங்கள் புத்தகத்திலிருந்தும் “வேதாகமம் முழுவதும்” புத்தகத்திலிருந்தும் காவற்கோபுர பத்திரிகைகளிலிருந்தும் கீழே கொடுக்கப்பட்டிருக்கிற கட்டுரைகளைப் பாருங்கள். அந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ஒரு மூப்பரா என்னோட பொறுப்புகள சந்தோஷமா செய்றதுக்கு பவுலோட உதாரணம் எனக்கு எப்படி உதவும்?’—bt பக். 98-99 பாரா. 17-19; bt பக். 166-167 பாரா. 6, 7; si பக். 217 பாரா 19; si பக். 242 பாரா. 8-9; w97 8/1 பக். 17-18 பாரா. 14-16; w87 12/1 பக். 22 பாரா. 13-16; w87 4/1 பக். 16 பாரா 2.

21. மூப்பர்கள் எந்த விஷயத்தில் உறுதியாக இருக்கலாம்?

21 மூப்பர்களே, நீங்கள் எல்லா விஷயத்தையும் நூறு சதவீதம் சரியாகச் செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்ப்பதில்லை. நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்றுதான் அவர் எதிர்பார்க்கிறார். (1 கொ. 4:2) பவுல் கடினமாக உழைத்ததையும் உண்மையாக இருந்ததையும் பார்த்து யெகோவா சந்தோஷப்பட்டார். நீங்கள் செய்கிற சேவையையும் பார்த்து அவர் சந்தோஷப்படுவார் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். “பரிசுத்தவான்களுக்காக நீங்கள் சேவை செய்திருக்கிறீர்கள், சேவை செய்தும் வருகிறீர்கள்; அதனால், உங்களுடைய உழைப்பையும் தன்னுடைய பெயருக்காக நீங்கள் காட்டிய அன்பையும்” யெகோவா ஒருநாளும் மறக்க மாட்டார்.—எபி. 6:10.

பாட்டு 87 வாருங்கள், புத்துணர்ச்சி பெறுங்கள்

^ பாரா. 5 நம்மை அன்பாக... அக்கறையாக... பார்த்துக்கொள்கிற மூப்பர்கள் நமக்குக் கிடைத்த பெரிய ஆசீர்வாதம். நமக்காகக் கடினமாக உழைக்கிற அந்த மூப்பர்களுக்கு நாம் எப்போதும் நன்றியோடு இருக்க வேண்டும். மூப்பர்களுக்குப் பொதுவாக வருகிற நான்கு சவால்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் நாம் பார்ப்போம். அந்தச் சவால்களைச் சமாளிப்பதற்கு அப்போஸ்தலன் பவுலின் உதாரணம் அவர்களுக்கு எப்படி உதவும் என்றும் பார்ப்போம். மூப்பர்களுடைய இடத்தில் நம்மை வைத்துப்பார்ப்பதற்கும், அவர்களுக்கு அன்பையும் ஆதரவையும் காட்டுவதற்கும் இந்தக் கட்டுரை உதவும்.

^ பாரா. 61 படவிளக்கம்: ஒரு சகோதரர் வேலை முடிந்து கிளம்பும்போது தன்னோடு வேலை செய்பவரிடம் நல்ல செய்தியைச் சொல்கிறார்.

^ பாரா. 63 படவிளக்கம்: மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி இருக்கிற ஒரு சகோதரரிடம், ஒரு மூப்பர் போய் அன்பாகப் பேசுகிறார்.

^ பாரா. 65 படவிளக்கம்: ஏதோவொரு விஷயத்துக்காகக் கோபமாக இருக்கிற ஒரு சகோதரருக்கு இன்னொரு சகோதரர் அன்பாக ஆலோசனை கொடுக்கிறார்.

^ பாரா. 67 படவிளக்கம்: ஒரு சகோதரர் சுத்தம் செய்துகொண்டிருக்கிறபோது ஃபோனைப் பார்த்துக்கொண்டு இருந்ததற்காக ஒரு மூப்பர் அவரைக் குறை சொல்லவில்லை.