Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கவலைகளை வெற்றிகரமாக சமாளிப்பது எப்படி?

கவலைகளை வெற்றிகரமாக சமாளிப்பது எப்படி?

கவலை நம்முடைய இதயத்தைப் பாராங்கல் போல அழுத்தலாம். (நீதி. 12:25) அப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கு இருந்திருக்கிறதா? “இதுக்குமேல என்னால தாங்கிக்கவே முடியாது” என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நீங்கள் மட்டுமல்ல, நிறைய பேர் அப்படித்தான் நினைக்கிறார்கள். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை, உங்கள் குடும்பத்தில் யாராவது படுத்த படுக்கையாக ஆகியிருக்கலாம், அவரை நீங்கள் கவனிக்க வேண்டியிருக்கலாம். உங்களுடைய அன்பானவர்கள் யாராவது இறந்துபோயிருக்கலாம். இல்லையென்றால், இயற்கைப் பேரழிவால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். இப்படிப்பட்ட சமயங்களில் என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாமல் நீங்கள் குழம்பிப் போய்விடலாம். உடம்பில் தெம்பே இல்லாததுபோல் உணரலாம். ஆனால், கவலையை வெற்றிகரமாக சமாளிப்பதற்கு எது நமக்கு உதவும்? *

தாவீது ராஜாவின் உதாரணத்தை யோசித்துப்பார்த்தோம் என்றால் கவலைகளை எப்படிச் சமாளிக்கலாம் என நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அவருக்கு வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் வந்தன. சிலசமயங்களில், சாவின் விளிம்புக்கே அவர் போயிருக்கிறார். (1 சா. 17:34, 35; 18:10, 11) ஆனாலும், கவலைகளை அவர் எப்படி வெற்றிகரமாகச் சமாளித்தார்? அவரைப் போலவே, கவலைகளை நாமும் எப்படிச் சமாளிக்கலாம்?

தாவீது கவலைகளை வெற்றிகரமாகச் சமாளித்தார்

தாவீதுக்கு ஒரேசமயத்தில் நிறைய பிரச்சினைகள் வந்தன. அவரைக் கொலை செய்ய சவுல் தேடிக்கொண்டிருந்த அதேசமயத்தில் வேறொரு சம்பவமும் நடந்தது. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம். ஒரு தடவை, தாவீதும் அவருடைய ஆட்களும் போர் செய்துவிட்டு சிக்லாகுவுக்குத் திரும்பி வந்தபோது அவர்களுடைய மனைவி, பிள்ளைகள் யாரையும் காணவில்லை. எதிரிகள் அவர்களைப் பிடித்துக்கொண்டு போயிருந்தார்கள், அவர்களுடைய வீடுகளைத் தீ வைத்துக் கொளுத்தி, அவர்களுக்கு சொந்தமான பொருள்களை எல்லாம் திருடிக்கொண்டு போயிருந்தார்கள். இதைப் பார்த்த தாவீதுக்கு எப்படி இருந்தது? “தாவீதும் அவருடைய ஆட்களும் சத்தமாக அழுதார்கள். அழுவதற்குச் சக்தியே இல்லாமல் போகும்வரை அழுதார்கள்.” இந்தப் பிரச்சினை போதாதென்று அவர் நம்பிய ஆட்களே அவர்மேல் “கல்லெறிய வேண்டுமென்று பேசிக்கொண்டார்கள்.” (1 சா. 30:1-6) ஒரேசமயத்தில் மூன்று பெரிய பிரச்சினைகளை தாவீது சந்திக்க வேண்டியிருந்தது. அவருடைய குடும்பத்தாரின் உயிர் ஆபத்தில் இருந்தது. தன்னுடைய ஆட்களே தன்னைக் கொன்றுவிடுவார்களோ என்ற பயம் இருந்தது. அதோடு, சவுல் ராஜாவும் அவரைக் கொல்ல துரத்திக்கொண்டிருந்தார். இதனால், தாவீதுக்கு எவ்வளவு கவலையாக இருந்திருக்கும், இல்லையா?

தாவீது அடுத்து என்ன செய்தார்? அவர் உடனே “தன்னுடைய கடவுளாகிய யெகோவாவின் உதவியால் பலம் பெற்றார்.” அவருக்கு அந்தப் பலம் எப்படிக் கிடைத்தது? தாவீது வழக்கம் போல உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தார். முன்பு, அவருக்கு யெகோவா எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்பதைப் பற்றி யோசித்துப்பார்த்தார். (1 சா. 17:37; சங். 18:2, 6) அதோடு, யெகோவாவிடம் ஆலோசனை கேட்பதுதான் சரியாக இருக்கும் என்பதை தாவீது புரிந்துகொண்டார். அதனால், என்ன செய்ய வேண்டும் என்று யெகோவாவிடம் விசாரித்தார். யெகோவா என்ன சொன்னாரோ அதை உடனே செய்தார். அதனால், தாவீதையும் அவருடைய ஆட்களையும் யெகோவா ஆசீர்வதித்தார். அவர்களுடைய குடும்பத்தையும் அவர்களுக்கு சொந்தமான பொருள்களையும் அவர்களால் மீட்க முடிந்தது. (1 சா. 30:7-9, 18, 19) தாவீது என்ன மூன்று விஷயங்களைச் செய்தார் என்று கவனித்தீர்களா? அவர் உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தார். முன்பு அவருக்கு யெகோவா எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்பதைப் பற்றி யோசித்துப்பார்த்தார். யெகோவா சொன்னபடி அப்படியே செய்தார். நாம் எப்படி தாவீதைப் போலவே நடந்துகொள்ளலாம்? மூன்று வழிகளை இப்போது பார்க்கலாம்.

கவலை வாட்டும்போது தாவீதைப் போல் நடந்துகொள்ளுங்கள்

1. ஜெபம் செய்யுங்கள். மனதுக்குள் நமக்கு எப்போது கவலை வந்தாலும் சரி, ஞானத்தையும் உதவியையும் கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம். நம் மனதுக்குள் இருக்கிற கவலைகளை எல்லாம் யெகோவாவிடம் ஜெபத்தில் கொட்டும்போது, நம்முடைய பாரமெல்லாம் குறைந்த மாதிரி இருக்கும். ஒருவேளை, வாய்விட்டு நம்மால் ஜெபம் செய்ய முடியவில்லை என்றால் மனதுக்குள் சுருக்கமாக ஜெபம் செய்யலாம். ஒவ்வொரு தடவை நாம் ஜெபம் செய்யும்போதும் தாவீதைப் போல் யெகோவாமேல் முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். “யெகோவாதான் என்னுடைய மாபெரும் கற்பாறை, என் கோட்டை, என்னைக் காப்பாற்றுபவர். என் கடவுள்தான் நான் தஞ்சம் தேடும் கற்பாறை” என்று தாவீது சொன்னார். (சங். 18:2) ஜெபம் செய்வதால் உண்மையிலேயே நமக்குப் பிரயோஜனம் இருக்கிறதா? காலியா என்ற பயனியர் சகோதரி என்ன சொல்கிறார் என்றால், “ஜெபம் செஞ்ச பிறகு மனசுக்கு நிம்மதி கிடைக்குது. யெகோவா மாதிரியே யோசிக்க என்னால முடியுது, அவர்மேல இருக்குற நம்பிக்கையும் அதிகமாகுது” என்று சொல்கிறார். உண்மையிலேயே, ஜெபம் நம்முடைய கவலையைச் சமாளிப்பதற்கு யெகோவா செய்திருக்கிற பெரிய உதவி என்றே சொல்லலாம்.

2. இதுவரைக்கும் யெகோவா செய்திருக்கிற உதவியை யோசித்துப்பாருங்கள். ‘யெகோவாவின் உதவி இல்லாமல் இதை என்னால் சமாளித்திருக்கவே முடியாது’ என்பதைப் போன்ற சூழ்நிலைகள் சில சமயங்களில் உங்களுடைய வாழ்க்கையில் வந்திருக்கும். உங்களுக்கு யெகோவா எப்படி உதவி செய்திருக்கிறார்... பைபிள் காலங்களில் வாழ்ந்த அவருடைய ஊழியர்களுக்கு எப்படி உதவி செய்திருக்கிறார்... என்றெல்லாம் யோசித்துப்பார்த்தால், உங்களுக்குப் புதுத்தெம்பு கிடைக்கும், அவர்மேல் இருக்கிற நம்பிக்கையும் இன்னும் அதிகமாகும். (சங். 18:17-19) ஜோஷுவா என்ற ஒரு மூப்பர் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்: “என்னோட ஜெபங்களுக்கு யெகோவா எப்படி பதில் கொடுத்திருக்குறார்னு கேட்டா, என்கிட்ட ஒரு பெரிய பட்டியலே இருக்கு. குறிப்பா நான் செஞ்ச ஜெபத்துக்கு யெகோவா எப்படி பதில் கொடுத்திருக்குறார்னு யோசிச்சுப் பாக்க இது எனக்கு உதவியா இருக்கு.” இதுவரைக்கும் யெகோவா நம் வாழ்க்கையில் செய்ததையெல்லாம் யோசித்துப்பார்க்கும்போது, கவலைகளை விரட்டியடிக்க புதுத்தெம்பு கிடைக்கும்.

3. யெகோவா சொல்வதை அப்படியே செய்யுங்கள். ஒரு சூழ்நிலையில் என்ன செய்வது என்று தீர்மானம் எடுப்பதற்குமுன், நல்ல ஆலோசனை கிடைப்பதற்காக கடவுளுடைய வார்த்தையை ஆராய்ச்சி செய்யுங்கள். (சங். 19:7, 11) ஒரு வசனத்தை ஆராய்ச்சி செய்து படிக்கும்போது அதை வாழ்க்கையில் எப்படிப் பொருத்தலாம் என்று நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது என்று நிறைய பேர் சொல்கிறார்கள். ஜேரட் என்ற மூப்பர் சொல்வதைக் கவனியுங்கள்: “ஆராய்ச்சி செஞ்சு படிக்குறப்போ ஒரு வசனத்துல இருக்குற நிறைய விஷயங்கள என்னால புரிஞ்சிக்க முடியுது. யெகோவா என்கிட்ட என்ன சொல்ல வர்றார்னும் தெரிஞ்சுக்க முடியுது. இப்படி படிக்கிற விஷயங்கள் என்னோட மனசுல ஆழமா பதியறதுனால என்னால அதன்படி நடக்க முடியுது.” ஆலோசனைகளை பைபிளில் தேடினோம் என்றால்... அதில் சொல்லியிருக்கிறபடி நடந்தோம் என்றால்... நம்மால் கவலைகளை இன்னும் நன்றாகச் சமாளிக்க முடியும்.

சகித்திருக்க யெகோவா உங்களுக்கு உதவுவார்

கவலைகளை வெற்றிகரமாக சமாளிப்பதற்கு யெகோவாவின் உதவி தேவை என்பதை தாவீது புரிந்துகொண்டார். யெகோவாவின் உதவியை உயர்வாக மதித்ததால்தான் தாவீது இப்படிச் சொன்னார்: “உங்கள் சக்தியால் மதிலையும் தாண்டுவேன். உண்மைக் கடவுள்தான் எனக்குப் பலம் தருகிறார்.” (சங். 18:29, 32) சிலசமயங்களில், நமக்கு வரும் பிரச்சினைகள் பெரிய மதில்போல் தெரியலாம். ஆனால், யெகோவாவுடைய உதவியால் மதில்போல் இருக்கிற எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் நம்மால் சமாளிக்க முடியும். உதவிக்காக நாம் யெகோவாவிடம் ஜெபம் செய்யும்போது... அவர் நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்பதை யோசித்துப் பார்க்கும்போது... அவர் சொல்வதை அப்படியே செய்யும்போது... கவலைகளை வெற்றிகரமாக சமாளிப்பதற்கு அவர் நமக்கு பலத்தையும் ஞானத்தையும் கொடுப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

^ பாரா. 2 அளவுக்கதிகமாக கவலைப்படுபவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம்.