Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 17

ஒரு அம்மாவாக ஐனிக்கேயாளிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

ஒரு அம்மாவாக ஐனிக்கேயாளிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

“உன் அம்மா கொடுக்கிற அறிவுரையை ஒதுக்கித்தள்ளாதே. [அது] உன்னுடைய தலைக்கு அலங்காரக் கிரீடம்போல் இருக்கும், உன்னுடைய கழுத்துக்கு அழகான நகைபோல் இருக்கும்.”—நீதி. 1:8, 9.

பாட்டு 137 அன்றும் இன்றும் மின்னும் பெண்கள்

இந்தக் கட்டுரையில்... *

தீமோத்தேயு ஞானஸ்நானம் எடுப்பதை அவருடைய அம்மா ஐனிக்கேயாளும் பாட்டி லோவிசாளும் பெருமை பொங்க பார்க்கிறார்கள் (பாரா 1)

1-2. (அ) ஐனிக்கேயாள் யார், ஒரு அம்மாவாக அவருக்கு என்னவெல்லாம் பிரச்சினைகள் இருந்தன? (ஆ) அட்டைப் படத்தை விளக்குங்கள்.

 தீமோத்தேயுவின் ஞானஸ்நானத்தைப் பற்றி பைபிள் எதுவும் சொல்லவில்லை. ஆனால், அந்தச் சமயத்தில் அவருடைய அம்மா ஐனிக்கேயாளுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும் என்று நம்மால் கற்பனைசெய்ய முடியும். (நீதி. 23:25) இடுப்பளவு தண்ணீரில் தீமோத்தேயு நின்றுகொண்டிருக்கிறார். அவரைப் பார்க்கும்போது அவருடைய அம்மாவுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. தீமோத்தேயுவின் பாட்டி லோவிசாள், ஐனிக்கேயாளை அணைத்தபடி பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறார். தீமோத்தேயுவைத் தண்ணீருக்குள் அமிழ்த்தியபோது ஐனிக்கேயாள் வைத்த கண் வாங்காமல் அவரைப் பார்க்கிறார். சிரித்த முகத்தோடு தண்ணீரிலிருந்து அவர் எழும்பும்போது, அவருடைய அம்மாவின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் கொட்டுகிறது. ஐனிக்கேயாளுக்கு நிறைய சவால்கள் இருந்தாலும் யெகோவாமேலும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துமேலும் அன்பு வைப்பதற்கு தீமோத்தேயுவுக்கு அவர் கற்றுக்கொடுத்தார். அவர்களுக்கு என்னென்ன சவால்கள் இருந்தன என்று இப்போது பார்க்கலாம்.

2 தீமோத்தேயுவின் அப்பாவும் அம்மாவும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவருடைய அப்பா ஒரு கிரேக்கராக இருந்தார். அவருடைய அம்மாவும் பாட்டியும் யூதர்களாக இருந்தார்கள். (அப். 16:1) ஐனிக்கேயாளும் லோவிசாளும் கிறிஸ்தவர்களாக ஆனபோது தீமோத்தேயு ஒரு இளைஞராக இருந்திருக்கலாம். ஆனால், அவருடைய அப்பா ஒரு கிறிஸ்தவராக ஆகவில்லை. இப்போது, தீமோத்தேயு என்ன செய்வார்? சொந்தமாகத் தீர்மானம் எடுக்கிற அளவுக்கு அவர் வளர்ந்திருந்தார். அதனால், எந்த மதத்தை அவர் பின்பற்றுவார்? யெகோவாவை வணங்காத அவருடைய அப்பா சொல்வதைக் கேட்பாரா? சின்ன வயதிலிருந்து கற்றுக்கொண்ட யூத பாரம்பரியத்தைப் பின்பற்றுவாரா? இல்லையென்றால் ஒரு கிறிஸ்தவராக ஆவாரா?

3. நீதிமொழிகள் 1:8, 9 சொல்கிறபடி, தன்னுடைய நண்பர்களாக ஆவதற்கு பிள்ளைகளுக்கு அம்மாக்கள் உதவி செய்வதை யெகோவா எப்படி நினைக்கிறார்?

3 இன்றைக்கும் யெகோவாவை வணங்குகிற அம்மாக்களும் தங்களுடைய குடும்பத்தை ரொம்ப நேசிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும்மேல், யெகோவாவின் நண்பர்களாக ஆவதற்கு பிள்ளைகளுக்கு உதவி செய்கிறார்கள். அதற்காக அவர்கள் எடுக்கிற முயற்சியைக் கடவுள் ரொம்ப உயர்வாக நினைக்கிறார். (நீதிமொழிகள். 1:8, 9-ஐ வாசியுங்கள்.) பைபிளில் இருக்கிற உண்மைகளைப் பிள்ளைகள் ஏற்றுக்கொள்கிற விதமாகக் கற்றுக்கொடுப்பதற்கு அம்மாக்கள் நிறைய பேருக்கு யெகோவா உதவி செய்திருக்கிறார்.

4. இன்றைக்கு அம்மாக்கள் நிறைய பேருக்கு என்னென்ன சவால்கள் இருக்கின்றன?

4 ‘தீமோத்தேயுவைப் போல என்னுடைய பிள்ளைகளும் யெகோவாவை வணங்குவதற்கு தீர்மானம் எடுப்பார்களா?’ என்று அம்மாக்கள் யோசிக்கலாம். சொல்லப்போனால், இன்றைக்கு சாத்தானின் உலகத்திலிருந்து பிள்ளைகளுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் வரும் என்பதும் பெற்றோருக்கு நன்றாகத் தெரியும். (1 பே. 5:8) அதுமட்டுமல்ல, கணவரை இழந்ததால் அல்லது கணவர் யெகோவாவை வணங்குபவராக இல்லாததால் தனிமரமாக தங்களுடைய பிள்ளைகளை வளர்ப்பது நிறைய அம்மாக்களுக்கு சவாலாக இருக்கிறது. உதாரணத்துக்கு, கிறிஸ்டீன் என்ற சகோதரி என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள். * “என்னோட கணவர் பிள்ளைங்களயும், குடும்பத்தையும் நல்லா பாத்துப்பார். ஆனா பிள்ளைகள யெகோவாவின் சாட்சியா வளக்குறது அவருக்கு சுத்தமா பிடிக்கல, அதை ரொம்ப எதிர்த்தார். என் பிள்ளைங்க என்னைக்காவது ஒருநாள் யெகோவாவ வணங்குறவங்களா ஆகுறதுக்கு வாய்ப்பிருக்காங்கறத யோசிச்சு யோசிச்சு நான் விட்ட கண்ணீருக்கு அளவே இல்ல.”

5. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

5 நீங்கள் யெகோவாவை வணங்குகிற ஒரு அம்மாவாக இருந்தால், ஐனிக்கேயாளைப் போல் நீங்களும் யெகோவாவை நேசித்து அவரை வணங்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவ முடியும். ஐனிக்கேயாளைப் போல் உங்கள் சொல்லாலும் செயலாலும் உங்கள் பிள்ளைகளுக்கு எப்படிக் கற்றுக்கொடுக்கலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதற்கு யெகோவா எப்படி உதவி செய்வார் என்பதையும் பார்ப்போம்.

பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்—உங்களுடைய சொல்லால்

6. இரண்டு தீமோத்தேயு 3:14, 15 சொல்கிறபடி, தீமோத்தேயு எப்படி ஒரு கிறிஸ்தவராக ஆனார்?

6 தீமோத்தேயு சின்னப் பிள்ளையாக இருந்தபோது அவருக்கு “பரிசுத்த எழுத்துக்களை” சொல்லிக்கொடுக்க அவருடைய அம்மா தன்னால் முடிந்ததையெல்லாம் செய்தார். யூதர்கள் அதை எப்படிப் புரிந்துகொண்டார்களோ அப்படித்தான் அவர் சொல்லிக்கொடுத்தார். அதனால், இயேசு கிறிஸ்துவைப் பற்றி ஐனிக்கேயாளுக்கு அந்தச் சமயத்தில் எதுவும் தெரியவில்லை. இருந்தாலும், அவர் கற்றுக்கொடுத்த விஷயங்கள் தீமோத்தேயு பிற்பாடு கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படையாக இருந்தன. ஆனால், தீமோத்தேயு ஒரு கிறிஸ்தவராக ஆவாரா? ஒரு இளைஞராக, இந்தத் தீர்மானத்தை எடுக்கும் உரிமை அவருக்கு இருந்தது. ஆனால், குறிப்பு என்னவென்றால் இயேசுவைப் பற்றிய உண்மைகளை அவர் முழுமையாக நம்புவதற்கும் பின்பு ஒரு கிறிஸ்தவராக ஆவதற்கும் அவருடைய அம்மாவும் ஒரு காரணமாக இருந்தார். (2 தீமோத்தேயு 3:14, 15-ஐ வாசியுங்கள்.) கஷ்டமான சூழ்நிலையையும் வெற்றிகரமாக சமாளித்து தீமோத்தேயுவுக்கு யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொடுத்ததை நினைத்து ஐனிக்கேயாள் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார். தன்னுடைய பெயருக்கு ஏற்ற மாதிரி அவர் வாழ்ந்து காட்டியிருக்கிறார். அவருடைய பெயருக்கான அர்த்தம் “வெற்றி.”

7. ஞானஸ்நானம் எடுத்த பின்பு தொடர்ந்து முன்னேற தீமோத்தேயுவுக்கு ஐனிக்கேயாள் எப்படி உதவி செய்திருப்பார்?

7 ஞானஸ்நானம் எடுத்தது தீமோத்தேயுவின் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருந்தது. ஆனால், ஐனிக்கேயாளின் கவலைகள் அதோடு தீர்ந்துவிடவில்லை. ‘இதுக்கு அப்புறம் என்னோட பையன் எப்படி நடந்துக்குவான், கெட்ட நண்பர்களோட சேருவானா? அத்தேனே நகரத்துல இருக்குற பள்ளிக்கு போய் அங்க பொய் மத தத்துவஞானிகள் சொல்லிக்கொடுக்குறத நம்புவானா? பணம் சம்பாதிக்குறதுக்காக அவனோட நேரம், சக்தி, இளமை எல்லாத்தையும் வீணடிப்பானா?’ என்றெல்லாம் நினைத்து ஒருவேளை ஐனிக்கேயாள் கவலைப்பட்டிருக்கலாம். தீமோத்தேயுவுக்காக அவர் தீர்மானம் எடுக்க முடியாதுதான். ஆனால், நல்ல தீர்மானம் எடுக்க தீமோத்தேயுவுக்கு அவரால் உதவ முடியும். எப்படி? யெகோவாமேல் அன்பை வளர்த்துக்கொள்வதற்கும் யெகோவாவும் இயேசுவும் செய்த எல்லாவற்றுக்காகவும் நன்றியோடு இருப்பதற்கும் தீமோத்தேயுவுக்கு ஐனிக்கேயாள் தொடர்ந்து சொல்லிக்கொடுத்திருப்பார். இன்றைக்கு அப்பா-அம்மா இரண்டு பேருமே யெகோவாவை வணங்கினாலும் சரி, அவர்களில் யாராவது ஒருவர் மட்டுமே அவரை வணங்கினாலும் சரி, யெகோவாவை நேசிக்க பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பது சவால்தான். அப்படியென்றால், ஐனிக்கேயாளின் உதாரணத்திலிருந்து பெற்றோர் என்ன கற்றுக்கொள்ளலாம்?

8. பிள்ளைகளுக்கு யெகோவாவைப் பற்றி அப்பா கற்றுக்கொடுக்கும்போது, அம்மா என்ன செய்யலாம்?

8 பிள்ளைகளோடு சேர்ந்து பைபிளை ஆழமாக படியுங்கள். சகோதரிகளே, உங்களுடைய கணவர் யெகோவாவை வணங்கும் ஒருவரா? அப்படியென்றால், பைபிளைப் பற்றி அவர் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும்போது, நீங்களும் அவருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். இதைச் செய்வதற்கு ஒரு வழி, குடும்ப வழிபாடு நடத்த உங்களுடைய கணவருக்கு நீங்கள் எப்போதுமே ஆதரவாக இருக்க வேண்டும். குடும்ப வழிபாட்டைப் பற்றி எப்போதும் நல்ல விதமாக பேசுங்கள். படிப்பை சுவாரஸ்யமாக ஆக்குவதற்கு உங்களால் முடிந்ததையெல்லாம் செய்யுங்கள். குடும்ப வழிபாட்டில் புதிதாக ஏதாவது புராஜெக்ட் செய்ய உங்கள் கணவருக்கு ஒருவேளை நீங்கள் உதவி செய்யலாம். அதோடு, உங்களுடைய பிள்ளைகள் இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில் பைபிள் படிப்பு படிக்கிற அளவுக்கு வளர்ந்திருந்தால், அவர்களுக்கு உங்கள் கணவர் சொல்லிக்கொடுக்கும்போது, நீங்களும் அவருக்கு உதவியாக இருக்கலாம்.

9. கணவர் யெகோவாவின் சாட்சியாக இல்லையென்றால் பிள்ளைகளுக்கு பைபிளைப் பற்றி சொல்லிக்கொடுக்க ஒரு அம்மா என்ன செய்யலாம்?

9 சிலர் தங்களுடைய கணவரை இழந்திருக்கலாம். அல்லது, அவர்களுடைய கணவர் யெகோவாவை வணங்காதவராக இருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில் ஒரு அம்மாவாக அவர்கள்தான் பிள்ளைகளுக்கு பைபிளைப் பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கும். நீங்களும் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் இருக்கிறீர்களா? அந்தப் பொறுப்பை நினைத்து அளவுக்கதிகமாக கவலைப்படாதீர்கள். யெகோவா உங்களுக்கு உதவி செய்வார். பிள்ளைகளுக்கு பைபிளைப் பற்றிச் சொல்லிக்கொடுக்க அமைப்பு வெளியிட்டிருக்கிற கருவிகளை நன்றாகப் பயன்படுத்துங்கள். அந்தக் கருவிகளை குடும்ப வழிபாட்டில் எப்படி நன்றாகப் பயன்படுத்தலாம் என்று அனுபவமுள்ள பெற்றோரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். * (நீதி. 11:14) பிள்ளைகளின் மனதில் என்ன இருக்கிறது, அவர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அதற்கேற்ற கேள்விகளைக் கேட்க யெகோவாவிடம் உதவி கேளுங்கள். (நீதி. 20:5) ஒருவேளை, ‘ஸ்கூல்ல எந்த பிரச்சினைய சமாளிக்கறது உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு?’ என்பது போன்ற ஒரு கேள்வியை நீங்கள் கேட்கலாம். இப்படிக் கேட்டால், உங்கள் பிள்ளைகள் மனம்விட்டு பேசுவார்கள். அவர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்பதை நீங்களும் புரிந்துகொள்வீர்கள்.

10. யெகோவாவைப் பற்றிப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க நீங்கள் வேறென்ன செய்யலாம்?

10 யெகோவாவைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு வாய்ப்புகளை உருவாக்குங்கள். யெகோவாவைப் பற்றியும், அவர் உங்களுக்காக செய்திருக்கிற நல்ல நல்ல விஷயங்களைப் பற்றியும் பிள்ளைகளிடம் பேசுங்கள். (உபா. 6:6, 7; ஏசா. 63:7) அதுவும் பிள்ளைகளுக்கு வீட்டிலிருந்து பைபிளைப் பற்றி சொல்லிக்கொடுக்க முடியாத சூழ்நிலை இருந்தால் நீங்கள் அப்படிச் செய்வது ரொம்ப முக்கியம். நாம் முன்பு பார்த்த கிறிஸ்டீன் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்: “யெகோவாவ பத்தி பிள்ளைங்ககிட்ட பேசுறதுக்கு எனக்கு அதிகமா வாய்ப்பு கிடைக்காது. அதனால, எனக்கு ஏதாவது வாய்ப்பு கிடைச்சா அத நல்லா பயன்படுத்துவேன். படைப்புகள பத்தி பேசறதுக்கும் யெகோவாவோட நண்பரா ஆகறதுக்கு உதவி செய்ற மத்த விஷயங்கள பத்தி பேசுறதுக்கும் நாங்க கொஞ்ச தூரம் எங்கயாச்சும் நடந்துட்டு வருவோம், இல்லன்னா படகுல போயிட்டு வருவோம். என்னோட பிள்ளைங்க வாசிக்கிற அளவுக்கு வளந்ததுக்கு அப்புறம் அவங்களாவே பைபிளை படிக்க நான் உற்சாகப்படுத்துனேன்” என்று அவர் சொல்கிறார். இதோடு, இன்னொரு விஷயத்தையும் நீங்கள் செய்யலாம். பிள்ளைகளிடம் யெகோவாவின் அமைப்பைப் பற்றியும், சகோதர சகோதரிகளைப் பற்றியும் நல்ல விதமாகப் பேசுங்கள். மூப்பர்களைப் பற்றி எதுவும் குறை சொல்லாதீர்கள். அப்போதுதான், பிள்ளைகளுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அவர்கள் மூப்பர்களைத் தேடிப்போவார்கள்.

11. யாக்கோபு 3:18 சொல்கிறபடி, வீட்டில் சமாதானமான சூழலை உருவாக்குவது ஏன் முக்கியம்?

11 வீட்டில் சமாதானமான சூழலை உருவாக்குங்கள். உங்கள் கணவர்மேலும் பிள்ளைகள்மேலும் உங்களுக்கு அன்பு இருப்பதை எப்போதும் காட்டுங்கள். உங்கள் கணவரைப் பற்றி பேசும்போது மரியாதையாக நல்ல விதமாக பேசுங்கள். அப்படிச் செய்ய உங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுங்கள். அப்போதுதான், வீட்டில் சமாதானம் இருக்கும். பிள்ளைகளுக்கு யெகோவாவைப் பற்றி உங்களால் கற்றுக்கொடுக்கவும் முடியும். (யாக்கோபு 3:18-ஐ வாசியுங்கள்.) ருமேனியாவில் விசேஷ பயனியராகச் சேவை செய்கிற யோஸஃப் என்ற சகோதரருடைய உதாரணத்தைக் கவனியுங்கள். சின்ன வயதில் இருந்தபோது அவரும், அவருடைய அம்மாவும் அவர் கூடப் பிறந்தவர்களும் யெகோவாவை வணங்குவதை அவருடைய அப்பா ரொம்ப எதிர்த்தார். “வீட்டுல சமாதானம் இருக்குற மாதிரி பாத்துக்க எங்க அம்மா ரொம்ப முயற்சி செஞ்சாங்க. அப்பா எந்தளவுக்கு கோபமா நடந்துக்கிட்டாரோ அந்தளவுக்கு அம்மா அவர்கிட்ட அன்பா நடந்துகிட்டாங்க. அப்பாவுக்கு மதிப்புக்கொடுத்து அவருக்கு கீழ்ப்படியறது எங்களுக்கு கஷ்டமாக இருக்குறத அம்மா கவனிச்சப்போ, எபேசியர் 6:1-3 வசனங்கள வாசிச்சு காட்டி அத பத்தி எங்ககிட்ட பேசுனாங்க. அப்புறம் அப்பாகிட்ட இருக்குற நல்ல குணங்கள பத்தி சொன்னாங்க. அப்பாவுக்கு ஏன் மதிப்புக்கொடுக்கணும்னு எங்களுக்கு புரிய வெச்சாங்க. இப்படி குடும்பத்துல சமாதானம் இருக்குற மாதிரி பாத்துகிட்டாங்க.”

பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்—உங்களுடைய செயலால்

12. இரண்டு தீமோத்தேயு 1:5 சொல்கிறபடி, ஐனிக்கேயாளின் உதாரணம் தீமோத்தேயுவுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்தது?

12 இரண்டு தீமோத்தேயு 1:5-ஐ வாசியுங்கள். ஐனிக்கேயாள் தீமோத்தேயுவுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருந்தார். யெகோவாமேல் விசுவாசம் இருந்தால் அதைச் செயலில் காட்ட வேண்டும் என்று கண்டிப்பாக தீமோத்தேயுவுக்குக் கற்றுக்கொடுத்திருப்பார். (யாக். 2:26) யெகோவாமேல் இருந்த அன்பை அவருடைய அம்மா செயலில் காட்டியதை தீமோத்தேயு நிச்சயம் பார்த்திருப்பார். யெகோவாவை வணங்குவதால் அவருடைய அம்மா எவ்வளவு சந்தோஷமாக இருந்தார் என்பதையும் அவர் பார்த்திருப்பார். ஐனிக்கேயாளின் உதாரணம் தீமோத்தேயுவுக்கு எப்படி உதவியாக இருந்தது? அப்போஸ்தலன் பவுல் சொல்கிறபடி, ஐனிக்கேயாளிடம் இருந்த அதே பலமான விசுவாசம் தீமோத்தேயுவிடமும் இருந்தது. இது ஏதோ தற்செயலாக நடந்துவிடவில்லை. அம்மாவின் நல்ல உதாரணத்தை தீமோத்தேயு கவனித்ததால் அவரைப் போலவே நடக்கத் தீர்மானித்தார். இன்றைக்கும்கூட நிறைய அம்மாக்கள், “ஒரு வார்த்தைகூட சொல்லாமலேயே” தங்களுடைய குடும்பத்தில் இருக்கிறவர்கள் யெகோவாவை வணங்க உதவி செய்திருக்கிறார்கள். (1 பே. 3:1, 2) உங்களாலும் அப்படி நடந்துகொள்ள முடியும். எப்படி என்று இப்போது பார்க்கலாம்?

13. ஒரு அம்மா யெகோவாவோடு இருக்கிற பந்தத்துக்கு ஏன் முதலிடம் கொடுக்க வேண்டும்?

13 யெகோவாவோடு இருக்கிற பந்தத்துக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுங்கள். (உபா. 6:5, 6) நிறைய அம்மாக்களைப் போலவே நீங்களும் உங்களுடைய பிள்ளைகளின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்காக உங்கள் நேரம், பணம், தூக்கம் என்று நிறைய விஷயங்களைத் தியாகம் செய்கிறீர்கள். ஆனால், யெகோவாவோடு உங்களுக்கு இருக்கிற நட்பைப் பலப்படுத்திக்கொள்ள முடியாத அளவுக்கு அதிலேயே மூழ்கிவிடாதீர்கள். ஜெபம் செய்யவும், பைபிளை ஆராய்ச்சி செய்து படிக்கவும், கூட்டங்களுக்குப் போகவும் எப்போதும் நேரம் ஒதுக்குங்கள். அப்படிச் செய்தால், யெகோவாவோடு உங்களுக்கு இருக்கிற நட்பைப் பலப்படுத்திக்கொள்ள முடியும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்ல உதாரணமாக இருக்க முடியும்.

14-15. லியான், மரியா, ஜுவா ஆகியவர்களுடைய அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

14 அம்மாவைப் பார்த்தே யெகோவாமேல் அன்பு வைப்பதற்கும் அவரை நம்புவதற்கும் கற்றுக்கொண்ட இளம் பிள்ளைகளுடைய உதாரணங்களை இப்போது பார்க்கலாம். சகோதரி கிறிஸ்டீனின் மகள் லியான் என்ன சொல்கிறாள் என்று பாருங்கள்: “எங்க அப்பா வீட்டுல இருக்கும்போது எங்களால பைபிள் படிக்க முடியாது. ஆனா, எங்க அம்மா கூட்டங்கள்ல கலந்துக்குறத தவற விட்டதே இல்ல. எங்களுக்கு பைபிள பத்தி அவ்வளவா தெரியலன்னாலும் எங்க அம்மாவ பாத்தே நாங்க யெகோவாமேல பலமான விசுவாசம் வைக்க கத்துகிட்டோம். சொல்லப்போனா, நாங்க கூட்டங்களுக்கு போக ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே யெகோவாவின் சாட்சிகள் சொல்லிக்கொடுக்கறதுதான் உண்மைனு நம்புனோம்.”

15 மரியாவின் உதாரணத்தைக் கவனியுங்கள். சில சமயங்களில், கூட்டங்களுக்குப் போய்விட்டு வந்தால் மரியாவையும் அவளுடைய வீட்டில் இருப்பவர்களையும் அவளுடைய அப்பா பயங்கரமாகத் திட்டுவார், அடிப்பார். மரியா இப்படிச் சொல்கிறாள்: “என்னோட அம்மா ரொம்ப தைரியசாலி. நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ மத்தவங்க எதாவது சொல்லிடுவாங்கன்னு பயந்து சில விஷயங்கள செய்யாம இருந்திருக்குறேன். ஆனா, எங்க அம்மா காட்டுன தைரியத்தயும் வாழ்க்கையில அவங்க எப்பவும் யெகோவாவுக்கு முதலிடம் கொடுத்ததையும் பாத்தது பயத்த விரட்டி அடிச்சுட்டு தைரியமா இருக்க எனக்கு உதவி செஞ்சுது.” அடுத்ததாக, ஜுவாவின் அனுபவத்தைப் பார்க்கலாம். வீட்டில் பைபிளைப் பற்றியோ யெகோவாவைப் பற்றியோ பேசவே கூடாது என்று அவனுடைய அப்பா சொல்லியிருந்தார். “எங்க அப்பாவ சந்தோஷப்படுத்துறதுக்காக எங்க அம்மா எத வேணும்னாலும் விட்டுக்கொடுக்க தயாராக இருந்தாங்க. ஆனா, யெகோவாமேலே இருக்கிற அன்ப மட்டும் அவங்க விட்டுக்கொடுக்கவே இல்ல. அதுதான் என் மனச ரொம்ப தொட்டுச்சு” என்று ஜுவா சொல்கிறான்.

16. ஒரு அம்மாவாக உங்களுடைய உதாரணம் மற்றவர்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?

16 உங்களுடைய உதாரணம் மற்றவர்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும். எப்படி? ஐனிக்கேயாளின் உதாரணம் அப்போஸ்தலன் பவுலுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்தது என்று கவனியுங்கள். தீமோத்தேயுவிடம் இருந்த வெளிவேஷம் இல்லாத விசுவாசம் ‘முதலில் . . . ஐனிக்கேயாளிடம்’ இருந்ததாக பவுல் எழுதினார். (2 தீ. 1:5) ஐனிக்கேயாளிடம் இப்படிப்பட்ட விசுவாசம் இருந்ததை அவர் எப்போது பார்த்திருப்பார்? அவர் முதல் தடவை மிஷனரி பயணம் செய்தபோது, லீஸ்திராவில் லோவிசாளையும் ஐனிக்கேயாளையும் பார்த்திருக்கலாம். அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவதற்கு உதவி செய்திருக்கலாம். (அப். 14:4-18) அந்தச் சமயத்தில், ஐனிக்கேயாளுக்கு இப்படிப்பட்ட விசுவாசம் இருந்ததை அவர் கவனித்திருக்கலாம். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: கிட்டத்தட்ட 15 வருஷங்களுக்குப் பின்புதான் தீமோத்தேயுவுக்கு இந்தக் கடிதத்தை அவர் எழுதினார். இத்தனை வருஷங்களுக்குப் பின்பும்கூட ஐனிக்கேயாள் விசுவாசத்தோடு செய்த விஷயங்களை பவுல் ஞாபகம் வைத்திருந்திருக்கிறார். மற்றவர்கள் பார்த்து பின்பற்றுவதற்கு ஒரு நல்ல உதாரணமாக அவளுடைய பெயரைக்கூட அதில் எழுதியிருக்கிறார். அப்படியென்றால், ஐனிக்கேயாளின் உதாரணம் அப்போஸ்தலன் பவுலின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது என்று தெரிகிறது. மற்றவர்களுடைய மனதிலும் ஆழமாக பதிந்திருக்கும். உங்களுடைய குடும்பத்தில் சிலர் யெகோவாவின் சாட்சியாக இல்லையென்றாலும் சரி, கணவருடைய துணை இல்லாமல் உங்களுடைய பிள்ளைகளை நீங்கள் வளர்த்துக்கொண்டு வந்தாலும் சரி, நீங்கள் காட்டுகிற விசுவாசம் மற்றவர்களையும் பலப்படுத்தும். உங்களை மாதிரியே நடந்துகொள்ள அவர்களைத் தூண்டும்.

யெகோவாமேல் அன்பு வைக்க பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க கொஞ்சம் காலம் எடுக்கும். அதனால், முயற்சியைக் கைவிட்டுவிடாதீர்கள்! (பாரா 17)

17. நீங்கள் நிறைய முயற்சி எடுத்த பின்பும் உங்களுடைய பிள்ளைக்கு யெகோவாவை வணங்குவதற்கு அந்தளவுக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்தால் நீங்கள் என்ன செய்யலாம்?

17 சிலசமயங்களில், நீங்கள் நிறைய முயற்சி எடுத்து சொல்லிக்கொடுத்த பின்பும் உங்களுடைய பிள்ளைக்கு யெகோவாவை வணங்க அந்தளவு விருப்பம் இல்லாத மாதிரி தெரியலாம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுக்க கொஞ்சம் காலம் எடுக்கும் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் படத்தில் பார்க்கிறபடி, நீங்கள் ஒரு விதையை விதைக்கும்போது அது ஒரு மரமாக வளர்ந்து பலன் கொடுக்குமா என்று யோசிக்கலாம். அது வளர்வதும் வளராததும் உங்களுடைய கையில் இல்லை. ஆனாலும், நீங்கள் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவீர்கள். அது வளருவதற்கு உங்களால் முடிந்ததை எல்லாம் செய்வீர்கள். (மாற். 4:26-29) அதேபோல், ஒரு அம்மாவாக உங்களுடைய பிள்ளைகள் யெகோவாமேல் அன்பு வைப்பதற்காக நீங்கள் செய்கிற எல்லா முயற்சிகளுக்கும் பலன் கிடைக்குமா என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், அது உங்களுடைய கையில் இல்லை. நீங்கள் தொடர்ந்து பயிற்சி கொடுத்தால், உங்களுடைய பிள்ளை யெகோவாவின் நண்பராவதற்கு உங்களால் முடிந்ததை எல்லாம் செய்கிறீர்கள் என்று அர்த்தம்.—நீதி. 22:6.

உதவிக்காக யெகோவாவையே நம்பியிருங்கள்

18. தன்னுடைய நண்பராவதற்கு உங்கள் பிள்ளைகளுக்கு யெகோவா எப்படி உதவி செய்வார்?

18 பைபிள் காலங்களில் இருந்தே தன்னுடைய நண்பராவதற்கு இளம் பிள்ளைகள் நிறைய பேருக்கு யெகோவா உதவி செய்திருக்கிறார். (சங். 22:9, 10) உங்களுடைய பிள்ளைகளுக்கும் அந்த ஆசை இருந்தால் யெகோவா நிச்சயம் உதவி செய்வார். (1 கொ. 3:6, 7) ஒருவேளை, முழு மனதோடு உங்களுடைய பிள்ளைகள் யெகோவாவை வணங்கவில்லை என்றாலும், தொடர்ந்து அவர்கள்மேல் அன்பு காட்டுவார். (சங். 11:4) தன்னுடைய நண்பராவதற்கு அவர்களுக்குத் துளியளவு ஆசை இருப்பது தெரிந்தால்கூட உடனே அவர் உதவி செய்வார். (அப். 13:48; 2 நா. 16:9) ஒருவேளை, சரியான சமயத்தில் அவர்களுக்கு உதவுகிற சரியான விஷயத்தைச் சொல்ல அவர் உங்களைத் தூண்டலாம். (நீதி. 15:23) இல்லையென்றால், சபையில் இருக்கிற ஒரு சகோதரரோ ஒரு சகோதரியோ, அவர்கள்மேல் அக்கறை காட்ட அவர் தூண்டலாம். உங்கள் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகும்கூட அவர்கள் சின்ன வயதில் இருந்தபோது நீங்கள் கற்றுக்கொடுத்த ஒரு விஷயத்தை யெகோவா அவர்களுக்கு ஞாபகப்படுத்தலாம். (யோவா. 14:26) உங்கள் சொல்லாலும் செயலாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தொடர்ந்து கற்றுக்கொடுக்கும்போது யெகோவா உங்களை நிச்சயம் ஆசீர்வதிப்பார்.

19. யெகோவா உங்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார் என்று நீங்கள் ஏன் நம்பலாம்?

19 உங்கள் பிள்ளைகள் எடுக்கிற தீர்மானத்தை வைத்து யெகோவா உங்கள்மேல் அன்பு காட்டுவதில்லை. நீங்கள் அவர்மேல் அன்பு வைத்திருப்பதால்தான் உங்களை ரொம்ப நேசிக்கிறார். நீங்கள் பிள்ளைகளைத் தனியாக வளர்க்கிறீர்களா? அப்படியென்றால், கவலைப்படாதீர்கள். யெகோவா உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு அப்பாவாக இருப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார், உங்களுக்கும் ஒரு பாதுகாவலராக அவர் இருப்பார். (சங். 68:5) பிள்ளைகள் யெகோவாவை வணங்குவதும் வணங்காததும் உங்களுடைய கையில் இல்லை. ஆனால், அவர்களை வளர்க்க நீங்கள் யெகோவாவையே நம்பியிருந்தால்... உங்களால் முடிந்ததையெல்லாம் செய்தால்... அவர் எப்போதும் உங்களுக்குத் துணையாக இருப்பார்.

பாட்டு 134 பிள்ளைகள் கடவுள் தந்த சொத்து

^ பாரா. 5 யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு அவர்மேல் அன்பு வைக்க பிள்ளைகளுக்கு அம்மாக்கள் சொல்லிக்கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் தீமோத்தேயுவின் அம்மா ஐனிக்கேயாள் நல்ல உதாரணமாக இருந்தார். இன்றைக்கு யெகோவாவை வணங்குகிற அம்மாக்கள் அவரிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

^ பாரா. 4 சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ பாரா. 9 உதாரணத்துக்கு, இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில் 50-ஆம் பாடத்தையும், ஆகஸ்ட் 15, 2011 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 6-7-ல் இருக்கிற “குடும்ப வழிபாட்டுக்கும் தனிப்பட்ட படிப்புக்கும் ஆலோசனைகள்” என்ற கட்டுரையையும் பாருங்கள்.