Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 18

யெகோவாவின் சேவையில் குறிக்கோள்களை வைத்து அவற்றை அடைய முயற்சி செய்யுங்கள்

யெகோவாவின் சேவையில் குறிக்கோள்களை வைத்து அவற்றை அடைய முயற்சி செய்யுங்கள்

“இவற்றைப் பற்றியே ஆழமாக யோசித்துக்கொண்டிரு; இவற்றிலேயே மூழ்கியிரு; அப்போதுதான் உன்னுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெளிவாகத் தெரியவரும்.”—1 தீ. 4:15.

பாட்டு 84 தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை

இந்தக் கட்டுரையில்... *

1. நாம் என்ன விதமான குறிக்கோள்களை வைக்கலாம்?

 உண்மைக் கிறிஸ்தவர்களாக நாம் யெகோவாமேல் உயிரையே வைத்திருக்கிறோம். அவருக்குச் சேவை செய்வதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், யெகோவாவுக்கு நாம் இன்னும் நன்றாக சேவை செய்ய வேண்டும் என்றால், சில குறிக்கோள்களை வைக்க வேண்டும். உதாரணத்துக்கு, கடவுளுக்குப் பிடித்த குணங்களை வளர்த்துக்கொள்ளலாம். சில திறமைகளை வளர்த்துக்கொள்ளலாம். மற்றவர்களுக்கு உதவி செய்ய வாய்ப்புகளைத் தேடலாம்.

2. குறிக்கோள்களை வைத்து அவற்றை அடைவதற்கு நாம் ஏன் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்?

2 யெகோவாவின் சேவையில் நாம் தொடர்ந்து முன்னேற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பதற்கு சில நல்ல காரணங்கள் இருக்கின்றன. ஒரு முக்கியமான காரணம் என்னவென்றால், நம்முடைய அன்பான அப்பா யெகோவாவை நாம் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அவருக்கு சேவை செய்வதற்காக நம்மிடம் இருக்கிற திறமைகளையெல்லாம் நன்றாகப் பயன்படுத்தும்போது, அதைப் பார்த்து அவர் ரொம்ப சந்தோஷப்படுகிறார். இன்னொரு காரணம் என்னவென்றால், நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு இன்னும் நன்றாக உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். (1 தெ. 4:9, 10) நாம் யெகோவாவின் சாட்சிகளாகி, ரொம்பக் காலம் ஆகியிருந்தாலும் சரி, கொஞ்சம் காலம் ஆகியிருந்தாலும் சரி, நம் எல்லாராலும் தொடர்ந்து முன்னேற்றம் செய்ய முடியும். அதை எப்படிச் செய்வது என்று இப்போது பார்க்கலாம்.

3. ஒன்று தீமோத்தேயு 4:12-16-ல் என்ன செய்யும்படி தீமோத்தேயுவை அப்போஸ்தலன் பவுல் உற்சாகப்படுத்தினார்?

3 இளைஞராக இருந்த தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய முதல் கடிதத்தை எழுதியபோது, தீமோத்தேயு ஏற்கெனவே ஒரு மூப்பராகச் சேவை செய்துகொண்டிருந்தார். ஆனாலும், தொடர்ந்து முன்னேற்றம் செய்ய பவுல் அவரை உற்சாகப்படுத்தினார். (1 தீமோத்தேயு 4:12-16-ஐ வாசியுங்கள்.) தீமோத்தேயுவை இரண்டு விஷயங்களில் முன்னேறும்படி பவுல் சொல்கிறார். அன்பு, விசுவாசம், ஒழுக்கம் போன்ற குணங்களை வளர்த்துக்கொள்ளச் சொல்கிறார். அதோடு, சபையார் முன்னால் வாசிப்பது, அறிவுரை சொல்வது, கற்றுக்கொடுப்பது போன்ற திறமைகளையும் வளர்த்துக்கொள்ளச் சொல்கிறார். நம்மால் எட்ட முடிந்த குறிக்கோள்களை வைத்து யெகோவாவுக்கு இன்னும் நன்றாக சேவை செய்வதற்கு தீமோத்தேயுவின் உதாரணம் நமக்கு எப்படி உதவும் என்று இப்போது பார்க்கலாம். என்னென்ன வழிகளில் ஊழியத்தை இன்னும் நன்றாகச் செய்யலாம் என்பதையும் பார்க்கலாம்.

யெகோவாவுக்குப் பிடித்த குணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்

4. பிலிப்பியர் 2:19-22 சொல்கிறபடி, தீமோத்தேயு யெகோவாவுக்குப் பிடித்த ஊழியராக இருந்ததற்குக் காரணம் என்ன?

4 தீமோத்தேயு யெகோவாவுக்குப் பிடித்த ஒரு நல்ல ஊழியராக இருந்ததற்குக் காரணம், அவரிடம் இருந்த அருமையான குணங்கள்தான். (பிலிப்பியர் 2:19-22-ஐ வாசியுங்கள்.) தீமோத்தேயுவைப் பற்றி பவுல் சொன்னதை வைத்துப் பார்த்தால், அவர் எந்தளவுக்குப் பணிவானவராக, உண்மையானவராக, கடினமாக உழைக்கிறவராக, நம்பகமானவராக இருந்தார் என்று தெரிகிறது. அவர் சகோதர சகோதரிகள்மேல் ரொம்ப அன்பும் அக்கறையும் வைத்திருந்தார். இவை எல்லாவற்றையும் பார்த்ததால், பவுலுக்கு தீமோத்தேயுவை ரொம்ப பிடித்திருந்தது. அதனால், சவாலான சில பொறுப்புகளை அவருக்குக் கொடுக்க பவுல் தயங்கவில்லை. (1 கொ. 4:17) அதேபோல் நாம் யெகோவா விரும்புகிற குணங்களை வளர்த்துக்கொண்டோம் என்றால் அவருக்கு நம்மை ரொம்பப் பிடிக்கும். சபைக்கும் நாம் ரொம்பப் பிரயோஜனமானவர்களாக இருப்போம்.—சங். 25:9; 138:6.

எந்தக் குணத்தை நீங்கள் இன்னும் நன்றாக காட்ட வேண்டும் என்று யோசித்துப்பாருங்கள் (பாராக்கள் 5-6)

5. (அ) எந்தக் குணத்தை வளர்த்துக்கொள்வது என்று நீங்கள் எப்படி முடிவு செய்யலாம்? (ஆ) இந்தப் படத்தில் பார்க்கிறபடி, இன்னும் அனுதாபம் காட்ட வேண்டும் என்ற குறிக்கோளை அடைவதற்கு ஒரு இளம் சகோதரி எப்படி முயற்சி செய்கிறார்?

5 ஒரு குறிக்கோளை வையுங்கள். என்னென்ன குணங்களில் நீங்கள் இன்னும் முன்னேறலாம் என்பதை ஜெபம் செய்துவிட்டு யோசித்துப்பாருங்கள். அதில் ஒரு குணத்தைத் தேர்ந்தெடுத்து அதை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். உதாரணத்துக்கு, மற்றவர்களிடம் அனுதாபம் காட்டும் விஷயத்தில் நீங்கள் முன்னேற வேண்டியிருக்கலாம். சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். அல்லது, மற்றவர்களோடு சமாதானமாகும் விஷயத்தில்... அவர்களை மன்னிக்கும் விஷயத்தில்... முன்னேறுவதற்கு குறிக்கோள் வைக்கலாம். நீங்கள் என்னென்ன குணங்களில் முன்னேறலாம் என்று உங்களுடைய நெருங்கிய நண்பர்களிடம் கேட்பதும்கூட உங்களுக்கு உதவியாக இருக்கும்.—நீதி. 27:6.

6. ஒரு குணத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள நினைத்தால் என்ன செய்யலாம்?

6 குறிக்கோளை அடைவதற்கு முயற்சி செய்யுங்கள். இதைச் செய்வதற்கு ஒரு வழி, நீங்கள் வளர்த்துக்கொள்ள விரும்புகிற குணத்தைப் பற்றி ஆழமாக ஆராய்ச்சி செய்து படிப்பதுதான். ஒருவேளை, மற்றவர்களை இன்னும் தாராளமாக மன்னிப்பதற்கு நீங்கள் குறிக்கோள் வைத்திருக்கலாம். அப்படியென்றால், மற்றவர்களைத் தாராளமாக மன்னித்தவர்களைப் பற்றியும் மன்னிக்காதவர்களைப் பற்றியும் பைபிளிலிருந்து படித்து ஆழமாக யோசித்துப்பாருங்கள். இயேசுவின் உதாரணத்தையும் நீங்கள் யோசித்துப்பார்க்கலாம். அவர் மற்றவர்களைத் தாராளமாக மன்னித்தார். (லூக். 7:47, 48) அதுமட்டுமல்ல, அவர்கள் செய்த தவறுகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அவர்களிடம் என்ன நல்ல விஷயங்கள் இருக்கின்றன என்பதைப் பார்த்தார். ஆனால், அவருடைய காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் ‘மற்றவர்களைத் துளியும் மதிக்கவில்லை.’ (லூக். 18:9) இந்த இரண்டு உதாரணங்களைப் பற்றி யோசித்துப்பார்த்த பின்பு உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மத்தவங்ககிட்ட இருக்கற என்ன குணங்களை நான் பாக்கறேன்? அவங்ககிட்ட இருக்கற நல்ல குணங்களை பாக்கறேனா இல்ல கெட்ட குணங்களை பாக்கறேனா?’ ஒருவரை மன்னிப்பது உங்களுக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தால் அவரிடம் என்னென்ன நல்ல குணங்கள் இருக்கின்றன என்பதை ஒரு பட்டியல் போடுங்கள். பின்பு, உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இயேசு இவர எப்படி பார்ப்பார்? இவர இயேசு மன்னிப்பாரா?’ இப்படிச் செய்யும்போது நம்முடைய யோசிக்கிற விதத்தை நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். நம்மைப் புண்படுத்திய ஒருவரை மன்னிப்பது ஆரம்பத்தில் நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், அதற்காக நாம் தொடர்ந்து முயற்சி செய்யும்போது தாராளமாக மன்னிப்பது நமக்குச் சுலபமாகிவிடும்.

நல்ல நல்ல திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்

உங்களுடைய ராஜ்ய மன்றத்தைப் பராமரிக்கிற வேலையைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுங்கள் (பாரா 7) *

7. திறமையாக வேலை செய்பவர்களை யெகோவா எப்படிப் பயன்படுத்துவதாக நீதிமொழிகள் 22:29 சொல்கிறது?

7 நல்ல நல்ல திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் நீங்கள் குறிக்கோள் வைக்கலாம். நம்முடைய பெத்தேல் கட்டிடங்கள், மாநாட்டு மன்றங்கள், ராஜ்ய மன்றங்கள் போன்றவற்றைக் கட்டுவதற்கு நிறைய சகோதர சகோதரிகள் வேலை செய்கிறார்கள். இவர்களில் நிறைய பேர் இந்த வேலையை எப்படிக் கற்றுக்கொண்டார்கள்? அனுபவமுள்ள சகோதர சகோதரிகளோடு சேர்ந்து வேலை செய்ததால் கற்றுக்கொண்டார்கள். இந்தப் படத்தில் பார்க்கிறபடி, நம்முடைய ராஜ்ய மன்றங்களையும் மாநாட்டு மன்றங்களையும் எப்படியெல்லாம் பராமரிக்கலாம் என்பதை சகோதரர்களும் சகோதரிகளும் கற்றுக்கொள்கிறார்கள். இப்படித் திறமையாக வேலை செய்பவர்களைப் பயன்படுத்தி ‘என்றென்றுமுள்ள ராஜாவான’ யெகோவாவும் ‘ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாக’ இருக்கிற கிறிஸ்து இயேசுவும் பெரிய பெரிய விஷயங்களைச் சாதிக்கிறார்கள். (1 தீ. 1:17; 6:15; நீதிமொழிகள் 22:29-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், நம்முடைய திறமைகளை நமக்குப் புகழ் சேர்ப்பதற்காகப் பயன்படுத்தாமல் யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்பதற்காகப் பயன்படுத்த நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.—யோவா. 8:54.

8. எந்தத் திறமையை வளர்த்துக்கொள்வது என்று நீங்கள் எப்படி முடிவு செய்யலாம்?

8 ஒரு குறிக்கோளை வையுங்கள். எந்த விதமான திறமையை நீங்கள் வளர்த்துக்கொள்ளலாம்? அதைப் பற்றி உங்களுடைய சபை மூப்பர்களிடமும் வட்டாரக் கண்காணியிடமும் கேட்கலாம். ஒருவேளை, பேச்சுக் கொடுப்பதிலும் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதிலும் முன்னேற்றம் செய்யலாம் என்று அவர்கள் சொன்னால், குறிப்பாக எந்தப் பேச்சுப் பண்பில் முன்னேறலாம் என்று கேளுங்கள். பின்பு, அந்த விஷயத்தில் முன்னேற கடினமாக முயற்சி செய்யுங்கள். இதை நீங்கள் எப்படிச் செய்யலாம்?

9. ஒரு திறமையை வளர்த்துக்கொள்வதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்?

9 குறிக்கோளை அடைவதற்கு முயற்சி செய்யுங்கள். மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிற விஷயத்தில் உங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால், வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள் என்ற சிற்றேட்டைக் கவனமாகப் படியுங்கள். வார நாட்களில் நடக்கிற கூட்டத்தில் உங்களுக்கு ஒரு நியமிப்பு கிடைத்தால், திறமையாகக் கற்றுக்கொடுக்கிற ஒரு சகோதரரிடம் முன்கூட்டியே பேசிக் காட்டுங்கள். எந்த விஷயத்தில் முன்னேறலாம் என்று அவரிடம் கேளுங்கள். உங்களுக்கு ஏதாவது நியமிப்பு கிடைத்தால் அதை முன்கூட்டியே நன்றாகத் தயாரியுங்கள். அப்போதுதான், நீங்கள் கடினமாக உழைப்பவர் என்பதையும் நம்பகமானவர் என்பதையும் மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள்.—நீதி. 21:5; 2 கொ. 8:22.

10. ஒரு திறமையைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்? உதாரணத்தோடு விளக்குங்கள்.

10 ஒரு திறமையை வளர்த்துக்கொள்ள நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். ஆனால், அது உங்களுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. அப்படியென்றால், என்ன செய்யலாம்? உங்களுடைய முயற்சியை கைவிட்டுவிடாதீர்கள். கேரி என்ற சகோதரருடைய அனுபவத்தைக் கவனியுங்கள். அவர் வாசிக்க ரொம்பக் கஷ்டப்பட்டார். கூட்டங்களில் சத்தமாக வாசிக்க முயற்சி செய்தபோதெல்லாம் அது அவருக்கு ரொம்ப சங்கடமாக இருந்தது. ஆனாலும், அவர் முயற்சி செய்துகொண்டே இருந்தார். அதுமட்டுமல்ல, சகோதரர்களிடமிருந்தும் நம்முடைய பிரசுரங்களிலிருந்தும் அவருக்கு நிறைய உதவி கிடைத்தது. “அதனால, இப்ப கூட்டங்கள்லயும், மாநாடுகள்லயும் நல்லா பேச்சு கொடுக்க முடியுது” என்று அவர் சொல்கிறார்.

11. தீமோத்தேயுவைப் போல் நிறைய பொறுப்புகளைச் செய்வதற்கு எது நமக்கு உதவும்?

11 தீமோத்தேயு பேச்சுக் கொடுப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் பேர்போனவர் ஆனாரா? அதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்லவில்லை. ஆனால், பவுல் கொடுத்த ஆலோசனைக்கு அவர் கீழ்ப்படிந்ததால் நிச்சயம் தன்னுடைய பொறுப்புகளை திறமையாகச் செய்வதில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியிருப்பார். (2 தீ. 3:10) அவரைப் போலவே நாமும் நம்முடைய திறமைகளை வளர்த்துக்கொண்டால் இன்னும் நிறைய பொறுப்புகளைச் செய்ய நம்மாலும் முடியும்.

மற்றவர்களுக்கு உதவி செய்ய வாய்ப்புகளைத் தேடுங்கள்

12. மற்றவர்கள் உங்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார்கள்?

12 நம் எல்லாருக்குமே மற்றவர்கள் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்கிறார்கள். உதாரணத்துக்கு, நாம் உடம்பு முடியாமல் ஆஸ்பத்திரியில் இருந்தால், மருத்துவமனைத் தொடர்பு ஆலோசனைக் குழுவிலோ... நோயாளி சந்திப்புக் குழுவிலோ... சேவை செய்கிற மூப்பர்கள் நம்மை வந்து பார்க்கிறார்கள். நமக்கு ஏதாவது கஷ்டமான சூழ்நிலை வரும்போது, அன்பான ஒரு மூப்பர் நமக்காக நேரம் ஒதுக்கி, நாம் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கிறார், நமக்கு ஆறுதல் சொல்கிறார். ஒரு பைபிள் படிப்பு எடுக்க நமக்கு உதவி தேவைப்படும்போது அனுபவமுள்ள ஒரு பயனியர் நம்மோடு வந்து அந்தப் படிப்புக்கு உதவி செய்கிறார். இந்த எல்லா சகோதர சகோதரிகளுமே நமக்கு ரொம்ப சந்தோஷமாக உதவி செய்கிறார்கள். நாமும் மற்றவர்களுக்கு உதவி செய்தால், நமக்கும் அதே சந்தோஷம் கிடைக்கும். “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது” என்று இயேசு சொன்னார். (அப். 20:35) நீங்களும் இந்த மாதிரி நிறைய விதங்களில் யெகோவாவுக்குச் சேவை செய்ய ஆசைப்பட்டால் அந்தக் குறிக்கோளை அடைவதற்கு எது உங்களுக்கு உதவும்?

13. நீங்கள் ஒரு குறிக்கோளை வைக்கும்போது எதை மனதில் வைக்க வேண்டும்?

13 பொதுப்படையான ஒரு குறிக்கோளை வைக்காதீர்கள். உதாரணத்துக்கு, ‘சபையில நான் இன்னும் நிறைய செய்யணும்’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அப்படி ஒரு குறிக்கோள் வைத்தால், அதை எப்படி அடைய வேண்டும் என்று தெரிந்துகொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். அந்தக் குறிக்கோளை எப்போது அடைந்தீர்கள் என்றும்கூட உங்களுக்குத் தெரியாமல் போகலாம். அதனால், குறிப்பாக என்ன குறிக்கோளை வைக்கலாம் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள். உங்களுடைய குறிக்கோளையும் அதை அடைவதற்கு நீங்கள் என்ன திட்டம் போட்டிருக்கிறீர்கள் என்பதையும் எழுதி வைப்பது நல்லது.

14. சூழ்நிலைக்கு ஏற்ற விதமாக நம்முடைய குறிக்கோள்களை மாற்றிக்கொள்வது ஏன் முக்கியம்?

14 நம்முடைய சூழ்நிலை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. நம்முடைய சூழ்நிலை மாறினால், அதற்கு ஏற்ற விதமாக நம்முடைய குறிக்கோள்களை மாற்றிக்கொள்வது முக்கியம். அப்போஸ்தலன் பவுலின் உதாரணத்தைப் பார்க்கலாம். தெசலோனிக்கேயா நகரத்தில் ஒரு புது சபையை உருவாக்க பவுல் உதவி செய்திருந்தார். அங்கேயே தங்கியிருந்து புதிதாக கிறிஸ்தவர்களாக ஆனவர்களுக்கு உதவ வேண்டும் என்று பவுல் குறிக்கோள் வைத்திருந்தார். ஆனால், எதிர்ப்பு பயங்கரமாக இருந்ததால் பவுல் அந்த நகரத்தைவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை வந்தது. (அப். 17:1-5, 10) ஒருவேளை, பவுல் அங்கேயே இருந்திருந்தால் மற்ற சகோதரர்களுக்கு பிரச்சினை வந்திருக்கும். இருந்தாலும், பவுல் தன்னுடைய முயற்சியை கைவிட்டு விடவில்லை. சூழ்நிலைக்கு ஏற்ற விதமாக நடந்துகொண்டார். புதிதாக கிறிஸ்தவர்களாக ஆனவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்காக பவுல் கொஞ்ச நாட்களுக்குப் பின்பு தீமோத்தேயுவை அங்கே அனுப்பினார். (1 தெ. 3:1-3) தங்களுக்கு உதவி செய்ய தீமோத்தேயு தயாராக இருந்ததை நினைத்து தெசலோனிக்கேயாவில் இருந்தவர்கள் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்கள்!

15. சூழ்நிலை மாறும்போது, நம்முடைய குறிக்கோள்களை எப்படி மாற்றிக்கொள்ளலாம்? உதாரணத்தோடு விளக்குங்கள்.

15 தெசலோனிக்கேயாவில் பவுலுக்குக் கிடைத்த அனுபவத்திலிருந்து நாமும் பாடம் கற்றுக்கொள்ளலாம். நாம் ஒரு குறிக்கோளை வைத்து அதை அடைவதற்காக முயற்சி செய்துகொண்டிருக்கலாம். ஆனால், சூழ்நிலை மாறுவதால் அந்த குறிக்கோளை அடைய முடியாமல் போய்விடலாம். (பிர. 9:11) உங்களுக்கு இப்படி நடந்தால், உங்களால் அடைய முடிந்த இன்னொரு குறிக்கோளைத் தேர்ந்தெடுங்கள். அதைத்தான் சகோதரர் டெட்டும் அவருடைய மனைவி ஹைடியும் செய்தார்கள். உடம்புக்கு முடியாமல் போனதால் அவர்கள் பெத்தேலை விட்டுப் போக வேண்டிய சூழ்நிலை வந்தது. ஆனால், அவர்கள் யெகோவாவை நேசித்ததால் வேறு வழிகளில் ஊழியத்தை அதிகமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். முதலில் அவர்கள் ஒழுங்கான பயனியர்களாக சேவை செய்தார்கள். பின்பு, விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டார்கள். சகோதரர் டெட்டுக்கு துணை வட்டாரக் கண்காணியாக சேவை செய்வதற்கான பயிற்சியும் கிடைத்தது. ஆனால், கொஞ்ச நாட்களுக்குப் பின்பு, வட்டார சேவை செய்வதற்கான வயது வரம்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அதனால், அந்தச் சேவையை இனிமேல் செய்ய முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அது அவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கு இன்னும் நிறைய வழிகள் இருப்பதை புரிந்துகொண்டார்கள். “யெகோவாவுக்கு ஒரு வழியில மட்டும் இல்ல, பல வழிகள்ல சேவை செய்ய முடியுங்கறத நாங்க கத்துகிட்டோம்” என்று சகோதரர் டெட் சொல்கிறார்.

16. கலாத்தியர் 6:4-லிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

16 நம் வாழ்க்கையில் நடக்கிற எல்லாமே நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. அதனால், நாம் எந்த விதமான சேவை செய்கிறோம் என்பதை வைத்து யெகோவா நம்மை மதிப்பிடுவதில்லை என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதேசமயத்தில், நமக்கு இருக்கிற நியமிப்புகளை மற்றவர்களுக்கு இருக்கிற நியமிப்புகளோடு ஒப்பிட்டுப்பார்க்கவும் கூடாது. அதைப் பற்றி சகோதரி ஹைடி என்ன சொல்கிறார்? “நம்ம வாழ்க்கைய மத்தவங்க வாழ்க்கையோட ஒப்பிட்டு பார்த்தோம்னா நம்மால சந்தோஷமா இருக்க முடியாது.” (கலாத்தியர் 6:4-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுக்கு சேவை செய்வதற்கும், மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கும் நாம் தொடர்ந்து வாய்ப்புகளைத் தேடுவது முக்கியம். *

17. யெகோவாவுக்கு நிறைய சேவை செய்வதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?

17 நாம் யெகோவாவுக்கு நிறைய சேவை செய்ய வேண்டுமென்றால் நம்முடைய வாழ்க்கையை எளிமையாக வைப்பதும் கடன் வாங்காமல் இருப்பதும் முக்கியம். அதோடு, ஒரு பெரிய குறிக்கோளை அடைய வேண்டும் என்று நினைத்தால், முதலில் சின்னச் சின்ன குறிக்கோள்களை வையுங்கள். உதாரணத்துக்கு, ஒழுங்கான பயனியராக ஆவதற்கு நீங்கள் குறிக்கோள் வைத்தால், முதலில் சில மாதங்களுக்குத் தொடர்ந்து துணை பயனியராக சேவை செய்யலாம். ஒரு உதவி ஊழியராக ஆவதற்கு குறிக்கோள் வைத்திருந்தால் ஊழியத்தை நன்றாகச் செய்வதற்கும், உங்கள் சபையில் இருக்கிற வயதானவர்களையும் உடம்பு முடியாதவர்களையும் போய்ப் பார்ப்பதற்கும் நிறைய நேரம் செலவு செய்யலாம். இப்படிப்பட்ட விஷயங்களைச் செய்யும்போது கிடைக்கிற அனுபவம் எதிர்காலத்தில் நிறைய விதங்களில் யெகோவாவுக்குச் சேவை செய்ய உங்களுக்கு உதவும். அதனால், உங்களுக்கு எந்த நியமிப்பு கிடைத்தாலும் சரி, அதை உங்களால் முடிந்தளவுக்கு நன்றாகச் செய்வதற்கு தீர்மானமாக இருங்கள்.—ரோ. 12:11.

உங்களால் அடைய முடிந்த ஒரு குறிக்கோளை வையுங்கள் (பாரா 18) *

18. சகோதரி பெவர்லியின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? படத்தையும் பாருங்கள்.

18 நமக்கு எவ்வளவு வயதானாலும் நம்மால் குறிக்கோள்களை வைக்கவோ அவற்றை அடையவோ முடியும். சகோதரி பெவர்லியின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவருக்கு 75 வயது. மோசமான ஒரு உடல்நலப் பிரச்சினை இருப்பதால் அவரால் நடக்கக்கூட முடியாது. ஆனால், இயேசுவின் மரண நினைவுநாள் சமயத்தில் நடக்கிற விசேஷ ஊழியத்தில் கலந்துகொள்ள அவர் ரொம்ப ஆசைப்பட்டார். அதனால், அவர் சில குறிக்கோள்களை வைத்தார். அந்தக் குறிக்கோள்களை அடைந்தபோது, சகோதரி பெவர்லி ரொம்ப சந்தோஷப்பட்டார். அவர் எடுத்த முயற்சி ஊழியத்தில் கடினமாக உழைக்க மற்றவர்களையும் தூண்டியது. வயதான சகோதர சகோதரிகளால் நிறைய செய்ய முடியவில்லை என்றாலும், அவர்கள் எடுக்கிற முயற்சியை யெகோவா ரொம்ப உயர்வாகப் பார்க்கிறார்.—சங். 71:17, 18.

19. நாம் என்ன மாதிரியான சில குறிக்கோள்களை வைக்கலாம்?

19 உங்களால் அடைய முடிந்த குறிக்கோள்களை வையுங்கள். யெகோவாவுக்குப் பிடித்த நல்ல நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் பிரயோஜனமாக இருக்கிற திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடுங்கள். * இப்படியெல்லாம் செய்தால், தீமோத்தேயுவை யெகோவா ஆசீர்வதித்த விதமாக உங்களையும் ஆசீர்வதிப்பார். ‘உங்களுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெளிவாகத் தெரியவரும்.’—1 தீ. 4:15.

பாட்டு 38 அவர் உன்னைப் பலப்படுத்துவார்

^ பாரா. 5 தீமோத்தேயு நல்ல செய்தியைச் சொல்வதில் ரொம்பத் திறமைசாலியாக இருந்தார். ஆனாலும், தொடர்ந்து முன்னேற்றம் செய்ய அப்போஸ்தலன் பவுல் அவரை உற்சாகப்படுத்தினார். அவர் சொன்னபடி செய்ததால், தீமோத்தேயுவை யெகோவா நிறைய விதங்களில் பயன்படுத்தினார். சகோதர சகோதரிகளுக்கும் ரொம்ப உதவியாக இருந்தார். யெகோவாவுக்கு நிறைய சேவை செய்யவும் சகோதர சகோதரிகளுக்கு அதிகமாக உதவவும் நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? நிச்சயம் ஆசைப்படுவீர்கள். அதற்காக நீங்கள் என்ன குறிக்கோள்களை வைக்கலாம்? குறிக்கோள்களை வைக்கவும் அவற்றை அடையவும் என்ன செய்யலாம்?

^ பாரா. 16 யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு புத்தகத்தில் அதிகாரம் 10-ல் “தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்வது” என்ற தலைப்புக்குக் கீழே வருகிற பாராக்கள் 6-9-ஐப் பாருங்கள்.

^ பாரா. 19 இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில் “தொடர்ந்து முன்னேறுங்கள்” என்ற தலைப்பில் இருக்கிற பாடம் 60-ஐப் பாருங்கள்.

^ பாரா. 62 படவிளக்கம்: ஒரு சகோதரர் ராஜ்ய மன்றத்தைப் பராமரிக்கிற வேலையை இரண்டு சகோதரிகளுக்குச் சொல்லித் தருகிறார். புதிதாகக் கற்றுக்கொண்ட அந்தத் திறமையை நன்றாகப் பயன்படுத்தி அவர்கள் வேலை செய்கிறார்கள்.

^ பாரா. 64 படவிளக்கம்: வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிற ஒரு சகோதரி போன் மூலமாக மற்றவர்களை நினைவு நாள் நிகழ்ச்சிக்குக் கூப்பிடுகிறார்.