Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

உறுதிமொழி எடுப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

உறுதிமொழி என்பது “பெரும்பாலும் கடவுளை சாட்சியாக வைத்து ஒரு விஷயத்தைச் செய்வதாக மனப்பூர்வமாகவோ அதிகாரப்பூர்வமாகவோ அறிவிப்பதை அல்லது சத்தியம் செய்வதை” அர்த்தப்படுத்துகிறது. அது வாயால் சொல்வதாகவோ எழுதிக்கொடுப்பதாகவோ இருக்கலாம்.

“நீங்கள் சத்தியமே செய்ய வேண்டாம் [அதாவது, உறுதிமொழியே எடுக்க வேண்டாம்]; . . . நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும், ‘இல்லை’ என்று சொல்வது ‘இல்லை’ என்றே இருக்கட்டும். இதற்கு மிஞ்சி சொல்லப்படும் எதுவும் பொல்லாதவனிடமிருந்தே வருகிறது” என்று இயேசு சொன்னார். (மத். 5:33-37) அதனால், உறுதிமொழி எடுப்பது தவறு என்று சிலர் நினைக்கலாம். ஆனால், திருச்சட்டத்தின்படி சில உறுதிமொழிகளை எடுப்பது அவசியம் என்றும் கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் உறுதிமொழிகளைக் கொடுத்திருக்கிறார்கள் என்றும் இயேசுவுக்குத் தெரியும். (ஆதி. 14:22, 23; யாத். 22:10, 11) யெகோவாவும்கூட உறுதிமொழி கொடுத்திருக்கிறார் என்று அவருக்குத் தெரியும். (எபி. 6:13-17) அதனால், உறுதிமொழி எடுக்கவே கூடாது என்று இயேசு சொல்லவில்லை. முக்கியமில்லாத சாதாரண விஷயங்களுக்காக உறுதிமொழி எடுப்பது தவறு என்றுதான் அவர் சொல்கிறார். நாம் எப்போதுமே கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார்.

அப்படியென்றால், உறுதிமொழி எடுக்கச் சொல்லி யாராவது உங்களிடம் சொன்னால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? முதலில், உறுதிமொழி எடுத்தால் அதைச் செய்ய முடியுமா என்று யோசித்துப்பாருங்கள். உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் அதைச் செய்யாமல் இருப்பதுதான் நல்லது. ஏனென்றால், “நேர்ந்துகொண்டதை நிறைவேற்றாமல் இருப்பதைவிட நேர்ந்துகொள்ளாமல் இருப்பதே மேல்” என்று பைபிள் சொல்கிறது. (பிர. 5:5) அடுத்ததாக, எதற்காக உறுதிமொழி எடுக்கப்போகிறீர்களோ அது சம்பந்தமான பைபிள் நியமங்களைப் பாருங்கள். பிறகு, சுத்தமான மனசாட்சியோடு முடிவு எடுங்கள். அந்த பைபிள் நியமங்களில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

சில உறுதிமொழிகள் கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்ற விதமாக இருக்கும். உதாரணத்துக்கு, யெகோவாவின் சாட்சிகளுடைய கல்யாணத்தில் மணமகனும் மணமகளும் உறுதிமொழி எடுக்கிறார்கள். ஒருவருக்கொருவர் அன்பும், ஆதரவும், மரியாதையும் காட்டுவதாகவும் “பூமியில் வாழும் காலமெல்லாம்” அப்படி நடந்துகொள்வதாகவும் வாக்குக் கொடுக்கிறார்கள். கடவுளுக்கு முன்பாகவும், கல்யாணத்துக்கு வந்திருக்கிற எல்லாருக்கும் முன்பாகவும் இதைச் செய்கிறார்கள். (சில தம்பதிகள், இதே வார்த்தைகளைப் பயன்படுத்தாவிட்டாலும், அவர்களும் கடவுளுக்கு முன்பாக ஒரு உறுதிமொழி எடுக்கிறார்கள்.) அதற்குப் பிறகு அவர்கள் கணவன் மனைவியாக அறிவிக்கப்படுகிறார்கள். அவர்கள் எடுத்த உறுதிமொழியின்படி அவர்களுடைய திருமண பந்தம் காலமெல்லாம் நீடித்திருக்க வேண்டும். (ஆதி. 2:24; 1 கொ. 7:39) இப்படி உறுதிமொழி எடுப்பது சரியானது; கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்ற விதமாகவும் இருக்கிறது.

சில உறுதிமொழிகள் கடவுளுடைய விருப்பத்துக்கு எதிராக இருக்கின்றன. உதாரணத்துக்கு, ஒரு நாட்டைக் காப்பாற்ற ஆயுதத்தை கையில் எடுப்பதாகவோ கடவுள்மேல் இருக்கிற விசுவாசத்தை விட்டுவிடுவதாகவோ சொல்லி உண்மைக் கிறிஸ்தவர் உறுதிமொழி எடுக்க மாட்டார். அப்படிச் செய்வது கடவுளுடைய கட்டளையை மீறுவதாக இருக்கும். கிறிஸ்தவர்கள் இந்த ‘உலகத்தின் பாகமாக இல்லை.’ அதனால், சண்டை சச்சரவுகளிலும் போரிலும் நாம் ஈடுபட மாட்டோம்.—யோவா. 15:19; ஏசா. 2:4; யாக். 1:27.

சில உறுதிமொழிகளை மனசாட்சியின்படி யோசித்து எடுக்க வேண்டியிருக்கும். “அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று இயேசு சொன்னார். (லூக். 20:25) சிலசமயங்களில், இந்த ஆலோசனையை மனதில் வைத்து, நாம் முடிவெடுக்க வேண்டியிருக்கும்.

உதாரணத்துக்கு, ஒரு கிறிஸ்தவர் குடியுரிமைக்காக அல்லது பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிக்கும்போது, அந்த நாட்டுக்கு ஆதரவு தருவதாக ஒரு உறுதிமொழி கொடுக்க வேண்டுமென்று அவருக்குத் தெரியவரலாம். அப்படி உறுதிமொழி கொடுப்பது, கடவுளுடைய சட்டத்துக்கு எதிராக ஒரு விஷயத்தை செய்வதாக வாக்குக் கொடுப்பதுபோல் இருக்கும் என்று தெரிந்தால், அவருடைய மனசாட்சி அதற்கு இடம் கொடுக்காது. ஆனாலும், அவருடைய மனசாட்சிக்கு ஏற்ற மாதிரி அந்த உறுதிமொழியில் இருக்கிற வார்த்தைகளை மாற்றிக்கொள்ள அந்த அரசாங்கம் அவருக்கு அனுமதி கொடுக்கலாம்.

இப்படி வார்த்தைகளை மாற்றி உறுதிமொழி எடுப்பது ‘அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு எல்லாரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்’ என்று ரோமர் 13:1-ல் சொல்லப்பட்டிருக்கிற நியமத்துக்கு ஏற்ற மாதிரி இருக்கிறது. அதனால், இதுபோன்ற உறுதிமொழியை எடுப்பதில் தவறில்லை என்று அவர் தீர்மானிக்கலாம். அதைத்தான் கடவுளும் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

ஒரு பொருளைக் கையில் வைத்தோ ஒரு சைகை செய்தோ உறுதிமொழி கொடுக்கச் சொன்னால், அப்போதும் உங்கள் மனசாட்சியின்படி செய்வது முக்கியம். அந்தக் காலத்தில் ரோமர்களும் சீத்தியர்களும் கையில் வாளை வைத்துக்கொண்டு உறுதிமொழி கொடுத்தார்கள். இப்படி, போர்க் கடவுளுக்கு அடையாளச் சின்னமாக இருக்கிற வாளைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் நம்பகமானவர்கள் என்பதைக் காட்டினார்கள். கிரேக்கர்கள்கூட, ஒரு கையை மேலே தூக்கி உறுதிமொழி எடுத்தார்கள். ஏனென்றால், நாம் சொல்வதையும் செய்வதையும் கவனிக்கிற கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் அவருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் நம்பினார்கள்.

யெகோவாவை வணங்கும் ஒரு நபர் கண்டிப்பாக பொய் மதத்தோடு சம்பந்தப்பட்ட எந்தத் தேசிய சின்னத்தின்மீதும் உறுதிமொழி எடுக்கமாட்டார். ஆனால், நீதிமன்றத்தில் பைபிள்மீது கை வைத்து சத்தியம் செய்யச் சொன்னால் என்ன செய்வது? அப்படிச் செய்வதில் தவறில்லை. ஏனென்றால், கடவுளுக்கு உண்மையாக இருந்த ஊழியர்கள்கூட சில சைகைகள் செய்து உறுதிமொழி கொடுத்ததாக பைபிள் சொல்கிறது. (ஆதி. 24:2, 3, 9; 47:29-31) ஆனால் அப்படிச் செய்யும்போது, நீங்கள் கடவுளுக்கு முன்னால் சத்தியம் செய்கிறீர்கள் என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும். அதனால், உங்களிடம் கேட்கிற எந்தக் கேள்விக்கும் உண்மையாக பதில் சொல்ல தயாராக இருக்க வேண்டும்.

யெகோவாவோடு இருக்கும் நட்பை நாம் பொக்கிஷமாக நினைப்பதால், சத்தியம் செய்வதற்குமுன் அதைப் பற்றி ஜெபம் செய்து நன்றாக யோசித்துப்பார்க்க வேண்டும். அதோடு நம் மனசாட்சி உறுத்தாதபடியும் பைபிள் நியமங்களை மீறாதபடியும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால், ஒரு விஷயத்தைச் செய்வதாக நீங்கள் சத்தியம் செய்தால் அதைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.—1 பே. 2:12.